Nizhali
சிறுகதை வரிசை எண்
# 71
படல்
______
" எம்மே . சிலாம்பு அடிச்சிட்டுமே. கண்ணு வலி பொறுக்கலமே.. வாம்மே டக்குனு" கண்ணை பொத்திக்கொண்டு அழுதவளின் விரலிடுக்கு நிறைந்து வெளியேறிது இரத்த அணுக்கள்.
அப்படியே மண்ணை கவ்வி முன் பக்கம் முகத்தை புதைத்தபடி குனிந்து கொண்டாள் சனவரி.
"ஏம்புள்ள என்னாடி புள்ள கத்துறா. அச்சாணி அவளோ என்னானு பாருத்தி.. புள்ள வுழுந்து துடிக்கிறா" மூங்கில் அடைப்புக்குள் நின்றபடியே கொசவன் அச்சாணியை அழைத்தான்.
பக்கவாட்டுகளை கழித்து வெட்டி எடுத்த மூங்கில் கழிகளை காட்டு நடைபாதையின் ஓரத்தில் நேர்த்தியாக அடிக்கிக் கொண்டிருந்த அச்சாணி பதறியபடி ஓடிவந்தாள்.
வலி தாங்க மறுத்த கண்கள் சிவந்து இரத்த நரம்புகள் புடைத்து வலது கண்ணின் விழி வெளியேறியது போல வீங்கி சிவந்திருந்தது சனவரிக்கு.
"அய்யோ.. எப்போ புள்ள கண்ணு போச்சிட்டே.. செதாம்பு குத்தி நிக்குது. வேகமா ஓடியாட்ட" அச்சாணியின் கதறல் சனவரியின் சிவந்த கண்களின் இரத்தமாய் பெருகெடுத்து வந்தது.
அளக்கின் நுனியில் கட்டியிருந்த வாங்கு அப்படியே மூங்கல் கழிகளில் தொக்கி நிற்க மூங்கில் முள்ளின் வருடலில் மாட்டி அவசரமாக வெளியேறுகையில் கையிலும் கால்களிலும் கீறி துளி சிவப்புணுக்கள் வெளியேற ஓடிவந்த கொசவனுக்கு சனவரியின் கண்களின் கோரம் மூங்கில் கீறலென உடல் பரவியது.
"எத்தோய் புள்ளய தூக்கிட்டி செத்தாங்கிட்ட போறேன். நீயி அளக்குல கட்டுன வாங்க மட்டும் அவுத்துட்டு வா . வராக்குல எதுனா பச்சில பத்தா கூட புடிங்கிட்டு வா. ஆயினாங் கொல்லையில பூந்து வந்துடாத கட்டி வச்சி புடுவானுங்க " என்ற கொசவன் மகள் சனவரியை சுமந்து ஓட்டமாக செத்தான் வீட்டுக்கு பறந்தான்.
அப்போதைக்கு அந்த ஊரின் ஒரே வைத்தியர் சாத்தன் மட்டும் தான் . மாடு கன்னு முதல் மனித உயிர் வரை அத்துனை பேருக்கும் பச்சிலை கட்டி விட்டு பணம் கூட கேட்டுக்கொள்ள விருப்பாத மனிதராக இருந்தார்.
கொசவனின் பேச்சி வழக்கிற்காக சாத்தன் செத்தானாக பெயர் மாற்றம் செய்து கொண்டார்.
செத்தாரு.. என்னூட்டுல புள்ளைக்கு மாந்தமுனு எத்தாளு சொல்லி அனுப்புனா புள்ளய காப்பாத்தி கொடுங்க சாமினு முதல் முதலில் சனவரி குழந்தையாக இருந்ததிலிருந்து இங்கு தான் மருந்து வாங்கிக் கொள்வது கொசவனின் வழக்கமாகி இருந்தது.
அதற்காக அப்போதைக்குச் செத்தான் வீட்டின் மேல் வேலைகளை முன் வந்து செய்வதும் கொசவனின் விருப்ப செயலாக இருந்தது.
" எப்பேய் கண்ணு வலிகுதுப்பே.. என்னால முடியலப்பே" என்று இரத்த துளிகள் கலந்த கண்ணீரோடு சனவரி அழுவதை தாங்க முடியாமல் இன்னும் வேகமாக ஓடினான் கொசவன்.
வெயில் எரிச்சல் அவனின் உடல் கீறல்களை பிளந்து நுழைகையில் அந்த அழுத்தம் இன்னும் ஓட்டத்தை அதிகப்படுத்தியது.
" சாமீ எய்யா சாமீ .. செத்தானு எம்புள்ளய வந்து ஓரெட்டு பாரு சாமீ .. புள்ள துடிக்குது.. மூங்கி கழிக்க போன தாவுல புள்ள கண்ணுல பறந்து செதாம்பு ஏறுடுச்சி " என்று பெருங்குரலெடுக்கவே நாய் கடித்த காயத்திற்கு ஆட்டின் காலில் சீல் எடுத்துக் கொண்டிருந்த சாத்தன் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு எழுந்தான்.
கண்கள் வீங்கி வெளுத்திருந்தது. இரத்தின் ஊற்று குறைந்திருந்த போதும் கண்ணில் ரசத்தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
ஏதேதோ பச்சிலைகளை உள்ளங்கையால் கசக்கி பிழிந்து சாற்றை கண்ணில் ஊற்றினார் சாத்தன்.
வலி மெல்ல குறைந்திருப்பதாக சொன்னாள் சனவரி.
" ஏண்டா கொசப்பயலே பச்ச புள்ளய என்னாத்துக்குடா மூங்கி கழிக்க கூட்டு போன . வலி தாங்குதா பாரு. இந்தா இத கண்ணுல கசக்கி சாற வுடு . ரெண்டு நாள் தள்ளி சரியா போயிடும் " என்றபடி மீண்டும் நாய் கடித்த ஆட்டை நோக்கி நடந்தார் சாத்தன்.
எத்தனை காலம் ஓடியதென கணகில்லை. நாட்களை எண்ணுவதும் வயதை கணக்கிடுவதும் அறிந்திடாத சனவரி வளர்ந்து பெருத்திருந்தாள். பேத்திகளின் சொக்கட்டாம் அவள் கண்களின் வழி உள்ளிழுத்து கொண்டிருந்தது. ஆனாலும் அந்தச் சிறு வயதின் வலி அவள் கண்களுக்குள் அமைதியாயிருந்தது.
அதன் அடையாளமாக கண்ணின் நரம்புகள் எப்போதும் சிவந்த வானமென பரவியிருந்தது. வெள்ளை நிறமென்ற பரப்பு அவள் கண்ணில் தெரிவதேயில்லை.
அந்த நிகழ்வுக்கு பின் தான் அவள் தினமும் மூங்கில் வெட்டச் சென்று கொண்டிருந்தாள். அப்பாவின் அத்தனை இலாவகமும் அவளின் கைகளுக்குள் அகப்பட்டிருந்தது.
"எப்பே ... மயிலக்காரு வூட்டுக்கு படலு கட்டனுமுனு ஆளுவுட்டுக்காரு.. நீயென்ன புழுவு மாறி நெளிஞ்சிட்டு இருக்க. பரபரனு கழிச்சி போட்டுட்டு வெட்டுப்பே. இருக்குற வாரையெல்லாம் கூர போட வேற கேட்குறாங்க "
" எத்தி... அரக்கப் பரக்க கழிச்சி சத பொளந்துட்டு கெடக்க வேண்டிதான். சாதா முள்ளாவா இருக்கு இழுத்தா எல்லாம் சதய பேத்துட்டுல போவுது. "
" சரிப்பே.. நீனு கழிச்சி போடு. வூட்டுல இருக்குற வாரைய கொடுத்துப்போம். "
"அது ஆவட்டும் .. நீயி பச்ச கழிய சீவி நாலு சிப்பு தட்டு பின்னு. பெரியாளு வூட்டுல அந்தம்மாயிக்கு சிப்பு தட்டு வேணுமுனு சொல்லி நாலு பொழுது பேயிடுச்சி "
" சரிப்பே முள்ள கழிச்சி வரும்பு தள்ளி போடு. " என்றவளின் கைகள் நில்லாமல் குறுங்கத்தி மூங்கில் பிளந்து கொண்டிருந்தது.
அச்சாணி மூங்கில் கழிக்க செல்வதைத் தவிர்த்திருந்தாள்.
வீட்டிலேயே படல் செய்வது அவளின் வேலையாகியது.
வாரையைப் பிளந்து மூன்று நான்காக வைத்துக்கொள்வாள். சரியான இடைவெளியில் மூன்று வரிசையில் வாரைக்குச்சிகளை வைப்பாள். மூங்கில் பக்கங்களில் கழிக்கப்பட்டவற்றை ஒவ்வொன்றாக அடுக்கி அதன் மேல் மீண்டும் பிளந்து வைத்திருந்த வாரையை வைத்து மேலும் கீழும் கட்டுக்கம்பியால் கட்டி பிணைத்த பின் அதன் மீது பெரிய கருங்கல்லை வைத்திடுவாள். ஒரு நாளில் ஏழு முதல் எட்டு படல் வரை அவளால் தயார் செய்ய முடிந்தது.
பச்சை வாரைகளைச் சீவி சிப்புத்தட்டு, முரம், கூடை போன்றவற்றைச் செய்து கொண்டிருந்தாள் சனவரி .
கூடைப் பின்னுவதை விட அவளுக்கு நெருக்கமாற வேலை கீற்றுகளை நீரில் ஊற வைப்பது தான்.
" எம்மே கொளத்துல கீத்துலாம் கெடக்கு போயி கொண்டாரேன்" என்று செல்பவள் கீத்தோடு கீத்தாக ஊறி வருவாள். அவ்வளவு உற்சாகமாக அவள் வருவதை பார்த்தவுடன் அச்சாணி கண்டுபிடித்து விடுவாள்.
" ஏத்தி சனவரி கொளத்துலயே குளிச்சிட்டு வந்தியாடி . ஒப்பன் வந்தானா என்னைய தாண்டி மானாவாரியா பேசுவான்.
போனோமா வந்தோமானு பொழப்ப பாக்காம பன்னி சேத்துல ஊறுற மாதிரி ஊறிட்டு வந்துடுறா. என்னைக்கு ஒப்பனுட்ட மாட்ட போறியோ.. மூங்கி கழிக்கிற மாதிரி உடம்ப உறிச்சி காய போடுவே.. " என்ற அம்மாவின் மிரட்டலுக்கு பயந்ததே இல்லை அவள்.
அச்சாணியைச் சமாதானம் செய்யும் விதமாக இரண்டு படலை தானாகவே செய்து முடித்திருப்பாள் சனவரி. அம்மாவின் நேர்த்தியை விட கொஞ்சம் கூடுதலான அமைப்பில் படல் இருக்கும்.
அச்சாணியின் கைகளின் கீறல்களை விட சனவரிக்கு வரிக்கோடுகள் வலுத்திருக்கும். அம்மாவின் போல வேலைகளை செய்தாலும் மூங்கில் முள்ளின் கீறல்கள் சனவரியின் நினைவுப்படலாக சுற்றியிருந்தது.
அப்போதெல்லாம் ஊரின் முக்கால் வாசி வீடுகளின் வேலி என்பது அந்த படலாகத்தான் இருந்தது.
எப்போதாவது அரிதாக விளையாடச்செல்லும் சனவரியின் விளையாட்டென்பதும் படலில் அமரும் தட்டான்களைப் பிடிப்பது தான். எங்கு பறந்தாலும் எத்தனை இடம் சுற்றினாலும் அந்த தட்டான்கள் அமர்வதென்னவோ அந்த படல்களில்தான். சில சமயம் முள் செடிகளில் சில சமயம் வீட்டுக்கூரையில் என்பதெல்லாம் அரிதானது. தட்டான்களைத் துரத்தி துரத்தி ஒவ்வொரு வீட்டின் படல்களையும் சுற்றி வந்திடுவாள்.
படல்களில் காய வைக்கும் துணிகளை முள் கிழித்திடாமல் எடுத்துக்கொண்டிருக்கும் அக்காவிடம் தட்டானை பிடித்துத் தர சொல்லுகையில் வேண்டுமென்றே ஓட்டி விடும் அக்காவின் படலின் குச்சியை உடைத்துவிட்டு ஓடுவாள்.
பல ஊரிலிருந்தும் படல்களை வாங்கி செல்லும் போது சனவரியிக்கு பெரிய இறக்கை முளைத்திருக்கும். எம்மே செய்த படலு எல்லாவும் இங்கத்தான் வாங்குவாங்க என்று அதிகம் சிரத்தையாக வீட்டில் வேலை செய்வாள்.
அவள் வளர வளர படல்கள் காய்ந்து உலுத்துக்கொட்டிக்கொண்டிருந்தது.
உடைந்து விழும் படல்களை அடிப்பிற்குள் நுழைத்தனர். விறகடுப்பு எரிவாயுவாகிய பின் படல்கள் குப்பைகளாகி எரிந்துகொண்டிருந்தனர்.
இயற்கையில் மக்கி உடையும் படலின் ஆயுள் குறைந்தது. அதுபோலத்தான் காடுகளில் வளர்ந்து நின்ற மூங்கிலும் குறைந்தது. யாரோ ஒருவரின் கவனிப்பற்ற இடத்தில் செழித்து நிற்கும் மூங்கில் விலைபேசி வாங்கி கழித்து படல் செய்யத் தொடங்கினார்கள்.
மூங்கில் தேடி அலையும் கொசவனுக்கு அலைச்சல் அதிகமானது. நலிவடைந்த வாழ்வோடு உடலும் சோர்ந்து போனது. சில நாட்களிலேயே படுக்கையில் விழுந்தான். பெரிதாக தெரிந்து கொள்ள முடியாத நோயென்று அச்சாணி சொல்லிக்கொண்டிருப்பாள் . அதை சொல்லவும் தெரியாத அறிவு அவளிடம் இருந்தது.
பிற வேலைகளுக்கும் யாரும் அனுமதிக்கவில்லை.
ஊரையே கூலிக்கு களை வெட்டவும், சோளம் உடைக்கவும் , பருத்தி எடுக்கவும் அழைத்து செல்லும் பெரியாயிடம் கூலிக்கு சேர்த்துக்கொள்ள கெஞ்சியதெல்லாம் அவளுக்கு சலித்து விட்டது.
" சரி சரி நாளைக்கு கேட்டுட்டு ஆளுவொ கொறஞ்சா கூட்டி போறேன் என்பவள் அச்சாணி சென்றவுடன் " ஆமா கொறத்தியொள கூட்டி போயி அப்பறம் எம்பள மதிக்காம போயிட்டாவொனா " என்று சுழித்துக் கொள்ளுதலை அறியாத வரை கூலிக்கு கேட்டவள் பின் கொசவனின் காலமாட்டோடே உட்கார்ந்து விட்டாள்.
சனவரி தான் தன்னால் முடிந்தவரை கூடைகளை பின்னி தலையில் சுமந்து விற்க தொடங்கினாள். வீடு தேடி வந்து பொருட்களை வாங்கும் கூட்டம் குறைந்து போகவே பக்கத்து ஊர் வரை சுமந்து சென்ற விற்று வருவதை வாடிக்கையாக்கினாள்.
உடலை விட மனம் சுருண்டு போன கொசவனின் உயிர் விரைவாக வெளியேறியது.
படல்களின் முறிவென அப்பாவின் பிரிவு சனவரியின் வாழ்வை முறிக்கத் தொடங்கியது.
அச்சாணியின் தம்பி சனவரியை மணந்து கொண்டான். பிள்ளைகள் வளர்ந்தோட சனவரி குறுகிக்கொண்டிருந்தாள்.
கொசவனின் நினைவில் சுருண்டு கிடந்த அச்சாணியின் இறப்பு இன்னும் அவளை பலவீனப்படுத்தியது.
படல்கள் சூழ்ந்திருந்த ஊரின் பல வீடுகளும் , தோட்டங்களும் கம்பி வேலிகளாக மாறியிருந்தது.
துருப்பிடித்து ஈரமற்று இருக்கும் அந்த கம்பிகளில் அநேகமாக தட்டான்கள் அமர்வதை அவள் பார்த்ததில்லை.
கொல்லைகளில் அசைந்து கொண்டிருக்கும் படலின் பழுப்பு நிற நீள் இலைகள் அதிகம் தென்படுவதில்லை.
அதிசய மூலிகை போல மூங்கிலின் உருவம் திசைக்கு அப்பால் தொலைந்து போனது. சனவரி தின்று துப்பின் மூங்கிலின் நுனி குருத்துகள் துளிர் விடுவதை அவளால் காண முடியவில்லை.
படல் செய்வதை அச்சாணியோடு சனவரி விட்டிருந்தாள். என்றாவது தன் தேவைக்கு மட்டும் மூங்கில் கழிகளை பிளக்க அளக்கை எடுப்பதுண்டு. அப்பாவின் அளக்கும் அதில் இறுக கட்டிய வாங்கும் வாசலோரம் சாய்த்துவைக்கப்பட்டது.
மூங்கில் கழிப்பதை விரும்பாத சனவரியின் கணவன் அவர்களின் மற்றொரு இனக் குறவர்களோடு சேர்ந்து பன்றி வளர்க்க தொடங்கினான். அவ்வபோது மீன் பிடிக்கும் புதிய தொழிலொன்றில் பரிணாம வளர்ச்சி கொண்டார்.
சனவரிக்கு மூங்கில் துளை மூச்சாகி இருந்தது. விலைக்கு கிடைக்கும் பச்சை மூங்கிலை வாங்கி சீவி கூடை செய்யத் தொடங்கினாள்.
மூங்கில் கிடைக்காத நேரத்தில் மேட்டாங்காட்டிற்கு செல்வாள். செழித்து படர்ந்திருக்கும் ஈச்சங்கழியை வெட்டி வந்து சீவி கூடை , தட்டு , முரம் எல்லாம் செய்தாள். அப்படியே அவள் பறித்து வரும் ஈச்சம்பழம் பேரிச்சம்பழமென சுவையாக இருப்பதை என்றோவொரு முறை பெரியாளு வீட்டுல எப்பே கொசவன் வாங்கி கொடுத்தாக சொல்லிக்கொண்டே பிள்ளைகளுக்குத் தருவாள்.
பிள்ளைகளின் போக்கு வேறு திசையில் வளர்ந்தது. நாகரீக வளர்ச்சிக்கேற்ப அவர்களின் தொழில் கூலி வேலையாக மாறியது. பள்ளிக்கு செல்வதென்பது பேரன் பேத்திகளின் கடமையாகியிருந்தது. எல்லாம் மாறிக்கொண்டிருந்த போதும் மூங்கில் முள்ளின் கீறலொன்று சனவரியின் உடலைப் பிளந்து கொண்டேயிருந்தது.
நீர் கசியும் அந்த அணுக்களில் அச்சாணி செய்து வைக்கும் படல்களின் பிம்பம் கசிவதை நிறுத்தவில்லை.
விழி விரித்து பார்க்க இயலாத அந்த கண்ணின் சிவப்பு நரம்புகளில் படல்களைத் தேடிக்கொண்டிருந்தாள் சனவரி.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்