logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

இரா. சாரதி

சிறுகதை வரிசை எண் # 70


ரத்தமே என் ரத்தினமே இரா.சாரதி அவசரமான  வாழ்க்கை முறை என்பதால் ஆதவன் கூட வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே  ஆறுமணிக்கு முன்பாகவே  எழுந்தருளியது. ஆனந்தன் அவசரமாக பணம்கொடுத்து வாங்கிய பிளாஸ்டிக் பெட்டியை தனது ஸ்கூட்டரின் சீட்டைத் திறந்து  பெட்டியை உள்ளே வைத்து, 'அது சரியாக வைக்கப்பட்டிருக்கிறதா?' என ஊர்ஜிதப்படித்திக் கொண்டு ஸ்கூட்டரை ஊர்ந்தவாறு இயக்கினான். அவன் மனதில் எண்ணங்கள் ஓடின." இன்னும் அரை மணி நேரத்தில் தியேட்டருக்கு சென்றடைய வேண்டும். அவகாசம் இருக்கிறது. . இந்த வேகம் போதும்". பெட்டி   குலுங்கி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான்.   சாலையில் மெதுவாக சீராகச் சென்று கொண்டிருந்தான். தொலைவில் ஒரு நபர்  லிஃப்ட் கேட்டுக் கொண்டிருந்தார். வண்டி மெதுவாக  வந்து கொண்டிருந்ததால்  'லிப்ட்' மனிதன் லாவகமாக வண்டியை இடைமறித்து, வண்டி மீது கை  வைத்தான். ஆனந்தனுக்கு நிறுத்த மனமில்லாமல் இருந்தாலும் 'பெட்டி எங்கே அவர் கை வைத்ததால் குலுங்கி விடப் போகிறதோ 'என்று  வேறு வழியின்றி நிறுத்தினான்.         " நான் ரொம்ப அவசரமா போறேன். லிப்ட் கொடுக்க முடியாது சாரி" "அவசரமாவா! இந்த வண்டியிலா! சும்மா ஜோக் பண்ணாதீங்க. மத்தவங்களுக்கு  உதவி செய்ய  மனசு இல்லைன்னு சொல்லுங்க" "ஐயா அப்படி எல்லாம் இல்லைங்க. சரி, நீங்க எங்க போறேன்னு சொல்லுங்க" "நான் எங்க போறேன்னு சொன்னா ,நீங்க மாத்தி சொல்லுவீங்க. நீங்க எங்க போறீங்க.?அதை முதல்ல சொல்லுங்க" "அம்பத்தூர் " "அது போதும் எனக்கு .ராக்கி தியேட்டர்ல இறக்கி விட்டுடுங்க" "தியேட்டருக்கா !", முகம் மலர்ந்தான் ஆனந்தன். "ஏன் நீங்க அங்க தான் போறீங்களா?" "ஆமா. சரி உக்காருங்க." லிப்ட் கேட்டவன் பின்னால்  அமர்ந்தான். ஒரு சில நிமிடங்கள் கழித்து  ஓட்டுபவனுக்குத் தெரியாமல் தனது செல்போனிலிருந்து புலனம் வாயிலாக ஒரு செய்தியைத் தட்டினான். 'நீ அங்கேயே இரு. ஒரு பார்ட்டிய புடிச்சிருக்கேன். சின்னப்பையன், 20 வயசு. கழுத்துல அஞ்சு சவரன் செயின். மோதிரம்  இருக்கு. ஒல்லியான தேகம் . கவுண்டர் கொடுக்கமாட்டான். ஈசி ஜாப் '  செய்தியை அனுப்பிவிட்டு கமுக்கமாக ஒரு வில்லத்தனமான சிரிப்பை உதிர்த்தான். ஆனந்தன்  தன்னுள் இருக்கும் 'பெட்டி பற்றிய பதற்றத்தை'க்  குறைக்க தானாகவே பேசினான். "சார் இது எலக்ட்ரிக் வண்டி சார். வேகமா போகாது" "தெரியுது .நீங்க பெட்ரோல் வண்டி வாங்க வேண்டியது தானே" "சார் ,நான் ஒரு என்விரான்மென்டலிஸ்ட்" "என்னது , விவரமான மெண்டல் லா.?" "சார் என்விரான்மென்டல்லிஸ்ட்...ச்.. நான் ...ஒரு  சுற்றுபுறச்சூழல் பாதுகாவலன்" "ஓஹோ" "சார் நான் என்விரான்மென்ட் கோர்ஸ்.. ச் அதாவது  சுற்றுப்புறச் சூழலை எப்படி பாதுகாக்கிறதுனு கோர்ஸ் பண்ணி இருக்கேன் சார். கோர்ஸ்ல ஒவ்வொரு நாளும் கிளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நாங்க உறுதிமொழி எடுத்துக்குவோம் . அதாவது 'சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்போம், கெடுக்க மாட்டோம்' அப்படின்னு. மூணு வருஷமா சொன்னதுனாலே மைண்ட்ல நல்லா பதிஞ்சு போச்சு. அதனால  பொல்யூஷன் தரும் பெட்ரோல்  வண்டியை வாங்காம எலக்ட்ரிக் வண்டியை வாங்கிட்டேன். ம்.. எப்படியாவது நான் ஒரு நல்ல என்விரான்மென்டலிஸ்ட்டா ஆகணும் . மேனகா காந்தி மாதிரி அட்லீஸ்ட் நம்ம ஊர்  மாரியப்பன் மாதிரி வரணும்" உடனே பின்னால் இருப்பவன் வினவினான்," யார் அந்த மாரியப்பன்?" "நம்மூர்க்காரர் சார். மாரியப்பன் ஒரு கண்டக்டர். அவர் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறார்னா பாருங்க. என்ன அழகான வேலை செஞ்சு இருக்கார் பாருங்க. அந்த மாதிரியாவது நான் சாதிக்கணும் சார் .அப்படி வரணும் ... ஆனா இப்ப எனக்கு வருது ",என்று கூறியவாறு ஆனந்தன் ஒரு விரலை எடுத்துக் காண்பித்தான். உடனே பின்னால் இருந்தவன், " இங்க வேண்டாம் .முன்னாடி போய் புதர்கிட்ட நிறுத்துங்க" என்றான். "சரிங்க சார்",என்று கூறிய ஆனந்த்ன் தொடர்ந்தான்."சார் நான் சிறந்த சுற்றுபுறச்சூழல் பாதுகாவலனா வாழணும், சாதிக்கணும்.அதுக்காகதான் இந்த எலகட்ரிக் ஸ்கூட்டர்,அப்புறம் டெய்லி பறவைங்க தண்ணி குடிக்க மண் குடுவைல தண்ணி வைக்கிறேன்,வீட்ல சிலந்தி வலையை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு ஒட்டடைகூட அடிக்க  மாட்டேன்னா பாத்துக்கோங்க...", தொடர்ந்தவனை இடைமறித்தான் பின்னாலிருப்பவன். "இங்க நிறுத்திக்கோங்க, போங்க" இயற்கை அவசரத்திற்கு இயற்கையாய் புதர்கள் தழைத்த இடத்தைக் காட்டினான். ஆனந்தன் வண்டியை அமர்த்தாமல்  இறங்கி சாலையோரமாக சிறுநீர் கழிக்க எத்தனித்தான். உடனே வண்டியில் அமர்ந்திருந்தவன் கத்தினான் ,"தம்பி,புதர் பின்னாடி போயிருங்க" " ஏன் அவ்வளவு தூரம் போக சொல்றீங்க?" " இல்ல போன வாரம் நான் இப்படித்தான் சாலையோரமா போயிட்டு இருந்தேன் .அப்போ திடீர்னு ஒருத்தர் கேமராவை  தூக்கிட்டு வந்துட்டார். வந்து ஃபைன் கட்டுங்கன்னு என் கூட சண்டை போட்டார். நான் ஆடி போயிட்டேன். கடைசில தான் தெரிஞ்சது அது ஒரு 'ஃப்ராங்க் ஸோ'ன்னு .நம்ம முகம் இப்படியா ஃபேமஸ் ஆகணும்?அதனால தான் சொல்றேன் . புதர் பின்னாடி மறைவா போயிருங்க"    "அட ஆமா சார் .இந்த ஃபிராங்க்ஸ்டர்  ,யூ டியுபர் தொல்லைங்க தாங்க முடியல. அருவருப்பான கேள்வி எல்லாம் கேட்டு 'ஃபி பி'யை ஏத்துறாங்க.கேஸ் போடணும். நான் பின்னாடியே மறைவா போறேன்" சற்று முன்னே சென்றவன் பின்பு எதோ யோசித்தவனாய்  திரும்ப வந்து வண்டியை அமர்த்திவிட்டு சாவியைத் திருகி கையில் எடுத்துக்கொண்டு நமட்டு சிரிப்புபை வழிந்துவிட்டு புதருக்குக்குள்ளே சென்றான். தன் மீது நம்பிக்கை இல்லாமல் வண்டிச்சாவியை  எடுத்துச் செல்கிறான் என்பதை உணர்ந்த லிப்ட்மனிதன் மனதில் கூறினான், "போடி போ, இப்ப வந்து செம அடி கொடுக்குறேன் பார்". அடுத்த வினாடியே  அவனது கூட்டாளி  அங்கு வந்தான்."வாடா நீ இங்கேயே நின்னுக்கோ. யாரும் வராம  பாத்துக்கோ.சிக்னல் கொடு.இவன் சரியான ஓட்ட வாய்.சீக்கிரம் நகையோடு வரேன்." கூட்டாளி கட்டை விரலை உயர்த்தி உடன்பட்டான். லிப்ட் மனிதன் புதர்களுக்கு பின்னே சென்றான். ஆனந்தனை பின்னிருந்துத் தாக்கினான்.   ஆனந்தன் கதற கூடாது, ஓடக்கூடாது என்பதற்காக வாய் மற்றும் கால்முட்டிகளை பலமாக தாக்கினான்.நையப்புடைத்தான். ஆனந்தன்  கீழே  விழுந்தான். லிஃப்ட் மனிதன் ஆனந்தனின் நகைகளை அபகரித்துவிட்டு  அவசரமாகத் திரும்பினான். ஆனந்தன் தனது சக்திகளை ஒன்று திரட்டி எழுந்து கத்தினான். "டேய் !என் நண்பன் ஹாஸ்பிடல்ல கிடக்கான்டா. எட்டு மணிக்கு ஆபரேஷன் தியேட்டர்ல சிகிச்சை கொடுக்கப் போறாங்க. அவனுக்கு ரேர்  பிளட் குரூப். அதைத்தான் நான் ஐஸ் பேக்ல வச்சு கொண்டு போயிட்டு இருக்கேன் . ஸ்கூட்டர்  சீட்டுக்கு அடியில்  இருக்கு. ராக்கி தியேட்டர் பக்கத்துல தான் ஹாஸ்பிடல்.  சீக்கிரமா போய் கொடு என் நண்பன் உயிரை காப்பாத்து. ப்ளீஸ்.", என்று கெஞ்சியவாறு தன்னுடைய   வெள்ளிஅரைஞாண்கயிற்றை  அவிழ்த்து நீட்டினான்." இந்த கயித்துல ரத்தினக்கல் இருக்கு. இத நீ வச்சுக்கோ. பதிலுக்கு நண்பனை காப்பாத்து." லிப்ட் மனிதன் அதைச்  சர்வமே கண்ணாகப் பிடுங்கினான். திரும்பினான். "நண்பா !" குரல் கேட்டு லிப்ட் மனிதன் ஆனந்தன் பக்கம் திரும்பினான். " இந்தா ஸ்கூட்டர் சாவி " சாவியை கொடுத்த அடுத்த நொடியில்  ஆனந்தன் மயக்கமானான். களவாணி மாயமானான்.  வாகனத்தில் களவாணியும் கூட்டாளியும் தப்பிச் செல்கின்றனர். அப்போது கூட்டாளி கூறினான்," இந்த வண்டியை எங்கேயாவது தள்ளிவிட்டுட்டு எஸ்கேப் ஆகிடுவோம். அந்தப் பையன்  எந்திரிச்சு யாருக்காவது தகவல் கொடுக்கப் போறான் .சீக்கிரமா போங்க அண்ணே." களவாணி விரைவாக ஓட்டியபடி விரைவாக நடந்தவைகளை ஆராய்ந்தான். "அந்தப் பையன் நிற்ககூட முடியாத நிலையிலும் தம்கட்டி நின்னு 'டாய் 'ன்னு முதலில் கூப்பிடுறான்.  'என் நண்பனை காப்பாத்து'ன்னு கெஞ்சுறான். அதுக்கு கூலியா அவனிடம் மிச்சம் மீது இருந்த இடுப்பு கயிற்றை கொடுக்குறான்.  நண்பனின் ரத்தத்திற்காக ரத்தினக் கல்லை கொடுக்குறான். அப்புறம் நண்பனுக்காக என்னை நண்பான்னு கூப்பிட்டு விரைவாகச் செல்ல வண்டி சாவியை கொடுக்குறான். சாவியை கொடுத்தவுடன் மயக்கமாகிறான். தன் நண்பனுக்காக எவ்வளவு கஷ்டப்படுறான்." களவாணி மனமுருகி நேராக வண்டியை மருத்துவமனைக்கு விடுகிறான். உள்ளே சென்று தகுந்த நேரத்தில் ரத்தப்பெட்டியைக கொடுத்துவிட்டு பின்பு ஆனந்தன்  விபத்துக்குள்ளான விடயத்தை, இடத்தைப் பற்றின தகவலை துப்புக் கொடுத்தான்.   ஆம்புலன்ஸ் அனுப்பி உடலில் காயம்பட்ட புதுநண்பனைக் காப்பாற்ற ஏற்பாடு செய்துவிட்டு மனதால் காயம் கண்ட களவாணியின் மனதில் ஒன்று மட்டும் ஆழமாகப் பதிந்தது. 'இனி இத்தொழில் வேண்டாம்.நல்ல வழியில் உழைத்து வாழ வேண்டும்' முற்றும் இரா.சாரதி +919884035494 sarathystays@hotmail.com முகவரி: 66/1,3வது தெரு, வீனஸ் காலனி, வேளச்சேரி, சென்னை 42 உருது மொழி ரத்தமே என் ரத்தினமே' என்ற சிறுகதை என்னால் இயற்றப்பட்டது. சொந்தக் கற்பனை. தழுவழோ, மொழிபெயர்ப்போ அல்ல உண்மையுடன், இரா சாரதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.