logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

agarasi

சிறுகதை வரிசை எண் # 69


கெடுக  உலகியற்றியான்... எல்லா நாட்களும் ஒரே சூரியன் தான் ஒரே சந்திரன் தான் ஆனால் எல்லா நாட்களும் ஒன்று போல் இருப்பதில்லை... அதனால் சூரிய சந்திரனைக் கூட புதுப்புது சூரியனாகவும் சந்திரனாகவும் பார்ப்பது ஏற்புடையதே. இன்றும் அப்படித்தான் எல்லா நாட்களையும் போல் புதிய நாளே. இந்த நாள் அவளுக்குள் ஏற்படுத்திய பூரிப்பை விட அவளது அப்பாவிற்கு மும்மடங்கு பூரிப்பைத் தந்தது. பார்ப்பவரிடமெல்லாம் சொல்லி சொல்லி அகமகிழ்ந்து போனார்... பார்க்காதவரிடமும் கேட்காதவரிடமும் கூட வழியச் சென்று சொல்லிக் கொண்டிருந்தார். "என்‌ மகள் ஈஸ்வரி நான் வேலை பார்க்கும் அதே கம்பெனியில் அதிகாரியாக இன்று வேலையில் சேர்கிறாள்... எவ்வளவு பெரிய நிறுவனத்தில் அதிகாரி... வருங்காலத்தில் நிறுவனத்தின் மிகப்பெரிய பொறுப்புகள் அவளைத் தேடி வரும்..." எதிரே நிற்பவருக்கு புரிகிறதோ இல்லையோ அதைப்பற்றியெல்லாம் அவருக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரது பெருமிதம் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஒரு கடைநிலை உதவியாளராக இந்த நிறுவனத்தில் சேர்ந்து முப்பது வருடங்களுக்கும் மேலாகப் படாத பாடு பட்டுக் கேட்காத பேச்சையெல்லாம் கேட்டுக் கடத்திய விரும்பத்தகாத வாழ்வின் வடிகாலாகவே இதைப் பார்த்தார். "இவரு பொண்ணு எக்ஸிகியூட்டிவா இங்கே சேர்ந்திருக்காம்" என்ற‌ வார்த்தைகள் எங்கோ தூரத்தில் கேட்கும் போதே அவரது உடல் சிலிர்த்தது. "இந்த நிறுவனத்தோட மிக உயரிய பொறுப்புகளை நீ அலங்கரிக்கனும்" என்ற ஆசீர்வாதத்தோடு அவளை அலுவலகத்தின் வாயிலில் விட்டுவிட்டு தனது துறையை நோக்கி வீறுநடை போட்டார். ஆனால் ஈஸ்வரிக்கோ பூரிப்பையும் பெருமிதத்தையும் தாண்டி, முதல் நாள் தந்த பதட்டம் மெதுவாக எட்டிப்பார்த்தது. தன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் அவளுக்கு வழிகாட்டிய வள்ளுவன் இப்போதும் அலுவலக வாயிலில் அவளை சரியாக ஆற்றுப்படுத்தினான். இரண்டு முறை தாண்டி மூன்றாவது முறையாக வாசித்தாள், 'துணிந்தபின் எண்ணுவது இழுக்கு'... தனக்குள் மீண்டும் மீண்டும் முணுமுணுத்தபடி தொடர்ந்தாள். நாட்டின் மிகச்சிறந்த நிறுவனங்களுள் ஒன்று... நிறுவனத்திற்குள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பதற்கென்றே பல கார்களை வரிசைப்படுத்தியிருந்தனர். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் கடைநிலை ஊழியர்கள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் ஐநூறு நிர்வாகிகள். அந்த ஐநூறு பேர்களில் ஈஸ்வரியும் ஒருத்தி. மிகவும் லாபகரமாக இயங்கிய அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கான குடியிருப்பில் வீடு என்பது பலருக்கு எட்டாக்கனியாக இருந்தது. அந்த குடியிருப்பில் வீடு கிடைக்காதவர்கள் ஒரு பக்கம் இருக்க, சிலர் சொந்த வீடு இருந்தும் அந்த குடியிருப்பை காலி செய்ய மனமின்றி அந்த தனி உலகில் சஞ்சரித்துக் கிடந்தனர். குடியிருப்பு வீடுகளின் பராமரிப்புக்காக நிறுவனம் தனியாக ஒரு துறையையே நடத்தி வந்தது. நிறுவன வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல சுற்றுச் சூழலை ஏற்படுத்தித் தரும் நோக்கோடு உருவாக்கப்பட்ட முறைமை. அப்படிப்பட்ட சூழலில் தான் முப்பது வருடங்களாக ஒரு அறை உள்ள‌ வீட்டிற்காகக் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியவருடைய மகளுக்கு முதல் வாரத்திலேயே மூன்று அறைகள் கொண்ட வீடு ஒதுக்கப்பட்டது. குடும்பத்தோடு அந்த வீட்டில் குடியேறினாள் ஈஸ்வரி. முதல் தளத்திலிருந்த மூன்று அறைகள் கொண்ட அந்த வீட்டில் அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம் என்பது படுக்கையறையை ஒட்டி அமைந்திருந்த பால்கனி தான். வீட்டு வாசலிலிருந்து  உள்ளே நுழைந்து நேரடியாக அந்த பால்கனியை வந்தடையலாம். வீட்டு வாசல் படுக்கையறை மற்றும் வீட்டின் ஹால் என அனைத்தையும் இணைக்கும் ரம்மியம் அந்த பால்கனி. அங்கிருந்து எதிரேயுள்ள தோட்டத்தை ரசிப்பது அவ்வளவு அலாதியானது... காலை மற்றும் மாலை நேரங்களின் அழகை  ரசித்தபடி தேநீரோடு அங்குத் தஞ்சமடைவது ஈஸ்வரியின் வாடிக்கையானது. சுற்றியிருந்த வீடுகளின் பால்கனியைப் போல் தானும் பால்கனி ஓரங்களைப் பூந்தொட்டிகளால் அலங்கரித்து அதன் அழகுக்கு மேலும் அழகூட்டினாள்.  பழமையான அந்த வீட்டில் சில பிரச்சினைகள் இருந்தாலும் இந்த பால்கனி எல்லாவற்றையும் மறக்கடித்து வீட்டோடு அவளைப் பிணைத்துப் போட்டது. வீட்டினுள் ஆங்காங்கே உடைந்திருந்த சில டைல்களை சரி செய்வதற்காக நிறுவனத்தில் அவர்களுக்குள்ளாகவே உருவாக்கப் பட்ட முறைமையின் படி புகாரைப் பதிவு செய்து புகாரின் முன்னுரிமை வரிசை எண்ணைக் குறித்துக் கொண்டாள். நாட்களின் ஓட்டத்தில் புகாரை மறந்து வேலையில் மூழ்கிப் போனாள். அலுவலகம், வீடு, குடும்பம், பால்கனி என வாழ்க்கை ஓட்டமெடுத்தது. முதல் ஒன்றிரண்டு பதவி உயர்வு இயல்பாகக் கடக்க இடைநிலையில் அதன் சூட்டை உணரத் தொடங்கினாள் ஈஸ்வரி. எந்த விதத்திலும் குறைவில்லாது உழைத்தும் சிலருக்கு எளிதாகக் கிடைக்கும் பதவி உயர்வு முதல் தவணையில், ஏன் இரண்டாவது தவணையிலும் கிடைக்காது தவித்தாள். ஆயினும் தன் கடமைகளை எந்த குறையுமின்றி முடிந்தவரைச் சிரத்தையோடு செய்து வந்தாள். அந்த சிரத்தை பல நேரங்களில் பாராட்டுதலுக்கு பதிலாக வெறுப்பையே சம்பாதித்தது. நாட்களின் ஓட்டத்தில் ஏதோவொரு மிகை வேலை நாளின் மாலை வீடு திரும்பிய நேரத்தில் ஒருவர் தன் மனைவியோடு அங்கு வந்து ஈஸ்வரியைச் சந்தித்தார். அந்த நபர் தன்னை தயாரிப்புத் துறையின் மேலாளர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். ஆந்திராவின் ராஜமுந்திரியிலிருந்து வந்த அந்தக் குடும்பம் ஈஸ்வரியின் கீழ்வீட்டிலிருந்த ஒரு பெண் ஊழியர் காலி செய்ததால் அங்கு குடியேறியது. சம்பிரதாய அறிமுகங்களின் போதே பால்கனியின் தொட்டிச் செடிகளை எடுக்கும் படி பணித்தார் அந்த நபர். வறட்டுப் புன்னகையோடு அதைக் கடந்து வந்தவள் தனக்குள்ளாக அதை விவாதித்துக் கொண்டே மாலைக் குளியலை முடித்தாள். குளியலறையிலிருந்து  பாவாடையோடு படுக்கையறையின் கண்ணாடி முன் ஈரத்தலையைத் துவட்டிக் கொண்டிருந்தவள், கண்ணாடியை ஓட்டிய ஜன்னலோரமிருந்த பால்கனியில் பேச்சுச் சத்தம் கேட்கப் பதறிப் போய் துண்டால் உடலை மூடிக்கொண்டு மீண்டும் குளியலறைக்குள் ஓடினாள். துவட்டியும் துவட்டாமலும் ஈரத்தோடு துணியை மாற்றி வெளியே வந்தவள், பால்கனியில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களைப் பார்த்துத் திகைத்துக் கத்தத் தொடங்கினாள். "யாருங்க நீங்க... இங்க என்ன பண்ணுறீங்க? யாரக் கேட்டு உள்ள வந்தீங்க?" அந்த இருவரில் ஒருவன் நிறுவனத்தின் சீருடையோடும் மற்றொருவன்‌ சாதாரண உடையோடும் நின்றிருந்தனர். சீருடை நபர் எந்த பதட்டமும் இல்லாமல் அலட்சியமாகப் பதிலளித்தான் " கம்பெனியின் ஹவுஸ் மெயின்டனன்ஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்து வர்றோம். கீழ்வீட்டுக்கு புதுசா ஒரு மேனேஜர் குடி வந்திருக்காரு அவரோட வீட்டு சுவரில் சின்ன சின்ன சிபேஜ்  இருக்கிறதா கம்ப்ளைன்ட் வந்தது... அதை பார்க்க தான் வந்திருக்கோம் நீங்க உங்க மாடில இருக்க செடிகளை எடுக்கனும்" என்று தொடர்ந்து பேசிக் கொண்டே போனான். ஈஸ்வரியின் உதடு துடித்தது,"அதுக்காக நீங்க பாட்டுக்கு என்னோட அனுமதி இல்லாம உள்ள வந்தா என்ன அர்த்தம்" என்று அவள் முடிப்பதற்குள் அந்த நபர் கத்தத் தொடங்கினான். "என்னமா ஓவரா பேசுற... இந்த யூனிஃபார்ம்ம பார்த்தா தெரியல நாங்க கம்பெனி எம்பிளாய்னு நீங்க பாட்டு பேசிட்டே இருக்கீங்க... இனி உங்க வீட்டுக்கு மெய்ண்டனன்ஸ்ல இருந்து எப்படி கம்ப்ளைன்ட் அட்டென்ட் பண்றாங்கனு நான் பார்க்கிறேன்" என்று கத்தியபடி அங்கிருந்து வெளியேறினான். ஈஸ்வரிக்கு கோபம் கொப்பளித்தது... "உங்க பேரு என்னனு சொல்லீட்டு போங்க " என்று கத்தியவளிடம்‌... "ராஜா"... என்று மீண்டும் குரலை மட்டும் அனுப்பியவன் கீழ் வீட்டு மேலாளரிடம் "உங்க கம்ப்ளையன்ட இவுங்க அட்டென்ட் பண்ண விடமாட்டுறாங்கனு ஒரு மெயில் குடுங்க" என்று கத்திக் கொண்டே அங்கிருந்து வெளியேறினான். அவன் அங்கிருந்து நகர்ந்து பல மணி நேரமாகியும் அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை... இரவு முழுவதும்‌ யாரோ ஒருவர் பால்கனி ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்பது போன்ற உணர்வு தூக்கத்தைக் கெடுத்தது. ஏதோவொரு மணித்துளியில் உறங்கிப் போனாலும் அவ்வப்போது  திடுக்கிட்டு விழித்தாள். காலையில் குடியிருப்பின் பராமரிப்புத் துறையில் 'ராஜா' என்ற பெயரில் யாரும் இல்லாததைக் கேட்டு திடுக்கிட்டாள். என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து வெளியேறியவள், நீண்ட தேடலுக்குப் பின் வந்தவன் பெயர் 'பாரதி' என்பதைக் கண்டுபிடித்தாள். பெயரை தெரிந்து கொண்டவள் அவன் மீது புகார் அளிக்க ‌மீண்டும் பராமரிப்புத் துறைக்குச் சென்றாள். பாரதியின் மேலாளர்‌ பெயர் கதிரேசன்‌ என்பது தெரியவந்தது. அவரை காண்பதற்காக அவரது அறைக்கு வெளியே காத்திருந்தபோது உள்ளே நடந்த உரையாடல் தெளிவாக அவளது காதுகளில் விழுந்தன. "என்ன செய்யனும்னு... இதெல்லாம் ஒரு கேள்வியா? அவ சாதாரண சீனியர் எக்ஸிக்யூட்டிவ் நேத்து வந்தவ... அதுவும் இல்லாம ஒரு பொண்ணு... அதிகப்பட்சம் டி.ஜி.எம் (DGM ) ஆகவோ இல்ல  எஸ்.டி.ஜி.எம்.ஆகவோ ஆகலாம். (SDGM) ஆனா கீழ் வீட்டுக்கு வந்திருக்கவர் மேனேஜர்... அதுலையும் மேல்( Male) எக்ஸிகியூட்டிவ்...  நாளைக்கே நிறுவனத்தோட டைரக்டரா கூட வந்து உட்காரலாம்... யாருக்கு ஃபேவரா நடக்குறதுனு கேக்குறீங்க... சரி இந்த விஷயம் எல்லாம் என் காதுக்கு வராத மாதிரி பாத்துக்கோங்க... " என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த கதிரேசனின்‌ வார்த்தைகள் அவளது காதுகளில் விழுந்தன. அதற்கு மேல் இந்த பிரச்சினையைப் பற்றி பேசி எந்த பயனுமில்லை என்ற முடிவுக்கு வந்தவள், வந்ததற்காக தான் கொடுத்த டைல்ஸ் கம்ப்ளைன்ட் வருடக் கணக்காக சரி செய்யப்படவில்லை என தெரிவித்தாள். " வருவோம் வருவோம்...‌சரி பண்ணி தருகிறோம்..." என்று ஈஸ்வரியைப் பார்க்காது கணினி திரையைப் பார்த்தபடி பதிலளித்தார் கதிரேசன். "சார்... என்னோட கீழ் வீட்டுக்கு டெய்லி கம்பளையன்ட் அட்டன்ட் பண்ண வர்றீங்க ஆனா நான்‌ கம்பளையன்ட் குடுத்து வருசம்‌ ஆச்சு... எல்லா தொழிலாளர்களுக்கும்  ஒரே மாதிரியான முக்கியத்துவம் குடுங்க..." என்றபடி விவாதத்தை சூடாக்கினாள்‌ ஈஸ்வரி. "எந்த கம்பளையன்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு எங்களுக்கு தெரியும் அது சி-பேஜ் சுகாதார பிரச்சனை... உங்களோடது போல ஆயிரம்‌ புகார் இருக்கு அதெல்லாம் மெதுவா தான்‌ பார்ப்போம்... எல்லாத்துக்கும் மேல நீங்க தான் யாரையும் உங்க வீட்டுக்குள்ளே விட‌மாட்டேங்கிறீங்கலாமே...." என்றபடி கண்ணி திரையில் மூழ்கினார். அவரது உடல் மொழியிலும் நக்கல் சிரிப்பிலும் அலட்சியம் தறிகெட்டு ஓடியது... என்ன செய்வது இது போன்ற ஆட்களிடம் தான் இன்று அதிகாரம் இருக்கிறது... அதற்கு மேல் அங்கு நிற்க விரும்பாது வெளியேறினாள் ஈஸ்வரி... ஆனால் அவளது மனம்‌ தன் வீட்டிற்குள் ஒருவன் அத்துமீறி நுழைந்ததைக் கடந்து போக மறுத்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே சில பெண் ஊழியர்கள் அந்த நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஒரு அமைப்பைப் பற்றித் தெரிவித்தனர். அது டபில்யூ.ஈ.டபில்யூ.ஏ.(WEWA- Women Employee Welfare Association). பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய சரியான தீர்வு என்றபடி WEWAவை நோக்கி விரைந்தாள். பரந்து விரிந்து கிடந்த குடியிருப்பின் நடுவே தனியாக ஒரு கட்டிடம் முழுவதுமாக WEWA விற்காக இயங்கியது. உள்ளே விதவிதமான செயல்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருக்க அதன் தலைவர் யார் என்று விசாரித்து அவரைக் காணச் சென்றாள். உள்ளே இருந்த பெண்கள் கூட்டம் காரசாரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தது. அந்த கூட்டத்தில் கதிரேசனின் மனைவியும் கீழ் வீட்டுக்கு புதிதாக வந்த நபரின் மனைவியும் இருந்தனர்.‌   தயங்கி தயங்கி உள்ளே நுழைந்த ஈஸ்வரி தலைவரை தனியாக அழைத்து விசயத்தைத் தெரியப்படுத்தினாள். அனைத்தையும் அமைதியாக கேட்டுவிட்டு முடிந்ததைச் செய்வதாக உறுதியளித்தார். அங்கிருந்து வீட்டிற்கு வந்தவள் மாலை குளியலுக்கு பின் தேநீர் கோப்பையோடு பால்கனியில் அமர்ந்தாள். கீழே நின்றபடி தெலுங்கில் தனது கணவனிடம் ஈஸ்வரியைப் பற்றி ஒரு ஏலனப் பார்வையோடு ஏதோ சொல்லி சிரித்தாள் கீழ்விட்டுப் பெண். மொழி புரியாவிட்டாலும் ஆங்காங்கே உதிர்ந்த ஆங்கிலமும் அவர்களது உடல் மொழியும் ஈஸ்வரி வெளியேறியதற்கு பின் WEWAவில் என்ன நடந்தது என்பதைப் படம்பிடித்துக் காட்டியது. பெரும்பாலும் உயர் பதவிகளை அலங்கரித்த ஆண்களின்‌ மனைவிமார்களே WEWAவின் செயல் வீரர்கள். அப்படியிருக்க அலுவலகத்தில் அந்த அதிகாரிகளால் ஏற்படும் இடைஞ்சல்களுக்கு எப்படி நடுநிலையான தீர்வு கிடைக்கும். எல்லாலாவற்றையும் மீறி புகார் செய்தாலும் அந்த புகார் மீண்டும் அதே அதிகாரிகளுக்கு தான் விசாரணைக்காக அனுப்பப்படுகிறது... இது அவர்களது பொழுது பொக்கிற்காக உருவாக்கப்பட்ட ஆடம்பரமேயன்றி வேலைக்கு செல்லும் பெண்களின் குறைகளுக்கான தீர்வு அல்ல என்பது மட்டும் அவளுக்கு தெளிவாக தெரிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக கதிரேசனின் வார்த்தைகள் அவளது மனதில் தொடர்ந்து எரிந்தது.  "அவ ஒரு பொண்ணு... அதிகபட்சம் DGM தான் ஆகமுடியும்" என்ற வரிகள் அவளது மூளைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஈஸ்வரியின் சிந்தை ஓட்டத்து அவளது தாயின் அலறல் களைத்தது. எழுந்து உள்ளே ஓடிய ஈஸ்வரி, உடைந்த டைல்ஸ் கிழித்து சொட்டிய இரத்தத்தோடு அமர்ந்திருந்த அம்மாவைப் பார்த்து பதறிப்போனாள். சிறிய காயம் தான் ஆனாலும் சர்க்கரை நோயாளியான அவளது தாய்க்கு அது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக மருத்துவரை நாடி ஒரு டி.டி. யோடு  வீடுதிரும்பினர். அப்போது டைலுக்காக அவள் கொடுத்த புகாரை எடுத்துப் பார்த்தாள். பதிவு செய்து நான்கு வருடங்களுக்கு மேலாகியிருந்தது. ஒரு சிறிய விரக்தியோடு கண்களை மூடி தரையில் அமர்ந்தாள். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த ஈஸ்வரியின் அப்பா அந்த நேரத்தில் சரியாக வீட்டிற்குள் நுழைந்தார். அவரது முகத்தில் அளவுக்கதிகமான பூரிப்பு இப்போதும் தெரிந்தது. உள்ளே நுழைந்ததும் அவரே தொடங்கினார்..." எப்பவும் என்ன பார்த்தாலே சிடு சிடுனு விழுகிற அந்த செக்யூரிட்டி இப்ப என்ன பார்த்து வணக்கம் வைக்கிறான்...‌ காரணம் எம்பொண்ணு ஒரு எக்ஸிகியூட்டிவ் என்ற ஒரே காரணம்... படிப்பும், பதவியும்,பணமும் வந்துட்டா போதும் இங்க எல்லாம் சரியாயிடும்..." என்று பெருமை பொங்க பார்த்த அப்பாவை வெறுமையோடு ஏறிட்ட‌ ஈஸ்வரி அமைதியாக எந்த சுரத்தையும் இன்றி," இந்த நிறுவனம் ஆரம்பித்து ஐம்பது வருடம் இருக்குமில்லப்பா ?"என்றாள். "அதுக்கு மேலே இருக்கும்... " என்றார் அதே பூரிப்போடு. "இது வரை எத்தனை பெண்கள் இந்த நிறுவனத் தலைவரா இருந்திருக்காங்க?" "...." முப்பது வருடங்களுக்கும் மேலாக அங்கு பணியிலிருந்த அவருக்கு தெரியும் இதுவரை எந்த பெண்ணும் நிறுவனத் தலைவராக இருந்தது இல்லை... "இங்க நாம்மெல்லாம் மேலயே வரமுடியலையேப்பா...  " "அப்படி நினைக்காதமா... இந்த யூனிட்ட விடு நம்ம கம்பெனியோட ஏதோ ஒரு யூனிட்ல சமீபத்துல ஒரு பெண் இயக்குனரா வந்ததா பேப்பர்ல படிச்சேன்..." அப்பாவின் கண்களை கூர்மையாக வெறித்த ஈஸ்வரி ஒரு வறட்டுப் புன்னகையோடு தொடர்ந்தாள் அதில் அனேகப் பெண்களின் இயலாமை வழிந்து ஓடியது, "பெண் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் ஆவது இன்னமும் ஒரு செய்தி தான் இல்லையா?" என்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவளது அப்பா தடுமாறினார். அதற்கு மேல் எதுவும் பேசாமல் எப்போதும் போல் ஒரு திருக்குறள் புத்தகத்தோடு பால்கனிக்கு வந்தாள்... புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கத்தை திறந்தவள், கீழ் வீட்டிற்கு அந்த மேனேஜர் வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் புதிதாக பதிப்பதற்காக அவரது வீட்டு வாசலில் டைல்கள் வந்து இறங்கியதை கவனித்தாள். அதைப் பார்க்க பார்க்க அவளது உதடு துடித்தது... எதுவும் செய்ய முடியாது வந்திறங்கிய டைல்களை வெறுமனே வெறித்துக் கொண்டிருந்த அவளது கண்கள் கலங்கின... அனிச்சையாக புத்தகத்தில் பதிந்த கலங்கிய கண்களுக்கு நடுவே தெளிவில்லாமல் தெரிந்தது அந்த வரி... "பரந்து கெடுக உலகியற்றியான்..." ------- பா.ஏகரசி -------

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.