Jaya Singaravelu
சிறுகதை வரிசை எண்
# 68
அந்த ஒரு சொல்
என் அம்மா கடந்த பத்து நாட்களாக ஒரே சம்பவத்தைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார். அப்பா இறக்கும் தறுவாயில் ஒரு வார்த்தைக் கூட பேசல என்பதே அது.
எப்போ வாயை மூடுவ, தூங்கும்போது கூட ஏதாவது உளறிக்கிட்டே இருக்கேன்னு அவங்க அம்மா எங்க அப்பாவிடம் சொல்லுவாங்களாம்.
பேசுவது என்பது ஏதோ பட்டிமன்ற பேச்சு போல் அல்ல. முகம் தெரியாத யாராக இருந்தாலும் உடனே அறிமுகம் செய்து கொண்டு அவர் படிப்பு, குழந்தை, குடும்பம் என்று ஆரம்பித்து அவரின் வரலாறு, புவியியல் எல்லாம் தெரிந்து கொண்டுவிடுவார். பதிலுக்கு நம் பூகோளமும் பகிர்ந்து கொள்ளப்படும். இருவருக்கும் இனிப்பைத் தருவது முத்தம் மட்டுமல்ல. சில ரகசியங்களும் என்பது அவர் எண்ணம்.
பேசிப் பேசியே வேலை வாங்கிடுவார் என்றும் அலுவலகத்தில் சொல்வார்கள். உதவி தேவைப்பட்டாலும் உடனே செய்வாராம்.
ஒருநாள் அவர் வரலை என்றாலும் அலுவலகம் மிக அமைதியாக இருக்கும் என்று சண்முகம் மாமா சொன்னார்.
"உங்கப்பா ஒரு வெகுளி. மனசுல ஒண்ணுமே வச்சுக்க மாட்டார். ஆனா ஒரு விஷயம் அவருக்குத் தெரிந்தால் யாரிடமாவது சொல்லிடனும் என்று இருப்பார். இல்லையினா மண்டை வெடிச்சுடும்" என்றார் அப்பாவின் நெருங்கிய தோழன் கார்த்தி.
எனக்குமே அப்பப்ப தோணும். இந்த அப்பா எப்ப பாரு நொய் நொய்ங்கிறாரேன்னு எரிச்சலா இருக்கும். என் நண்பர்களோட அப்பா யாருமே இப்படி இல்ல. அமைதியா, அழகா, கொஞ்சம் கெத்தா இருக்க மாட்டேன்கிறாரேன்னு கோவமா வரும்.
இந்தப் பேச்சு இதோட போகல. ஒரு கணவன், மனைவி சண்டையில் விவாகரத்து வரை கோர்ட்டுக்குபோன கேசை பேசியே சேர்த்து வைச்சிருக்கார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் பேச்சையும் கேட்டு விவாகரத்து வேணாம்னு சொல்லியிருக்காங்களேன்னு நினைச்சி சிரிச்சிருக்கேன்.
அவர் எவ்வளவு பேசினாலும் நான் மட்டும் ஓரிரு வார்த்தை தான் சொல்வேன். சில சமயம் வீட்டுக்கு வரும் போதே காதில் ஹெட் போன் போட்டுக்கொண்டே வருவேன்.
வேலையிலிருந்து ஓய்வு பெற்ற போதும், அவரால் யாரிடமும் பேசாமல் இருக்க முடியலை என்று சொல்லி ஒரு கடையில் கணக்கு எழுதச் சென்று விட்டார்.
உபயோகமில்லாத சொற்களில் என்னதான் இருக்கு? இப்போதெல்லாம் பேச்சை விட எனக்கு எமோஜியே போதும் என்று ஆகிவிட்டது. அப்பா இறந்து இன்றோடு பத்தாம் நாள். அவருக்கு சமூக வலைத்தளங்கள் அவ்வளவு பழக்கமில்லை. இல்லையென்றால் ஃபேஸ்புக் ஒரு வழி ஆகியிருக்கும் பூமர் அங்கிள் என்று பெயர் வாங்கியதோடு, நித்தமும் அவரை ட்ரோல் செய்வார்கள் இந்த ஈராயிரக்குளவிகள்.
நம்மைப்போல் முகம் காட்டாமல் அவரால் பேச முடியாது. ஒருவர் நேரில் பார்த்துச் சொல்ல முடியாத வார்த்தைகளைத்தானே நடிகர்களின் அபிமானிகள் சண்டைகளின் நடுவில் உதிர்த்துக் கொள்கிறார்கள்.
இத்தனை சொற்களிலும் ஒரு தகாத வார்த்தையோ, பெண்களின் அங்கங்கள் குறித்த கெட்ட வார்த்தையோ அவர் பேசியதே இல்லை என்பதே ஆறுதல்.
யாராவது கல்யாணம்னு பத்திரிக்கைக் கொடுத்தால் போதும். முதல் ஆளாய்ச் சென்று கடைசி ஆளாய் வருவார். இவர் நமக்குத் தூரத்துச் சொந்தம் செலவு, விடுமுறை செய்து போகணுமா என்று யோசிக்கக் கூட மாட்டார். அவர் ஒரு ஏமாளியாகவே பட்டார்.
அவர் இறந்த முதல் இரண்டு நாட்கள் வீட்டில் கூட்டம் இருந்ததால் ஒண்ணுமே தெரியல. முகம் தெரியாதவர் கூட உங்க அப்பாவைக் காய்கறிக்கடையில் பார்த்தேன். என்னுடன் நன்றாகப் பேசினார். மளிகைக் கடையில் பார்த்தேன், சலூன் கடையில் பார்த்தேன் என்று சொல்லச் சொல்ல எனக்குக் கடுப்பா வந்துச்சி. எல்லோரும் சொன்ன ஒரே வாக்கியம் உங்கப்பா நல்ல மனுசன். அவர் எங்கிருந்தாலும் உங்களை வாழ்த்திக்கிட்டே இருப்பார் தான்.
இரவுகளுக்கு இன்னொரு முகம் உண்டு இழப்பின்
வலியை இரட்டிப்பாக்க
எவரும் அறியா வண்ணம் அழுது தீர்க்க ஏனென்று கேள்வி கேட்டுக்கொண்டே நீள்கிறது!
நாட்கள் செல்ல செல்ல மறந்து விடும் என்கிறார்கள். இப்போதுதான் மிக அதிகமாய் உங்க பேச்சு சத்தம் கேட்கிறது.சிரிப்பும்,அழுகையும்,கண்பார்வையும் பிடித்ததும்,பிடிக்காததும் என்று வரிசையாய் வாழ்ந்ததை, வாழ்வதைப் பறைசாற்றி நித்திய
தூக்கத்தைத் தொலைக்கிறது அப்பா. கடைசியில் நீங்கள் இருந்திருக்கலாம் என லட்சத்தியோரு தடவையாய் ஏங்குகிறேன்!
இப்போது தான் ஒரு வெறுமை சூழ்கிறது. இங்க தானே அப்பா பேப்பர் படிப்பார், இங்க தானே உட்கார்ந்து ரோட்டில் போகிறவர், வருபவர்களிடம் பேசிக்கொண்டே இருப்பார் என்று தோணுது. அவர் இல்லாத அமைதி என்னவோ செய்கிறது. அவர் இருக்கும்வரை இம்சையைச் சமாளிப்பது போல் இருந்தேன். அது இம்சை அல்ல அவரின் இருப்பு என்பதை உணர்ந்து கொண்டேன்.
இதோ பதினாறாம் நாள் காரியம் செய்யப் போகிறேன். இறந்தபோது வராத அழுகை எப்ப வருமோ என்று முட்டிக்கொண்டே இருக்கிறது. யாரோ பதறியடித்துக் கொண்டே வருவது தெரிந்தது.
"முருகேசா எப்படிடா என்னை விட்டுப் போக முடிஞ்சுசு. சாகற வயசா இது" என்று தலையில் அடித்துக்கொண்டு ஒருவர் அழுதார். வழமை போல யாரென்றே தெரியவில்லை.
"நான் உங்கப்பாவின் பால்ய சினேகன். நானும், அவனும் ஒரே வகுப்பில் படித்தோம். சின்ன வயசுல அவனுக்குத் திக்கு வாய்ப் பிரச்சனை இருந்ததால் யாரிடமும் பேசவே மாட்டான். கொஞ்சம் அந்தப் பிரச்சனை சரியாக வைத்தியம் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்குப் பேசணும்னு ஆசையாயிருக்கும். ஆனா பேசினால் திக்கித் திக்கி ஒரு வாக்கியம் முடிக்க முடியாமல் சிரமப்படுவான். வகுப்பில் அவனைக் கேலி செய்யாத ஆளே இல்ல, என்னிடம் மட்டும்தான் பேசுவான். எனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்கான். யாரைப்பற்றியும் ஒரு வார்த்தை தவறாய் சொல்ல மாட்டான் தம்பி. இப்பக் கூட காசி போகணும்னு ஆசைப்பட்டேன்னு அவன்தான் பணம் கட்டி அனுப்பி வச்சான். நான் போயிட்டு திரும்பி வரறதுக்குள்ள அவன் போயிட்டான்" என்று அழுதார்.
என்னது அப்பாவுக்குத் திக்குவாயா என்று ஒரு கணம் திடுக்கிட்டு நின்றேன். இது ஒரு புது செய்தியாக இருந்தது. இதுவரை அவருக்குத் திக்கும் என்பதே தெரியாது. அவர் சொல்லியதும் இல்ல.
நான் வழக்கமா சாவு வீடுகளில் இருக்கும் நாடகத் தன்மையைப் பார்ப்பேன். யார் நிஜமாக அழுகிறார், யாருடைய அழுகை நாடகத்தனம் என்றெல்லாம் கவனித்துப் பார்ப்பேன். இவரின் அழுகையில் ஒரு உண்மையை உணர்ந்தேன். அவருக்கு நான் ஆறுதல் அளித்து அனுப்பி வைத்தேன்.
அப்பாவின் அறையைச் சுத்தம் செய்வதற்காகப் போனேன். அவரின் பழைய டைரிகள் வைத்திருந்தார். அவர் பேசாத எதை எழுதியிருக்கப் போகிறார் என்றே யோசித்துப் புரட்டினேன். சிறு வயதில் அவர் பேசணும் என்று நினைத்ததை எழுதிப் பார்த்திருக்கிறார். இன்னைக்குப் பள்ளியில் பேச்சு போட்டி, எனக்குப் பேசணும்னு ஆசை. ஆனால் இந்தத் திக்குவாய் பிரச்சனை என்னை ஒரு வாக்கியம் கூட பேச விடாமல் செய்யுது என்று கவலைப்பட்டு எழுதியிருந்தார். ஏனோ அதற்கு மேல் படிக்கப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. அப்படியே வைத்து விட்டேன். சாதாரணமா பேச முடிகிற நம்மால் பேசணும் என்று ஆசைப்பட்டு, முடியாமல் இருந்த, அதுவும் கேலிக்கு உள்ளாகிய ஒருவரின் உணர்வைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் வலித்தது.
அவமானம், கேலி இதெல்லாம் கடந்துதான் பேச்சையே மூச்சாக்கி வாழ்ந்திருக்கிறார். ஏன் இப்படி இருக்கிறார்ன்னு தெரியாமலேயே இருந்திருக்கிறோம் என்று வெட்கமாக இருந்தது.
அம்மா இப்போதெல்லாம் எதுவுமே பேசாமல் இருக்கிறார். எந்தச் சடங்கும் செய்து கொள்ள மாட்டேன் என்று விட்டார். அதுவும் அப்பா கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே சத்தியம் வாங்கிட்டாராம். தான் இறந்து விட்டால் நீ எப்போதும் போல் பொட்டு, பூ வென்று இருக்க வேண்டும் என்று. அவரை நினைத்து நான் ஆச்சரியம் அடைந்தேன். அப்பாவுக்குள் ஒரு பெரியார் இருந்திருக்கிறார் அதுவும் நமக்குத் தெரியல. இன்னும் என்னென்ன இந்த மனுஷன் ஒளிச்சி வச்சிருந்தாரோ? அவரா ஒளிச்சி வச்சிருந்தார் நான்தான் அவரைக் கண்டுகொள்ளவே இல்ல. அவரை மதிக்கவும் இல்ல. என்னிடம் என்ன கதையெல்லாம் பேச ஆசைப்பட்டாரோ என்று வருத்தமாக இருந்தது. நான் ஏன் இப்படி இருந்திருக்கிறேன். அவரிடம் உட்கார்ந்து பேசியிருக்கலாம் உங்க ஆசை என்னவென்றாவது கேட்டிருக்கலாம். நான் எதையுமே செய்ததில்லை.
சினிமாத்தனமா ஒரு யோசனை வந்தது. கடைசியா ஏதாவது நமக்குக் கடிதம் எதுவும் எழுதி வைத்திருக்கிறாரோ என்று ஓடிப்போயி தேடினேன். அப்படியொன்றும் இல்ல. இப்பவெல்லாம் ஒரு பிரச்சனை வந்தால் அப்பா எப்படி பேசி சமாளித்தார். அவருக்குக் கொஞ்சம் காதைக் கொடுத்திருக்கலாம் என்று என்னையே திட்டிக் கொள்கிறேன்.
எந்த சத்தங்கள் பிடிக்காமல் இருந்ததுதுவோ அது
இனி வரவே வராது
என்றானபின் ஆழ்மனதில் பதிந்த
சத்தங்கள் உரக்கவே கேட்கிறது
என்றைக்கும் மறக்கவியலா
உங்களைப் போலவே!
அப்பாவின் விருந்தோம்பல், இன்முகம், சிரித்துக்கொண்டே பேசுவது இதெல்லாம் இப்போது தான் உணர முடிகிறது. ஏதோ ஒரு குற்ற உணர்வு நெஞ்சை அழுத்துகிறது.
'அம்மா நான் அப்பாவிடம் சரியாவே பேசவே இல்லைன்னு வருத்தப்பட்டிருக்கிறாரா?"
"சின்ன புள்ளையா நீ இருக்கும் போது அவர் எப்ப வருவார்னு காத்துகிட்டு இருப்ப, அவரோட நீ பேசுறதைப் பார்த்து எனக்குப் பொறாமையா இருக்கும். எத்தனையோ நாட்களில் அவர் தோளில் போட்டு தான் தூங்க வைப்பார். முதல் வார்த்தையே அப்பான்னு தான் சொன்ன, அதுக்கே தெருவில் போறவங்க முதற்கொண்டு சாக்லேட் கொடுத்தார். ஓவரா பண்ணாதீங்கன்னு சொன்னேன். என் புள்ள பேசிய முதல் வார்த்தைன்னு கொண்டாடித் தீர்த்தார். அவருக்குச் சொற்கள் மீதும் ஒரு பிரியம் உண்டு. பேசிப் புரிய வைக்காத ஒரு விஷயம் கூட உலகில் இல்லைன்னு சொல்லிட்டே இருப்பார்"
"எப்பவும் உன்னைப்பத்தி உயர்வா தான் சொல்வார். வளர்ந்ததுக்கு அப்புறம் நீதான் தூரமா போயிட்ட. அவர் எப்போதும் போல் உன்னை ரசிச்சிக்கிட்டே தான் இருந்தார். என் பையன் என்ன அழகு, கம்பீரமா நடக்கிறான். அவன் யாரையாவது லவ் பண்றானா கேட்டு சொல்லு, சீக்கிரம் கல்யாணம் பண்ணிடுவோம்னு சொல்வார்"
"சாரிம்மா நான் அப்பாவிடம் நல்லா பேசியிருக்கலாம் தப்பு பண்ணிட்டேன்."
"அதெல்லாம் அவர் தப்பா நினைச்சிருக்க மாட்டார் தம்பி."
பேசாமல் புரிந்து கொள்வார் என்றால் மொழி எதற்கு, ஒரு மொழியின் வழியில் ஒரு பொருளுக்குப் பல சொற்கள் எதற்கு? பேசுவதற்கு தானே? ஒரு சொல் ஓராயிரம் புரிய வைத்திருக்குமே... காலம் கடந்து சொல்லும் மன்னிப்பு, நன்றி, காதல், அன்பு எதற்குமே அர்த்தமே இல்லை.
அவர் எங்களை விட்டுப் பிரிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. வீடு சகஜ நிலைக்குத் திரும்பி விட்டது. அம்மா சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டார். அவரின் அறையை அப்படியே வைத்து விட்டோம். அப்பாவின் கடைசி சொல் எதுவாக இருக்குமென்று அவ்வப்போது யோசித்துக் கொள்கிறேன். அம்மாவைப் பார்த்துக்கொள் என்பதா? உனக்குக் கல்யாணம் செய்யாமல் போகிறேன் என்றா? என்று நானே நினைத்துக் கொள்கிறேன். ஒருவரை நினைவில் வைத்துக்கொள்ள அவர்கள் பேசிய சொற்களே போதும். அப்பா எப்போதும் சொல்லும் கவலைப்படாதே எல்லாம் சரியாகும் என்ற வார்த்தையை இப்போது நானும் உரு போடுகிறேன். காற்றில் கரையும் சொற்கள் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆம் மனிதர்களின் இருப்பை விட எனக்குச் சொற்களே போதும். அப்பாவின் சொல்லாக இப்போது நான் இருக்கிறேன். அந்த ஒரு சொல் நான் இருக்கிறேன் எப்பவும் காற்றாக உங்களைத் தழுவிக்கொண்டு இருப்பேன் என்பதாக இருக்கலாம். ஆம் அப்பா எப்பவும் சொல்லாக,காற்றாக,நினைவாக, கண்ணாடியில் தெரியும் என் பிம்பமாக, என் உதிரமாக
என்னுள்ளே இருக்கிறார்!
-ஜெயா சிங்காரவேலு.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்