logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

S.Venkatramanan

சிறுகதை வரிசை எண் # 67


பழைய மனிதன் பழைய பேப்பர் வாங்கப்படும்… பழைய இரும்பு வாங்கப்படும்… பழைய அலுமினியம் வாங்கப்படும்… பழைய கம்ப்யூட்டர் வாங்கப்படும்… பழைய ஏசி வாங்கப்படும்… பழைய ஃப்ரிட்ஜ் வாங்கப்படும்… சத்தமிட்டுக் கொண்டே போனார் பழைய பேப்பர் வியாபாரி. புதியது… பழையது… பிரித்தறிவது எப்படி?... தினசரி பேப்பர் வந்து படித்து இரண்டொரு மாதமாகியிருந்தால் பழையதாகிறது. அதே போல் பாத்திரங்களாகவோ, வேறு வகையிலோ பயன் பட்டு தேய்ந்து உடைந்த இரும்பு, அலுமினியம் போன்ற பொருட்கள் பழையதாகிறது. கம்ப்யூட்டர், ஏசி, ஃப்ரிட்ஜ், டிவி எல்லாம் பயன்பட்டு செயல்படாமல் ஆகும் போது பழையதாகிறது. அப்படிப் பார்க்கையில் மனிதன் இவனும் பழைய மனிதனாகிவிட்டான். இன்றைய வெளிப் பூச்சிகள், பொய், பித்தலாட்டம், தந்திரங்கள் செய்ய வராமல், ஏன் இரண்டொரு முறை முயற்சித்துப் பார்த்தும் அவனுக்கு அது கை வரப்பெறாமல் போய், இன்று எதற்கும் பிரயோஜனமில்லாத மனிதனாக பழைய மனிதனாக மாறி விட்டான். ஒவ்வொரு நாளும் பழைய பேப்பர் வியாபாரி தன் மூன்று சக்கர வண்டியில் முன்பெல்லாம் தன் தொண்டை கிழியக் கத்தி கூப்பிட்டது போய், இப்போது தனக்கென்ற ஒரு மைக் ஸ்பீக்கரில் தன் குரலைத் தானே பதிவு செய்து அதன் மூலம் ஏற்ற இறக்கத்துடன் கூவிப் போகிறார். ஒப்பிடுகையில் அந்த வியாபாரி கூட இன்றைய வியாபார நுணுக்கம் அறிந்து புதுமைக்கு மாறி விட்டவராக இருக்க, இவன் இன்னும் பீட்சா, பெர்க்கர், நூடூல்ஸ், டோனெட் மேலெல்லாம் விருப்பமேயில்லாமல் அப்படியே சிறு வயதிலிருந்தது போல், ஃபில்டர் காபி, இட்லி கெட்டி சட்னி, பொங்கல் சாம்பார் விரும்பியாகவேயிருக்கும் பழைய மனிதனாகவேயிருக்கிறான். சாப்பாட்டில் மட்டுமில்லாமல் திரைப் பாடல்கள், படங்கள் எல்லாவற்றிலும் கூட இப்போது புதிதாக வந்துள்ளவையில் நாட்டம் கொள்ளாமல் பழையதையே ரசிப்பதாக, விரும்புவதாக என்று மொத்தமாக ரசனை எல்லாமே பழசாகவே இருக்கிறது. பொய்யாக புதுசுக்கு மாறி விட விருப்பமில்லை. தலைக்கு டை அடிக்கக்கூட விருப்பமில்லாமல் வளர்ந்தும் வளராமலும் இருக்கும் தாடியை மழிக்க விரும்பாமல், ஒரு காலத்தில் மிகவும் பிடித்த பியர் குடியில் கூட பெரும் விருப்பமில்லாமல் மாறி விட்டது இவன் மனம். இப்போதெல்லாம், பழைய பேப்பர் வியாபாரி அவர் தன் மைக் ஸ்பீக்கரில் கூவிக் கொண்டு போகும் போது, ஏனோ பழைய மனிதன் ஆகிவிட்ட தன்னையும் எதோ ஒரு விலை பேசி பழைய பொருட்களை சுமந்து வரும் அவரின் மூன்று சக்கர வண்டியில் ஏற்றிப் போவார் என்ற நப்பாசை வேறு வருகிறது இவனுக்கு. எது ஒன்றாக நீ ஆக நினைக்கிறாயோ… அப்படியே ஆகி விடுவாய்… என்பது போல் ஆச்சரிமென்றால் அப்படியொரு ஆச்சரியம். அந்த வியாபாரி இவன் வீட்டில் பழைய பேப்பர் எடுக்கும் போது, அவர் கேட்டாரோ… இல்லை இவன் வீட்டில் உள்ளோரே விலை பேசி கொடுத்தார்களோ தெரியவில்லை, இப்போது சில நாட்களாக இவன் விரும்பியது போல் இன்று இவனையும் சரியென்று அவன் வீட்டில் உள்ளோரிடம் வாங்கிக் கொண்டார் வியாபாரி. இன்னதென்று மதிப்பிட்டு தனக்கு என்ன விலைக் கொடுத்தார் என்று அவனுக்கு பெரிதாக ஆர்வமில்லாததால் அதை கவனிக்காமல் விட்டுவிட்டு, தானும் பழைய டீவி, ஏசிக்கு நடுவில் ஏறி ஜம்மென்று குந்தி உட்கார்ந்து கொண்டான் பழைய மனிதனாக. சாலையில், தெருக்களில் என்று வியாபாரியுடன் அவன் பயணம் தொடர்ந்தது. வியாபாரி எப்போதும் போல், பழைய பேப்பர் வாங்கப்படும்… பழைய இரும்பு, அலுமினியம் வாங்கப்படும்… பழைய ஏசி வாங்கப்படும்… பழைய ஃப்ரிட்ஜ் வாங்கப்படும்… பழைய டீவி வாங்கப்படும்… என்று சாலையில் தன் மைக் ஸ்பீக்கர் மூலம் கூவி கொண்டு போக, இவன் கம்பீரமாக தன் கனவு நினவான சந்தோஷத்தில் உட்காந்திருந்தான் தனிக் காட்டு ராஜாவாக. பைக், ஸ்கூட்டர் வண்டிகளில், கார்களில், பஸ்களில் போவோர் எல்லாம் அவரவர் வேலையில் பிஸியாக இருந்ததால் இவனைக் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு வகையில் அவனுக்கு அது மிகவும் நிம்மதியாக இருந்தது. ஒரு காலத்தில் தன்னைக் கடந்து போவோர் வருவோர் எல்லாம் மதித்து தன்னை வணங்கி செல்லுமாறு விஐபியாக இருக்க வேண்டுமென்று விரும்பியிருந்த மனசு இன்று இப்படி மாறியிருந்தது. எக்கி எக்கிப் பார்த்து பற்றிச் சாப்பிட முடியாமல் போனதால், சீச் சீ… இந்தப் பழம் புளிக்கும் என்று வேண்டாமென்று மறுத்த வெறும் நரியின் நிலையில் மட்டுமில்லை அவன் மனசு என்பது நிஜம். பக்குவப்பட்டு விட்டது அல்லது மக்காகிவிட்டது என்ற இரண்டில் ஒன்றுதான் அவன் மனசின் நிலை என்றாலும் அவனுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. தெருவொன்றில் வியாபாரி போகையில், இவனுக்கு தந்தை வயதில் இருந்தவர், பழைய பேப்பர்… என்று வியாபாரியைக் கூவி அழைக்க, இவனுக்கு தன்னை விட வயதில் மிகவும் மூத்தவர் என்பதால் தனக்கு போட்டியாக விலை வாங்கிக் கொண்டு மூன்று சக்கர வண்டியில் தனக்கு போட்டியாக அவரும் ஏறி உட்கார்ந்து விடுவாரோ… என்ற பயம் திடீரென்று வந்தது. நல்லவேளை, அவர் தான் படித்திருந்த தினசரி பேப்பரைப் போடுவதற்கே வியாபாரியை அழைத்தார் என்பதை அறிந்து மறு ஜென்மம் எடுத்தது போலிருந்தது இவனுக்கு. விலை பேரம் பேசி படியாததால் சுருக்கம் விழுந்த முகத்தை இப்படியும் அப்படியும் அஷ்ட கோணலாக்கி மறுத்து, முடிவில் வியாபாரி சற்று ஏற்றி தருவதாகச் சொல்ல, ஒரு வழியாக தன் பேப்பருக்கான விலையை கூட்டி வாங்கி விட்ட சந்தோஷம் அவருக்கு. அவரும் கூட டிவி, ஃப்ரிட்ஜிற்கு நடுவில் உட்காந்திருந்த இவனைக் கண்டு கொள்ளாததுதான் ஆச்சரியமாகயிருந்ததோடு, மனசின் ஓரத்தில் சின்ன ஆதங்கமாகவுமிருந்தது இவனுக்கு. இப்போது, அந்தப் பெரியவரிடம் வாங்கிய நான்கைந்து கிலோ பேப்பரை இடமில்லாததால் வியாபாரி, டிவி ஃப்ரிட்ஜிற்கு நடுவில் உட்காந்திருந்த இவன் கையில் வைத்துவிட்டு, பேப்பரை வைத்தார் என்பது கூட தவறுதான் பொத்தென்று போட்டார்… என்பதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். இவனை பொருட்டாகவே நினைக்காமல் அப்படி போட்டுவிட்டு தன் மூன்று சக்கர வண்டியை திரும்பவும் ஓட்டத் துவங்கினார். சிறிது தூரம் மூன்று சக்கர் வண்டி மைக் ஸ்பீக்கரில் எப்போதும் போல் வியாபாரி குரலில் கூவிக் கொண்டு நகர, புதிதாக கட்டப்பட்ட ஒரு வீட்டிலிருந்து, பழைய பேப்பர்… என்று வியாபாரிக்கு அழைப்பு வருகிறது. சற்று தூரம் வந்து விட்டவர், சென்னை ஆட்டோகாரர் போல் இல்லை… இல்லை, கார் ரேசர் போல் சட்டென்று டிரிஃப்ட் அடித்து தன் மூன்று சக்கர வண்டியைத் திருப்புகிறார். இதில் தடுமாறி பூகம்பம் வந்தது போல் ஆடியதில் பழைய ஃப்ரிட்ஜினால் தலையில் ஒரு இடியையும், பழைய டிவியினால் இடுப்பு விலாவில் ஒரு குத்தையும் வாங்கி, ஸ்… அம்மா… என்று கத்தி விட்டான் இவன். இது எதையும் பொருட்படுத்தாமல் புது வீட்டில் கட்டு கம்பிகள், பில்லர்களில் வெட்டில் மீந்த கம்பிகள், சிமெண்ட் சாக்குகளுடன் நிற்கும் ஆளை நோக்கி வேகமாக தன் மூன்று சக்கர வண்டியை வியாபாரி ஓட்டுகிறார். பெரியவரிடம் வாங்கிய பழைய பேப்பரைப் பொத்தென்று வியாபாரி தன் மடியில் போட்டது நியாபகம் வர, வேறு வழியின்றி, கட்டு வெட்டு கம்பிகளுக்கும், சிமெண்ட் சாக்குகளுக்கும் இடம் விட்டு இவன், சின்னதே சின்னதாக இருந்த இடத்திற்கு நகர்ந்து, தன் உடம்பைக் குறுக்கிக் கொண்டு பயத்துடன் உட்காருகிறான். இவன் எதிர்பார்த்தது போலவே இவன் முன்பு உட்காந்திருந்த பழைய ஃப்ரிட்ஜ், டிவி இடத்தில் கட்டு, வெட்டு கம்பிகள் இடம்பிடிக்கின்றன. தூக்கத்திலிருக்கும் தன் கைக்குழந்தையை பாசத்துடன் போத்திவிடும் தாயைப் போல், வெற்று சிமெண்ட் சாக்குகளால் அக் கம்பிகளை வியாபாரி மூடுகிறார். இப்படி அவர் மூடியதற்கான காரணம் ஒருவேளை சக வியாபாரி யாரும் பார்த்து கண் வைத்துவிடக்கூடாது என்பதற்காக இருக்கலாமென்று நினைத்துக் கொள்கிறான் இவன். புதிதாக கட்டிய வீட்டிற்கு புதிதாக வாங்கிய ஏசியை பத்திரமாக அடிபடாமல் கொண்டு வருவதற்கு அட்டைப் பெட்டியில் இடம் பிடித்திருந்த தெர்மோக்கோலை, விலையில்லையென்றாலும் உதவியாக குப்பையில் போட்டு விடச் சொல்லி புதிய வீட்டின் ஆள் கேட்டதால் எடுத்து வந்து இவன் மடியிலிருந்த பெரிவரின் பேப்பருக்கு மேல் வைக்கிறார் வியாபாரி. தெர்மோக்கோல் என்பதால் பேப்பரளவிற்கு கனமில்லை என்ற வகையில் சந்தோஷம் இவனுக்கு. இப்போது, சற்று இலகுவாகக் கிடைக்கும் இந்த தெர்மோக்கோல் இவனுடைய சின்ன வயதில் சற்று அரிதாகவே கிடைப்பதாகயிருந்தது. காரணம், அப்போதெல்லாம், இப்படி ஃப்ர்ட்ஜ், டிவி, ஏசி என்று வாங்கும் கன்ஸ்யூமர் மோகமும், பக்கத்தில் அவன் வாங்கிவிட்டான் நாம் வாங்க வேண்டுமென்ற போட்டி மனப்பான்மையும் மக்களிடம் கம்மியாகவேயிருந்தது. சின்ன வயதில், அப்படி எங்கெங்கோ அலைந்து தேடி வாங்கிய தெர்மோக்கோலை வெட்டி, ஒட்டி அழகாக கட்டிய மாடி வீடும், அதில் இவன் பச்சை ஸ்கெட்ச் கொண்டு எழுதிய இவன் பெயரிலான இல்லம்… என்ற கனவு இல்லமும் சட்டென்று நியாபகம் வந்து கண்களில் ஏனோ கண்ணீர் வர வழைத்தது. இவனின், கனவு இல்லம் இன்று வரை கனவு இல்லமாகவே இருப்பதுதான் நிஜம். ஏனோ திடுமென்று பைக்களில், கார்களில் போவோரையெல்லாம் பார்த்து சந்திரபாபுவின், வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை… புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிக் காண்பதில்லை… பாடல் நியாபகம் வர, சத்தமாகப் பாடத் தோன்றியது இவனுக்கு. வியாபாரிக்கு பயந்து தனக்குள்ளேயே இவன் அந்தப் பாடலை முனுமுனுத்தபடி வர, இப்போது சட்டென்று தன் மூன்று சக்கர வண்டியை நிறுத்துகிறார் வியாபாரி. ஒன்றும் புரியாமல் சுற்றும் முற்றும் பார்க்க, இவன் பார்வையில் ஐந்தாறு குப்பைத் தொட்டிகள் தெருவோரத்தில் நிற்பது படுகின்றது. இவனுக்கு இப்போதுதான், வியாபாரி புது வீட்டில் வாங்கி வந்த தெர்மோக்கோலை குப்பையில் போடுவதற்கே நிறுத்தினார்… என்று உணர்ந்து சற்று நிம்மதியாகிறது மனசு. குப்பைத் தொட்டிக்கு மிக நெருக்கமாக தன் மூன்று சக்கர வண்டியை கொண்டு போய் வியாபாரி நிறுத்தி, வண்டியிலிருந்து இறங்குகிறார். இவன் தன் கையிலிருக்கும் புது வீட்டின் ஏசி பேக்குடன் வந்த தெர்மோக்கோலை வியாபாரியிடம் கொடுத்தபடியே, இப்படி குறிப்பறிந்து குடுத்ததற்கு வியாபாரி தன்னை பாராட்டுவார்… என்று சின்ன ஆசையுடன் பார்க்கிறான். ஆனால், வியாபாரியோ வலக்கையில் தர்மோக்கோல்களை வாங்கிக் கொண்டு, இடக்கையால் இவன் மடியிலிருக்கும் பேப்பரை வாங்கி, சரிந்து கொட்டி விடாமலிருக்குமாறு பத்திரமாக வண்டியில் வைத்து விட்டு, திரும்பவும் இடக் கையை இவனிடம் நீட்ட, இவன் புரியாமல் பார்த்தபடியே அவர் கைப்பிடித்து எழுகிறான். எதுவும் பேசாமல் வலக்கையில் வைத்திருந்த தெர்மோக்கோல்களை ஒன்றாக் சேர்த்து ஒரு குப்பைத் தொட்டியில் போடுகிறார் வியாபாரி. இப்போது, வண்டியிலிருந்து தன் இடக்கையைப் பிடித்து இறங்கிய இவனையும், பாதி காலியாகயிருக்கும் குப்பைத் தொட்டியையும் வியாபாரி அர்த்தத்துடன் பார்க்கிறார். இப்போதுதான் உணருகிறான், தன் வீட்டில் உள்ளோர் தாங்கள் போட்ட தினசரி பேப்பருக்கு மட்டுமே காசு வாங்கிக் கொண்டு, தன்னையும் தெர்மோக்கோல் போல் குப்பையில் போட்டு விடச் சொல்லி வியாபாரியிடம் உதவியாகக் கேட்டுக் கொண்டதை. வியாபாரியின் மூன்று சக்கர வண்டியில் ஏறி உட்காந்து கொண்டதைப் போல், இப்போதும் எந்த மறுப்பும் சொல்லாமல் யார் மீதும் விறுப்பு வெறுப்பில்லாமல் குப்பைத் தொட்டியில் ஏறி குந்தி உட்கார்ந்து கொள்கிறான் இவன். ------

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.