R.Jawahar
சிறுகதை வரிசை எண்
# 66
இரா.ஜவகர்
7/3, பாலாஜி நகர்,
நரிக்கட்டியூர் ரோடு,
வெள்ளாளப்பட்டி அஞ்சல்,
கரூர் - 639 ௦௦4.
செல் : 94436 52411
"நடையன்"
அழுதழுது கண்ணீர் வற்றியிருந்தது மரகதத்துக்கு! “இப்படித் திடீர்னு பர்மாவுக்குப் போறேங்கிறீங்க. அஞ்சு வயது பயல வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணுவேன்? ஓத்தையா விட்டுட்டுப் போறேங்கிறீங்க.. போன வெள்ளாமையிலே பெருசா ஓண்ணும் வெளயல.. இந்த வருஷம் மழை பெஞ்சாத்தான் வெள்ளாம.. இதுல நான் ஓத்தயா இருந்து வெள்ளாம பாக்க முடியுமா. எதையும் யோசிக்காம இப்படி பர்மாவுக்குப் போறேன்னு சொல்றீகளே.. இப்பத்தான் பயல பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டுருக்கு. அவன் அப்பாவுக்கு ஏங்கிப் போக மாட்டானா?”
கணவனிடம் தன் பக்க நியாயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள் மரகதம்.
“இந்தா பாரு மரகதம்...! வெள்ளாம விளச்சலும் இல்ல.. நம்மாள பாக்கவும் முடியல. நிலத்தைப் பங்குக்கு விட்டாலும் வெள்ளாமச் செலவுல பாதியக் கொடுக்கனும். வெளயாமப் போச்சுன்னா செலவு செஞ்சது வீணாப் போகுது. அதனால தான், நேத்து காரைக்குடி, போய் தங்கச்சாமி அண்ணனைப் பார்த்தேன். அவுக தான் சொன்னாக.. ஏம்பா, பர்மாவுல நமக்கு வேண்டிய செட்டியார் கொடுத்து வாங்கிக்கிட்டு இருக்காரு. அவருக்குத் தோதா ஆளு வேணுமின்னு கேட்டாரு. உன் ஞாபகம் வந்துச்சு. அதான் உன்னைய கூப்பிட்டு விட்டேன்னு சொன்னாக.. செட்டியார் நல்லவிதமா செய்யுறதா சொல்லி இருக்காராம்.. இன்னும் ஒரு வாரத்துல புறப்படுற மாதிரி இருக்கும். கப்பல் புறப்படுறதுக்கு முன்னாடி. மெட்ராஸ் போயி பாஸ்போர்ட், டிக்கட் ஏற்பாடு பண்ணி தரேன்னு சொல்லியிருக்காக” என்றார் இராமகிருஷ்ணன்.
“நம்ம வயல சுப்பன்கிட்ட ஒத்திக்கு விடலாம்னு இருக்கேன். உனக்கு கைச்செலவுக்குத்தந்துட்டும் போறேன். மறுப்பு ஓண்ணும் சொல்லாதே” என்றார் இராமகிருஷ்ணன்.
“என்னங்க இப்படி இடீர்னு ஒத்திக்கு வைக்கிறேன்னு சொல்றீக., என்னால முடிஞ்ச வெள்ளாமய நான் போட்டுப் பாத்துக்கிறேன். ஒத்தி வைக்க வேண்டாங்க..” கழுத்தில் கிடந்த இரட்டை வடம் சங்கிலியைக் கழட்டிக் கொடுத்தாள் மரகதம்.
“இந்தாங்க... இதை வச்சு செலவுக்குக் கொண்டு போங்க.. போறதுன்னு முடிவு பண்ணீட்டிக.. நான் சொல்றத கேக்கவா போறீக.. புள்ளய தத்து கொடுத்தது மாதிரி ஒத்தி வைக்கிறேன்னு சொல்றீகளே.. நல்லா இருக்கா” என்று சங்கிலிய கழட்டிக் கொடுத்தாள் மரகதம்.
“கழுத்துல போட்டிருக்கிறது அந்த ஒத்தச் சங்கிலி. அதைக் கழட்டிக் கொடுத்துட்டு மூழியாவா இருப்பே.. வேண்டாம், கழுத்திலேயே போட்டுக்க” என்றார் இராமகிருஷ்ணன்.
“நான் கழுத்துல போட்டுக்கிட்டு எந்த தேரு திருவிழாவுக்குப் போகப் போறேன். போறதுன்னு முடிவு எடுத்திட்டீக. நல்லபடியா இருந்து பொழைச்சு வந்தா போதும்.
சம்பாரிச்சுக் கொண்டு வந்து சங்கிலியும் சரப்புலியுமா பண்ணிப் போட்டுக்கலாம். ஆத்திர அவசரத்துக்கு இல்லாம கழுத்துல கிடந்து என்ன ஆகப் போகுது. சங்கிலி இல்லைன்னா சாதிய விட்டாதள்ளி வைக்கப் போறாக.. இந்தாங்க.. போயி அடகு வச்சுக் கடைக்கிறத வாங்கிட்டு வாங்க” என்றாள் மரகதம்.
“இத்த பாரு இராமகிருஷ்ணா..! என் முகத்துக்குத் தான் செட்டியாரு உன்னைச் சேத்துக்கிறேன்னு சொல்லியிருக்காரு. நீ பர்மா போனாத்தான் அந்தக் கடையில இருக்கிற கணக்குப் பிள்ளை இங்க வரமுடியும். ஓரு மாசம் உனக்கு வேலைய பழக்கிக் கொடுத்துட்டுஅவரு இங்க வந்து சேரனும். அதனால நல்லபடியா இருந்து நல்ல பேரு வாங்குறதப் பாரு. எம் பேரக் கெடுத்துராதே. இங்க நீ கஷ்டப்படுறேன்னு தான் நான் உன்னய அனுப்புறேன். அதனால நல்லபடியா இருந்து பேரு வாங்கு. அப்பப்ப மரகதத்துக்குக் கடுதாசி போடு. நம்ம பர்மா, சிங்கப்பூர், பினாங்குன்னு போயி வேலை பார்க்கிறது ஓண்ணும் புதுசு இல்ல. கை சுத்தமா, வாய் சுத்தமா இருந்துக்க ஆமா...” புத்திமதி சொல்லி அனுப்பினார் தங்கச்சாமி அண்ணன்:
“கைச்செலவுக்குத் தந்தா செட்டி யாருகிட்ட வாங்கிக்க. மரகதத்துக்குத் தைரியம் சொல்லு. அதுகிட்ட பணம் காசு கொடுத்துட்டுப் புறப்படு” என்றார் தங்கசாமி.
“இந்தா பாருப்பா.. கப்பல் பயணம் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். சமாளிச்சுக்க.. போய்ச் சேர எப்படியும் பத்து இருபுது நாளுக்கு மேல ஆகுமப்பா.. நல்லபடியா போயிட்டு வா.. சாயந்தரம் செட்டியார் வீட்டுக்கு ஓண்ணய கூட்டிட்டுப் போயி அறிமுகப் படுத்திக் கடுதாசி வாங்கத் தாரேன்”
“இந்தாபாருங்க தங்கச்சாமிஅண்ணே..! நீங்க சொல்றீங்கன்னு தான் இவர பர்மாவுக்கு அனுப்புறேன். தோதான ஆளுன்னு சொன்னதால நமக்கும் வேணும்கிறதால அனுப்பி வைக்கிறேன்”
தம்பி, நான் எழுதித் தர கடுதாசிய அங்க இருக்கிற கணக்குப் பிள்ளை கிட்ட கொடுத்து சேர்ந்துங்குங்க. நம்ம வட்டி, கடையிலே தங்கிக்க. சாப்பாட்டுக்கு வசதி இருக்கு. உன்னய கூட்டிப் போகக் கப்பலுக்கு ஆளு வந்துருவாக. ஒரு வருஷம் கழிச்சுத்தான் வரமுடியும். நல்ல படியா கொடுத்து வாங்கிப் பணத்தைப் பெருக்க பாக்கணும். சம்பளம் சாடிக்கையப் பத்தி உங்க அண்ணங்கிட்ட சொல்லி இருக்கேன். “காலணா செலவு செஞ்சா அரையணா நஷ்டம்ணு”ன்னு எங்க அப்பச்சி சொல்லிக் கொடுத்திருக்காக.. அதனால பாத்துக்க. உங்கள நம்பித் தான் முதலப் போடுறேன்” என நீண்டுகொண்டிருந்தது செட்டியார் பேச்சு. ஒருவழியாக எல்லாம் பேசி முடித்துப் புறப்பட்டார்கள் இராமகிருஷ்ணனும், தங்கசாமியும்.
இராமகிருஷ்ணனுக்குப் பெரியப்பா மகன் தங்கசாமி. நல்லது கெட்டதுன்னா அவருகிட்ட தான் வருவாரு இராமகிருஷ்ணன். அவரும் வேண்டியத செஞ்சு கொடுப்பாரு.
ஊரணிக் கரையில இருக்கிற அந்த ஓட்டுப் பள்ளிக்கூடத்துலே மொத்தமே இருபது பையனுக இருந்தாலே பெருக. அதுக்கு ஒரு வாத்தியாரு. குடும்பம் எதும் இல்ல. ஊர்காரவுக கொடுத்த வீட்டுல தங்கிக்கிட்டுத் தன்னால சமைச்சுச் சாப்பிட்டுக்கிட்டு இருக்கிற வாத்தியார்
பேரு என்னன்னு தெரியல. எல்லாரும் “மானம்பாக்கி வாத்தியாரு"ன்னுதான் சொல்வாங்க.
காலை ஒன்புது மணிக்கெல்லாம் வந்து அவரே மணி அடிச்சுட்டு ஓண்ணாவுது பையன் ௮, ஆ வன்னா எழுது. இரண்டாவுது பையன் வாய்ப்பாடு படி. மூணாவுது பயலுக கணக்குப் போடுங்கடான்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயிருவாரு சமையல் செய்ய. பூமியப் பார்த்து நடக்க மாட்டாரு. நல்ல உயரம். பழுப்பேறிய சட்டை வேட்டியிலே வானத்தைப் பார்த்தே நடந்து போவாரு வருவாரு. அதனால ஊருல அந்தப் பேரே விளங்கிப் போச்சு. என்ன அவரு பேருன்னு ஊருப் பெரியவுக கிட்ட கேட்டாத் தெரியுமோ என்னவோ? சோறாக்கி வச்சுச்ட்டுத் திரும்பி வாற வாத்தியாரக் கண்ட உடனே விளையாடிக்கிட்டு இருந்த பயலுக கப்சுப்னு படிக்கிறது மாதிரி பாசாங்கு பண்றாங்க. நீளமா பிரம்பு ஒண்ணு எப்பவும் மேசை மேலே.
அடிச்சா கை பழுத்துரும்.
“மாணிக்கம் இங்க வா. எங்க ௮, ஆ எழுதுதனக் காமி” என்றார் மானம்பாக்கி வாத்தியார்.
“சார் எழுதல சார்..."
“ஏண்டா எழுதல.. "
“சிலேட் இல்ல சார்”
“சிலேட் இல்லாம பள்ளிக்கூடத்துக்கு எதுக்கு வா்றே.. மாடு மேய்க்கப் போ. நாளைக்குச்
சிலேட்டோட வரணும். இல்லன்னா வராத.. தெரிஞ்சுதா...” அதோடு விடவில்லை. கையை நீட்டு.. பிரம்படி... கை பழுத்து விட்டது.
“வலிக்குது சார்.. வலிக்குது ச£ர்..” இருந்தும் பிரம்படி. உள்ளங்கை சிவந்து போச்சு, அழுது கொண்டே வீட்டுக்கு வந்தான் மாணிக்கம்.
ஓட்டு வீட்டின் முன் திண்ணையில் சுவற்றில் சாய்ந்தபடி கண்ணீர் கலங்கியபடி இருந்த மரகதம் பள்ளிக்கூடத்தில் இருந்து பாதியிலே வந்த மாணிக்கத்தை பார்த்து பதறி விட்டாள்.
“என்னப்ப.. இப்படி வாற.. ஏம்பா அழுகிறே..”
“வாத்தியாரு அடிச்சுட்டாரு..” என்று கைய காண்பித்தான் மாணிக்கம்.
“அடப்பாவி மனுஷா.. இப்படியா புள்ளயப் போட்டு அடிக்கிறது.. இரக்கமத்த பாவி... எதுக்குப்பா அடிச்சாரு...”
“அம்மா.. சிலேட்டு இல்லைன்னு அடிச்சுட்டாரும்மா.. நாளைக்குச் சிலேட்டு
இருந்தாத்தான் பள்ளிக்கூடம் வரணும்னு சொல்லிட்டாரும்மா..” தேம்பித் தேம்பி அழுதான் மாணிக்கம்.
“அமுகாதப்பா.. சிலேட்டு குச்சியெல்லாம் வாங்கியாறச் சொல்றேன்” எனச் சொல்லி விட்டுத் தன் முந்தானையால் மாணிக்கத்தின் முகத்தைத் துடைத்து விட்டாள்: பித்தளைக் கும்பாவில் பழைய சோறும் கஞ்சியுமாக போட்டு வந்து, “இந்தா.. இதைச்சாப்பிடு.. அழுகாதே”எனத் தேற்றி விட்டு மகனுக்குத் தெரியாமல் மனதுக்குள் அழுது கொண்டி ருந்தாள் மரகதம்.
பர்மாவுக்குப் புறப்பட்டுப் போயி அந்தா இந்தான்னு ஒரு மாசம் ஓடிப் போச்சு ஒரு காயிதம் கடுதாசியக் காணோம். போய் சேர்ந்த சேதி கூடத் தெரியல. யாருகிட்ட கேக்குறது.
யாருக்குத் தெரியும்னு குழம்பிக்கிட்டு இருக்கையில கருப்பையா வாத்தியாரு சைக்கிள்ள வந்துகிட்டு இருக்காரு.
அந்த ஊருல சைக்கிள் வச்சுருக்கிற இரண்டு போல இவரு ஒருத்தர். அந்த ஊருக்குள்ள இன்னொரு சைக்கிள் வரும்னா அது தபால்காரர் வாற சைக்கிள்தான்.
“அண்ணே.. அண்ணே..” என்று வழிமறித்தாள் மரகதம்.
“என்ன மரகதம்.. எப்படி இருக்கே..? இராமகிருஷ்ணன் பர்மா போய்ச் சேர்ந்து ஏதும்
கடுதாசி போட்டாகளா..” என்றார் கருப்பையா வாத்தியார்.
“அது சம்மந்தமா கேக்கலாம்னு தான் உங்களைக் கூப்பிட்டேன். அவுக போயி ஒரு மாசம் நெருங்கப் போகுது. காயிதம் கடுதாசி ஒண்ணும் காணோம். கவலையா இருக்கு..” என்றாள் மரகதம்.
“ஆத்தா.. கப்பல் போய்ச் சேரவே பத்து இருபது நாளாகும். புது ஊரு.. உடனே கடுதாசி எழுதிப் போட்டாலும் வந்து சேர பத்து நாளாகிப் போகும். எப்படியும் இன்னிக்கு நாளக்குள்ள வந்துரும். கவலப்படாதே”ன்னு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார் கருப்பையா வாத்தியார்.
“அண்ணே.. நாளைக்கு நீங்க வரும் போது சிலேட்டும், பையும் வாங்கிக்கிட்டு வந்து கொடுங்கண்ணே.. சிலேட்டு இல்லாம பள்ளிக்கூடம் போக மாட்டேன்னு அழுகிறான். வாத்தியாரு அடி ச்சுப்புட்டாராம்” என்றாள் மரகதம்.
“சரி ஆத்தா.. வாங்கியாறேன்” என சொன்னவரிடம் ஒரு ரூபாய் எடுத்துக் கொடுத்தாள் மரகதம்.
“வேணாமாத்தா.. வாங்கிட்டு வந்து வாங்கிக்கிறேன்” என சைக்கிளை மிஇுத்தார் வாத்தியார்
அந்த கிராமத்தில் இருந்து அஞ்சு மைல் தொலைவில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கூடத்துல
வேலைக்குப் போகும் கருப்பையா வாத்தியார் அந்த ஊருல கொஞ்சம் வெவரம் தெரிஞ்சவரு.
ஊருல எதுனாலும் கேட்டா செஞ்சு கொடுப்பாரு.
பொழுது சாஞ்ச நேரம். மேய்ச்சல் முடிஞ்சு ஆடு மாடுன்னு ஒன்னோட ஓண்ணுஉரசிக்கிட்டு ஊருக்குள்ள வந்துகிட்டு இருக்கு. கழுத்துல கட்டியிருக்கிற மணி சத்தம் ஊருக்குள்ள ஆடு மாடு வாறத சொல்லுது. ஊரு மாடுகளை ஓண்ணா மேய்ச்சலுக்கு ஓட்டிக்கிட்டுப் போன மாயனும், மாதவனும் தே.. தே..ன்னு கையில வாங்கருவாளும் தூக்குச் சட்டியுமாக பின்னால பத்திக்கிட்டே வந்துகிட்டு இருக்காங்க. அங்கங்க ஆடு மாடுகளைப் பிரிச்சு அது அது வீடுகள்ல அடைச்சுட்டுத் திரும்பிக்கிட்டு இருந்தான் மாதவன்.
“ஏம்ப்பா மாதவா..! செத்த இங்க வா..” என அழைத்தாள் மரகதம்.
“என்ன ஆத்தா...” எனக் கேட்டுக் கொண்டே வந்த மாதவனிடம், “ஏம்ப்பா. பால் மாடு ஒண்ணு வாங்கணும். பால் கறக்குற மாதிரி இருந்தா பேசிப்பாருப்பா.. பண்ணயிலே கேட்டேன்.
லோன் தராறேங்கிறாங்க. பால ஊத்திக் கழிச்சுப்புட்டா மாடும் கண்ணும் மிச்சமாகும். கொஞ்சம் பாத்து வாங்கிக் கொடுப்பா” என்றாள் மரகதம்.
“நம்ம செல்லையா அண்ணன் விட்டுல இப்பத்தான் கண்ணு போட்டுது. தலையீத்து. அவுக தா்றதா பேசிக்கிட்டாக. காலையில ஓண்ணறைப்படி, சாயந்தரம் ஒரு படி கறக்குதாம். வெலை தான் நூத்தம்பது சொல்றாரு. வேணா பே௫ிப் பாக்கலாம்”
"என்னப்பா அம்புட்டு வெலை சொல்ற என்றாள் மரகதம்.
“ஆத்தா, எனக்கா கேக்கறேன்: செல்லையா அண்ணன் சொன்னத சொன்னேன். மாடு கூறு நல்லா இருக்கு ஆத்தா"
“நீ சொன்னா சரியா இருக்கும். ஒருவழியா பேசி நூத்து இருபது ரூபாய்க்கு விலைபேசி மாடும் கன்னும் வீடு வந்து சேர்ந்தது. மரகதத்துக்கு ஓரே சந்தோசம். கொம்பு ரெண்டும் சின்னதா, செவளப்பசு. கண்ணுக்குட்டி அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டு இருக்கு. மடிய வந்து முட்டி முட்டிப் போகுது”
“அம்மா... நமக்காம்மா இந்த மாடு” என்று கேட்டுக் கொண்டே கண்ணுக்குட்டிய பிடித்துக் கொண்டு வந்தான் மாணிக்கம்.
“ஆமாம்பா.. நமக்குத்தான். மாடு வந்த நேரம் நம்ம கவலை தீருமான்னு பார்ப்போம். நாளைக்கு உனக்குச்சிலேட்டும் பையும் வாங்கியாற சொல்லியிருக்கேன். பள்ளிக்கூடம் போயி நல்ல படியா படிப்பா. நீயாவது படி ச்சு வந்து நம்ம குடும்பத்த மேடேத்தப் பாரு. அப்பன் முகம் பாக்காம வளருது. என்ன கொடுமையோ போ...” மனத்துக்குள் முன௫க் கொண்டே மாட்டைக்
கல்லுக்காலில் கட்டி வாளியில் கழனித் தண்ணியில தவிட்டப் போட்டுக் கலக்கித் தண்ணி காட்டிக் கொண்டிருந்தாள். மாடு தண்ணீர் குடிக்காமல் மரகதத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. மாணிக்கம் கன்றுக்குட்டியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான் அசையாக.
சைக்கிள் மணியை அடித்துக் கொண்டே வந்தார் போஸ்ட்மேன். ஆத்தா மரகதம்..
மரகதம்.. உனக்கு ஏர் மெயில் லெட்டர் வந்துருக்கு. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டுக்
கடுதாசிக் கட்டில் இருந்த ஏர்மெயில் லெட்டரை தேடிக் கொண்டிருந்தார் செவந்தியப்பன்:
கழனித் தண்ணி கலக்குன கையோடு அவசரமாக அப்படியே ஓடி வந்தாள் மரகதம். முகமெல்லாம் சந்தோசம். “அண்ணே.. அவுகதான் எழுதியிருப்பாக. பாருங்கண்ணே..” படபடத்தாள் மரகதம்.
“ஆமாத்தா.. பர்மாவுல இருந்துதான் வந்திருக்கு. உங்க வீட்டுக்காரர் தான்
போட்டிருக்காரு” என்றார் போஸ்ட்மேன்.
“அண்ணே..! இப்படி இண்ணயில உட்காருங்க ஒரு நிமிஷம். ஓடியாந்துர்றேன்” அவசர அவசரமாக கையைக் கழுவி விட்டு வீட்டுக்குள் ஓடிச் செம்பு நிறைய மோருடன் வந்தாள் மரகதம்.
“அண்ணே..! இத மொதல்ல குடிங்க. நல்லவிதமா கடுதாசி கொண்டு வந்துருக்க, இந்த மோரக்குடிச்சுட்டுக் கொஞ்சம் படிச்சு காட்டுங்கண்ணே” என்றாள் மரகதம்.
“மாணிக்கம்..! உங்க அப்பா காயிதம் போட்டுருக்காகடா.. வா..” சந்தோசம்
தாங்கவில்லை. மூணு மைல் சைக்கிள் மிதித்து வந்த போஸ்ட்மேனுக்கு மரகதம் தந்த மோர் சற்று ஆறுதலாய் இருந்தது.
ஆசுவாசப்படுத்திக் கொண்ட போஸ்ட்மேன் பக்குவமாகப் பிரித்து படிக்க ஆரம்பித்தார்.
“அன்புள்ள மரகதத்துக்கு.. இராமகிருஷ்ணன் எழுதியது. நானும் நல்லபடியா வந்துட்டேன். செட்டியார் வட்டி கடையிலே சேர்ந்தாச்சு. கப்பல்ல வாற போது கஷ்டமாத் தான் இருந்துச்சு. சாப்பாடு ஓத்துக்கலை. வாந்தி எடுத்துட்டேன். கப்பல் வந்து சேர பதினைஞ்சு நாளுக்கு மேலே ஆயிப் போச்சு” எனக் கடிதம் பூரா இடம் விடாமல் எழுதியிருந்தார்.
“வெள்ளாமய நல்லபடியா பாத்துக்க. நம்ம சுப்பன் வந்து கேட்டான்னா பங்குக்கு விட்டுரு. உன்னால தனியாப் பார்க்க முடியாது. மாணிக்கத்தை நல்லா படிக்கச் சொல்லு. அவனுக்கு என்ன வேணும்னு கேட்டு எழுது. யாரும் அங்க வாறவுககிட்டே கொடுத்து அனுப்புறேன். உன்னையும் பயலையும் விட்டுட்டு இருக்கிறது கஷ்டமாத்தான் இருக்கு. ஒரு வருஷம் ஓடிப் போகும். காசு பணம் சேர்த்துக்கிட்டு நல்லபடியா வந்துர்றேன். கருப்பையா வாத்தியார் கிட்ட சொல்லிக் கடுதாசி போடு. விலாசம் எழுதியிருக்கேன். மழை தண்ணி பேஞ்சிருக்கா” என நேரில் பேசுவுது போல் எழுதி முடி த்திருந்தார் இராமகிருஷ்ணன்.
“அண்ணே..! இன்னிக்குத் தான் பசு மாடு வாங்குனேன். அது வந்த நேரம், அவுக கட்ட
இருந்து கடுதாசி வந்திருக்கு. எப்படியோ நல்லபடியா போய்ச் சேோர்ந்தாகளே! அதுவே போதும்!
அண்ணே...! நாளைக்கு வரும் போது வெளிநாட்டுக் காயிதம் ஒண்ணு வாங்கிட்டு வந்துருங்க...
மறந்துறாதக. இந்தாங்க” என்று ரூபாயைக் கொடுத்து அனுப்பினாள் மரகதம்.
“சரி ஆத்தா.. வாங்கியாறேன்” எனச் சொல்லி விடைபெற்றுச் சென்றார் போஸ்ட்மேன்.
இராம. இராமகிருஷ்ணன், 19 மொகல் ரோடு, ரெங்கூன், பர்மா என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. காகிதத்தைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டாள்;
“ஆத்தா... ஆத்தா...” என வந்து நின்றான் குடியிருப்பிலிருந்து வந்த சுப்பன்: நல்ல வளர்த்தி.. மேலுக்குச் சட்டை இல்லாம இடுப்பு வேட்டித் துண்டுமா வந்து நின்னான்.
“அய்யாவுக களருக்குப் போகும் போது சொல்லிட்டுப் போனாக. கம்மா கரையோரம் இருக்கிற அந்த சின்னச் “செய்”ய உழுது போடலாம்னு இருக்கேன். சரின்னு சொன்னா நாளைக்கு உழுது போட்டுருவேன். அடுத்தடுத்த வயல்ல வெள்ளாம வேலைய ஆரம்பிச்சுட்டாங்க. இந்த வருஷம் நம்ம வெள்ளாம போடலைன்னா தரிசாக் கிடக்கும்.
உங்ககிட்ட கேட்டுட்டுப் பங்குக்குப் போடலாம்னு பாக்குறேன்” என்றான் சுப்பன்.
“வெள்ளாமச் செலவுக்கு உடனே தரமுடியாது சுப்பா.. அவுக பணம் அனுப்பினாகன்னா
கொடுத்துடுறேன். சம்மதிச்சா வெள்ளாமை போடு. எல்லாரும் போட்ட நெல்லப் போடு,
வேறய போட்டுறாதே” என்றாள் மரகதம். “இந்தப் பசுவைப் பாத்து சொல்லுப்பா”
“சரிங்க ஆத்தா.. மாட்டைப் பிடித்துப் பல்ல நீக்கிப் பார்த்தான் சுப்பன். தலையீத்துத்
தான் ஆத்தா. நாலஞ்சு ஈத்துப் போடும். மாடு களையா இருக்கு. வீட்டுக்குத் தோதான மாடு.
பண்ணைக்குக் கறக்க போதுமாத்தா” என்று நம்பிக்கை ஊட்டினான் சுப்பன்.
வறக்காப்பி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள் சுப்பனுக்கு. காபி குடிச்சுட்டு
வாறேன் ஆத்தா எனச் சொல்லி விடை பெற்றான் சுப்பன்:
ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே கருப்பையா வாத்தியார் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனாள் மரகதம் மகனைக் கூட்டிக் கொண்டு. வேப்பங்குச்சி வச்சு பல்ல வெலக்கிட்டு இருந்த வாத்தியாந் “வா மரகதம்.. என்ன காலையிலே வந்திருக்கே”
“ஓண்ணுமில்லண்ணே.. நீங்க சொன்ன மாதிரி கடுதாசி வந்துருக்கு. அதான் பதில் போடலாம்னு... கொஞ்சம் எழுதிக் கொடுத்தீகன்னா நாளைக்குப் போஸ்ட்மேனுகிட்ட கொடுத்துப் போடச் சொல்லிருவேன். அட்ரஸ் வேற இங்கிலீஷ்ல எழுதியிருக்கு” என்றாள் மரகதம்.
“இரு வாயக் கொப்பளிச்சுட்டு வந்துர்றேன்"னு வாய்க் கொப்பளிக்கக் இணத்தடிக்குப்
போனார் வாத்தியாரு. சத்தம் கேட்டு உள்ள இருந்து வந்த மாரியாத்தஈ, “என்ன மரகதம்,
நல்லாயிருக்கியா.. மகன் பள்ளிக்கூடம் போறானா.. அம்மான் கடுதாசி போட்டாகளா?” என
விசாரித்துக் கொண்டி ருந்தாள் அக்கறையோடு.
“மரகதம்.. என்ன எழுதனும்னு சொல்லிப்புடு. நான் விபரமா எழுதிக்கிறேன்” என்றார்
கருப்பையா வாத்தியார்.
“ஓண்ணுமில்லண்ணே.. கடுதாசி கிடைச்சிருச்சு. சந்தோஷம். நாங்க நல்லபடியா
இருக்கோம். மாணிக்கம் பள்ளிக்கூடம் போறான். செல்லையா அம்மான் கிட்ட இருந்து பசு
மாடு வாங்கப் பண்ணைக்கு ௪ளத்துறேன். நம்ம “கரையடிச் செய்”ய பங்குக்கு சுப்பன் வந்து
கேட்டுச்சு. சரின்னு சொல்லிட்டேன். வெள்ளாம செலவுக்கு நம்ம பங்குக்குக் கொடுக்கனும்.
ரூபாய் அனுப்பி வைங்க. மழை தண்ணி பெரிசாப் பேயல. இருக்கிற கம்மா தண்ணிய
வச்சுத்தான் எல்லாரும் உழுது போட்டுருக்காக. மாணிக்கத்துக்குப் போட்டுக்கிற நல்ல டவுசர்
சட்டை இல்லை. கஇிழிஞ்சத தான் போட்டுக்கிட்டுத் திரியறான். அவனுக்கு நல்ல செருப்பு
வேணுமாம். கால் அளவு எடுத்து அனுப்பி இருக்கேன். வாறவுக கிட்ட கொடுத்து விடுங்க.
மறக்காம கடுதாசி போடுங்க.. உடம்பைப் பாத்துக்குங்க. வேற ஓண்ணும் சேதி இல்லை. நம்ம
கருப்பையா வாத்தியாருகிட்ட சொல்லித் தான் கடுதாசி எழுதியிருக்கேன்: உங்க மகன் “அ”
“ஆ” எழுதுனத உங்களுக்குக் காண்பிக்கனும்னு சொல்றான். அவன் எழுதுனத வச்சுருக்கேன்.
அவன் ஆசையாக் கேட்ட நல்ல நடையணாப் பாத்து வாங்கி அனுப்புங்க. மத்தது
ஒண்ணுமில்ல”. இதுதான் அப்படியே எழுப் புடுங்க போதும் என்றாள் மரகதம்.
மரகதம் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டுக் கோர்வையாக எழுதி, மகனின் கால்
அளவை பேப்பரில் வரைந்து, எழுதிய “அ, ஆ” பேப்பரோடு சேர்த்துக் கவரில் வைத்துப்
பக்குவமாக ஒட்டிக் கொடுத்தார் வாத்தியார்
சமி. போரம் விரார) 19, 14௦ 2110/4. 72044, 1847120071, (718144 என ஆங்கிலத்தில் எழுதிக்கொடுத்ததைக் கண்களில் ஒத்தி மறுநாள் தபாலில் சேர்ப்பதற்கு தயாரானாள் மரகதம்.
யால் பண்ணையில் ஊத்துறதுல மிச்சம் பண்ணி வீட்டுல ஊத்துனா மாசமானா காசு கெடைக்குமுன்னு நாச்சியாபுரத்துல ஆச்சி வீட்டுக்குப் பால் ஊத்துறா மரகதம். அன்னிக்கு இரண்டு மைல் தொலைவுல இருக்கிற நாச்சியாபுரம் போய் பால் ஊத்திட்டுக் கம்மாக்கரை வழியா வர்றப்போ மழைக்கூறு தெரியுது. வானம் இருட்டிக்கிட்டு மழை இப்பவோ, அப்பவோன்னு இருக்கு. கரை ஓரம் இரண்டு பக்கமும் கருவ மரம் காடு மாதிரி வளர்ந்து கிடக்கு.
அந்தி சாயுற நேரம். கருவமுள்ளு ஓண்ணொண்ணும் ஆணி மாதிரி அங்கங்க பாதையில கெடக்கு. ஓத்தயா வர்றதுக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்துச்சு. வீடு போய் சேரனும்னு
நெனப்பில வந்தவளுக்கு முன்னாடி கருகருன்னு ஆளு ஓசரத்துக்குக் கருநாகம் ஒண்ணு பாதைய தாண்டிக் கருவக்காட்டுக்குள்ள போகுது. அதுக்கு என்ன அவசரமோ... ஆத்திரமோ.. அப்படியே நின்னுட்டா மரகதம். ஈரக்கொலை நின்னுப் போச்சு. அய்யா.. வல்லநாட்டுக்கருப்பு.. என் சாமி.. நல்லபடியா வீடு கொண்டு சேர்த்திருப்பான்னு கும்பிட்டுத் தூரமா பாக்குறா. யாரோ போறது மாதிரி இருக்கு.
அப்பத்தான் மேய்ச்சல் முடிஞ்ச மாடு ரெண்டை பத்திக்கிட்டு முன்னாடிப்போறாகண்ணாத்தா; அத்தாச்சி. அத்தாச்சின்னு கத்துறா மரகதம். யாருடி. ௮வ, இந்த நேரத்துலன்னு
இரும்பிப் பாக்குறா கண்ணாத்தா... “என்னடி. மரகதம்... பொழுது போயிருச்சு எங்கடி போயிட்டு
வாறே” என்றாள் கண்ணத்தா..
அப்பாடி.. துணை கிடைச்சாச்சு. வீடு போற வரைக்கும் பயமில்லை என நினைத்துக்
கொண்டே, “அதை ஏன் கேக்குறீங்க அத்தாச்சி. பண்ணையில ஊத்துற காச மாட்டுக் கடனுக்குப்
புடிச்சுக்கிறாக. கொஞ்சம் இருக்கிற பால நாச்சியாபுரத்துல ஒரு ஆச்சி வீட்டுக்கு ஊத்துறேன்.
இந்த மாசம் பால் காசு ஏழரை ரூபா வந்துச்சு. அந்த ஆச்சி என்னன்னா ஆறரை ரூபாய
கொடுத்துட்டு ஓத்த ரூபாய்க்கு அதிரசத்தையும் முறுக்கையும் கொடுத்துக் கழிச்சுக்கச் சொல்லுது.
எந்த கல்யாணத்துல வச்சுக் கொடுத்தாகலோ தெரியல. பதத்துப் போயிக் கெடக்கு. பாலு
மட்டும்கள்ளிச்சொட்டாட்டம் இருக்கனும்னு சொல்லது. வேணாம்னு சொன்னாலும் கேட்க
மாட்டேங்குது. என்ன பண்றதுன்னு வாங்கியாந்தேன்” என்றாள் மரகதம்.
“என்னடி. இது.. காலக் கொடுமையா இருக்கு.. யாருடி அது” என்றாள் கண்ணாத்தா.
“அந்தச் சிகப்பி ஆச்சி அத்தாச்சி” என்றால் மரகதம்.
“அதுக்கு என்ன காசாஇல்ல. செட்டியாருக்குச் சிங்கப்பூருல சம்பாத்யம். நல்லாத்தான் கொண்டு வந்து கொட்டுறாரு. அது மிஞ்சுன குழம்பக் கூட சுண்டவச்சு வித்துப்புடுமே.
பால்காச முழுசாக் கொடுத்தா என்ன” என்று மரகதத்துக்கு சாருபுடி யாப் பேசினாள் கண்ணாத்தா; அங்கிட்டும் இங்குட்டும் போற மாட்டை ஓட்டிக்கிட்டே வர்றதுக்குள்ள வீடு வந்து சேர்ந்திருச்சு.
“சரி அத்தாச்சி. நல்லவேலை நீங்க வந்தீக. துணைக்குத் துணையாய்ப் போச்சு” என்றவளிடம், சரி மரகதம் என்று புறப்பட்டாள் கண்ணத்தாள்.
மழை புணுப் புணுவென்று தூர ஆரம்பித்து விட்டது. மாட்டைப் புடிச்சு மழைநனையாமக்கட்டிட்டு, “அப்பு.. டேய்.. மாணிக்கம்.. பொழுது போயிருச்சுப்பா.. அந்த அரிக்கன் லைட்டையும், முட்டை களாச தொடச்சு பொருத்தி வைப்பா” என்றாள் மரகதம்.
பால் காசுக்கு ஆச்சி கொடுத்த முறுக்கையும், அதிரசத்தையும் மடியில் இருந்து எடுத்து மகனுக்குக் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி விட்டு, உஸ்... அப்பாடா என்று அமர்ந்தாள் மரகதம்.
மழை கொஞ்சம் வலுத்திருந்தது. அடுப்படிப் பக்கம் சொட்ட ஆரம்பித்த இடத்தில் பித்தளைக் குடத்தை வைத்து விட்டு மீண்டும் வந்து அமர்ந்தாள் மரகதம். அவள் சாய்ந்திருந்த தூண் அவளைத் தாங்கிப் பிடித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது.
ரெண்டு மாசம் கழிச்சு கடுதாசி எழுதியிருந்தார் இராமகிருஷ்ணன். பணம்
அனுப்பியிருக்கேன்னு காயிதம் வந்து ஒரு வாரமாகிப் போச்சு. இந்தத் தபால்கார மனுசன் கொண்டாந்து கொடுக்க மாட்டேங்கிறாரே. நெதம் கேட்டுக் கேட்டுச் சலிச்சுப் போச்சு.
தன்னாலே பேசிக் கொண்டு, ஊரணி போய் குடிக்கத் தண்ணி எடுத்துக்கிட்டுத் தலையில ஒண்ணும், இடுப்புல ஒண்ணுமா வந்துகிட்டு இருக்கா மரகதம். சைக்கிள் மணிசத்தம் கேட்குது.
திரும்பிப் பார்க்க முடியாமல் போய்க் கொண்டிருந்தவள் அருகில் இறங்கினார் தபால்காரர்.
“ஆத்தா.. உனக்கு மணியார்டர் வந்துருக்கு.. சந்தோசம் தானே.. பத்து நாளா உனக்குப் பதில் சொல்லியே சலிச்சுப் போனேன். வீட்டுல நிக்கிறேன் வா..” எனச் சொல்லிக் கொண்டு சைக்கிளை மிடஇத்தார்.
தண்ணிக் குடத்த இறக்கி வச்சுட்டு “மரகதம்” என மூன்று இடத்தில் கையெழுத்துப் போடுறதுக்குள்ள, சட்டைப் பைய விட்டு ஓத்த ரூபா நோட்டு ஒன்பதும், சில்லரையாக ஓத்த ரூபாயக் கொடுக்குறாரு தபால்காரர். வாங்கக் கொண்ட மரகதம், “இந்தாங்கண்ணே.. காபி தண்ணி குடிங்க”ன்னு நாலாணாவைக் கொடுக்குறா. சில்லரையா கொடுக்குறது அதுக்குத்தான்னு மரகதத்துக்குத் தெரியும். தபால்ல எழுதுறத எல்லாம் பாரத்தில் எழுதியிருக்கிறத கிழிச்சுக் கொடுத்துட்டு கிளம்புறாரு தபால்காரர்.
“அண்ணே... படி ச்சுச் சொல்லிட்டுப் போயிருங்க...”
“பாத்து செலவு பண்ணு. அடிக்கடி பணம் அனுப்பத் தோதில்ல. கைமாத்து வாங்இச் சரி பண்ணிக்க. முடிஞ்சா பொங்க செலவுக்கு அனுப்புறேன். மகன நல்லா படிக்கச் சொல்லுன்னு இடம் விடாம எழுதியிருந்தார் இராமகிருஷ்ணன்.
பத்து ரூபாய அனுப்பிட்டு இப்படி எழுதியிருக்காக.. புண்ணாக்குத் தவுடு வாங்குனதுக்கு இராவுத்தருக்குக் கொடுப்பேனா? சந்தைக்குப் போயி சாமான் சட்டு வாங்குவனா? கிழிஞ்ச டவுசர் சட்டையை மாத்தி மாத்திப் போட்டுக்கிட்டுத் தரியற பயலுக்கு மாத்துத் துணி வாங்குவனா? வாங்குன கைமாத்தைக் கொடுப்பேனா? என புலம்பிக் கொண்டே காசைக் கொண்டு அஞ்சாரப் பெட்டியில் வைக்கிறா மரகதம். வாசல்ல குரல் கேட்குது.. மரகதம்.. மரகதம்னு..
குஞ்சரம் பெரியாத்தா குரல் மாதிரி இருக்கே.. இந்தா வாரேன் பெரியத்தா என வாசலுக்கு ஓடினாள் மரகதம். மருமகன் ரூபாய் அனுப்பியிருப்பாக போல. போஸ்ட்மேன் வந்துட்டுப் போறார் என்றாள். ஆமா பெரியத்தா என்றாள் மரகதம்.
இரண்டு ரூபாய் கைமாத்து வாங்கி ஒரு மாசம் ஆகிப் போச்சு. அதான் வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்.. குஞ்சரம் கொஞ்சம் கடுகதான். ஒருமாசம் கேக்காம இருந்ததே பெரிக.
சந்தை செலவுக்கு வேணும் மரகதம் என்றாள் குஞ்சரம். வேறுவழி இல்லை. அஞ்சரைப் பெட்டியில் இருந்து இரண்டு ரூபாய் கைமாறியது.
(இருக்கிற ஏழே முக்கா ரூபாய வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறேன். பெருமூச்சுவிட்டாள் மரகதம்.
அங்கனக்குள்ள இருக்கிற பொம்பளைங்க எல்லாம் ஆளுக்கொரு கையாறு பொட்டியஎடுத்துக்கிட்டுச் சந்தைக்குப் புறப்பட்டார்கள். எங்கடி மரகதம் வார்றாளா? கேளுங்கடி.. மூணுமைல் தொலைவில் உள்ள கண்டர மாணிக்கத்துல வாரச்சந்தை... நடந்து தான் போகனும். காரு வண்டி இல்லை. வசதி உள்ளவுக வண்டி கட்டிப் போய் சாமான் வாங்கிட்டு வந்துருவாக.
மத்தவுக ஓண்ணாச் சேர்ந்து போயிட்டு வாறது பழக்கம். இடையிலே சின்ன ஆறு ஒண்ணு இருக்கு. தண்ணி வர்ற போது சேலை நனையாம, தலையில வச்சுருக்கிற சுமையையும் தூக்கிக்கிட்டு வாறது அவுகளுக்குப் பழகிப் போன ஒண்ணு. போகும் போதும் வரும் போதும் பொரணி பேசுறதும், நையாண்டி பேசுறதும் அவர்களுடைய வலியையும், சுமையையும் குறைக்க ஏற்படுத்திக்கிட்ட பழக்கம்.
இரண்டு பக்கமும் இருக்குற திருகு கள்ளிச்செடிய சுத்திக் குண்டுமணி கொடி படர்ந்திருக்கும். நல்ல சிவப்புல கருப்பு மை வச்ச மாதிரி காய்ச்சு தொங்கும். சில்லுவண்டுச்சத்தம் வண்டிப்பாதை தாண்டுற வரை கேட்டுக்கிட்டே இருக்கும். ஊரணி தாண்டி அம்மன் கோயில் வழியா அரவை மிஷனுக்குப் பக்கமா ஹுனா நடுவிக் கோட்டை வந்துரும். அப்படியே ஒருமைல் தொலவுல பேசிக்கிட்டே போனா சந்தைக்கு போய்ச் சேர்ந்திடலாம்.
வசந்தாவும், மரகதமும் சேர்ந்து கொண்டார்கள். “ஏண்டி லெட்சுமி.. உன் புருஷன் பேரு
என்ன?” என்று வம்புக்கு இழுத்தாள் குஞ்சரம். “பெரியத்தா.. ஆத்தா.. நான்தான் பேரு சொல்ல
மாட்டேன்னு தெரியுமில்ல. அப்புறம் எதுக்கு வாயக்கிண்டுற..”
“சரிடி.. இப்ப நம்ம எந்த ஊருக்குப் போறோம். அதையாவது சொல்லு. சந்தை கூடுற
ஊருக்குள்ள போறோம்” என்றாள் லட்சுமி.
புருஷன் பேரு மாணிக்கம். அந்த ஊரின் பெயரில் “மாணிக்கம்” வருவதால் அவள்
எப்பொழுதும் சொல்வதில்லை. எந்தச் சூழ்நிலையிலும் புருஷன் பெயர் சொல்வதில்லை
என்பதில் உறுதியாக பெண்கள் வாழ்ந்த காலம். அது என்னடி. சந்தை கூடுற ஊரு என்று கேலி
செய்தாள் வசந்தா.. எதிலும் மனம் லயிக்காமல் மெளனமாக வந்து கொண்டி ருந்தாள் மரகதம்.
*“அக்கா.. தங்கம் பவுன் தொண்ணூறு வந்துருச்சாம்ல” என்றாள் மாரியாத்தா.
“என்னடி சொல்றிக.. இப்படி ஏறிக்கிட்டு போனா எப்படிப் பொழைக்கிறது. ஆம்பளங்க எம்புட்டுத்தான் சம்பாதிக்கிறது” என்று கவலைப்பட்டாள் காந்திமதி.
பேசிக் கொண்டே வந்த களைப்புத் தெரியல. இராவுத்தர் கடையில புண்ணாக்கு தவுட்டுக்குப் பழைய பாக்கி அடைத்து விட்டு வீட்டுக்குச்சாமானும், மாட்டுக்குப் புண்ணாக்குத் தவுடு புதிய கணக்கில வைக்கச் சொல்லி விட்டுச் சந்தைக் கடை சாமான் வாங்க நடந்து கொண்டி ருந்தாள் மரகதம்.
காலம் போய்க் கொண்டிருந்தது. மரகதத்துக்கு மாதம் ஓன்று வந்த கடிதம் ஆறு மாதங்களுக்கு ஒரு கடிதமாகியுது. ஒரு தடவை பொங்கல் செலவுக்குன்னு இருபது ரூபாய் அனுப்பியிருந்தார். விவசாய செலவுக்கு முப்புது அனுப்பியிருந்தார். அந்த இரண்டாண்டுகளில் அவ்வளவுதான் புருஷன்கிட்ட இருந்து வந்தது.
“பணம் அனுப்பனும்னா “வட்டம் கட்டித்தான் அனுப்பணும். உனக்கு அனுப்புற பணம் அளவுக்கு நான் இங்கே கவர்மெண்டுக்குக் கட்டணும். அதனால பணம் ரொம்ப எதிர்பார்க்காதே.. எப்படி யாவது சமாளிச்சுக்க.. இங்க பர்மாவுல சட்டம் கடுமையா இருக்கு”என்று எழுதியிருந்தார்.
ஒருமுறை வந்த கடுதாசியில், “பழனியப்ப செட்டியார் இந்த வாரக் கடைசியில கம்பனூருக்கு வர்றாரு. நீ போயி அவரப் பாரு. ஏதாவது கொடுத்தனுப்பி விடுறேன்" னு எழுதியிருந்தார்.
நாட்களை எண்ணிக் கொண்டிருந்த மரகதம், பண்ணைக்குப் போயி பால ஊத்திட்டு, மாட்டுக்குத் தண்ணி வச்சுட்டு, மகனைக் குளிப்பாட்டி, பவுடர் பூசி இருக்கிற சட்டையில கொஞ்சம் நல்லதா எடுத்துப் போட்டு விட்டு அவளும் சேலைய மாத்திக்கிட்டுக் கம்பனுரர் புறப்படுறா.
“அம்மா.. எங்கம்மா போறோம்” எனக் கேட்ட மகனிடம், “உங்க அப்பா ரெங்கோன்ல இருந்து வந்தவுக கிட்ட ஏதோ சாமான் கொடுத்து விட்டுருக்காகலாம். கம்பனூருல இருக்குற செட்டியார் ஒருத்தரு அப்பா இருக்குற ஊர்ல இருந்து வந்துருக்காருடா.. நாம சீக்கிரம் போய்
*வட்டம் கட்டுதல் - அரசாங்கக் கட்டணம்
பார்த்துட்டு வந்துறனும்.. பொழுது சாஞ்சிருச்சுன்னா கரை வழியா வாறது கஷ்டம் என வேகம் காட்டினாள் நடையில். அம்மாவின் நடைக்கு ஈடுகொடுக்க முடி யாமல் ஓட்டமும், நடையுமாக பின்தொடர்ந்தான் மாணிக்கம்.
“அம்மா.. எனக்குச் சட்டை டவுசர் ரொட்டி மிட்டாயி, செருப்பு எல்லாம் கொடுத்து விட்டுருப்பாகலாம்மா?”
“எனக்கென்னப்பா தெரியும்? வா போய் பார்த்து வாங்கிட்டு வந்துருவோம்” புருஷன் எழுதின கடிதத்தையும் கையோடு எடுத்துக் கொண்டாள் மரகதம். ஆசையோடும் எதிர்பார்ப்போடும் போய்க் கொண்டிருந்தார்கள் தாயும் மகனும் கள்ளிச் செடிகளையும், கருவேலமரங்களையும் தாண்டி... வெயில் சுள் என்று அடிக்கத் தொடங்கியிருந்தது. சேலை முந்தானையை எடுத்துத் தலையில் போட்டுக் கொண்டாள் மரகதம்.
“அம்மா... அப்பா எப்படிம்மா இருப்பாங்க. நான் எப்பம்மா பார்ப்பேன்”
“உன்னை மாதிரி தாண்டா இருப்பாக... வேகமா வஈ. நேரில் வரும் போது பாக்கலாம்.
கேள்வியா கேட்காதே” ஆற்றாமையை மகனிடம் காட்டினாள் மரகதம்.
பழனியப்ப செட்டியார் வீடு. ஊரில் விசாரித்ததில் அடையாளம் சொல்லி விட்டார்கள்.
தயங்கித் தயங்கி வாசலில் நின்றாள் மரகதம். உயர்ந்த தூண்களும், பரந்து விரிந்த திண்ணையும், அழகிய முகப்புமாக பிரம்மாண்ட வீட்டிலிருந்து வழுக்கைத் தலையோடு, நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் ரத்ராச்சக் கயிறு, வெள்ளை வேட்டி, தோளில் துண்டு போட்டு அறுபது வயது மதிக்கத்தக்க செட்டியார், யாரது எனக் கேட்டபடியே வாசலுக்கு வந்தார்.
“நாங்க கூத்தகுடியில இருந்து வர்றோம். பர்மாவுல இருக்கிற இவுக அப்பா நீங்க வருவீகன்னு காயிதம் போட்டுருக்காக உங்களைப் பார்க்கச் சொல்லி.. அதான் வந்தோம். இந்தாங்க காயிதம்”
“அடடே.. நம்ம இராமகிருஷ்ணனா. மொகல் ரோட்ல இருக்கிறாரு. நம்ம வட்டிக் கடைப்பக்கம் தான். அடிக்கடி, பாப்போம்.. அவரு சம்சாரம நீங்க. ரொம்ப சந்தோசம். உள்ள
வந்து இண்ணயில உட்காருத்தா.. இது அவரு மகனா.. அதான் முகச்சாடை இருக்கு.. வள்ளியம்மை.. வள்ளியம்மை.. என மனைவியை அழைத்தார் செட்டியார். இவுக கூத்தகுடி யில இருந்து வந்துருக்காக. இவுக வீட்டுக்காரரும் ரங்கோன்ல தான் இருக்காரு. போயி ரொட்டி மிட்டாய் கொண்டு வந்து கொடு” என்றார் ஆச்சியிடம்.
ஒரு தட்டில் ரொட்டி, சாக்லேட், மிட்டாய், முறுக்கு என கொண்டு வந்து திண்ணையில் வைத்த௱ர்ஆச்சி. மாணிக்கத்துக்கு எச்சில் ஊறியுது. அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் எடுக்கலாமா? வேண்டாமா? என்று! எடுக்கக் கூடாது என்ற அம்மாவின் கண் ஜாடையில் ஆசையை அடக்கிக் கொண்டான்.
“உங்ககிட்ட சாமான் சட்டு கொடுத்து விடுறதா எழுதி இருந்தாக. அதான் உங்களப் பாத்துட்டு அவுக எப்படி இருக்காக... நல்லா இருக்காகலான்னு கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு வந்தோம்” என்றாள் மரகதம்.
“அப்படியா ஆத்தா.. நான் வாறதுக்கு ஒரு வாரம் முன்னாடிப் பார்த்தேன். ஊருக்குப் போறதாச் சொன்னேன். புறப்படுறதுக்கு முன்னாடி வந்து பாக்குறேன்னு சொன்னாரு... ஆனா வரலியே.. ஏதும் கொடுத்தும் விடலையே ஆத்தா.. அப்புறம் அவரு சேர்ந்த வட்டிக் கடையில
இப்ப இல்ல. விலகக் கிட்டாரு. ஏதோ சொந்தமா தொழில் பண்றேன்னு சொன்னாரு. என்ன செய்யுறாருன்னு தெரியல. கொடுத்து விட்டுருந்தா கொடுக்க மாட்டேனா?” சொல்லச் சொல்ல கண்ணீர் கண்ணில் முட்டிக் கொண்டிருந்தது. மாணிக்கம் ஒன்றும் புரியாமல் அம்மாவையே
பார்த்துக் கொண்டிருந்தான்.
“சரி.. அப்ப நாங்க வர்றோம் அய்யா” எனப் புறப்பட்டாள் மரகதம் மகனின் கையைப் பிடித்துக் கொண்டு.
இத எடுத்துக்க தம்பி என்றார் செட்டியார். பரவாயில்லை எனச் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள் மரகதம்.
“ஏம்மா.. அவுக அப்பா கொடுத்து விட்டதைக் கொடுக்கலை. எனக்குச் செருப்பு சட்டை, டவுசர் ஏம்மா நீ வாங்கல..” கருவேல மரமுள் காலில் குத்தியது. முள்ளைத் தூக்கித் தூரமா
எறிந்து விட்டு நடந்து கொண்டிருந்தாள்: முள் தைத்த வலியை விட பெரிய வலியை அல்லவா அவள் சுமந்து வந்து கொண்டிருக்கிறாள். மகனின் கேள்வி களுக்குப் பதில் இல்லாமல் அமுத கண்ணீர் முற்றும் வற்றி இருந்தது.
பர்மாவுக்குப் போன கணவன் பத்து ஆண்டுகளாகியும் இன்னும் திரும்பவில்லை. காலம் கரைந்து கொண்டிருந்தது. கடிதப் போக்குவரத்தும் குறைந்து விட்டது. ஆண்டுக்கு ஒருமுறை, இருமுறை இருபுது ஐம்பது வந்தாலே பெரிதாக இருந்தது. மரகதத்துக்கு இந்தப் போராட்ட வாழ்க்கை இப்போது பழகி விட்டது. எல்லாவற்றையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தாள்;
மாணிக்கம் இப்போது பதினோராவது படித்துக் கொண்டு இருக்கிறான். அம்மாவுக்குத் துணைக்கு மாடு கன்னு பார்ப்பது, புல் அறுத்து வருவது, பண்ணைக்குப் போவது, வயலுக்குப் போவுது என பொறுப்புள்ளவனாக, பெரியவனாக மாறி விட்டான். நல்லாவும் படிக்கிறான்.
“அம்மா.. அப்பா எப்படி இருப்பாக” மாணிக்கம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான்.
“எப்பம்மா வருவாக..” அவனின் அடுத்த கேள்வி இதுவாகத் தான் இருக்கும். “வாற போது வரட்டும். இப்ப என்ன அதுக்கு” என்று கடிந்து கொண்டாள் மரகதம்.
“இல்லம்மா.. அப்பாவ பார்க்கனும் போல இருக்கு. இம்புட்டு வருஷமாச்சே போயி... ஏம்மா வரல..”
இங்கிருந்து போன வட்டிக்கடை வேலைய விட்டுட்டு, தொழில் செய்வதாக சொன்ன கம்பனூர் செட்டியாரின் தகவல் இடி போல் தாக்கியது மரகதத்துக்கு.
குடும்பத்தைத் தவிக்க விட்டுட்டு என்ன சம்பாத்தியம். தெரியாத ஊர்ல இருந்துகிட்டு, தோளுக்கு மேல வளர்ந்த புள்ள அப்பன் முகம் எப்படி இருக்குமுன்னு கேட்குறான். நான் என்ன பதில் சொல்றது. மனுசனுக்குப் பொண்டாட்டி புள்ளய பாக்கனும்னு ஆசை இருக்காதா? நான் என்ன நகை நட்டா கேட்டேன் கூழோ கஞ்சியோ? ஓண்ணா இருந்து குடிப்போம்னு
சொல்றேன். அசோகவனத்துல சீதை இருந்த கணக்கா இந்த பட்டிக்காட்டுல ஓத்தப்பயல வச்சுக்கிட்டு, நல்ல சேலை துணிக்குக் கூட வழி இல்லாம கெடக்குறேன். கோபமும் ஹெறுப்புமாக கணவனைத் திட்டிக் கொண்டே மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் மரகதம்.
மறுநாள் காலை வெடுக் வெடுக்கென்று வேலையை முடித்தாள் மரகதம். நேரா காரைக்குடி போய் தங்கச்சாமி மாமாவை பாத்து விவரம் கேட்டு வந்துவிட முடிவு செய்தாள்: எத்தனை நாளைக்கு வாழ்க்கை பூரா இப்படி நொம்பளப்பட்டு இருக்கிறது. காது மூக்குல கிடக்கிறதையும் வச்சு வெள்ளாமச் செலவுக்குக் கொடுத்தாச்சு. மூணு மைல் வெயில்லயும் மழையிலயும் நடந்து போயி படிக்குற புள்ளக்கு ஒரு செருப்பு வாங்க முடியல. அப்பா வாங்கிட்டு வருவாரு. ஏம்மா
கடனவுடன வாங்குறேங்கிறான். தன்னால பேசிக்கிட்டே மாட்டுக்குப் புல்லப் போட்டு, உலைய வச்சுட்டு அரிச புடைச்சுக்கிட்டு இருந்தா மரகதம்.
தூரத்துல மாட்டு மணிச்சத்தம். வில்லு வண்டி வாற சத்தம் ஊருக்குள்ள கேக்குது. என்னது வில்லுவண்டி வருது. காரைக்குடி, மாமாவுக வண்டி மாதிரி தெரியுதுன்னு நினைக்கியிலேயே வண்டி வந்து நிக்குது வாசல்ல. நெனச்சது மாதிரி தங்கச்சாமி மாமாதான். “ஏம்ப்பா.. சின்னையா மாட்டை அவுத்து அந்த வேப்ப மரத்தடியில் கட்டி ட்டுத் தண்ணி வெண்ணி காமிச்சுருப்பா” எனச் சொல்லிக் கொண்டே திண்ணையில் அமர்ந்தார் தங்கசாமி.
கும்புடப் போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி, உங்களப் பாக்கனும்னு நெனச்சுக்கிட்டு புறப்பட்டேன். அம்புட்டு தொலவு போகனுமேன்னு நினச்சுகிட்டு இருந்த மரகததுக்கு அம்மான் வந்தது சந்தோஷமாக இருந்தது. இடீரனு வந்துருக்காரே அப்படீன்னு சந்தேகமாகவும் இருந்துச்சு. அவசரமா போய் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்துட்டு தயங்கி நின்னாள் மரகதம். என்னச் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு?
“இந்தா மரகதம்.. முக்கியமா ஒரு சேதி சொல்லத்தான் வந்தேன். வார்ற ஞாயித்துக்கிழமை ஓம் வீட்டுக்காரன் பர்மாவுல இருந்து புறப்பட்டு வர்றான். பார்மாவுல இப்ப பழைய நிலமை இல்லை. இராணுவம் கையில நாடு போயிருச்சு. அங்க இருக்கிற நம்மவுகள ரொம்ப கெடுபுடி
பண்றாக, எல்லாரையும் வெளியேறச் சொல்லிட்டாக. கொஞ்சம் கொஞ்சமா கப்பல் ஏத்தி அனுப்பி விடுறாக. சொத்து சுகம் வச்சுருக்கவுக அங்கேயே தங்கியிருக்காக. ஓம் புருஷன நான் சேர்த்து விட்ட செட்டியார் வட்டிக் கடைய விட்டு வந்துட்டானாம். செட்டியார் சொல்லித்தான் எனக்குத் தெரிஞ்சுது. அப்புறம் அங்கே ஏதோ வியாபாரம் பண்றேன்னு இம்புட்டு நாளா அங்கேயே இருந்துட்டான். அந்தா இந்தான்னு அதுவும் பத்து வருஷம் ஓடிப் போச்சு. வேற வழியில்லாம இப்ப புறப்பட்டு வாறதா கடுதாசி போட்டுருக்கான். உனக்கும்
எழுதியிருக்கானாம். இன்னிக்கு நாளைக்குக் கடுதாசி வரும். பார்த்துக்க. நானே காரைக்குடி ரயிலடிக்குப் போய் கூட்டி யாந்துர்றேன்” என்றார் தங்கசாமி. ஒண்ணும் பதில் பேசவில்லை மரகதம். “சரி மரகதம் நான் புறப்படுறேன். எங்க
மாணிக்கத்தைக் காணோம். ரொம்ப நாளாச்சுப் பார்த்து” என்றார் தங்கசாமி மாமா.
“பள்ளிக்கூடம் போயிருக்கான். உலை வச்சுருக்கேன். சாப்பிட்டுப் போங்க” என்றாள் மரகதம்.
“இல்லத்தா.. போகணும். உன் புருஷனோட வரும் போது சேர்த்துச் சாப்பிட்டுக்கிறேன்” எனப் புறப்பட்டார் தங்கசாமி. மாடு பூட்டி ரெடியானது. கூட்டுவண்டி தூரத்தில் போய்க்கொண்டிருந்தது.
சொக்கு, மாணிக்கம், முத்துராமன், கோபாலு, இராஜேந்திரன், சத்தின்னு புத்தகப் பையும் தூக்குச் சட்டியுமாக போய்க் கொண்டிருந்தார்கள் பள்ளிக்கூடத்துக்கு மாணிக்கத்தோடு. தினமும் மூணு மைல் நடந்து போய்த்தான் படிச்சுட்டு வரணும்.
“டேய் சொக்கு., எங்க அப்பா பர்மாவுல இருந்து வர்றாகடா” என்றான் மாணிக்கம்.
“அப்படியாடா? உனக்கு என்னடா வாங்கியாறாக” என்றான் ராஜேந்திரன்.
“தெரியலடா. செருப்பு கேட்டிருந்தேன். அப்புறம் டவுசர் சட்டை. டேய் எங்க அப்பா வந்தப்புறம் சைக்கிள் வாங்கப் போறேன்டா? அப்புறம் எங்க அப்பா நல்ல உயரமா, செவப்பா,
சந்தனப் பொட்டு வச்சுக்கிட்டு இருப்பாகன்னு எங்க அம்மா சொல்லி இருக்குடா” என்றான்.
“டேய்.. நீங்க எல்லாம் வீட்டுக்கு வந்துருங்கடா. எங்க அப்பாவைப் பாக்கலாம்”
“டேய்... எங்களுக்குப் பர்மாரொட்டி, மிட்டாய் தருவியாடா” என்றார்கள் சேர்ந்தாற்போல்.
“வாங்கடா தருவேண்டா” என்றான் மாணிக்கம்.
சந்தோசமாகப் பேசிக் கொண்டே போவதற்குள் பள்ளிக்கூடம் வந்துவிட்டது.
மாணிக்கத்துக்கு எப்படா ஞாயிறு வரும் என்று நினைப்போடு பாடத்தோடு லயிக்காமல் உட்கார்ந்திருந்தான்.
அதற்குள் அக்கம் பக்கத்தில் மரகதம் வீட்டுக்காரர் பத்து வருஷம் கழிச்சு வரும் சேதியை அதிசயமாக பேசிக் கொண்டார்கள்.
“ஏண்டி மரகதம்... அண்ணன் ஊளரல இருந்து வர்றாகளாமுல்ல. நீ சொல்லவே இல்ல. வசந்தா தான் சொன்னா..” என்று கேட்ட காமாட்சியின் கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லாமல் போய்க் கொண்டி ருந்தாள் மரகதம்.
இராமேஸ்வரம் போட்மெயில்ல காரைக்குடில இறங்கி வரும் போது தயாராக இருந்தது தங்கசாமி அண்ணன் வில் வண்டி. சின்னையா கூட்டிப் போக வந்திருந்தான். அடையாளம் கண்டு, கொண்டு வந்த சாமான்களை ஏற்றிக் கொண்டு காரைக்குடி புறப்பட்டார் இராமகிருஷ்ணன்.
“வாப்பா இராமகிருஷ்ணா... பத்து வருஷமா௫ிப் போச்சுப்பா உன்னய பார்த்து. எப்படியோ வந்து சேர்ந்துட்டே. இனிமே ஊரோட தளத்தோட இருந்து பிழைக்கிற வழியப்
பாரு. சரி குளிச்சு முழுகி ரெடியாய் இரு. அங்க உன் சம்சாரம் பய, பாக்கனும்னு இருப்பாக” என்றார் அண்ணன்.
“சரி அண்ணே” எனச் சொல்லி விட்டுக் குளித்து முடித்து பலகாரம் சாப்பிட்டார்கள் இருவரும். இடியாப்பம், வெள்ளைப் பணியாரம், கோஸ்மல்லி, கார சட்னின்னு அத்தாச்சி நல்லாவே செஞ்சுயிருந்தாக. ஒருவழியாக பர்மா கதையெல்லாம் பேசி முடிச்சு கொண்டு வந்த டிரங்க் பெட்டி, அட்டைப்பெட்டி ரெண்டு, குடை, பாய் கட்டு என சாமான் எல்லாம் கூட்டு வண்டியிலே ஏத்துறான் சின்னையா.. ஏம்ப்பா புறப்படலாமா எனக் கேட்டுக் கொண்டு வண்டியில் ஏறிப் புறப்பட்டார்கள் தங்கசாமி அண்ணனுடன், ராமகிருஷ்ணன்: தன் மனைவி முகம் மறந்தும் மகன் முகம் அறியாமலும்.
வில்வண்டி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்துல இருக்கிற ஆணு பொண்ணுன்னு அம்புட்டுப் பேரும் வந்துட்டாக.
எல்லோரும் அவர்களுக்கான உறவுமுறையைச் சொல்லி, வாங்க வாங்க எனக்
கொண்டாடிக் கொண்டி ருக்கிறார்கள்;
சாமான்களை இறக்கி வைத்து விட்டு ஓட்டு வீட்டின் நடுக்கூடத்தைச்சுற்றி அவர் கண்கள் தேடிக் கொண்டிருந்தது.
கருப்பையா வாத்தியார், “ஏம்ப்பா ராமகிருஷ்ணா.. வந்துட்டியா... எம்புட்டு
வருஷமாச்சுப்பா போயி., மாதவன், செல்லையா மாமர, சுப்பன், காமாட்சி, காந்திமதி, நம்ம ஊர்அம்பலம்னு ஊர்ல பாதி கூடி யிருக்கு. பத்து வருஷ தாக்கலப் பேசுறதும் பர்மாவுல நடக்குற சண்டையப் பத்திக் கேட்குறதும்னு ஆளாளுக்குக் கேட்டுக்கிட்டு இருக்காக, அம்புட்டு பேருக்குப் பதில் சொன்னாலும் அவரு தேடுறது யாரையின்னு அவருக்குத் தெரிஞ்சாலும்வாய்விட்டுக் கேட்காம பதில் சொல்லிக்கிட்டு இருக்காரு”
மாணிக்கம் தன் பள்ளிக்கூடத்துக் கூட்டாளிகளோடு தூரத்தில் இருந்தவாறு பார்த்துக்கொண்டே இருக்கிறான். தன் தந்தையை வைத்த கண் வாங்காமல். தன்னைக் கூப்பிடுவார் என்ற எதிர்பார்ப்போடு இருந்தவனுக்குத் தன்னைக் கேட்கவில்லை என்பது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டான்.
“ஏத்தா.. காந்திமதி. எங்க மரகதத்தைக் காணோம்” என்றார் தங்கச்சாமி.
“புருஷன் வந்திருக்கார். எங்க போனா..” அப்போதுதான் எல்லோரும் ஆமா. எங்கே மரகதத்தைக் காணோம் என ஆளாளுக்குக் கேட்டுக் கொண்டி ருந்தார்கள்.
“ஏம்ப்பா ராமகிருஷ்ணா.. உன் மகனைப் பாத்தியாப்பா”
“இல்லையே அண்ணே. யாருன்னு தெரியல, அதான்” என்று இழுத்தார் ராமகிருஷ்ணன்.
“அட என்னப்பா.. பெத்த புள்ளய கூப்பிட்டுப் பேசாம, தெரியலங்கிற் எனக் கடிந்து கொண்டார்தங்கசாமி.
“டேய் மாணிக்கம்.. இங்க வாடா.. அங்கேயே நிக்குற.. அப்பாவைப் பாரு” என அருகில் அழைத்தார் பெரியப்பா தங்கசாமி. தயங்கிக் கொண்டே வந்தான் மாணிக்கம்.
தந்தைக்கு மகனையும், மகனைத் தந்தைக்கும் அறிமுகம் செய்யும் அவலம் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.
மகனை அருகில் அழைத்து, என்னப்பா படிக்குறே என்றார் ராமகிருஷ்ணன். அப்பாவின் ஸ்பரிஷம் கிடைக்காமல், முகம் பார்க்காமல் பத்து வருடம் கடந்து, பதினாறு வயதில் சந்திக்கும்
மாணிக்கத்துக்கு அவரின் கேள்வி அறிமுகம் இல்லாதவரிடம் பேசுவுது போன்ற தயக்கத்தை உண்டு பண்ணியது. அது அவனை உலுக்கவே ஓவென்றுஅழுது தீர்த்து விட்டான்.
எல்லோருக்கும் அவன் செயல் அதிர்ச்சியையும், நியாயத்தையும் சொல்லியது. அமுகாதே என கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார் ராமகிருஷ்ணன்.
பெட்டியைத் திறந்து மகனுக்கு வாங்கி வந்த நடையனை எடுத்துக் கொண்டிருந்தார் ராமகிருஷ்ணன்; ஆறு வயதில் மகன் அளவெடுத்து அனுப்பிய அளவில் மறக்காமல் வாங்கி
வந்திருந்த நடையனையும், சட்டையையும் மகனிடம் கொடுத்த போது தான்
ராம௫ருஷ்ணனுக்குச் சுருக்கென்றது'. அப்பொழுதுதான் பதினாறு வயது மகன் தன் அருகில் இருப்பதை உணர்ந்தவராக ஓவென்று கதறியபடி கட்டிப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தார் ராமகிருஷ்ணன். தன் இயலாமையையும், பொறுப்பற்ற தன்மையையும் நினைத்து.
எந்தச் சலனமும் பரபரப்பும் இல்லாமல் ஆசுவாசமாக மாடுகளுக்குப் புல் அறுத்துக் கொண்டி ருந்தாள் மரகதம். அவசர அவசரமாகத் தேடிக் கொண்டு வந்த காந்திமதி, மரகதத்தைப் பார்த்து விட்டாள்.
காந்திமதி அவளுக்கு அக்கா முறை. உரிமையாப் பேசக் கூடியவள். அந்த உரிமையிலே கேட்டாள். “ஏண்டி.. என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே. கட்டுன புருஷன் பத்து வருஷம் கழிச்சு செத்துப் பொழச்சு வந்துருக்காரு. வாற நேரம் தலைசீவி நல்ல சேலை துணியக் கட்டி வாங்கன்னு” கேட்குறத்துக்கு இல்லாம, இப்படி வயக்காட்டுல வந்து யாரோ மாதிரி புல் அறுத்துக் கிட்டு இருக்கே. என்னதான் நினைப்பு உனக்கு?
“அக்கா.. இப்ப என்ன பண்ணச் சொல்ற.. எனக்குப் பத்து வருஷமா சோறு போட்டுக்கிட்டு இருக்கிற மாட்டுக்கு, அதுக வயித்துக்கு புல் அறுத்துக்கிட்டு தானே இருக்கேன். தாயும் கண்ணுமா வந்த மாடு இன்னிக்கு பெத்துப் பழுகி நிக்குது. பத்து வருஷம் காக்க வச்ச மனுஷன் பத்து நிமிஷம் காத்திருந்தா ஓண்ணும் குடி முழுகிப் போகாது. இங்க தானே இருக்கப் போறாரு. இல்ல பறுபடியும் மலேசியா சிங்கப்பூரூன்னு போகப் போறாநா?
“என்னடி இப்படி எடுத்தெரிஞ்சு பேசுற. உனக்குத் தான் அவரப் பாக்கனும்னு தோணல. கோபத்துல இருக்க. அந்த மனுசனுக்குப் பொண்டாட்டிய பாக்கனும்னு ஆசை இருக்காதா?”
“ஆசையா? இந்தா பாரு அக்கா... என் வாயைக் களறாத. அம்புட்டு அடக்க வச்சுருக்கேன். கழுத்துல காதுல இருந்ததெல்லாம் கழற்றிக் கொடுத்துட்டு இப்படி உருவிய கோலமா நிக்கறேன்: இந்த மஞ்சக் கயித்துல இருக்கிற தாலிதான் மிச்சம். காசு பணம்தான் அனுப்பல. செத்தாளா? பொழச்சாளா? அப்படிங்கிற கரிசனம் கூடவா இல்லாமப் போச்சு. மகன் வளர்ந்து நிக்குறான். ஓரு நல்லது பொல்லது கேட்டி ருப்பானா? இல்ல நானாவுது அவனுக்குச் செஞ்சு குடுக்க முடிஞ்சதா...
தினம் போக வர ஆறு மைல் நடந்து போய் படிக்கிற புள்ளைக்குக் காலுக்கு செருப்பு வாங்கக்கூட வக்கு இல்ல. அப்பா அனுப்புவாருன்னு ஆசையா இருக்கான். என் கதைய இந்தக் கள்ளிச்செடியில எழுதி வச்சா அதுவாவது கண்ணீர்விடும். அந்த இரக்கம் கூட அவருக்கில்லையே?”
அவள் புல் அறுக்க வைத்திருந்த “கருக்கரிவாளை” விடக் கூர்மையாக இருந்தது ஓவ்வொரு வார்த்தையும்.
“இப்ப வந்துட்டே.. வந்தவருக்குப் பரிஞ்சு பேச. சீவி சிங்காரிச்சு ஆளாத்தி எடுக்கச் சொல்லி.. பே௱.. வீட்டுக்குப் போயி வந்த விருந்தாளிகளுக்குத் தண்ணி வெண்ணி கொடு. பின்னாடி யே வர்றேன்” என்றாள் மரகதம். வாயடைத்துப் போனாள் காந்திமதி, அவள் பேசுவதில் இருந்த நியாயம் அவளுக்குத் தெரிந்ததால் பதில் எதும் பேசவில்லை. சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே முன்னே போனாள்.
வரப்பில் அறுத்துப் போட்டி ருந்த புல்லை ஒன்று சேர்த்து கட்டாகக் கட்டினாள். தூக்க முடியவில்லை. மனசு போல் அதுவும் கனத்துக் கிடந்தது.
வரப்பில் போயிட்டு இருந்த கருத்தானைக் கூப்பிட்டு, “அண்ணே.. இந்தப்
புல்லுக்கட்டை கொஞ்சம் தூக்கி விட்டுப் போங்க” என்றாள்.
தலையில் புல்லுக்கட்டும், கருக்கருவாளுமாக வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள் மரகதம். இவளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தன் மாடுகளைப் பார்க்க...
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்