logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

Kousalya Venkatesan

சிறுகதை வரிசை எண் # 65


தகப்பன் சாமி தேவகிக்கு பயமாக இருக்கிறது. இவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என. வீரய்யன் சுவற்றை தடவிக் கொடுத்த படியே சாய்ந்து உட்கார்ந்து இருப்பதை அவர் மனைவி தேவகி கவனிக்கிறார். அவரோ கண்களில் கண்ணீர் வழிவதை மனைவிக்கு தெரியாமல் துடைத்துக் கொள்கிறார். தேவகிக்கு கணவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பது புரியாமல் இல்லை. பார்த்தும் பார்க்காததை போல சமையல் வேலைகளை செய்கிறார். "கிழவனுக்கு கருவாட்டு குழம்பு என்றால் அம்புட்டு உசுரு. நெத்திலி பொடியோட நிறைய பூண்டு தட்டி போட்டு மணக்க மணக்க குழம்பு, கமகமன்னு வாசம் வீசுது. இதெல்லாம் எதுவுமே இவருக்கு தெரியலையே.." " ரெண்டு பேர் கிட்டயுமே நானும் எவ்வளவோ  சொல்லி பார்த்துட்டேன். கேட்டாதானே ரெண்டுமே நான் புடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு புடிவாதம் புடிச்சா என்ன செய்றது. இந்த அப்பனுக்கு பிறந்த பிடிவாதக்கார பயதானே அவனும். அதே அடம்தான் அவனுக்கும் இருக்கு.. " அவஞ் சொல்றதுலயும் என்ன தப்பு இருக்கு. அவன் நாங்க தனியா கெடந்து கஷ்டப்படுறோம்னு விசனப்படுறான். இவரோ இவரோட உயிரையே பிச்சி எடுத்துட்டு போற மாதிரி பதறுறாரு.." எல்லாம் எம்மேலதான் தப்பு. நான் சும்மா இருந்து இருக்கலாம். திருவிழா வந்தாதான் எம்மனசு அமைதியா கெடக்காதே. மனசு முழுக்க  அவங்க நெனப்புதா. அந்த நேரம் பார்த்தா அவன் போன் செய்யணும்.." உணர்ச்சி வேகத்துல , "நீ ஏன்டா இங்க வரமாட்ற. வயசான அம்மாவும் அப்பாவும் இங்க தனியா கிடந்து கஷ்டப்படுகிறோம்னு ஒரு முறையாவது இங்க வந்து எங்கள பார்க்குறியா. திருவிழாவுக்கு நீ வருவேன்னு என் மனம் ஏங்கிக் கிடக்குது. கேட்டா உனக்கு லீவு கிடைக்கலன்னு சொல்லுவ. ஊர வந்து பாரு .எல்லார் வீட்லயும் விருந்தாளிங்க தான் .நானும் என் புருஷனும் மட்டும் தான் ஆனாதை மாதிரி தனியா கிடக்கோம்.. " " அம்மா என்னம்மா இது .என்னுடைய சூழ்நிலை புரியாம பேசுற .நான் என்ன உள்நாட்டிலா இருக்கேன் .நினைச்ச உடனே ஓடி வந்து பார்க்கிறதுக்கு. அமெரிக்கால இருக்கேன். அதுவும் இங்க விடுமுறை எல்லாம் வேற டைம்ல விடறாங்க. " " அப்பதானேம்மா அங்க வர முடியும். இவனுக்கு எப்ப லீவு விடுவார்களோ, அப்ப நானும் அவளும் எங்க ஆபீஸ் வொர்க்கை எல்லாம் தள்ளி வைத்து விட்டு வருகிறோம் .அப்படியும் நீ இப்படி பேசுகிறாயே. " "நான்தான் உன்னிடம் சொல்லிட்டே இருக்கிறேனே அம்மா.அங்கே கிடந்து ஏன் ரெண்டு பேரும் கஷ்டப்பட்டுறீங்க . இங்க வாங்களேன். இங்க சுத்தி பார்க்க எவ்வளவு இடங்கள் இருக்கு தெரியுமா.." மகன் சொன்னதுமே தேவகிக்கு சந்தோசமாகிறது. கணவரின் செய்தி தெரியாமல் பாதி சம்மதத்தை இப்பொழுதே சொல்லி விடுகிறார்."சரிடா ஹரி அப்படி என்றால் நான் உங்க அப்பா கிட்ட இத பத்தி பேசுறேன். அப்பா என்ன சொல்றாரோ. அந்த முடிவு தான் எனக்கும்.. " மகனிடம் ஒரே சொல்லாக சொல்லி விட்டு வீரய்யனுக்கு தட்டில் சாப்பிட வைத்துக் கொண்டு மகனிடம் பேசிய செய்திகளை எல்லாம் கூறுகிறாள். பசியுடன் ஆசையாய் சாதத்தை பிசைந்து வாயில் வைக்கப் போனவர் தட்டை தூக்கி கோபத்துடன் வீசுகிறார். "இவருக்கு எதற்கு இப்போது இவ்வளவு கோபம் வருகிறது.. "  தேவகி திட்டத் தொடங்குகிறார். "ஏ மாமா உனக்கு வயசு அதிகமாகிட்டே போகுதே தவிர ,இன்னமும் அதே கோபத்தோடு இருக்கியே.உனக்கு இப்ப ரத்தம் சுண்டி போய் கிழவயதாகி போச்சு . ஜல்லிக்கட்டு மாடு பிடிக்கிற அதே வாலிப வயசுன்னு நினைச்சுக்கிட்டு இருக்காத. " "நம்ம இரண்டு பேரும் இப்படியே தனியா  குடித்தனம் செய்ய முடியாது.எனக்கும் ஒடம்பு ஒரு நாளைக்கு ஒரு மாதிரியா இருக்கு.பொழுது விடிஞ்சு கண்ண திறந்தா தான் நான் உயிரோட இருக்கேன்னு எனக்கு தெரியுது .என்ன பத்தி நீ ஏதாவது கவலைப்படுறியா. உனக்கு எப்படியோ தெரியல .எனக்கு மனசு கிடந்து ஏங்கி கிடக்குது. என் பேரனோட பேசி விளையாடணும்னு. மருமக சமைச்சு போட்டு அதை உட்கார்ந்து சாப்பிடணும்னு.உன்ன மாதிரியெல்லாம் நான் அழுத்தக்காரி கிடையாது மாமா.." சொல்லும் போதே தேவகிக்கு அழுகை வருகிறது. அழுதபடியே சிந்தி சிதறிக் கிடந்த  சாதங்களை  ஒன்று திரட்டி அள்ளுகிறார். " இப்ப நான் என்ன சொல்லிப்புட்டேன்னு உனக்கு இவ்வளவு கோபம் வருது .நம்ம தனியா கடந்து கஷ்டப்படுறோம்னு தானே நம்ம மகன் அங்க கூப்பிடுறான். நமக்கு என்ன நாலு அஞ்சு பிள்ளைங்களா இருக்கு. யாரு வீட்டிலாவது போய் தங்கக்கலாம்னு.நான் சொல்றது கொஞ்சமாவது உனக்கு புத்தியில ஏறுதா இல்லையா. " தேவகி குரலை உயர்த்துகிறார். இவ்வளவு நேரம் அமைதியாய் கேட்டுக் கொண்டு இருந்த வீரய்யன் அவர் பங்குக்கு பேசத் தொடங்குகிறார். "உனக்கு தான்டி அறிவே இல்ல. நான் இப்படி ஒத்த பிள்ளையா வளர்க்க கூடாது. தொணைக்கு இன்னொன்னு பெத்து போட்டுக்கடின்னு சொன்னதுக்கு, நீ என்ன சொன்ன.. " "இவன் பொறந்தப்பயே நான் செத்து போயிருப்பேன். பிரசவம் இவ்வளவு சிக்கலாகிட்டுது. என்னால எல்லாம் இன்னொரு குழந்தை பெத்துக்க முடியாதுன்னு சொன்னேன் .அதுக்கு இப்ப என்ன மாமா. எப்பயோ நடந்த செய்தியை இப்ப பேசுகிற . " "நீ எந்த நேரம் வாயை திறந்தியோ. அதோடையே உன்னோட கர்ப்பப்பையும் அடச்சு போச்சு.  அடுத்த குழந்தை பிறக்கவே இல்ல .இப்ப பாரு இவன் ஒருத்தன தான் நம்ம நம்பி கிடக்க வேண்டி இருக்கு. நீ என்ன சொன்னாலும் நான் அந்த ஊருக்கெல்லாம் வரமாட்டேன்டி. " " நீ ஆசைப்படுறேன்னு வேணும்னா அங்க விருந்தாளியாக போய் ரெண்டு மூணு மாசம் தங்கி இருந்துட்டு வரலாமே தவிர , இங்க இருந்து  என் வீடு வாசல் எல்லாம் போட்டுட்டு வரவே மாட்டேன்.. அடியே தேவகி உனக்கு நான் சொன்னா புரியுதா என்ன எழவோ தெரியல.. " வீட்டின் சுவற்றில் கை வைத்து தடவி கொடுத்த படியே , "இது என்னோட உசுருடி. என் அப்பா வாழ்ந்த வீடு இந்த வீட்லதான் நான் பிறந்தேன் .என் அப்பா அம்மாவுக்கு இங்கதான் திருமணம் ஆச்சு. இங்கதான் அவங்க குடும்பமும் நடத்துனாங்க.கடைசி வரை நம்முடன் இருந்து இந்த வீட்டுல தான் அவங்க இறந்தாங்க .. " "என் அப்பாவுக்கு உயிர் பிரியல .ஏதோ ஆசை கடந்து மனசுல அடிச்சுக்குதுன்னு பெருசுங்க எல்லாம் சொல்லவும் கடைசியா  இந்த வீட்டு மண்ணை கரைச்சி வாயில ஊத்துனதும் அவர் என்ன பார்த்த பார்வை இருக்கே. இப்ப நினைச்சாலும் எனக்கு உடம்பெல்லாம் மெய்சிலிர்க்குதுடி." "டேய் வீரா  நீ என்னையும், அம்மாவையும் எப்படி பார்த்துக்கிட்டியோ அதேபோல தான்டா நம்ம வீட்டையும் பார்த்துக்கணும்னு சொல்லாம சொல்லிட்டு என்னை பார்த்து சந்தோசமா உயிரை விட்டார். இதெல்லாம் உனக்கு மறந்து போச்சாடி . அவங்களோட உயிர் மூச்சு இங்க தான்டி இருக்கு. நீயும் உம்மவனும் வேணும்னா இது வெறும் மண்ணு கல்லுன்னு சொல்லி இடிச்சு போட்டுட்டு போகலாம் .." இந்த வார்த்தையை சொன்னதும் ஆக்ரோஷமாக பேச தொடங்குகிறார்.  "என வீட்டு மேல மட்டும் அவன் கைய வச்சான் அவ்வளவுதான் .அதோட நானும் செத்து போயிடுவேன் .."சொன்னதுமே தேவகி அதிர்ச்சி அடைகிறார். "ஏ மாமா இப்படி எல்லாம் பேசுற . ஹரி நாம கஷ்டப்படுறோம்னு தான அங்க வரச் சொல்றான். அதை உன்னால புரிஞ்சிக்க முடியல. சாகப்போறேன்னு பேசறியே.." வருத்தத்துடன் அவரின் வாயை மூடுகிறார். " சரி நான் அவன்கிட்ட பேசி பாக்கறேன். உன்னை கூப்பிட்டு தான் இருக்கான்.  ஒன்னும் கடத்திட்டு போகல. அதுக்கு ஏன் இப்படி சாப்பிட்டுட்டு இருந்த தட்ட தூக்கி வீசுறியோ .இதையும் தான் அவன்கிட்ட சொல்லுவேன். சாப்பிடற தட்டையா தூக்கி எறிகிற .. "என்று திட்டி விட்டு எழுந்து செல்கிறாள் தேவகி. "அவன் வீட்டை விற்க போறேன்னு சொன்னதுல இருந்துதானே இவருக்கு கோபம் வர ஆரம்பிச்சிது. அவன் சொன்னா உடனேவா நடந்துடப் போகுது . அவன் இங்க வரட்டும்.ஆற அமர யோசித்து பேசி முடிவு செய்வோம். நெருப்புன்னு சொன்னா வாய் வெந்தா போதும். இதெல்லாம் எதுவுமே இந்த கிழவனுக்கு புரிய மாட்டேன்கிறதே. நான் இவனுக்கு பேசுறதா, இல்லை இவருக்கு பேசுறதா. என்னை நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்க வச்சுட்டாங்களே. எது எப்படி இருந்தாலும் என்னுடைய வேலை . நல்ல சமையலா சமைக்கிறது. அதை ஒழுங்கா கவனிப்போம்.." அப்படியே பிரமை பிடித்து சுவரில் சாய்ந்து இருந்த வீரப்பனை தட்டி எழுப்புகிறார் .தூக்கமா மயக்கமா என்று தெரியாமல கிறங்கி கிடந்தவர் பதறி எழுகிறார். " என்னை இங்கிருந்து கொண்டு போகாதீங்க .நான் இத விட்டு பிரிய மாட்டேன் . " "ஐயோ கடவுளே உனக்கு பைத்தியம் தான் பிடிக்க போகுது . அவன் சும்மா ஒரு சொல்லுதான் சொன்னான். நீதான் அதையே நினைச்சுகிட்டு என்னை பாடா படுத்துற .ஏன்யா இப்படி இருக்க .நான் அவங்கிட்ட சொல்லிக்கிறேன். நான் வேணும்னா அங்க வரேன்டா. இந்த ஆள இங்கேயே விட்டுட்டு போயிடுவோம்னு." அப்படி சொன்னாலாவது அசைந்து கொடுக்கிறாரா என்று தேவகி பேசுகிறார். அதெல்லாம் அவருக்கு பொருட்டாகவே இல்லை. " நீ எங்க போனாலும் போடி. எனக்கு என்ன தானா சமைச்சுக்கவா தெரியாது. நான் இங்கே தான் இருப்பேன். " என்றவருக்கு அப்பொழுது தான் கொஞ்சம் விழிப்பு வருகிறது. மூக்கை உறிஞ்சி வாசம் பிடிக்கிறார். "ஏன்டி ரொம்ப நேரமா பசியோட மயங்கி கிடக்க. சமைச்சு வச்சுட்டு சாப்பிட கூப்பிடாம என்ன வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க .இல்ல உன் மவனோட கதை பேசிட்டு இருந்தியா. " மனைவியை கிண்டல் செய்கிறார். "ஆமா அவனுக்கும் வேலை இல்ல. எனக்கும் வேலை இல்ல பாருங்க .நாங்க ரெண்டு பேரும் கதை பேசிக்கிட்டு இருக்கிறதுக்கு.  இனிமே நம்ம எப்ப படுக்க போறோமோ. அப்பதான் அவனுக்கு பொழுது விடியும் அப்பதான் பேசுவான். அதுவரைக்கும் நான் அவன் குரலுக்காக காத்துகிட்டு இருக்கணும். சரி மாமா இப்பதான் தூங்கி முழிச்சி இருக்க. நல்ல பசியோட இருப்ப .வா வந்து சாப்பிடு. உனக்காகத்தானே நான் பார்த்து பார்த்து சமைக்கிறேன்.." என்று அவரை கைப்பிடித்து அழைத்து செல்கிறார் தேவகி. கணவர் சப்பு கொட்டி சாப்பிடுவதை ரசித்துப் பார்க்கிறார். "ஏன் மாமா இந்த குழம்பு என்ன அம்புட்டு ருசியாவா இருக்கு. ஆசையா சாப்பிடுற .. " " அப்படி இல்லடி நீ சும்மா வெறும் சாதம் வடிச்சு கொட்டினா கூட அதை நான் என் பொண்டாட்டி சமைச்சதுன்னு ரசிச்சி சாப்பிடுவேன்டி. உன் கைமணம் அப்படி.. " இப்புடி ஆசையா சாப்பிடற நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன. எனக்கு என்ன சமைக்கவா தெரியாது. நீ வேணா போய்க்கன்னு . நான் உன்னை விட்டு போனா நீ சமைச்சு சாப்பிட்டுட்டு இருப்பியா மாமா.." " எனக்கு அதெல்லாம் தெரியாதுடி உன் சமையலும் நீயும் எனக்கு உசுருன்னா, இந்த வீடு அதுக்கு மேலடி .இந்த வீட்டை விட்டு பிரிஞ்சு போறத கனவில கூட நினச்சு பாக்க முடியாது. தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கடி." சொன்னவர் சிறிது நேரத்துக்கு முன்பு தட்டை வீசியதை போல இல்லாமல் முழுமையாய் ருசித்து சாப்பிட்டு முடித்து தான் எழுந்து செல்கிறார்.இவரை என்னன்னு சொல்றது என நொந்து கொள்கிறார் தேவகி. மகன் ஃபோன் செய்தால் அப்பாவின் பிடிவாதத்தை பற்றி சொல்லி விட வேண்டியது தான். " நாங்கள் இருக்கும் வரை இங்கே இருக்கோம்டா .அதன் பிறகு வேண்டுமானால் வீட்டை விற்றுக் கொள்ளலாம் என்று. " நினைத்த நேரத்திற்கு அதிசயமாய் ஹரி போன் செய்கிறான் . "அம்மா என்னம்மா செஞ்சுகிட்டு இருக்க . " "இப்பதான்டா நானும் அப்பாவும் சாப்பிட்டோம் . " "ஏன்மா இவ்வளவு நேரம் .." இதுதான் சரியான தருணம் என்று சொல்ல ஆரம்பிக்கிறார். " அது என்னமோ உன் அப்பா நாளுக்கு நாள் ரொம்ப பிடிவாதமா இருக்காருடா.இந்த வீடு அவரோட உயிர்னு சொல்றாரு . கல்லும் மண்ணும் எப்படி உயிராக முடியும். இப்படியே போனா அவருக்கு பைத்தியம் பிடிச்சிடுமோன்னு எனக்கு பயமா இருக்குடா ஹரி . நீ தயவு செய்து கொஞ்ச நாளைக்கு இந்த வீட்ட விக்கிறதை பத்தின பேச்சே எடுக்காத. நாங்க இருக்கும் வரை இப்படியே இருந்துக்குறோம் .அதற்குப் பிறகு நீ   இந்த வீட்டை என்ன வேணா செஞ்சுக்கோ." ஹரிக்கு ஏற்கனவே இரண்டு நாட்களாக சரியான கோபம் .அம்மா இப்படி சொல்லவும் இன்னும் கோபம் அதிகமாகிறது . "அம்மா உனக்கு என்ன பைத்தியமா. நான் இப்ப அந்த வீட்டை வித்து காசை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் .நீங்க இரண்டு பேரும் அனாதை போல இருக்கீங்கன்னு தான நான் இந்த வேலையை செய்கிறேன். நீயும் கடைசியில என்ன தப்பா புரிஞ்சுக்கிட்ட பாரும்மா.." பேசிக்கொண்டே சோபாவை பார்க்கிறான். சின்னவன் கிருஷ் முகம் தெரியாமல் திரும்பி படுத்தபடி இருக்கிறான். அம்மாவிடம் அரைமணி நேரத்திற்கு மேல் பேசியும் அவனிடம் அசைவே இல்லை. "இரண்டு நாட்களாக இவனும் அடம் செய்யவும் தான் எல்லாம் சேர்ந்து கொண்டு அம்மாவிடம் கோபத்தை காட்டுகிறேன்.இரண்டு நாட்களாக ஸ்கூலுக்கு போகாமல் ஜுரம் என படுத்து கிடக்கிறான். இப்பொழுது தூங்குகிறானோ.. " என சத்தம் காட்டாமல் அருகில் சென்று அவனுக்கே தெரியாமல் கவனிக்கிறான். அவன் செய்யும் செயலை பார்த்ததும் அதிர்ச்சியில் அம்மாவிடம் " சரிமா நான் கொஞ்ச நேரம் கழித்து பேசுறேன்." என்று போனை வைத்து விடுகிறான். "நான்சி எங்கடி போய் தொலைஞ்ச சீக்கிரமா இங்கே வா. இவன் என்ன செய்கிறான் பார்.. " அவன் சத்தம் போட்ட பிறகுதான் தன்னை பற்றிதான் அப்பா பேசுகிறார் என கிருஷ் திடுக்கிட்டு எழுந்து விடுகிறான் . அவன் கையில் அவன் வளர்த்த ஜிம்மியுடைய கழுத்து  பட்டை இருக்கிறது . கணவனின் கோபக் குரலை கேட்டதுமே நான்சி பதறி  ஓடி வருகிறாள். மகனை பார்த்ததுமே அவள் புரிந்து கொள்கிறாள் எதற்காக ஹரி கத்துகிறான் என. எங்கே பிள்ளையை கோபத்தில் அடித்து விட போகிறாரோ என்று அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறாள். "இப்பொழுது எதற்காக கத்துகிறீர்கள் ஹரி. " "இவனைப் பார்த்தாயா எப்பொழுது பார்த்தாலும் அந்த நாயோடு சுற்றிக் கொண்டு இருக்கிறான் என்று தானே நாயை விற்றுத் தொலைத்தேன். இந்த கழுத்து பட்டையை மட்டும் எங்கே இருந்து கொண்டு வந்தான். நாயோடு சேர்த்து கொடுத்து விட்டேனே." நான்சி பயந்தபடியே பேசுகிறாள்."அதுவா நேற்று ஸ்கூல் முடிந்ததும், ஜிம்மியை நீங்க கொண்டு போய் விட்டீர்களே அந்த வீட்டில் அழுது அடம் பண்ணி இந்த பெல்ட்டை வாங்கி வந்து இருக்கிறான் .அவன் பாவம்ங்க இதையாவது வைத்துக் கொள்ளட்டுமே.." "உனக்கு என்ன பைத்தியமாடி. நாயே இல்லையாம். பிறகு நாய் பெல்ட் எதற்கு.. "  அவன் கையில் இருந்து பிடுங்க முயற்சிக்கிறான். "அப்பா ஜிம்மி  என்னோட உயர்ப்பா .என் ஜிம்மியை தான் என்கிட்ட இந்த பிரிச்சிட்டீங்க .அவன் நினைப்பா இந்த பொருளாவது என்கிட்ட இருக்கட்டும். " அழுதபடியே சொன்னதுமே சாட்டையால் அடித்தது போல சுரீர் என்கிறது ஹரிக்கு. தன் மனதில் இருந்தவற்றையெல்லாம் சொல்லி முடித்த பாரம் குறைக்கவும் நிம்மதியாய் சாதத்தை சாப்பிட்டு  முடித்தம் திண்ணையில் சாய்கிறார் வீரய்யன். தேவகி முகமே மலர்ச்சியாய் வாசலுக்கு வருகிறார். "மாமா தூங்கிட்டியா மாமா ஹரி பேசணும்னு சொல்றான் பாரு.."உசுப்பி எழுப்புகிறார் . அவர் தூங்கினால் தானே விழிப்பதற்கு. மகனின் போன் என்பதுமே தூங்குவதை போலவே நடிக்கிறார் . "மாமா அவன் உன்கிட்ட நல்ல செய்தி பேசணும்னு ஆசைப்படுறான். நான் சொல்றதை விட அவன் சொல்றதுதான் உனக்கு இன்னும் சந்தோஷமாக இருக்கும் .. " வீரய்யன் உடனே எழுந்து உட்கார்ந்து கொள்கிறார். "சொல்லுடா ஹரி. "   ஒரு வாரமாய் அப்பாவின் குரலை கேட்காமல் இன்று கேட்கவுமே ஹரிக்கு குறல் தழுதழுக்கிறது . "அப்பா எப்படி அப்பா இருக்க. போப்பா நீ ஒரு வாரமா என்கிட்ட பேசவே இல்ல. எனக்கு ஒரே வருத்தமா இருக்கு. எப்படிப்பா இருக்க .. " "நான் நல்லா இருக்கேன்டா . சிங்கக்குட்டி மாதிரி நீ இருக்குறப்ப எனக்கு என்னடா கவலை. " இவருக்கும் அழுகை வருகிறது. "ஹரி நான் ஒன்னு சொல்றேன் கேக்குறியா. இந்த வீட்டை விக்கிறது தவிர வேற எதுவானாலும் சொல்லுடா நான் கேட்கிறேன். இது என்னோட உசுருடா. " " ஆமாப்பா எனக்கு இப்பதான் புரிஞ்சது. நீ சொன்னதன் அர்த்தம். இந்த வீடு இப்பவும் இடிக்க வேண்டாம் .எப்பவுமே இடிக்க வேண்டாம்பா. நாங்க நீங்க இல்லாத போதும் விடுமுறைக்கு வந்து தங்குவதற்குள்ள வீடு இதுதான். உன் பேரன், அவன் கொள்ளுப் பேரன்னு அடுத்தடுத்த தலைமுறை வரைக்கும் இந்த வீடு அப்படியே இருக்கும்பா . உன்னுடைய நினைப்பா . அப்பா நான் முரட்டுத்தனமா பேசினதுக்கு என்னை மன்னிச்சிடுப்பா"சொல்லி விட்டு ஹரி ஆழத் தொடங்குகிறான். கொள்ளுப் பேரன் வரை என்று சொன்னதுமே ஆனந்தத்தில் அவரும் அழுகிறார். பக்கத்தில் நின்று கொண்டு இருந்த தேவகி என்ன சொல்வது என்றே தெரியவில்லை .கணவனின் கண்களை துடைத்தபடியே அவரும் அழுகிறார் . "ஹரி என்னடா ஆச்சு .திடீர்னு எப்படி முடிவு மாறின. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா .நீ இ ங்க இருந்தா உன்ன கட்டிப்புடிச்சி கொஞ்சி. இருப்பேன். " அதுக்கு இன்னும் பத்து நாள் ஆகும்பா .வந்து எல்லா விவரங்களையும் பேசிப்போம்.. " "என்னடா ஹரி சொல்ற. இங்க வரப்போறியா " "ஆமாம்பா நாங்க லீவு சொல்லிட்டோம். திருவிழாவுக்கு இன்னும் பத்து நாள்ல அங்க வந்துருவோம் .எல்லாரும் சந்தோஷமா திருவிழாவை கொண்டாடுவோம்பா .. " "ரொம்ப மகிழ்ச்சி டா .எனக்கு மனசு நிறைவா இருக்குடா . எல்லாரும் சீக்கிரமா வாங்க . உங்களுக்காக காத்துக்கிட்டே இருப்போம்.. " என்று சொல்லி வைக்கிறார். மகன் வராத சோகத்தில் இருந்த தேவகிக்கு இந்த செய்தியை கேட்டதுமே தலைகால் புரியவில்லை. தெருவில் நின்று சந்தோசமாய் கூப்பாடு கூச்சல் போடுகிறார் .என்னுடைய பையன் பேரன் மருமக எல்லாரும் வர போறாங்க. இந்த வருஷ திருவிழா எங்க வீட்டுல களைகட்டப்போகுது.." எல்லாரும்  நலம் விசாரிக்கிறார்கள். "அப்படியா அக்கா அவங்கலாம் வரலன்னு சொன்னீங்களே. " "ஆமாடி இப்பதான் எம்மவன் போன் செய்தான் .என் மகன் வரப்போறான். அதுக்கான வேலைகளை எல்லாம் பார்க்க போறேன் .. "என்று பரபரப்பாகிறார். அன்று காவடி, வாசலில் எல்லா காவடிகளுக்கும் மாற்றி மாற்றி தண்ணீர் ஊற்றி காவல் தெய்வங்களை ஆசை தீர பார்த்து ரசிக்கிறார்கள்.மதியம் வடைபாயாசம் செய்து சாப்பிட்டு ஓய்வாக உட்கார்ந்து இருக்கிறார்கள் அனைவரும் . அப்பொழுது தான் ஹரி பேச தொடங்குகிறான் "அப்பா இப்பதான்பா எனக்கு நிம்மதியா இருக்கு. உன்கிட்ட சொல்லிட்டனே தவிர, அப்பொழுது கூட எனக்கு எதுவும் புரியல . இதோ இவன் தான் எனக்கு எல்லாவற்றையும் புரிய வைத்தான் . "கிருஷ்சை சுட்டிக் காட்டுகிறான். அவன் பக்கத்தில் ஜிம்மி வாலாட்டியபடியே நிற்கிறது. " இந்த நாய்க்குட்டி என்னடா இவ்வளவு அழகா இருக்கு " " அப்பா நாய்னு சொல்லாதப்பா . அவனுக்கு கோபம் வந்து விடும். இது கூடவே விளையாடிட்டு இருக்கானேன்னு விற்றுவிட்டேன்.  இரண்டு கிலோமீட்டர் நடந்து ஜிம்மி இருக்கிற இடத்துக்கு போய்விட்டான் இவன்.  இதைக் கேட்டதும் அவர் கொடுக்கல.." "இந்த பெல்ட்டையாவது ஜிம்மி ஞாபகமா கொடுங்க என அழுது அடம் செய்து வாங்கிட்டு வந்து எனக்கு தெரியாம ஒளிச்சு வச்சி இருந்தான். நான் கண்டுபிடித்து அதை பிடுங்க போகவும்  ஜிம்மி என் உயிர் அப்பா . அதுதான் என்கூட இல்லை இதையும் பிரிச்சிடாதீங்கப்பா அப்படின்னு அழறான். அவர்கிட்ட கெஞ்சி திரும்ப வாங்கிக் கொடுத்தேன்.. " "அப்பதான்பா எனக்கு உன்னுடைய உணர்வுகளை எல்லாம் புரிந்து கொள்ள முடிந்தது ஜிம்மியா இருந்தா என்ன வீடா இருந்தா என்ன. ஒருத்தவங்களுக்கு பிடிச்சு போனா அத அவங்கள விட்டு பிரிக்க கூடாது . என்ன மன்னிச்சிடுப்பா. " ."ஏன்டா  திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்டுக்கிட்டே இருக்க.அதுதான் இந்த வீட்டை என் கொள்ளுபேரன் ,எள்ளுபேரன் எல்லாரும் ஆள போறாங்களே பிறகு என்னடா.." கிருஷ்ஷோடு ஜிம்மியையும் தூக்கி மடியில் வைத்து கொஞ்சுகிறார். "அப்பனுக்கே புத்தி சொன்ன தகப்பன் சாமிடா , நீ என்னோட குலதெய்வம்டா .. "

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.