R. KARNAN
சிறுகதை வரிசை எண்
# 64
பெரியாசுபத்திரி
================
அழுகையும், சிரிப்பும் ஒரே இடத்துல இருக்குன்னா, அது ஆசுபத்திரியாத் தான் இருக்கும். போனவக குடும்பம் அழுகும், பொழச்சவக குடும்பம் சிரிக்கும்.
“பெரியாசுபத்திரி கேட்டவக எல்லாம் எறங்குங்க…”
சன்னலோர இடத்த புடுச்சு தூங்கிக்கிட்டு வந்தவக, மனுசன் இங்க மனசு எங்கயோன்ற கதையா கனவுலகத்துல இருந்தவக எல்லாம், கண்டெக்டர் கத்துன சத்தம் கேட்டு வேகவேகமா பஸ்சை விட்டு இறங்குனாக..
பஸ்சு படிக்கட்டுல இருக்குற கைப்பிடியை பிடிச்சு மெல்ல இறங்குச்சு வெள்ளையம்மா..
எலும்பும் தோலும் தவிர ஒடம்புல ஒன்னுமில்ல.., ஒழச்சு ஒழச்சு ஓடா தேஞ்ச ஒடம்புன்னு சொல்வாகல்ல.., அது வெள்ளையம்மாவுக்கு கச்சிதமா பொருந்தும். வயசு இப்பதான் அம்பத தொடுது.. அதுக்குள்ள கொடக்கம்பு கணக்கா வளஞ்சுபோச்சு முதுகு.. கடலு வத்திப்போனது மாதிரி, கன்னம் வத்திக் கெடக்கு..
எம்புட்டு பெரிய கட்டடம்... சோப்பு டப்பாவ அடுக்கி வச்சது மாதிரி ஒன்னு மேல ஒன்னா கட்டியிருக்காக… உச்சியில ஏறி நின்னா வானத்த தொட்டுறலாம் போல..
ஓங்கி ஒசந்து நிக்குற பெரியாசுபத்திரி கட்டடத்தை அண்ணாந்து பாத்து ஆச்சரியப்படுது வெள்ளையம்மா..
விடியக் காலையிலயே ஆளுக வாரதும் போறதுமா இருக்காக..
அன்னாடம் வேலைக்கு போயி கஞ்சி குடிக்கிற சனத்துக்கு நோய் நொடின்னு வந்தா, அவகளால ஆயிரக்கணக்குல செலவு செஞ்சு வைத்தியம் பாக்க முடியுமா? கவர்மென்டு ஆசுபத்திரியைத்தான கடவுளா நெனச்சு வருவாக..
“ஆத்தா.. நம்ம பெரியாசுபத்திரி இருக்குல்ல, அது இதவிட பெரி..ய்..ய ஆசுபத்திரியா மாறப்போதாம். டாக்டருக்கு படிக்குற காலேஜ் எல்லாம் வரப்போகுதாம். பேப்பர்ல போட்டுருக்காக..”
ஆசுபத்திரி வாசல்ல நின்ன வெள்ளையம்மாவுக்கு ஏற்கெனவே முத்தையா சொன்னது ஞாபகத்துல வந்துச்சு..
அவஞ்சொன்னது மாதிரியே கட்டிடமெல்லாம் வானத்துக்கும் பூமிக்குமா இருக்கே..
பால்வாடி டீச்சர் பாக்கியம் மகளை மதுரையில கொடுத்திருக்காக. அவ கல்யாணத்துக்கு பஸ்சு பிடிச்சிருந்தாக. அப்ப இந்த வழியா போனப்ப ஆசுபத்திரி கட்டட வேலை வேகமாக நடந்துக்கிட்டு இருந்துச்சு.., பஸ்சுல இருந்த சனமெல்லாம் சன்னல் கண்ணாடி வழியா எட்டிப் பாத்து ஆச்சரியப்பட்டாக..
“ஏலே முத்தையா.. என்னத்த அதிசயமா பாக்குறீக” பின்னாடி சீட்டுல உக்காந்திருந்த சைக்கிள் கடைக்காரரு கேட்டதும், “மாமோய்.. நம்மூரு பெரியாசுபத்திரிய ரொம்ப பெருசா ஒசத்தி கட்டுறாக. பேப்பர்ல போட்டுருந்தாகல்ல படிக்கலையா?”
“அப்படியா மருமகனே.. நா என்னக்கியா பேப்பரு படிச்சேன். யாராவது உன்னப்போல படிச்சிட்டு சொல்லுவாக, அதக் கேட்டுக்கிருவேன்”
“எல்லா வசதியும் வரப்போகுதாம் மாமோய். இனிமே உனக்கு ஏதாவது ஒன்னுன்னா சவுரியமா வந்து படுத்து வைத்தியம் பாக்கலாம்”
பதினஞ்சு வயசு பய முத்தையா இப்படி பேசுனதைக் கேட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டாக..
அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் அமைதியா வந்த பய என்ன நெனச்சானோ, வெள்ளையம்மா கைய மெதுவா பிடிச்சு, அவங் கன்னத்தோட வச்சு அழுத்தி, ‘ஆத்தா..’ன்னான், “என்ன..ய்..யா”ன்னுச்சு வெள்ளையம்மா..
“இந்த மாதிரி வசதியோட ஆஸ்பத்திரி அப்பவே இருந்திருந்தா நம்ம அய்யன காப்பாத்தி இருக்கலாம்ல, இப்ப உசுரோட நம்மகூட இருந்திருப்பாருல்ல”
அவஞ்சொன்னதைக் கேட்டு, வெள்ளையம்மா கண்ணு ரெண்டும் கலங்கிருச்சு.. முத்தையாவ இழுத்து மடியில போட்டுக்கிட்டு, யாருக்கும் தெரியாம அழுதுச்சு அப்ப..
நாயக்கர் தோட்டத்துக்கு வேலைக்கு போன வெள்ளையம்மா புருஷன பாம்பு கடிச்சிருச்சு, அப்ப இந்த பெரியாசுபத்திரிக்கு தான் தூக்கிக்கிட்டு ஓடிவந்தாக…
“உடம்பெல்லாம் விஷமேறிருச்சு, உடனே மதுர பெரியாசுபத்திரிக்கு கொண்டுபோங்க”ன்னு டாக்டருக சொல்லிட்டாக..
எம்பது மைலுக்கு அங்கிட்டு இருக்குது மதுர. அங்க போற வரைக்கும் உசுரு தாங்குமா?, போற வழியிலயே போயிருச்சு.
அத நெனச்சு தான் முத்தையா அப்படி சொல்லியிருக்கான் பாவம்..
முத்தையா வெள்ளையம்மாவுக்கு ஆறாவது பிள்ளை. மொதல்ல பெத்த அஞ்சும் நிலைக்கல. இந்த பிள்ளையாவது நெலைக்கனுமேன்னு கோயில் கோயிலா ஏறி இறங்குனா…
பட்டாளம்மனுக்கு பட்டுத்துணி எடுத்து கட்டுனா, கருப்பசாமிக்கு கிடா வெட்டி அன்னதானம் போட்டா, ஆயிரத்தம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தா, பழனிக்கு பாதயாத்திரை போனா.., குலசாமி சொரிமுத்து அய்யனார வேண்டி முத்தையான்னு அவனுக்கு பேரு வச்சா..
போன புள்ளயெல்லாம் போகட்டும், பொழச்ச புள்ள நெலச்சா போதும்ன்னு பக்குவமா பாத்து பாத்து வளத்தா.., ஆனா, புள்ள வளந்து வார நேரத்துல புருஷென் போவான்னு அவளுக்கு எப்படி தெரியும்?. இடியா வந்து விழுந்துச்சு அந்த சேதி. அப்பெஞ் சாகயில முத்தையாவுக்கு ஏழு வயசு..
களையெடுக்க, கருதறுக்கன்னு போயி, வம்பாடுபட்டு வளத்தா புள்ளைய..
இப்ப மெட்ராசுல வக்கீலுக்கு படிக்கிறான் முத்தையா..
போன தடவ முத்தையா பய ஊருக்கு வந்த நேரத்துல, வெள்ளையம்மாவுக்கு லேசா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருந்துச்சு..
“வா.. ஆத்தா.. ஆசுபத்திரிக்கு போலாம்”ன்னு கூப்பிட்டான்.
“இல்லையா.. சித்த நேரத்துல சரியாயிரும்”னு சொல்லுச்சு..
“நெஞ்சு வலிய லேசா நெனக்க கூடாது ஆத்தா.., அடுத்து வலி வந்தா, பெரியாசுபத்திரியில போயி பாத்திருவோம். இப்ப அங்க எல்லா வசதியும் இருக்கு. உடனுக்கொடனே பாப்பாக”ன்னு சொன்னான் முத்தையா..
“சரி..ய்யா.., எனக்கு ஒன்னும் ஆகாது. நீ நல்லா படிச்சு கோர்ட்டுல ஜஜ்ஜைய்யா முன்னாடி பேசுறத பாக்காம இந்த உசுரு போகாதய்யா..”ன்னு சொல்லுச்சு வெள்ளையம்மா..
லீவு முடிஞ்சு முத்தையா ஊருக்கு போன மூனா நாளு, பாழாப்போன அந்த வலி திரும்பவும் வந்திருச்சு.. இந்த மொற வலி கூடுதலா.. ஈட்டிய வச்சு நெஞ்சுல குத்துனது மாதிரி இருந்துச்சு.. பாவம்.. தவிச்சுபோயிருச்சு வெள்ளையம்மா..
நெஞ்சு வலிக்கு வைத்தியம் பாக்கத்தான், இப்ப பெரியாசுபத்திரி வாசல்ல நிக்குது..
முத்தையா இருந்திருந்தா அவங் கூட்டிக்கிட்டு வந்திருப்பான். அதுக்காக படிப்ப கெடுத்தா பயல வரச்சொல்ல முடியும்?
திண்ணையில சும்மாவே கெடப்பா முருகாயி. அம்புட்டு வேலையையும் அவ மருமக செஞ்சு வச்சிருவா.., “ஒத்தாசைக்கு வாடி”ன்னு கூப்பிட்டா.., “காட்டுக்கு போகனும், களையெடுக்கனும்”ன்னு கத சொல்றா. “இந்தா இருக்கு ஆஸ்பத்திரி.., இதுக்கு ஒத்தாசைக்கு ஒரு ஆளா.., சும்மா போயிட்டு வா மதினி”ன்னு சொல்லிட்டா..
“இம்புட்டு பொய் சொல்றாளே பாவி” ன்னு நெனச்சுக்கிட்டே ஆசுபத்திரிக்குள்ள மெல்ல நடந்துச்சு வெள்ளையம்மா..
பெரிய பெரிய கட்டடமா இருக்கு.., எங்க போறது, யார பாக்குறதுன்னு ஒன்னும் புரியல..,
தூக்குச்சட்டியோட டீ வாங்க வந்த பயல மறிச்சு, “நெஞ்சு வலிக்கு பாக்குற டாக்டரு எங்க இருப்பாரு சாமி”ன்னு கேட்டுச்சு..
“நேரா டாக்டர போயி பாக்க முடியாது. மொதல்ல சீட்டு பதியனும். இப்படியே போனா.., நொட்டாங்கை பக்கம் சின்ன சந்து மாதிரி போகும். சீட்டு பதியிற இடம் அங்கன தான் இருக்கு. அவககிட்ட ஒம் பேரு, வயச சொன்னா சீட்டு பதிஞ்சு கொடுப்பாக. அப்புறந்தான் டாக்டர பாக்க முடியும். சீக்கிரம் போ ஆத்தா.. கூட்டம் அதிகமாயிற போகுது..” ரொம்ப அக்கறையா சொல்லிட்டு போறான் அந்த பய…
அவஞ் சொன்ன திசையில நடந்து சீட்டு பதியிற இடத்துக்கு போனப்ப, அங்க கூட்டம் குமிஞ்சு கெடந்துச்சு..
“இம்புட்டு பேருக்குமா சீக்கு..”ன்னு நெனச்சுச்சு வெள்ளையம்மா..
பொம்பளைக நின்ன வரிசையில கடைசி ஆளா போயி நின்னுச்சு பாவம்.., ஒவ்வொரு ஆளா கழிஞ்சு, வெள்ளையம்மா சீட்டு பதிய.. அரைமணி நேரத்துக்கும் மேலாயிருச்சு..
“யம்மா.. நீங்க 8-ம் நம்பருக்கு போங்க. தீக்காய பிரிவுக்கு பக்கத்துல இருக்கு”ன்னு சீட்டு பதிஞ்சு கொடுத்த புள்ள சொல்லுச்சு..
காலையில கஞ்சித் தண்ணி கூட குடிக்காம வந்ததுக்கும், வரிசையில காத்துக் கெடந்ததுக்கும் அப்பவே கிறுகிறுன்னு வந்திருச்சு… சித்த உக்காரலாம்னு தோணுச்சு, ஆனா, டாக்டர பாக்கனுமே…
8-ம் நம்பரத் தேடிப் போகுது வெள்ளையம்மா ..
ஒருவழியா தீக்காய பிரிவ கண்டுபிடிச்சு ஒன்னு, ரெண்டு, மூனுன்னு கடந்து 8-ம் நம்பர் ரூமுக்கு முன்ன வந்து நின்னுச்சு.. அங்கயும் கூட்டமா இருந்தாக..
அப்ப, வெள்ள உடுப்பு போட்ட ஒரு பய வந்து, “நீ என்னமா இங்க நிக்குற? இது ஆம்பளைகளுக்கு பாக்குற இடம். பொம்பளைகளுக்கு 13-ம் நம்பரும்மா.., அங்க போம்மா..”ன்னு சொன்னான்..
“சீட்டு பதிஞ்சு கொடுத்த இடத்துல 8-ம் நம்பருக்கு போகச் சொன்னாக”ன்னு சொல்லுச்சு வெள்ளையம்மா..
“மொதல்ல நாஞ்சொல்றத கேளும்மா…, 13-ம் நம்பருக்கு போம்மா..”ன்னு கோவமா சொல்லிப்புட்டு, “காலங்காத்தால வந்து கழுத்தறுக்குது”ன்னான் மெதுவா..
13-ம் நம்பரு கொஞ்ச தூரம் தள்ளி இருக்குற கட்டடத்துல இருக்கு. மெதுவா நடந்து அங்க போச்சு வெள்ளையம்மா..
அங்கயும் வரிசை.., வேற வழியில்லைன்னு ஆளோட ஆளா வரிசையிலபோயி நின்னுச்சு..
கொஞ்ச நேரம் கழிச்சு நர்ஸ் பொம்பள வந்து, “எல்லாரும் நோட்டு வச்சிருக்கீங்களா? அவக அவக நோட்ட கொண்டு வந்து மேசையில வையிங்க”ன்னு சொல்லுச்சு..
“நோட்டா.. என்ன நோட்டு..” வெள்ளையம்மாவுக்கு ஒன்னும் புரியல..
பக்கத்துல நின்ன பொம்பளக்கிட்ட “என்ன நோட்டு..?”ன்னு கேட்டுச்சு..
“என்ன நோட்டா.., டாக்டர பாக்க வந்தா நோட்டு போடனுமில்ல..., அதுல தான நமக்கு என்ன வியாதி, என்ன மருந்து, மாத்திரைன்னு எழுதி கொடுப்பாக”
பதில் சொன்ன விதத்துல இருந்து, அது அடிக்கடி வந்து போற பொம்பளைன்னு தெரிஞ்சுச்சு..
“சீட்டு பதியுற இடத்துல ஒரு பய நோட்டு விக்கிறான். ஒரு நோட்டு பத்து ரூவா.., சீக்கிரம் போயி வாங்கிட்டு வா..” நோட்டு விக்கிற இடத்தையும் அந்த பொம்பள தான் சொன்னா…
வெள்ளையம்மாவுக்கு அழுகையே வந்திருச்சு..
“அடக் கடவுளே..”ன்னு நெனச்சுக்கிட்டு, கலங்குன கண்ணோட சீட்டு பதியிற இடத்துக்கு திரும்பவும் மெல்ல நடந்துச்சு…, கூடுதலான வெயில்.., ஒடம்பெல்லாம் வேர்த்து கொட்டுது, வயித்துல வேற ஒன்னுமில்லையா.. பாவம் தடுமாறி நடக்குது..
வைத்தியமும் வேணாம், ஒன்னும் வேணாம்ன்னு போயிறலாம்ன்னு தோணுச்சு..
ஆனா, நானும் போயிட்டா புள்ள அனாதையா கெடந்து கஷ்டப்படுவானேன்னு நெனச்சு மனசுக்குள்ளயே அழுதுச்சு. அவனுக்காக கொஞ்ச நாளு உசுர கையில புடுச்சு வைக்கனுமேன்னு, பத்து ரூவா கொடுத்து நோட்டு வாங்கிக்கிட்டு, 13-ம் நம்பருக்கு திரும்ப நடக்குது வைராக்கியமா..
கொஞ்ச தூரம் தான் போயிருக்கும்.., வெள்ளையம்மாவுக்கு நடக்கவே முடியல, கிறுகிறுன்னு வந்து, உடம்ப கீழ புடுச்சு தள்ளுது. எப்படியோ தட்டுத்தடுமாறி 13-ம் நம்பருக்கு போயிருச்சு, அங்க போனதும் நிக்க முடியாம அப்படியே கீழ உக்காந்திருச்சு..
“எம்மா.. எம்மா.. எந்திரிம்மா, இங்க ஒக்காரக்கூடாது. பெரிய டாக்டரு வார நேரம்” நர்சு பதறுது..
சத்தம் கேட்டு எல்லாரும் திரும்பி பாக்குறாக..
“அந்தம்மாவ வரச்சொல்லுங்க” அங்க இருந்த டாக்டரம்மா சொன்னதும், வெள்ளையம்மாவை கைத்தாங்கலா பிடிச்சு கூட்டிக்கிட்டு போச்சு அந்த நர்சு..
புதுசா வாங்குன நோட்டையும், பதிஞ்ச சீட்டையும் டாக்டரு கிட்ட கொடுத்ததும், அந்தம்மா வாங்கி பாத்துச்சு..
“என்னம்மா செய்யுது?”
“அடிக்கடி நெஞ்சு ஒரு பக்கமா வலிக்குது..” சொல்ல முடியாம சொல்லுச்சு..
“மொத முறையா வாரீங்களா?”
“ஆமா..ம்..மா..”
“இதோட எத்தனை முறை வலி வந்திருக்கு?”
“ரெண்டு தடவை..”
“இப்ப வலிக்குதா”
“இல்ல.. நேத்து வலிச்சுச்சு”
“கைய கொடுங்க..”
நாடி பிடிச்சு பாத்துட்டு, கண்ணு இமையை விரிச்சு கண்ணுக்குள்ளயும் டாக்டரம்மா பாத்துச்சு..
“மாத்திரை எழுதித்தாரேன் வாங்கிக்கோங்க. மாத்திரைய சரியா சாப்பிடனும். திரும்பவும் நெஞ்சு வலிக்கிற மாதிரி இருந்தா உடனே
வந்திருங்க..”
“நோட்டு தேவையில்ல.. யாரு உங்கள நோட்டு வாங்கச் சொன்னது?”
வெள்ளையம்மா நர்ச பாத்துச்சு..
“மாத்திரை சாப்பிட்டும் வலி வந்துச்சுன்னா, நாம சில டெஸ்ட் எல்லாம் எடுத்து பாக்கனும். அதுக்கு பிறகு நோட்டு போட்டுக்கலாம்..”
மாத்திரை சீட்ட கையில கொடுத்து, “32-ம் நம்பருல போயி மாத்திரை வாங்கிக்கோங்க..”ன்னு டாக்டரம்மா சொல்லிருச்சு
அப்பவே மதியத்துக்கு மேல ஆகிப்போச்சு..
மருந்து சீட்ட கையில வச்சிக்கிட்டு, திக்குதெச தெரியாம நின்னுக்கிட்டு இரு ந்த வெள்ளையம்மா.., அந்த பக்கமா வந்த ஒரு கெழவிகிட்ட கேட்டுச்சு, “32-ம் நம்பருக்கு எப்படி போகனும்?”
கெழவிக்கு எழுவது வயசிருக்கும், ஆனா, ஆளு திடகாத்திரமா பேசுச்சு..
“மாத்திர வாங்கனுமா?”
“ம்...”
“அங்கதான் போறேன்.. வாரியா எங்கூட?”
“ரொம்ப தூரம் போகனுமா?” தெம்பே இல்லாம வெள்ளையம்மா மெதுவா கேட்டுச்சு..
வெள்ளையம்மா இருந்த நெலமைய பாத்த கெழவிக்கு பாவமா போச்சு..
“ரொம்ப களச்சுபோயி இருக்கயே தாயி.., ஒடம்புக்கு என்ன செய்யுது? இங்க அப்படி தான்.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு மூலையில இருக்கும். ஒவ்வொரு இடமா அலையுறதுக்குள்ள நாக்கு தள்ளிரும், என்ன செய்ய..?.”
“யாருங் கூட வரலையா?. அதுசரி, இந்த காலத்துல யாரையும் எதிர்பாக்க முடியாது. மூனு பிள்ளைய பெத்தேன். பேரம் பேத்தியெல்லாம் இருக்காக. என்ன புரயோசனம்?. எழவெடுத்த எளப்பு அப்பப்ப வந்து உசுர வாங்குது. மாசா மாசம் இங்க வந்து மாத்திர வாங்கிட்டுபோறேன்..”
“எம்புள்ள முத்தையா அப்படியில்ல”ன்னு சொல்ல வாயெடுத்துச்சு வெள்ளையம்மா.., சத்தமா சொல்ல முடியலைன்னதும், பேசாம இருந்திருச்சு..
கண்ணுக்கு பாக்குற இடம், காது, மூக்குக்கு பாக்குற இடம், தோல் நோய்க்கு பாக்குற இடம்ன்னு, ஒவ்வொரு இடமா கடந்து போனாக மாத்திரை வாங்க..
வேகாத வெயில்ல தட்டுத்தடுமாறி கெழவி கூட நடந்து போச்சு வெள்ளையம்மா..
“பெரி..ய்..ய.. ஆசுபத்திரியா இருந்து என்னத்துக்கு? இங்க வாரவகெல்லாம் யாரு..?, ஒடம்புக்கு முடியாதவக தான வருவாக... அவகள இப்படி அலைய விடலாமான்னு ஒருத்தராச்சும் சிந்திச்சு பாத்திருக்காகளா.?
சீட்டு பதிய ஒரு இடம், சீக்குக்கு பாக்க ஒரு இடம், மாத்திர வாங்க ஒரு இடம், மூத்திரம் போக ஒரு இடம்ன்னு நாலு தெசைக்கும் அலைய விடுறாய்ங்க.., இதையெல்லாம் பக்கத்துல பக்கத்துல வச்சாதான் என்னவாம்? பட்டாதான தெரியும் கஷ்டமெல்லாம்.., அதுசரி.., ஒசரத்துல இருக்குறவுகளுக்கு ஓரமா கெடக்குற நம்ம கஷ்டம் எங்க தெரியப்போகுது?” கெழவி புலம்பிக்கிட்டே வருது..
மாத்திரை வாங்குற இடத்துல நிக்குது.. பெரிய வரிசை
“யம்மா நீ இருக்குற சீருக்கு, உன்னால வரிசையில காத்துக்கெடக்க முடியாது. ஒஞ்சீட்ட எங்கிட்ட கொடுத்துட்டு, சித்த இப்படி உக்காரு..
அவக அவக சீட்டுக்கு அவக அவகதான் வரனும்ன்னு சட்டம் பேசுவாக. பாவம் முடியாதவன்னு சொல்லி வாங்கிட்டு வாரேன். எதுக்கும் கண்ணுல படுற மாதிரி உக்காந்திரு..”ன்னு சொல்லிட்டு, வெள்ளையம்மாவோட மருந்து சீட்டையும் வாங்கிக்கிட்டு போயி வரிசையில நின்னுச்சு கெழவி.
ஒவ்வொருத்தரா மாத்திரை வாங்கிட்டு போனாக..
அப்ப ஆசுபத்திரியில உத்தியோகம் பாக்குற வெள்ளச் சேல கட்டுன பொம்பள ஒருத்தி வேகவேகமா வந்தா.., அதுகூட இன்னொரு பொம்பளையும் வந்துச்சு..
ரெண்டு பேரும் நேரா மாத்திரை கொடுக்குற இடத்துக்கு போனாக. அங்க இருக்குற பொம்பளகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுனாக..
கை நெறய மாத்திரையை வாங்கி, கூட வந்த பொம்பளகிட்ட கொடுத்தா வெள்ள சேலக்காரி..
சீக்குக்கு பாக்குற இடத்துலயும் சிபாரி புடுச்சு வாரத என்னன்னு சொல்ல..
அவக சிரிப்பும், பேச்சும் நிக்கல..
வரிசை அப்படியே நின்னுச்சு..
வாய் செத்த சனங்க காத்துக்கெடக்குதுக..
ஒருவழியா.. பேசி முடிச்சிட்டு வெள்ளச் சேலக்காரியும், அவ கூட வந்தவளும் கூட்டத்த பாத்து சிரிச்சுக்கிட்டே போனாக..
வரிசையில நின்ன சனத்த புழு பூச்சியாக் கூட மதிக்கலைன்றது அவக சிரிச்ச சிரிப்பு சொல்லுச்சு..
அந்தா இந்தான்னு ஒருவழியா நகந்துபோயி, மாத்திர சீட்ட நீட்டுச்சு கெழவி
அது ஏற்கெனவே சொல்லிட்டு வந்தது மாதிரியே சொன்னாக, “உஞ்சீட்டு சரி.., இந்த சீட்டுக்கார பொம்பள யாரும்மா?”
அய்யா.. சாமி.., அவளுக்கு மேலுக்கு முடியல. “அந்தா உட்காந்திருக்கா பாருங்க”ன்னு கைய காட்டுச்சு. அது காட்டுன இடத்துல வெள்ளையம்மா படுத்து கெடந்துச்சு. பாவம்ய்யா.. ஒக்கார சொல்லிட்டு வந்தேன். முடியாம படுத்திருச்சு போல, உதவி பன்னுங்கய்யா..”
மாத்திர கொடுக்குற பய எட்டிப் பாத்துட்டு, “மாத்திரையை மாத்தி கொடுத்திராதம்மா”ன்னு சொல்லி, வெள்ளையம்மா சீட்டுக்கும் மாத்திரையை எடுத்து கொடுத்தான்..
“அதெல்லாம் கரெக்டா கொடுத்திருவேன் சாமி”ன்னு சொல்லி மாத்திரைய வாங்கிட்டு வந்துச்சு..
“தாயி.. இந்தா.. உம் மாத்திர”ன்னு படுத்து கெடந்த வெள்ளையம்மா கிட்ட நீட்டுச்சு கெழவி..
வெள்ளையம்மா ஒன்னும் பேசல..
“என்ன இவ இப்படி படுத்துட்டா..”
“ஏ.. தாயி.. எந்திரி..”
“எந்திரி தாயி..”
“தாயி…”
பதிலே இல்லை..ன்னதும் பக்கத்துல வந்து உத்து பாத்துச்சு கெழவி..
நெஞ்சுல வச்ச கையி, அப்படியே இருந்துச்சு..
கெழவிக்கு குப்புன்னு வேர்த்திருச்சு..
“அடப்.. பாதகத்தி..”
கெழவி கத்துன கத்து ஊருக்கே கேட்டுச்சு..
வெள்ளையம்மாவுக்கு மட்டும் கேக்கவே இல்ல!
ரா.கர்ணன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்