logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

கோகுல் குமார்

சிறுகதை வரிசை எண் # 63


மது எனும் மாயப் பிசாசு ஒரு கால் சாக்கடைக்குள்ளும் ஒரு கால் வெளியேவும் இருந்த தன் அப்பாவை தூக்கி உட்கார வைத்து கழண்டிருந்த வேட்டியை இடுப்பில் அழுத்தி கட்டினான் வசந்த். அந்த சாலையின் வழியாக சென்றவர்கள் பார்த்துக் கொண்டு சென்றார்களே தவிர யாரும் உதவிக்கு வரவில்லை... “எப்படி வருவார்கள்? தெனமும் இப்படி விழுந்து கிடந்தா எவன் மதிப்பான்” என காறி துப்பினாள் வைகுந்தத்தின் மனைவி. வீட்டிற்கு அழைத்து வந்திருந்த அப்பாவை தரையில் அமர வைத்து தலையில் தண்ணீர் ஊற்றினான் வசந்த். சுடும் அளவிற்கு தரையின் சூடு இருந்தும் போதையில் அமைதியாக உட்கார்ந்திருந்தான் வைகுந்தம். வைகுந்தம் மேஸ்திரி வேலை செய்து தினக்கூலி வாங்கி அதில் பாதி பணத்தை குடித்து விட்டு மீதியை வீட்டுக்கும் கொடுப்பவன். சில சமயம் அந்த மீதிப்பணமும் தொலைத்து விட்டு வந்துவிடுவான். ஏன் குடிக்கிற என கேட்டால் “செங்கலையும் சிமெண்ட்லயும் கைய வச்சுப் பாரு அப்ப தெரியும்..நாங்க கஷ்டப்பட்ட தான் வீடு நல்லா வரும்.. அந்த கஷ்டத்தை போக்க இதை குடிக்க வேண்டி இருக்கு” என வியாக்யானம் பேசுவான். “சின்ன வயசுலேயே மாமா பொண்ண கல்யாணம் பண்ணி கூடவே வச்சு காப்பாத்திட்டு வரான் .. அவங்க அம்மை அப்பையும் போன பிறகும் அந்த பொண்ண ஒன்னும் சொல்லாம கஞ்சி ஊத்தனவன் டி உன் புருஷன்.. அலுப்பு தெரியாம இருக்க ஆம்பளைங்க குடிச்சா என்ன தப்பு” என சிபாரிசு செய்தாள் பக்கத்து வீட்டு ராணி.. “உம் புருஷன குடிக்க வச்சு குடிக்க வச்சு மேல அனுப்பிட்ட... என் புருஷனுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு .. பையன் படிக்க வைக்கணும் . கல்யாணம் பண்ணனும் .வீடு கட்டணும்..இதெல்லாம பண்ணாம அவர் சாக விட்றுவமா என்ன.. நீ கொஞ்சம் சாத்திக்கிட்டு போறியா” என கத்தினாள் வைகுந்தத்தின் மனைவி சகுந்தலா.. உவாக் உவாக் என வாந்தி வருவது போல பாவனை காட்டிய உடனே ஓடிப்போய் தன் புருஷனின் தலையை பிடித்துக் கொண்டாள் சகுந்தலா. என்னதான் புருஷன கரித்து கொட்டினாலும் புருஷனுக்கு ஏதாச்சும் ஒண்ணுனா தாங்க மாட்டா. தான் பருவமடைவதற்கு முன்னமே யாருக்கும் தெரியாம காதல் பண்ணியிருந்தவள்.. வயசுக்கு வந்த உடனே இவரு தலைல கட்டி வச்சுட்டாங்க.. அவ அம்மா அப்பா ஆக்சிடெண்ல செத்தப்பிறகு இவள வேலைக்கு கூட அனுப்பாம காப்பாத்திட்டு வர்றான் இந்த வைகுந்தம். தினமும் விடியற்காலையிலேயே வேலைக்கு சென்று விடுவார் வைகுந்தம்.. காலை சூரியனை தான் வேலை செய்யும் இடத்தில் தான் தரிசிப்பான். அவ்வளவு பொறுப்பான ஆளு.பெரும்பாலும் காலை உணவை உண்பதில்லை.கட்டிட வேலைக்கு செல்லுமிடத்தில் கொடுக்கப்படும் தேநீர் மட்டும் போதுமானதாக இருந்தது..எவ்வளவு மது குடித்தாலும் காலையில் எழுந்து வேலைக்கு செல்வதை அவன் நிறுத்திய தில்லை.இந்த குடிப்பழக்கம் அவருடன் வேலை செய்யும் பெரிய மேஸ்திரி பூங்காவனத்தால் ஒட்டிக் கொண்டது.அலுப்புத் தட்டாம இருக்க கொஞ்சம் குடிடா என குடிக்க வச்சு இவனையும் கெடுத்துட்டான் பூங்காவனம்.தான் செய்யும் வேலையில் இதுவரை யாரும் எந்த குறையும் சொல்லாதவாறு செய்து முடிக்கும் திறமைசாலி.ஏனோ இந்த குடி பழக்கம் மட்டும் அவனை விடவே மாட்டேன் என்கிறது. முன்பெல்லாம் வைகுந்தம் குடிப்பது அவனது வீட்டுக்கு தெரியாத மாதிரி பார்த்துக் கொள்வான். வைகுந்தமும் அவனது நண்பன் பூங்காவனமும் வேலையை முடித்துவிட்டு ஒரு நாள் ஊருக்கு அப்பால் உள்ள மதுபான கூட்டத்தில் மது அருந்த சென்றனர். பூங்காவனத்திற்கு வாய் கொஞ்சம் நீளம். அகராதி புடிச்ச ஆளு. அங்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவனிடம் பேச்சு கொடுத்து வம்பிக்கிழுத்து சண்டையிட்டு கொண்டனர். மதுபான கூடத்தில் இருந்த அனைவரும் அந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர ஒருவரும் சண்டையை விலக்க வரவில்லை. பாதி போதையில் இருந்த வைகுந்தம் அவர்களை விலக்க சென்றான்.. வைகுந்தம் முதுகிலும் இரண்டு அடி விழுந்தது. ஒரு வழியாக பூங்காவனத்தை இழுத்துக் கொண்டு வெளியேறினான் வைகுந்தம்.... மறுநாள் முதல் தங்கள் ஊரிலேயே உள்ள டாஸ்மாக்கில் குடித்துக் கொள்ளலாம் என்று தைரியத்துடன் பேசிக்கொண்டு வீட்டிற்கு சென்றனர். உள்ளூரில் குடிப்பது என்றால் வைகுந்தத்திற்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள் பார்த்து விட்டால் தப்பாக நினைப்பார்களோ என்ற பயம் அவனுக்கு அதிகமாகவே இருந்தது. இருந்தும் பூங்காவனத்தின் துணையுடன் அன்று உள்ளூரில் உள்ள டாஸ்மாக்கிற்கு சென்றனர். அவன் ஊரில் உள்ள டாஸ்மாக் ரயில்வே நிலையத்திற்கு பின்புறமாக இருந்தது.. அதன் போர்டு மட்டும் ரயில் நிலையத்தில் உள்ளவர்களுக்கு தெரியும்படி திருப்பி வைக்கப்பட்டிருந்தது. மூங்கிலில் வேயப்பட்ட குடிசை போன்ற அமைப்பில் அந்த டாஸ்மாக்கின் பார் அமைக்கப்பட்டிருந்தது உட்காருவதற்கு சிமெண்ட் தரையில் பெஞ்ச் போன்று செய்து அதற்கு முன்னே பிளாஸ்டிக் டேபிள் போடப்பட்டிருந்தது.குடிசையினுள்ளே ஒரு சிறிய ராந்தல் விளக்கு வடிவில் பல்பு பொருத்தப்பட்டிருந்தது. நல்ல காற்றோட்டமான இடமாக இருந்தால் ஃபேன் வைப்பதை தவிர்த்து இருக்கிறார்கள் போல. வாந்தி எடுத்தால் அபராதம்.வெளிப்புற உணவுகள் உள்ளே அனுமதி இல்லை போன்ற வாசகங்களும் ஆங்காங்கே பலகையில் எழுதி கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. இளையராஜா பாடலை பாடிக்கொண்டிருந்தன இரண்டு ஸ்பீக்கர்கள். பூங்காவனமும் வைகுந்தமும் குடித்துவிட்டு பெருசாக எதுவும் பேசிக் கொண்டதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அரசியலும் தெரியாது.ஆன்மீகமும் தெரியாது. பெரிய இலக்கியவாதிகளோ அறிஞர்களோ இல்லை. பெரிய அறிஞர்களும் இலக்கியவாதிகளும் மது கூடத்திற்கு வரக்கூடாது என்பதில்லை. வைகுந்தம் தான் உண்டு. தன் குடி உண்டு என்று, தான் வாங்கிய குவாட்டர் பாட்டிலை ஒரு கிளாஸில் ஊற்றி ஒரு பாக்கெட் தண்ணீருடன் கலந்து ஒரே சிப்பில் முடித்துக் கொள்வான். கசக்கும் பட்சத்தில் உப்பு கடலை வாங்கி வாயில் போட்டுக் கொள்வான். இதெல்லாம் இப்போது 20 நிமிடத்திற்குள் முடிந்து விடுகிறது. முன்பெல்லாம் இதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வான். இந்த குடிப்பழக்கம் இரண்டு பேருக்கும் அடிமையாக இருந்தது.. அதே பார் , அதே குவாட்டர் ,அதே இடத்தில் அமர்ந்து தினமும் குடித்துவிட்டு தான் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் வருவதைக் கண்டாலே இரண்டு வாட்டர் பாக்கெட் , இரண்டு குவாட்டர் பாட்டில் ,ஒரு உப்பு கடலை பாக்கெட், இரண்டு கிளாஸ் போன்றவற்றை சொல்லாமலே எடுத்துக்கொண்டு வந்து விடுவான் பாரில் வேலை செய்பவன். அந்த அளவிற்கு பரிட்சயப்பட்டிருந்தார்கள். ஒரு நாள் வெளியூரில் வேலைக்கு சென்றிருந்த வைகுந்தம் வீடு திரும்பவில்லை. அன்று நடு இரவு ஆன போதும் வீடு திரும்பாததால் அந்த ஊரில் அவன் பேசு பொருளாகி இருந்தான். ஊரில் உள்ள பெரியவர்கள் அவன் வேலை செய்யும் இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு அங்கு இல்லை என சொல்லி விட்டனர். அந்த ஊருக்கு பேருந்தோ இதர வாகன வசதிகளோ இல்லை. அவனது மனைவி சகுந்தலாவும் மகன் வசந்தும் சாப்பிடலாமே அன்றிரவு தூங்கினார்கள். “எங்கயோ குடிச்சிட்டு விழுந்து கிடப்பான் உங்கப்பன். இந்த குடியால நம்ம குடியே கெட போகுது பாரு” என புலம்பிக் கொண்டிருந்தாள் சகுந்தலா. அந்த தூக்கமில்லா இரவை கடந்த இருவரும் மறுநாள் காலையில் தன் அம்மாவை கூட்டிக் கொண்டு வசந்த் காலேஜுக்கு செல்லாமல் தன் அப்பாவை தேடி அவன் வேலை செய்யும் ஊருக்கு சென்றான். அந்த கட்டிடத்தில் வேலை செய்யும் எல்லாரிடமும் கேட்டுப் பார்த்தும் நேற்றே அவர் கிளம்பி விட்டதாக சொன்னார்கள். எப்போதும் கூடவே இருக்கும் பூங்காவனமும் உடல்நிலை சரியில்லாததால் அவருடன் வேலைக்கு செல்லவில்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்தோ ,கேட்டுப் பார்த்தோ, பேருந்து நிலையம், மருத்துவமனை, ஆற்றங்கரை ஓரம், மொட்டைக் கிணறு, நெடுஞ்சாலை, ரயில் பாதைகள் என தேடிய பிறகும் வைகுந்தத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. சூரியன் சரிந்திருந்நது . வானத்தில் , எங்கோ இருந்த மேகத்தை மிக வேகமாக விரட்டிக்கொண்டு வந்தது. வசந்த் முகத்தை மேலே தூக்கி பார்த்தான். மழைத்துளிகள் அவன் முகத்தில் படிந்திருந்தன... அவனது கால்கள் வேகமாய் நகர்ந்தன.. அவனது அம்மா வேறெங்கோ தேடப் போய்விட்டாள்... மதுபானக் கடையை நோக்கி சென்றவன் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தான்.. மழை பெய்யத் தொடங்கி இருந்தது.முழுவதுமாக நனையாமல் அங்கேயே நின்று அந்த டாஸ்மாக்கை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென அந்த டாஸ்மாக்கின் பின்புறமாக ஓடினான். அங்கு ஒரு கூடத்தில் நிறைய குடித்து போடப்பட்ட பாட்டில்கள் வீசப்பட்டிருந்தது. நீண்ட பச்சை நிற பாட்டில்களும் சின்ன சின்ன பல்வேறு வடிவமுள்ள பாட்டில்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சற்று உள்ளே சென்று பார்த்த வசந்த் , தன் அப்பா மூச்சற்று கிடைப்பது பார்த்து திடுக்கிட்டு , "அப்பா அப்பா " என்று கத்திக்கொண்டு அவரைத் தொட்டு எழுப்பினான். ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்து மூஞ்சில் தெளித்து எழுப்பினான். அதீதபோதையில் இருந்த வைகுந்தம் பொறுமையாக கண் திறந்து பார்த்து மறுபடியும் மூடிக்கொண்டார்.... அம்மாவையும் ஊர்க்காரர்களை வரவழைத்து அப்பாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வைகுந்தம் தெளிவடையவே இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. மெல்ல எழுந்து நடந்து சென்றான் அவன் நடையில் ஒரு தொய்வு இருந்தது. காலையில் எழுந்து சுறுசுறுப்பாக செல்லும் அவன் , வேலைக்கு செல்வதை பற்றிய யோசிக்காமல் வீட்டிலேயே படுத்துக் கொண்டான். சகுந்தலா விவசாய வேலைக்கும் வசந்த் காலேஜுக்கு செல்லாமல் கட்டிட வேலைக்கும் செல்ல வேண்டியிருந்தது.. நோய்வாய்ப்பட்ட வைகுந்தம் மீண்டுவருவதற்கு இரண்டு மாதத்திற்கு மேலானது. பிறகு மீண்டும் கட்டிட வேலைக்கு செல்வதற்கு தன் நண்பன் பூங்காவனத்தை பார்க்க சென்றான். “பூங்காவனம் பெரிய ஆஸ்பத்திரி ல சேர்த்திருக்காங்க , கிட்னி பெயிலர் னு சொல்றாங்க என ஒப்பாரி வைத்தாள் அவள் மனைவி. “இன்னைக்குள்ள போயிடுமாம்” என தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள். வைகுந்தத்திற்கு தலை சுற்றியது. அங்கேயே மரத்தடியில் அமர்ந்து கொண்டான். தன்னுடைய கல்லூரி படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதை எண்ணி மனம் உடைந்து போனான் வசந்த். இந்தப் பாழாப்போன குடியினால் தான் எங்கள் குடும்பமே நாசம் ஆனது என்று ஊரில் உள்ள டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டும் என எண்ணி தங்கள் பகுதியில் உள்ள நண்பர்களை சேர்த்துக்கொண்டு அந்த ஊர்த்தலைவர் கவுன்சிலரை பார்த்து மூடவேண்டி சென்று முறையிட்டனர்.ஆனால் அது எந்த பலனும் அளிக்கவில்லை.பிறகு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊரில் பெண்களும் இளைஞர்களும் சேர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். “நம் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்ததற்கும் எனது கல்லூரி படிப்பு முடிந்து போனதற்கும் பூங்காவனம் மாமாவின் இறப்பிற்கும் காரணம் இந்த குடிப்பழக்கம் தான். இத நீங்க நிறுத்தி இருந்தால் இவ்வளவு பிரச்சனை ஆகி இருக்காது” என அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அவர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார். "களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான். பூங்காவனத்தின் மரணத்திற்குப் பிறகு போராட்டம் ரயில் நிலையத்திற்கு அருகே வலுப்பெற்றது . இருந்தும் அந்த ஊர் மக்கள் குடிப்பதை நிறுத்தவில்லை. வைகுந்தனும் குடித்துவிட்டு அன்றிரவு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வைகுந்தம் என்ன நினைத்தானோ என தெரியவில்லை தானும் இந்த போராட்டத்திற்கு பலம் சேர்க்கிறேன். இனி நான் குடிக்க மாட்டேன் என சப்தமிட்டு, இந்த டாஸ்மாக் மூடப்பட்டால் பல்வேறு குடும்பங்கள் நற்கதியடையும் என்று சொல்லிவிட்டு , தான் செய்யப்போகும் இந்த செயலால் அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கும் என சொல்லிவிட்டு ,அதி வேகமாக வந்த ரயிலில் ஓடிச் சென்று தண்டவாளத்தில் குதித்து விட்டான் வைகுந்தம். அனைவரும் கத்திக் கொண்டே ஓடினர். ரயில் நிற்காமல் அவனை மோதி தூக்கி அடித்து சென்றது. வைகுந்தத்தின் உடலில் இருந்து பிரிந்த தலை மட்டும் அந்த டாஸ்மாக்கின் வாசலில் விழுந்து கிடந்தது....

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.