logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

NITHYA.N.

சிறுகதை வரிசை எண் # 61


படைப்பு குழுமம் – அம்மையார் ஹைநூன் பீவி சிறுகதைப் போட்டிக்கான படைப்பு ஒரு பறவை ஒரு விலங்கு நித்யா உடனடி இட்லி மாவு பாக்கெட்டும், முட்டைகள் ஆறும் வாங்கிக் கொண்டு காவேரி வீடு திரும்பின போது இடதுபுற சிறிய கேட் கதவு திறந்திருப்பதை சந்தின் ஆரம்பத்திலேயே கவனித்து விட்டாள். யாரோ வந்திருக்கிறார்கள். வேகநடையில் வீட்டை நெருங்கிப் பார்த்த போது ரஞ்சித் தெரிந்தான். சுவற்றில் ஒட்ட வைத்திருந்த நா.காவேரி தமிழ்த் துறைப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி என்ற ப்ளாஸ்டிக் நேம் போர்டை துடைத்துக் கொண்டிருந்தான். “வாடா நல்லவனே..” என்றாள் காவேரி. திரும்பிப் பார்த்து புன்னகைத்தான். “ஒரே அழுக்கு. உன் பேருல கறை இருக்க விட்டுடுவேனா. அதான்..” என்றான். “அட..அடா. போதும், உள்ளே வா..” என்றபடியே வீட்டைத் திறந்து உள்ளே போனாள். டீ பாயின் மேல் வாங்கி வந்தவைகளை வைத்துவிட்டு சோபாவில் அக்கடாவென உட்கார்ந்தாள். பின்னாலேயே வந்தான் ரஞ்சித். “உன் ஏரோப்ளேன் எங்கேக்கா. நடந்து போயிட்டு வர்றே..” “பஞ்சர்ரா. பின்னாடி டயர்ல ஆணி ஏறிடுச்சு. நேத்துக் கொடுத்தது இன்னும் வரலை. சன்டேன்றதுனால உயிர் பிழைச்சேன். நீ, இப்பத் தான் வந்தியா.” “பத்து நிமிசம் ஆச்சு.” விரல்களை நெட்டி முறித்துக் கொண்டான். கொட்டாவி. “வேற என்ன விசேசம், லேசா உடம்பு வந்திருக்கிற மாதிரி இருக்கு.” மேலிருந்து கீழ் வரை அலசினான். “நீ ஒருத்தனே போதும்டா! வேலை வேலைன்னு ராத்திரி பகல் பார்க்காம உசிரெடுக்கிறாங்க. சம்பந்தமில்லாத வேலைகளையெல்லாம் என் தலையில கட்டறாங்க. கேட்டா, மேடம் உங்களுக்கென்ன, சிங்கிளா இருக்கீங்க. கொஞ்சம் தயவு பண்ணுங்கன்னு லாஜிக் வேற..” என்றபடியே எழுந்தாள். வாங்கி வந்தவைகளை சேகரித்துக் கொண்டு சமையல் அறை நோக்கி எழுந்தாள். “ஏதாவது விசேசத் தகவல் இருக்கா. இல்லை, உயிரோட தான் இருக்கேனான்னு பார்த்துட்டுப் போக வந்தியா.” பதில் பேசாது கண்ணாடிக் குடுவைக்குள் தெரிந்த கருத்த குண்டு மீனை வெறித்தான். காவேரியின் அம்மாவும், அப்பாவும் செயற்கை மாலைகளில் போட்டோக்காரரை முறைத்துக் கொண்டிருந்தனர். காலண்டர் போன மாதம் காட்டியது. ஓவல் வடிவ பித்தளைக் கிண்ணத்தில் நீச்சலடித்தபடி புத்தர் சிலை. ஓரத்து கண்ணாடி செல்ஃபில் காவேரி மகள் ஆர்த்தி வாங்கின பதக்கங்களும், விருதுகளும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கலெக்டரிடம் கோப்பை வாங்கும் ஆர்த்தி, மெடலுடன் இரட்டை விரல் காட்டும் ஆர்த்தி, அம்மாவை அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் தரும் ஆர்த்தி.. பொறாமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தான். “ஃப்ரிட்ஜ் எக்சேஞ்ச் பண்ணினியா.?” “இல்லடா. அதே தான். சும்மா துடைச்சு வெச்சிருக்கேன். ஏன் புதுசு மாதிரி தெரியுதா பார்க்க..” சமையலறை வந்தான். “உடம்பு வெச்சுட்டே..” என்றான் மீண்டும். “கை விரல்ல நெயில் பாலிஸ் பளபளக்குது. கண்ல மின்னல்.. இந்த உலகத்துல என்னைத் தவிர எல்லோரும் சீரும், சிறப்புமா இருக்காங்க.” தக்காளியை எடுத்து கடித்தவாறே சொன்னான். “கண்ணு வெக்காதேடா நாயே. நைட்டி பெரிசுடா. அதான் உடம்பை புஸ்சுன்னு காட்டுது. நெயில் பாலிஸ் பக்கத்து வீட்டு வாலு பண்ணின வேலை. கண்ல தெரியற மின்னல் ராத்திரி சரியான தூக்கமில்லாததால. போதுமா, உன் எல்லாக் கேள்விக்கும் விடை. எனக்கும் மாசக் கடைசி, அழுகை, துயரம், தொந்தரவுகள் எல்லாம் உண்டு தம்பி. ஆனா உன்னைப் போல பிறத்தியார் கிட்ட புலம்பமட்டேன்.” தோசை ஊற்றும் சொய்ங். “நெய் இருந்தாலும் தாராளமா ஊத்து. ஒண்ணும் கோபிச்சுக்க மாட்டேன்.” வாசம் இழுத்தான். “மக எப்படியிருக்கா, வருங்கால டாக்டரு. ஊசி போட கத்துக் கொடுத்துட்டாங்களா.” கேரட்டை எடுத்துக் கழுவினான். ”தோசை ஊத்திக்கிட்டிருக்கேன்ல்ல.. அப்புறம் ஏன் கண்டதையும் சாப்பிடறே.” கேரட்டை பிடுங்கி வைத்தாள். ”ஆர்த்தி தானே. ஆந்திரா காரம் ஒத்துகலையாம். ஹாஸ்டலை கழட்டி விட்டுட்டு ஃப்ரெண்டு கூட பிஜியா போறேன்னு நிக்கிறா.” “ப்ச், நானும் பொம்பளையாப் பிறந்திருக்கலாம். ஏதாவது சுமாராப் படிச்சு, எதையாவது சமைக்கக் கத்துக்கிட்டு, தேடி வர்றவனைக் கல்யாணம் பண்ணிகிட்டு, குழந்தை குட்டி பெத்துக்கிட்டு.. ஒரு ரெடிமேட் வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு வயசானப்புறம் அப்படியே செத்துப் போயிடலாம். ஆம்பளைன்றதாலே எத்தனை கஷ்டம் அனுபவிக்க வேண்டியதாயிருக்கு. ஏன் வேலைக்குப் போகலை, ஏன் சம்பாதிக்கலை, ஏன் முடி வெட்டிக்கலை, ஏன் கருப்புக் கலர் சட்டை போட்டிருக்கே.. லட்சம் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கு..” “அவங்கவங்க அவஸ்தை அவங்கவங்களுக்கு.” தட்டு கழுவி தோசை வைத்தாள். ”ஊறுகாய் வைக்கவா.. பொடியா.” ”ரெண்டுமே வை. சேர்த்து சாப்பிடறேன்.” ”சூறைடா நீ.” தலையில் கொட்டினாள். திட்டு மேலேயே அவளைப் பார்க்கும்படி உட்கார்ந்து கொண்டான். “பாரு, வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பல வருசம் ஆச்சு. கூச்சப்படாதே, அச்சப்படாம ஏழெட்டு ஊத்து.” வேகவேகமாக விழுங்கினவனை கண்களில் ஈரம் பொங்கப் பார்த்தாள். “நிஜமா வீட்டுக்கே போறதில்லையா. சரி விடு, உனக்கும் ஒரு காலம் வரும்டா. பொறுமையா இரு.” ”எப்போ என்னை எரிச்ச பின்னாடியா..” “நான் சொல்றதைக் கேட்கறியா. முதல்ல ஒரு கல்யாணத்தைப் பண்ணு.. தன்னைப் போல வாழ்க்கை மாறும் பாரு.” “ஆமா, உனக்கும் கூடத் தான் ஊர் மெச்ச கல்யாணம் நடந்தது. நீ என்ன சுகத்தைக் கண்டே. நாலு வருசத்துல எல்லாம் முடிஞ்சு போச்சு.” தோசையை திருப்பிப் போட்டாள். “அடுத்த மாசம் அவரோட நினைவு நாள் வருது. வழக்கமா அனாதை ஆசிரமத்துக்கு பணம் அனுப்புவேன். இந்த தடவை பக்கத்துல இருக்கிற கவர்மென்ட் ஸ்கூலுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கித் தரலாமா இல்லை ஒரு ஆரோ வாட்டர் அமைச்சுத் தரலாமான்னு ஒரு யோசனை..” “பண்ணுக்கா. மச்சான் சொர்க்கத்துல இருந்து வாழ்த்துவாரு. வாழும் அன்னை தெரசான்னு பட்டம் கிடைக்கும்.” தட்டினை சிங்கில் போட்டு கழுவினான். ”இதெல்லாம் எதுக்குடா, நான் கழுவிக்க மாட்டேனா.” ”பரவாயில்லை, இருக்கிறதே ரெண்டு, மூணு நல்ல பழக்கம் தான்.” கழுவி ரேக்கில் வைத்தான். “பாத்ரூம் போயிட்டு வந்திர்றேன்..” நகர்ந்தான். ”திருட்டு தம்மா. நாத்தம் பண்ணாதேடா பாத்ரூமை. துணி துவைக்கனும் நான்.” பாத்ரூமில் நுழைந்த போது மஞ்சள் வாசனையும், டவ் சாம்பு வாசனையும் கலந்து அடித்தது. ரசம் இழந்த பாதி உயிர் கண்ணாடியில் தெரிந்த தனது முகத்தில் மீசையை முறுக்கிக் கொண்டான். பக்கெட்டில் தண்ணீர் திருப்பி சன்னமாக ஒழுக விட்டு விட்டு ஃபேண்ட்டில் கை விட்டு சிகரெட்டையும், தீப்பெட்டியையும் எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். க்ளோசெட்டின் மேல் வசதியாக உட்கார்ந்து கொண்டு தனக்கு வாய்த்த வாழ்வின் அலங்கோலம் குறித்து வழக்கம் போல கவலைப்பட்டான். ஹேங்கரில் காவேரியின் சிகப்பு நிற சேலையும், சில உள்ளாடைகளும் தொங்கிக் கொண்டிருந்தன. தொட்டுப் பார்த்தான். விரல்கள் லேசாக நடுங்கின. ஈறு வலிக்க வாய் கொப்புளித்து விட்டு வெளியே வந்து புதிதாகப் புன்னகைத்தான். காவேரி நாளிதழை பரப்பி வைத்து படித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மச்சானின் போட்டோ கண்ணில்பட்டது. கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தான். அவருடன் சேர்ந்து நைட்ஷோ ரஜினி படம் போனது ஞாபகத்தில் இருந்தது. கொஞ்சம் கோபம் அதிகம். மஞ்சள் கலர் பைத்தியம். அந்த நிறத்தில் மூன்று சட்டைகள் வைத்திருந்தார். யமஹா பைக்கை நாய் துரத்திவருகிற மாதிரி வேகமாக ஓட்டுவார். சில வருடங்களுக்கு முன்னால் விபத்தில் அவர் இறந்த விதம் இப்போது நினைத்தாலும் நடுங்க வைக்கும். மண்டை உடைந்து கால் நசுங்கி.. மற மனமே. காவேரியின் போன் ஒலித்தது. எடுக்கப் போனவனைத் தடுத்து தானே எழுந்து வந்தாள். பெயர் பார்த்து யோசனையுடன் அட்டெண்ட் செய்தாள். “சொல்லு இக்பால். ம்..? நோட்செல்லாம் எழுதிட்டியா. கவிதைப் போட்டிக்கா.? சரி, அதான் லிங்க் அனுப்பிச்சேனே அதுல போய் பார்க்கலையா.? சரி, இன்னைக்கு வேணாம், இல்லை முடியாதுப்பா. வீடெல்லாம் க்ளீன் பண்ணிட்டிருக்கேன். ப்ச், நானே சமாளிச்சுக்குவேன். ம். அடுத்த சண்டே பார்க்கலாம், போன் பண்ணிட்டு வா. ம், சரி, சரி..” போனை வைத்துவிட்டு அவனைப் பார்த்தாள். “போன் தொல்லை ஜாஸ்தி ஆயிடுச்சுடா. புதுப் புது நம்பர்ல இருந்து கூப்பிட்டு என்னன்னமோ பேசி இம்சை பண்றாங்க..” விட்ட இடத்திலிருந்து சாப்பிடப் போனாள். “நம்பர் தா. நான் பதில் பேசறேன். நான் ஒரு தடவை போன் பேசினேன்னா எமர்ஜென்சிக்கு கூட கூப்பிட மாட்டாங்க..” செல்ஃபில் அடுக்கியிருந்த தடித்தடியான புத்தகங்களை வேடிக்கை பார்த்தான். “இதெல்லாம் நிஜமாகவே நீ படிப்பியா. ஏதாவது ஒரு பக்கம் தேர்ந்தெடுத்து கேள்வி கேட்டா பதில் சொல்லுவே..?” திரும்பி அவளைப் பார்த்து சிரித்தான். “நேத்தைக்கு ரொம்பவும் ஒருமாதிரி இறுக்கம் உருவாகி தற்கொலை பண்ணிக்கலாமான்னா தோணுச்சு. தூக்குப் போட கயிறு இல்லாததால அந்த யோசனையை ரத்து பண்ணிட்டேன்..” கண்டு கொள்ளாமல் “பெரியம்மா, பெரியப்பால்லாம் எப்படி இருக்காங்க. சக்கு போன் பேசினாளா..” “யாருக்குத் தெரியும். சொன்னேனே. நான் அவங்களையெல்லாம் விவாகரத்து பண்ணி பல மாசம் ஆச்சுன்னு. வீட்டுக்கெல்லாம் போறதில்லை. எனக்கு யாரும் இல்லை, யாருக்கும் நான் இல்லை..” ”ஏன்டா நாயே இப்படிப் பேசறே. உனக்காக அவங்க எத்தனை தியாகம்ல்லாம் பண்ணி..” “ப்ச் வேற பேசுக்கா. நானே உறவுகளை வெறுத்து எங்கேயாவது தப்பிச்சுப் போகலாம்ன்னு இங்கே வந்தா நீயும்..” தலை கோதிக் கொண்டான். ஒட்டின கன்னங்கள், ஆழத்தில் இருந்த கண்கள், சாயம் போன சட்டை, கீழே பட்டன் இல்லாமல்.. “டேய் உறவுகளோட அருமைகளை, அது இழந்த என்கிட்டே கேளு சொல்றேன். எப்படியெல்லாம் பாதிக்கப்படறேன் தெரியுமா. நேத்து கூட..” மறித்தான். “அதெல்லாம் லெட்டர் போட்டுட்டு இன்னொரு சமயம் வந்து கேட்டுக்கிறேன்.. குளிக்கலாமான்னு தீவிர யோசனையில இருக்கேன். ரெண்டு நாளாச்சு.” “அடப் பாவி, நிஜமாகவே வீட்டுக்கு போறதில்லையாடா.? அழுக்கு பிண்டம். நீ மட்டும் சரியானபடி வேலைக்குப் போய் காலாகாலத்துல செட்டிலாகி கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு இருந்திருந்தா! பாரு தலைமுடி இப்பவே வெளுக்க ஆரம்பிச்சுடுச்சு. முப்பத்தி நாலு இருக்குமாடா..?” “ஆச்சு, நூத்திஎண்பத்தியெட்டு..” “உன்னையெல்லாம்..” புலம்பிக் கொண்டே உள்ளே போனாள். காலிங்பெல் ஓசை கேட்டது. தொடர்ச்சியாக “காவேரி..” “கதவைத் திறேன்டா. வேலையா இருக்கேன்ல்ல.” குண்டான பவர் கண்ணாடி போட்ட அந்த அம்மாள் அவனை விழுங்கினபடி பார்த்துக் கொண்டே ஊர்ந்தபடி உள்ளே வந்தாள். சமையல் அறையிலிருந்து காவேரியும் வெளியே வந்தாள். “வாங்க அவ்வா..” அந்த அவ்வா ரஞ்சித்தைப் பார்த்தபடியே இருந்தாள். “என் தம்பிங்க அவ்வா. ரஞ்சித், பெரியம்மா பையன்.” “ஓ, தம்பி என்ன பண்றாப்புல.?” ரஞ்சித் சிரிக்காமல் “ஏரோட்ராம்ல ப்ளைனுக்கெல்லாம் கொடியாட்டற வேலை..” அவ்வா புரியாமல் சில நொடி விழித்தாள். “அரசாங்க வேலை தானே.? அப்படீன்னா சரி. காவேரி சாயங்காலம் கூட வர்றியா.. ராகவேந்திரர் கோவிலுக்குப் போகலாம்ன்னு இருக்கேன்.” “ஆறு மணிக்கு மேலன்னா ஓக்கே. கொஞ்சம் பேப்பர் ஒர்க்கெல்லாம் இருக்கு! கரெக்சன் பார்க்கணும்.” “சரி அப்பவே போய்க்கலாம்.” பேச ஒன்றுமில்லாமல் எல்லோரும் மெளனம். “சாப்பிட்டாச்சா..?” “ஆச்சுங்க அவ்வா. இதயக்கனி கடையிலிருந்து மாவு பாக்கெட் வாங்கி வந்தேன், தோசை சுட்டேன். ஊத்தவா? இருங்க சாப்பிட்டுட்டுப் போவீங்களாம்..” ‘கிளம்பித் தொலைடி’ மனசுக்குள் கத்தினான் ரஞ்சித். தன் பட்டன் போனில் பாம்பு கேம் விளையாடிக் கொண்டிருந்தான். “இல்லை காவேரி நீ கெஸ்ட்டை கவனி.” தேவையில்லாமல் ஆபாசமாக சிரித்தாள். “வாசிங்மெசினு சுத்திட்டிருக்கு. நான் கிளம்பறேன்.” மீண்டும் ரஞ்சித்தைப் பார்த்தாள். அவன் கை கூப்ப வேகமாக நகர்ந்தாள். “பாதகத்தி! நம்மளை வேவு பார்க்க வந்திருக்கா..” “உளறாதேடா. அவங்க எத்தனை சப்போர்ட் தெரியுமா எனக்கு.” “இன்னும் ஒரே மாசத்துல ரெண்டு பேரும் ஒருத்தர் கூந்தலை இன்னொருத்தர் பிடிக்கப் போறீங்க. எனக்கென்ன. உன் சாப்பாட்டுக் கடை முடிஞ்சுதா. வந்து உட்காரேன்.” உள்ளே போய் ஒரு தட்டில் நேந்திரம்பழ சிப்ஸ் கொட்டி எடுத்து வந்தாள். “இந்தா எடுத்துக்கோ, ஏஒன்ல வாங்கினது டேஸ்ட்டா இருக்கும்.” ”வேண்டாம், சிப்சை தனியா சாப்பிட்டு பழக்கம் இல்லை.” அவளை நிதானமாகப் பார்த்தான். “ஒரு கடை போடலாமான்னு இருகேன்.” “சூப்பர்ரா.” கை தட்டினாள். ”சுயதொழிலா. அசத்து. என்ன கடை மளிகையா, ஃபேன்சியா.” ”பானிபூரி கடை. பஸ்ஸ்டாண்டு இறக்கத்துல பத்துக்கு பத்து சைஸ்ல ஒரு கடை பார்த்து வெச்சிருக்கேன். எட்டு பேரு உட்காரலாம்.” காவேரி முகம் சுளித்தாள். “ப்ச் ஏன்டா அவனுங்க தான் பிழைக்க வழி இல்லாம இங்கே வந்து இப்படியொரு கூத்து அடிக்கறாங்கன்னா நீயுமா. வேற எதுவும் இதை விட பெட்டரா கிடைக்கலையா உனக்கு..” “வேற என்ன பண்ணச் சொல்றே. நம்ம மக்கள் திங்கறதுக்கு மட்டும் தான் காசு செலவு பண்ணறானுக. மத்த எல்லாத்துக்கும் கணக்கு பார்க்கிறாங்க. நிறைய சர்வே எடுத்துப் பார்த்தாச்சு. இப்ப ஒண்ணு ஆரம்பிக்கிறேன், சக்சஸ் ஆச்சுன்னா ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலேயும் நம்ம கடை தான். உலகளாவிய செயின் ஸ்டோர் மாதிரி. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை..” “ஓஹோ.” “அவனுக ஆளுக ரெண்டு பேருக்கு வசிய மருந்து பூசி ஏமாத்தி வெச்சிருக்கேன். நீ மனசு வெச்சா கடை போட்டுடுவேன்.” “நானா. நான் என்ன பண்ணனும்..” விழித்தாள். “அட்வான்ஸ் இருபத்தி அஞ்சாயிரம் கேட்கிறான் கடைக்கு. ஒரு கை கொடேன். அப்படியே உன் கைராசியில மேலே வந்திடுவேன். பேரு கூட காவேரி பானி பூரிக்கடைன்னு உன் பேரு வைக்கலாம்ன்னு..” காவேரி கண்கள் விரிய அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள். “என்னடா அவ்வளவு பணத்தை ஈசியாக் கேட்க்கறே.? என்கிட்டே ஏதுடா. போன வாரம் தான் ஆர்த்திக்கு கொஞ்சம் அனுப்பி வெச்சேன். அடுத்த மாசம் அவ பொறந்த நாளு வருது, ஏதாவது வாங்கிக்கன்னு. ” நம்பாமல் பார்த்தான். “கடனாத் தா. உன் பேரெழுதி உண்டியல் ஒண்ணு வெச்சு டெய்லி அதுல பணம் போட்டு.. ஒரு, மூணு மாசத்துல திருப்பித் தந்திடுறேன்..” “என்னடா ஆயிரம் ரெண்டாயிரம்ன்னா பரவாயில்லை, ஏதோ அட்ஜஸ்ட் பண்ணித் தரலாம். இருபத்தி அஞ்சாயிரம், முழுசா எப்படி..? அடுத்த மாசம் செலவுக நிறைய இருக்கு. இன்ஸ்யூரன்ஸ் பாலிசி பணம் கட்டனும், வீட்டு வரி இருக்கு, காலேஜுல ரெண்டு பேரு கல்யாணத்துக்கு மொய் வெக்கனும். வெளியில இருந்து பார்த்தா தான் நான் ஒத்தை ஆளு, பணக்காரி, எனக்கு என்ன செலவுன்னு தோணும், ஆனா உண்மையில் என் வாழ்வு அப்படியில்லை..” அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ”ப்ச், உன்னைத் தான் மலை மாதிரி, கடல் மாதிரி, வானம் மாதிரி நம்பி வந்தேன்.” “என் சூழ்நிலையைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோ..” இருவரும் கொஞ்ச நேரம் எதுவும்பேசிக் கொள்ளவில்லை. அடுத்து யார் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்பதில் தயக்கம் இருந்தது. பேச ஒன்றுமே இல்லாத மாதிரி, எல்லாம் முடிந்து போன மாதிரி. காவேரி எழுந்து அறைக்குப் போனாள். அட்டாச்ட் பாத்ரூமில் முகம் கழுவினாள். ட்ரஸ்சிங் டேபிள் கண்ணாடி பார்த்து, தலையை அழுந்த சீவிக் கொண்டு, லேசாக பவுடர் தொட்டுக் கொண்டு வேறு அடர்சிகப்பு பொட்டு வைத்துக் கொண்டு, கறுப்பு நைட்டி மாட்டிக் கொண்டு.. ஹாலுக்கு வந்தாள். சோபாவில் அமர்ந்தாள். கீழே தரையில் படுத்தபடி தலைக்கு ஒன்றும், தொடைகளுக்கு நடுவில் ஒன்றுமாய் தலைகாணி வைத்துக்கொண்டு மனசு ஒட்டாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித்திடம் “டேய் வா, இப்படி வந்து குசன் சோபாவுல உட்காரு..” அவளைப் பார்த்தான். கண்கள் விரிந்தன. “என்ன, வாட்டர் வாஸ் பண்ணின வெளிநாட்டுக் காரு மாதிரி பளபளன்னு ஆயிட்டே..” லேசாக வாய் பிளந்தான். ”நாயே வேற உதாரணமே கிடைக்கலையா உனக்கு..” கை ஓங்கினாள். சோபாவினைத் தட்டி கண்களால் அழைத்தாள். ”பரவாயில்லை இங்கேயே வசதியாத் தான் இருக்கு. மார்பிள் தரை தானே..” “அடச் சீ வாடா குரங்கு. சும்மா கதை பேசிட்டு..” ‘குன்னூர் அருகே குடியிருப்புப் பகுதியில் திடீரென யானை புகுந்ததில்..’ ’இந்த மாமனோட மனசு மல்லிகைப்பூ போல..’ ‘என்னை மீறி நீ எப்படி நல்லா வாழ்ந்திடுவேன்னு..’ ‘கறை நல்லது..’ “ஏன்டா இப்படி ஓடிட்டே இருக்கே. ஒண்ணுல ஒழுங்கா இரேன்.” பதிலில்லை. காவேரி பாதிக் குரலில் “கோபிச்சிக்காதேடா. எங்கிட்டே அவ்வளவு பணம் இல்லை.” திரும்பி அவளைப் பார்த்தான் கண்ணிமைக்காமல். “லிப்ஸ்டிக் அதிகமாயிடுச்சு..” “சேச்சே. எல்லாம் இயற்கைடா.” “ஆமாமா, எல்லாம் இயற்கை தான்!” “அப்பாடா. சமாதானமாயிட்டியா. கோபம் போயிடுச்சு தானே.” மெல்ல எழுந்து வந்து சோபாவின் மறுமுனையில் அமர்ந்தான். “என்னவோ. கிடைக்கும்ன்னு உன்னை நம்பி பேராசையோட வந்தேன்.! தவிர உன் மேல கோபப்பட்டு நான் எங்கே போக.? நீ தானே எனக்கு தஞ்சம் தருவே. இதுதானே என் புகலிடம். அகதிகள் மறுவாழ்வு மையம்.” “மறுபடியும் லூசு மாதிரி உளற ஆரம்பிச்சிட்டியா. சரிடா நான் உனக்கு அக்காவா..” “பின்னே என்னைவிட ஒரு வாரம் மூத்தவளை எப்படிக் கூப்பிடறதாம். எத்தனை எத்தனை.. ம்.. நூத்தி அறுபத்தியெட்டு மணி நேரம் பெரியவ!” “ஆமா, ஆமா..” மயக்கமாக சிரித்தாள். நெருங்கி உட்கார்ந்தான். “உனக்கு ஞாபகமிருக்கா.? ஒரு சின்ன வயசு சம்பவம். அன்னைக்கு உன் வீட்ல யாரும் இல்லை. எல்லோரும் காதுகுத்துக்கோ, சாவு வீட்டுக்கோ போயிட்டாங்க. உனக்கு ஜுரம்ன்னு உன்னைக் கூட்டிக்கிட்டுப் போகலை. உனக்குத் துணையா என்னை விட்டுட்டுப் போயிருந்தாங்க. அப்போ குளிருல நீ நடுங்கிட்டு இருந்தப்போ..” அவளுக்கு காது நுனி, கன்னம் சிவந்து “டேய்.. அதை ஏன்டா இப்போ..” “நேத்து அந்த மாதிரி ஒரு கனவு. அதுல நீ.. ப்ச் வேணாம் விடு. உனக்குப் பிடிக்காது. நீ கெட்டவார்த்தையில திட்டுவே.” “குரங்கு. ஆரம்பிச்சுட்டு ஏன்டா பாதியில நிறுத்தறே..” தலையில் கொட்டினாள். சோபாவில் அமர்ந்திருந்தவன் சட்டென அவள் மடியில் படுத்தான். “ஏய்.. ஏய் என்னடா இது.. எந்திரி யாராவது வந்து பார்த்தா..” கொஞ்சமாகப் பதறினாள். அவன் இன்னும் வசதி செய்து படுத்தபடி “இங்கிருந்து உன் முகத்தைப் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா.. ரெண்டு மலைகளுக்கு நடுவுல சூரியன் உதிக்கிற மாதிரி..” அவன் உவமை புரிந்து “நாயே.. நாயே..” என்றபடி சட்டையின் முதல் பட்டனைத் திருகினாள். “அன்னைக்கு கொஞ்ச நேரத்திலேயே உன் காய்ச்சல் குணமாகிடுச்சு.. இல்லை..” தலையை அழுத்தினான். “சீ, எந்திரி முதல்ல. கூ..சு..துடா.” குரல் வரவில்லை. “அப்புறம் நிஜமாவே எந்திரிச்சுடுவேன் பார்த்துக்கோ.” புன்னகைத்தபடி அவன் தலைமுடிகளை ஆதரவாகக் கோதி விட்டாள். “உன்னோட தொப்புள்கிட்ட ப்ரவுன் கலர்ல ஒரு மச்சம் இருக்குமே. அது இன்னும் இருக்கா.. அழிஞ்சு போச்சா..” * * * “என்னடா இது.. வெறும் பத்தாயிரம் தான் இருக்குது. மீதி..?” “இப்போ அவ்வளவு தான் முடிஞ்சது. இதுவே என்னென்னவோ பண்ணி..” சிகரெட் புகையினை வானம் பார்த்து விட்டான் ரஞ்சித். “சரி, மீதிப் பணம்..?” அவன் பறந்தான். “தரலாம், தரலாம், தராம செத்துப் போயிட மாட்டேன்.” ”சரி அடுத்த மேட்ச் புதன்கிழமை வருது. உனக்கு ராசியான நாள். பணம் கட்டறியா. ஒண்ணுக்கு நாலு.” ”பார்ப்போம்..” சிகரெட்டை அணைத்து கீழே போட்டான். “நூறு ரூபாய் தந்துட்டு போ. செலவுக்கு ஒண்ணும் இல்லை. அப்படியே ஒரு பாக்கெட் சிகரெட் நான் உயிர் வாழ.” “ஹூம், இது வேறயா..” பழைய தாளைத் தேர்ந்தெடுத்துத் தந்துவிட்டு நகர்ந்தான் அவன். பால்கனி வந்து வெளியே தெரிந்த தெருவை வேடிக்கை பார்த்தான் ரஞ்சித். எத்தனை மனிதர்கள். எறும்பு மாதிரி. பூரான் மாதிரி. பாம்பு மாதிரி. அந்த ரெண்டு பேர் கவனம் ஈர்த்தார்கள். கண் தெரியாத ஒரு குருட்டுப் பிச்சைக்காரனை வழி நடத்திக் கொண்டு கடைகடையாக ஏறி இறங்கி அவனைக் காட்டி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான் துணையாளி. அந்தக் காட்சி மனதைத் தைக்க.. அதை, தான் பார்க்கவே இல்லை என்பது போல உடனே கண்களை மூடிக் கொண்டான் ரஞ்சித். . இப்படிக்கு, நித்யா, திருப்பூர்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.