logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

ABIMAANI

சிறுகதை வரிசை எண் # 59


கொதிப்பு “...........” “என்ன...? நாய்களப் பிடிச்சிட்டிங்களா? செத்தாங்க நாய்க” “...........” “எங்கவச்சிப் பிடிச்சிங்க?” “...........” “அப்பிடியா? வீட்டு வசதி வாரியம் பேருந்து நிறுத்தத்துல வச்சா?” “..............” “ரெண்டுபேரையும் எப்படிக் கொல்லப்போறிங்க?” “............” “கழுத்த அறுத்து வேண்டாம்...சீக்கிரத்துல உயிர்ப்போயிரும். கழுத்த நெரிச்சிக் கொல்லுங்க. அப்பத்தான் சிரமப்பட்டு உயிர்ப்போகும். என்னைய அவமானப்படுத்துனதுக்கு அவுங்க சிரமப்பட்டுத்தான் சாவணும்” “.............” “அங்க வச்சிக் கொன்னுரவேண்டாம். ரெண்டு பேரோடக் கையையும் காலையும் கட்டி வண்டிக்குள்ளப் போட்டுக்கிட்டு நம்ம ஏரியாவுக்குக் கொண்டு வந்திருங்க. ரெண்டுபேர் வாய்க்குள்ளையும் துணிய அமுக்கி... அவுங்கக்கிட்டயிருந்து முனகல் சத்தம்கூட வெளியக் கேட்டிரக்கூடாது. காலம்பற விடியதுக்கு முன்னமே வல்லநாடு மலைக்குக் கொண்டுவந்து கொன்னுப் பொதச்சிருங்க. ஜாக்கிரத...ஒரு தடயமும் தெரியக்கூடாது. நாளப்பின்ன கேஸாயிருச்சின்னா நமக்குச் சிக்கலாப் போயிரும்.” “.............” “இப்போ ரெண்டுபேரும் என்ன செய்றாங்க?” “..........” “மயக்கமாக் கெடக்கறாங்களா? கெடக்கட்டும் கெடக்கட்டும். கடேசிவரைக்கும் மயங்கியே கெடக்கட்டும். சாவதுக்கு முன்ன ஒத்திகப் பாக்காங்கபோல” “............” “இந்திரன்...காரியம் முடிஞ்சதும் எனக்குப் போன் பண்ணு. ஒம் போனுக்காவே நாக் காத்துக்கிட்டிருப்பேன். அவுங்க ரெண்டுபேரும் செத்தாங்கங்கிற நல்லச் செய்திய எங் காதால நாக் கேக்கணும்.” “...............” வேதமாணிக்கம் தன் அலைபேசியில் சிவப்புப் பொத்தானை அழுத்தி நிறுத்திவிட்டு, அதை வேண்டா வெறுப்பாகத் தன் மேசையின்மீது போட்டார். ஒரு சாகசத்தைச் செய்து முடித்துவிட்ட பெருமிதம் அவர் கண்களில் பிரகாசமாக ஒளிர்ந்தது. தன் சாதிப் பெருமையையும் சமுதாயக் கவுரவத்தையும் வேரோடு பிடுங்கி எறிய முற்பட்டிருந்த இரண்டு எதிரிகளை அழித்தொழிக்க உத்தரவிட்டிருந்ததும், அது விரைவிலே நிறைவேற்றப்படவிருந்ததும் அவருக்குப் பெருமிதம் தரும் காரியங்களாகத் தோன்றின. எதிரிகள் யாராக இருந்தால் என்ன? அவரின் உப்பளங்களில் வேனாவெயிலில் நின்று பாடுபட்டுக் கூலிவாங்கித் தன் குடும்பத்தின் பசியைப் போக்கும் அய்யாசாமியின் அருமந்தப் புத்திரன் சத்தியனாக இருந்தால் என்ன? அல்லது வேதமாணிக்கத்தின் மார்பிலே தவழ்ந்து தலையிலே கொலுவேறி வளர்ந்த அவரின் செல்லமகள் தேவகியாக இருந்தால்தான் என்ன? காதலாம், காதல். கத்தரிக்காய். அதற்குத் தராதரம் வேண்டாமா என்ன? கவுரவத்தின் உச்சாணிக் கொம்பில் சிம்மாசனம்போட்டு உட்கார்ந்திருந்த வேதமணிக்கம் எங்கே? அவரின் ஆதிக்கச்சாதிப் பெருமை எங்கே? அவரின் மாளிகை வீடும், கப்பல்கள் கெணக்காக் கார்களும், மூட்டைமூட்டையாய் பணச்சேகரிப்பும் எங்கே? கைவிரல்களின் எண்ணிக்கைக்கு அடங்காத அவரின் உப்பளங்களும், அவற்றில் கணிசமான எண்ணிக்கையில் வேலைச் செய்யும் தொழிலாளர்களின் ‘முதலாளி’ மரியாதையும் எங்கே? அவரிடம் கூலி வாங்கி அன்றாடம் காய்ச்சிக் குடிக்கும் கீழ்சாதிக்காரன் அய்யாசாமியின் தரித்திர நிலைமை எங்கே? மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அந்த வித்தியாசங்களை எல்லாம் ஒரேபொழுதில் அடித்து நொறுக்கிவிட்டுப் பஞ்சாய் பறந்து போயிருந்தார்களே தேவகியும், சத்தியனும். அவர்களை உயிரோடு விட்டுவைத்தால் அவரின் சாதிப்பெருமையும் கவுரமும் அல்லவா தரம்குறைந்து போய்விடும். அவரால் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்கமுடியுமா என்ன? அன்று இரவுதான் வேதமாணிக்கத்துக்கு நிம்மதியாகத் தூக்கம் வந்தது... இழந்திருந்த மானத்தையும் கவுரவத்தையும் மீட்டெடுத்துக்கொண்ட நிம்மதி. எதிரிகள் இருவரும் சாகடிக்கப்பட்ட செய்தி யாருக்கும் தெரியப்போவதில்லை. தெரிந்தாலும் அவருக்குப் பாதகமில்லை. அவர் தன் சாதிக் கவுரவத்தைக் காப்பாற்றிக்கொண்ட செய்தி ஊரெல்லாம் – ஏன் நாடெல்லாம்கூட – தெரியவரும். அவருக்கும் அப்படித் தெரிவதில்தான் சந்தோசம் இருந்தது. போலீஸ் விசாரணை என்று வந்தால் பார்த்துக்கொள்ளலாம். அவரிடம் பணம் இருக்கிறது. பணத்தை மிஞ்சியா அவருக்குத் தண்டனைக் கிடைத்துவிடும்? இரவு ‘ஜானிவாக்கரை’ வழக்கத்திற்கு மாறாக இரண்டு ‘பெக்’குகள் அதிகமாகக் குடித்து மயக்கத்தில் ஆழ்ந்தார்... சந்தோச மயக்கத்தில். ௦ ஒரு வாரமாகிறது, சத்தியனும் தேவகியும் ஊரைவிட்டு ஓடிப்போய். பத்து நாட்களுக்குமுன் பிரையண்ட நகரிலிருந்து தேவகிக்கு ஒரு வரன் வந்திருந்ததுதான் வினையாயிற்று. மாப்பிள்ளை வீட்டார் பையனோடு வந்து பேசி முடித்து சம்மதித்து, அடுத்த வாரம் நிச்சயதார்த்தத்தை வைத்துக்கொள்ளலாம் என்று உறுதியளித்துவிட்டுப் போயிருந்தார்கள். தூத்துக்குடி அனல்மின்சார நிலையத்தில் மாப்பிள்ளை பொறியாளராகப் பணிசெய்துகொண்டிருந்தார்...எந்திரவியல் பொறியாளராக. அவர் அப்பா ‘ஷிப்பிங் கிளியரன்ஸ் ஏஜென்சி’யாக தூத்துக்குடி துறைமுகத்தில் கொடிகட்டிப் பறந்தார். வேதமாணிக்கத்துக்கு நெஞ்சு நிறைந்த சந்தோசம்... தன் கவுரத்தை இரட்டிப்பாக்கும் இடத்திலிருந்து சம்பந்தம் வந்திருந்ததை நினைத்தச் சந்தோசம். பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல, கூடி வரவிருந்த அந்த சந்தோசத்தை நிலைக்கவிடாமல் அல்லவா தேவகி திடுதிப்பென்று ஒரு கீழ்ச்சாதிப் பையனுடன் ஓடிப்போய்விட்டாள். இப்போது மாப்பிள்ளை வீட்டார்முன்னும், தன் தெருக்காரர்களுக்கு முன்னும் அவர் தலைதூக்கி நடக்கமுடியாத அவலத்தில் தவிதாயப்பட்டார். அவர் உண்டு, அவர் அலுவலகம் உண்டு என்ற எல்லைக்குள் அவரை முடங்கவைத்துவிட்டுப் போய்விட்டாளே, பாதகி. போனவாரம் மதியத்தில் முத்தையாபுரம் பேருந்து நிறுத்தத்தில்வைத்து சத்தியனையும் தேவகியையும் நெருக்கமாகப் பார்த்திருந்ததை முப்புடாதி மாமா வந்து சற்று சந்தேகத்துடன் சொன்னபோது, வேதமாணிக்கம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. படிப்பின் நிமித்தம் தன் கல்லூரிக்குப் போகவேண்டியதிருப்பதாக தேவகி அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு வந்திருந்தாள். அதுபோலத்தான் சத்தியன்பயலும் படிப்பின் நிமித்தம் கல்லூரிக்குப் போவதற்குப் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றுகொண்டிருக்கலாம் என்று அப்போது இயல்பாக நினைத்திருந்தார். கல்லூரிக்கு ஒரே பேருந்தில் பயணம் செல்கிறவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நெருக்கமாக நிற்பதில் ஆச்சரியப்பட என்னவிருக்கிறது என்றும் அசட்டையாக எண்ணத் தோன்றியது அவருக்கு. அன்றிரவு ஏழுமணியாகியும் தேவகி வீட்டுக்கு வந்திருக்கவில்லை என்பது அவருக்குத் தெரியவந்ததும்தான், முப்புடாதி மாமா சொல்லியிருந்தது சமயோசிதமாக நியாபகத்துக்கு வந்து அவரைக் கலங்கடித்தது. “இந்திரன்...?” தலைபோகிற அவசரத்தில் சத்தம்போட்டு இந்திரனை அழைத்தார் வேதமாணிக்கம். அவன் எப்போதும் அவர் அலுவலகத்திற்குமுன்தான் இருக்கைப்போட்டு அமர்ந்திருந்தான். அவருக்குப பாதுகாவலன் மாதிரியும், ஏவலாளி மாதிரியும் இரட்டை வேலைப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அவருக்கு நெருங்கிய சொந்தத்தில் அவன் மைத்துனன் முறையாக வாய்த்திருந்தது அவரின் நம்பிக்கைக்குச் சாதகமாக இருந்தது. அந்த நம்பிக்கையே அவர் எங்கே போனாலும் அவர்கூடவே பாதுகாவலனாய் போவதற்குரிய வாய்ப்பையும் தைரியத்தையும் தந்திருந்தது அவனுக்கு. வேதமாணிக்கம் உத்தரவிடுகிறபோதெல்லாம் உப்பளங்களில் நடக்கும் வேலைகளையும், ஆட்களையும் கண்காணித்துவிட்டு வந்தான். அவன் செய்திருந்த வேலைகளுக்கான கூலியை வாரத்திற்கு ஒருமுறை மொத்தமாக வாங்கிக்கொண்டான் அவரிடமிருந்து. மனைவியும் இரண்டு சிறுவர்களுமாயிருந்த அவன் குடும்பம் அந்த வருமானத்தில்தான் ஜீவித்துக்கொண்டிருந்தது. “அத்தான்...?” அவன் தடபுடலென்று எழுந்து ஓடிவந்து அவர்முன் பதறிக்கொண்டு நின்றான். ஊரின் ஓரத்திலிருந்த அய்யாசாமியின் தெருவுக்குச் சென்று அவர்மகன் சத்தியனைப் பார்த்துவர ஏவினார் அவர். ஓட்டமும் நடையுமாய் விரைந்துபோனான். சற்றைக்கெல்லாம் அய்யாசாமியைக் கண்ணீரும் கம்பலையுமாய் அழவைத்துக்கொண்டு கூட்டிவந்து வேதமாணிக்கத்தின்முன் நிறுத்தினான். அடித்து உதைக்கப்பட்டு கந்தலும் கிழிசலுமாய் தன் முன்னே கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்த அய்யாசாமியை அவர் ஆங்காரத்துடன் நிமிர்ந்து பார்த்தார். தன் முதலாளியைக் கண்டதும் அய்யாசாமி ஆற்றாமையில் வெடித்துக் கதறிவிட்டார். “அய்யா...மொதலாளி...எம்பையன் இப்பிடிச் செய்வான்னு நா செத்தங்கூட நெனச்சிப் பாக்கலைய்யா. குடிக்கிறக் காஞ்சியில மண்ணள்ளிப் போட்டுட்டானேய்யா, படுபாவிப் பய. எனக்கு இதப் பத்தி ஒண்ணும் தெரியாது மொதலாளி. தெரிஞ்சிருந்தா அவன அப்பிடி உட்டுருப்பேனாய்யா? நா ஒரு பாவமும் அறியாதவன்ய்யா. என்னைய வுட்டுருங்கய்யா. நல்லா இருப்பிய” அய்யாசாமி சத்தம்போட்டு அழுதார். நாற்காலியிலிருந்து வீறாப்பாய் எழுந்துவந்து அய்யாசாமியின் எதிரில் - மிக அருகில் - நின்று தகிதகித்தார் வேதமாணிக்கம்... “ஒஞ் சாதி என்ன? எஞ் சாதி என்னல? எனக்குச் சம்மந்தியால நீ? சாக்கடையும் சந்தனமும் ஒன்னால?” “அய்யா...நா அப்பிடி நெனைக்கலைய்யா” “ஓம் மவன் நெனச்சிருக்கான். அவனக் கொல்லப் போறேன்ல. இனி அவன் ஒனக்கு மகன் கெடையாது. என்னையப் பத்தித் தெரிஞ்சும் எங்கிட்ட வெளையாடிட்டான் பாத்தியா?...என் அடிமடியிலேயே கைவச்சிட்டானே. சும்மா விடுவேனா அவன? அவனக் கொல்லாம விடமாட்டேன். இப்போ அவன் எங்கல இருக்கான்? அதச் சொல்லுல மொதல்ல.” “அய்யா...அது எனக்குத் தெரியாது சாமி. எங்கிட்ட ஒண்ணும் சொல்லிக்கிரலய்யா அவன். எங்களுக்கே இப்போதான் தெரியும். என்னைய நம்புங்க மொதலாளி.” ‘எங்களுக்கு’ என்று அய்யாசாமி பன்மையில் சொன்னது அவருக்கும் அவர் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் என்று புரிந்துகொண்டார் வேதமாணிக்கம். அய்யாசாமிக்குப் பின்னால் நின்று முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்த இந்திரன் இப்போது விசனத்துடன் முன்வந்து நின்று அவரை அதட்டினான்... “எல...எங்கள என்ன கேணப்பயகன்னு நெனச்சியால, தேவடியா மொவன? ஒம் மொவங்காரன் இருக்கற எடம் ஒனக்குத் தெரியாதுன்னு பச்சையாப் பொய் சொல்ற? ம்...? மரியாதையா உள்ளதச் சொல்லிரு. இல்லன்னா இன்னும் எங்கிட்ட அடிவாங்கிச் செத்திராத” வீச்சரிவாள் போன்ற தன் வலதுகையை அய்யாசாமிக்கு முன்னே நெட்டுக்கு உயர்த்தித் தூக்கி அந்தரத்தில் நிறுத்திக்கொண்டு எச்சரித்தான் இந்திரன். முப்பத்தைந்து வயசுக்கு உரித்தான முறுக்கானத் தேகம் அவனுக்கு. அந்த முறுக்கானத் தேகத்தின் பலத்தையெல்லாம் கூட்டித்தான் - அய்யாசாமியைப் பார்த்து அவரின் குடும்பத்தார் அழுது கதற - அவரின் வீட்டிலிருந்து அடித்து உதைத்து இழுத்துக்கொண்டு வந்து அவரை வேதமாணிக்கத்தின்முன் நிறுத்தியிருந்தான். அந்தரத்தில் நின்றிருந்த இந்திரனின் வீச்சரிவாள் கையைப் பார்த்து அய்யாசாமி வணங்கிக்கொண்டே அதறபதறச் சொன்னார்: “இனியும் என்னைய அடிச்சிராதிங்கய்யா...நா தாங்கிக்க மாட்டேன்... செத்திருவேன்ய்யா”. வெட்ட நிறுத்திய ஆட்டைப்போல நடுங்கினார். ஆட்டின் கண்களிலிருந்து ‘குபுகுபு’வென்று பொங்கிய நீர், வேர்த்துப் பிசுபிசுத்த கன்னங்கள் வழியே அருவியாய் வடிந்துகொண்டிருந்தது. “ஒஞ் சொந்தக்காரங்கல்லாம் எங்கெல்லாம் இருக்காங்க? அதச் சொல்லுல” வேதமாணிக்கம் விடைப்பாக நின்று கத்தினார். அவரின் ஆக்ரோசமான குரல்கேட்டு அய்யாசாமி மேலும் அதிர்ந்துபோய் நடுங்கினார். இந்திரன் அய்யாசாமியைப் பார்த்து உயர்த்தியிருந்த தன் வீச்சரிவாள் கைக்கு இப்போது வேலையில்லை என்று நினைத்தோ என்னவோ, தயக்கத்துடன் அதைக் கீழே இறக்கிக்கொண்டான். “பாளையங்கோட்ட சமாதானப்புரத்துல கொஞ்சம்பேரு இருக்காங்கய்யா” “நாய்ங்க ரெண்டும் அங்கப் போயிருக்காது. பக்கத்துல இருக்கதுனால சுளுவாக் கண்டுபிடிச்சிருவாங்கன்னு நாய்களுக்குத் தெரியாமயா இருக்கும்? ரெண்டும் படிச்ச நாய்கதான? வேற, தூராத் தொலவெட்டுல... மதுர, திருச்சி, மெட்ராசுன்னு அந்தப் பக்கமெல்லாம் ஒஞ்சொந்தகாரங்க யாராச்சும் இருக்காங்களால?” “மெட்ராஸ்ல ஆவடிப் பக்கம் எந் தங்கச்சிக் குடும்பம் இருக்குய்யா” “இதுக்கு முன்னால ஒம் மகங்காரன் அங்கப் போயிருக்கானால?” “தெரியாதுய்யா” “என்னலத் ‘தெரியாதுய்யா’? ஆவடியில எந்த ஏரியா? அதாவது தெரியுமால?” இந்திரன் தன் விழிகளை உருட்டிக்கொண்டு அதட்டினான். “குடிச வாரியக் குடியிருப்புங்க” “எத்தனாவது தெரு?” “தெரியலங்க. நா ரொம்ப வருசத்துக்கு முன்ன ஒரே ஒரு தடக்கத்தான் போயிருக்கேன் சாமி. அதனால எல்லாம் மறந்திருச்சி” “பொய் சொல்ற...?” “இல்ல சாமி...எங் கண்ணான உண்மையத்தான் சொல்லுதேன்” “இந்திரன்...அவன வுடு. அவங்கிட்ட ஒரு சுக்கும் பரியாது... வெத்துவேட்டு. நீ இப்ப ஒடனே நம்ம டாட்டா சுமோவ எடுத்துக்கிட்டுப் பொறப்படு. ஒனக்குத் தோதா மூணுபேரக் கூட்டிக்க. ஆவடியில அவன் சொன்ன எடத்துலப் போயித் தேடிப் பாருங்க. கெடச்சாலும் கெடைக்கலாம். அங்கேயும் கெடைக்கலைன்னா அப்பொறமாப் பாத்துக்கலாம்.” வேதமாணிக்கம் தீர்மானமாய் முடிவெடுத்து உத்தரவிட்டார் இந்திரனிடம். “சரி அத்தான்.” ஒருவாரம் கழித்த அந்திக் கருக்கலில் ஆவடியில்வைத்து சத்தியனையும் தேவகியையும் இந்திரன் குழுவினர் மடக்கிப் பிடித்துவிட்டச் செய்தி வேதமாணிக்கத்தின் செவிப்பறைகளில் வந்து விழுந்ததும், அவர் உணர்ச்சி வசப்பட்டுத் துள்ளிக் குதித்தார். அந்தச் செய்தியை விழவைத்திருந்தது மைத்துனன் இந்திரன்தான். ௦ சுற்றிலும் நூலிழையாய்ப் பரவி நின்றிருந்த இருட்டு, இன்னும் முழுதும் விடிந்திருக்கவில்லை என்பதைக் கமுக்கமாக அறிவித்துக்கொண்டிருந்த அதிகாலையில், வேதமாணிக்கத்தின் அலுவலகத்திற்குமுன்னே மவுனமாக டாட்டா சுமோ வந்து நின்றதும் அனிச்சையாய் விழிப்புத் தட்டி விசுக்கென்று எழுந்து வெளியே வந்தார் அவர். இரவில் குடித்திருந்த ‘ஜானிவாக்கரி’ன் கிறக்கம் முழுதும் குறையாதிருந்ததால் அவரின் தொந்தி சரிந்த தேகம் தளர்நடையில் வந்து நின்றது. இரவு தன் வீட்டுக்குச் சென்றிருக்கவில்லை அவர். டாட்டாசுமோவை எதிர்ப்பார்த்தே அலுவலகத்தில் முடங்கிக்கிடந்திருந்தார், இருவரும் இறந்துவிட்டார்கள் என்ற வெற்றிச் செய்தியை நேரடியாகக் கேட்கும் ஆர்வத்தில். ஓட்டுநர் இருக்கையிலிருந்த இந்திரன்தான் முதலில் இறங்கி வந்தான். ஒரு வீரதீரச் செயலை வெற்றிகரமாகச் செய்து முடித்திருந்த மகிழ்ச்சித் தெரிந்தது, முறுக்கிய மீசையோடு நின்றிருந்த அவன் தடித்த முகத்தில். அவனைப்போலவே தாட்டியமாயிருந்த தினேஷ், சரண்ராஜ், கோவிந்தன் என்கிறப் பெயர்கள் தாங்கிய மூன்றுபேர் – வேதமாணிக்கத்துக்குப் பரிச்சயமானவர்கள்தான் - நிதானமாக இறங்கிவந்து அவனுக்குப் பின்னேயும் பக்கவாட்டிலும் நின்றார்கள். எல்லோருடைய முகங்களும் தடித்து வீங்கிப்போயிருந்தது தெரிந்தது. இரவு முழுவதும் விழித்திருந்து சத்தியனையும் தேவகியையும் அக்கறையாய் கண்காணித்துக்கொண்டு வந்ததில் அவர்கள் தூக்கம் பறிபோயிருக்கவேண்டும். “எல்லாம் கச்சிதமா முடிஞ்சில்ல? ரெண்டு நாய்களும் செத்திருச்சில்லா? யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையே?” தான் என்னவோ இப்போது வல்லநாட்டு மலை ஒதுக்கத்தில் நிற்பதாக நினைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் எச்சரிக்கையுடன் பார்த்துவிட்டு இந்திரனிடம் கமுக்கமாகக் கேட்டார் வேதமாணிக்கம். “கச்சிதமா முடிஞ்சிருச்சி அத்தான். மல ஒதுக்கத்துல யாரு வருவாங்க? அதுவும் காலம்பற ரெண்டு மணிக்கு? நீங்கப் பயப்பட ஒண்ணுமில்ல... காரியத்தக் கச்சிதமா முடிச்சிட்டோம்... ஒரு செரமும் படல.” “பொதச்சத் தடம் வெளியத் தெரிய வாய்ப்பில்லையே?” “வாய்ப்பில்ல அத்தான். ரெண்டுபேரையும் ஒரே குழிக்குள்ளப் போட்டுப் பொதச்சி, குழிக்குமேல எல தளைகளப் பரத்தி வச்சி, யாருக்கும் சந்தேகமே வராத மாதிரிப் ப ண்ணிட்டோம்.” இந்திரனுக்குப் பக்கவாட்டில் நின்றிருந்தவர்கள் அவன் சொன்ன வார்த்தைகளுக்கெல்லாம் இசைவாய், “ஆமாய்யா ஆமாய்யா” என்று அடிக்கடிச் சொல்லி அவரைப் பார்த்து தலையாட்டிக்கொண்டிருந்தார்கள். “திமிருப் பிடிச்சக் கழுத தேவகி... ரொம்ப மல்லுக் கட்டியிருப்பாளே?” “மல்லுக்கட்டத்தான் செய்தா. அவளால ஒண்ணும் செய்யமுடியல. மொதல்ல அவன எறக்கிட்டு வந்து, நீங்கச் சொன்ன மாதிரி அவன் கழுத்த நெரிச்சிக் கொன்னு அவன் ஜோலிய முடிச்சப் பொறவுதான், அவள எறக்கிட்டு வந்து கொன்னு, ரெண்டுபேரையும் ஒரே குழியிலப் போட்டு பொதச்சோம். ஒரு பிரச்சனையும் இல்ல” “சாவட்டும் நாயிங்க” வாய் திறந்து சபித்துவிட்டுச் சிறிது நேரம் யோசனையுடன் நின்றிருந்தார் வேதமாணிக்கம். குட்டைப் பாவாடை, தாவணி, சுடிதார், சேலை என்று வயதுக்குத் தக்கவாறு உடையணிந்து அவர் கண்முன்னே பகட்டாக வலம் வந்த தேவகியின் வித்தியாசமான தோற்றங்கள் இப்போது அவரின் நினைவுத் திரையில் வண்ணப் படங்களாக வரிசைக்கட்டி ஓடின. எப்படியெல்லாம் சீராட்டிப் பாராட்டி வளர்த்திருந்தார் அவளை! அந்தப் பாசம்கூட இல்லாமல் அவரை அவமானப்படுத்திவிட்டு ஒரு கீழ்சாதிக்காரனோடு அடாதுடியாய் ஓடியிருந்தாளே அவள். அவள் சாவட்டும். அவள் உயிர் வாழ்ந்துதான் யாருக்கு மரியாதைத் தரப்போகிறாள்? தன் யோசனையிலிருந்து தன்னை வல்லாதல்லையாய் விடுவித்துக்கொண்டு அவர்களைக் கரிசனத்துடன் ஏறிட்டுப் பார்த்தார். “சரிப்பா...எல்லாரும் வீட்டுக்குப் போயிக் கொஞ்ச நேரமாவது தூங்குங்க. காலையில வாங்க... ஒங்கக் கணக்க ‘செட்டில்’ பண்ணிருதேன்” அவருக்காக அவர்கள் செய்து முடிக்கும் ‘காரியத்’துக்கு அவர் பணம் தருவது வழக்கம். பணத்துக்காகத்தானே அவர்கள் அந்தக் காரியங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்திரன் இணக்கமான குரலில், “சரி அத்தான்...உங்கப் பணம் எங்க ஓடிரும்? காலையில வந்து வாங்கிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு, நிதானமாய் நடைபோட்டு வெளியே போனான் - தெருவின் கடைக்கோடியிலிருந்த தன் வீட்டுக்கு. மற்ற மூவரையும்போல அவனும் வீட்டைவிட்டு வெளியே வந்து ஒருவார காலம் ஆகியிருந்தது. பொண்டாட்டிப் பிள்ளைகள் எப்படியிருக்கிறார்களோ என்ற கவலையே அவனை முதலில் வீட்டுக்கு நடைபோடவைத்திருந்தது. மற்ற மூன்றுபேரும் தனிக்கட்டைகள். நான்குப் பேருமே ஒரே தெருவாசிகள்...அவரின் தெருக்காரர்கள். “சரிய்யா, நானும் வரேன்”. தினேஷும் அமைதியாகச் சொல்லிவிட்டு – அவர் “சரிப்பா...” என்று அனுமதித் தந்ததும் – அங்கிருந்து வெளியேறத் தொடங்கினான். அவனைத் தொடர்ந்து கோவிந்தனும் அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு தினேஷுடன் சேர்ந்துகொண்டான். சரண்ராஜ் மட்டும் வெளியேறாமல் அந்த இடத்திலே சிலையாய் நின்றிருந்தது தெரிந்ததும் அவர் சன்னமாய் அதிர்ந்துபோய் அவனிடம் வந்து நின்று யோசனையுடன் கேட்டார்: “என்ன சரண்ராஜ்...நீ மட்டும் போகாம நிக்க? இப்பவே ஒனக்குப் பணம் வேணுமா? ஏதாவது அவசரமா?” “இல்லய்யா. ஒங்க மச்சினன் இந்திரனப் பத்தி ஒங்கக்கிட்டக் கொஞ்சம் சொல்லணும்” வேதமாணிக்கத்துக்குக் ‘கெதக்’ என்றது. நாபிச் சுழியிலிருந்து மேலெழுந்த கலக்கம் அவரின் தொண்டையில் வந்து திணறிக்கொண்டு நின்றது. இந்திரனைப் பற்றி என்ன சொல்லப்போகிறான் இவன்? அதுவும் தனக்கு வலதுகையாய் இருக்கும் மைத்துனனைப் பற்றி. “என்னப்பா? சொல்லு” “ஒங்க மகா தேவகிய அவருக் கெடுத்துப்புட்டுத்தான் கொன்னாருங்க” “என்னப்பா சொல்ற?” சத்தம்போட்டுக் கேட்டுவிட்டார் அவர். விழிகள் புருவங்களுக்கு உயர்ந்தன அவருக்கு. தேகம் படபடத்தது. அரைகுறையாகயிருந்தப் போதைத் தெளிந்து, இப்போது முழுத்தெளிவை அடைந்திருந்தார். “ஆமாய்யா. நாங்க மூணுபேரும் சத்தியன வண்டியவுட்டு எறக்கிச் சாவடிச்சிப் போட்டுட்டு, காருக்குள்ள மயங்கிக்கெடந்த ஒங்க மகளத் தூக்கப் போனோமுங்க. அப்போ இந்திரன் ஒங்க மகாமேலப் படுத்துக்கிட்டிருந்ததப் பாத்தம். ஒங்க மகா உருண்டு பொரண்டு போராடிப் பாத்தாங்க. அவுங்களால முடியல. ‘என்னண்ணே... இது தப்புல்லா? ரெண்டுபேரையும் கொலப்பண்ணிப் பொதைக்கத்தான ஒங்க அத்தான் சொல்லிவிட்டிருக்காங்க...அதுக்கு ஏறுக்குமாறா நீங்க இப்பிடிப் பண்றது தப்பில்லையா?’ன்னு நாங்க மூணுபேரும் அவரச் சத்தம்போட்டம்ய்யா. அதுக்கு அவரு, ‘அவளச் சாவடிக்கத்தானப் போறோம்... அதுக்கு முன்னாடி அவாக்கூட ஒரு தடவ சந்தோசமாயிருந்தா என்ன கொறஞ்சிருமி’ன்னு கேட்டாருங்க. எங்களால அவர ஒண்ணும் பண்ண முடியலய்யா” சொல்லிவிட்டு ஆற்றாமையில் மூச்சிரைத்தான் சரண்ராஜ். ஆஸ்துமா வியாதிக்காரன். வேதமாணிக்கத்தின் இதயத்தை வாளால் அறுப்பதுபோல வலித்தது... உயிர்ப்போகிற வலி. நாளங்களில் அனல்குழம்பாய் இரத்தம் கொதித்துக்கொண்டு ஓடியது. எதற்கு அந்தக் கொதிப்பு என்று அவருக்குப் புரியவில்லை. ஆனால் கொதித்தது நிஜம். தன் ஈரக்குலைப் பதறிக்கொண்டிருந்ததும் உறுதியாகப் புரிந்தது அவருக்கு. “அந்த எச்சிக்கல நாயி அப்பிடியா செஞ்சான்? அயோக்கியப் பய. அவன...?” கோபத்துடன் பற்களைக் கடித்துக்கொண்டு சிறிதுநேரம் இறுக்கமாக நின்றிருந்தார். சிறிது நேரம்தான். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவராய் விருட்டென்று புலிப் பாய்ச்சலில் அறைக்குள் ஓடிப்போனார். ‘சடக்’கென்று ஓசையெழ பீரோவைத் திறந்து, நூறு ரூபாயில் நூறு எண்ணிக்கைக்கொண்ட இரண்டு பணத்தாள் கட்டுக்களை அவசரம் அவசரமாய் எடுத்துக்கொண்டு, அதே வேகத்தில் வெளியே வந்து அவன்முன் நின்றது புலி. “இதுல ரெண்டு லச்சம் பணமிருக்கு... போதலைன்னா கேளு, தாரேன். ஒரு வாரத்துல நீ இந்திரனப் ‘போட்டுரணும். முடியுமா ஒனக்கு? உன்னாலத் தனியா நின்னுச் செய்ய முடியலன்னா கூட ஒருத்தன சேத்துக்கா.” அவனைப் பார்த்துப் பணக்கட்டுகளை நீட்டிக்கொண்டு புலி மூர்க்கத்துடன் உறுமியது. அவனும் சிறிது நேரம் இறுக்கமாக நின்றான். சிறிது நேரம்தான். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவர் கையிலிருந்த பணக்கட்டுகளை வாங்கிக்கொண்டு திடமாகச் சொன்னான், “சரிய்யா...இவ்வளவுப் பணம் போதும்...சீக்கிரமா அவனப் போட்டுருதேன்... தனியாவே நின்னுச் செய்யமுடியும் எனக்கு ” என்று. ௦

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.