முரட்டுக்குழந்தை
“பளார்” என்று வஸந்த் அந்த மனிதரின் கன்னத்தில் அறைந்த சப்தம் அவர்கள் நின்றிருந்த மழலையர் பள்ளி முழுவதும் கேட்டது. அங்கிருந்த அனைவரும் அவ்விருவரையும் திடுக்கிட்டு பார்த்தனர். அந்த மனிதர் கன்னத்தில் கையை வைத்தபடி தலைகுனிந்து நின்றிருந்தார். அருகில் அவருடைய முரட்டுக்குழந்தை ஒன்றும் புரியாமல் அடிவாங்கிய தனது தந்தையையே பார்த்து கொண்டு இருந்தது. அந்த பையனுக்கு இரண்டரை வயது இருக்கும். சிவப்பும் நீலமும் கலந்த கோடிட்ட டீசர்ட்டும், கருப்பு நிற டிராயரும் அணிந்திருந்தான். சற்று பருத்த உடல், கோலிக்குண்டு கண்கள் என கைசூப்பியபடி இருந்த அந்த முரட்டுக்குழந்தையை பார்க்கும் போது வஸந்திற்கு கோபம் தலைக்கேறியது.
அதே கோபத்தோடு அந்த மனிதரை நோக்கி கத்த துவங்கினான். “உன் பையனை படிக்க இங்கே அனுப்புனியா? இல்ல… மற்ற பிள்ளைகளை கடிக்க அனுப்புனியா? என்று கோபத்தில் குமுறினான்.அதற்குள் அங்கிருந்த மூத்த ஆசிரியை ஒருவர் பதற்றத்துடன் அவர்களிடம் வந்து “என்ன சார் ஆச்சு?” என வினவினார்.
“இங்கே பாருங்க மேடம்! என் பொண்ணோட கையை!.. என்று வஸந்த், அழுதபடி நின்றிருந்த தனது மூன்று வயது மகளான கீர்த்திகாவின் வலது கையைப் பிடித்து காண்பித்தான்.
அந்த முன்னங்கையில் பற்கள் பதிந்த தடம் மெல்லிய ரத்தக் கசிவுடன் காணப்பட்டது. அந்த ஆசிரியை நடந்ததை புரிந்து கொண்டார். பின்னர் அந்த முரட்டுக்குழந்தையை கோபமாக பார்த்தார். அக்குழந்தையின் தந்தை இன்னும் தலைகுனிந்தவரே நின்றிருந்தார்.
ஆசிரியை வஸந்த்தை சமாதானப்படுத்த முற்பட்டார். “ ஸாரி சார்! வெரி சாரி ஃபார் திஸ் இன்ஸிடன்ட்!... அந்த குழந்தை கொஞ்சம் “ஹைப்பர் ஆக்டிவ்” அதானால இப்படி பிஹேவ் பண்ணியிருப்பான் … மன்னிச்சிடுங்க! “அதற்காக இவரை இப்படி இத்தனை பேர் மத்தியில் கை நீட்டலாமா?” என்றார். புருவங்களை சுழித்தபடி.. இப்போது வஸந்த்தின் கோபம் டீச்சர் பக்கம் திரும்பியது. “அறையாம என்ன மேடம் பண்ண சொல்றீங்க?.. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! “இரண்டு வாரத்திற்கு முன்ன இதே பையன்.. எம் பொண்ணோட முடியை பிச்சு அனுப்பி வச்சான்! வந்து கண்டிச்சேன்!.. நாலு நாளைக்கு முன்னாடி இவளது இடது முன்னங்கையில் நகத்தால் கீறி காயப்படுத்தி வைத்தான்! அதையும் மன்னிச்சு விட்டோம்!..இப்ப ரத்தம் வர அளவுக்கு கடிச்சு வச்சுருக்கிறான்… இதெல்லாம் பார்த்துவிட்டு சும்மா இருக்க சொல்றிங்களா?” என்று சீறினான் வஸந்த்.
அந்த ஆசிரியை கைகளை பிசைந்தபடி “ ஸாரி சார், இனி இந்த மாதிரி தவறு நடக்காமல் பார்த்துகிறோம். இந்த ஒரு முறை விடுங்க. அந்த குழந்தை கொஞ்சம் “ஹைப்பர் ஆக்டிவ்” அதனால இப்படி ஆயிடுச்சு! என்றார் சற்றே கெஞ்சலுடன்.
வஸந்த்திற்கு “ஹைப்பர் ஆக்டிவ்” என்ற சொல்லை மீண்டும் கேட்டவுடன் கோபம் தலை உச்சிக்கு ஏறியது.
“ஹைப்பர் ஆக்டிவா?... என்ன திரும்ப திரும்ப அதையே சொல்றிங்க? அப்படின்னா… கொண்டு போய் மனநல காப்பகத்தில் விட வேண்டியது தானே!.. இங்க வந்து ஏன் எங்க உயிரை வாங்கறாங்க?.. என்று வஸந்த் வார்த்தைகளை நெருப்பு துண்டுகளாக வீசினான். டீச்சரும்,அந்த மனிதரும் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர். அவன் உமிழ்ந்த வார்த்தைகள் உண்டாக்கிய வலியின் வீரியம் அந்த மனிதரின் கண்களில் ஈரக்கசிவாக வெளிப்பட்டது. மேற்கொண்டு பேச விரும்பாதவனாக வஸந்த், கீர்த்தியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அந்த மழலையர் பள்ளியை விட்டு வெளியேறினான்.
பள்ளியை விட்டு வெளியே வந்த வஸந்த், கீர்த்தியை தனது பைக்கில் அமர வைத்து வண்டியின் கிக்கரை உதைத்தான். இன்ஜின் உயிர்பெற மறுத்தது. பல உதைகள் கிக்கர் மீது விழுந்தது. பயனில்லை! வெறுத்து போன அவன் கீர்த்தியை கீழே இறக்கி விட்டு, பெட்ரோல் இருக்கிறதா? என வண்டி டேங்கை திறந்து பைக்கை குலுக்கி பார்த்தான். பெட்ரோல் சுத்தமாக இல்லை என்பதை புரிந்தபடி பெருமூச்சு விட்டான். சுற்றும் முற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு பெட்ரோல் பங்க் தெரிந்தது. கீர்த்தியை மீண்டும் வண்டியில் அமர வைத்து பங்கை நோக்கி பைக்கை தள்ளத் துவங்கினான்.
ஒருவழியாக பெட்ரோல் நிரப்பியவுடன் பைக் சில உதைகளில் ஸ்டார்ட் ஆக அப்பாடா என திருப்தியுற்று வண்டியை விரட்டினான். கீர்த்தி வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள். வஸந்த், பள்ளியில் நடந்ததையே நினைத்தபடி வண்டியை ஓட்டினான். அந்த மனிதரை அறைந்திருக்க கூடாது என மனதில் தர்க்கம் துவங்கியது. “அவ்வளவு பேர் மத்தியில் அவரை அறைந்தது தப்பு” என ஒரு மனம் சுட்டியது. ஆனால் மற்றொரு மனம் “பின்னே கீர்த்தியின் கையில் ரத்தகாயத்தை பார்த்தபின்பு சும்மா இருக்க சொல்றியா? என அடித்ததை நியாயப்படுத்தியது. இப்படி சரியா? தவறா? விவாதம் நடத்தியபடி உடல் வண்டியில் இருக்க உள்ளம் எங்கோ இருந்தபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
“டாடி இளநீர் வேணும் “ என்ற கீர்த்தி இளநீர் கடையை நோக்கி கையை காட்டினாள். அவளது குரல் அவனை நிகழ்காலத்திற்கு மீட்டது. சென்னையின் கோடை வெயில் சுட்டெரித்து கொண்டு இருந்தது.
அவனும் சோர்ந்து போயிருந்ததால் வண்டியை பூங்காவை ஒட்டி இருந்த அந்த இளநீர் கடை முன்பு நிறுத்தினான். இருவரும் இளநீர் வாங்கி உறியத் துவங்கினர். அப்பொழுது தான் அருகில் இருந்த பூங்காவை கவனித்தான். அங்கே அவன் அறைந்த அந்த மனிதர் தனது முரட்டு குழந்தையை ஊஞ்சலில் வைத்து ஆட்டி மகிழ்வித்து கொண்டு இருந்தார். அந்த மனிதர் கள்ளம் கபடமின்றி வாஞ்சையுடன் தனது குழந்தையை கொஞ்சும் அந்த காட்சி வஸந்தின் மனதை என்னவோ செய்தது. அவசரப்பட்டு கைநீட்டி இருக்கக்கூடாது. கோபத்தில் வார்த்தைகளை கொட்டி இருக்க கூடாது என உள்ளம் உணர தொடங்கியது. அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மனசாட்சி வலியுறுத்த தொடங்கியது. இறுதியில் இளநீரை குடித்து முடித்து விட்டு கீர்த்தியை அழைத்துக் கொண்டு பூங்காவிற்குள் நுழைந்தான்.
தூரத்தில் வஸந்த் வருவதை பார்த்து விட்ட அந்த மனிதர் தனது பையனை ஊஞ்சலில் இருந்து இறக்கி அழைத்துக் கொண்டு வேறுபக்கம் செல்ல முற்பட்டார். அதை கவனித்த வஸந்த் தனது நடையின் வேகத்தை கூட்டி கீர்த்தியை இழுத்து கொண்டு அவர்களை அடைந்தான்.
“ ஏங்க!.. ஒரு நிமிஷம்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவர்களை இடைமறித்து நின்றான். எப்படி மன்னிப்பு கேட்பது என புரியாமல் பேசத் தொடங்கினான்.., “ஸ்கூல்ல ..கொஞ்சம் அவசரப்பட்டு கைநீட்டிட்டேன்”.. எம்பொண்ணோட கையில காயத்தை பார்த்ததும் என்னால… எமோஷனலை கட்டுப்படுத்த முடியல…அதான் அப்படி நடந்துகிட்டேன்!.. ஸாரி சார்!... ஐயம் ரியலி சாரி… என்று தனது நெஞ்சில் கை வைத்தபடி மன்னிப்பு கோரினான்.
அந்த மனிதர் மெளனத்துடன் அவன் பேசுவதையே கவனித்தபடி இருந்தார். அவருடைய பார்வையும் சலனமற்ற முகமும் அவன் மனதை கூசச்செய்தது.
கோடைகாலத்தில் மழை வேண்டி காத்திருக்கும் தாவரங்களை போல அவன் அந்த மனிதரின் மன்னிப்புக்காக காத்திருந்தான். அவர் சற்றே நிதானமாக கனத்த குரலில் வஸந்திடம் பேசத்துவங்கினார். ”இவன் எங்களுக்கு ஒரே புள்ள சார்!.. பதினைந்து வருஷமா குழந்தை இல்லாம தவித்த எங்களுக்கு கிடைத்த கடவுளோட வரம்!.. இவன் “ஹைப்பர் ஆக்டிவ்” அது.. இதுன்னு ஏதேதோ வார்த்தை சொல்றாங்க! எங்களுக்கு அதெல்லாம் தெரியல… எப்பவாவது சில பிள்ளைகளிடம் இந்த மாதிரி உரிமையோடும் கோபத்தோடும் நடந்துகிறான். அதற்கான வலியையும், வலிமிகுந்த வார்த்தைகளையும் நாங்க வாங்கிக்கிறோம்! உங்க இடத்தில நான் இருந்திருந்தாலும் எனக்கும் அந்த கோபம் வர வாய்ப்பிருக்கு!” என்றார் பெருந்தன்மையுடன்.
அவர் கீர்த்தியின் அருகே வந்து குனிந்து கையை பிடித்து காயத்தை பார்த்தார். “ரொம்ப வலிக்குதாம்மா?.. என்றார். அவள் தனது மழலைக் குரலில் “இல்ல அங்கிள் ... கொஞ்சமா வலிச்சுச்சு ..இப்ப இல்ல..என்றாள். வஸந்த் அந்த மனிதரின் கன்னத்தை கவனித்தான், அதில் அவனது கை பதிவு இருந்தது. அவர் நிமிர்ந்து வஸந்தை பார்த்து “எதற்கும் டாக்டரிடம் கூட்டிகிட்டு போய் ஊசி போட்டுக்கோங்க சார்!” என்றார் . வஸந்த் தலையாட்டிய படி மெளனித்தான். பின்பு “என்னதான் இருந்தாலும் நான் உங்களை அடிச்சுருக்க கூடாது சார்! என்று உடைந்த குரலில், தலைகுனிந்தவாரே சொன்னான்.
மேற்கொண்டு பேச இயலாதவனாய் தனது மகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
வஸந்த் சில அடிகள் நகர்ந்திருப்பான். அந்த மனிதர் அவனை அழைத்தபடி அருகில் வந்தார். “நீங்க கடைசிய சொன்ன வார்த்தைகள் என் மனசுலையும் ஓடிக்கிட்டே இருக்கு சார்!.. என் மகனுக்கு நான் தான் ஹீரோ! அவன் முன்னாடி நீங்க என்ன அடிச்சதும் அந்த பிம்பம் உடைஞ்சு போச்சு! நீங்க நினைச்ச உடைஞ்ச அந்த பிம்பத்தை ஒட்ட வைக்க முடியும்! அதற்கு ஒரு வினாடி வலியை பொறுத்துக் கிட்ட போதும்…தப்பா எடுத்துக்காதீங்க ஸார்!” என்றார் தயக்கத்துடன்.
வஸந்திற்கு அவர் சொல்ல வந்ததை புரிந்தது. அதுவும் நியாயமாக பட்டது. தனது குற்ற உணர்ச்சியை போக்க அதுவே மருந்து என அவரிடம் அறை வாங்க தயாரானான். கைகளை பின்புறம் கட்டியபடி “நான் ரெடி சார்!” என்றான். கீர்த்தி ஒன்றும் புரியாதவளாக பார்த்தாள். வஸந்த் கண்களை மூடிக் கொண்டு அவரின் கையால் அறைவாங்க காத்திருந்தான். அந்த மனிதர் கீர்த்தியை அருகே அழைத்து “பாப்பா அந்த பூவை பறிச்சுகிட்டு வரிங்களா?.. என்று தூரத்தில் இருந்த பூச்செடியை காண்பித்தார் . “ஓகே அங்கிள்!” என்றபடி ஓடினாள். அந்த மனிதரை பார்த்தான் வஸந்த், அவர் புன்னகையுடன் “உங்களோட ஹீரோ பிம்பம் உங்க மகள் மனசுல உடைஞ்சுட கூடாது சார்!.. என்றார். அவன் பெருமூச்சு விட்டு புன்னகைத்தபடி கண்மூடினான். “பளார்” என்று ஒரு அறை அவன் கன்னத்தில் விழுந்தது. முரட்டுக் குழந்தை மகிழ்ச்சியில் சிரித்தது.
- ஜெ.பி. ஆதிரன் , சேலம்
(எஸ். ஜெயப்பிரகாஷ் )
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்