Primya Crosswin
சிறுகதை வரிசை எண்
# 54
தலைப்பு: கறி
கனிமொழிக்கு படபடப்பில் வியர்த்துக்கொண்டு வந்தது.பேராசிரியர் குறிப்பு எடுத்துக்கொள்ள சொன்னபோது தனது தோள் பையை திறந்து உள்ளிருந்த குறிப்பேட்டை எடுத்தகையோடு, ,எப்போதும்போல வைத்த இடத்திலிருந்து காணாமல் போயிருந்த பேனாவைத் துழாவ பைக்குள் தலையை விட்டபோதுதான் அந்த பழகிய வாசனையை உணர்ந்தாள்.
'கறி! '
அவ்வளவு படித்துப்படித்து சொல்லியும் டிப்பன் பாக்ஸில் எவ்வளவு தந்திரமாக கறிசோறு அடைத்துக்கட்டி அவளுக்குத் தெரியாமல் கமுக்கமாக பைக்குள் வைத்திருக்கிறாள் அம்மா...
மிகச்சிறிய எவர்சில்வர் இரண்டடுக்கு பாத்திரம் அது.ஒரு கண்ணி வெடியைப்போல சாதுவாக பைக்குள் உறங்கும் பாத்திரத்தை அதிவெறுப்புடன் பார்த்தாள் கனி. காலையிலே அம்மா
சமைத்துக் கொண்டிருக்கும் போதே,
" மோவ்.. மணம் எட்டூருக்கு வீசுது. பெருசு சமைக்கியோ?",என்றவளுக்கு ,
"ஆமாங் கண்ணு பெரிசு தான்.உங்கப்பச்சி லைனுக்கு போனாருல்லா...கம்பி கிட்டக்க ரெயில் அடிச்சு போட்ருக்கு! தோல உரிச்சி எடுத்துட்டு போயிட்டானுவ.விடிகாலில போற மெயிலுவண்டி தட்டிருக்கும். கறி நல்ல பதத்துல இருந்துருக்கு.உங்கப்பன் ஒரு சட்டி நெறய கொண்டாந்து இங்கன எறக்கிட்டான்.உப்பும் காரமுமா போட்டு ஆக்க சொல்லிட்டு கடைக்கு பாட்டில் வாங்க போயிருக்கு...நீ டிப்பனுக்கு கொஞ்சூணு காலேசுக்கு கொண்டுகினு போறியா கண்ணு?"என்று ஆசையுடன் கேட்டவளை ,
"மோவ்...வேற வெனையே வேணாம்!பெரிசு வைக்கிற அன்னிக்கி எனக்கு ஊட்டு சாப்பாடு வோனாம்னு அத்தினி தடவ சொல்லிருக்கேன் உண்ட்ட. ஃப்ரண்டலாம் சிரிப்பாளுவ மா!இன்னிக்கி சாப்பாடு வைக்காத.நா சாயங்காலம் வூட்டுக்கு வந்து சாப்ட்டுக்குறேன்.நீயி உண்ட புருசனும் பூராத்தையும் ஊத்தி துன்னுறாம,எனக்குங் கொஞ்சங் மிச்சம் வைங்க.." , என கறிசோற்றின் மீதுள்ள தனது ஆர்வத்தை தன் வெள்ளந்தி அம்மாவிடம் காண்பித்து தான் பேசாதிருந்திருக்கலாம் என்று உள்ளுக்குள்ளாக மறுகினாள் கனிமொழி.
எப்போதும் மூடி கழன்று விடும் அந்த டிப்பன் பாத்திரத்தின் தன்மையறிந்து,குழம்பு சிந்தி விடாதிருக்க ஒரு ஜவ்வுத்தாள் பையில் ரப்பர் பேண்ட்போட்டு பாதுகாப்பாக வைத்திருந்தாலும், மசாலா வாசனை பைக்கூட்டின் ஆன்மாவிலிருந்து மெதுவாக கசிந்துவர,கனிமொழி பல்லைக்கடித்து்க் கொண்டு பையை இறுக மூடினாள்.அதன் பின் அவளுக்கு பாடத்தில் மனம் ஒன்ற மறுத்தது.குறிப்புக்கள் கோர்வையாக எழுத வரவில்லை...அம்மாவின் மீதான ஆத்திரம் கண்களில் நீராக திரண்டுவிட,விழிகளை தட்டி தட்டி விழித்து தன்னை சமப்படுத்திக்கொள்ள முயன்றாள் கனிமொழி.
ஜன்னலுக்கு வெளியில் பூக்கள் அப்போதுதான்துளிர்விட ஆரம்பித்திருந்த பெயர்தெரியாத மரத்தில் ஜோடி அணில்கள் விளையாடிக்கொண்டிருந்தன.அணில்களுக்கு எப்பொழுதும் விளையாட்டுத் தான்....ஒரு நிலையில் அவற்றால் சில கணங்கள் கூட இருக்க முடிவதில்லை. ஏறுவதும்,இறங்குவதும் ஒரு விளையாட்டுப் போலவே நிகழ்ந்தாலும், அங்கு துரித கதியில் அவற்றிற்கிடையே ஒன்றை ஒன்று முந்தி விட வேண்டும் என்கிற ஆக்ரோஷம் இருந்தது .
கல்லூரியில் எல்லாபுறங்களிலும், நிர்வாகத்தினரின் அரூபக்கண்கள் இல்லையில்லை அரூப மூக்கு இருப்பதனை மாணவிகள் உணர்ந்திருந்தனர்.அதனால், பெரும்பாலும் கல்லூரிக்கு எவரும் அசைவம் எடுத்து வருவதில்லை.எடுத்து வந்தாலும் சோற்றில் பதுக்கியோ,பொறியல் காய்கறிகளுக்கு அடியில் ஒளித்தோ கொணர்ந்து சத்தமில்லாமல் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவர். கனியின் அம்மாவுக்கு, தனது மகள் தன் வயதுக்கேற்ற உடல்வாகில் இல்லாமல் கெச்சலாக இருப்பது பற்றிய மனக்குறை உண்டு.தோழிகளோடு அமர்ந்து சாப்பிடும்போது உணவைப் பகிராமல் இருக்க முடியாது.எனவே,வீட்டில் இதுபோல கறி சமைக்கிற நாள்களில் கனி பெரும்பாலும் கேண்டீனில் சாப்பிட்டு விடுவாள்.அல்லது பட்டினியாக இருந்து கொள்ளுவாள். அதுதவிர வும், அம்மாவின் இப்படியான பொறிகளில் சிக்குண்டு விழிக்கும் நிலையும் அவ்வப்போது ஏற்பட்டுவிடும் கனிக்கு.
ஒருமுறை கல்லூரிநேரம் முடிந்த பிறகு, தோழிகளுடன் சேர்ந்து கல்லூரிச் சாலையின் முனையிலிருக்கும் தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டு விட்டு வந்தவர்களை கல்லூரியின் வாட்ச்மேன் மணி அண்ணன்," இங்க என்ன பாப்பா பண்ணுறீங்க" என்று கேட்கவும், "சாப்பிட வந்தோம்ண்ணா..." என்றனர்."தெரிஞ்சு தான் வந்தீங்களா பாப்பா?இங்கெல்லாம் கண்ட கறியவும் கலப்பானுவளே!பாத்து...கொம்பு முளைச்சிறாம பாப்பா",என்றார் கேலியுடன்.
தோழிகள் சட்டென்று அசூயை அடைந்தனர்.சிலர் ஓங்கரிப்பது போல சத்தம்எழுப்பினர்.கனிக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை.... சாப்பிடும்போது அவர்கள் எவ்வளவு ரசித்து உண்டனர் என்பதை அவள்தான் பக்கத்தில் இருந்து பார்த்தாளே!
அப்பாவுக்கு லைனில் கறி கிடைக்கிற நாள்களில்,மிகுதியாக ஆகிவிடுகிறதை உப்பிட்டு அம்மா கொடிக்கறி செய்வாள். வீட்டு வாசலில் தோரணமாக உப்புக்கண்டம் காயவைத்து, காக்கைகள் பிடுங்கி விடாமல் முளைக்குச்சியுடன் காவலுக்கு இருப்பாள்.அவள் எங்காவது வெளியில் செல்ல வேண்டியிருந்ததால்,முளைக்குச்சி கனியின் கைகளுக்கு இடம்மாறும். உப்பிலும்,மஞ்சளில் தோய்ந்த கறித்துண்டங்கள் வெயிலில் மினுமினுத்து கனியின் வாயில் உமிழ் சுரக்க வைத்துவிடும்.இவ்வளவு விருப்பமான ஒரு உணவை எப்படி இவர்கள் அறுவருக்கிறார்கள் என்று கனிக்கு வியப்பு தான்.அதைவிட,
அந்த இடத்தில் நிற்பதே பாவம் என்பது போல முகத்தை சுளித்துக் கொண்டு விரையும் தோழிகளுடன் தானும் நாடகத்தனமாய் மூக்கை மூடிக்கொண்டு அங்கிருந்து ஏன் ஓடி வந்தோம் என்று கனிக்கு இன்றுவரையில் புரியவேயில்லை.
நெருங்கிய தோழி மிதிலா கூட,"அய்யயோ...அந்த கறியா?எங்க வீட்ல தெரிஞ்சா என்னை கொன்னு போட்டுருவாங்கடி",என்றபடி கனியின் கரங்களை பற்றிக்கொண்டபோது,மிதிலாவின் கரங்களில் ஓடிய மெல்லிய நடுக்கத்தை கனியால் உணர முடிந்தது. அப்போது ,கனிக்கு மைனாவின் ஞாபகம் வந்தது.
'மைனா!'
ஒரு நாள், அப்பா லைனில் இருந்து வந்தபின்,வண்டிக்குள் இரும்பு,பால்கவர் என்று இன்னபிற சாமான்களை தன் வழமைபோல துழாவி எடுத்துக்கொண்டிருந்த அம்மா விசுக் விசுக்கென்று ஒற்றைச் சிறகை அடித்துக் கொண்டு கிடந்த ஒரு மைனாவை பற்றித்தூக்கினாள். அம்மாவின் கைகளில் இருந்து அதனை வாங்கிய கனி,
"யம்மா..இத நாம வளப்பமா?" என்று கேட்டாள்.
"அதுக்கென்னடி... வளத்துக்க" என்றாள் அம்மா.
பறவையின் கண்களில் நம்பிக்கையின்மையைக் கண்ட கனிக்கு அதன்மீது மிகுந்த பரிதாபம் சுரந்தது. தன் உள்ளங்கைகளில் அதை பொதிந்தபோது மைனா இந்த மிதிலாவின் கைகளைப் போலத்தான் நடுங்கிக்கொண்டிருந்தது.
"இதுக்கொரு பேரு வைப்போம்மா"
"அதுக்கெதுக்கு கண்ணு பேருலாம்... மைனான்ட்டே இருக்கட்டும்.பேரு இருக்குற நாமெல்லாம் என்னத்த கிழிச்சு நட்டிட்டோம்? இன்ன சாதியில பொறந்த நீங்க இன்ன வேலதான் பாக்கனும்னு சமூவம் சொல்லுது.ஆனா,இன்னும் ஒரு சாதி சான்றிதழுக்கும் கூட வக்கு இல்லாம கலீட்டர் ஆபீசுக்கு நடையா நடந்து அல்லாடறோம்.மழ தண்ணி வந்தா தகரம் காத்துல பறந்து போயிறுது. பொட்ட பிள்ளைக குளிக்க, குத்தவைக்க கூட ஒரு பிறையில்ல... எங்கஆயி, அப்பன் எனக்கு அழகா சிங்காரின்னு பேரு வெச்சாவ. வச்சதோட சரி...யாரு கண்ணு என்னையலாம் பேரு சொல்லி கூப்பிடுறா.எம்பேரு எனக்கே மறந்துற கூடாதுன்னுதான் கைல பச்ச குத்தி வெச்சிகிட்டேன்..."அன்று என்னமோ கைத்த மனநிலையில் இருந்த அம்மா மேலும் எதைஎதையோ புலம்பிக் கொண்டு இருந்தாள்.
அம்மாவின் கையில் இருந்த பச்சையை கனிமொழிக்கு நன்றாகவே பரிச்சயம் உண்டு.அதில் துணைக்கால் விடுபட்டு சிங்காரி என்பது சிங்கரி என்று இருக்கும்.கேட்டால் மேலும் ஆதங்கப்படுவாள் என்று மைனாவுடன் நகர்ந்து விட்டாள் கனிமொழி.
பின்பு,மைனாவுக்கு மைனா என்றே பெயரிட்டாள் கனி...கனியின் தோள்களில் மைனா பழம் தின்று அவர்கள் வீட்டில்தான் வளர்ந்தது.கனி அதன் இறக்கைகளை கத்தரித்திருக்கவில்லை.சிறகுகள் சரியானபின்னும் கூட கனியின் வீட்டில் தான் அது சுற்றியலைந்தது.பின்னர் மைனாவைக் காணவில்லை..எல்லா இடங்களிலும் தேடி கவலையடைந்த கனி, மைனாவுக்கு தானொரு பறவை என்கிற பிரக்ஞை வந்தபின் யாரால் அதை தடுத்து நிறுத்த ஆகுமென்று தேடுவதை நிறுத்தி விட்டாள். 'மிதிலாவுக்கும் ஒருநாள் நான் யாரென்று தெரியுமல்லவா...அன்று அவளது உணர்வுகளை எதிர்கொள்ள இப்போதிருந்தே என்னைப் பழக்கிக் கொள்ள வேண்டும் ' என்று அச்சமயத்தில் நினைத்துக் கொண்டாள் கனி.
உணவு இடைவேளைக்கு மணி ஒலித்து விட்டது.கனியின் தோழிகள் தம் உணவு டப்பாவை எடுத்தபடி சளசளத்துக் கொண்டே கேண்டீனை நோக்கி நகர்ந்தனர்.வகுப்பிலும் சிலர் உணவருந்த ஆரம்பித்திருந்தனர். கனிக்கு உண்மையிலேயே நல்ல பசி எடுத்தது.பையில் அவளுக்கு மிகவும் பிடித்த உணவு இருக்கும்போது, இப்படி பசிக்கவில்லை என்று சொல்லி விட்டு தலையை இருக்கையில் தலைகீழாக சாய்த்து எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி இருப்பது அவளுக்கு அவமானமாக இருந்தது.வகுப்பில் அவளது தோழிகள் யாரும் இல்லை...பேசாமல் டப்பாவை திறந்து உணவை அள்ளி உண்டு விடலாமா என்று அவளுக்கு ஆவேசமாக கூட இருந்தது.உணவின் வாசனை தான் பசியை இரண்டு மடங்காக ஆக்குகிறதோ...கனிக்கு கொஞ்சம் வெளிக்காற்று வாங்கினால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது
வகுப்பறையை விட்டு வெளியில் வந்ததும் எதிலிருந்தோ விடுதலை பெற்று விட்டதாக, ஒரு நிம்மதி வந்து நிறைவதை உணர்ந்தாள் கனி..மதிய உணவு இடைவேளை நேரமாதலால் கல்லூரியின் இருமருங்கிலும் சாரிசாரியாக நிற்கும் குல்மோகர் மரங்களின் அடியில் பெரிதும் சிறிதுமாக கார்கள் நிற்பது இங்கிருந்தே தெரிகிறது. கல்லூரியினது அல்லாத வாகனங்களுக்கு இந்த எல்லை வரையில் வந்து செல்வதற்கான அனுமதி இருந்தது.விதவிதமான நிறங்களில் கார்கள்...அங்கங்கே கிடைத்த இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.
மாணவிகளுக்கு வீட்டுக்கு சென்று உணவருந்த அனுமதி இல்லாவிடினும்,உணவு கொண்டு வந்து கொடுக்க அங்கு தடையில்லை. காருக்குரிய பிள்ளைகள் தமக்கான வாகனத்தில் நுழைந்து கொள்வர்.ஒருசில தாய்மார்கள் காரினுள் அமர்ந்த வண்ணமாய் தம் பிள்ளைகளுக்கு தம் கையால் ஊட்டி விடுகிறதை ஓரிருமுறை அவள் பார்த்திருக்கிறாள்.சொன்னால் தன்அம்மாவும்தான் உணவைக் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பி வந்துவிடுவாள்.ஆனால் அவர்களிடம்தான் கார் இல்லையே..ஒருவேளை ஆட்டோவில் வந்தால் அனுமதிப்பார்களோ என்னமோ...
தான் கடைசியாக காரில் சென்றது எப்போது என்று யோசித்துக் கொண்டே ஒரு காரின் கண்ணாடியில் இருந்த தூசுப்படலத்தில் தன் பெயரை எழுதினாள் கனி..எழுதி முடித்ததை தானே ஒருமுறை தள்ளி நின்று ரசித்தாள்.அத்தனை தூசியிலும் தனது பெயர் பளபளப்பாக மின்னுவது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.தூரத்தில் என்னமோ அரவம் கேட்கவும் பயந்து போன கனி தனது துப்பட்டாவைக் கொண்டு பெயரை அழித்து விட்டாள்.ஆடை அழுக்காகியிருந்தது...
மிதிலா அவளை கட்டாயப்படுத்தி தன்னுடன் காரில் ஏற்றிக்கொண்டு சென்றது அவளுக்கு அப்போது நினைவில் வந்தது.கனியின் தெருவில் எவ்வளவு முயன்றும் அந்த படகு காரால் நுழைய முடியவில்லை.அதனால் மிதிலாவிடம் தெருமுனையிலே விடைபெற்றுக் கொள்ளும்படி ஆயிற்று.அதுவே நல்லதாகவும் போயிற்று.வீட்டின் முன்னறையில் லைனுக்கு சென்று களைத்து வந்திருக்கும் அப்பா, தன்னை மறந்து துயில் கொள்ளும் நேரம் அது...அந்த காட்சி பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாயிராது. 'இருடி...நானும் உன் கூட வறேன்'. என்று மிதிலா சொல்லிவிட கூடாதே என்று பதை பதைப்புடன் விடைபெற்றுக் கொள்ளாமலே வீட்டினுள் ஓடி மறைய வேண்டியதாக ஆயிற்று கனிக்கு.
அப்பாவின் சாராய நெடி ஒரு காலத்தில் கனிக்கு அருவருப்பாகத் தான் இருந்தது.அவ்வப்போது அம்மாவிடம் இது பற்றி அவள் முனங்கியது கூட உண்டு.ஒருமுறை பள்ளி முடிந்து வீடு வருகிறபோது உடம்பு முழுவதும் குடலைப் புரட்டும் முடைநாற்றத்தோடு பாதாள சாக்கடையிலிருந்து வெளியே வந்த ஒருவன் ஒரு கண்ணாடி போத்தலை திறந்து அதிலிருந்த நிறமற்ற திரவத்தை கடகடவென்று தன் வாயில் சரித்துக் கொள்கிறதையும்,சற்று நிதானித்து மறுபடி தான் வந்த குழியினுள்ளே திரும்பி சென்றதையும் பார்த்தாள் கனி.அது மது தான் என்று அவளுக்கு யாரும் சொல்லியிறாமலே விளங்கிற்று.அதன்பின் அப்பா குடிப்பது பற்றி அவளுக்கு ஒரு அங்கலாய்ப்பும் இல்லை....
இந்த காட்சிகள் எல்லாம் இட்லியை ஸ்பூனால் உண்ணும் மிதிலாவுக்கு எப்படி இருக்குமென்று கற்பனை செய்து பார்க்க அவளால் இயலவில்லை. தன் வீட்டில் ஒருவாய் தண்ணீர் குடிக்க சொல்ல கூட தன்னால் முடியுமா என்று தெரியவில்லை!
"கனி...எங்கடி போன?",வகுப்பறைக்குள் நுழைந்த கனியை மிதிலா கேட்டாள்.
"ஆஃபீஸ்லேர்ந்து எல்லா ஸ்டூடண்ட்ஸ் உடைய டீடெயில்சும் கேட்டாங்க.நான் எனக்கு தெரிஞ்சது மட்டும் உனக்கும் சேர்த்து குடுத்திட்டேன்.உங்கப்பா பேரு முருகன் தானடி?"
"அய்யோ...இல்லையே."பதறினாள் கனி.
"அச்சோ...நீ எப்பவோ மு.கனி ன்னு சொன்னா மாறி ஞாபகம்.நானா முருகன்னு மனசுக்குள்ள அஸ்யூம் பண்ணியிருக்கேன் போல.அதான் அப்படி குடுத்துட்டேன்.சாரிடி!
சரிவா...ஆஃபீஸ்ல போயி மாத்தி குடுத்துட்டு வருவோம்."என்றாள் மிதிலா.
தோழிகள் இருவரும் கையைப் பிடித்துக்கொண்டே வராந்தாவில் நடந்து சென்றனர்.உணவு இடைவேளையாதலால், அலுவலகம் பாதி காலியாக இருந்தது.கனி குனிந்து தன் செருப்பின் பின்புற வாரை தளர்த்த முனைந்தாள்.
"செருப்புலாம் கழற்ற வேணாம்டி.உள்ள வா!"
"எக்ஸ்யூஸ்மி சார்.."
"எஸ்.."
"ஹிஸ்டரி ஆஃப் பீபிள்காக டீட்டெயில்ஸ் கேட்டு வந்தாங்க. இவளுது கொடுக்க வந்திருக்கோம்.பேரு கனிமொழி..கொஞ்சம் செக் பண்ணுங்க சார்."
"எந்த மெயின் மா"
"B.A இங்கிலீஷ் செகண்ட் இயர்..."
"பேரு கனிமொழிதானம்மா..
அப்பா பேரு முருகன்.."வினவினார்.
"முருகன் இல்லைங்க.முனுசாமி!",மெல்லிய குரலில் சொன்னாள் கனிமொழி.
"ஓ!"
"ஃபாதர்ஸ் ஆக்குபேஷன் என்னம்மா?"
"நகராட்சி துப்புறவு பணியாளர்"
டெஸ்கின் தடுப்பிலிருந்து சரேலென்று உயர்ந்து தன்னை பார்த்த அந்த மனிதர் கனிக்கு முற்றிலும் புதியவர்.ஆனால்,மூக்கின் விளிம்பில் இருந்து விழுந்து விடுவது போன்றிருந்த கண்ணாடியின் பின்னிருந்து,அவளை ஆராய்ந்த இரு விழிகள் அவளுக்கு மிகவும் பரிச்சயமானவை. வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில்,பல்வேறு காலகட்டங்களில்.....
மேலதிகமாக அவர் இன்னும் என்னென்னமோ கேட்டார்,கனியும் தேவையான விவரங்களை தந்தாள்.அந்த சம்பாஷனை நெடுகிலும் அந்த மனிதர் தன் கண்களை பார்ப்பதை தவிர்ப்பதை கனி அறிந்தே இருந்தாள்.அவரது கண்களில் ஒரே ஒரு நொடி மின்னி மறைந்த ஏதோ ஒன்றிற்குள் இருந்த ஆதி நெருப்பினைக் கண்டுவிட்ட, தனது ஆன்மா ஏன் ஒரு குகைவிலங்கினைப் போல குன்னிக்கொள்கிறது என மருகினாள் கனிமொழி.
"சரிம்மா...மாத்தியாச்சு."
மிதிலாவின் கைகளை பற்றிக்கொண்டு அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியேறினாள் கனி.கனிமொழியின் கைகள் வியர்வையில் பிசுபிசுத்தபடியிருந்தததால்,பற்றியிருந்த தோழியின் கை அவளது பிடியிலிருந்து நழுவுவது போல இருந்தது.அல்லது' உண்மையாகவே தன் கையிலிருந்து மிதிலா தனது கையை விடுவித்துக் கொள்ள முனைகிறாளோ?'.கனி தானாகவே கையை தோழியின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டாள். மிதிலா அதைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாதவளாக எதையோ சளசளத்துக்கொண்டே உடன் நடந்து வந்தாள்.
தலை வலிப்பதாக கூறி அரை நாள் விடுப்பு எழுதி கொடுத்துவிட்டு வெளியில் வந்தாள் கனி.பஸ்ஸில் பெருங்கூட்டம் இருந்தது.கம்பியை பிடித்தபடி நின்றவளுக்கு தன் உடல் எடையே தாங்க முடியாத பாரமாக இருக்க,.பின்னிருந்து முதுகை அழுத்தும் கணக்கற்ற முகமிலிகளின் எடை தாங்கவொண்ணாததாக முதுகை வளைத்தது.அடுத்த நிறுத்தத்தில் ஒரு கூட்டம் இறங்கிச் சென்று விடவே காலியான ஒரு ஜன்னல் இருக்கையை பார்த்ததும் கனி சற்று ஆசுவாசம் அடைந்தாள்.மதியம் சாப்பிடாதது வேறு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.ஜன்னலில் சாய்ந்தவள் நொடியில் உறங்கி விட்டாள்.
"ஏ பொண்ணு... ச்சீ.கருமம்..என்னடி இது?”
“ஏ பொண்ணு...!"
நல்ல உறக்கத்தில் இருந்த கனி, காதருகே உரத்த சத்தத்தில் தூக்கிவாரிப் போட்டது போல கண் விழித்தாள், தன் பக்கத்தில் இருந்த பெண் எதற்கு தன்னைப் பாத்து ஒரு வேட்டை நாயைப்போல கத்துகிறாள் என்று ஒரு கணம் புரியாமல் மலங்க விழித்தாள்.
'இவள் எப்போது வந்து என் அருகில் அமர்ந்தாள்...'
அமரும்போது காலியாக இருந்த அண்டை இருக்கையில் கனி உறங்கும்போது, இடைப்பட்ட நிறுத்தங்களில் ஏதோ ஒன்றில்தான் அந்த பெண் ஏறியிருக்க வேண்டும்.அந்த பெண்மணியின் மஞ்சள் வண்ண சேலையில் ஆரஞ்சு நிறத்தீற்றல்கள்...தனது பையில் இருந்த குழம்பு கசிந்து பையைத்தாண்டி அருகில் அமர்ந்திருந்தவளின் புடவையை நனைத்திருக்கிறது என்பது சற்று தாமதமாகத்தான் கனியின் மூளைக்குள் உறைத்தது.அதற்குள் பெரியவள் சண்டை கட்ட ஆரம்பித்திருந்தாள்...
"பாரு...பாரு...பையில என்னத்திடி வச்சிருக்க.முருகா.....என் சேலையெல்லாம் கொட்டி பாழாக்கிட்டியே" ,வீறிட்டாள் முதியவள்.
புடவையை தொட்டு முகர்ந்தவள் தீயைத் தொட்டது போல,"முருகா....கவுச்சியடிக்குதே...ஆடி வெள்ளியதுவுமா கண்ட கருமாயத்த கட்டிக்கிட்டு ஏண்டி காருக்குள்ற ஏறுறீங்க ",என்று சகட்டுமேனிக்கு ஒருமையில் திட்ட ஆரம்பித்தாள்.
பேருந்தில் இருந்த அத்தனை பேரும் இதனை ஒரு சுவாரஸ்யமான நாடகம் பார்க்கும் பாவனையில் பார்ப்பதை உணர்ந்தாள் கனி.வார்த்தைகள் தடிப்பதைக் கண்ட நடத்துனர் ,"யம்மா...அந்த பாப்பா பாவம்.எதுக்கு இப்ப கத்துறீங்க?அது என்ன வேணும்னா கொண்டாந்து உங்க மேல ஊத்துச்சு"என்றார்.
" நீ செத்த சும்மா இருயா.என் வாயால ஏதாவது சொன்னா பலிச்ரும் பாத்துக்க. எளசா இருந்தா பல்லிளிச்சிட்டு சப்போட்டுக்கு வந்துருவீங்களே...எப்பேர்பட்ட நேர்மானம் தெரியுமா? எத்தன நாள் விரதம் தெரியுமா... மேலு ரெண்டுநாளா சுடுது. கோவிலுக்கு போகனும்னு குளிச்சுட்டு வந்தேன்.இவ கண்டதையும் கொண்டாந்து மேல ஊத்தி கெடுத்துட்டா.வாய தொறக்குறாளா பாரு...என்னதுடி இது" என்று வீறிட்டாள்.
தன் வாய்க்குள்ளாக,"பெருசு"என்று முனங்கிய கனிக்கு ஏனோ சிரிப்பு வந்துவிட்டது.பின் தன் இருக்கையில்நிமிர்ந்து அமர்ந்தவள், வினவியவளின் முகம் பார்த்து நிதானமாக," கறி" என்றாள்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்