ரம்யா அருண் ராயன்
சிறுகதை வரிசை எண்
# 56
தலைப்பு: நீர்க்குரல்
காற்று சற்று வலுத்து இருந்தது. எங்கள் வள்ளம் ஆட்டுக்குட்டி துள்ளித்துள்ளி ஓடுவதுபோல் தாவிக்குதித்து நடுக்கடலில் அல்லாடியது.
"எலேய்! சீக்கிரம் கச்சா எல்லாம் சரியா இருக்கானு பாருலேய்! இப்டியே உட்கார்ந்துட்டு இருந்தா...? இப்ப என்ன, ஒனக்கு கடலுக்குள்ள எறங்க முடியுமா? முடியாதா?"
"இந்தா வாரேன் ராசாப்பா!"
தலையை உலுக்கிக்கொண்டேன், கச்சா எனப்படுகிற வலையாலான அந்த சுருக்குப்பை, ஆழ்கடலில் மூழ்கி சங்கெடுக்கும்போது, எடுத்த சங்குகளை போட்டுவைக்க பயன்படுவது, ஆழ்கடலுக்குள் இருக்கும்போது தேவைப்படுகிற அத்தியாவசிய பொருட்களையும் அதனுள்ளேயே போட்டு எடுத்துச்சொல்வோம். கச்சாவை சரிபார்த்து,
"இது கிழிஞ்சிருக்கு ராசாப்பா, சங்கு தண்ணிக்குள்ள நழுவிரும்" என்றேன்.
"பரவால்ல, பய சூட்டிப்பாதான் இருக்கான், ஏல சூச! பை மாத்திக்குடுல அவனுக்கு"
சங்கெடுக்க ஆழ்கடலில் மூழ்கி நீச்சலடிக்கும்போது கடல் நம் உடலை மேல்நோக்கித் தூக்கித் தூக்கிவிடும், அதை சமாளிக்க கடலின் அடிமணற்பரப்பில் இரும்புக் கைத்தடிகளை குத்திவைத்து, அதைப்பிடித்துக்கொள்வோம், அந்த
கைத்தடிகளையும் ஆளுக்கு இரண்டென அவரவர் கச்சாவுடன் சேர்த்துக் கட்டத் தொடங்கினோம். கடல், காற்றுடன் சேர்ந்து
வள்ளத்தை ஒரு தூக்கு தூக்கியதில் கைத்தடிகள் அங்குமிங்குமாக புரண்டு சிதறியது,
"லே மக்கா! கம்பி எங்கிட்டாவது படாத எடத்துல குத்தி சேதாரமாக்கிடாம கவனம்லேய்!" என்றார், ராசாப்பா.
கீழே காலை விரித்து அமர்ந்திருந்த சூசை விலுக்கென கால்களை ஒடுக்கிக்கொள்ளவும், எல்லாரிடமிருந்தும் சிரிப்பலை புறப்பட்டது.
"சூதானமா இருந்துக்கல சூச!"
என கிண்டல் செய்தார் தாவீது மாமா.
"யே சேசுவே! இங்காருங்க ராசாப்பா! அடிக்கிற காத்துக்கு மொரலுமீனுவ ஏறி வருது!"
வள்ளத்தின் அணியம் பகுதியில் அமர்ந்திருந்த நான் பின்பகுதியில் நின்று கூவிக்கொண்டிருந்த சார்லஸ் நோக்கி ஆர்வமாய்ச் சென்று எட்டிப்பார்த்தேன், ஆயிரம் கத்திகளைக் கொண்டு கடல் ஏதோ சாகச விளையாட்டை நிகழ்த்துவதுபோல் கடலில் துள்ளலும் நீச்சலுமாக முரால் மீன் கூட்டம். கோடு கோடாய்... கோடு கோடாய்... முரால்மீன்கள்... கோடு கோடாய்... கோடு கோடாய்... எல்லாக்கோடுகளும் திடீரென ஒன்றாகி, சாலையின் மையத்திலிருக்கும் வெள்ளைக்கோடாகி... ஆகி... ஆகி... கடல் ஒரு சாலையாகி... வள்ளம் ஒரு இரு சக்கர வாகனமாகி... பைக்கிலிருந்து அந்தக்குரல் மேல்நோக்கி அரைவட்டமாய்ப் பறந்து... பறந்து...
"ம்ம்மாஹ்ஹ்...."
என்று விழுந்து... தலைசுற்றுகிறது எனக்கு. நிகழுலகமும் நனவுலகமும் ஒன்று மாற்றி ஒன்றென ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது கண்முன்.
"சாம்... ஏல என்னா? ஒருமாறி பரக்க பரக்க முழிக்கே? கடலுக்குள்ள நீ போமாண்டாம்... இரு இங்கனக்குள்ளயே" என்றார் ராசாப்பா.
"ஐய அதெல்லாம் ஒன்னுமில்ல, என்னால முடியும் ராசாப்பா! இன்னிக்குப் பாருங்க எத்தன சங்கு அள்ளுறேன்னு"
"வெடவெடன்னு இருக்கியே மக்கா! தாங்குவியா? ஒரு சம்மாட்டியாரா இத கேட்கல பக்கி! ஒன்னுமண்ணா தாய்புள்ளைளாட்டம் பழகுன பழக்கத்துல கேக்கேன், சங்குழி வள்ளக்காரானுக்கு ஒடம்புலயும் மனசுலயும் ஒரம் வேணும்லேய், ஒரமில்லாதவன் குழியாளி வேலையையே விட்றனும்"
ராசாப்பாவின் சந்தேகத்தில் அர்த்தம் இருக்கிறது. நான் கடலுக்குள் இறங்கிக் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆவதாலும், இந்த மூன்று மாதங்களில் மனதிலும் உடலிலும் சமநிலை கெட்டுத் திரிந்ததாலும் அவர் இவ்வாறு கேட்கிறாரெனப் புரிந்தது. அவர்தான் எங்கள் வள்ளத்தின் சம்மாட்டியார், அதாவது வள்ளத்தின் உரிமையாளர். அவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் சிரித்தேன். இயல்பாக இருப்பதாய்க் காட்டுவதற்காக அப்படி வலிந்து சிரித்திருக்கக்கூடாது நான், அந்தச்சிரிப்பை மிகவும் பரிதாபமாகப் பார்த்தார் ராசாப்பா. எனக்கே சற்று அவநம்பிக்கை ஒரு மின்னலைப்போல் சிலகணங்கள் தோன்றி மறைந்தது. கண்களை மூடிக்கொண்டேன், மண்டைக்குள் அந்தக்குரல் மேல்நோக்கிப்பறந்து ஒரு அரைவட்டமாய் சுழன்று
"யம்ம்ம்மா...ஆஆஆஹ்ஹ்... "
என அலறியபடி "நங்"கென தரையில் போய் மோதியது. முகமெங்கும் ரத்தச்சேறு குழைத்து கோணல்மாணலாய் தார்ச்சாலையில் கிடந்த அந்த உருவம், 'கீக் கீக்' என மூன்று நாட்களாய் சத்தமிட்டிருந்த மருத்துவமனை உபகரணத்தின் மின்திரையில் எல்லாம் சுழியத்திற்கு வந்து நின்றது என நீண்ட கதையின் கடைசி அத்தியாயங்களை அவசர அவசரமாய் கிறுக்கியது போன்ற ஒரு முடிவு.
"நிக்சா! எங்க இருப்ப இப்ப நீ? பேசனும்ல ஒங்கிட்ட!"
பேச்சு... பேச்சு... எத்தனை பேச்சு...
"எல பேப்பயலுவளா! மச்சானும் மச்சினனும் அப்டி என்னத்தல பேசுவிய? எப்பப்பாரு சோடி போட்டு உக்கார்ந்துக்கது"
சம்மாட்டியாரிடம் அடிக்கடி வாங்கும் வசவு அது. வீட்டுக் கடன் நிலவரத்திலிருந்து அடுத்தவீட்டு இந்திராவின் புது சுடிதார் வரை பேசாத கதையில்லை.
"கறிக்கடைகிட்ட என்னய எறக்கி விட்டுட்டு போ நிக்சா!"
என்ற என்னை இறக்கி விட்டுவிட்டு
"லேய் மச்சான்! இந்திரா இன்னிக்கு பச்சை டாப்ஸ்லேய், கறிய வாங்கி வீட்ல கொடுத்துட்டு ஒன்னோட பிஸ்தா பச்சை டிஷர்ட்டை எடுத்து வைய்யி, நா வந்து வாங்கிக்குறேன், அதான் மேட்சிங் மேட்சிங்கா இருக்கும்!" என்றபடி இருசக்கர வாகனத்தை கிளப்பப்போனவன், சாலையோரத்தில் ஒதுக்கி நிறுத்தப்பட்ட ஸ்விஃப்ட் டிஸையர் வண்டியைப் பார்த்து,
"வாந்தி எடுக்காவ... கெர்பேஸ்த்திரி போலருக்குலே சாம்! அடுத்த வருசம் நீயும் இப்டி அமுதாவ ரெடி பண்ணிரு!" என்று கண்ணடித்தபடி, வண்டியை உற்சாகமாய் கிளப்பினான். ஒதுக்கி நிறுத்தப்பட்டிருந்த காரை சிறிதுதான் தாண்டினான், வெள்ளை நிற இன்னோவா ஒன்று எதிரிலிருந்து சரட்டென்று அடித்துத் தூக்கியது. மூளைச்சாவு... என்றார்கள், மூன்று நாளில் முடிந்தே போனான். அந்த கடைசிக் குரல், கனவிலும் ஒலித்தபடி இருந்த குரல் எனக்குள் போய் சிக்கிக்கொண்டது. மண்டைக்குள் சதா, 'யம்ம்ம்மா...ஆஆஆஹ்ஹ்...'
என அலறியபடி அரைவட்டமடித்துப் பறந்துகொண்டிருந்தது.
எத்தனைநாள், எத்தனை மாதம், எப்படி உண்டேன், எப்படி நடமாடினேன் எனத் தெரியவில்லை, ஏதேதோ ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் என்னைக்கொண்டு அலைந்தாள் அமுதா, என்னென்னவோ கோவிலுக்கெல்லாம் அழைத்துச்சென்றாள், என் கண்கள் மட்டும் மூடவேயில்லை, காணுகிற எல்லாக்காட்சியையும் பின்புலமாகக்கொண்டு அந்த அரைவட்டமே பறந்துகொண்டிருந்தது மனதுக்குள். கண்கள் கடலை நோக்கிச்சென்றது, தண்ணீர் தண்ணீர் எல்லா பக்கமும் தண்ணீர். இப்போது காற்று சற்று குறைந்திருந்தது.
"இந்த இடத்துல நங்கூரம் போட்ருவமாண்ணே!" தாவீது மாமாவிடம் ராசாப்பா கேட்டார்.
"நேத்தைக்கு போட்ட ஜிபிஎஸ் லொகேஷன் பதிவு பாத்துக்கிட்டல்லா ராசா... நேத்து அந்த எடத்துலதான் சொத்தையில்லாம நல்ல வெளேருன்னு நிறைய சங்கு கெடச்சுது, சொத்தைச் சங்கா கெடைச்சா சுண்ணாம்புக் கலசலுக்குதான் போவும்"
"ஆமாண்ணே! இந்த எடம்தான்..."
"ஆழம் பாத்துரு மக்கா! "
"நேத்து வந்த எடம்தானேண்ணே! நேத்து இருபது பாகம் அளந்தமே!"
"அட பைத்தியாரப்பயலெ! காத்தப் பாரு! நேத்து மாறியா இருக்கு! கடலுக்குள்ள நீவாட்டம் மண்ண குவிச்சிருக்கலாம், பள்ளம் பாய்ஞ்சிருக்கலாம்! எதுக்கு ரிஸ்க்கு? அந்த தாத்திக்கிட்டத்தப் போடு கடலுக்குள்ள!"
தாத்திக்கிட்டம் எனப்படுவது ஒரு கிலோ சுமாருக்கு எடையுள்ள ஒரு இரும்புக்கல், அதில் நீண்ட கயிறு பிணைக்கப்பட்டிருக்கும். கயிறை இழக்கிக்கொடுத்து தாத்திக்கிட்டத்தை கடலுக்குள் விட்ட ராசாப்பா, கிட்டம் அடிமட்டத்தைத் தொட்டதை உணர்ந்து நிதானித்து, கயிறை மேல்நோக்கி இழுக்க ஆரம்பித்தார். கையை அகல விரித்து அவர் இடமும் வலமுமாய் சற்று குனிந்த நிலையில் கயிற்றை அளந்து அளந்து மேலுயர்த்துவது ஒரு அல்பட்ராஸ் பறவை போலிருந்தது. அப்படி அகல கையை விரித்துதான் அந்தக் கயிறை அளக்க வேண்டும். இரு கைகளையும் அகல விரித்தால் ஒரு கையின் நுனிக்கும் அடுத்த கையின் நுனிக்கும் இடைப்பட்ட தூரத்தை ஒரு 'பாகம்' நீளம் என்போம்.
"இருபத்தோரு பாகம் இருக்குண்ணே! "
"அப்ப சரி, ஒரு பாகம் மணல நீரோட்டமே வழிச்சுட்டு போயிருக்கு, நமக்கு தோண்டுற வேலை மிச்சம்"
"நங்கூரம் பாச்சிறலாமாண்ணே? "
திரும்பி எங்களைப் பார்த்தார், நாங்கள் ஐந்துபேர் கடலுக்குள் இறங்குவதற்கு ராசாப்பா, தாவீது மாமாவின் சைகைக்காக காத்திருந்தோம்.
"எலே மக்கா! சாப்ட்ருங்கலேய்! இப்ப கொஞ்சம் சுமாரா காத்து நிக்கி. நீங்க சாப்ட்டு வாரதுக்குள்ள காத்து ஒரக்குதா லேசாவுதானு பாத்துட்டு எறங்கலாம்" என்றார்.
"எறங்கலாம் ராசாப்பா! இவ்ளோதூரம் வந்திட்டு டீசல் நட்டத்துக்கா கரையோடுறது? இப்ப எறங்குனா சரியாருக்கும்" என்றான் பிச்சை. அவன்தான் இருப்பதிலேயே இளையவன்
"சம்பாதிக்கனும்னு ஆர்வமிருக்கலாம், ஆர்வக்கோளாறு இருக்கக்கூடாது சரியா? பேசாம உக்காந்து கஞ்சியக் குடி!"
சாப்பிட அமர்ந்தோம், தூக்குச்சட்டியிலிருந்த பழைய சோற்றை பிழிந்து நீரை வடித்துவிட்டு, குழம்பு திருகுச்செம்பைத் திறந்தேன், சுண்ட வைத்த பழைய மீன்குழம்பு 'கும்'மென்று மணந்தது, மாவுளா மீன் குழம்பு. பிழிந்த சோற்றில் கவிழ்த்துக்கொண்டேன், நாரத்தங்காய் ஊறுகாய் வேறு வைத்து அனுப்பியிருந்தாள் அமுதா. நிக்சனுக்கு நாரத்தை ஊறுகாய் பிடிக்கும், நான் ஊறுகாய் சாப்பிடமாட்டேன். சோறும்கூட நிக்சனுக்கும் சேர்த்து கொடுத்துவிடுகிற அதே அளவுதான் அமுதா இன்றும் கொடுத்துவிட்டிருப்பது புரிந்தது. இது அவனுக்குப் பிடித்த கைப்பக்குவம், நான் பிசைந்து உருட்டிக்கொடுத்தால் உள்ளங்கையில் ஊறுகாயை நக்கிக்கொண்டே, கோழி குழைத்த தவிட்டை முழுங்குவதுபோல் வேகவேகமாய் விரும்பி முழுங்குவான்,
"எங்கருக்கலேய் மச்சான்?"
சோற்றுருண்டை தொண்டைக்குழியிலிருந்து நிக்சனை நினைவுபடுத்தி எம்பியது. சற்று ஆசுவாசப்படுத்திவிட்டு சாப்பிடலாம் என சோற்றை அளைந்தபடியே அமர்ந்திருந்தேன். ராசாப்பாவும் தாவீது மாமாவும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். தாவீது மாமாவிடம்,
"என்னண்ணே இவன் இப்டி ஆயிட்டான்?" என்றார் ராசாப்பா. பற்றவைத்த பீடியை ஒரு இழுப்பு இழுத்த தாவீது மாமா
"ஐய...! இப்ப எவ்ளவோ தேறிட்டான் ராசா, செபமாலையும் குருசும் மாதிரி ஒன்னா திரிஞ்ச பயலுவள்ல, ஆக்சிடெண்ட் பாத்ததுலருந்து பிரம்ம புடுச்சாப்ல ஆகிட்டான், அமுதாவும் என்னென்னவோ செஞ்சு பாத்தா... கடைசில மனச கல்லாக்கிட்டு தொள்ளாளிகிட்ட போய்ட்டா"
"தொள்ளாளியா? பேய்வேல செய்றவன்கிட்ட இவ எதுக்குணே போனா? அவன் 'கடலையே கட்டுவேன் நான், காத்தையே கட்டுவேன் நான்'னு புரூடா உட்டுட்டுத் திரியற எத்துவாழி நாயாச்சே"
"அவளும் என்னதாம்லே செய்வா ராசா! இவன இப்டியே பாக்க சகிக்காம, தம்பியாவே இருந்தாலும் அவன் ஆவி இவன் மேல இருந்தா கட்டிப்புடலாமுனு போனா..."
"அடச்சே லூசுப்பயவுள்ள! நல்ல டாக்டருட்ட காட்டுனாவே சரியாகிரும், தொள்ளாளி திங்க நகநட்ட வித்து பைசா குடுத்து ஏமாறனுமாங்கும்!"
"லைட்அவுஸ் பக்கம் ஆள்நடமாட்டம் இருக்காதுல்ல, அந்தப்பக்க கடக்கரைல புருசனையும் பொண்டாட்டியையும் உக்காரவச்சு என்னென்னமோ மந்திரம்லாம் போட்டானாம்..."
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் காட்சி இப்போதுதான் எனக்கு நினைவு வந்தது. எப்படி இத்தனைநாள் என் மூளை எனக்கு இந்தச் சம்பவத்தை வலுக்கட்டாயமாய் மறைத்து வைத்தது...? அந்த லைட்அவுஸ் பக்கத்தில் உடுக்கை சத்தத்திற்கிடையில் காட்டுக்கத்தலாக எதையோ கத்திக்கொண்டு என்னை கண்ணை உருட்டி உருட்டி மிரட்டிய அவன்... கடைசியில் அவனே களைப்பானதுபோல் 'உஸ்... உஸ்...' என சத்தமாய் கத்தியபடி ஒரு பீங்கான் கலயத்தை இறுக்கி மூடினான், கலயத்தின் வாய்ப்பகுதியையும் மூடியையும் எதையோகொண்டு ஒட்டி துண்டால் இறுகக்கட்டி துண்டின் நுனியில் ஒரு கனத்த இரும்புத்துண்டத்தை முடிச்சிட்டான்.
"திரும்பிப் பாக்காம போய்ரு! திரும்பிப் பாக்காம போய்ரு!" என்ற அவனது கட்டளைக்குப் பணிந்து அமுதா என்னை கைத்தாங்கலாய் வீடு அழைத்துவந்தாள்.
"காத்து கம்மியாய்ருச்சு... " என்ற
ராசாப்பாவின் குரல் கலைத்தது என்னை. இந்த சோறு இப்போதைக்கு தொண்டைக்குள் இறங்காது எனப்புரிந்து, தூக்குச்சட்டியை மூடினேன்.
கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று மணிநேரம்வரை ஆழ்கடலுக்குள் மூழ்கியிருக்கத் தேவைப்படுகிற காற்று வழங்குகிற சிலிண்டர் வள்ளத்தில் உண்டு, அதோடு பிணைக்கப்பட்ட கிட்டத்தட்ட நாற்பதுபாகம் நீளமான ஹோஸ் நுனியில் இருந்த உறிஞ்சு குழாயை வாயில் வைத்து காற்று வருகிறதா என சரிபார்த்துக்கொண்டேன்.
ஒவ்வொருவருவராக கடலுக்குள் இறங்கத்தொடங்கினோம். நான் வள்ளத்தின் மரச்சுவரில் கடல்நோக்கிக் காலைத் தொங்கவிட்டு அமர்ந்தேன்.
புதைந்த சங்கை எடுப்பதற்காக மண்ணைத் தோண்ட பயன்படுகிற வட்ட உலோகக் கால்தட்டுக்களை பாதங்களோடு இறுக்குப் பட்டைகளால் பிணைத்துக்கொண்டேன். கடலுக்குள் பயன்படுத்துகிற கண்ணாடியை அணிந்துகொண்டேன், எப்படியும் நெடுநாள் கழித்து இறங்குவதால் இன்று அழுத்தம் தாளாமல் காதுவலி வரப்போகிறது. கண்ணாடியோடு இணைக்கப்பட்ட தக்கையை காதுக்குள் சொருகிக்கொண்டேன். கையுறைகள் அணிந்தேன். அதிகமாகவே எடை குறைந்துவிட்டேன் என்பதால் சமநிலைக்காக எப்போதையும்விட சிறிது அதிகமாகவே இரும்பு குண்டுகளை இடுப்புச்சுருக்கில் போட்டுக்கொண்டேன், கூடவே ஒரு பட்டன் கத்தியையும். உள்ளூர ஒரு உதறல் எடுத்தது. கடலைநோக்கி கைக்கூப்பி பிரார்த்தித்தேன், எனக்கான கச்சாவையும் அதோடு பிணைக்கப்பட்ட இரும்பு கைத்தடிகளையும் இழுவைக்கயிறில் பிணைத்து, ராசாப்பா கடலுக்குள் எறிந்தார். நானும் அதோடு குதித்தேன். காற்றுக்குழாயை வாய்க்குள் இறுக்கிக்கொண்டேன். லேசான வெப்பக்காற்றில் தொண்டை நமநமத்தது. சாவாளை மீன் ஒன்றைக் கடந்து நான் இறங்கிக்கொண்டிருந்தேன். முதுகு நெடுகிலும் உள்ள கண்ணாடி நிறத்துடுப்பை விறுவிறுவென சுழற்றியடிக்கும் சாவாளையை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன்,
'நிக்சனுக்கு ரொம்ப பிடிச்ச மீன் இது. பொரிச்சுப்போட்டா அப்டியே மாவு கணக்கா வாயில கரையும்'
கடலின் அடியாழ மணலை எட்டிவிட்டேன், ஆங்காங்கு லேசாய் பவளப்பாறைகள் தவிர, பெரிதாய் மணற்பரப்புதான். இரும்புக்கைத்தடிகளை நிலத்தில் ஊன்றி அதைப்பிடித்தபடி கால்தட்டுக்களைக் கொண்டு வேகவேகமாய் மண்ணைதோண்டினோம். மணலை பின்னுக்குத் தள்ளத் தள்ள மணல் ஒரு தூசிமூட்டமாய்க் கலைந்தது, புதையுண்ட சங்குகள் ஆங்காங்கு வெள்ளை வெள்ளையாய்த் தெரிய, சேகரித்ததை அவரவர் கச்சாவில் இட ஆரம்பித்தோம். நிறுத்திவைத்த சைக்கிளில் நானும் நிக்சனும் சிறுவயதில் முறைவைத்து பெடல் போடும் நியாபகம் வந்துபோனது. பெடல்... பெடல்... பெடல் போடுகிற நிக்சன் கண்ணுக்குள் வருகிறான்.
"மூச்சு... மூச்சு... மூச்சுத் திணறுது சாம்" என்கிறான்.
"இதோ காப்பாத்துறேன் நிக்சா...! இந்தா இந்த மூச்சுக்குழாயை சுவாசி!" என்றபோது கடலுக்குள்ளேயே கண்ணீர் கரைந்தது போல் காட்சிகளும் கரைந்தது. கண்கள் நிக்சனைத் தேடியது.
என்னிடம் ஏதோ மாற்றத்தை பிச்சை உணர்ந்துவிட்டான், ஏதும் பிரச்சனையா என சைகையில் கேட்டான். இல்லை என்றபோது கடல் நீரோட்டம் திடீரென அதிகரித்ததை உணர்ந்தேன். எல்லோருமே திணறினோம். கடல் சற்று அமைதியாக இருந்தால் உடலின் சக்தி வேலைக்கு செலவழியும், கடலில் நீரோட்டம் அதிகமிருந்தால் அதை எதிர்த்து எதிர்த்தே அதிக ஆற்றல் செலவாகிவிடுமே தவிர, வேலையில் கவனம் செலுத்துவது கடினம். அனைவரும் ஒருவர் ஒருவரை பார்த்துக்கொண்டோம், நீரோட்டம் ஒருவெள்ளம்போல் இழுத்தது. இருக்கிறதிலேயே மூத்தவரும், அனுபவசாலியுமான சார்லஸ் அண்ணன் சைகை காட்டவும் அவரவர் கச்சாவிலிருந்து போயாவை விடுவித்தோம், 'போயா' எனப்படும் அந்த மிதவை நீரின் மேலே மிதக்கவும் வள்ளத்தில் மேலே நின்றிருந்த இரண்டுபேரும் ஒவ்வொரு கச்சாவாக இழுத்து வள்ளத்திற்குள் போட்டனர். எனக்கு மொத்தமே நாலுசங்குதான் கிடைத்திருந்தது, 'பரவால்ல, ஆயிரரூவா கிடைச்சாலும் மொதல்ல வீட்ல கரண்ட் பில் கட்டி, மளிகை சாமான் வாங்கிருவா அமுதா. இப்ப அதான் அவசரத் தேவை, மத்தத நாளை மத்தநாள் பார்த்துக்கலாம்' என முடிவு செய்தபடி வள்ளத்தில் ஏறினேன்.
கரைநோக்கி நகர்ந்தது வள்ளம். கிட்டத்தட்ட ஆறுபாகம் ஆழமளவுக்கு கரை நோக்கி வந்துவிட்டோம். கரையை நெருங்க நெருங்க அலைகளின் ஆர்பாட்டம் அதிகரித்தபடி வந்தது. வளைந்து புறப்பட்ட ஒரு அலை அரைவட்டமாய் சுழன்று 'அம்ம்மாஹ்ஹ்' என்றபடி தார்ச்சாலையில் விழுந்தது. மறுபடியும் தார்ச்சாலையானது கடல்... 'நிக்சா! நீ போயிருக்கக்கூடாதுலேய் என்னயவிட்டு' யோசித்தபடி பார்த்துக்கொண்டிருந்த நீர் முழுக்க குபுகுபுவெனப் பரவிய ரத்தம்...
"ரத்தம்... " என்றேன் விழி விரிய,
"எரிச்சலக் கெளப்பாத, நானே டீசல் நட்டம்னு வயித்தெரிச்சல்ல இருக்கேன்... சூரியன் மேக்கால மறையறத கடத்தண்ணில புதுசாப் பாக்கறவனாட்டம் ரத்தம் பித்தம்னுட்டு... ப்ப அந்தால..." என்றார் ராசாப்பா. சூரியனைப்பார்த்தேன், ரத்தச்சிவப்பு.
"சாம்... சாம்... " கடல் என்னை நிக்சன் குரலில் கூப்பிட்டது.
லைட்ஹவுஸ் சிவப்பு விளக்கும் ஊரின் மிக உயர்ந்த தேவாலயத்தின் மேல் கரங்களை விரித்து நிற்கிற இயேசு சுரூபத்தின் கீழிருக்கிற சிவப்பு விளக்கும் தெரியத் தொடங்கியது. கரை நோக்கி வர வர இரண்டு விளக்குகளும் எந்த இடத்திலிருந்து பார்த்தால் ஒன்றாய்த் தெரிகிறதோ அந்த இடத்தை நோக்கி வந்தால் எங்கள் ஊர் கடற்கரை. இரவு கரை திரும்புகிறவர்களுக்காக செய்து வைத்திருக்கும் ஊரின் அமைப்பு அது. அந்த கலங்கரை விளக்கம்... அந்த மேற்குச்சூரியன்... ஏதேதோ கலங்கியது எனக்குள்... 'சாம்... சாம்...' என நிக்சனின் குரல் அழைத்தது. "அம்ம்ம்மாஹ்ஹ்" என வான் நோக்கி உயர்ந்து என் தலையில் வந்து அறைந்தது.
"ராசாப்பா கொஞ்சம் வள்ளத்த இங்கனயே போடுங்களேன், மோதிரம் கீழ உட்டுட்டேன், தேடிட்டு வந்துர்றேன்" அவர் நிறுத்துவதற்குக்கூட யோசிக்காமல் கடலுக்குள் குதித்தேன்...
'நிக்சா... எங்கருக்க நீ?
சிறிது முங்குநீச்சலில் பார்வைக்குக் கிடைத்துவிட்டது அந்த பீங்கான் கலயம். இரும்புத்துண்டத்தின் எடையால் தாழ்ந்து மணலில் பாதி புதையுண்டு கிடந்தது. கலயத்தின் கழுத்தில் தாயத்தால் இறுக்கிக் கட்டியிருந்தது. மூச்சுத் திணறியது எனக்கு. மேலே வந்து ஒரு மூச்சு வாங்கி 'தம்' கட்டிக்கொண்டு மறுபடி உள்ளே இறங்கினேன். கலயத்தை எடுத்து கடற்பாறைமேல் ஒரே மோதுமோதி உடைத்தேன்.
'குபுக்'கென ஒற்றைக் காற்றுக்குமிழி வெளியாகி மேலேறியது.
நான் வள்ளத்துக்கு ஏற ஏற, ராசாப்பா என்னை கெட்டவார்த்தைகளில் திட்டுவதைக்கேட்டு எல்லாரும் சிரித்தபடி சங்குகளை மணல்போக கழுவிக்கொண்டிருந்தார். ஒரு நிம்மதிப் புன்னகையுடன் தூக்குவாளியைத் திறந்தேன். நாரத்தை ஊறுகாயை வழித்து உள்ளங்கையில் போட்டுக்கொண்டேன், அதை நக்கியபடியே, சோற்றை உருட்டி, கோழி தவிடு உண்பதுபோல் வேகவேகமாய் சாப்பிடத் தொடங்கினேன்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்