logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

ஏ.ஆர்.முருகேசன்

சிறுகதை வரிசை எண் # 50


எல்லோரும் இந்நாட்டு மனிதர்கள்! தேவாலயத்துக்கு எதிரில் உள்ள நாடக மேடையின் விளிம்பில் அமர்ந்திருந்தான் ராஜா. கிறிஸ்டி ராஜாவை, எல்லோரும் ராஜா என்றே அழைப்பார்கள். முகம், தாடை போன்ற அங்க லட்சணங்களைப் பார்த்து அவன் அந்தோணிபுரம் மாதிரி உள்ள பகுதிகளின் ஒன்றைச் சேர்ந்தவன் என நகரத்தில் ஆய்வறிக்கையைக் கொடுத்துவிடுவார்கள். நாடக மேடையின் விளிம்பில் அமர்ந்திருந்த ராஜாவின் தாடை கடுமையாக வலித்தது. பற்களில் ரத்தக் கசிவு இருந்தது. கண்களில் வலியும், பயமும்! பயத்துக்குக் காரணம், இப்படியே வீட்டுக்குப் போனால் அடிபட்டதை விளக்கவேண்டி இருக்கும். அது வீண் சச்சரவில் போய் முடியும் என்பதே. இப்போது இரண்டே பேர்தான் அவன் அருகில் இருந்தார்கள். சற்று நேரத்துக்குமுன் ஐந்தாறு பேர் இருந்தார்கள். இருவரில் ஒருவர், “தம்பி… போப்பா! உங்கப்பாகிட்ட சொல்லு. யாருடா அவிங்க?” என ராஜாவின் பைக்கட்டை எடுத்து அவனருகில் வைத்துக்கொண்டே கேட்டார். தாடை வலி அவனைப் பேச அனுமதிக்கவில்லை. ரத்தம் இதழ்களில் லேசாகப் பரவ ஆரம்பித்தது. இருவரும், “டே… ரத்தம் வருதுடா… ஆஸ்பத்திரிக்குப் போ… இல்லாட்டி வா… நான் கூட்டிட்டுப் போறேன்” என்றனர். அவன் தலையை ஆட்டி மறுத்தான். சற்று மயக்கமாக இருந்தது. “தண்ணீ…” எனக் கேட்டான். ஒருவர் அருகில் எங்கோ போய் தண்ணீர் பாட்டில் கொண்டுவந்தார். நீரருந்த அண்ணாந்தபோது எதிரில் தெரிந்த பிரமாண்டமான தேவாலயத்தின் உயரத்தில் சிலுவை தெரிந்தது. குடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். ”எங்கடா படிக்கிற…” இதழ்களின் வலியைப் பொறுத்துக்கொண்டு பள்ளியின் பெயரைச் சொன்னான். ”அவனுகளுக்கும் உனக்கும் என்னடா சண்ட?” இந்தக் கேள்விக்கு அவன் பதிலளிக்கவில்லை. கேள்வி கேட்டவர் யாரென்று அவனுக்குத் தெரியாது. பரந்து விரிந்த தேவாலயத்துக்குத் தெற்கே நெருக்கமான குடியிருப்பு இருக்கிறது. அதில் ஏதோ ஒரு வீதியில் இருவரில் ஒருவர் வசிக்கிறவராக இருந்தால்… அவர் யாருக்கு ஆதரவு கொடுப்பார்? இப்போது கொஞ்சம் தெளிவாக இருந்தது. மாலை நேரச் சூரியன் இன்னும் முகத்தில் வீரியமாக அறைந்துகொண்டிருந்தான். மெதுவாக எழுந்து நடந்தான். கீழே தள்ளிவிட்டதில் முட்டிக்கால் சிரைந்து வலித்தது. உடல் வலியைவிட மனவலி மிகுதியாகப் பாதித்தது. கீழே விழுந்துகிடந்த சைக்கிளை அந்த இரண்டுபேரும் நிமிர்த்தி வைத்திருந்தனர். தன்னை அடித்ததோடு மட்டுமல்லாமல் சைக்கிளையும் ஏறிமிதித்த காட்சி அவன் உடலில் ஏறி மிதித்ததுபோல வலித்தது. சைக்கிளை உருட்டிக்கொண்டு நான்கு சாலைகளும் சந்திக்கும் இடத்தைக் கடக்கும்போது அந்தச் சம்பவம் மீண்டும் நடந்தது போன்ற பிரமை. தேவாலயத்தின் அருகில் காம்பவுண்ட் சுவரற்ற கால்பந்து மைதானம் பரந்து விரிந்திருந்தது. மாலையில் தேவாலயப் பிரார்த்தனையை முடித்தவர்கள், மெலிதான இருள் பரவும் வேளையில் மணல்வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அது அவர்களுக்கு அன்றைய நாளை எளிதாகக் கடக்க உதவும் செயலாக இருந்தது. பாஸ்கா திருவிழாவின்போது நாடகம் நடக்கும் இரவுகளில் எவ்வளவு கூட்டம் இங்கே நிறைந்திருக்கும்! இப்போது வெறிச்சோடி இருந்தது. சற்று நேரத்துக்குமுன் இந்த இடத்தைக் கடக்கும்போது ராஜா இதை நினைத்துக்கொண்டே சைக்கிள் பெடலை அழுத்தினான். மைதானத்தில் திருவிழா கடைகளில் சுற்றுவது போன்ற பிரமையுடன், சைக்கிளை மிதித்தவனின் கண்களுக்கு, மூன்றுபேர் நான்குச் சாலைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கும் காட்சி, கடைசி நொடியில்தான் தெரிந்தது. அதில் ஒருவன் ராஜாவின் வகுப்பில் படிப்பவன். மீதி இரண்டுபேர் அவன் பள்ளியில் படிப்பவர்கள்தான். ஆனால் பெரிய கிளாஸ் பையன்கள். இவர்கள் எதற்காக இங்கெ நின்றுகொண்டிருக்கிறார்கள்? ராஜாவின் வருகைக்காகவே காத்திருப்பதாக உள்ளுணர்வு உணர்த்தியது. ஏதோ விவகாரமாக நடக்கப் போகிறது என்பது தெரிந்தது. இப்படியே திருப்பிக்கொண்டு, இடப்பக்கச் சந்துக்குள் போய் விடலாமா? ஆனால், அவனுடைய தன்மானம் அதைத் தடுத்தது. இவனுகளுக்குப் பயந்துகொண்டு வேறு வழியில் செல்வதா? அதுதான் பள்ளி ஆசிரியரிடம் அவன் செய்த தவறைப் பற்றிச் சொல்லிவிட்டோமே. இனிமேலும் தன்னிடம் வம்பிழுக்க மாட்டார்கள். அப்புறம் ஆசிரியர் பேச்சைக் கேட்காத மாணவனாக ஆகிவிடுவான். டிசியைக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள்… அவன் மனத்தில் இவ்வாறு நினைத்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்துவிட்டான். இடப்பக்கப் பெரிய சாலையில் திரும்பும்போது, “டே நில்றா…” எனச் சொல்லிக்கொண்டே மூவரில் ஒருவன் அவன் சைக்கிளை நோக்கி வேகமாக வந்தான். ராஜா அதைச் சட்டைசெய்யாமல் பெடலை அழுத்தினான். அதுதான் பள்ளியில் நடந்த விஷயம் பள்ளியிலேயே முடிந்துவிட்டதே… தெருவில் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்ற நினைப்புடன் முன்னேறினான். அது அவனுடைய தன்மானத்தைக் குலைத்திருக்கும். “சொல்லிக்கிட்டே இருக்கேன்…” என்றபடி வேகமாக வந்து சைக்கிள் ஹேண்ட்பாரைப் பிடித்து நிறுத்தி அப்படியே தள்ளிவிட்டான். ராஜா சைக்கிளுடன் கீழே விழுந்தான். நின்றுகொண்டிருந்த மற்ற இருவரும், அவனருகில் வந்து அப்படியே சட்டையைப் பிடித்துத் தூக்கி முகத்தில் குத்துவிட்டார்கள். ஒரு பள்ளிக்கூட மாணவனை நாலைந்து மாணவர்கள் சேர்ந்து அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காட்சியைப் பார்ப்பவர்களுக்கு அப்படியான மேலோட்டமான உணர்த்தலைத்தான் கொடுத்திருந்தது. சண்டையை விலக்க ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த ஐந்தாறு பேர்கள் ஓடிவந்தனர். உண்மையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்து பேருக்குமேல் நின்றிருந்தனர். எல்லோருக்கும் சிறுவர்களின் சண்டை என்ற நினைப்பு மட்டுமே! ஓடிவந்தவர்கள் அவர்களை விலக்கிவிட்டனர். அதிலும் ஒல்லியாக உயரமாக இருந்தவன் ரொம்ப வீரியமாக இருந்தான். அவன் உடலைப் பிடித்து இழுத்து அவன் விடும் குத்துக்களிலிருந்து ராஜாவைக் காப்பாற்ற பெரும்பாடு படவேண்டியிருந்தது. பிடித்துக்கொண்டிருக்கும்போதே இரண்டு பலமான குத்து ராஜாவுக்குக் கிடைத்தது. கோபத்தில் தன்னையும் குத்திவிடுவானோ எனப் பிடித்து விலக்கியவர் பயந்தார். எப்படியோ அவர்களிடமிருந்து ராஜாவைப் பிரித்து நாடகமேடைக்கு அழைத்து வந்துவிட்டார்கள். அடித்த மாணவர்களோ, அவர்களுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓடினர். அவர்கள் யாரென்று விலக்க வந்தவர்களுக்குத் தெரியும். என்றாலும் அதைப் பற்றி அதிக அக்கறைகொள்ளாமல் ராஜாவை உட்கார வைத்தனர். வளைந்திருந்த சைக்கிள் ஹேண்ட்பாரை நேராக்கி, உருட்டிக்கொண்டே வந்தான். ஓட்டிப் போகலாம் என்ற எண்ணம்கூட வரவில்லை. வலியும் வேதனையும் அதிகரித்தது. அதைவிட, அம்மாவிடம் இதைப் பற்றி எப்படிச் சொல்வது என்ற கேள்வியே மலைக்கோட்டையைவிடப் பெரிதாக இருந்தது. இருபகுதிகளுக்கும் இடையில் கடந்த காலத்தில் நடந்த வரலாறு அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அது அவன் பிறப்பதற்குமுன் நடந்த சம்பவம். அம்மாவும், மற்ற பெரியவர்களும் அந்தச் சம்பவத்தைச் சொல்லக் கேட்டிருக்கிறான். அப்போதே அவன் தீர்மானித்துக் கொண்டான். அவர்களுடன் கொஞ்சம் கவனமாகப் பழகவேண்டும் என்று! வகுப்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் படிக்கிறார்கள். அவர்கள் எப்போதும் இவனைக் கிண்டலடித்துக் கொண்டே இருப்பார்கள். வேண்டுமென்றே சீண்டுவார்கள். பள்ளிக்கு வெளியே தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிடும்போது கீழே தட்டிவிடுவார்கள். விளையாடும்போது வேண்டுமென்றே இவன் மீது மோதுவார்கள். இவனைப் பார்க்கும்போதே அவர்கள் பார்வையில் ஒரு நையாண்டி இருக்கும். அந்தப் பார்வையைத் தாங்கிக்கொள்ளாமல் தலையைக் குனிந்துகொள்வான். மனதுக்குள் ஒருவிதக் கலக்கமும், பயமும் உருவாகும். அவன் கண்களில் அது வெளிப்படையாகவே தெரியும். ராஜாவின் வீதிக்கு அடுத்த வீதியில் குடியிருக்கும் சுவானும் அதே பள்ளியில்தான் படிக்கிறான். ஆனால் அவன் பி வகுப்பு. அவனிடம் யாரும் இம்மாதிரி நடந்துகொள்வதில்லை. ஏன் தன்னிடம் மட்டும் இப்படி நடந்துகொள்கிறார்கள். சுவானின் வகுப்பில் இருப்பவர்கள் அவ்வாறானவர்கள் இல்லையா? அல்லது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரும் படிக்கவில்லையா? என நீண்ட நாள் யோசித்திருக்கிறான். ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுவானின் வகுப்பில் படிக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தபிறகு, நம்மிடம் மட்டும் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் திகைத்திருக்கிறான். ஆனால், சுவான் எதற்கும் துணிந்தவன். பயமில்லாத கண்களை உடையவன். வீட்டுக்குள் தலையைக் குனிந்தபடியே உள்ளே நுழைந்தான் ராஜா. அம்மாவிடமிருந்து தப்பவே முடியாது. நடை உடை பாவனை மூலம் வேறுபாடுகளைக் கண்டுவிடுவார். சுவரோரம் திரும்பி பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்ததால், அவன் முகத்தைப் பார்க்க வழியில்லை. என்றாலும் ஓரப்பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்துவிட்டார். ”என்னடா தலையைக் குனிஞ்சுக்கிட்டே போறே!” பதில் எதுவும் சொல்லாமல் பைக்கட்டை சுவரோரத்தில் வைத்தான். தோல்ஷாப் வேலைக்குப் போன அப்பா இன்னும் வரவில்லை. வந்திருந்தால், இதோ இந்தச் சிறிய அறையில் கிடக்கும் கட்டிலில் அமர்ந்திருப்பார். நேருக்கு நேர் அவரைப் பார்க்கவேண்டியிருக்கும். ரத்தம் கசிந்த வீங்கிய தாடையைப் பார்த்துவிடுவார். எவ்வளவு நேரத்துக்கு இதைச் சமாளிப்பது. எப்படியிருந்தாலும் யாராவது ஒருவர் பார்க்கத்தானே போகிறார்கள். என்றாலும், அவர்கள் யாராவது பார்த்துக் கேட்கட்டும். அப்போது உண்மையைச் சொல்லலாமா அல்லது பொய்யைச் சொல்லலாமா என முடிவு செய்யலாம். கட்டிலில் சுவர் பக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டான். அமைதியாக வந்து அமைதியாகவே படுத்துக்கொண்ட மகனின் நடவடிக்கை அம்மா ஜெயசீலிக்கு விசித்திரமாக இருந்தது. பாத்திரம் கழுவுவதை போட்டுவிட்டு, வேகமாக எழுந்து மகன் அருகில் வந்தார். அவனைத் தன் பக்கமாகத் திருப்பிக்கொண்டே, “என்னடா ராஜா… உடம்புக்கு முடியலையா?” எனக் கேட்டுக்கொண்டே கழுத்தில் கைவைத்து வெப்பத்தைப் பரிசோதிக்க முயன்றார். முகத்தைப் பார்த்தவருக்கு திகீரென்றது. ”அய்யோ… என்னப்பா… வாயிலிருந்து ரத்தம் வருது. வீங்கிப் போயிருக்கு!” என்றபடி சேலைத் தலைப்பில் ரத்தத்தைத் துடைத்துவிட்டார். வேகமாக தலையைப் பிடித்துத் தூக்கி உட்காரவைத்தார். வலி அதிகரித்தது. ”ம்மா… வலிக்குதும்மா!” என உரத்தக் குரலில் கத்தினான். “எப்படிப்பா ஆச்சு?” அவன் பதிலேதும் சொல்லவில்லை. என்ன பதிலைச் சொல்லலாம் எனத் தேடுவதுபோல் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்தது. பொய் சொல்வதற்காகத் தேடுகிறான் என்பது அம்மாவுக்குப் புரிந்தது. “சைக்கிள்லருந்து கீழே விழுந்துட்டேன்” என அம்மாவின் கண்களைப் பார்க்காமல் கூறினான். எதையோ மறைக்கிறான். “எங்க என் கண்ணைப் பார்த்துச் சொல்லு!” ஆனால் அம்மாவின் கண்களை அவனால் சந்திக்க முடியவில்லை. “முதல்ல சட்டையைக் கழட்டு. மேலெல்லாம் மணலா இருக்கு. தண்ணியை ஊத்திக் கழுவிட்டு ஆஸ்பத்திரிக்குப் போலாம்” அம்மாவே சட்டையைக் கழற்ற ஆரம்பித்தார். முதுகில் ஆங்காங்கே தடிப்பு தடிப்பாக இருந்தன. ஏதோ ஒரு பூச்சி கடித்தமாதிரி கருத்த முதுகும் சிவந்திருந்தன. ”என்னடா.. இது! சுள்ளெறும்பு கடிச்ச மாதிரி வீங்கியிருக்கு!” அதற்குமேல் ராஜாவால் தாங்கமுடியவில்லை. அழுகை மெதுவாக ஆரம்பித்தது. “சொல்லு. என்ன நடந்துச்சு?” “நாங்க மரத்தடியில் உக்காந்து படிச்சுட்டு இருந்தோம்மா. நான் பாட்டுக்குத்தான் இருந்தேன். அவிங்கதாம்மா கட்டெறும்பை என் முதுகுல விட்டாய்ங்க. எனக்கு அது தெரியல. கட்டெறும்பு கடிக்கவும் என்னடான்னு பார்த்தா பின்னாடி உக்காந்திருந்தவனுங்க வாயைப் பொத்திக்கிட்டுச் சிரிக்கிறாங்கம்மா! நானும் முதுகைத் தட்டிவிட்டுட்டு பேசாமத்தான் இருந்தேன். அப்புறமும் சிவப்புக் கலர்ல நீளமா இருக்குமுல்லம்மா… அந்த எறும்பை பிடிச்சு என் முதுகுக்குள்ள போட்டாய்ங்கம்மா. சுரீர்னு கடிச்சிடுச்சு. என்னால தாங்க முடியலம்மா… அதான் எந்திரிச்சுப் போயி சார்கிட்ட சொல்லிட்டேன். அவரு அவிங்களை கூப்பிட்டு திட்டுனாரும்மா. அப்பக்கூட அவிங்க செய்யலன்னுதான் சொல்றாங்கங்கம்மா. ஒத்துக்க மாட்டேங்கிறாய்ங்க. சாருக்கு உண்மை தெரிஞ்சு போச்சு. அவிங்களை பிரம்பால லேசா கையில அடிச்சு ‘இனிமே இதுமாதிரி செய்யக்கூடாது’ன்னு கண்டிச்சாரும்மா!” எனச் வாய் வலிக்கச் சொல்லிவிட்டு அழுதான். “அப்ப வாயில ஏன் ரத்தம் ஒழுகுது?” சற்று மிரண்டான். சொல்லலாமா வேண்டாமா எனத் தயங்கினான். அம்மாவின் கண்களைப் பார்த்தான். சொல்லாவிட்டால் விடமாட்டேன் என்ற பிடிவாதம் தெரிந்தது. “சர்ச்சுக்கிட்ட வரும்போது, வாத்தியார்கிட்ட அடிவாங்கியவனும், கூட ரெண்டு பெரிய கிளாஸ் பையன்களும் வழிமறிச்சு வாயிலேயே குத்திட்டாங்கம்மா… இந்த வாய்தானே வாத்தியார்கிட்டப் போட்டுக் குடுத்துச்சுன்னு சொல்லியே குத்துனாங்கம்மா!” மீண்டும் அழுதான். இப்போது அடி வாங்கிய வலியைவிட அவமானமும் சேர்ந்துகொண்டது. ஜெயசீலி சிலநொடிகள் எதுவும் பேசவில்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது. சிறுபையன்களின் விளையாட்டுச் சண்டையாகவா… அல்லது பெரியவர்களின் விவகாரமான சண்டையாகவா. இந்தச் சிக்கலை விவகாரமாக எடுத்துச் செல்வதற்கான கூறுகள் அடங்கியிருப்பதாகவே அவருக்குத் தோன்றியது. ராஜாவின் அப்பாவுக்குத் தெரிந்தால் அதை நோக்கித்தான் போகும். ஆனால், கடந்த கால வரலாற்றை மீண்டும் நிகழ்த்திப் பார்க்கும் எண்ணம் அவருக்கும் வராது. அது நடந்து முப்பது வருடங்களுக்குமேல் ஆகிவிட்டாலும், இருபகுதி மக்களுக்கு நீங்காத, வேண்டாத, கொடுங்கனவாகவே மனதை ஆக்ரமித்திருக்கிறது. இப்போது இரு சாராரும், அதைப் பற்றிப் பேசுவதுகூட இல்லை. இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிப் பலவருடங்கள் ஆகிவிட்டன. என்றாலும் ஜெயசீலியின் மனதின் ஓரத்தில் சிறு பயம் எட்டிப்பார்த்தது. அந்தச் சம்பவமும் இப்படித்தானே ஆரம்பித்தது. பதின் பருவத்தினரின் சண்டையாகத்தானே புள்ளிவைத்தது. அதுதானே வளரும் பயிரைக் காவு வாங்கியது. அதெல்லாம் சரிதான். அதற்காக இதை இப்படியே விட்டுவிடலாமா? பள்ளி தலைமையாசிரியரிடம் போய் புகார் சொல்லவேண்டியது நம் கடமை. அந்தப் பகுதி பெரியதனக்காரர்களிடமும் சொல்லவேண்டியது நமக்குப் பாதுகாப்பாக இருக்கும். நாளைக்கு பிரச்சனை என வந்துவிட்டால் அதைச் சமாளிக்கவேண்டுமே! தெற்கில் ஏதோவொரு ஊரில் இதுமாதிரித்தானே ஒரு மாணவனை வெட்டினார்கள். அப்படி நினைக்கும்போதே உடம்பெல்லாம் கிடுகிடுவென நடுங்கியது. வேறு வேலை எதுவும் செய்யத் தோன்றவில்லை. ராஜாவை டாக்டரிடம் கூட்டிச் சென்று மாத்திரைகள் வாங்கி வந்தபிறகு, இரவில் தூங்குவதற்கு வெகு சிரமப்பட்டார். வெகுநேரம் கழித்தே தூங்கினார். வேலை முடிந்து திரும்பிய கணவரிடம் இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகச் சொல்லிச் சமாளித்தாள். ”எந்த வகுப்பும்மா…” தலைமையாசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னார் ஜெயசீலி. ராஜா அவரருகில் ஒடுங்கிப்போய் நின்றிருந்தான். “இங்க பாருங்க சார்… சட்டையை இறக்கிக் காட்டுடா!” காட்டினான் ராஜா. “தடிப்பு தடிப்பா இருக்கு. ராத்திரிபூரா சொறிஞ்சுகிட்டே இருந்தான். மருந்து வாங்கித் தடவியிருக்கேன்” பளபளவென மின்னிய கழுத்துக்குக் கீழான முதுகுப் பகுதியை காட்டிப் பேசினார். “வாயிலேயே குத்தியிருக்கானுங்க…” நாக்கு நுனிவரை வந்த கெட்டவார்த்தையை இதழ்கள் பூட்டி வைத்தன. “சரிம்மா… நான் பார்த்துக் கண்டிக்கிறேன்” என்ற தலைமையாசிரியரையே சில நொடிகள் பார்த்தார் ஜெயசீலி. இது கண்டித்தால் அடங்கும் வகைதானா? தலைமையாசிரியருக்கு நிலைமையின் தீவிரம் புரியவில்லை. எடுத்துச் சொல்லவேண்டும். “சார் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அந்தப் பய குடியிருக்கிற பகுதி எங்க பகுதிக்கு அடுத்துத்தான் இருக்கு. உங்களுக்குத் தெரியுமோ என்னவோ… பல வருசங்களுக்கு முன்னால இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு. சர்ச்சுக்கு வந்த எங்கூருப் பையனை வெட்டியே போட்டுட்டானுங்க. அவன் ஒரு தப்பும் செய்யல. அவுங்கூரு பெண்புள்ளைகிட்ட பிறந்தநாளைக்கு முட்டாய் குடுத்தான். அது தப்பா சார். அந்தூரு பயல்களுக்கு அப்படித் தோணியிருக்கு சார். ஏன்னா அவங்க உசந்த இடத்துல இருக்காங்க. நாங்க அவங்களுக்குக் கீழே இருக்கோம்ல. அதான்… எல்லோரும் எளவட்டப் பயல்களாத்தான் சார் இருந்தாங்க. அதுமாதிரி இன்னொரு சம்பவத்தை எங்கூரு தாங்காதுங்க சார். எங்க பயலுக நல்லாப் படிச்சுப் பெரியாளா வரணும் சார். அதுக்காகத்தான் இப்படிப் பாடுபட்டுக்கிட்டு இருக்கோம்” அவர் கண்களில் அவரை அறியாமல் கண்ணீர் வழிந்தது. தலைமையாசிரியர் ஜான்பாலுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. இது சாதாரணமான, விளையாட்டுத்தனமான சம்பவம் இல்லை. இதனுள் சில தீவிரச் சமூகச் சிக்கல்கள் அடங்கியிருக்கின்றன. இதை எப்படிக் கையாள்வது. பையனின் பெற்றோரை வரவழைத்துப் பேச வேண்டும். அப்போதும் இதற்கான பலன் கிடைக்குமா? அவர்களும் இவனைப் போலவே இருந்துவிட்டால்… இல்லையில்லை. நாம் தலைகீழாக விளங்கிக்கொள்கிறோம். இந்தச் செயல்பாடும், உணர்வுகளும் பெற்றோர்களிடமிருந்தே வழிவழியாகக் கடத்தப்படுகிறது. அப்படியென்றால் இதைச் சரிசெய்ய எங்கே போய் முறையிடவேண்டும். ஆண்டவரிடமா? அவருக்குள் புன்னகைத்துக்கொண்டார். ஆண்டவரிடம் முறையிட்டால் அவரும் புன்னகைத்திருப்பார். வழியும் நீயே… எனப் பிரார்த்தித்துவிட்டு, அவர் செல்லாத வழியில் பயணித்தால், அதற்கு அவர் எப்படிப் பொறுப்பாக முடியும்? எளியவர்களுக்கு பேதங்களற்று இரங்குவதே அவர் சுபாவம்! அவர் சுபாவத்தை எல்லோரும் பெற்றிருந்தால் இவ்வாறான சம்பவங்கள் நடக்குமா? ஜெயசீலியும் ராஜாவும் சென்றபிறகும் அவருக்குள் சிந்தனைகள் ஓடின. எது எவ்வாறாக இருந்தாலும், பெற்றோரைக் கூப்பிட்டு அவர்கள் காதில் போட்டு வைப்பதே சிறந்தது எனத் தீர்மானித்துக்கொண்டார். அறைக்குள் நுழைந்த மூவரையும் அங்கிருந்த நாற்காலிகளில் அமரச் சொன்னார் ஜான்பால். இரண்டு நாற்காலிகளே இருந்தன. இன்னொரு நாற்காலி கொண்டுவரப்பட்டது. தலைமையாசிரியருக்கு ஒரு விஷயம் நெருடியது. புகார் அளிக்கவந்த பெண்மணியை நிற்கவைத்தே பேசி அனுப்பிவிட்டோம். ஆனால், புகாருக்குள்ளானவர்களை உட்காரவைத்துப் பேசப் போகிறோம். இதை எப்படி எடுத்துக்கொள்வது. அவருக்கே இது விசித்திரமாக இருந்தது. இவர்களிடம் கொஞ்சம் அதிகமாகப் பேசவேண்டுமே. அதற்காகவாவது அவர்களுக்கு நாற்காலிகளைப் போடடுத்தான் ஆகவேண்டும். இந்த நாற்காலிகள், அவர்களுக்குப் புத்திமதி சொல்லப் போகின்றன. ஜான்பாலுக்குள் மீண்டும் ஒரு புன்னகை. “நீங்கதான் அந்தப் பையனோட அப்பாவா…” நடுத்தர வயதுக்குரியவரைப் பார்த்துக் கேட்டார் ஜான்பால். அவர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்திருந்தார். சிறுவியாபாரியின் லட்சணங்கள் கொண்டிருந்தார். “ஆமா சார். இந்தப் புள்ளதான் அவனோட அம்மா!” சற்று வயதானவரைக் காண்பித்து, “இவங்க என்னோட அப்பா. பையனோட தாத்தா!” என்றார். ஜான்பால், தான் பேசப் போகும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என நினைத்தார். நம்முடைய வேலை இவர்களைக் கோபப்படுத்துவது அல்ல. இவர்களுக்குச் சில உண்மைகளைத் தெரியப்படுத்தவேண்டும். எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையை உருவாக்கவேண்டும். அது நம் பள்ளித் தொடர்புடையதாகவும் இருக்கவேண்டும். “பரவாயில்ல… உங்க பையன் ஓரளவு நல்லாப் படிக்கிறான். கொஞ்சம் சுட்டித்தனத்தைக் குறைச்சுக்கிட்டான்னா நல்லாயிருக்கும்” பேச்சை ஆரம்பித்துவிட்டார் ஜான்பால். “ஆமா சார். பையனோட அம்மா எங்கூருப் பெரியத்தனத்துக் கிட்டப் பேசுனாங்க சார். அவங்களும் எங்க பையனைக் கூப்பிட்டுக் கண்டிச்சாங்க. நாங்களும் கண்டிச்சிட்டோம்!” ஏற்கனவே இதுபற்றிய உரையாடல் அவர்கள் பகுதியில் ஓடியிருப்பதால், தன்னுடைய வேலை எளிதாக இருக்கும் என நினைத்தார் ஜான்பால். “எறும்பைப் புடுச்சுச் சட்டைக்குள்ள போடற அளவுக்கு அந்தப் பய என்னதான் பண்ணினான்” பையனோட அப்பாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசினார் ஜான்பால். “சார்… எங்க பய செஞ்சது தப்புத்தான் சார். அத கண்டிக்கிறோம் சார். எதுக்குப் பண்ணினான்னு ஆராய்ச்சியெல்லாம் எதுக்கு சார்” அவர் குரல் சற்று உயர்ந்திருப்பதாகவே தோன்றியது ஜான்பாலுக்கு. “இருப்பா நான் சொல்றேம்ப்பா…” என இடைமறித்த பெரியவர், “எங்க பையன் அவனைக் கூப்புட்டு, கூப்புட்டுப் பார்த்திருக்கான். அவன் திரும்பல. அவனுக்கென்ன அவ்வளவு திமிருன்னு சட்டைக்குள்ள எறும்பைப் புடிச்சுப் போட்டுட்டான்” பையனின் அப்பா சங்கடத்துடன் நெளிந்தார். “அப்பா கொஞ்சம் சும்மா இருங்கப்பா!” என்றார். ஜான்பால் இப்போது பெரியவர் கண்களை நேருக்குநேர் பார்த்துப் பேசினார். “கொஞ்சம் இருங்க. பெரியவர் பேசிக்கிட்டு இருக்குறார்ல. சொல்லுங்க. பலமுறைக் கூப்பிட்டும் திரும்பலைன்னா கோபம்தானே வரும். உங்க பையன் சரியாத்தான் செஞ்சிருக்கான்” என அவரைத் தூண்டிவிட்டார். பெரியவர் இன்னும் சில செய்திகளைச் சொல்லும் மனநிலைக்குத் தள்ளப்பட்டார். உற்சாகத்துடன், “அது மட்டுமில்லங்க தம்பி. சைக்கிள்ல வீட்டுக்கு வரும்போது, வேணும்னே எங்க பயலை முந்தியடிச்சுட்டு வருவானாம். அவனுக்குக் கோபம் வருமா வராதா?” என்றார். “எல்லாம் சரிதான். நான் உங்க பையன்னு நினைச்சுக்குங்க. எனக்கும் இதே மாதிரி நடக்குதுன்னு வச்சுக்கோங்க. நான் கூப்பிட்டு, அந்தப் பையன் திரும்பலைன்னா, முதுகுல தட்டிக் கூப்பிடுவேன். எறும்பைப் பிடிச்சுப் போடமாட்டேன். இதே மாதிரி அந்தப் பையன் உங்க பையனோட சட்டைக்குள்ள எறும்பைப் புடிச்சுப் போட்டிருந்தா…” பேச்சை இடைமறித்து, “அதெப்படி… எம் பேரன் சட்டைக்குள்ள எறும்பை விட்டுடுவானா அவன். நாங்க பார்த்துக்கிட்டுச் சும்மா இருப்போமா” என்றார் சற்று உயர்ந்த குரலுடன். “அவ்வளவுதாங்கப்பா! இங்க படிக்கிற எல்லா பிள்ளைங்களும் உங்களோட பேரனுங்கதான். எங்களுக்கும் அவங்க பிள்ளைங்க மாதிரிதான். அவங்களுக்குக் கஷ்டம் வராமப் பார்த்துக்கறது எங்களோட கடமையில்லையா… உங்களோட கடமையும் கூட. அப்புறம்… உங்க பையனை முந்தியடிச்சுக்கிட்டுச் சைக்கிள் ஓட்டுறதாச் சொன்னீங்க. நான் உங்க பேரப்புள்ளையா இருந்தேன்னா… பெடலை இன்னும் வேகமா மிதிச்சு, அந்தப் பையனை முந்தியடிச்சு ஓட்டுவேன். என்னோட இலக்கு முந்தியடிக்கிறதுல இருக்குமே ஒழிய, அவனுக்குத் தண்டனை கொடுக்கறதுல இருக்காது. இப்ப… அந்தப் பையன் உங்க பையனைவிட நல்ல மார்க் எடுக்குறான். உங்க பேரனும் அவனை முந்தியடிச்சு நல்ல மார்க் எடுக்கட்டும். போட்டியின்னு வந்துட்டா எல்லோரும் நல்லா படிப்பாங்கதானே! இதுல உயர்ந்தவன் தாழ்ந்தவன்னு ஒண்ணுமே இல்ல. எல்லோரும் மனிதப் பிறப்பா பிறந்திருக்கோம். படிக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும், நல்ல மனிதனா வரணும்னுதான் சில கட்டுப்பாடுகளைக் கொடுத்திருக்கோம். இந்தப் பள்ளியில படிப்பை முடிச்சு வெளியேறுற ஒவ்வொரு மாணவனும், நல்ல மதிப்பெண்ணோட மட்டுமல்ல… நல்ல மனிதருக்குரிய குணங்களைக் கொண்டவனா வெளியேறனும். முக்கியமா, எல்லாவிதத்துலேயும் ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயத்தை உருவாக்குற மனிதனா இருக்கணுங்கறதுக்குத்தான் இவ்வளவுதூரம் பாடுபடறோம்!” ஜான்பால் உணர்ச்சியுடன் உடல் நடுங்கப் பேசினார். அவர் பேச்சிலும் எண்ணத்திலும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. பதினைந்து நாட்கள் அமைதியாக ஓடின. ஜெயசீலிக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. இருந்தாலும், மனதின் ஓரத்தில் ஒரு கேள்வி! “என்னடா… ராஜா! அந்தப் பயலுக ஒண்ணும் தொந்தரவு பண்ணலையே!” “இல்லம்மா… நான் அவனை நிமிர்ந்துகூடப் பார்க்கறதில்ல. அவன் இருக்குற பக்கமே போறதில்ல” என்றவனுக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை. “என்னடா சிரிக்கிற?” “அவன் ஒரு லூசும்மா… எம்முன்னாடி வந்து டான்ஸ் ஆடிக்கிட்டே இருக்காம்மா! எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வரும். அடக்கிக்கிட்டு உட்கார்திருப்பேம்மா!” எனச் சொல்லிவிட்டு, அங்கே சிரிக்காதச் சிரிப்பை, சிரித்துத் தீர்த்தான். “டேய்… அவன் முன்னாடி சிரிச்சு வச்சுடாதே… அப்புறம்…” என எதையோ சொல்லவந்து சிந்தனையில் ஆழ்ந்தார். ’அவன் லூசு இல்லடா… உன்னை வெறுப்பெத்தத் தாண்டா அப்படி ஆடுறான்’ என்பதை அவர் சொல்லவில்லை. நம்ம பயலுக எவ்வளவு கவனமாக இருக்கவேண்டி இருக்கு?

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.