logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

ஜெ.விஜிவீரா

சிறுகதை வரிசை எண் # 51


*புதிதாய் பிறப்போம் " கிருத்திகா நடுத்தர குடும்பம் தான். கணவன் மாதவன் ஒரு எலக்ட்ரானீக்ஸ் கம்பெனில சூப்ரவைசரா இருக்கான். அழகான ரெண்டு பெண் பிள்ளைகள். மூத்தவளுக்கு பனிரெண்டு வயசு . சின்னவளுக்கு ஏழு வயசு . கிருத்திகாக்கு சமையல்னா ரொம்ப பிடிக்கும். வித்தியாச வித்தியசமா சமைச்சு அசத்திகிட்டே இருப்பாள். இவளே மசாலா பொருட்களை அரைச்சு தயாரிக்கிற சைவ,அசைவ சமையல் அவ்வளவு அற்புதமான இருக்கும். ,நெருங்கின உறவுகள் நட்புகள் வீட்டு விசேஷம்னாலும் இவ தான் அடுப்படில புகுந்துக்குவா. அப்படி ஒரு கைபக்குவம், அவளுக்கும் அவ்வளவு ஆர்வம்,அவளோட பிரண்ட்ஸ் எல்லாம் சமையல் ராணி னு தான் சொல்லுவாங்க. அவளோட நெருங்கிய தோழியுடைய மகள் பர்த்டே பார்டிக்கு போன போது இவ சமைச்சதை சாப்பிட்ட அவங்க உறவினர் ஒருவர் "எங்க லேடீஸ் ஹாஸ்டல் முன்னாடி ஒரு மெஸ் காலியா இருக்கு.முதல்ல சமைச்சவங்க சரியில்லைனு காலி பண்ண சொல்லிட்டோம்,உங்க சமையல் பிரமாதமா இருக்கு,பொண்ணுகளும் சாப்பாட்டுக்கு கஷ்டப்படவேண்டியதில்லை.நீங்க வந்து மெஸ் வைச்சு பாருங்களேன்" என்றார். இதை எதிர்பார்க்கவேயில்லை கிருத்திகா. மாதவனிடம் கேட்டாள் "தானா ஒரு வாய்ப்பு வருதுங்க ஹோட்டல்னா கூட இத்தனை சாப்பாடு விக்குமா ,விக்காதா னு தெரியாது.இது கண்டிப்பா ஒரு வருமானம் வந்துரும் ,அங்க சமைக்கிறதே நாம வீட்டுக்கும் கொண்டுவந்துக்கலாம் குழந்தைகளையும் அத்தை பார்த்துக்கிறேனு தான் சொல்றாங்க"என்றாள். மாதவனும் சின்ன தயக்கத்திற்கு பின் ஒத்துகொண்டான். விளையாட்டாக ஆரம்பித்தது அவளோட கைபக்குவத்தால விரும்பி சாப்பிட ஆரம்பிச்சாங்க. மூன்று வேளை உணவுடன்,பலகாரங்களும் போட ஆரம்பித்தாள்.ஹாஸ்டல் பொண்ணுக ஊருக்கு போகும்போதும் லட்டு,மூறுக்கு ,மிக்ஸர்,என்ன வேணுமோ செய்யசொல்லி வாங்கிட்டு போவாங்க. எதிர்பார்த்ததை விட அதிகமா வருமானம் வர ஆரம்பிச்சுது...ரெண்டு வருசத்துல பெரிய தொகை சேமிக்க முடிஞ்சுது. மாதவன் உதவிக்கு வந்தா இனனொரு கிளை கூட ஆரம்பிச்சு நடத்த முடியும் என்று நம்பிக்கையாக பேசினாள் கிருத்திகா. முதலில் மறுத்தாலும் இதில் வந்த வருமானமும், நம்பிக்கையான ஆள் கிடைப்பது சிரமம் என்பதாலும் ஒத்துக்கொண்டான் மாதவன் . வாடிக்கையாளரை கவரும் விதமா கொஞ்சம் அதிகமாக செலவு செய்து புதிய கிளை திறந்தார்கள். ஆரம்பித்து மூன்று மாதங்கள் நன்றாகவே ஓடியது. கொரோனா எனும் பேரரக்கன் வரும்வரை. லேடீஸ் ஹாஸ்டலில் உள்ள பெண்கள் வொர்க ப்ரம் ஹோம் என்று காலி செய்துவிட நிலமை எப்போது சீராகும் என்று தெரியாமல் ஹாஸ்டலை விற்க ஏற்பாடு செய்ய மெஸ்ஸை காலி பண்ண வேண்டிய கட்டாயம் ஆனது. கொரானா என்பதால் வெளியில் சாப்பிடுபவர்கள் குறைந்ததால் புதிதாக திறந்த உணவகத்தை வருமானமில்லாமல் வாடகை தருவது சிரமம் என்பதால் அதையும் மூட வேண்டி ஆனது. கையிலிருந்த கையிருப்பில் ஒரு வருடம் எப்படியோ ஓடியது. மாதவனுக்கும் வேலை எதுவும் அமையவில்லை.. கிருத்திகாவும் எத்தனை முயற்சி செய்தும் பெரிதாக ஆர்டர் எதுவும் வரவில்லை.சின்ன சின்ன ஆர்டர்களில் சாப்பாட்டுக்கு சிரமம் இல்லாமல் இருந்தது. ஒரு வருடம் எப்படியோ ஓடியது... கையிருப்பு குறைந்து கடன் வாங்கும் நிலையானது. மாமியார் மனசே சரியில்லை கோயிலுக்கு போயிட்டு வரேன் என்று போகவும், கிருத்திகா மாதவனிடம் "பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்.வாடகை ரெண்டு மாசம் பாக்கி "என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வீட்டுக்காரம்மா"இந்தம்மா கிருத்திகா இந்த மாசம் வந்தா மூனு மாசம் ஆகுது வாடகைப்பணம் இப்படி நிறுத்தி வைச்சா நான் எங்க போறது.என் பொழப்பு இதுல தானே ஒடுது. ஒன்னு வாடகை காசை எடுத்து வை...இல்லை வீட்டை காலி பண்ணுங்க..வீட்டை பார்க்க ஆளுக வருவாங்க.சொல்றதை சொல்லிட்டேன் ."என்று கடுமையாக எச்சரிக்க அவமானத்தால் கூனி குறுகி போனாள்.மாதவன் கோபத்தோடு "நான்,ஒழுங்கா வேலைக்கு போயிட்டு இருந்தேன் .பெருசா சம்பாதிச்சு கொட்டறவளாட்டா வேலையை விடச்சொல்லி குடும்பத்தை நடு தெருக்கு கொண்டுவந்துட்டே"என்று கத்தினான் . "என்ன பேசறீங்க?நாம எதிர்பார்த்ததை விட நல்ல வருமானம் வந்தது.இதுல என் தப்பு என்ன இருக்கு?சூழ்நிலைதான் காரணம்". " நீ தாண்டி காரணம் பேசாம வீட்ல இருந்து இருந்தாகூட இன்னைக்கு இந்தளவுக்கு பிரச்சனை வந்து இருக்காது"என்றவனை கோபத்துடன் " திரும்ப திரும்ப என்னையே சொல்லாதீங்க.ஒரு வருசம் வருமானமே இல்லாம உட்கார்ந்து சாப்பிட்டது இந்த மெஸ் காசுலங்கிறதை மறந்தராதீங்க" என்றவளை பளார் என்று அறைந்து " உன் வருமானத்துல உட்கார்ந்து சாப்பிட்டேனு சொல்லிகாட்டறியா?.இனி வேலை கிடைக்காம சாப்பிடறதுக்கு விசத்தை சாப்பிடலாம்" என்றவனை பார்த்து " நீங்க ஏன் விசம் சாப்பிடனும் நான் தானே எல்லாத்துக்கும் காரணம் நானே சாகறேன் " என்றவளை" சாகுடி என்று கதவை டொப்பென சாத்திவிட்டு வெளியே சென்றான். குழந்தைகள் பயந்து போய் என்ன செய்வதென அறியாமல் அழுதுகொண்டு அமர்ந்து இருந்தார்கள். "கடவுளே ,நான் என்ன தப்பு பண்ணினேன் ஏன் இப்படி சோதிக்கிறே..இனியும் எதையும் தாங்கிக்கிற சக்தி இல்ல உன் கிட்டயே கூப்பிட்டுக்கோ "என்று மாமியார் தூக்கமே வராத சமயத்தில் போட்டுக்கொள்ளும் தூக்கமாத்திரையை எடுத்து முழுங்கி விட்டாள் . ஏதோ ஒரு வேகத்தில் முழுங்கினாளே தவிர ,குழந்தைகளை பார்த்ததும் பயம் தொற்றிக்கொண்டது. அவளே மாதவனுக்கு போன் செய்து சொல்லிவிட்டாள். பதறி அடித்து "அடிப்பாவி என்ன காரியம் பண்ணிட்டே...ஏதோ கோபத்துல திட்டுனதுதான்..என்னை விடு இந்த குழந்தைகள் உன்னை விட்டுட்டு எப்படி இருக்கும்..எங்களுக்கும் குடுத்து இருக்க வேண்டியது தானே" என்று அழுது உடனே டாக்ஸி பிடிச்சு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று அட்மிட் செய்தான் மாதவன். "உடனே கூட்டிட்டு வந்தததால் பயப்பட ஒன்னும் இல்லை , ஒரு நாள் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு நீங்க கூட்டிட்டு போயிக்கலாம்"என்று டாக்டர் சொல்லவும் தான் உயிரே வந்தது. அடுத்த நாள் விசயம் கேள்விபட்டு கிருத்திகாவின் நெருங்கிய தோழி சுதா பார்க்க வந்தாள். " என்னடி இப்படி பண்ணிட்ட உயிர் போயிருந்தா என்ன பண்ணி இருப்ப அந்த குழந்தைங்க என்ன பாவம் பண்ணுச்சு எல்லா பிரச்சினைகளுக்கும் தற்கொலை தான் தீர்வுனா உலகத்துல பாதி பேரு தற்கொலை பண்ணிக்கணும். புருஷன் பொண்டாட்டி சண்டை, அவமானங்கள், காதல் தோல்வி பரீட்சையில பெயில் கிடைச்ச குரூப் கிடைக்கலனு தினம் தினம் பேப்பர்ல தற்கொலை செய்தி வந்துட்டுதான் இருக்கு. பத்தாவது பெயிலானவன் இன்னைக்கி வாழ்க்கையை நல்லா வாழ்ந்துகிட்டு இருக்கான்.+2 ஸ்கூல் பர்ஸ்ட் எடுத்துட்டு டாக்டர் சீட் கிடைக்கலனு தற்கொலை பண்ணிக்குதுக..யாரு புத்திசாலி.தற்கொலை பண்ணினவங்களோட குடும்பங்கள பாரு அவசரத்துல எடுத்த முடிவு தானே தவிர யாரும் அதே கஷ்டத்துல தொடர்ந்து இருக்கிறது இல்ல. நம்ம பிரபாவோட அப்பா ஒரு லட்ச ரூபாய் கடனுக்காக தற்கொலை பண்ணிகிட்டார் .அவங்க அம்மா ஒத்த ஆளா பிரபாவையும் ,அவ தம்பியையும் படிக்க வைக்கலையா? இன்னைக்கு பிரபா புரபொசர் ,அவ தம்பி பேங்க்ல மேனேஜர். சூழ்நிலை மாறும் நாளைக்கே மாதவன் அண்ணாக்கு வேலை கிடைக்கலாம் உனக்கு பெரிய ஆர்டர் கிடைக்கலாம். இன்னைக்கு ஜெயிச்சு பெரிய ஆளா இருக்கிறவங்க கூட பல கஷ்டத்தை தாண்டி தான் வந்து இருப்பாங்க. கஷ்டத்துல கூட குழந்தைகளை வளர்த்திடலாம் ஆனா அம்மா இல்லாம வளர்ற குழந்தைகளோட கஷ்டத்தை நீ கொஞ்சமாவது யோசிச்சியா? என்று முடிக்கும்முன் அழுதே விட்டாள் கிருத்திகா " அவசரத்துல பண்ணிட்டேன் சுதா.இனிமே இந்த தவறை நினைச்சு கூட பார்க்க மாட்டேன். குழந்தைகளை நினைச்சு ரொம்பவே பயந்துட்டேன்.பிழைப்பனானு ஒரு பயம் வந்துருச்சு. நீ சொன்னது எனக்கு புதுசா பிறந்த மாதிரி இருக்கு.நான் கண்டிப்பா ஜெயிப்பேங்கிற நம்பிக்கை இருக்கு" என்ற கிருத்திகாவின் கண்களில் புதிய உத்வேகம் தெரிந்தது.. (எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல )

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.