J.KRITHTHURAJA
சிறுகதை வரிசை எண்
# 49
ஆமைகளின் வெளி
சந்தியா வீட்டிற்கு பொலிஸ் வந்து சென்ற செய்தி எனது தாத்தாவிற்கு எப்படியோ தெரிந்துவிட்டது. “அடா பேரா சங்கதி உண்மையோ…. இவனுகள் திருந்திற வாடிக்க இல்லயாமா.. சைக் விளங்குதில்லையே ஒருத்தருக்கும்” என்றார் தாத்தா.
அது எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அப்போது காலை பத்து மணியிருக்கும். ஒற்றைக் காதில் தொலைபேசி, “இண்டைக்கும் தேடினன் மச்சான். ஆனா ஒண்டு கூட கிடைக்கலடா, தெக்குப் பக்கம் போனா அங்க எங்கயும் பாக்கிறன் மச்சான்..” என்ற அவனது தொடர் தோல்வியின் பதில்களை கேட்டவனாக வீதிக்கு ஏறிவிட்டேன். வாகனங்கள் தெருவை நிரப்பியிருந்தன. அதில் இரண்டு வாகனங்கள் பொலிஸாருடையது.
“உண்மையா சந்தியா வீட்டில இல்லையா? அல்லது நீங்க பொய் சொல்றீங்களா?” என்று சற்றே அதிகாரத்தொனியுடன் கேள்விகளைக் கேட்டார் ஒரு பொலிஸ் அதிகாரி. ஏனைய பொலிஸார் வீட்டினுள் சோதனை போடுவதற்கு ஆயத்தமானார்கள்.
“உண்மையில இல்ல சேர். அவர் எங்கயோ போய்ட்டார். வர பின்னேரமாகும்” என்று எவ்வளவோ சொல்லிப்பார்க்கிறாள் சறோயா. அவர்களோ நம்புவதாய் இல்லை. மீண்டும் மீண்டும் கேள்விகள் பல… கடைசியில் “வேணுமெண்டா உள்ளவந்து செக் பண்ணுங்க சேர்” என்று வீட்டைப் பரிசோதிப்பதற்கு அனுமதி அளித்தாள்.
வீட்டின் பின் பக்கம் ஒருவர் போனார். வேலியைத் தாண்டி எட்டிப்பார்த்தார் மற்றவர். வெடுக்கு மணம் வருகிறதா? அல்லது இரத்தத் துளிகள் ஏதும் சிந்தியுள்ளனவா? என்று சிலர். மோப்பநாய் விட்டு தேடாத தேடல். சின்னறைக்குள் மட்டுமல்ல சாமி அறையினுள்ளும் தேடுதல் போட்டனர். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை வேதக்காரர்களும் சாமியறைக்குள் மச்சம் அணுகுவதில்லை என்று. சமயலறைக்குள் சென்று கறிச்சட்டியைப் பார்த்தனர். கறி முருங்கைக்காய் தான்.
எந்த தடயமும் இல்லை. எதையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. திரும்பினர் படைபலத்தோடு. சும்மா விடுவாளா சறோயா “ஆற்ரையும் கண்ட கதையையும் கேட்டின்ரு வந்திர வேண்டியது…. சும்மா எங்களயே வந்து நோண்டுங்க. ஊர்ல எவ்வளவோ பிரச்சின நடக்குது அதுகளத் தடுக்க வக்கில்ல. இங்க மட்டும் வந்திருவினம்” என்று ஒரு வாங்கு வாங்கிவிட்டாள்.
பொலிஸார் சென்று விட்டாலும் ஒரு வித பயம் சறோயாவை விட்டுப் போகவில்லை. எப்போதும் அவர்கள் திரும்பி வந்துவிடலாம். இறைச்சித் துண்டக் கண்ட நாய் விடாது என்பது இவளுக்குத் தெரியும். மகனைக் கூப்பிட்டு “அப்பாட்டப் போய், இறைச்சிய வெட்டி பங்குகளக் குடுத்திற்று, நம்ம பங்க பிறிச்சுக்க வச்சிற்று வரச் சொல்லு” என்று சேதி அனுப்பினாள்.
தனது வீட்டிற்கு நான்கு காணிகள் கடந்து காத்திருந்தான் சந்தியா.
ஏற்கனவே வயிற்றுப்பகுதி வெட்டப்பட்டு இரத்தத்தை வெளியெடுத்தாயிற்று. இரத்தத்தை ஒரு கையிலும் மிகுதி தலை துடிக்கும் உடலை மறுகையிலும் ஏந்தி சிறுதுளியும் சிந்திவிடாமல் பக்குவமாய் வேலி கடக்கும் சாதுரியம் சந்தியாவின் தனித் திறமை. பொலிஸ் என்ன பொலிஸ் இப்படி எத்தனை பேர் வந்தாலும் இவனையும் இவனது ஆமைவெட்டும் தொழிலையும் யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை.
அந்த துறையில் சரி பக்கத்துத் துறையில் சரி யாருக்கு ஆமை மாட்டினாலும் அறுப்பதற்கு இவனைத்தான் கூப்பிடுவார்கள். அநேகமானவர்களுக்கு பொலிஸ் பயம். மற்றவர்களுக்கு உண்பதில் விருப்பமில்லை. அதனால் யாருடைய ஆமையானாலும் வெட்டி அதனை பங்காக்கும் பெரும் பொறுப்பு சந்தியாவினுடையது. அதற்காக கத்தி ஒன்றும் அவனிடம் காணப்படுகிறது. ஆமை வெட்டுவதற்கு முன்னர் தெருவீதியைக் கடந்து உளவாளிகளை ஏற்பாடு செய்துவிடுவான். உடனுக்குடன் தகவல் பெற்றுச் செயற்படுவதனாலேயே அவனால் இவ்வளவு காலம் இத் தொழிலை பொலிஸாரிடம் மாட்டிக்கொள்ளாமல் செய்ய முடிகிறது.
அவன் இன்றும் ஆமை இறைச்சி வெட்டி பங்கிட்டதை தாத்தா எப்படி அறிந்துகொண்டார் எனத் தெரியவில்லை. ஆனால் அவருக்கு தெரிந்துவிட்டது.
தாத்தா பத்தாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். ஆனால் படிக்காத மேதை அவர். அவரது தினச் செயற்பாடுகளில் பத்திரிகை வாசிப்பு கட்டாயமானதொன்று. மூன்று மணியானால் சைக்கில் எடுத்துக்கொண்டு நூலகத்துக்கு போய் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் உடையவர். நானும் எத்தினையோ முறை யோசித்துள்ளேன், என் தாத்தாவிற்கு ஏதுவாக அவரது உடலுக்கு கஸ்ரம் கொடுக்காதபடிக்கு நம்முடைய சனசமூக நிலையத்திற்கும் தினம் பத்திரிகை வருவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று. ஆனால் என்ன செய்வது பதின்மூன்று வயதுச் சிறுவன் சொல்லி பதினாறும் பெற்றவர்கள் செய்யவா போகிறார்கள். எப்படி இருந்தாலும் என் தாத்தாவின் வாசிப்புப் பழக்கம் குறையவில்லை. இதுதான் சமூக நலனில் தாத்தா அக்கறை செலுத்தக் காரணமானது. பத்திரிகையில் வரும் கட்டுரைப்பகுதிகள், பொது அறிவுப்பகுதி, உலக நடப்புப்பகுதி என்பன அவரது விருப்பத்திற்குரிய வாசிப்புப் பகுதி. இதனால் தான் அவர் படிக்காத மேதையாக விளங்குகிறார். நான் என்ன சந்தேகம் கேட்டாலும் தனக்கு தெரிந்த வரை அதைப் பற்றி விளக்கிச் சொல்லுவார்.
கற்ற கல்வி வாழ்கைக்கே என்று கூறிக் கொள்ளுபவர், தான் கடல் சார்ந்து பெற்ற அறிவை தனது சொந்தக் கடற்பரப்பிலேயே பிரயோகிக்க முடியாமல் தவிக்கிறார். இதனுடைய பிரதிபலிப்பே இன்று சந்தியா செய்த செயலுக்கு அவர் காட்டுகிற எதிர்ப்பாகவும் இருக்கலாம்.
முன்னொருமுறை நான் தாத்தாவுடன் கடற்கரைக்குப் போயிருந்தேன். அப்போது தை மாதத்தின் தொடக்கம். வாடைக்காற்று அளவோடு அவாவும் காலம். தாத்தா பெரும்பாலும் காலையில் மற்றும் மாலையில் கடற்கரைக்குச் செல்வது வழக்கம். அப்படியே அடையல் பொருட்கள் ஏதும் அகப்பட்டால் அதையும் கையோடு கொண்டுவருவார். நானும் அவரோடு சேர்ந்து சென்றால் சிறிய றப்பர் மிருக உருவங்கள், பொம்மைகள், சில்லுப் போயாக்கள் என்பவற்றைக் கைப்பற்றிக் கொள்வேன். அன்று செல்லும் போது கரையில் ஏதோ ஒத்திக் கொண்டிருந்தது. கறுப்பு நிற பாதி உருளை வடிவம். ஓடிப்போய் கையால் தொட்டு “தாத்தா இது என்ன” என்று கேட்க, கையில் அந்த கறுத்தப் பொருளை எடுத்துத் தடவியவராக “இதுதான் ஆமையோடு” என்றார்.
“ஏன் தாத்தா பாம்பு செட்டைய கழட்டிப் போடுற மாதிரி ஆமைகளும் ஓடுகள கழட்டி மாத்துமோ” என்று கேட்டேன். “இல்ல பேராண்டி இது செத்துப்போன ஆமையோட ஓடு” என்றார். “அப்போ ஆமையட உடம்பு எங்க தாத்தா”. “அதுவா இப்பிடி செத்துப்போற ஆமையட உடல கொஞ்சம் கொஞ்சமா மீனுகள் சாப்பிட்டிரும். ஆனா ஓட்ட எந்த மீனாலயும் சாப்பிட ஏலாது. அதால தான் இது மட்டும் கரையில அடையுது” என்று விளக்கம் சொன்னார். அந்த ஆமையோட்டை பார்த்ததில் இருந்து, எனக்கு கடல் ஆமைகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று.
ஒரு தடவை பாடசாலை போய்க் கொண்டிருந்தேன். கடும்மழைக் காலம். களிமண் நிலங்களில் மழைநீர் தேங்கி அந்தப் பக்கம் முழுவதும் மழைநீர் ஓடிக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல எடுத்து வைக்கப்பட்ட எனது காலுக்கடியில் பனை ஊமல் போன்று ஏதோ நகருவதைக் கண்டேன். அது ஓர் ஆமை. எனது உள்ளங்கை அளவே இருந்தது அது. உடனே முருகைக் கற்களைக் கொண்டு நிலத்தில் கூடமைத்து அந்த ஆமையை பத்திரப்படுத்தி விட்டு பாடசாலை முடிந்ததும் எடுத்துக் கொண்டு வீடு சென்றேன். உடனே தாத்தாவிடம் காட்டி “இங்க பாத்திங்களா தாத்தா குட்டி ஆமை ஒண்டு கடலில இருந்து கரைக்கு வந்திருச்சுப் போல” என்று சொன்னேன். “இது கடலாமை இல்ல பேராண்டி சருகாமை”. “அப்பிடியண்டா என்ன தாத்தா”. “அதுவா இந்த ஆமைகளுக்கு கடலாமை மாதிரி இல்லாம நடந்து போறத்துக்கு ஏத்த மாதிரி நகமுடைய கால்கள் இருக்கும். இந்த ஆமைகளால தான் தனது உடம்ப முழுவதுமா தனது மேலோட்டுக்க அடக்க முடியும். மழைகாலத்தில குளங்களில வாழுற இந்த ஆமைகள் மழையில்லாத காலத்தில மரச்சருகுகளுக்க ஒளிந்தே வாழும். அளவில மிகப்பெருசா வளர முடியாத இந்த ஆமைகள் அதிகபடி இரண்டு கிலோ வரைக்கும் இருக்கும்”. “அப்படியா தாத்தா அப்போ நம்ம சாப்பிளின் வீட்டு கிணத்துக்குள்ள நிக்கிற ஆமை இந்த சருகாமை தானா? அது சரி இத சாப்பிடுவாங்களா..” “பின்ன சாப்பிடாமயோ.. மூல வருத்தம் ஏற்பட்டிருக்கிற ஆக்களுக்கு இந்த ஆமை இறைச்சி ரொம்ப நல்லது.. ஆனா இப்போ இந்த ஆமைகள காணவே முடியிறதில்ல.. நீதா ஒண்டக் கண்டுபிடிச்சிருக்காய்” என்று சருகாமையைப் பற்றி தாத்தா சொன்னதெல்லாம் நினைவிலிருக்கிறது.
சருகாமையை பற்றி அறிந்து கொண்டிருந்தாலும்கூட கடலாமைகளை பற்றி அறிந்திருக்கவில்லை. அதனால் கடலாமைகள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும் என்று தோன்றிற்று. தாத்தாவுடன் கடலோரமாக நடக்கும் போது இவற்றைப் பற்றி கேட்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. “தாத்தா கடலாமைகள் நிறைய முட்டைகள் போடுமாமே நீங்க முட்டைகளப் பாத்திருக்கிறீங்களா”. “இல்ல பேராண்டி, என்னதான் ஆமைகள் கடலுக்குள்ள வாழ்ந்தாலும் முட்டைகள போடுறத்துக்கு கரைக்குத் தான் வரும். கரைக்கு வந்து மணலத்தோண்டி முட்டைகள போட்டிற்றுப் போகுமாம். ஒரு பெண்ணாமை ஒரு தடவையில குறைஞ்சது நூறு முட்டைகளாவது போடும் எண்டு சொல்லப்படுது, ஆனா நான் ஒருநாளும் முட்டைகள பாக்கல..”. “தாத்தா, நம்ம கடக்கரையிலயும் வந்து முட்ட போடுமோ?” “ஆமா.. பேராண்டி, நானே பல ஆமைகள கண்டிருக்கன். அதுகள் இரவிலதான் அதிகமா கரைக்கும் வரும்..”.
தாத்தா தனக்குத் தெரிந்த ஆமைகளின் பெயர்களை அடிக்கிக் கொண்டு போவார். பேராமை, அகலக்கடல், தோணியாமை, கிளிச்சொண்டன், பாலாமை, சருகாமை என்று பல வகையான ஆமைகளைப் பற்றி அவருக்குத் தெரிந்திருந்தது. இதில் தோணி ஆமைதான் விசேசமே. ஒரு மரக்கலம் அளவிற்கு வளரும் இந்த வகை ஆமை பலநேரம் மீனவர்கள் பீதியடையும் படி கடலில் சாகசம் காட்டிய வரலாறுகளும் உள்ளன. மூச்சு விடுவதற்கு தண்ணீரின் மேற்பரப்புக்கு வரும் ஆமைகளை பிடிப்பதற்கு பலரும் முயற்சி செய்தமையை தாத்தா கூறி என்னை கற்பனையில் மூழ்கச் செய்ததும் உண்டு.
தாத்தா பதினைந்து வயது முதல் கடற்றொழில்தான் செய்கிறார். எத்தனையோ ஆமைகள் வலையில் மாட்டியிருக்கிறதாம். அத்தனையையும் கரைக்குக் கொண்டுவந்து இறைச்சியாக்கி உண்டதாகத்தான் சொல்லியிருக்கிறார். கடந்த ஐந்து வருடமாக பத்திரிகைகள் வாசிப்பை தனது அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொண்ட பின்னர் இந்த நிலைமை மாறியதாகச் சொன்னார்.
தான் பல காலம் ஆமை இறைச்சி உண்டு வந்ததைப் பற்றி கூறியிருந்தாலும் கூட தற்போது ஆமைகளை இறைச்சிக்கு வெட்டுபவர்கள் மீது தாத்தா கோபம் கொள்வது எந்த வகையில் நியாயம் என்பதில் எனக்குப் பல கேள்விகள் இருந்தன. ஒரு நாள் “ஏன் தாத்தா ஆமையப் பிடிக்கிறதும், இறைச்சி சாப்பிடுறதும் தப்பா” என்று தாத்தாவிடம் வினாவிய போது எனக்கு அன்று பெரிய பாடம் ஒன்றையே கற்பித்து விட்டார்.
“அடா பேராண்டி, பழப்புளி இல்லாத ஊர்ல கொறக்காப்புளிய சமைச்சா தப்பாகுமா என்ன, ரெண்டும் புளிச்சுவைதானே. அதமாதிரித்தான் தீவில இருக்கிறவங்க ஆமை சாப்பிடுறதும். ஆனாலும் அதில ஒண்டக் கவனிக்கணும். ஒரு காட்டில் பத்து மான்கள் வாழ்கின்றன என வைத்துக்கொள். அவன் மான் பிடித்து சாப்பிட்டான், இவன் மான்பிடித்து சாப்பிட்டான் என்று சொல்லி ஒவ்வொருவரும் இருக்கிற மானப் பிடிக்க வெளிக்கிட்டா பத்து மானும் கறியாகும். அதன் பிறகு எக்காலத்திலயும் கறிக்கு மான் கிடைக்காது போகும். இது தான் பிழை. இந்த மாதிரி நேரத்தில கடைசி ரெண்டு மான்களயாச்சும் காப்பத்தனும் எண்டு நினைக்கிறது தப்பாகாதே. அதமாதிரித்தான் ஆமைகளும்”.
“அப்போ இப்போ கடலில ஆமைகள் இல்லையெண்டு சொல்ல வாறிங்களோ தாத்தா”
“அதுதான் இல்ல. ஆமைகளே கடலில இல்ல எண்டு சொல்ல வரல.. ஏன் எண்டா ஒரு பெண்ணாமையால நூறுக்கு மேல ஆமைக்குட்டிகள உருவாக்க முடியும் எண்டா எப்பிடி ஆமைகள் கடலில இல்லாம போகும். ஆனா இல்லாம போகும்”
“என்ன தாத்தா குழப்புறிங்க. இருக்குமா? இல்லையா? தெளிவா சொல்லுங்களன்”
“அடா, ஆமைகள் இனம் பெருகணும் எண்டா ஆண், பெண் எண்டு ரெண்டு வகையும் வேண்டுமெல்லோ…...”
“ஆமா..”
“இப்ப பிறக்கிற ஆமைக்குட்டிகள்ல தொண்ணூற்றைச்சு வீதம் பெண்ணா இருந்தா எப்பிடி சரியான இனப்பெருக்கம் நடக்கும்”
“ஐயோ தாத்தா…, கோழி முட்டைய அடை வச்சா அதுல சேவல் பிறக்கிறதும் பேடு பிறக்கிறதும் கோழியட கையிலயா இருக்கு. அதன்ர கருவில தானே எல்லாமே இருக்கு”
“இந்த விசயம் தான் ஆமை முட்டைகளில இல்ல. பெண் ஆமை போடுற முட்டைகள் மண்ணில புதைஞ்சிருக்கும்போது அந்த மண்ணுக்கு கிடைக்கிற காலநிலை குளிரா இருந்தா ஆண் ஆமைகளும், சூடா இருந்தா பெண் ஆமைகளும் உருவாகும்…. இப்ப மனிதச் செயலுகளால பூமியின்ர வெப்பம் அதிகரிச்சிருக்கிறதால அதிகபடியாக பெண்ஆமைகளே பிறக்குதாம். இப்பசொல்லு ஆமைகளின்ர இனம் அழியிறதுக்கு மனுசன் தானே காரணம்….
இந்த கடல்நீரில இருக்கிற அழுக்குகள உண்டு தண்ணீர சுத்தமாய் வச்சிருக்கிறதில ஆமைகளின்ர பங்கு பெரும்பங்கு. ஆனா நாம என்ன பண்றம் கையில கிடக்கிற பிளாஸ்ரிக் கழிவுகளப் பூராவும் கடலுக்குள்ள மிதக்க விடுறம். பாவம் ஜெல்லி மீனெண்டு நினைச்சு பிளாஸ்ரிக்க உண்டு இறக்கிற ஆமைகளின்ர தொகை கொஞ்சநஞ்மில்ல”. தாத்தா எடுத்த பாடத்தின் பின்னர் நானும் ஆமைகளை பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.
ஆனாலும் நிலைமை தினம்தினம் கைமீறியே நடக்கும். தாத்தாவும் சின்னஆமைகள் வலையில் மாட்டிக் கொண்டால் விட்டுவிடும்படி இங்குள்ளவர்களிடம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்வார். அப்படி அதையும் மீறி குட்டி ஆமைகளை சந்தியா போன்றவர்கள் வெட்டி பங்குபோடவே செய்தனர்.
அகலக்கடல் ஆமையென்றால் கடலிலே விட்டுவிடுவர் அதிகமானவர்கள், காரணம் இரக்கம் என்பதைவிட அந்த ஆமையின் இறைச்சி அதிகபடியான வெடுக்கு மணமுடையதாக இருப்பதே ஆகும்.
கடலாமைகளின் நிலை இப்படியிருக்க சருகாமையின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் ஓயாமல் கொட்டித் தீர்க்கும் மாரி மழையில் சிறிய குட்டைகள் நிரம்பிவிடும். அந்தக் குளத்தின் பல இடங்களில் காவோலையை போட்டுவிட்டு மறுநாள் வந்து மெதுவாக ஓலையை விலக்கி சருகாமைகளைப் பிடித்த ஞாபகங்கள் இப்போது கிடைக்குமா என்பது சந்தேகமே.. காலநிலை மாற்றத்தால் தொடர் வறட்சி. சருகாமைகளையும் விட்டுவிடவில்லை என்றே எண்ணுகிறேன். அதனால் தாத்தாவின் ஆசைப்படி சருகாமைகள் ஏதும் தரவைகளில் கிடைத்தால் அவற்றை நீருள்ள ஏதாவது குளத்தினுள் விட்டுவிட வேண்டும் என எண்ணினேன். அதற்காக தெற்குப் பக்க தரவைகளுக்கு செல்லுகின்ற நண்பர்களிடம் இது பற்றி சொல்லியிருந்தேன். அவர்களுக்கு கிடைத்ததும் தொடர் தோல்வி தான்.
சறோயாவின் வீட்டில் பொலிசார் பரிசோதனை செய்ததும், அவர்களிடம் மாட்டிவிடாதபடி சந்தியா தப்பித்துக் கொண்டதும் துறை முழுவதும் காதில் அடிபடும் கதையானது. இது இவ்வாறிருக்க “பின்ன விடுவாங்களா. ஆமை எண்டா சிங்களவற்ற கடவுளாம், கடவுள மண்டாடும்போது ஆமே எண்டு தா மண்டாடுவாங்களாம், அப்பிடிப்பட்டவங்க அத இறைச்சியடிக்க விட்டிருவாங்களா என்ன?” என்று கதைக்கும் இன்னொரு கூட்டமும் இருக்கத்தான் செய்தது.
இது யாருடைய பிழையுமல்ல. என்னுடைய தாத்தா மட்டும், தான் அறியும் விடயங்களை ஒவ்வொருநாளும் கோயில் பிரசங்கத்தில் சொல்லி இருந்தால், கண்முன் தெரிகின்ற கடல் பரப்புகள் ஆமைகளின் வெளிகளாகவும், நீரின் மேலே தென்படும் சிறிய கொப்பளங்கள் ஆமைத் தலைகளாகவும் இருந்திருக்க முடியுமோ என்னமோ…...
ஆமை இறைச்சி சமைக்கும் வாசம் மூக்கிற்கு வந்துசேர்ந்து, எந்நாளும் அழிவடையாப் புகழுடைய சந்தியா அண்ணன் தனது காரியத்தில் வெற்றி பெற்றமையை முரசங்கள் இன்றி அறிவித்தது.
அப்பாவின் தொழிற்கு உதவுகின்ற கத்தியை எடுத்து தொட்டுப் பாரக்கிறான் சறோயாவின் மகன். என்ன செய்வது அவனும் பிழைத்துக்கொள்ள கைத்தொழில் ஒன்று வேண்டும்தானே..
தங்கள் மோப்ப சக்தியால் பற்றைக்குள் கிடந்த ஆமை ஓட்டினை வெளியே கொணர்ந்து கடித்துக் குதறுகின்றன நாய்கள். அந்த ஆமை ஓடு, “பழைய ஆமை ஓடு இல்லை” என்று மறுத்துக் கூறுவதற்கு என் தாத்தாவைத் தவிர வேறு யாரும் அங்கே இல்லை….
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்