சகா
சிறுகதை வரிசை எண்
# 48
மன்னவன் வந்தானடி..!
சகா
முதியோர் இல்லத்தின் பின்புறம் இருந்த தோட்டத்தில் நாயைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் தேவிகா. “நீயாவது கடைசி வரை என்கூட இருப்பியா செல்லம்..”
அது “ம்.. ம்..” என முனகினபடி வாலை வேகமாக ஆட்டியது.
யாரோ கை தட்டும் ஓசை கேட்டு திரும்ப, அலுவலக உதவியாளன் ரமணியின் பதட்ட முகம். தேவிகாவை வரச் சொல்லி வேகமாக சைகை செய்தான். மெல்ல எழுந்தவள் அவனிடம் நெருங்கினாள்.
“உங்களைப் பார்க்க விசிட்டர் ஒருத்தர் வந்திருக்காரு. ஆபிஸ் ரூமே தீப் பிடிச்ச பரபரப்புல இருக்கு. சீக்கிரம் வந்து எல்லோரையும் காப்பாத்துங்க..”
புரியாமல் பார்த்தாள். “என்னைப் பார்க்கவா.? விளையாடாதே.”
“நீங்க தானே தேவிகா ராணி..? சொந்த ஊரு நாமக்கல், கணவர் பேர் மகாலிங்கம்.. தகவல் சரிதானே. கிளம்புங்க..” அவளை உடனிருந்து அழைத்துப் போகாமல் நகரமாட்டான் என்பது புரிய உண்மையிலேயே ஏதோ பிரச்சினை தான் என உணர்ந்தவளாக தன் மூட்டுவலியை மறந்துவிட்டு வேக நடையில் அவனைப் பின்தொடர்ந்தாள் தேவிகா.
வராண்டா தாண்டி முன்புறம் தனியறையாக இருந்த அந்த அலுவலகத்தை நெருங்க, நெருங்க அவளுள் படபடப்பு அதிகரித்தது. தன்னைத் தேடி யார் வந்திருப்பார்கள் என்கிற ஆர்வம் வடிந்து இனம்புரியாத மிரட்சி உருவாகியிருந்தது.
உள்ளிருந்து வந்த கசகசவென்று பேச்சுக் குரல்கள் அதை அதிகரித்தது. அறைக்குள் நுழைந்தவளுக்கு தூக்கிவாறிப் போட்டது. பிரம்பு நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி ஜம்மென்று உட்கார்ந்திருந்த மகாலிங்கம் அவளைப் பார்த்து முறைத்தார். “வாங்க மகாராணி..”
தேவிகா பதில் பேசத் தெரியாமல் அவரை வெறித்துப் பார்த்தாள்.
“என்ன பார்க்கறீங்க. என்னை உங்களுக்கு அடையாளம் தெரியுதா இல்லை, அறிமுகம் பண்ணிக்கனுமா..? ஓ, என்னைப் பார்த்த இன்ப அதிர்ச்சியிலே பேச முடியலையோ.” சிரித்தார். “நானே சொல்றேன்.. சார் நான் இவங்களுக்கு ஒருவகையிலே தூரத்துச் சொந்தம். அதாவது தாலி கட்டிய சொந்தப் புருசன், மன்னிக்கனும் முன்னாள் புருசன்..!”
தேவிகா மனதிற்குள் நடுக்கம் பரவ எல்லோரையும் அரைக் கண்ணில் பார்த்தாள். அலுவலக நிர்வாகி பத்மநாபன், மேனேஜர் சஃபி, உதவியாளன் ரமணி எல்லோரும் குழப்பத்தில் இருந்தனர்.
எல்லோரும் தேவிகாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மகாலிங்கம் சொன்ன வார்த்தைகளுக்கு அவள் என்ன பதில் சொல்லுவாள் என்கிற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருப்பதை புரிந்து கொண்டாலும் மெளனமாகவே இருந்தாள் தேவிகா. இந்த ஆள் ஏன் இங்கு வர வேண்டும்..?
சஃபி எல்லோர் சார்பிலும் ஆரம்பித்தான். “பாருங்க தேவிகா அம்மா. இவரு இங்கே வந்து இருபது நிமிசமாச்சு. பயங்கர கலவரம் பண்ணிட்டிருக்காரு. முதியோர் இல்லங்களை ஒழிக்க உச்சநீதி மன்றத்துல வழக்கு போடப் போறேன்னு குதிக்கிறாரு. யாரு இவரு.. நிஜமாகவே உங்க கணவர் தானா..?”
ஆமாம் என்றபடி தலையாட்டினாள் தேவிகா. “இங்கே ஏன் வந்தீங்க.? நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா உங்களுக்கு..?”
“ஏன்டி கட்டின புருசன் கல்லு மாதிரி உசிரோட இருக்கேன். இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி இல்லத்துல வந்து கிடக்கிறே. உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்கே..?” பதிலுக்கு சீறினார்.
“சார் அவங்களைத் திட்டாதீங்க..” பத்மநாபன் உதவிக்கு வந்தார். “யாராவது சந்தோசமான மனநிலையோட இங்கே வருவாங்களா.? அவங்க மகன் சதீஸ் தான் ஆறு மாசத்துக்கு முந்தி இங்கே கொண்டு வந்து அவங்களை சேர்த்து விட்டுட்டுப் போயிருக்காரு..”
“எவ்வளவு ஃபீஸ்.? எத்தனை கறக்கறீங்க ஒவ்வொருத்தர் கிட்டயிருந்தும்..” என்றார் நக்கலாக.
பத்மநாபன் பதில் பேசாமல் தேவிகாவைப் பார்த்தார்.
“ஏன்டி..” மனைவியிடம் திரும்பினார். “நீயும் உன்னோட தவப்புதல்வனும் சந்தோசமா இருப்பீங்கன்னு இத்தனை வருசமா நம்பிட்டிருந்தேன். என்னை இப்படி ஏமாத்திட்டீங்களே. ‘என்னடா மகாலிங்கம் உன் பொண்டாட்டியை முதியோர் இல்லத்துல சேர்த்திட்டானாம் உன் மகன்..’ன்னு சொல்லி சம்பந்தமில்லாதவன்ல்லாம் என்னைத் தேடி வந்து வெறுப்பேத்திட்டு போறான்.! எப்படி இருந்தது தெரியுமா எனக்கு.” நறநறவென பற்களைக் கடித்துக் கொண்டார்.
“மரம் மாதிரி நிக்காதே பதில் பேசு. ஆயிரக்கணக்கான மைல் தாண்டி உனக்காக ஓடி வந்திருக்கேன். ஏன் இப்படி பரதேசிக் கோலத்துல இருக்கே.? பாதி உடம்பைக் காணோம். கண்ணு கிணத்துக்குள்ள இருக்கு. அலைபாயற கூந்தல் எங்கே. இதெல்லாம் ஒரு புடவையா. நான் வாங்கிக் கொடுத்த நகையெல்லாம் என்ன பண்ணினே..?”
கோபமாக அவரை முறைத்தாள். “நான் எப்படி இருந்தா உங்களுக்கென்ன. என் மேல எதுக்கு இந்த பொய் அக்கறை.? வேணாம்ன்னு சொல்லி பாதியிலே தூக்கியெறிஞ்சுட்டுப் போனவர் தானே நீங்க.? இப்ப மட்டும் என்ன தேடி வந்து பாசம் கொட்டறது.. அய்யோன்னு விசனப்படறது..?”
மகாலிங்கம் திணறினார். “வாழ்க்கைன்னா ஆயிரம் இருக்கத் தான் செய்யும், அதுக்காக..?” என்றார். “போ நின்னுட்டே இருக்காதே. உன் மூட்டை முடிச்சை யெல்லாம் கட்டிட்டு வா. நாம கிளம்பலாம்.”
தேவிகாவுக்கு அழுகை வந்தது. “போதும்ப்பா சாமி, உங்களை நம்பி ஒருதடவை வந்ததுக்கே பாதியில கைகழுவிட்டு ஓடிட்டீங்க. திரும்பவும் எந்த நம்பிக்கையோட வர்றதாம்.? நான் அனுபவிச்சதெல்லாம் போதும், இங்கேயே கிடந்து சாகறேன், யாரையும் இனி நான் நம்பறதா இல்லை, ‘பிரிஞ்சுடாதீங்க, என் மகளை கை விட்டுடாதீங்க..’ன்னு எத்தனை கதறினாரு எங்கப்பா.. மனசிறங்கினீங்களா.? போதும் எனக்கு யாரும் வேணாம். பத்மநாபா, நான் செத்துப் போனா நீ யாருக்கும் தகவல் தரக்கூடாது. எனக்கு நீ தான் கொள்ளி போடனும்! அப்பத்தான் என் கட்டை வேகும், ஆத்மா சாந்தியடையும்..”
பத்மநாபன் சங்கடமாக நெளிந்தார். “உங்க அன்பைக் காட்ட ஒரு இடம், பொருள், ஏவல் இல்லையா..”
மனைவியை எரிச்சலுடன் பார்த்தார். “நிறுத்து உன் நாடகத்தை, சகிக்கலை.! ஒரு சாதாரணக் காகிதம் நம்ம உறவைப் பிரிச்சுடாது. நீயும், நானும் வாழ்ந்த வாழ்க்கை கனவில்லை, நிஜம். பதிலுக்கு பதில் எதையாவது லூசுத்தனமாப் பேசிட்டிருக்காம என்கூட கிளம்புகிற வேலையைப் பாரு, சும்மா உன்னை தாங்கிக்கிட்டே இருக்கமாட்டேன் பார்த்துக்கோ..”
“பாருங்க. கட்டின பொண்டாட்டிக்கிட்டே எத்தனை அன்பா, காதலாப் பேசறாருன்னு..” குற்றம் சுமத்தினாள்.
“சார் ஒரு நிமிசம்..” சஃபி குறுக்கிட்டான். “அப்படியெல்லாம் உங்க கூட அவங்களை உடனே நாங்க அனுப்பி வெச்சுட முடியாது. ரூல்ஸ் இருக்கு. கார்டியன்னு கையெழுத்து போட்டவர் நாளைக்கே இங்கே திரும்பி வந்து என்னைக் கேட்காம எப்படி அவங்களை அனுப்பலாம்?ன்னு கேள்வி கேட்டா நாங்க என்ன பதில் சொல்றது..”
அவர் சிரித்தார். “ஏய்யா இவளை அவன் இந்த இல்லத்துல சேர்த்த இத்தனை மாசத்துல, எத்தனை தடவை பார்க்க வந்தான்..?”
“அதுவந்து.. இதுவரைக்கும் இல்லை. ஆனா..”
“போய்யா நீயும், உன் புடலங்கா ரூல்சும். ஏக்சுவலா நீ இங்கே அவளை சேர்த்துக்கிட்டதே தப்பு தெரியுமா, முதல் கார்டியன் கட்டின புருசன் உசிரோட இருக்கேன் எனக்கு தகவல் தெரிவிக்காம, சம்மதம் பெறாம நீ எப்படி சேர்க்க ஆச்சு. ஸ்டேசனுக்குப் போகலாம் வா, உன் பேரென்ன? யார் ஓனர் இதுக்கு.? உன் லைசென்சைக் காட்டு. வெளிநாட்டு நிதி வாங்கறீங்களா. அனுமதிக் கடிதம் எங்கே?” குதித்தார்.
“இப்படி விதண்டாவாதமாப் பேசினா எப்படி..” பத்மநாபன் பொறுமைக் குரலில் தொடர்ந்தார். “இப்போ என்ன உங்களுக்கு. இவங்க உங்க மனைவி, இங்கேயிருந்து கூட்டிட்டுப் போயி உங்ககூட வெச்சுக்க விரும்பறீங்க அவ்வளவு தானே விசயம். நாங்க இதுக்கு அனுமதிக்கனும் அவ்வளவு தானே.”
“பார்றா! நீயென்ன அனுமதிக்கிறது, அவளைக் கட்டித் தூக்கிட்டுப் போவேன்! புருசன் கூட பொண்டாட்டியை அனுப்ப அனுமதிக்கிறாராம் அனுமதி. முட்டாள்..” இரைந்தார்.
“தேவிகா அம்மா இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம். உங்களை மையப்படுத்தித் தானே இத்தனை பிரச்சனையும்! இவரு கூட போக உங்களுக்கு சம்மதமா.”
“அனாதை மாதிரி தானே அன்னைக்கு என்னை கைவிட்டுட்டுப் போனாரு. இப்ப மட்டும் என்ன திடீர்ப் பாசம்..? இவரு செஞ்சதைத் தானே வளர்ந்த பிறகு இவர் மகன் பண்ணினான். அவனுக்கும் இவரு ரத்தம் தானே. இவரு செஞ்சது சரி, அவன் பண்ணினது தப்போ.?”
“ஏன்டி அந்த சமயத்துல நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் எத்தனை சண்டை சச்சரவுக, கருத்து வேறுபாடுகள்.! நான் ஒண்ணு சொன்னா, நீ ஒண்ணு சொல்லுவே. ஏதாவது, ஒரு விசயம் ஒத்துப் போச்சா.? தினம் உலக மகா யுத்தம் வீட்டுல. ரெண்டு பேரும் விரோதிக மாதிரி முறைச்சுக்கிட்டு இருப்போம். வாழ்வுல சந்தோசமில்லை!”
“……..”
“நொந்து போய் வெறுப்பு உண்டாகித் தானே பிரிஞ்சோம். அப்போ சரின்னு மண்டைய ஆட்டினே தானே.? சுமூகமாகத் தானே பிரிஞ்சோம். இப்போ என்னவோ என்னை மட்டும் குற்றவாளி மாதிரி கை நீட்டறே.”
“இப்போ கூப்பிடறீங்க. அன்னைக்கு மாதிரி திரும்பவும் என்னைத் துரத்தி விட்டுட்டா நான் எங்கே போவேன்.? ஏன் பத்மநாபா நான் திரும்ப வந்தா மறுபடியும் என்னை இங்கே சேர்த்துப்பீங்களா.”
“சும்மாவா விட்டேன் உன்னை? புதுசா கட்டின வீட்டை உன் பேருக்குத் தானே எழுதி வெச்சேன். வீட்டுக்கு முன்னாடி இருந்த காலி இடத்தை வீணாக்காம அங்கே ரெண்டு கடைகளை கட்டிக் கொடுத்து மாசம் பொறந்தா வாடகை வர்ற மாதிரி யெல்லாம் தொலைநோக்குப் பார்வையில திட்டம் போட்டு தானே விட்டு வந்தேன். அதையெல்லாம் வசதியா மறந்துடுவே..!”
“ஆயிரம் தான் இருந்தாலும்..”
“ஒரு பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரம் தான் முக்கியம். அது தர்ற தைரியத்தை வேற எதுவும் தராது! அப்படியே நடுத் தெருவிலேயா விட்டுட்டு போனேன்.? சும்மா, வாயிருக்குன்னு பேசாதே..”
“பரவாயில்லை, நான் வரலை.”
“லூசுத்தனமாப் பேசாதே. உன் கோபத்தைக் காட்ட இது சமயம் இல்லை, இங்கே இருந்து கஷ்டப்படறதுக்கு என்னோட இருந்து உரிமையா கஷ்டப்படலாம்ல்ல.!”
“மாட்டேன்.. மாட்டேன்..”
நாற்காலியைத் தள்ளிவிட்டு பட்டென எழுந்தார். “ஒண்ணு விட்டேன்னா எப்படியிருக்கும் தெரியுமா. கிளம்புடின்னா சும்மா கூடக் கூடப் பேசிட்டு. வயசானாலும் வறட்டுப் பிடிவாதம் மட்டும் அப்படியே இருக்கு.”
“எல்லோரும் நல்லாப் பாருங்க.” கண்ணீர் சிந்தினாள். “திரும்பவும் சேர்ந்து வாழக் கூப்பிடற அழகைப் பாருங்க. இவரை நம்பி எப்படிப் போறது.?”
“சார் உங்க மகன் கிட்ட ஒருவார்த்தை கேட்டுக்கலாமா..?” பத்மநாபன் போன் எடுத்து எண்களை அழுத்தினார்.
“ஸ்பீக்கர்ல போடுங்க. அந்த உத்தமபுத்திரன் என்ன பேசறான்..னு இவளும் தெரிஞ்சுக்கிட்டும்!”
முதல் ரிங்கில்லேயே எடுத்துவிட்டான் அவன். “என்ன சார், அவரு வந்திருக்கிறாரா.? அம்மாவை கூட கூட்டிட்டுப் போவேன்னு அடம் பிடிக்கிறாரா. வேணாம் சார், அனுப்பி வெச்சுடுங்க சார்.”
“அதெப்படிப்பா! நீ லெட்டர் தரணும், சைன் போடனும். ஃபார்மாலிட்டீஸ்லாம் இருக்கே.”
“அதெல்லாம் நான் காலைல வந்து நிதானமா பண்ணிக் கொடுக்கறேன் சார். இப்ப அவங்களை அவரு கூட அனுப்பி வெச்சுடுங்க, அது போதும்..!” டக்கென போனை கட் செய்தான்.
“கேட்டியா அவ்ளோ தான் ரத்த பாசம். பெத்த உறவு. இப்பவாவது உண்மை உணர்ந்தியா. கிளம்பு. போய் உன் அசையும், அசையா சொத்துக்களையெல்லாம் எடுத்துட்டு வா.”
சில நிமிடங்கள் மெளனமாக நின்று கொண்டிருந்த தேவிகா எல்லோரையும் ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு தன் அறை நோக்கி நடக்கத் துவங்கினாள்.
கார் விரைந்து கொண்டிருந்தது.
“நாம எங்கே போயிட்டிருக்கோம்..?” என்றாள் தேவிகா வெளியே வேடிக்கை பார்த்தவாறே.
”ம்.. நரகத்துக்கு..”
“எனக்கு ஒண்ணும் பயமில்லை..” நெருங்கி வந்து அவரது தோளில் சாய்ந்து கொண்டாள். “நீங்களும் தானே கூட இருக்கப் போறீங்க. அப்புறம் என்ன..?” என முகம் பார்த்து சிரித்தாள்.
அவளை உற்றுப் பார்த்து புன்னகைத்தார்.
பல மணி நேரப் பயணம் முடிந்து கார் அந்த பங்களாவில் நுழைந்தது.
இறங்கினவள் மிரண்டு போய்ப் பார்த்தாள். “இது உங்களோடதா..? இங்கேயா இருக்கீங்க.. அரண்மனை மாதிரி இருக்கு!”
“ம்.. உள்ளே வா..” வேகமாக முன்னோக்கி நடந்தார்.
பேக்கைத் தூக்கிக் கொண்டு பின்னாலேயே ஓடி வந்தாள் அவள். இத்தனை பெரிய இடத்தை எப்படி ஆளப் போகிறேன்.. என பிரமிப்பு தட்டியது. காலம் போன காலத்தில் எனக்கு வந்த வாழ்வைப் பாரேன்.
மாடிப் படி ஏறத் துவங்கியிருந்தார் அவர். மூச்சிரைக்க அவளும் ஏறினாள்.
வலது பக்க முதல் அறையின் கதவை மரியாதைக்கு இரண்டு முறை தட்டிவிட்டு சட்டென திறந்தார்.
அறையின் பெரிய படுக்கையில் முகம் வரை போர்த்தப்பட்டிருந்த அவள் சப்தம் கேட்டு கண் விழித்தாள். அவரைப் பார்த்து சோகையாக சிரித்தாள்.
“வந்துட்டீங்களா. ரொம்ப நேரமா உங்களுக்காகத் தான்..” பார்வை தேவிகாவின் மேல் சென்றது. “ஓ, இவங்க தானா அது..?”
“என்ன பின்னாடியே நிக்கிறே. முன்னாடி வா..” கை பிடித்து முன்புறம் இழுத்தார். மிரண்டு பார்த்தவளைக் கண்டு சிரித்தார்.
“இது ஜமுனாராணி. இத்தனை பெரிய சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு. என் இரண்டாவது மனைவி.” நெருங்கிப் போய் நெற்றியில் முத்தமிட்டார். “எங்க ஒரே பொண்ணு ரஷ்யாவுல மெடிக்கல் பண்றா. திடீர்ன்னு என்னன்னு தெரியலை பாரலைஸ் அட்டாக் மாதிரி வந்து.. பெட்..டிலிருந்து இவளால எந்திருக்க முடியலை. டாக்டர்க வந்து பார்த்திட்டிருக்காங்க. ஒரு வருசமா நோ யூஸ். இவளை கவனிச்சுக்க எத்தனையோ நர்ஸ்க வந்தாங்க. யாரும் நம்பிக்கையா இருக்கலை. எப்போ எதைச் சுருட்டலாம்ன்னு பார்க்கிறாளுக. நம்பிக்கை துரோகிக. சரியானபடி கவனிப்பும் இல்லை. யோசிச்சப்போ தான் உன் ஞாபகம் வந்து..”
அவருக்கு போன் வர.. “ஒரு நிமிசம் லைன்ல இருங்க.. பாரு தேவிகா, இனி ஜமுனா உன் பொறுப்பு. நீ தான் அவளை நல்லபடியா கவனிச்சுக்கனும்..” ஒற்றை விரலைக் காட்டி எச்சரித்துவிட்டு வேகமாக வெளியேறினார்.
ஜமுனா, தேவிகாவைப் பார்த்து அவசரமாகப் புன்னகைத்து “அந்த பெட்ஃபேனை எடுத்து வெக்கறியா கொஞ்சம்..” என்றாள் கட்டளைக் குரலில்.
.
இச்சிறுகதை எனது சொந்தக் கற்பனை தான். இதற்கு முன்பு வேறு எந்த இதழிலும் இது வெளிவந்ததில்லை. வேறெந்தவொரு படைப்பின் நகலோ, தழுவலோ, மொழிபெயர்ப்போ கிடையாது என உறுதியளிக்கிறேன். போட்டி குறித்த அனைத்து விதிமுறைகளையும் ஏற்கிறேன். நன்றி!
.
இப்படிக்கு,
சகா
முகவரி
K.NAGARAJ ( சகா ),
‘அப்பா வீடு’ 27 / 1, குறிஞ்சி நகர்,
பி.கே.எஸ். லே - அவுட், 4வது குறுக்குத் தெரு,
பொள்ளாச்சி 642001 கோவை. செல் 98421 99668
Mail : no1saga78@gmail.com
BANK ACCOUNT DETAILS
NAME: K.NAGARAJ,
CITY UNION BANK, POLLACHI BRANCH
SB ACCOUNT No. 074001000582775
IFSC CODE: CIUB0000074
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்