Lakshmi Bala
சிறுகதை வரிசை எண்
# 47
கரிசல் காட்டுப்பயணம்
“ஏ தாயி எந்திரி! பயர் ஆபிசுக்கு வெள்ளன போனாத்தான, கூலியும் சரியா கொடுப்பாக” என்று ஆறுமணிக்கே சத்தம் போடா ஆரம்பித்தாள் என் அன்னை.
தூக்க கலக்கத்தில் அரைகுறையாக என் கண்களை திறந்து என் அன்னைப் பார்த்த நான், “எம்மாய்! ராத்திரி கடேசி பஸ்சுக்குத் தான் வந்தேன். கொஞ்சம் தூங்க விடுறீகளா...” என்று கூறி திரும்பவும் என் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டேன். ஆறு மணிக்கே வேலை முடிந்தாலும், நான் வீட்டிற்கு வர ஏழுரை மணி ஆகிவிடும். பின் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து இரவு படுப்பதற்கே பன்னிரண்டு மணி ஆகிவிடுவதால், என்னால் சரியாக எழுந்து கொள்ளமுடியவில்லை.
“நெதம் உனக்கு இது தான் சாக்கு. ஏடி... ஏய்! எழுந்திரி கழுத” என சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பித்தாள் அவள்.
அப்போது தான், விளக்கின் சுடர் அதிகமாவதைப் போல, நேற்று மாலை நான் பார்த்த காட்சிகள் என் கண் முன்னே நிழலாட ஆரம்பித்தது.
வேலை முடித்து, வழக்கம் போல் பேருந்தில் ஏறினேன். பயணம் ஆரம்பமானதும், கரிசல் காட்டின் புழுதிக் காற்று என் முகத்தில் வந்து அறைந்தது.
காடு கரை மேடு எல்லாம் தாண்டி, நான் இறங்கும் இடம் வந்தது. அங்கே இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
‘வீட்டுக்குப் போய் மாவு அரைச்சிட்டு, உருப்படியை துவைக்க ஆரம்பிக்கனோம். ராவுக்கு அம்மை பார்த்துக்குடும். வேலையெல்லாம் முடிச்சிட்டு, இன்னைக்காவது பதினோரு மணிக்குள்ள தூங்க ஆரம்பிச்சிடணும்’ என்று எனக்குள்ளே நான் யோசித்துக் கொண்டு வர, அப்போது தான் அவன் என்னையே பார்ப்பதைப் பார்த்தேன்.
சரியாக பருத்தித் தோட்டம் அராம்பிக்கும் இடத்தில், ஒரு ஓரத்தில் அமைந்திருந்த, டீக்கடையில் நின்றிருந்த அவன் கையில் இரண்டு டீக்கோப்பைகள், ஒன்று அவனுக்கு இன்னொன்று யாருக்கு என, எனக்குள் ஆர்வம் மேலிட்டது. அவன் மீதும் தான்.
நான் கனவுலகில் சஞ்சரிக்கும் போது, திடீரென்று கிணற்றின் உள்ளே இருந்து கேட்பது போல் ஒரு குரல், “எம்மாய்...” என்று அழைத்தது, என் காதில் வந்து விழுந்தது.
அப்போது தான், நான் சுயத்திற்குத் திரும்பினேன். “எம்மாய்...” என்று சொல்லிக் கொண்டே என்னை நெருங்கி படுத்த, என் ஐந்து வயது மகனின் குரலைக் கேட்டதும், ‘ச்சீ... என்ன நினைப்பு இது’ என்று என்னையே கடிந்து கொண்டு, கிளம்புவதற்கு தயாரானேன்.
அந்த ஐந்துக்கு ஐந்து அறையில் என் மகனை தள்ளி படுக்கவைத்துவிட்டு, என் வேலைகளை முடித்து, வீட்டுக் கூரையில், படர்ந்து கிடந்த, முடக்கத்தான் இலையைப் பிடுங்கி, அரிசு மாவுடன் அரைத்து, அடையைப் போட்டு உண்டு, மதியத்திற்கும் கஞ்சி வடித்துவிட்டு, “எம்மாய்! நான் ஆபிசுக்குப் போறேன். ராச வெள்ளன, பால்வாடிக்கு அனுப்பி வை” என்று சொல்லிவிட்டு, சீமைக்கருவேலம் காட்டு வழியாக நடந்து சென்று பேருந்து ஏறினேன்.
அன்று மாலையும் வேலை எல்லாம் முடித்து, நான் அலுப்போடு, வழக்கம் போல் வீட்டிற்கு போய் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டபடி, நடந்து வர, இன்றும் அதே ஆடவன், வழக்கம் போல் கையில் இரண்டு, டீக்கோப்பையை பிடித்தபடி, என்னையையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த டீக்கடையில், அனைவரும் வேலை முடித்து, அலுப்போடு, நின்றிருக்க,. அவன் மட்டும், இப்போது தான் குளித்ததைப் போல, நெற்றியில் விபூதி எல்லாம் பூசி, ஜம்மென்று நின்றிருந்தான்.
பார்க்கவே அழகாக இருந்த இந்த ஆடவனுக்கு, நாள் முழுவதும் வியர்வையில் குளித்து நலுங்கிய தோற்றத்துடன் நடந்து வரும் நான் அழகாக தெரிந்தேனோ!
இன்று வழக்கத்திற்கு மாறாக, என் கால்கள் அவன் நின்ற திசையை நோக்கி, என்னை அறியாமைலையே பயணமானது.
இது தவறென்று என் மூளை சொல்வதை என் மனது கேட்க வேண்டுமே! அவன் முகத்தை பார்த்ததும், என் மகனின் முகம் என் முன்னால் அருவமாய் தோன்றி மறைந்தது .
இருந்தும் அவன் முன்பு வந்து நின்றேன். அவனோ என்னைப் பார்த்து சிரித்தபடி, என்னிடம் ஒரு கோப்பையை நீட்டினான். அவன் நீட்டிய டீக்கோப்பையை என் கையால் வாங்கிக்கொண்டு அவன் முகத்தை ஆராய்ந்தேன்.
“இன்னைக்கு மத்தியான கஞ்சிக்கு என்ன புள்ள கொண்டு வந்த? நேத்திக்கு நான் கூப்புடறத செவில்ல வாங்காம ஓடிட்ட” என்று அவன் கேட்க.
அப்போது தான் அவன் முகத்தை கூர்மையாக ஆராய்ந்தேன், அவன் முகம் மட்டும் அல்ல, அவனது பேச்சும் என் மகனைப் போலவே இருந்தது.
நானோ முழித்தபடி நின்றிருக்க அவனோ தன் பேச்சைத் தொடர்ந்தான், “ஒரே குச்சில இருக்கோம் தான் பேரு, பாரு உனக்கு வேல முடிஞ்சதும், எனக்கு வேல ஆரம்பிச்சிருச்சி” என்றதும் தான், மாலையும் கழுத்துமாக அவன் கையோடு என் கையை கோர்த்த நியாபகம் மின்னலாக என் நினைவில் வந்து சென்றது.
எனக்கோ பேச்சு வரவில்லை. அவனுக்கோ நேரமாகிக் கொண்டு இருந்தது. “சரித்தா... நான் அச்சு ஆபிசுக்குப் போயிட்டு வாரேன். நீ போய் அந்த சின்ன வண்ட மேய்க்காம, ஆயித்தக்கிட்ட அவனை விட்டுட்டு, நீ செத்த கட்டையை சாயி” என்று என் கன்னத்தை தட்டிவிட்டு, என்னிடம் பதிலை எதிர்பார்க்காமல் சென்றான்.
வறுமை, நான் காதலித்து கரம் பிடித்தவனையே மறக்க வைத்துவிட்டதா! என்று எண்ணும் போதே, என் முகத்தில் கசந்த புன்முறுவல்.
‘மிகவும் நேசித்து, கரிசல் காட்டில் சுற்றித் திரிந்து, அவனது கரம் பிடித்து, எல்லையில்லாத அன்பிற்கு சாட்சியாய் ஒரு பிள்ளையையும் பெற்று, உன்னில் சரிபாதியானவனை எப்படி மறந்தாய்!’ என்று என் மனது என்னைக் காறி உமிழ்ந்தது.
ஆங்காங்கே அலைப்பாய்ந்த என் மனது இறுதியாக, வறுமை மீதே பழியைப் போட்டது. அவன் என் நெஞ்சில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருந்தாலும், என் கண்களில் வறுமை என்னும் புரை ஏறி அவன் அழகு முகத்தை மறைத்துவிட்டது.
எனக்குப் பகல் வேலை இருக்க, அவனுக்கோ இரவு வேலை. ஈருடல் ஓருயிராக இருந்த எங்களுக்குள், வறுமை என்னும் அரக்கன் வந்து எங்களைப் பிரித்து வைத்தான்.
அவனை அழிக்கவே, இந்த கரிசல் மண்ணில் இருவருமே பயணம் செய்து கொண்டிருக்கின்றோம், எங்கள் மகனின் எதிர்காலத்திற்கு.
முற்றும்...
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்