Lakshmi.k Lakshmi.k
சிறுகதை வரிசை எண்
# 46
முதல் தோசை
******************
பூமணி வேகமாய் நடந்தாள். அவளுடைய கால்கள் இலேசாய்த் துவண்டன. ஆனாலும் விரைவாக நடக்க முயற்சித்தாள். காலை ஐந்தரைமணிக்கு பாரிமுனை பேருந்து நிலையத்துக்கு வந்தவள், அடையாறு போய் சேருவதற்குள் ஆறரைமணிக்கு மேல் ஆகிவிட்டது. ஆறு மணிக்குள் வேலைக்கு போகாவிட்டால், அந்த வீட்டம்மா பேயாட்டம் ஆடி விடுவாள்.
நாலு மணிக்கெல்லாம் எழுந்து விடும் பூமணிக்கு இன்று ஏனோ தெரியவில்லை ஐந்து மணி வரை எழுந்திருக்க முடியாமல் உடம்பு முழுதும் வலித்தது .
நேற்று இரவு பக்கத்து வீட்டு காத்தாயிக்கு துணையாக உட்கார்ந்து, இடுப்பொடிய இரவு பன்னிரெண்டுமணிவரை பூகட்டிக் கொடுத்தாள். பாவம் புள்ளதாச்சி ஆயிற்றே...அவளுக்கு வீட்டில் கணவன் சரியில்லை அதனால் கூடமாட ஒத்தாசையாக இருந்தாள். அந்த உதவி செய்யப்போய்தான் இப்போது வகையாய் மாட்டிக்கொண்டாள்.
நேற்று மீந்துப்போன சோற்றில் வழக்கம் போல் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு வந்திருக்கிறாள்.. இருக்கவே இருக்கிறது... தொட்டுக்கொள்ள நார்த்தங்காய் ஊறுகாய்.... செல்வியும் ராஜாவும் படித்து கொண்டிருக்கிறார்கள் பார்த்துக் கொள்ளுமாறு அம்மாவிடம் சொல்லிவிட்டு
வந்தாள்.
அம்மாவுக்கு வயதின் மூப்பின் காரணமாக சரியாய் காது கேட்காது ...தான் சொன்னது அவளுக்கு கேட்டதா எனத் தெரியவில்லை ஆனாலும் சரி என்பதாய்த் தலையாட்டினாள்.
அடையாறில் இறங்கி, பல சந்துபொந்துகளில் நுழைந்து, வேலை செய்யும் வீட்டை அடைந்தபோது பொழுது பொலபொலவென விடிந்து விட்டிருந்தது.
"வாடீயம்மா...இப்பதான் பொழுது விடிஞ்சுதா உனக்கு...வீட்ல எல்லோரும் வெளிய கிளம்பற நேரமாயிடுச்சு...போ போயி முதல்ல சமையல் கட்டுல வேலைய பாரு...போட்டது போட்டபடி இருக்கு...புதினாவும் கொத்தமல்லியும் வதக்கி வெச்சிருக்கேன் ....சட்னி அரைச்சிடு...நாலு துவரம்பருப்பை வெங்காயம் தக்காளி போட்டு வேகவெச்சி காரமில்லாம கடைஞ்சி வெச்சுடு...மைதிலிக்கு இட்லிப் பொடியில நெய் ஊத்தி கலந்து வை...அடுப்புல பால் வச்சிருக்கேன் ...டிகாஷன் கலந்து காபி கொடுத்துடு எல்லோருக்கும்...எல்லா வேலையும் முடிஞ்சதுக்கு அப்புறம் சூடா தோசை சுட்டு ஹட்பாக்ஸ்ல அடுக்கி வெச்சுடு...சீக்கிரம் போம்மா ஆக வேண்டிய வேலையை பார் ...எனக்கு பூஜை அறையில நிறைய வேலை இருக்கு ...நான் போயி அதை பாக்குறேன் ...அப்புறம் சொல்ல மறந்துட்டேன் ...மதியத்துக்கு புளியோதரையும் உருளை வறுவலும் செஞ்சிருக்கேன் ...அஞ்சு டிபன் பாக்ஸ் ரெடி பண்ணிடு...நான் வர்றதுக்குள்ள எல்லாம் ரெடியா இருக்கணும்..."
ரங்கம் குரல் கொடுத்தபடி பூசை அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
அடுப்பில் இருந்தவற்றைப் பபார்த்து பாத்திரத்தில் பக்குவமாக எடுத்து வைத்தாள்.ஒரு பக்கம் வாணலியில், புதினா வதக்கி சட்னி தயார் செய்தபடி, மற்றொரு பக்கம் பருப்பை வேக வைத்து எடுத்தாள். கடைசியாக தோசை கல்லை அடுப்பில் வைத்தாள். அது பழைய கால இரும்பு தோசைக்கல். தோசை கல்லை வைக்கும் போதே, பூமணிக்கு வயிறு பசிக்க ஆரம்பித்துவிட்டது
பாதியாக வெட்டிய வெங்காயத்தை தேய்த்து, தோசை சுட தயாரானாள். மெல்லியதாகவும் இல்லாமல் தடிமனாகவும் இல்லாமல் அழகான வட்ட வடிவமான தோசைகள் பொன்னிறமாக சுட்டு அடுக்குகையில், வழக்கம்போல் நாவில் நீர் சுரந்தது
சிறு வயதில் கிராமத்தில் அப்பாவுடன் கைகோர்த்தபடி, நயினார் ஹோட்டலுக்கு செல்லும் போதெல்லாம் ஆவலுடன் தோசை தான் வாங்க வேண்டும் என்று அடம்பிடிப்பாள். சிறு கொட்டகையுடன் இருந்த அந்த ஹோட்டல் தான் கிராமத்திலேயே பெரிய ஹோட்டல். நயினார், அப்பாவுக்கு மிகவும் வேண்டியவர்தான் . முறுகலான வெங்காய தோசையுடன் காரச் சட்னி தேங்காய் சட்னி கொஞ்சம் சாம்பார் என தொட்டு சாப்பிட தேவாமிர்தமாக இருக்கும் .சாயந்தர வேளையில் போகும்போது, முதல் தோசை பெரும்பாலும் பூமணிக்கு கிடைத்துவிடும் .அதில் அவளுக்கு கொள்ளை சந்தோஷம். என்னமோ மகாராணி போல் தன்னை நினைத்துக் கொள்வாள்.
தனியாக அவளை உட்கார சொல்லி
சாப்பிடச் சொல்லுகையில், எவ்வளவு பெருமையாக இருக்கும் தெரியுமா
"கண்ணு எத்தனை தோசை வேணும்னாலும் சாப்பிடு... தம்பி நல்லகண்ணு பாப்பாவுக்கு சூடா ஒரு நெய்தோசை போடு" எனப் பாசத்துடன் உபசரிப்பார், நயினார்.
அவள் வீட்டில் அவளோடு சேர்ந்து,,மொத்தம் ஆறு பேர் .அதிலும் பூமணி தான் கடைசி என்பதால், முதல் தோசைக்கு அம்மாவிடம் அடப்பிடிப்பாள். அம்மாவும் யாருக்கும் தெரியாமல் பூமணியை உள்ளே அழைத்து முதல் தோசையை அவளுக்கு கொடுப்பாள். ரோஜாமொக்கு சட்னி (அதாவது மிளகாய் புளி சேர்த்து அரைப்பார்கள்) தொட்டு உள்ளே தள்ளினால், அடடா...அம்புட்டு ருசி...
எல்லாம் கொஞ்சகாலம்தான்...அப்பா வயல் வேலை செய்யும்போது பாம்பு கடித்து இறந்து போக, அம்மா வயலுக்கு வேலைக்கு போக ஆரம்பித்தாள். பெரும்பாலும் நேற்று மீந்த சோறுதான், காலை சிற்றுண்டி என்று மாறிப் போயிற்று...தீபாவளி பொங்கலுக்குத்தான் தோசையைப் பார்க்க முடிந்தது .அதிலும் ஏனோதானோவென எப்போதோ சுடப்படும் தோசைகளில், அம்மாவின் கவனம் தப்பித்தான் போனது. அதிலும் சாமி கும்பிட்டு விட்டு ஆறிப்போன தோசைகளை சாப்பிடும்போது பூமணிக்கு தொண்டைக்கு கீழே, தோசை, இறங்க மறுக்கும்.
எப்போதெல்லாம் நயினார் கடையை கடக்கிறாளோ, அப்போதெல்லாம் சொய்ங் என்ற சத்தத்துடன் தோசை சுடும்பொழுது,
அங்கேயே நின்று விடுவாள் பூமணி. நயினாருக்கு உடம்பு சுகமில்லாமல் போக , அவரது மகன் பொறுப்பு ஏற்றுக் கொண்டான்., அவனுக்கு பூமணியை தெரிந்திருக்க நியாயம் இல்லை .
ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய பூமணிக்கு அதற்கு பிறகு யாருமே அவள் எதிர்பார்த்த மாதிரி தோசை சுட்டுக் கொடுக்கவே இல்லை ...
பருவம் வந்ததும் பக்கத்து ஊரு
பொன்ராசுக்கு அடிமாட்டை விற்பது போல
பூமணியை திருமணம் செய்து கொடுத்தாயிற்று... திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வீடு கட்டும் வேலைக்கு சித்தாளாக அவளை ரயிலில், சென்னைக்கு கூட்டி வந்து விட்டான் பொன்ராசு .
செல்வி, ராஜா என்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு, தன்னுடைய கடமை முடிந்தது என்று நினைத்து விட்டானோ எனத் தெரியவில்லை... குடித்தே கல்லீரல் கெட்டு மருத்துவமனையில் இறந்து போனான். உடன்பிறப்புகள் மூலைக்கு ஒன்றாக ஓடிப் போக அம்மாவை தன்னோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டாள் பூமணி.
சித்தாள் வேலைக்கு உடம்பு ஒத்துழைக்காமல் போனபின், ஏதோ நாலு பேர் சிபாரிசில், இந்த வீட்டு வேலை கிடைத்தது.ரங்கத்துக்கு வாய் அதிகம்தான் ஆனால் இரக்கமும் அதிகம் ...
வேலை முடிந்து போகும்போது மிச்சம் இருந்ததை அள்ளிக் கொடுத்து விடுவாள். ஆனாலும், சுடச்சுட தோசை சாப்பிடும் ஆசை அவளுக்கு எப்போதுமே நிறைவேறவில்லை.
பூமணி சுடச்சுட தோசை வார்த்துக் கொடுத்தால், ரங்கம் வீட்டில் சப்புக்கொட்டிக் கொண்டு சாப்பிடுவார்கள் .அதிலும் பூமணி செய்யும் வெங்காய சட்னிக்கு அந்த குடும்பமே அடிமை என்று தான் சொல்ல வேண்டும் !
அழகாய் வட்டவடிவமாய் தோசை ஊற்றி,இலேசாய் நெய்விட்டு கொஞ்சமாய் இட்லிப்பொடி தூவி, பொன்முறுவலாய் தட்டில் அடுக்கி வைப்பாள்.பூமணி உருளைமசாலை தோசையில் வைத்து, சுருட்டித் தருகையில் ஸ்டார் ஹோட்டல் தோசையே சுவையில் தோற்றுப்போகும்.
பூமணிக்கும் நாவில் எச்சில் ஊறும். சிரமப்பட்டு மனதை அடக்கிக் கொள்வாள்.
கடைசி தோசையாவது நமக்கு கிடைக்கும் என ஆவலோடு காத்திருக்கையில், அங்கு சரியாய் ரங்கம் வந்து நிற்பாள்.
"பூமணி கடைசி மாவை ரெண்டு தட்டுல இட்லி ஊத்தி வச்சிடு... உனக்குதான் தெரியுமே எனக்கு இட்லிதான் பிடிக்கும்னு..."
சொன்னபடி தான் நாலு இட்லி சாப்பிட்டுவிட்டு மீந்ததை பூமணிக்கு கொடுத்து விடுவாள்.பூமணிக்கு துக்கம் தொண்டையை அடைக்கும் . என்ன செய்வது மௌனமாய் வாங்கி கொள்வாள்.
ரங்கம் வீட்டில் மட்டும்தான் சமையல் வேலை... மற்ற வீடுகளில் துணி துவைப்பது பாத்திரம் விளக்குவது போன்ற வேலைகள் தான் அங்கு காபி மட்டுமே, கிடைக்கும்.
தீபாவளி பொங்கல் போன்ற நாட்களிலும் ரங்கம், பூமணியை வேலைக்கு வர வைத்து விடுவாள். சோர்ந்து போய் பலகாரங்களுடன் வீடு திரும்புகையில், ஆறிப்போன தோசையும் அதில் இருக்கும்.. ஆனால் பூமணிக்குத்தான் சாப்பிட பிடிக்காது.
பூமணி உழைப்பது பிள்ளைகளுக்காகத்தான்... அதனால் தன்னுடைய தேவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் நன்கு படிக்க அவள், ஓடாய்த் தேய்ந்து கொண்டு இருந்தாள் .
ஆச்சு ... இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம்தான் ராஜா படிச்சு ஒரு நல்ல வேலையில் , அமர்ந்து விட்டால் போதும்... அவளுக்கு ஓய்வு கிடைத்துவிடும் .அப்புறம் வீடு வீடா போய் வேலை செய்ய வேண்டிய தேவை இருக்காது .வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாம் ...ஆசைப்பட்டதை சமைத்து, சாப்பிடலாம்... அதிலும் அவளின் ஆஸ்தான உணவான தோசையை சூடாய் சுட்டு, தனியாய் உட்கார்ந்து ருசித்து, சாப்பிடலாம்...
வருடங்கள் ஓடின.. பூமணி இன்னும் உழைத்துக் கொண்டே இருக்கிறாள்.
அவளுடைய தோற்றம் கரைந்து உருக்குலைந்து கொண்டிருக்கிறது... ஒட்டிப்போன கன்னங்களும் குழி விழுந்த கண்களும் மெலிந்து போன தேகத்துடன் பூமணி ஓடிக்கொண்டே இருந்தான். காலில் சக்கரம் கட்டாத குறையாக..
. ஓயாத இருமலுடன் அம்மா செத்தாள்... இப்போது அவளுக்கும் அந்த இருமல் தொற்றிக் கொண்டு விட்டது...
மேற்படிப்புக்காக ராஜா வெளியூர் சென்று விட்டான் .இன்னும் சில வாரங்களில், அவனுடைய படிப்பு முடியப்போகிறது அதற்குப்பின் செல்வியின் எதிர்காலம் அவன் கையில் ...குடும்பத்தை அவன் பார்த்துக் கொள்வான். நம்பிக்கைதானே வாழ்க்கை...
அன்று காலை விடிந்ததும் வழக்கம் போல் எழுந்து நீராகாரம் குடித்து, வேலைக்கு கிளம்பினாள், பூமணி. செல்விக்கும் பாத்திரத்தில் பழஞ்சோற்றை கரைத்து வைத்தாள்
"அம்மா..."
என்ற குரல் அழைத்த திக்கை பார்த்தாள். ராஜாதான் ஆளேமாறி போயிருந்தான். புது பேண்ட் சட்டையில் பார்க்கவே கம்பீரமாக இருந்தான்.
"அம்மா இன்னைல இருந்து நீங்க வேலைக்கு போக வேண்டாம் ...செல்வி அந்த வீடுகளுக்கு தகவல் சொல்லிடுவா... இதோ வெளியே உங்களுக்காக கார் கொண்டு வந்து இருக்கேன் ...வாங்கம்மா என்கூட..." அவளுடைய மெலிந்த கைகளைப் பிடித்துக் கொண்டு அன்புடன் அழைத்தான்.
மகனின் கரம் பற்றி காரில் ஏறிய போது பூமணிக்கு மிகவும் பெருமிதமாக இருந்தது. அரை மணி நேரம் வேகமாய் சுற்றிய கார், கடைசியில் போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தை அடைந்தது .வழியெங்கும் தெரிந்த காட்சிகளை பூமணி வியப்பாக பார்த்துக் கொண்டே இருந்தாள்.
கார் நின்றதும் ராஜா முதலில் இறங்கி, அம்மாவிற்கு கதவு திறந்து விட்டான்.
'அம்மா இங்க கொஞ்சம் கண்களை உயர்த்திப் பாருங்க... அழகான அந்த சிறு கட்டிடத்தின் முன்புறத்தில் 'பூமணி உணவகம்' என்னும் பெயர் பலகை மின்னியது.
"அம்மா உள்ள வாங்க நீங்க தான் இந்த உணவகத்தை திறந்து வைக்க போறீங்க... என்ன மன்னிச்சிடுங்கம்மா...நான் காலேஜ்ல எந்த குரூப் படிச்சேன்னு நீங்க கேட்டுகிட்டே இருப்பீங்க ...அப்ப நான் பதில் சொல்லாம, நழுவிடுவேன். நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட்தான்மா படிச்சேன்... படிக்கும்போதே பல ஹோட்டலில் பகுதிநேரமா வேலை பார்த்தேன்... அதுல ஒரு ஹோட்டல் முதலாளி என் திறமையை பார்த்து வியந்து எனக்கு உதவி பண்ணாரும்மா... எனக்காக பேங்க்ல கடனுதவி கிடைக்க வழி பண்ணாரு... இன்னைக்கு உங்க பேர்ல உணவகம் திறக்க அந்த நல்ல மனுஷன் தான் காரணம்... இன்னும் கொஞ்ச நேரத்துல அவரே இங்க வந்துருவாரு... வாங்கம்மா உள்ள வாங்க... இது உங்க ஹோட்டல்... நீங்கதான் இதுக்கு முதலாளி ..."அம்மாவை ஆசையுடன் உள்ளே அழைத்து சென்றான்.
மெத்தென்ற சோபாவில் அமர வைத்தான். "கொஞ்சம் இருங்கம்மா வந்துடறேன்..."
உள்ளே சென்றவன் திரும்பி வரும்போது பெரிய தட்டில் நெய்வாசனை கமகமக்க தோசையோடு வந்தான். தோசையை சுற்றி பல கிண்ணங்களில் வண்ணமயமான சட்னி வகைகள்.
" உங்களுக்கு தோசை பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்மா... இது உங்களுக்காக நானே சுட்ட முதல் தோசை... சாப்பிடுங்கம்மா ... "
மகன் அன்புடன் உபசரிக்க ,கண்களில், நீர்த்துளிக்க அந்த தோசையை பார்த்தாள், பூமணி.
சிறு வயது பூமணியாய் மாறி தோசையை ஆசையோடு பிய்த்து, பல வண்ண சட்னிகளில் தோய்த்து சாப்பிடத் தொடங்கினாள் அதீத மகிழ்ச்சியோ என்னமோ தெரியவில்லை... நெஞ்சடைக்க கையில் எடுத்த தோசை உடன் இருக்கையிலே சரிந்து விட்டாள் பூமணி.
" என்ன ஆச்சும்மா..." என்று ராஜா அலற, பூமணியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை..
மகன் சுட்ட, முதல் வாய் தோசையோடு அவளுடைய வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டது போலும்....
கி.இலட்சுமி, சென்னை.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்