அதீதன்
சிறுகதை வரிசை எண்
# 45
அமுதமழை
----------------
அதீதன்
(1)
பைக்குள்ளிருந்து குடையை வெளியே எடுக்கலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம் அமுதாவிற்குத் தீர்ந்தபாடில்லை. இருட்டாயிருக்கும் வானத்தில் நட்சத்திரங்கள் எதுவும் தென்படவில்லை. அவ்வப்போது மின்னல் வெட்டிக்கொண்டிருந்தது. இன்னும் இரண்டு கிலோமீட்டர் தூரமே இருக்கும் தனது அறைக்கு நடந்து செல்வதற்குள் மழை பெய்துவிட்டால் என்ன செய்வது என்கிற யோசனையுடனேயே அவள் பணியாற்றும் பல்பொருள் அங்காடியின் படிகளில் நின்றுகொண்டிருக்கிறாள்.
அந்த சூப்பர் மார்க்கெட்டில் அவள் வேலைக்குச் சேர்ந்து மூன்றாண்டுகள் ஆகியிருந்தன. வாயில் உறிஞ்சியவுடன் தொண்டைக்குள் இறங்கி வயிற்றுக்குள் வழுக்கிச் செல்லும் பானத்தைப் போல தார்ச்சாலையில் வேகத்தைக் குறைக்காமல் செல்லும் வாகனங்களிடமிருந்து தப்பி ஏதோவொரு பிரிவிற்குள் நுழைந்து ஒற்றையடிப் பாதையில் பல கிலோமீட்டர்களைக் கடந்தபின் குண்டும், குழிகளும் நிறைந்திருக்கும் சாலையில் உடல்குலுங்கப் பயணித்தபின் சென்றடையக்கூடிய ஊரிலிருந்து வந்திருந்தவளுக்கு மாநகரத்தின் வாழ்க்கை பிடித்துப் போயிருந்தாலும்கூட இன்னும் அவள் அதற்குப் பழக்கப்படவில்லை. முன்பு அப்பா திருவிழா சமயங்களில் பொருட்காட்சி பார்க்கக் கூட்டி வரும்போது அவள் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை. அப்பாவின் மரணத்திற்குப் பிறகு இதே ஊருக்கு வேலைக்காக வந்து சேர்வோமென்று. அதே ஊரில் பிறந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை அதே ஊரில் படித்துப் பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ள அதேபோன்ற சிற்றூர்களிலேயே வாக்கப்பட்டுப்போன பலபெண்களைப் போலவே தன் வாழ்வும் கழிந்துவிடும் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தாள்.
நீண்ட யோசனைக்குப் பிறகு படியைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினாள். போகிற வழியில் வழக்கமாய் சாப்பாடு வாங்கும் மெஸ்ஸில் அமுதாவின் தலையைப் பார்த்ததுமே ஹோட்டல்காரர் முதலில் மூன்று இட்டிலிகளைக் கட்டி வைத்துவிடுவார் ஆம்லெட்டோ, வடியலோ அல்லது ஃபுல்பாயிலோ எதோவொன்று மட்டுமே அவளது உபதேர்வாக இருக்கும். எப்போதேனும் தோசையோ, சப்பாத்தியோ கட்டவா என்று கேட்டாலும் கூட அமுதா மறுத்துவிடுவாள். பட்ஜெட்டிற்குள் வயிறும் நிறைய வேண்டுமானால் இட்டிலிதான் சரியான தேர்வு என்பதை அவள் தனக்குத்தானே சொல்லிக்கொள்வாள்.
ஒரு கையில் உணவுப் பொட்டலமும், மறுகையில் குடையுமாய் நடந்துகொண்டிருந்தவளின் ஞாபகங்கள் அணிச்சையாய் கடந்தகாலங்களை நோக்கிச் சென்றன.
(2)
காலையில் எழுந்ததும் வாசல் தெளித்துவிட்டுக் கோலம் போடுவதுதான் அவளது முதல் வேலை. அதை முடித்து வரும்போது அம்மா சமையலை முடித்திருப்பாள். அப்பாவும் எழுந்து குளித்து வேலைக்குச் செல்லத் தயாரகியிருப்பார் . அப்பாவுக்கு வேலை வீடுகளுக்குப் பெயிண்டிங் காண்ட்ராக்ட் எடுத்துப் பார்ப்பது. மேஸ்திரி ரங்கா மாமாவும் அவரும் நெருங்கிய தோழர்கள். அவர் பார்க்கும் கட்டிடங்களுக்கு அப்பாதான் பெயிண்டிங். சீருடை அணிந்து தயாரானதும் அப்பாவுக்கும், தனக்கும் டிஃபன் பாக்ஸில் கட்டித் தயாரக வைத்திருக்கும் உணவைக் கையிலெடுத்துக் கொண்டு இருவரும் ஒன்றாகப் பேருந்து நிறுத்தத்திற்குக் கிளம்புவார்கள். பெரும்பாலும் முதல்நாள் மீந்திருந்த பழையதுதான் இருவருக்கும் காலைச் சாப்பாடு. அம்மாவுக்கு அதுவும் அரிதுதான்.
அப்பாவுக்கு ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பகுதிகளில் வேலை . பல நாட்கள் அப்பா டவுனிற்குச் செல்ல வேண்டியதாயிருக்கும். சிலசமயங்கள் அக்கம் பக்கத்து ஊர்களில் இருக்கும். பேருந்து நிறுத்தம் வரை அப்பாவோடு வருபவள் அவர் வண்டியேறிய பின்னோ அல்லது காத்திருக்கும்போதோ விடைபெற்றுக்கொண்டு தன் தோழிகளுடன் பள்ளி நோக்கி நடக்கத் தொடங்குவாள்.
பள்ளி முடிந்து வந்ததும் உடைமாற்றி முகம்கழுவி அம்மாவுடன் சேர்ந்து இரவுணவுக்கான தயாரிப்புகளையும், மறுநாள் காலைக்கான தயாரிப்புகளையும் செய்துவைத்துவிட்டு விளக்கு வைத்ததும் வீட்டுப் பாடங்களை எழுதத் தொடங்குவாள். அப்பா வருவதற்குள் அனைத்தையும் முடித்துவிட்டு மூவரும் ஒன்றாகச் சாப்பிட்டுவிட்டுச் சிறுதுநேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப் படுக்கப்போவது வழக்கம். அப்பாவுக்கு எவ்வளவு வேலை இருந்து, எத்தனை களைப்பாக வந்தாலும் இந்த நடைமுறை தவறுவதே இல்லை.
அப்பாவின் ஞாபகம் அளவிற்கதிகமாக வரவே கண்களில் துளிர்த்திருக்கும் நீரைக்கூடத் துடைக்க மனமில்லாமல் நடந்துகொண்டிருந்தாள். எங்கிருந்தோ அழைக்கும் பாண்டியின் குரல் கேட்டிடத் திருபிப்பார்த்தாள். அங்கு யாருமே இல்லை. வேலையை விட்டுக் கிளம்பும்போது பாண்டி அவளைக் கூப்பிட்டான். அவள் முகம் ஏனோ வாடியிருப்பதுபோலத் தெரிவதாகச் சொல்லி தான் உடன்வரவா என்று கேட்டான். அந்தச் சமயத்தில் யாரேனும் உடன் வந்தால் நல்லது என்று உள்ளுக்குள் நினைத்தாலும் மறுத்துவிட்டாள். அப்போது வேண்டாமென்று சொல்லிவிட்டு இப்போது அவனைப் பற்றி நினைப்பது அவளைப் பதற்றமடையச் செய்தது. இன்னும் மழை வரவில்லை.
(3)
வரிசையாகக் கோர்க்கப்பட்ட மல்லிகைச் சரம்போல் இருந்த அமுதாவின் வாழ்வில் இடையில் கோர்க்கப்பட்ட மரிக்கொழுந்தாய் நிகழ்ந்தது குமரனின் வருகை. அவள் படிக்கும் பள்ளியில்தான் குமரனும் படித்துக்கொண்டிருந்தான். ஆனால் வேறு பிரிவுதான் என்றாலும் இருவரும் நடந்து வருவது ஒரே பாதையில்தான். வேறு சில பிள்ளைகளோடு நடந்துவரும் குழுவில் ஒருவருக்கொருவர் பார்த்துப் பேசிக்கொள்வதில்லை என்றாலும், ஒருவரையொருவர் ரகசியமாகப் பார்த்துக்கொள்வதும், தங்களுக்குள்ளேயே புன்னகைத்துக் கொள்வதுமாக நாட்கள் சென்றன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவனோடு சகஜமாகப் பேசிப்பழகிக் கொண்டிருந்தவள் திடீரென அவற்றைக் குறைத்துக்கொண்டாள். அவனும் மெல்லமெல்ல அவளிடமிருந்து விலகி அவ்வப்போது தலைநிமிர்த்துப் பார்த்துச் சிரிப்பதை மட்டுமே வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். இந்த திடீர் மாறுதல் எப்போது நடந்தது என்பதை இருவராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை.
குமரன் அமுதாவின் விஷயத்தில் இப்படி நடந்துகொண்டாலும் மற்ற விஷயங்களில் தனித்தே தெரிந்தான் பள்ளியிலும், வெளியிலும் அவனது பெயரை அடிக்கடி கேட்கமுடிந்தது. அவ்வப்போது பள்ளிக்குள் மாணவர்களுக்கிடையே தகாராறுகள் நடந்ததாகச் செய்திவரும்போது அதனைத் தலைமையேற்று நடத்தியவன் குமரனாகவே இருப்பான். ஊருக்குள்ளும் அப்படித்தான் ஊரின் பெரிய மனிதர் ஒருவர் இருந்தார்.அவர்பெயர் நாகரஜன் . எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் யாராயினும் அவரிடமே பஞ்சாயத்திற்குப் போய் நிற்பார்கள். அவரும் அததற்கேற்ற வழிகளில் அவற்றைச் சரிசெய்து வைப்பார். இப்போதெல்லாம் அடிக்கடி அவர் வீட்டில் குமரனைப் பார்க்க முடிந்தது. யாராயிருந்தாலும் தலைநிமிர்த்தி சத்தமாகப் பேசுபவன் அமுதாவைப் பார்க்கும்போது மட்டும் முற்றிலுமாக மாறிவிடுவான்.
குமரனைப் பற்றி வரும் செய்திகள் அமுதாவிற்குக் கலக்கத்தைத் தந்தாலும் அவனைப் பார்க்கையில் அவையெல்லாம் நினைவிலிருந்து எங்கேயோ ஓடி ஒளிந்துகொள்ளும். தங்களுக்குள்ளிருக்கும் நேசத்தை இருவருமே உணர்ந்திருந்தபோதும் அதனை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வாய்க்காமல் தவித்துக்கொண்டிருந்தனர்.
இதற்கிடையே பொதுத்தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருக்கும் தருவாயில் அவளது திருமணம் குறித்த பேச்சு மெதுவாக வீட்டில் எழத்தொடங்கியது. குமரனுக்கோ தேர்வுகள் குறித்த எந்தக் கவலையும் இல்லை. மதுரையில் இருக்கும் தன் அண்ணன் ஃபைனான்ஸ் தொழில் செய்வதாகவும், அவருடன் இருந்து வரவேண்டிய வட்டிகளையும், பாக்கிகளையும் வசூல் செய்வதற்கு நம்பிக்கையான, தாட்டியமான ஆளாக வேண்டுமென்று சொன்னவுடன் குமரனின் நினைவு வந்தாகவும் அவனைத் தன் அண்ணனிடம் வேலைக்கு அனுப்புவதாக நாகராஜன் அண்ணன் சொல்லியிருந்தார். மதுரைக்குப் போவதில் குமரனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை உண்மையில் அவனுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அமுதாவை நினைக்கும்போது மட்டும் கொஞ்சம் கவலையாக இருந்தது.
(4)
கண்ணிமைக்கும் நேரத்தில் என்னென்னவோ நடந்தேறிவிட்டன. சாளரத்தில் இருந்தபடியே கட்டிடத்திற்குப் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த அப்பா நிலைதடுமாறித் தலைகுப்புறக் கீழேவிழுந்து இறந்தது, தேர்வுமுடிவுகள் வருவதற்குள்ளாகவே குமரன் ஊரைவிட்டுப் போனது. அவளுக்காகப் பார்த்துவைத்திருந்த மாப்பிள்ளை திடீரென மும்பைக்குச் செல்வதாக எழுதிவைத்துவிட்டுச் சென்றது என ஒன்றையும் நிலைநிறுத்திப் பார்க்க முடியவில்லை. எல்லாம் எந்த அறிகுறிகளும் இல்லாமல் வந்து சடசடவென்று பெய்து சட்டென்று நின்றுபோகும் மழையைப்போல் நடந்து முடிந்திருந்தது.
அப்பாவின் இறப்பிற்குப் பின் அப்படி இப்படி இருப்பதை வைத்துச் சமாளித்தும் நிலைமை கையை மீறிப்போகவே பக்கத்து வீட்டு கமலா அக்கா மதுரையில் தன் மகள் வேலைபார்க்கும் சூப்பர் மார்க்கெட்டிற்கு ஆள் தேவைப்படுவதாகவும், சம்பளம் போக தங்குமிடமும் வேலைநேரத்தில் உணவும் அவர்களே தருவதாகவும் அங்கே அமுதா வேலைக்குச் சென்றால் கொஞ்சம் நிலைமையைச் சமாளிக்கலாம் என்றும் சொன்ன ஆலோசனையை ஏற்று மதுரைக்கு வந்தாலும், இங்கு வந்ததற்கான முக்கியக் காரணம் என்றேனும், எங்கேனும் குமரனைப் பார்த்துவிடலாம் என்கிற நமிபிக்கையே.
இம்மூன்று வருடத்தில் தொலைபேசியில் பேசும்போதும், ஊருக்குப் போகும்போதும் எத்தனையோ முறை அம்மா அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கவா? எனக்கேட்டும் “இப்போதைக்கு வேண்டாம். கையில் கொஞ்சம் காசு சேரட்டும்” என்று சொல்லியே தட்டிக்கழித்து வந்துகொண்டிருக்கிறாள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கண்ணாடித் தொட்டிக்குள் இலக்கற்றுச் சுற்றித்திரியும் மீனைப்போல ஊரின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்றுவந்து கொண்டிருக்கிறாள் குமரனைத்தேடி.
பாண்டியின் வருகை அவளது வாழ்வில் எந்தவித மாறுதலையும் கொண்டுவரவில்லை என்று சொல்லிவிட முடியாது. ஆரம்பத்தில் பயிற்சிக்காக வேலையில் அவனை உடன் வைத்திருக்க வேண்டியிருந்தது. பயிற்சிக்காலம் முடிந்தபின்னரும் அவளை விட்டு விலகாமல் சூரியனைச் சுற்றும் பூமியைப்போல் பகலெல்லாம் அவளைச் சுற்றியே வந்துகொண்டிர்ந்தான். உடல்நலமில்லாமல் வேலைக்கு வராத சிலநாட்களில் அவளிருக்கும் அறைக்கே தேடிவந்து விசாரித்துவிட்டுப் போனான். முதலில் அவனது அருகாமை கொஞ்சம் எரிச்சலைக் கொடுத்தாலும். தனக்காக அக்கறைகொண்டு வரும் மனிதனை தவிர்க்க மனமில்லாமல் அவனது நட்பினை ஏற்றுக்கொண்டாள்.
பாண்டி நன்றாகச் சமைப்பான். அவன் அறையில் அவனே சமையல் செய்து அவ்வப்போது அவளுக்காகக் கொண்டுவருவான். அவனது அருகாமை அமுதாவிற்கு ஓர் ஆறுதலைக் கொடுத்தது. அவளுக்குத் தெரிந்திருந்தது அவன் தன்னை விரும்புகிறான் என்று. ஆனாலும் அவள் நினைவுகளில் குமரனே இருந்தான். பாண்டியின் மீது உண்டாகியிருப்பது கரிசனம் மட்டுமே காதலில்லை என்று அவள் பலமுறை தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
(5)
எதையெதையோ யோசித்துக்கொண்டே நடந்தவளின் உடலில் இரவோ, பகலோ எந்த வித்தியாசமும் இன்றி சாலையில் நடக்கும்போது அவளது அங்கங்களைக் கூசச்செய்யும் ஆண்களின் பார்வையைப்போல மழைத்துளிகள் பெரிதாக விழத் தொடங்கியதும் கையிலிருந்த குடையை விரித்தாள். இருந்தும் பயனில்லை குடை ஓட்டையாக இருந்தது. வேலைக்குக் கிளம்பும் அவசரத்தில் குடையை மாற்றி எடுத்து வந்திருக்கிறாள். மழை வலுக்கத் தொடங்கவே அருகிலிருந்த பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ஒதுங்கினாள். அங்கே தன்னிலை இழந்து உளறிக்கொண்டு படுத்திருக்கும் ஒரு குடிகாரனைத் தவிர வேறு யாருமில்லை. அமுதாவிற்கு அங்கே நிற்க சங்கடமாக இருந்தபோதிலும் இந்த மழையில் நனைந்துபோகத் தயாராயில்லை. அந்தச் சமயத்தில் அலைபேசி ஒலித்திடவே எடுத்தாள். அம்மா அழைத்திருந்தாள். அம்மாவிடம் பேசிமுடிப்பதற்கும் மழை நிற்பதற்கும் சரியாய் இருந்தது. பேசிமுடித்ததும்தான் பேச்சின் மும்முரத்தில் அவளது குடையை மடித்து கைப்பைக்குள் வைத்து அவள் நின்றிருந்த நிழற்குடையின் திண்டின்மேல் வைத்தது நினைவுக்கு வந்து திரும்பிப் பார்த்திட அங்கு கைப்பையோடு அந்தக் குடிகாரனும் காணாமல் போயிருந்தார்கள்.
காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றவள் அங்கிருந்த காவலர் ஒருவரிடம் நடந்த விஷயங்களைக் கூற அவர் எல்லாவற்றையும் கேட்டு விசாரித்துவிட்டு ரைட்டரிடம் புகார் எழுதி பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். அப்போது அருகிலிருந்த லாக்கப்பில் சிலர் சிரித்துப் பேசும் சத்தம் வந்தது. சிரிப்பொலிகள் அதிகமாகவே அமுதாவிடம் விசாரித்துக் கொண்டிருந்த காவலர் கோபமாக வசைகளைத் தொடுத்தபடியே அவர்களை நோக்கிச் சென்றார். அத்தனை பேச்சுக்குரல்களிலும் மையமாக ஒலித்த குரல் அமுதாவிற்கு பரிச்சயமானதாகப் பட்டிடவே ஆர்வமிகுதியில் சிறையறைக்குள் எட்டிப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
அங்கே நடுவில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவனைப் பார்க்கையில் குமரனைப் போலிருந்தது. அதை அவள் மனம் ஏற்க மறுத்தது. தான் ஊரில் பார்த்த குமரனில்லை இவன். இவனது தோரணையும், சீரற்ற தாடியும், ஏற்றி வாரி பின்பக்கமாகக் கீழே இறக்கிவிடப்பட்ட தலைமுடியும். கையில் பச்சை குத்தப்பட்டிருக்கும் சாதிய அடையாளமும், கழுத்திலும் , கையிலுமாக நிறைந்து தொங்கும் பலநிறக் கயிறுகளும், அவற்றைச் சுற்றியிருக்கும் செயின்களுமாக அவனைப் பார்க்கும்போதே அடிவயிற்றில் ஏதோ செய்வதுபோல் இருந்தது.
எழுத்தரிடம் முன்னர் சொன்ன விஷயங்களையே மீண்டும் விவரமாகச் சொல்லச்சொல்ல அவரும் கவனமாகக் கேட்டுக் குறிந்த்துக் கொண்டிருந்தார். மனது கேட்காமல் அவரிடம் மெதுவாக உள்ளே இருப்பவர்கள் யாரென்று கேட்க
“அவனுங்களாம்மா பூராம் ரவுடிப் பயலுக, எல்லாப் பயலுக மேலயும் கொலை, கொள்ளை, அடிதடி, கஞ்சான்னு ஏகப்பட்ட கேசுக இருக்கு. நாளைக்கு தலைவர் வர்றாருல்ல. அதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா இவனுங்கள தூக்கி உள்ள வெச்சுருக்கோம். ஆனாலும் அடங்கறானுங்களா பாரு. சரி இதுல ஒரு கையெழுத்து போடும்மா” என்று சொல்லியபடியே புகாரெழுதியிருந்த காகிதத்தை நீட்டினார்.
மிகுந்த தயக்கத்துடன் “அந்தா நடுவுல உக்காந்துருக்காருது யாரு?” என்று கேட்டவளிடம். “அவனா அவன்தான் குமரன் ஒன்னாந்நம்பர் ரவுடிப் பய. சரியான பொறுக்கி. ஏன் கேக்கற” என்று கேட்டவரிடம்.
“ஒன்னுமில்லை சும்மாதான் கேட்டேன்” என்று சொல்லியபடியே படித்துப்பார்த்துக் கையெழுத்திட்டுவிட்டுக் காகிதத்தைக் கொடுத்தவள், அதற்குமேல் அங்கிருக்க மனமில்லாமல் எழுந்து வெளியே வந்தாள். அங்கு பாண்டி நின்றுகொண்டிருந்தான். காவல் நிலையத்திற்கு வருவதற்குமுன் எதற்கும் இருக்கட்டுமே என்று பாண்டிக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லி ஸ்டேஷனுக்கு வரச்சொல்லியிருந்தாள். அவளுக்காக வந்திருந்தவனிடம் கூட எதுவும் பேசாமல் அழுதபடியே அங்கிருந்து போனவளையே நின்று பார்த்துக்கொண்டிருந்தவன் கொஞ்சமும் தாமதிக்காமல் தனது பைக்கை எடுத்து வந்தான். முதலில் மறுத்தாலும் அவன் வற்புறுத்தவே அமுதா ஏறிக்கொண்டாள். ஹாஸ்டலின் வாசலில் அவளை விட்டுவிட்டு எதுவானாலும் எந்த நேரமானாலும் தன்னை அழைக்கும்படிச் சொன்னவனிடம் வெறுமனே தலையை மட்டும் சரியென ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
அமுதாவை முதன்முதலில் பார்த்தது பாண்டியின் மனதிற்குள் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது. புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தவனிடம் ஸ்டோர் மேனேஜர் அமுதா என்கிற ஊழியரைச் சென்று பார்க்கச்சொன்னதும் வெவ்வேறும் ஆட்களிடம் விசாரித்துக் கடைசியில் அவளைக் கண்டுபிடித்தான். சற்றே உயரமான முக்காலியின் மேலே நின்றவாறு பொருட்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள். கீழே குனிந்து பார்த்தவளின் கண்களைத்தான் முதலில் பார்த்தான். மாயத்தின் அழகினைத் தன்னுள் பொதித்துவைத்திருக்கும் கவிதையினைப் படிப்பவனைப் போன்று அவள் கீழே இறங்கிவரும்வரை அந்தக் கண்களைப் பின்தொடர்ந்தவன் இன்றுவரை மீளவே இல்லை.
அன்றும்கூட அப்படித்தான் சூப்பர்மார்க்கெட்டில் பொருட்களின் விலைவிபரங்களை மும்முரமாகச் சரிபார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென ஏதோ ஞாபகத்தில் உறைந்து நின்றிட அவளைப் பாண்டியின் குரல்தான் திரும்பக் கொண்டுவந்தது. அவளைப் பார்த்து மெய்மறந்தவனாய் நின்றிருந்தவனைக் கண்களில் கேள்வியுடன் பார்த்தவளிடம் “சூப்பர்வைசர் கூப்படறாரு” என்றதும் சரியென்று தலையாட்டிவிட்டு நகர்ந்தவளைப் பார்க்கையில் பௌர்ணமி நிலவினைக் கடந்துசெல்லும் மேகத்தின் நினைவு வந்தது. இருந்தாலும் அவள் கண்களில் ஏதோ சோகம் தேங்கியிருப்பதை உணர்ந்திருந்தான். அதனால்தால் அன்று அவள் கிளம்பும்போதும் உடன்வரவா எனக் கேட்டான். இப்போது அவன் நினைத்ததைப் போலவே அசம்பாவிதம் ஒன்றும் நடந்துவிட்டது. அவள் கொஞ்சம் சரியானதும் என்னவென்று கேட்டுத் தெரிந்துகொண்டு தன்னால் இயன்றதைச் செய்யவேண்டும் என்று நினைத்தபடியே அங்கிருந்து கிளம்பினான்.
(6)
அறைக்குள் வந்ததும் குளியலறைக்குச் சென்று ஆடைகளைக் களைந்துவிட்டு உடல்முழுதும் நனையும்படிக் குளித்தாள். உடல் குளிர்ந்தாலும் மனம் கனன்றுகொண்டிருந்தது. மூன்று ஆண்டுகளாக யாரைத் தேடிக்கொண்டிருந்தாளோ, யாருக்காக இந்த மாநகருக்கு வந்தாளோ. எந்த ஒருவனுக்காக இத்தனை நாட்கள் காத்திருந்தாளோ அவனை அந்தக் குமரனை இப்படிப்பட்டதொரு நிலைமையில் காண்பாளென அவள் கனவிலும் நினைத்ததில்லை. அவளால் அந்தச் சூழலை ஜீரணிக்கவே முடியவில்லை. இரண்டுநாட்கள் வேலைக்குக்கூடச் செல்லாமல் அழுது தீர்த்தாள்.
இரண்டுநாட்களுக்குப் பின் வேலைக்கு வந்தவள் முதலில் தேடியது பாண்டியைத்தான். அவனைக் காணமுடியாமல் போகவே அவனோடு தங்கியிருந்த முருகேசனிடம் விசாரித்தாள். பாண்டியின் அப்பாவிற்கு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிவிட்டதாகவும், ஊருக்குச் சென்றவன் அங்கேயே இருந்து குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டதாகவும், இனி அவனால் திரும்பி வருவது இயலாத காரியம் என்பதை அவளிடம் அவன் சொல்லச் சொன்னதாகவும் முருகேசன் கூறினான்.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு எதுவும் பேசாமல் நகர்ந்தவள் அன்று இரவு வேலை முடிந்ததும் புதிதாக வாங்கியிருந்த ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு கிளமிபினாள். அன்று மீண்டும் மழை வலுத்துப் பெய்தது. பைக்குள் புதியகுடை பத்திரமாக இருந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்