logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

மீ. யூசுப் ஜாகிர்

சிறுகதை வரிசை எண் # 5


என்னை மாற்றும் காதலே..!!! சாரு சென்னை நகரின் பிரபலமான கம்பெனியில் ஹெச் ஆர் ஆக பணிபுரிந்து வரும் நவீன யுவதி. பாரதியின் புதுமை பெண்ணாக இருந்தாலும் பண்பாடு மாறாதவள். வீட்டில் குறும்பு நிறைந்தவளாகவும், அலுவலகத்தில் பொறுப்பு மிக்கவளாகவும் இருந்தாள். அலுவலகத்தில் சாருவிற்கு நெருங்கிய தோழி மதுமிதா. இருவரும் ஒன்றாகவே சுற்றுவார்கள் ஷாப்பிங் மால்களுக்கும், வேறு வெளியே எங்கே சென்றாலும் ஒன்றாகவே இருப்பார்கள். சாருவின் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம். பாசமான தந்தை, அன்பான தாய் கிடைத்திருந்ததால் வீடு சொர்க்கமாக இருந்தது சாருவுக்கு. இவை எல்லாம் ஹரிஷ் வந்த பிறகு முழுவதுமாக மாறும் என்று கனவிலும் அவள் நினைத்து பார்க்கவில்லை. ஹரிஷ் பெங்களூர் அலுவலகத்தில் இருந்து மாறுதலாகி சென்னை அலுவலகத்தின் மேனேஜராக பொறுப்பு ஏற்று இருந்தான். ஹரிஷ் பற்றி சொல்ல வேண்டுமானால் அவனின் கட்டுக்கோப்பான உடல்வாகு, அழகான கண்கள், தாடி, மீசை என்று பெண்களை கவரும் தோற்றம் கொண்டவன். முதல் நாள் அனைவரும் தங்கள் பெயரை சொல்லி அவனிடம் அறிமுகம் செய்து கொண்டார்கள். சாருவும் அவருக்கு கை கொடுத்து வாழ்த்துக்கள் சொல்லி தன்னை அறிமுகம் செய்துகொண்டாள். ஹரிஷ் க்கு முதல் பார்வையிலேயே சாரு மீது காதல் வந்துவிட்டது. அலுவலகம் சார்பான கோப்புகளை,விஷயங்களை பரிமாறிக்கொள்ள இருவரும் ஒன்றாக இருக்கும் நேரம் அதிகமானது. மாதங்கள் உருண்டோட சாரு மீதான காதலை ஹரிஷ் அதிகமாய் உணர்ந்தான் சரியான சூழலில் மனதில் இருந்த காதலை சொல்லிவிட்டான். ஹரிஷ் போன்ற ஆண்மகனை எந்த பெண்ணிற்கு தான் பிடிக்காது. சாருவும் காதலை ஏற்றுக்கொண்டாள் இருவரும் மிகவும் நெருக்கமாகி விட்டார்கள். சாருவின் தோழி மதுமிதா கண்டிப்புடன் இப்படி எச்சரிக்கை செய்தாள் அவர் அழகாக இருக்கிறார் உயர்ந்த பதவியில் இருக்கிறார். நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் நீ உன்னோட எல்லையில் உறுதியாக நில், ஏமாந்து விட்டு பிறகு வருந்தாதே என்றாள். சாருவுக்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும்,ஹரிஷ் மீதான காதல் நம்பிக்கை அவளை மதுவின் பேச்சை அலட்சியப்படுத்த வைத்தது. அன்று புதிய ஆண்டு பிறப்பதற்கான பார்ட்டி ஒன்று பெரிய ஆடம்பர ஓட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த பார்ட்டிக்கு இருவரும் ஜோடிகளாக இணைந்தே வந்து கலந்து கொண்டார்கள். சக ஊழியர்கள் மேனேஜர் சாருவை உஷார் பண்ணிட்டார் போல என்றும், பெண் ஊழியர்கள் சாரு ரொம்ப அதிர்ஷ்டக் காரி தான் இல்லனா இவ்ளோ அழகாவும், அதிகமா சம்பாதிக்கிற ஹரிஷ் இவளை காதலிச்சிருப்பானா என்று ஒவ்வொரு மாதிரி பேசிக்கொண்டார்கள். பார்ட்டி ஆரம்பித்தது வண்ண விளக்குகள் சூழ, பாட்டு சத்தங்களுடன் ஹாப்பி நியூ இயர் என பேரிரைச்சலோடு மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள். மதுவகைகளும், குளிர்பானங்களும் இருந்த ட்ரேயில் விரும்பியதை எடுத்து பருகத்தொடங்கினர். ஹரிஷ் விலை உயர்ந்த மதுவை கோப்பையில் ஊற்றி எடுத்துப்பருகினான், சாருவும் ஆரஞ்சு ஜூஸ் ஒன்றை எடுத்துப்பருகினாள். நேரம் செல்ல செல்ல ஹரிஷ் போதையில் தன்னிலை மறந்தான் சாரு அவனை அழைத்துக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட ஓட்டல் அறையில் நுழைந்து தாழிட்டுக்கொண்டாள். ஹரிஷை கட்டிலில் கிடத்திவிட்டு சாரு குளித்து விட்டு வந்தாள். புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டே சோபாவின் மீது உறங்கிப்போனாள். சில மணி நேரங்களுக்கு பிறகு எழுந்த ஹரிஷ் அருகில் சோபாவில் படுத்திருக்கும் சாருவின் அழகை பார்த்து ரசித்தான். கொஞ்சம் போதையில் இருந்ததாலும்,தனிமையும் அவனுக்குள் ஏதோ கிளர்ச்சி செய்திருந்தது. மெல்ல கட்டிலை விட்டு எழுந்து ஷோபாவை நோக்கி நடந்தான். சாருவின் முகத்தருகே வந்து வெப்பமாய் மூச்சுக்காற்று உடன் ஒரு முத்தம் வைத்தான். சாரு பதட்டத்துடன் எழுந்தாள். என்ன ஹரிஷ் இப்போது தான் எழுந்தாயா என்றாள்? ஆமா சாரு சாப்பிட ஏதாவது ஆர்டர் செய்யட்டுமா? வேணாம் சாரு பசிக்கல. சரி ஹரிஷ் போய் கட்டிலில் தூங்குங்க என்றாள், பதில் ஏதும் பேசாமல் சாருவையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். என்ன ஹரிஷ் அப்படி பாக்குறீங்க உன்னோட அழகை ரசிக்கிறேன் என்றான் வெட்கத்தில் சிரித்தாள் சாரு, அவள் முன்னமே தன் சட்டையை கழற்றி தன்னுடைய திரண்ட உடலை காட்டினான். என்ன ஹரிஷ் பண்றிங்க இதெல்லாம் இப்போ வேணாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்றாள். ஒரு கண்ணால் அவன் தேகத்தை மேய்ந்து கொண்டே..!!! ஹரிஷ் சாருவை ஷோபாவில் இருந்து அள்ளியெடுத்து கட்டிலுக்கு சென்றான். அவன் அணைப்பில் வேண்டாம் என்ற சாருவின் குரலும் ஓய்ந்து போயிருந்தது. இருவரும் உடலால் இணைந்தார்கள், மோகக்கடலும்,ஆசைநதியும் ஒன்றுடன் ஒன்று கலந்தது. உடல் அசதியில் இருவரும் உறங்கிப்போனார்கள். காலை மணி 10 சாரு எழுந்து குளித்துவிட்டு காபி ஆர்டர் செய்து குடித்தாள், ஹரிஷும் எழுந்து குளித்துவிட்டு காபி பருகினான். இருவரும் புன்னகைத்து கொண்டார்கள். சாருவின் நெற்றி மீது முத்தமிட்டான். என்னை நிச்சயம் திருமணம் செய்துப்பிங்க தானே. ஏமாத்திட மாட்டிங்க இல்ல முட்டாள் என்ன கேள்வி இது நீ தானே என் சுவாசம் என்று கொஞ்சம் கோபமாய் சொன்னான். சாரு ஓடிச்சென்று அவன் மார்போடு சாய்ந்து கொண்டாள். பிறகு இருவரும் கிளம்பி அவரவர் வீட்டிற்கு சென்றார்கள். மறுநாள் அலுவலகத்தில் சாருவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஹரிஷ் மாறுதலாகி ஹைதராபாத் சென்று விட்டான் என பேசிக்கொண்டார்கள். சாருவுக்கு தலை சுற்றியது. நேற்று கூட இதைப்பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்ளவில்லை, கிளம்பும் போதும் நம்மிடம் சொல்லவில்லையே என்று ஹரிஷ் மொபைலுக்கு போன் செய்தாள் ஸ்விட்ச் ஆஃப் என்று சொல்லியது கணினி குரல். இடிந்து போனாள் சாரு. மதுவிடம் நியூ இயர் இரவில் அவளுக்கும் ஹரிஷ்க்கும் நடந்ததை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டாள். நாங்கள் இருவரும் இணைந்த நேரத்தில் சாட்சியாய் அறையில் இருந்த மீன் தொட்டியில் உள்ள வண்ண மீன்களும், உயிர் இல்லாத பொருட்களும் தானே இருந்தது. அவர் என்னிடம் உன்னை நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்ற போதும் அந்த மீன்கள் இயல்பாய் நீந்திக்கொண்டு தான் இருந்தன. அவர் சொன்ன சத்தியத்தை அவர் மறந்து விட்டிருந்தால் நான் என்ன செய்வேன். நான் ஏமாந்த விஷயத்தை எப்படி எல்லாரிடமும் சொல்வேன். அவர் இல்லாமல் எப்படி என் வாழ்வை வாழ்வேன் என்று கதறினாள். அழாதே சாரு இந்த தவறை ஹரிஷ் எந்த நோக்கத்துடனும் செய்திருக்க மாட்டார். உன்னை போலவே அவரும் வருந்திக்கொண்டு தான் இருப்பார். விரைவில் உன்னை சந்திப்பார் என்று சாருவிற்கு ஆறுதல் கூறினாள் மதுமிதா. ஆனால் நாட்கள் கடந்ததே தவிர எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஹரிஷின் உயிர் சாருவின் வயிற்றில் வளர ஆரம்பித்தது. மதுவிடம் சொல்லி அழுதாள். இருவரும் ஒன்றாக ஹைதராபாத் அலுவலகம் நேரில் சென்று விசாரித்தார்கள். ஹரிஷ் அங்கு வந்து பணியில் சேரவில்லை என்றும், சேர வந்த நாளில் விபத்தில் சிக்கி கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதும் தெரிந்து அதிர்ந்து போனார்கள். எந்த மருத்துவமனை என தெரிந்து கொண்டு இருவரும் பார்க்க சென்றார்கள். மருத்துவமனையில் நுழைந்து ஹரிஷ் பெயரை கேட்டு ஐசியூ வார்டுக்குள் நுழைந்தார்கள் ஹரிஷின் உடல் எங்கும் மின் வயர்கள், முகத்தில் வென்டிலேட்டர் கருவி என அசைவில்லாமல் படுத்துக்கிடந்தான். சாரு கண்ணீர் விட்டு அழுதாள். ஹரிஷின் தாய் அழுத படியே வந்து இரண்டு பேரில் யாருமா சாரு என்றதும் சாரு அழுகையை நிறுத்திவிட்டு கொஞ்சம் முன்னோக்கி வந்தாள். வந்ததும் கட்டியணைத்துக்கொண்ட ஹரிஷின் தாய் ஊரிலிருந்து கிளம்பும் போது உன்னைப்பற்றி தான்மா பேசிட்டு வந்தான். வந்ததும் உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கணும், நாள் குறிச்சு கல்யாணம் பண்ணனும்னு பேசிக்கிட்டு சந்தோஷமா வந்தான்மா. இறங்கி நடந்து வரும் போது லாரியில் அடிபட்டு கோமா நிலைக்கு போய்ட்டான்மா என்றாள். கண்ணீருடன் சாரு மருத்துவரிடம் அனுமதி வாங்கி உள்ளே சென்று ஹரிஷிடம் அழுதபடிப் பேசினாள் நம்ம காதலோட சாட்சியாய் இப்போ என் வயிற்றுல நம்ம குழந்தை இருக்கு ஹரிஷ் என்னைப் பாரு உன்னை கட்டிப்பிடிச்சு இதை சொல்லணும் எழுந்திரு ஹரிஷ் என்று அழுதாள். ஹரிஷின் கண்களில் கண்ணீர் வழிந்தது. உடனே சாரு டாக்டரை அழைத்து வந்து காட்டினாள். பரிசோதித்து பார்த்து விட்டு ஓ மெடிக்கல் மிராகில் அவரு மூளை இப்போ செயல்பட ஆரம்பிச்சிடுச்சு. இன்னும் சில மணி நேரத்தில் அவர் சுயநினைவை அடைந்து விடுவார் என்றார். கடவுளுக்கு கண்ணீரால் நன்றி சொன்னாள் சாரு. ஹரிஷின் தாய் அவள் கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள். விடியும் பொழுது சாருவுக்கு இன்பமானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில் நிலவு உறங்கிக்கொண்டிருந்தது..!!! மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி. முகவரி:20 மக்தும் மரைக்காயர் 2வது தெரு, வந்தவாசி-604408. திருவண்ணாமலை. அலைப்பேசி:7010219221

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.