logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

ஜா. அருள் சுனிலா

சிறுகதை வரிசை எண் # 43


மஞ்சள் கயிறு பட்டாம்பூச்சியின் இயல்போடு மீனா, தனது முனைவர் பட்டப் படிப்பிற்காக மதுரா கல்லூரியில் சேர்ந்தாள். அறிவும் துடிப்பும் இயல்பிலே கொண்டு, பார்போர் மீண்டும் ஒருமுறை ஆவலோடு பார்க்கலாம் என்ற முறையில் அவளின் அழகும் குணம் அமைந்திருந்தது. பேச்சிலே தமிழ் இலக்கிய நயம் மிகுந்திருந்தது. வெற்றி பெற வேண்டும். வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற தெளிவு அவளுக்குள் மிகுந்திருந்தது. அவளோடு சேர்ந்து ஆறு முனைவர் பட்ட ஆய்வு மாணவிகளும் சேர்ந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் குழுவாக இணைந்து பல்வேறு தலைப்புகளில் பேசுவதைக் கேட்டால் அறிவும் புலமையும் நிரம்பிய கூட்டம் இவர்களைப் போல் ஆய்வு மாணவிகள் வேண்டும் என்ற நினைப்பு தான் ஏற்படும். ஆய்வுத் தலைப்புகளைத் தேர்வு செய்வதில் ஒருவருக்கொருவர் தங்களின் முழு ஈடுபாட்டையும் செலுத்தினர். மீனா இலக்கணத்தை ஆய்வுத் தலைப்பாகத் தேர்வு செய்து அதற்கான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டாள். இந்நிலையில் திடீரென்று ஒரு நாள், அவளின் பெற்றோர் மற்றும் உறவினர் இணைந்து அவளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்தனர். அதன்படி அவளைக் கல்லூரியிலிருந்து விரைவாக வரும்படிக் கூறி, அவளின் விருப்பம் என்ன? என்று கேட்காமலே கண்மூடிக் கண்ணைத் திறக்கும் முன் அவளுக்குத் திருமணச் சடங்காகப் ‘பூ’ வைக்கும் சடங்கு நடந்து முடிந்தது. வரதட்சணையாக என்பது பவன் நகையும் ஒரு வாகனமும் தருவதாகவும் முடிவு செய்யப்பட்டது. பூ வைக்க வந்த நேரத்தில் ராமை பார்த்து, மீனாவால் திருதிருவென்று முளிக்கத்தான் முடிந்தது. தனக்கான கணவன் இவன் அல்ல என்பதை எப்படி சொல்வது என்றே தெரியாமல் அத்தனை பேர் முன்பும் வாய் அடைத்து நின்று விட்டாள். அடுத்த நாள் காலையிலேயே! ராமின் வீட்டைத் தேடியே மீனா சென்று விட்டாள். மீனாவை அங்கே கண்ட ராமின் பாட்டி, “திருமணம் இன்னும் ஆகவே இல்லை. அதற்கு முன் நீ எப்படி இங்கே” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே ராம் அங்கு வந்து சேர்ந்து விட்டான். மீனா அவனுக்கு நேராகவே நின்று உங்களிடம் எனக்குப் பேச வேண்டியுள்ளது என்று கூற, பாட்டி அம்மா அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். அதன்பின் மீனா “எனக்கு இந்தத் திருமண பந்தத்தில் விருப்பமில்லை. நான் ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறேன். எனது படிப்பை முடித்து, தகுந்த வேலை கிடைத்தபின் திருமணம் செய்யலாம் என்று ஆசைப்படுகிறேன். ஆகவே நீங்கள் எனது பெற்றோரிடம் பேசி தயவு செய்து இந்தத் திருமணத்தை நிறுத்துங்கள்” என்று ராமிடம் கேட்டுக் கொண்டாள். மீனா, சொல்லிய செய்தியை மிகத் துரிதமாக உள்வாங்கிய ராம், சில நிமிடங்களிலே அவளின் அழகிலும் பேச்சிலும் கவரப்பட்டான். “திருமணம் செய்தால் நான் உன்னைத்தான் திருமணம் செய்வேன்” என்று அவளுக்குப் பதில் கூறிவிட்டு, சற்று ஏளனமாகவும், வன்மமாகவும் சிரித்து விட்டான். “நான் என்ன சொல்கிறேன். இவன் என்ன சொல்கிறான்” என்று மீனா திகைத்து நின்ற வேளையில், “இந்தக் காலத்தில் எல்லாப் பெண்களும் இப்படித்தான் காதலிக்கின்றனர். நீயும் அப்படித்தான். இதில் தவறு ஒன்றும் இல்லை. அதனால் குறித்த நாளில், குறித்த நேரத்தில் நமக்கான திருமணம் நடைபெறும்” என்று பேசி முடித்து விட்டான். “நீ தான் எனக்கு வேண்டும்” என்று தீர்க்கமாகக் கூறிய ராமிடம் எதுவும் பதில் பேச முடியாமல், பேசியும் பயனில்லை என்று தெரிந்தவுடன் வந்த வழியே மீனாவும் கல்லூரி வாசலிலே கால்நடையாகவே வந்து சேர்ந்து விட்டாள். சிரித்த முகத்துடனும் ஒருவித ஆர்வத்துடனும் துள்ளலோடும் ஆய்வு மாணவிகளை அணுகும் மீனா, அன்று கல்லூரிக்குள் ஒருவித சோர்வுடனே வந்திருந்ததைப் பார்த்த ஆய்வு மாணவிகள், தங்கள் பணிகளை அப்படியே வைத்துவிட்டு அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆய்வு செய்வதில் கருத்தாக இருந்தனர். என்ன? ஏன்? எப்படி என்று ஒவ்வொருவரும் கேட்டக் கேள்விகளுக்கும் தனது வாழ்வில் திடீரென்று நடந்து முடிந்த ‘பூ’ வைத்த நிகழ்வையும், திருமணம் நடக்க இருப்பதையும் அவள் அனைவரிடமும் கூறிவிட்டாள். அனைவரும் அப்படியே அன்று அயர்ந்து உட்கார்ந்து யோசித்தனர். சில பல யோசனைகளையும் அவளுக்கு அள்ளித் தெளித்தனர். கல்லூரியில் இருந்து வீடு வந்த, மீனாவிடம் அவளின் அண்ணன் விஷப்பாட்டில் ஒன்றை காட்டி, “திருமணத்திற்கு மறுத்தால் அப்பா, அம்மா, நான் மூவரும் இதற்குப் பலியாகுவோம்” என்று உறுதியோடு கூறினான். அடுத்த நாளிலிருந்து அவளின் ஆய்வு படிப்பு கானல் நீராக மாறிப்போனது. குடும்பத்தினர் அனைவரும் திருமண நிகழ்வுக்கான வேலைகளைச் செய்ய, மீனா “என்ன செய்வது? குடும்பத்தினர் உயிரா? காதலனுடன் வாழ்வா? என்று யோசித்து யோசித்து குடும்பத்தினரின் உயிர் தான் பெரியது” என்று முடிவெடுத்தாள். தனது காதல் வாழ்வை, காதலனை அப்படியே மனதிற்குள் பூட்டியே வைத்து விட்டாள். திருமண வாழ்விற்குள் அடியெடுத்து வைத்தாள். திருமணமும் முடிந்தது. அன்றே ராம் அவளைத் தனக்குரியது ஆக்கிக் கொண்டான். ஆனாலும் அவனின் உள்ளுணர்வு, “இவள் ஒருவனைக் காதலித்தவள். ஒருவனைக் காதலித்தவள்” என்ற நினைவே அவனுக்குள் மேலோங்கி நின்றது. மீனாவின் மனமோ! “மஞ்சள் கயிற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. கட்டிய கணவனை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு, அவனோடு காலம் முழுவதும் மகிழ்வாக வாழ வேண்டும்” என்று முடிவெடுத்தாள். அதன்பின் மருமகள் என்ற பதவியைப் புகுந்த வீட்டில் பெற்ற மீனா, காலை எழும்பிய உடன் குளித்து, கோலம் போட்டு, காலை உணவு தயாரித்து, பாத்திரம் கழுவி, நண்பகல் உணவு தயாரித்து, துணி துவைத்து என்று வீட்டின் அத்தனை வேலைகளையும் தனியொருவராகவே செய்து முடிக்க வேண்டும். ஆனாலும் கட்டிய கணவன் கண்டும், காணாதது போன்றே நடந்து கொண்டான். மனைவி என்ற பற்றும் பாசமும் அவனிடம் துளியும் இருந்ததைப் போன்று அவளாலும் உணர முடியவில்லை. அன்று அவளால் சரியான நேரத்தில் தூக்கத்திலிருந்து எழ முடியவில்லை. சற்றுத் தாமதமாகவே எழுந்து விட்டாள். சரியான நேரத்தில் வீட்டின் முன்புறத்தில் கோலம் போடவில்லையென்றும், காலை உணவு தயாரிக்கவில்லையென்றும் கோலபொடியுடன் வந்த அவளின் கன்னத்தில் கை பதித்து விட்டான் அவளின் கணவன். அவளின் கன்னத்தோடு சேர்ந்து கண்ணும் சிவப்பாகக் காட்சியளித்தது. தங்கையைப் பார்க்க வந்த அண்ணனின் கண்ணில் பட்டது அவளின் வீங்கிய முகமும் கண்ணீர் துளியும் தான். முதன்முதலில் அண்ணனின் மனம் வலித்தது. தவறு செய்து விட்டோமோ? என்று மனம் வருந்தினான். தங்கையிடம் நலம் விசாரித்த அண்ணனால், எப்போதும் போல் அவளிடம் மனம் விட்டு பேச முடியவில்லை. தங்கையின் வாழ்வில் நல்லது செய்கிறோம் என்று செய்து வைத்த திருமண வாழ்வில், “தங்கையின் வீங்கிய கன்னமும் சிவந்த கண்களும், அவனுக்குள் தங்கை திருமண வாழ்வில் மகிழ்வாக இல்லை” என்ற உள்ளுணர்வை ஏற்படுத்துவதாகவே அமைந்தது. ஆனாலும், தங்கை புகுந்த வீட்டில் நலமாக வாழ வேண்டும் என்று தங்கையின் கணவனுடனும் அக்குடும்பத்தினர் அனைவருடனும் நட்போடு நடந்து கொண்டான். திருமணம் முடிந்து சிலநாட்கள் கடந்த பின்பு, கணவனும் குடும்பத்தினரும் தங்கள் குணநலன்களில் இருந்து சற்று மாற்றம் பெற்று, மீனாவிடம் நட்போடும் அன்போடும் அதிகப்படியான கரிசனையோடும் நடந்து கொண்டனர். இதை மீனாவால் நம்பவே முடியவில்லை. இவள் ஒரு ஆய்வு மாணவி அல்லவா! அதிகப்படியாகவே சிந்திக்கத் தொடங்கினாள். “எதனால் இவர்கள் இப்படி என்னைக் கவனிக்கிறார்கள், அன்பு செய்கிறார்கள் என்று. ஆனால் அவளுக்குச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்” என்ற நினைவோடு தனக்கான வழக்கமான கடமைகளை முகத்தில் புன்னகை மாறாமலே செய்து வந்தாள். அப்பொழுதுதான் கணவனும் அவளது குடும்பத்தினரும் இணைந்து அவளின் செயல்களைப் புகழ்ந்து கொண்டே, வரதட்சணையாகப் போட்ட என்பது பவன் நகையைத் தரும்படி கேட்டுக் கொண்டனர். அவளுக்கு அப்போதுதான், தான் ஆய்வு செய்த தலைப்பின் நோக்கமே புரிந்து கொண்டது. சற்று நேரம் சிந்திக்கத் தொடங்கினாள். என்னை ஏன் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர் என்று. அந்நேரத்தில் அவர்களுக்கு எப்பதிலும் சொல்லாமலே மீனா, அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டாள். கணவன் உட்பட மாமியார், மாமனார், நாத்தனார் அனைவரும் தங்களுக்குள் சுனாமி போல கொந்தளித்துக் கொண்டிருந்தனர். ஒரு ஆண்மகன், ஒரு பெண்மகவு என்று ஆசை ஆசையாக வளர்த்த மீனாவின் பெற்றோர் மீனாவைப் பார்த்துவிட்டு போகலாம் என்று அன்று, அவளின் புகுந்த வீட்டிற்கு வந்தனர். மகளின் கலையிழந்த முகத்தில் தோன்றிய புன்னகையை, ஏதோ நடந்தும், நடக்காதது போன்ற தோற்றத்தைத் தாயும், தந்தையும், தமையனும் கண்டு கொண்டனர். புகுந்த வீட்டில் உள்ளோர் இல்லாத நேரம் பார்த்து “நீ நல்லா இருக்கிறியா? நீ நல்லா இருக்கிறியா?” என்று பெற்றோர் மீண்டும் மீண்டும் நலம் விசாரித்தனர். மீனா அனைத்திற்கும் ‘ஆம்’ என்று தலையாட்டி பொம்மையாகவே பதிலும் கூறினாள். பெற்றோர் அங்கிருந்து செல்லும்போது அவர்களுக்குத் தெரியாமலே “இது என்னுடைய படிப்பு சார்ந்த பொருட்கள். இதைப் பத்திரமாக வைத்திருங்கள்” என்று அவளின் நகைகள், முக்கியமான பொருள்கள் அனைத்தையும் தாய் வீட்டிற்குக் கொடுத்து விட்டாள். மீனாவின் பெற்றோர் சென்ற பின்பு, கணவன் அவளிடம் நகையைத் தரும்படி கேட்டான். “எதற்காக? இந்த நகை தேவை” என்ற அவளின் கேள்விக்கு அவனின் மழுப்பும் வினாத்தான் பதிலாகக் கிடைத்தது. அவள் தன்னிடம் நகையைத் தர மாட்டாள் என்று உறுதி செய்து கொண்ட பின்னர், தானே நகைகளை எடுக்க, அவளின் பொருட்கள் ஒவ்வொன்றாக உருட்டத் தொடங்கினான். எங்கும் நகையை அவனால் எடுக்க முடியவில்லை. “உனது நகைகள் எங்கே? என்று ஆவேச குரலில் கத்தினான்.” அவளோ! தாயின் வீட்டில் இருப்பதாகவே மென்மையாகப் பதிலும் கூறினாள். கோபக்கனலில் இருந்தவன், அவளை இரண்டாவது முறையாகக் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். அவளின் மனம் வலித்ததோடு, கன்னமும் கண்களும் வீங்கியே சிவந்தது. அவளை அடித்ததோடு அவன் விடவில்லை. அவளின் வாழ்வையே தனது பேச்சால் கொச்சைப்படுத்தினான். அவளை வெளியே தள்ளி, அப்படியே “உன் வீட்டிற்குச் சென்று நகைகளோடு வந்தால் வா, இல்லையே அங்கேயே இருந்து விடு” என்று துரத்தி விட்டான். அந்த நேரம் தங்கை கொடுத்தனுப்பிய பொருட்களைப் பார்வையிட்ட அவளின் அண்ணன், அவளின் நகைகளைப் பார்த்து அதிர்ந்தே போய் விட்டான். அதேநேரத்தில் வீங்கிய கன்னங்களோடும் சிவந்த கண்களோடும் வாசலில் நிழலாடிய தங்கையைப் பார்த்து மீண்டும் அதிர்ந்து விட்டான். குடும்பத்தினர் அனைவரின் பார்வையும் ஒரே நேரத்தில் கேள்விக்கணையாகப் பாய்வதைக் கண்ட மீனா, நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் கூறி முடித்தாள். கண்களில் வழிந்த நீரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள். பெற்றோரிடம், “இப்போது தனது நகையைக் கணவன் வீட்டுக்குக் கொடுக்க வேண்டாம்” என்றும் உறுதியாகக் கேட்டுக் கொண்டாள். அவளின் வாடிய முகத்திற்குள் நுழைந்திருந்த சோகத்தை அவளின் அண்ணனால் உணர முடிந்தது. நம்மால் தங்கையின் வாழ்வு நிலை குலைந்து விடுமோ? என்று வருந்தினான். நிமிர்ந்த நன்னடையோடு, முகம் முழுவதும் சிரிப்பலைகளோடு, எதையும் உத்வேகத்துடன் செய்யும் தங்கையின் சோர்ந்து போன பார்வையும், நடையும் வருத்தத்தைக் கொடுக்க மீனாவின் கணவனுக்குத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டான் மீனாவின் அண்ணன் சந்திரன். மீனாவின் கணவனோ, “ஏற்கனவே ஒருவனுடன் வாழ்ந்து, கெட்டுப்போன பெண்ணை என் தலை மேல் வைத்து ஏமாற்றி கட்டி வைத்தீர்கள். இனிமேல் அவள் இங்கு வரவே கூடாது. அவளின் முகத்தில் முழிப்பதே பாவம்” என்றவாறு ஆத்திரத்துடன் பலவாறு கூறியதோடு, “உங்கள் தங்கையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அவளின் ஆணவமும் திமிரும் அடங்கும். எங்கள் குடும்பத்திற்கு இப்படி ஒரு பெண் பொருத்தமே இல்லை” என்று வாய்க்கு வந்த வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்தான். அலையடித்து ஓய்ந்தது போல் தலையில் கை வைத்துக் கொண்டே அண்ணன் சந்திரன் அப்படியே அமர்ந்து விட்டான். பெற்றோர்களும் கவலையும் கண்ணீருமாக எப்படியாவது மகளை மருமகனுடன் சேர்த்து வைக்க ஊர் தலைவர்களோடு சென்று, பலருக்கும், பஞ்சாயத்து பேசும் மீனாவின் மாமனாருடன் பேச தொடங்கினர். ஆனால் அவரும் “இப்படி ஒரு மோசமான பெண், எங்கள் பேச்சை கேடகாத பெண், எங்கள் குடும்பத்திற்குத் தேவையே இல்லை. இன்னும் ஆறு மாதத்தில் விவாகரத்துச் செய்து முடித்து விடலாம்” என்று மிக எளிதாக பதிலும் கூறிவிட்டார். அதே பதிலை தான் மீனாவின் கணவனும் கூறிவிட்டான். “என்னை வேண்டாம் என்று மறுத்த, பெண்ணின் வாழ்வை அடியோடு அழித்துவிடப் போகிறோம்” என்ற வெற்றி புன்னகையை வீசி சென்றான். கவலை தேய்ந்த முகத்துடன் மீனாவின் பெற்றோர் வீடு வந்து சேர்ந்தனர். மீனாவோ, கவலைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, இனி அடுத்து என்ன செய்யலாம் என்ற முடிவெடுத்து மீண்டும் கல்லூரி வாசலுக்கே வந்துவிட்டாள். பட்டாம்பூச்சியின் துள்ளலோடு செயல்படும், மீனாவின் கழுத்தில் இப்போது மஞ்சள்கயிறு தனியாகத் தெரிய, அவளின் முகம் ஒளியிழந்து காட்சியளித்தது. அவளின் நிலைகண்ட தோழியர் அனைவரும், அப்படியே அயர்ந்து நின்று விட்டனர். அவளின் முகத்தில் ஒரு வெற்றுப் புன்னகை தோன்றி மறைந்தது. பார்ப்போர், கேட்போருக்கு எப்படி? எதிலிருந்து பதில் சொல்வது என்று தெரியாமலே திகைத்து நின்றாள். ஆனாலும், தனது தோழியர் அனைவரிடமும் மறைக்காமலே தனது வாழ்வில் நடந்து முடிந்த நிகழ்வுகளை, திருமண வாழ்வில் இந்த ஆறு மாதத்திற்குள் பட்ட அவல சோக நிகழ்வுகளை விளக்கிக் கூறிவிட்டாள். அமைதி அடைய மறுத்த மனதை, அவளின் கண்ணீர் துளிகள் “மனமே அமைதி கொள், அமைதி கொள்” என்று கூறியதோடு, ஆய்வு மாணவிகளும் தங்கள் பாசத்தால் அவளை ஆறுதலோடு அணைத்து, ஆய்வுப் பயணத்திற்குள் அவளை இழுத்து சென்றனர். பல மாதங்களுக்குப் பிறகு ஆய்வுப் பணியை மீண்டும் தொடர்வதால், அவளுக்கு ஏதோ கண்ணைக் கட்டி, காட்டில் விட்டது போன்று தெரிந்தது. ஒருபுறம் விரக்தியான வாழ்வு. இன்னொரு புறம் இந்த வாழ்வை வாழ்ந்தே தீர வேண்டும் என்ற மனப்போராட்டம். இவைகளுக்கு நடுவே தனது வாழ்வின் இலக்குகான ஆய்வுப் பணிகளை முன்னெடுத்துச் செய்தாள். அதில் தனது ஆர்வம், கவனம், முயற்சி, கடின உழைப்பு அனைத்தையும் செலுத்தினாள். ஆனாலும் அவளின் எதிர்காலம் குறித்த பயம் கண்முன்னே தோன்றி மறைந்தது. ஒருவித அச்சமும் பயமும் தனக்குள் தொடர்வதை உணர்ந்தாள். நிம்மதியான தூக்கத்தையும் சந்தோசத்தையும் தொலைத்தாள். எதிலும் பிடிப்பற்ற வாழ்க்கை வாழ்ந்தாள். தன்னைப் பலர் அன்பு செய்தாலும், பாசம் காட்டினாலும் அது அவளுக்குள் போலியான நட்பு போன்றே காட்சியளித்தது. இந்நிலை அவளுக்குள் தொடர்வதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இந்த மனப்போராட்டத்தைக் கடந்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள். அதன்படி இந்த உலகத்தில் இந்தப் பிறவியை, மனம மகிழ்வோடு வாழ்ந்து முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து, தனக்குள் மறைந்திருக்கும் பேரின்ப சக்தியைத் தேடி சிறு வயதிலேயே கற்றுத் தேர்ந்த யோகா, தியானம் போன்றவைகளில் மனதைச் செலுத்தித் தன்னை எதிர்கொள்ளும் முழு மன வலிமையைப் பெற்றாள். மாலை வேளைகளில் மனதை மயக்கும் பாடல் வகுப்பிற்குச் சென்று வீணை வாசிப்பதில் ஈடுபட்டாள். ஓய்வு நேரத்தில் தட்டச்சு, கணினி வகுப்பிற்கென்று நேரத்தை ஒதுக்கி, தனது தனித் திறன்களை வளர்த்துக் கொண்டாள். சுயமாகச் செயல்படவும் தொடங்கினாள். தனது சுயமனதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நேரத்தில் தான், பலமுறை முயன்றும் தோற்றுப் போன குடும்ப வாழ்விற்கான விவாகரத்து நாளும் வந்தது. நீதிமன்றத்திற்கு வந்த ராம்; மீனாவின் பெயரில் பல பொய்களை அள்ளி வீசினான். மீனாவோ முடிந்த அளவு இந்தச் சமூகத்தின் போக்குக்கு ஏற்ப, பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப, தனது கடந்த கால வாழ்வின் காதல் கனவுகளைத் தொலைத்து விட்டு பெற்றோர் பார்த்து வைத்த இந்தத் திருமண வாழ்வை முழுமையாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் அவளின் கணவன் ராம், “இவளை இனி, என்னால் ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது” என்று உறுதிப்படக் கூறி, மனவிலக்கு பத்திரத்திலும் கையெழுத்து இட்டான். இனித் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை உணர்ந்த அவளும் அதே மனவிலக்கு பத்திரத்தில் தனது முத்திரையை பதித்தாள். அந்த நீதிமன்றத்திற்கு வெளியே வந்த ராம், அவளைப் பார்த்து “என்னை வேண்டாம் என்று ஒதுக்கிய உன்னை, இனி யார் திருமணம் செய்வது? இப்படியே செத்துப் போ!” என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமலே சென்று விட்டான். இந்த முறை அவளின் கண்களில் கண்ணீர் வரவில்லை. ஏனென்றால் இரவின் தனிமையில் அவனுக்காக அவள் பலமுறை அழுதுவிட்டாள். அவனின் வெறுப்பு படிந்த பேச்சால் பலமுறை காயப்பட்டு விட்டாள். இந்த முறை அவளால் கல்லாகத்தான் நிற்க முடிந்தது. புறக்கணிக்கப்பட்ட நேரங்கள் இனி இவனால் வரவே வராது என்று முடிவு செய்துவிட்டாள். இவன் கட்டிய தாலி கயிறுக்காக, பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளை என்று அவனின் குடும்பத்திற்காக இரவு பகல் எதுவென்று தெரியாது உழைக்கும் அடிமை வாழ்வு இனித் தேவையில்லை என்று உணர்ந்தாள். இவனுடன் வாழ்ந்த வாழ்வில் ஒரு குழந்தைகூட எனது வயிற்றில் வளரவில்லை. இதுவே ஆண்டவன் எனக்குக் காட்டிய மாபெரும் இரக்கம் என்ற பலவித மனப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். மீனாவின் கடின உழைப்பின் பயனாக அவளால் எளிதில் ஆய்வு பணியை முடித்து, மாநிலத் தேசியத் தகுதித் தேர்வுகளை முடித்து, ஒரு பேராசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றாள். சமூகத்தின் தேவைகளை உணர்ந்து கொண்டு ஒவ்வொரு நாளும் தன்னைச் சீர்படுத்தினாள். தனக்கான தனித்திறன்களால் வெற்றி படிக்கட்டுகள் பலவற்ற எட்டிப் பிடித்து, உயரிய பல பதவிகளை மிக இளம் வயதிலே பெற்றாள். வெற்றிகளும் விருதுகளும் புகழும் அவளைத் தழுவிக் கொண்டிருந்த போதுதான் அவளின் அண்ணன் ஒருநாள் அழகிய சேலை ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு, கட்டிவிட்டு தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தினான். அவளும் அண்ணனை மகிழ்விக்கும் நோக்கோடு அன்று பூ வைத்து, பொட்டு வைத்து, தன்னை மிகவே அலங்கரித்துக் கொண்டு, அமர்ந்திருந்த வேளையில் தான் அவளின் அண்ணனுடன் வந்து நின்றான். அவளின் கல்லூரி காலத்தில் காதலித்த குணா! அவன் அவளின் திருமணத்தை அறிந்த பின்பும், அவளின் தனிமை வாழ்வை அறிந்த பின்பும், அவளை என்றும் தேடி வந்ததில்லை. அவளும் தனது பழைய காதல் வாழ்வு வேண்டும் என்று அவனை நாடியதும் இல்லை. இன்று தனது வீட்டிலே அவனைக் கண்டதும் அவளுக்குள் இருந்த அன்பின் பேரொளி, நட்பின் பாசம், உறவின் புனிதம் அவளை அன்போடு அப்படியே பார்க்க வைத்தது. அவனும் அவளை அன்போடு பார்வையாலே அரவணைத்துக் கொண்டான். ஏன்என்றால் என்றோ ஒருநாள் அவனின் மனக்குகையில், “இவளே என் மனைவி. இவளை பூ போல பாதுகாக்க வேண்டும். இளமை முதல் நரைமுடி வரை இணைந்தே வாழ வேண்டும். பல குழந்தைகளைப் பெற்றெடுத்து இந்தச் சமூகத்திற்குப் பயன்படும் விதத்தில் உருவாக்க வேண்டும்” என்றே கனவு கண்டான். கண்ட கனவின் பொருள் இன்று தான் நிறைவு பெறும் நாளும் என்றுணர்ந்து மகிழ்ந்தான். அந்நேரத்தில் மீனாவின் அண்ணன், தங்கையின் கரம்பற்றி, “என்னை மன்னித்து விடு! உனது காதலைப் பற்றி அறிந்த உடனே உன் குணாவைப் பற்றி அதிகமாக விசாரித்தேன். அவன் நமது ஜாதியில்லை. மதமில்லை. அடித்தட்டு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்ற உண்மைகளை அறிந்து கொண்டேன். இவனால் என் தங்கையை வளமுடன் வாழ வைக்க முடியாது என்று உறுதி எடுத்தேன். அடியாள்களை வைத்து உன் பக்கம் வரவே கூடாது என்று அடித்து மிரட்டியும் விட்டேன். உனக்கு வேறு திருமணமும் செய்து வைத்தேன். எனது பிழையால் உன் வாழ்வையே தொலைத்து நிற்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, உனக்காகவே இன்னும் திருமணம் செய்யாமல், இப்போது சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் வாழ்கின்ற குணாவை உன்னுடன் சேர்த்து வைக்கிறேன். அன்பு தங்கையே அண்ணனின் தவற்றை மன்னித்துவிடு! உன் வாழ்வை வாழத் தொடங்கு! இதுவே எனக்கு நிம்மதி! உனக்கும் நீ தேடும் வாழ்விற்கும் நிறைவு!” என்று பலநாட்கள் முயற்சி எடுத்து, மன்னிப்பு வேண்டி அழைத்து வந்த குணாவை, குடும்பத்தினர் அனைவரின் முன்னிலையில் அவளின் கரத்தோடு கரம் சேர்த்து இணைத்து வைத்தான். என்றோ முளைத்து மடிந்தது என்று நினைத்த காதலின் விதை மீண்டும் முளைத்தெழுந்ததை நினைத்துப் பார்க்கவே அவர்களால் முடியவில்லை. விருட்சமாகும் அவர்களின் வாழ்க்கை கனவு வியப்பாகவே காட்சியளித்தது. மீண்டும் இறைவன் சந்நிதியில் அவளின் கழுத்தில் மஞ்சள் கயிறு அரியணை ஏறியது அன்புடன். ஜா. அருள் சுனிலா, ஜெயராஜ் அன்னபாக்கியம் தன்னாட்சிக் கல்லூரி, தமிழ்த்துறை, பெரியகுளம், தேனி, 6381877095 arulsunila1981@gmail.com

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.