Na Nagarajan
சிறுகதை வரிசை எண்
# 42
“உள்ளபடி காதல் “(நா. நாகராஜன் )
முத்தம்மாள் காலனியே அதிர்ந்து போனது அந்த காலை பத்திரிகை செய்தியால். பிராமண தாயின் சடலம் குப்பை தொட்டியில் வீச்சு.
வக்கீல் குமாஸ்தா ராமநாதன் ரொம்பவே நொறுங்கிப் போனார்.
அவர் இருபது வருடத்திற்கு மேல் வசித்த பகுதி அது.
தொண்ணுறுகளின் இடையில் இடம் வாங்கி, ஒரு வருடத்தில் வீடு கட்டி குடியேறிய பகுதி அது.
அப்போ தெருவுக்கு பத்து வீடு இருந்தாலே அதிகம்.
மிகவும் பிரசித்தி பெற்ற ராஜ கணபதி ஆலயமும், ரஹ்மத் நகர் தர் காவும் பிறகுதான் வந்தன.
மூன்றெழுத்து மல்டி ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரியும், சி பி எஸ் சி மேல் நிலைப் பள்ளியும் வந்த பின் இடத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது.
கலைஞர் அறிமுகம் செய்து வைத்த மினி பஸ் டூ வீலர், கார் இல்லாதவர்களின் குறையை போக்கின.
கட்டிட வேலைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தன.
திருநெல்வேலி மாதிரி முகம் தெரியாத பக்கத்து வீட்டுக்காரனுக்கும் பத்திரிகை (பால் காசய் ச்சு, சடங்கு, திருமண )கொடுக்கும் பழக்கம் இல்லாததால் பலர் விலகியே இருந்தனர்.
ஆறுமுகம் டிபன் சென்டரும், பவித்ரா ஸ்டோரும் வந்த பின் அவருக்கு பலர் அறிமுகம் ஆனார்கள்.
மாநில அரசு ஊழியர் என்பதாலும், எழுத்தாளர் என்பதாலும் அவருக்கு காலனி நல சங்க எக்சிக்யூட்டிவ் கவுன்சில் கூட்டத்தில் தனி மரியாதை.
மக்கள் பயன் பாட்டிற்கு சிறுவர் பூங்காவும், ஒரு அரசு நூலகமும் அவர் தயவால் வந்தன.
வெங்கட் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல், கூட்டத்தில் சரவணனிடம், “அப்படியே ஒரு மகளிர் கல்லூரி யையும் கொண்டு வந்தால் நல்லது “என்றான் மெதுவான குரலில்.
இந்தக் கால தலைமுறைக்கு எல்லாமே விளையாட்டுதான்.
ராமநாதன் இரண்டாவது பெண் உமா இந்த வருடம் ப்ளஸ் டூ முடிக்க போகிறாள்.
அவள் அம்மா ஆலோசனை , மூத்தவளுக்கு முறைப்பையணை நிச்சயம் செய்து விட்டு, இவளை பக்கத்து அரசு கல்லூரியில் படிக்க வைக்கலாம் என்பது.
பெண்கள் எத்தனை முன் யோஜனைக்காரர்கள்.
மூத்தவள் பதிநாலு வயது ஆகும் போதே, இரண்டாவதும் பெண் என்று தெரிந்ததும், தன் அண்ணனிடம் அவர்கள் பையனுக்கு மூத்த பெண்ணைக் கேட்டாள்.
அவனும் உடனே சம்மதிக்க வில்லை.
அவன் வீட்டில் இரண்டும் சிங்கங்கள்.
மாமனார் ரியல் எஸ்டேட், விவசாயம் என்று பல வகையில் காசு, காம்பவுண்ட் என்று வாங்கி குவித்து வைத்து இருந்தார்.
இப்போ உள்ள தலைமுறையே, உறவில் கல்யாணம் செய்தால் குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்கும் என்று யாரோ சொன்னதை திடமாக நம்பியது.
அப்பா அம்மாவை விட, கூகுளை அதிகம் நம்பினார்கள்.
அப்பா அம்மா பணம் சாம்பாதிப்பதோடு நின்று விட வேண்டும்.
கல்யாணம் அவர்கள் தீர்மானம்.
கம்புயூட்டர் தெரிந்தால் உலகம் தெரிந்ததாக நினைத்துக் கொள்கிறார்கள்.
பாவக்காய்க்கும், அதலக்காய்க்கும் வித்யாசம் தெரியாதவர்கள்.
என்ன அவர் அறுபது வயதில் சம்பாதித்ததை இவர்கள் முப்பது முடிப்பதற்குள் பார்த்து விடுகிறார்கள்.
வெளிநாடு எல்லாம் வேலைக்கும், மொரிஷியஸ், ஸ்விஸ் என்று ஹனிமூன் ட்ரிப் போய் வருபவர்களுக்கு, வீட்டின் பொருளாதார நிலைமை, உள்ளுரில் ஒரு க்ரவுண்ட் விலை என்ன என்று தெரியாது.
லோக்கல் அரசியல் தெரியாது. ரேஷனில் நடக்கும் ஏமாற்றுவேலைகள் தெரியாது.
ஏ சி ரூம், கார் பயணம், நுனி நாக்கு ஆங்கிலம், வாரபார்ட்டி என்று சமூக
அக்கறை இல்லாமல் வாழ்ந்தனர்.
தேர்தல் என்று வந்துவிட்டால், எல்லா கட்சிகளும் ஏழை பாழைகளுக்கு அபாய ரட்சகனாக மாறி, ஐந்து வருடம் ரேஷன் பொருட்கள் இலவசம், என்று தேர்தல் அறிவிப்புக்கு முன் அறிவிப்பதும், மத கட்சிகளுக்கு, அந்த சமயத்தில் அரவணைப்பதும் ராமனாதனை கோபப்பட வைக்கும்.
இன்றைய குப்பை தொட்டி பிண வீச்சு மாதிரி.அசோகமித்திரன் என்ற எழுத்தாளர் எழுதிய மாதிரி பிராமணன் சாவில் சத்தம் குறைவு, செலவு அதிகம் என்று. உண்மைதான். அதற்காக, பெற்ற தாயை யார் பேச்சு கேட்டு குப்பை தொட்டியில் வீசினான்.
ராமநாதன் மகள் முதலில் அமெரிக்காவில் வேலை கிடைத்து சிகாக்கோ போன போது, தூத்துக்குடி வளர்ப்பாகத் தான் போய் இறங்கினாள்.
மூன்று வருடம் கழித்து ஊர் திரும்பியவளிடம் நிறையவே மாற்றங்கள்.
முடி பாப் கட் ஆகி இருந்தது.
லெக்கிங்ஸ், ஜீன்ஸ் எல்லாம் பரவாயில்லை வீட்டில் மிடி சரி இல்லை.
நல்ல வேளை ராமநாதன் மனைவி அதை மகள் கவிதாவிற்கு சொல்லிப் புரிய வைத்து விட்டாள்.
நாகர்கோவில் திருமணம் போனபோது, கன்னியாகுமாரி கடற்கரை சூரிய உதயம், ஆர்வத்துடன் பார்த்த கவிதாவை அம்மா, அப்பா ரசித்தனர்.
“எங்க போனாலும், என்ன ஆனாலும் நம்ம கலாச்சாரம், நம்ம ஊர் மாதிரி வராது “என்றவள் அடுத்த குண்டை தூக்கி போட்டாள் நிதானமாக.
தான் தன்னுடன் பணி ஆற்றும் அமெரிக்க பொறியாளறை எட்வின் க்ருஸ்டோபர் க்றிஸ்துமஸ் சமயம் திருமணம் செய்ய இருப்பதாகவும், திருமணத்திற்கு மணமகன் வீட்டில் எதிர்ப்பு இல்லை என்றும் சொன்னாள்.
தன் தாய் தந்தை பற்றியோ, தங்கை கல்யாணம் தன் முடிவால் பாதிக்கும் என்றோ யோசிக்க கூட இல்லை.
முடியை மட்டும் தானே வெட்டினாள் என்றால் உறவையும் வெட்டுகிறாள்.
இனி இந்தியாவே வேண்டாம் போல.
இளைய தலைமுறை இப்படித்தான் இருக்கிறது.
ப்ரசவம் என்று வந்தால் தாய் மட்டும் போதும் போல.
பத்திரிகை செய்தியில் தாய் வீசப் பட்ட மாதிரி, மகளின் இந்த திடீர் அறிவிப் பால் அவர் தூக்கி வீசப் பட்டார்.
எத்தனையோ குறைகள் உள்ளது தேசத்தில்.
இருந்தாலும் இது தான் அவள் படிப்புக்கு உதவியது. ஆரம்ப வேலை, நல்ல சம்பளம், தன்னம்பிக்கை எல்லாம் தந்தது இந்த நாடு தான்.
கொரோனா தொற்று வந்து பல முன்னேறிய நாடுகளில் ஏன் இவள் புகழும் அமெரிக்கா உட்பட பாதிக்கப்பட்டு நிறைய மரணத்தை சந்தித்து வந்த போது, இரண்டு இலவச தடுப்பு ஊசி, நில வேம்புகசாயம் எல்லாம் குறைந்த விலையில் தந்து மக்களை காப்பாற்றி பல நாடுகளுக்கு மருந்தை அனுப்பி தான் ஒரு சேவை நாடு என்று நிரூபித்தது பாரதம்.
என்ன சொல்லி என்ன பயன்.
தனியார் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, இளம் பெண்கள் திருமணத்திற்கு போடும் கண்டிஷன்கள் கேட்கும் போது அவர் மனம் பதறும்.
மனைவி ஒரு பதிலும் சொல்லாமல் சின்னவளை பார்ப்பாள்.
திருமணம் என்பது வெறுமனே இரண்டு நபர்கள் இணையும் சடங்கு அல்ல.
இரண்டு குடும்பங்கள், ஜாதக, சமூக அந்தஸ்து பொறுத்தம் பார்த்து செய்து வைப்பது.
இந்த அவசர கால யுகத்தில் கல்யாணம் சேவை நிறுவனங்களே பையன், பெண் ஜாதகத்தை கம்ப்யுட்டர் மூலம் பார்த்து விடுவார்களாம்.
விஜாரிததில் அவர்கள் வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்க்கிறார்களாம்.
ஆயுள் பலம், சக கோத்திரம், தோஷம் எதுவும் பார்ப்பது இல்லை.
படிப்பு, வேலை, சம்பளம் மட்டும் முக்கியமாக கருதப் படுகிறது.
பெண்ணை பொறுத்தவரை, ஆணுக்கு ஐந்து இலக்க சம்பளம், அப்பா அம்மா உடன் இல்லாதது, சொந்த வீடு, வாகனம் இருக்க வேண்டும்.
ஒரு,இரு சிறு கெட்ட பழக்கம் இருந்தால் பரவாயில்லை.
சிகரெட், எப்போதாவது தண்ணி என்று.
வெளிப்படையாக பேசுகிறேன் என்று உளறுகிறார்கள்.
பிராமண சாப்பாட்டில் வீரம் இல்லை என்று.
அதையும் ஒரு வெட்கம் கேட்ட சேனல் டி ஆர் பி ரேட்டிங் கருதி வெளியிட்டு மகிழ்ந்தது.
நல்லவேளை அவர் பெண்கள் அவர் நினைத்த மாதிரி வளர்ந்தார்கள்.
ஆயிரம் நிர்வாக குறைகள், அரசியல் குறைகள் இருந்தாலும் அவரால் இந்திய ஜன நாயகத்தை குறை கூற முடியவில்லை.
பண்ணைபுரத்தில் இருந்து ஒரு இளைஞன் சினிமாவில் நுழைய முடிந்தது.
அமெரிக்காவில் மாதம் மூன்று லட்சம் வேலையை விட்டுவிட்டு, அப்பா சம்மதத்துடன் சினிமாவிற்கு பாடல் எழுத நா. முத்துகுமாரால் முடிந்தது.
ஸ்ரீவைகுண்டம் பக்கம் காங்கிரஸ் வேட்பாளருக்கு, சுவர் விளம்பரம் எழுதிய உழைப்பாளியை அம்மா வேட்பாளராக அறிவிக்க அவர் நம்பாமல் போட்டியிட்டு வெற்றி பெற்றது ஆச்சர்யம்.
பெருந்தலைவர் ஒரு விழாவிற்கு கம்யூனிஸ்ட் ஜீவாவை அழைத்த போது அரை மணி நேரத்தில் வருகிறேன் என்றாராம்.
தலைவர் காரணம் கேட்ட போது, வேட்டி காயப்போட்டு இருக்கிறேன் என்று சொன்னதும், அவர் உடம்பு முடியாமல் ஜெனரல் வார்டில் கிடந்த போது மக்கள் திலகம் பார்த்து பதறி, ஸ்பெஷல் வார்டில் சேர்த்ததும் இந்த நாட்டில் தான் நடக்கும்.
இப்போதும் கூட கொரோன காலத்தில் அவர் தெரு இளைஞர்கள், பலருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்ததும், ஆட்டோகாரர்கள் இலவசமாக உணவு பார்சலை சேரி பகுதிக்கு வயதானவர்கள் வீடுகளுக்கு கொடுத்ததும் ராமநாதன் மனதில் நம்பிக்கையை துளிர் விட வைத்தது.
சினிமாவை விட முடியாத உலக நாயகனும், நடுத்தர வயதில் நாட்டைக் காக்க இருநூறு கோடி சம்பளம் வாங்கும் தளபதி, அரசியலுக்கு இறங்கி வருவதைப் பார்க்கயில் அவருக்கு இந்திய எதிர்காலம் பற்றி சில கனவுகள் வந்தன.
முன்னாள் ஜனாதிபதி சொன்ன மாதிரி கனவு காணுங்கள்.
ஏதோ ஒரு சக்தி இத்தனை கஷ்டத்திலும் நாட்டை வழி நடத்துகிறது.
என்ன வழி காட்ட தான் தலைவர் இல்லை.
ராமனாதன் காலத்தில் படிப்பு ஒரு பிரச்சனை என்றால், இப்போ உள்ள தலைமுறைக்கு எந்த பொறியியல் கல்லூரியில் சேருவது என்பது பிரச்சனை.
எஸ் எஸ் எல் சி முடிந்த பின், ஐ டி என்ற பாலிடெகினிக் படிப்பு கூட சிலருக்கு தான் கிடைத்து.
காக்கி யூனிபோர்ம் சிலருக்கு கவுரவ குறைச்சலாக இருந்தது.
பெண்கள் பாடு பரவாயில்லை.
அம்பாள் இன்ஸ்டிடியூட் அல்லது ரிப்போர்ட்டர்ஸ் ஹோம் என்ற டைப்பிங் பயிற்சி நிறுவனத்தில் இரண்டு மணி நேரம் போய் வந்தால், தமிழ், ஆங்கில தட்டெழுத்தும், மாடி லட்சுமி டீச்சரிடம் மாலை வகுப்பு போய் வந்தால் ஹிந்தி ஏழு பரீட்சைகளும் அதிக செலவு இல்லாமல் முடிக்கலாம்.
வேலை தான் இப்போ உள்ள இளைஞர்கள் மாதிரி கிடைக்காமல், கிடைத்த வேலையை குடும்ப சூழ்நிலை காரணமாக விட முடியாமல் இருக்கும்.
வழக்கம் போல நெல்லை சந்திப்பு பூர்ணகலா தொடங்கி டவுண் பாப்புலர் வரை நாற்பது பைசாவுக்குள் படம் பார்க்க முடியும்.
நண்பர்கள், உறவினர்கள் வீட்டு கல்யாணம் என்றாலும், அங்கே உள்ள கோவிலும், தியேட்டரும், சிறந்த ஹோட்டலும் அறிமுகம் ஆகும்.
பெரும்பாலும் நடைதான்.
வீட்டுக்கு இத்தனை கார், பைக் கிடையாது.
வீட்டுக்கு குறைந்தது நாலு ஐந்து குழந்தைகள்.
பரோட்டா, சப்பாத்தி எல்லாம் கனவில் எப்போதாவது தான்.
ரேஷன் ரவா உப்புமா வும், கேப்பை மாவு தோசை தினம் கிடைப்பது பெரிது.
படிப்பு இத்தனை செலவு பிடிக்கும் விவகாரம் இல்லை.
அவரை அவர் பள்ளி ஆசிரியர்கள், வீட்டுக்கு வந்து, வயது பற்றி அம்மாவிடம் விசாரித்து, இடது கையை வைத்து வலது காதை தொட வைத்து திருப்தி பட்டு கூட்டிப் போனார்கள்.
அவர் நண்பர் வானுமாமலை பேரன் எல் கே ஜி யில் சேர சென்னையில் அவர் பேரன் நேர்காணலும், அவர் மகன் மூன்று மணிநேரம் பரீட்சையும் எழுத வேண்டி வந்ததாம்.
இரவில் இரண்டு மணிக்கு பள்ளி அப்ளிகேஷன் வினியோகம்.
இரண்டு லட்சம் டெபாசிட்.
“டெபாசிட் எதற்கு? “
“மதிய உணவு பள்ளியில் ஆயா ஊட்டுவார்கள் “
ராமநாதன் நினைத்தார்.
எங்கே போகிறது பண ஆசை.?
இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? எப்படி சேர்வார்கள்?
அதைப் பற்றி யாருக்கு என்ன அக்கறை?
எல்லா சாதியையும் சமமாக நடத்துவதாக சொல்லும் கட்சிகள் கூட மத்திய அரசின் பத்து சதவிகித இட ஒதுக்கிட்டை தமிழ் நாட்டில் அறிமுகம் செய்ய முடியவில்லை.
மதம் சார்ந்த கட்சியை சேர்த்துக் கொண்டே, மத சார்பற்ற ஜன நாயக கூட்டணி.
சுருளி ராஜன் ஒரு படத்தில் சொல்லும் ஜோக் மாதிரி மெடிக்கல் காலேஜில் பி ஏ. படிக்கிறான் என் மகன்.
என்ன செமஸ்டர் சிஸ்டம் வந்த பின் முன்னே மாதிரி, உயர் நிலை பள்ளியில் ஸ்ட்ரைக், தொடர் விடுமுறை இல்லை.
ராமநாதன் நினைத்து பார்க்கிறார்
பைசா பெறாத காரணங்களுக்கு பள்ளி மாணவர்கள் போராட்டத்தால் கால வரம்பின்றி மூடப்படும்.
சந்திப்பில் தொடங்கி பாளை வரை வழியில் உள்ள பள்ளிகளில் கல் எறிந்து மாணவர்களை வெளியே அழைத்து போராட சொல்லி ஒவ்வொரு பள்ளியாக மூடி வருவார்கள்.
அந்த வயதிற்கு அது ஜாலி. படிப்பின் அருமை தெரியாத காலம்.
இன்றைய நாட்கள் போல, காலை, மாலை எட்டாவது வகுப்பில் தொடங்கி கணக்கு, ராசாயனம், வேதியல் படிப்புக்கு டியூசன் போகும் வழக்கம் இல்லை.
படிப்பு ஏறாத பையன்களுக்கு, பெண்களுக்கு மாத்திரம் ஆசிரியர் சம்பளம் வாங்காமல் சேவையாக வீட்டில் வைத்து பாடம் சொல்லி தந்தனர்.
இப்போதைய தலைமுறை பள்ளிகளில், தனியாக வேறு ஆசிரியர்களிடம் டியூசன் சேரவோ போகவோ கூடாது என்பது கண்டிஷன்.
பணம் இல்லாமல் கஷ்டப் பட்டது ஒரு காலம் என்றால், கை நிறைய பணம் இருந்தும் நினைத்ததை செய்ய விடாமல் திண்டாடும் இன்றைய தலைமுறை பாவம்தான்.
அப்பா வண்டியில், யாரும் பார்க்காமல், துப்பட்டா போட்டு அதிகாலை டியூசன் போகும் பத்மா பாவம் என்றால், தான் எழுதாதா காதல் கடிதத்தை சரவணன், அவள் தன்னிடம் தந்ததாக சொல்லி கல்லூரியில் ரகளை செய்து, பாத்திமா தற்கொலைக்கு காரணமான, சரவணனும் வில்லன் தான்.
“பெண்ணை படிக்க வைத்தது தப்பு. வேலைக்கு விட்டது அதை விட பெரிய தப்பு. அந்தக்கால ஆட்கள் என்ன முட்டாள்களா? பொம்பள சிரிச்சா போச்சு என்று சொன்னவர்கள் கேனயங்களா? “
சசிதரன் கேள்விக்கு யாரும் பதில் சொல்ல வில்லை.
மொத்தத்தில் நெல்லை வாழ்க்கையும், அன்றைய தாமிரவருணி நதி போல இல்லாம கண்டதும் கலந்து, விசமாக தான் ஓடியது.
பாதி பேர் ஆற்றில் குளிப்பதையே விட்டு விட்டார்கள்.
நம்பமாட்டீர்கள் அந்தக் காலத்தில் விடுமுறை நாட்களில் ஆற்றில் குளிக்க, டவுண், மீனாட்சிபுரம், சி என் கிராமம் என்று பெரிய படையே கிளம்பும்
பெண்கள் அழுக்கு துணிகளையும், துவைக்கும் சோப்பையும் எடுத்துக் கொண்டு கிளம்புவார்கள்.
துணி மாற்ற மறைவு இடம் எல்லாம் கிடையாது.
கணவன் மார்களின் கைலி, அல்லது பெண்கள் உள்ளே உடுத்தும் காட்டன் உள் பாவாடையை மார்பு வரை ஏற்றி, முடிச்சிட்டு குளிக்க இறங்குவார்கள்.
ஆணுக்கு பக்கம் தனியா படித்துறை இருந்தாலும், சில இளம் பெண்கள் நீச்சல் என்ற பெயரில் இவர்கள் படித்துறை வரை வந்து போவார்கள்.
முங்கு நீச்சலில் போய் யானை பாறை, வட்டப் பாறை தொட்டுவிட்டு உறவினர் அல்லது தோழிகளிடம் பந்தாவாக சொல்வார்கள்.
இள ரத்தம்.
தாமிரபரணி அப்போ வருடத்திற்கு மூன்று முறை வெள்ளம் வந்து மாலை முரசில் குறுக்கு துறை முருகன் கோவில் முக்கால் வாசி மூழ்கி போய் கோபுரம் மட்டும் தெரியும் படம் வரும்.
அவர் மனதில் ஜகன்நாதன் மகள் காவ்யா அழகு முகம் மாதிரி.
போதும் போதாதற்கு அப்போ பாதி படங்கள் காதலை பேசியே இளைஞர்களை வெறுப்பு ஏற்றியது.
பார்க்காத காதல், பேசாத காதல், சோகத்தில் முடியும் காதல் படங்கள் எல்லாம் புதுமுகம் நடித்தும் பாடல் மற்றும் வசனத்தால் ஓடியது.
ஒரு தாடி இயக்குனர் சொன்னது இன்றும் அவரால் மறக்க முடியாதது.
“அம்மா செத்தால் கூட சாகாத காதலன், பணக்கார காதலி விஷம் குடித்தாள் என்று தெரிந்ததும் தானும் விஷம் குடித்து உயிரை விடுவது காதலில் மட்டுமே சாத்தியம்.”
அவர் படம் ஓட அவர் பேசிய வசனம் பலர் மனதில், பசு மரத்து ஆணி போல் பதிந்தது.
பேச வாய்ப்பு கிடைக்காத காலம்.
பெண்ணின் துணைக்கு ஒரு உறவோ, தம்பியோ கூட வருவான்.
திரை அரங்கில் கூட கீழ் வகுப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி தனி.
மேல் வகுப்பு போகும் வசதியோ, துணிவோ கிடையாது.
இருந்தும் காதல் வந்தது.
ஒரு பெயர் தெரியாத எழுத்தாளர் எழுதிய மாதிரி.
“என்ன தான் மனிதன் மரங்களை வெட்டி சாலை போட்டாலும், தங்கம், நிலக்கரி என்று பூமியை துளையிட்டு சுரங்கம் தோண்டினாலும், வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டி நிலத்தடி நீரை வழித்து எடுத்தாலும், பெரிய பெரிய தொழில் சாலைகள் அமைத்து, காற்றை, சூழ்நிலையை கெடுத்து இம்சை செய்தாலும் வருடம் தோறும் வசந்தம் வந்து கொண்டு தான் இருந்தது.நகரங்களில் கூட “
அப்படி அவர் வாழ்வில் பி யு சி படிக்கும் போது வந்தவள் தான் காவ்யா.
எல் ஐ சி ஏஜண்ட் ரங்கநாதன் இரண்டாவது மகள்.
அந்தக் கால வைஜெயந்தி மாதிரி, இந்தக் கால இளைஞர்களுக்கு புரியும்படி சொல்வது என்றால் ஜோதிகா மாதிரி., சினேகா மாதிரி.
மாடர்ன் உடையும் சரியாக பொருந்தும்.
பாவாடை, தாவணி, புடவை, சுடிதாரும் சூப்பராக பொருந்தும்.
.அந்த பெரிய கண்கள் அவனை தொல்லை செய்து கொண்டே இருந்தது.
வயல் காட்டு தெருவில் அவள் அவள் மாமா பையன் தயவில் கோபால் கடையில், லேடிஸ் சைக்கிளை வாடகைக்கு எடுத்து, பாவாடை, தாவணியில், பாவாடையை கொஞ்சம் ஏற்றிக் கட்டி, கல்லின் மேல் காலை வைத்து ஏறி, அவன் பிடித்துக் கொள்ள, இவள் லம்பி லம்பி ஓட்டியதை வக்கீல் வீட்டு வேலைக்கார்கள், குமாஸ்தாக்கள் மட்டும் அல்ல வக்கீல் சிலர் தன் மனைவியுடன் வேடிக்கை பார்த்ததை, வக்கீல் ரசித்ததை, அவர் மனைவி முறைத்து உள்ளே போனது பலருக்கு தெரியாது.
எல்லா புரட்சிகளும் கொஞ்சம் துணிச்சல், கொஞ்சம் எதிர்ப்பு, கொஞ்சம் ரகசிய ரசிப்பு என்று தான் வளர்க்கிறது.
அடுத்த நாள் அந்த உறவுக்கார பையன் திடீர் என்று ஊருக்கு கிளம்ப அவளுக்கு உதவும் அருமையான சந்தர்ப்பம், ராமனாதனுக்கு வாய்த்தது. அ ம்மா வேண்டாம் என்று சொல்ல, வக்கீல் விரோதம் விரும்பாத அவன் அப்பா சம்மதித்தார்.
ராமனாதனுடன் அவன் பக்கத்து வீட்டு இரு சிறுவர்களும் உதவிக்கு இணைந்து கொண்டார்கள். சொன்ன காரணம், “ராமநாதன் அவர்களுக்கு சைக்கிள் சொல்லிக் கொடுத்தது.
இம்சை பண்ணி விட்டார்கள் இரண்டு பக்கமும் ஓடி.
“அண்ணே, வண்டி வளையுது பாரு. அக்கா இடுப்பை பிடி. எங்களுக்கு இடுப்பை வளைதால், வெட்டினால் இடுப்பில் அடிப்பயே அப்படி அடி. அப்போ தான் சீக்கிரம் கத்துக்குவா “
அவள் என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் தவிக்க, இவர்களை கூட்டி வந்தது தன் தப்போ என்று நாதன் நினைத்து பேசாமல் இருக்க, மறுநாள் அழைப்பு வரவில்லை.
“என்ன பொடியன்கள் இரண்டு பேரும் போய் விட்டார்களா சொல்லிக் கொடுக்க, அல்லது வேறு சைக்கிள் ஓட்டும் பெண் கிடைத்து விட்டாளா என்று இவன் தவிப்புக்கு மூன்றாம் நாள் விடை கிடைத்தது.
அவளுக்கு அவள் அத்தை பையனுடன் திருமணம் நிச்சயம் ஆகப்போகுது என்ற தகவல்.
நொடிந்து போனான் ராமநாதன். மனதில் ஆயிரம் டி ஆர் கள், இசை ஞானி கள் வயலின் வாசித்தார்கள்.
தெருவே அவனை வேடிக்கை பார்ப்பது போல இருந்தது.
அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டு நாகர்கோவில் பக்க, நாடக பயிற்சி. முகாமில் சில நாள் கழித்து விட்டு வருவதாக சொல்லி போனான்.பிரம்ம தேசம் பக்கம்.
அங்கும் அவன் விதி அவனைத் துரத்தியது.
முற்போக்கு எழுத்தாளர் தனுஷ்கோடி தன் மகளுடன் வந்து இருந்தார் ஆறு நாள் பயிற்சி முகாமிற்கு.
இவன் நெல்லை பக்க எழுத்தாளன் என்று தெரிந்ததும், தாமரை, ஜனசக்தியில் அவன் கதை வருவது தெரிந்தும் மகிழ்ந்து, அவனை மதியம் நடக்கும் படைப்பு அரங்கில் ஒரு சிறுகதை வாசிக்க சொன்னார்.
அவன் அன்று சகஜ நிலையில் இல்லை.
அவர் பெண் தமிழ் செல்வியும் கவிதை வாசிக்கிறாளாம்.
அறிமுகம் செய்து வைத்தார். இயல்பாக, அழகாக, எளிமையாக இருந்தாள் தமிழ் செல்வி. அவள் பெயர் மாதிரி.
“ஐயோ, நீங்கள் நினைக்கிற மாதிரி புரட்சி பேசும் கதைகள் கிடையாது எனது. யதார்த்தம் பேசும் கதைகள் “
“தெரியும் தம்பி. துறைமுக ஸ்ட்ரைக் பற்றி “புழுக்களாய் சில நாட்கள் “உங்கள் கதை தானே. செங்கோடி உயர்வது பற்றியோ, முதலாளி எதிர்ப்பு பற்றியோ மட்டும் எழுதுவது புரட்சி கிடையாது. அந்த மண்ணின் பிரச்சனை பற்றி பேசணும் “
அவர் பேச்சு நம்பிக்கை தந்தது.
தமிழ் ஆவலுடன் அவன் கதை வாசிப்பை கேட்டது இன்னும் உற்சாகம் தந்தது.
“பத்மனபபுரம் அரண்மனை பார்க்கலாம் வர்றிங்களா?”
“நமக்கு அரண்மனை பார்க்கிற வசதி எல்லாம் கிடையாது. ஒரு எம் ஐ ஜி ப்ளாட் கிடைத்தால் போதும்” என்று சிரிக்காமல் சொல்ல, அவர் திகைத்து நிற்க, தமிழ் சிரித்தது அவன் மனதில் பதிந்தது.
ஒரு பூ மலர்ந்தது.
(முற்றும் )
நா. நாகராஜன்,
பிளாட் நம்பர் 90, Flat No. H2,
முதல் தளம்,
சக்திவேல் ப்ரோப்பர்டிஸ் பில்டிங்,
காளிதாசன் தெரு,
எம் ஜி நகர் பகுதி இரண்டு,
ஊரப்பாக்கம்,
சென்னை 603 211.
கைபேசி 8778935252.
அன்புள்ள நிர்வாகிக்கு,
நா. நாகராஜனின் வணக்கம். ஆறு நாவல், ஏழு சிறுகதை தொகுப்பு வெளியிட்டு உள்ளேன். நெல்லை காரன்.
தூத்துக்குடி துறைமுகத்தில் அதிகாரி பணி.
கதை என் சொந்த கற்பனையே.
சென்ற ஆண்டு புஸ்தகா நிறுவனம் என் சிறுகதை தொகுப்பு வெளியிட்டது.முயற்சிகள் தொடரும். நா. நா.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்