logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

Sujatha Selvaraj

சிறுகதை வரிசை எண் # 41


சிற்பம் சுமதி கதவருகே அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். மோகன் கதவை படாரென்று அடித்து சாத்தி விட்டு போனதில் அதிர்ந்து போயிருந்தாள். கொஞ்சம் நிதானித்து கதவை உள் தாழ்ப்பாள் போட்டு விட்டு வந்து சோஃபாவில் அமர்ந்தாள். அவன் போகும் போது என்ன சொல்லிவிட்டு சென்றான்? ‘ உனக்கு எப்ப தான் உடம்பு நல்லா இருந்தது? எப்பப் பாரு ஒரு நோக்காடு. எதுக்கும் யூஸ் இல்ல’ கடைசி வார்த்தை அறைந்து சாத்திய கதவுக்கு பின்னால் கரைந்து போனது. கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. நேற்று காலையில் இருந்தே தலை சுற்றல் அவ்வப்போது வந்தது. சமாளித்த படியே வேலை செய்து கொண்டிருந்தாள். இன்று காலையில் எழும் போதே தலை சுற்ற, அதனுடனே எழுந்து காபி போட்டு, இட்லி சட்னி செய்து முடித்தபோது மோகன் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி விட்டு 7 மணிக்கே ஆபிசுக்கு கிளம்பினான். ‘ஏங்க, தலை மறுபடியும் சுத்துது ஈவினிங் சீக்கிரம் வர்றீங்களா’ என்று கேட்டதற்கு தான் அப்படி பேசி விட்டு போனான். அவளுக்குத் தெரியும் இந்தக் கோபம் நேற்று இரவில் விளைந்தது. இப்பொழுதெல்லாம் பீரியட்ஸ் தினங்களுக்கு நான்கு நாள் முன்பிருந்தே கால், இடுப்பு எல்லாம் வலி குடைய ஆரம்பித்து விடுகிறது. நேற்றிலிருந்து கால் வலி ஆரம்பித்து விட்டது. போதாத குறைக்கு தலை சுற்றல் வேறு. நள்ளிரவில் அவன் எழுப்பிய போது ஒத்துழைக்க மறுத்து விட்டாள். கொஞ்சம் முயன்று பார்த்து விட்டு எரிச்சலுடன் தூங்கி விட்டவன் இன்று அந்த ஆத்திரத்தை கதவில் காட்டிவிட்டு போய்விட்டான். ‘எதுக்கும் யூஸ் இல்ல’ . அவன் சொன்ன வார்த்தையை நினைத்துப் பார்த்தாள். இது புதிதல்ல. வேஸ்ட், முட்டாள், தண்டம், ஸீரோ என்று நிறைய அவன் சொல்லிக் கேட்டது தான். மாப்பிள்ளைக்கு பெண்ணை விட பன்னிரண்டு வயது அதிகம் என்று சொன்னபோது, ‘வயசுல என்னா இருக்கு? வயசு ஜாஸ்தி உள்ளவங்க தான் ரொம்ப அன்பா பாத்துக்குவாங்க’ என்று சமாதானம் சொன்னார்கள். மத்திய அரசு வேலை என்ற தகுதி அத்தனை கேள்விகளுக்கும் சமாதானமாக இருந்தது. ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்று எல்லாவற்றையும் விஞ்சும் அன்புக்கு முன்னால் வயசு ஒரு பொருட்டே இல்லை என்பது சத்தியமான உண்மை தான். நாள் முழுவதும் தனித்திருக்கும் அவள், மாலை நேரங்களை எதிர் பார்த்துக் காத்திருந்தாள். அவன் அந்த நேரத்தை தொலைக்காட்சி பெட்டி முன்பு செலவிட்டான். அவனிடம் சொல்ல அவளுக்கு நிறைய இருந்தது. காற்றில் பறந்து அடுத்த வீட்டில் விழுந்து விட்ட சட்டை, வழி தவறி வீட்டிற்குள் வந்து விட்ட குருவி, காய்கறி வண்டிக்காரரின் கண் ஆப்பரேஷன், தெரு முனை தையல்காரரின் கடை வாடகை ஏற்றம் என்று அவள் சொல்லிக் கொண்டே இருந்தாள். அவள் குரல் தொலைக் காட்சி பெட்டியின் ஒலியினூடே கரைந்து காணாமல் போனது. அவங்க கிட்டலாம் ஏன் பேசுற என்று எப்போதாவது அவன் பதில் தருவதும் உண்டு. அலுவலக நண்பர்கள் யாரும் வீட்டிற்கு வந்தால் வந்தவர்களை வாங்க என்று அவள் வரவேற்று விட்டு உடனே ரூமிற்குள் சென்று விட வேண்டும் என்பதும், உடலுக்கு பொருந்தாத லூசான டிரஸ் தான் அவள் போட வேண்டும் என்பதும் அவன் தன் மேல் கொண்ட அதீத அன்பின் வெளிப்பாட்டினால் தான் சொல்கிறான் என்று நம்பி இருந்த நாட்களும் உண்டு. அக்கறையோ அன்போ அற்ற வெறும் கட்டளைகள் அவைகள் என்று தெரியத் தொடங்கும் போது அவள் ஒரு குழந்தைக்கு தாயாகி இருந்தாள். ஒரு நாள் அவள் சமைத்துக் கொண்டு இருக்கையில் பல்லி ஒன்று சமையலறைக்குள் வந்து விட்டது. இங்க எதுக்கு வந்த? அடுப்புல விழுந்துடப் போற. வெளிய போ என்று சுமதி சொல்லவும் மோகன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. நாய், பூனை கூட பேசறவங்கள பாத்திருக்கேன். நீ என்ன பல்லி கூடலாம் பேசுற!? என்று சொல்லி சிரித்தவன் லூசு என்ற புதிய பெயரை அன்றிலிருந்து அவளுக்குத் தந்தான். சில நேரங்களில் அவனை எதிர்த்துப் பேசி அவனிடம் சண்டையிடும் அளவுக்கு ஆத்திரம் வருவதும் உண்டு. அப்பொழுது கண்களை உருட்டியபடி ‘ நீ ஒரு ஸீரோ’ என்று அவள் முகத்திற்கு முன்பாக அவன் ஆள்காட்டி விரலால் அழுத்தமாக ஒரு வட்டம் இட்டுக் காட்டுவான். அவள் உதடு துடிக்க அப்படியே நிலை குலைந்து நின்று விடுவாள். அவன் வரைந்து காட்டிய வட்டத்திற்குள் ஒரு மரவட்டை போல அவள் சுருண்டு ஒடுங்கினாள். அவன் சொன்னதை முழுமையாக நம்பவும் செய்தாள். அது இன்னும் இன்னும் பயமுறுத்தி அவளை சிறைபடுத்தியது. அவன் அந்த வட்டத்தை ஒரு சுலப ஆயுதம் போல் எப்பொழுதும் அவள் மீது ஏவக் காத்திருந்தான். திருமணம் ஆன மறு மாதமே கர்ப்பம் ஆகி ஏழாவது மாதம் அம்மா வீட்டுக்குச் சென்றவள் பிள்ளை பெற்று ஐந்தாவது மாதம் கணவன் வீட்டிற்கு வந்த போது கலவி என்பது அன்றாடங்களில் ஒன்றாக மாறிப் போனது. நள்ளிரவில் அவன் எழுப்பும் போது அரைத் தூக்கத்தில் பிள்ளையிடம் இருந்து விலகி அடுத்த அறைக்கு அவனுடன் போவதை, ஒரு கட்டளை போல ஏற்று நடக்கப் பழகிக் கொண்டாள். எந்திரத்தின் பாவனையில் இயங்கும் அவன், அங்கு உடன் இருப்பது ஒரு உயிருள்ள மனுசி என்பதையே மறந்திருந்தான். மகனை தூங்க வை என்று சொல்லி சில நாட்கள் உறங்காமல் காத்திருப்பதும் உண்டு. அது அவனுக்கு சரியாக தூக்கம் வராமல், கலவியை நல்ல உறக்கத்திற்கான‌ கருவியாக பயன்படுத்திய நாட்கள். மனத்தைத் திறக்காமல் உடலைத் திறப்பதில் வலிகள் மட்டுமே அவளுக்கு எஞ்சின. சிறுநீர் கழிக்கையில் சுரீர் என்ற வலியும் சில வேளைகளில் லேசான உதிரமும் வரும் போது கழிவறையில் அமர்ந்து அழுது விட்டு முகம் கழுவி வருவாள். அவன் அப்போது தூங்கத் தொடங்கி இருப்பான். ஒரு நாள் தயக்கத்தை தகர்த்து விட்டு அவனிடம் சொல்லியே விட்டாள். வேறென்ன பண்றது? பையன் தூங்கணும்ல. அவன் பதில் தந்தான். இல்லைங்க காலைல நீங்க ஆஃபிஸ் போறப்ப முத்தம் கொடுத்துட்டு போறதுல இருந்து அது ஆரம்பிக்கணும். ஓ! ம்.. லஞ்ச் டைம்ல கால் பண்ணி சாப்டியா? என்ன பண்றன்னு கேட்கணும். ம்.. ஈவினிங் டிவி முன்னாடி உட்காராம காலார வாக் போகணும். ம்.. நைட் அவசரம் இல்லாம தலைய கோதி விட்டுக்கிட்டே பேச ஆரம்பிக்கணும். அவள் தன் சின்னச் சின்ன ஆசைகளை, கலவிக்கான ஆயத்தங்களை சிறு புன்னகையும் வெட்கமுமாக சொல்லிக் கொண்டே போனாள். மோகன் அவளை கண்கள் இடுங்க பார்த்தபடி கேட்டான், ‘ ஓ! உனக்கு இவ்ளோ கேட்குதா?!’ காறி முகத்தில் துப்புவது போன்ற அவனின் அன்றைய பார்வையை எப்பொழுது நினைத்தாலும் குறுகிப் போவாள். அன்றைய இரவு அவன் அவளை எழுப்பவே இல்லை. மறுநாள் வழக்கம் போலவே நடுசாமத்தில் எழுப்பினான். அவளின் கண்ணீர் இருபுறமும் வழிந்து அவள் காதுகளில் இறங்கியது. அவன் அதை கவனிக்கவே இல்லை. பின் எப்போதுமே. சுமதி சோபாவில் கால்களை மடக்கிப் போட்டு அமர்ந்தாள். மகன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அரைமணி நேரம் கழித்து எழுப்பினால் போதும். ஸ்கூல் வேன் வர நிறைய நேரம் இருக்கிறது. தலை சுற்றல் நின்றிருந்தது. அவள் தன் கால்களை பார்த்தாள். பாதங்களில் சிறுசிறு வெடிப்புகளுடன் லேசாக அழுக்கு படிந்திருந்தது. அவள் தன் அம்மாவின் கால்களை நினைத்துக் கொண்டாள். அம்மாவின் கால்கள் பெரும் வெடிப்புகளோடு பிளந்து கிடக்கும். வேலை எதுவும் அற்று தனிமையில் அமர்ந்திருக்கும் நேரத்தில் அம்மா அந்த வெடிப்புகளை தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பாள். உள்ளங்கைகளும் வறண்டு விரிசல்களுடன் தான் இருக்கும். முகத்தில் மட்டும் மஞ்சள் பூசி நெற்றியில், வகிடில் குங்குமம் வைத்து மங்களகரமாக இருக்கும் அவள், தன் கால்களை மட்டும் கைவிட்டு இருந்தாள். சுமதிக்கு தன் கால்கள் அம்மாவின் கால்களாக மாறிக் கொண்டிருப்பதாக தோன்றியது.‌ திருமணத்தின் போது மெட்டி போடுவதற்காக மோகன் அவள் பாதங்களை தொட்டது தான். பின் எப்போதும் அவன் அவள் பாதங்களை கண்டதில்லை. கைக்கோர்த்து நடந்ததில்லை. தோள் சாய்ந்து பேசியதில்லை. ஒருவர் மடியில் ஒருவர் தலை சாய்த்ததில்லை. ஊடல் இல்லை, காதல் இல்லை, அன்பு இல்லை, அக்கறை இல்லை, நம்பிக்கை இல்லை.. இல்லைகளால் நிறைந்த வாழ்க்கையில் இருப்பின் காரணியாக மகன் மட்டுமே இருந்தான். சுமதிக்கு தன் கால் வெடிப்புகள் வளர்ந்து வளர்ந்து உடலெங்கும் பரவி சடசடத்து வெடித்து, உடலே நூறாகப் பிளப்பதாகத் தோன்றியது. அதன் வலியை உடலின் அத்தனை அணுவிலும் அவள் உணர்ந்தாள். அம்மாவிற்கு கால் பண்ணலாமா? வேண்டாம். சகஜமாக பேச முடியாது. அழுகை வந்து விடலாம். அவள் நிம்மதியை ஏன் கெடுக்க வேண்டும். எழுந்து போய் தண்ணீர் குடித்தாள். தொண்டைக் குழியில் அழுத்திக் கொண்டு இருந்த வலி கொஞ்சம் குறைந்தது. சட்டென்று ஒரு எண்ணம். நினைத்தவுடன் ஒரு சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டது. மகனை எழுப்பி குளிக்க வைத்து ரெடி பண்ணி சாப்பிட வைத்து பள்ளி வேனில் ஏற்றி அனுப்பினாள். பின் குளித்து முடித்து வீட்டைப் பூட்டி விட்டு பார்லர் நோக்கி நடந்தாள். அங்கு முன்பு ஒரே ஒரு முறை போயிருக்கிறாள். அப்போது மும்பை வந்த புதிது. நான்காவது மாடி தெலுங்கு பெண் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போறேன் வர்றீங்களா? என்று அழைத்தாள். ஓரிரு முறை அவளைப் பார்த்து புன்னகைத்தது உண்டு. வாசலில் காய்கறி வண்டி அருகில் சில முறை சாப்பாடு ஆச்சா என்ற வினவல். அவ்வளவே அவளுடனான பழக்கம். சரி வருகிறேன் என்று சொல்லி அவளுடன் முதல் முறை பார்லர் போனாள். அவள் புருவங்களைத் திருத்தி, ஃபேஷியல் செய்து கொண்டாள். சுமதி வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். சாயங்காலம் கணவன் வந்ததும் அந்தப் பெண்ணுடன் ப்யூட்டி பார்லர் போனது பற்றி சொன்ன போது அவன் இப்படி சொன்னான், ‘ அந்த பொம்பளை சரி இல்ல, அவ ட்ரஸும் மேக்கப்பும் பாத்தாலே தெரியல அது ஒரு கேசுன்னு’ அவ கூட போற வேலை வச்சுக்காத’ சே அப்படி சொல்லாதீங்க, அவங்க ஹஸ்பண்ட் தான் ஃபேஷியல் லாம் பண்ணிக்க சொல்லி பணம் கொடுத்திருக்கார். அவங்க லவ் மேரேஜ் தெரியுமா? ம், அவன பாத்திருக்கேன் , அவன் லாம் ஒரு ஆளு. மொட்ட மாடில துணி காயப் போடறதுக்கு வரான். இவனிடம் மேற்கொண்டு பேசுவதில் அர்த்தம் இல்லை என்று பேசாமல் விட்டு விட்டாள். பிறகு அவளோடு வெளியே போவதை தவிர்த்து விட்டு பார்க்கும் போது நல விசாரிப்புகளோடு நிறுத்திக் கொண்டாள். காலை நேரம் ஆகையால் பார்லரில் வாடிக்கையாளர் யாரும் இல்லை.வேலை செய்யும் மூன்று பெண்கள் மட்டும் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். எஸ் மேடம்.. பெடிக்யூர் பண்ணனும்.. நார்மல் பெடிக்யூர், ஸ்பா பெடிக்யூர், ஜெல் பெடிக்யூர்.. விதவிதமான வகைகளையும் அதன் விலையையும் பட்டியலிட்டாள்‌ அந்த பார்லர் பெண். நார்மல் போதும். சோஃபாவில் அமர வைத்து , சுமதியின் இரு கால்களையும் எடுத்து வெதுவெதுப்பான நீரில் வைத்தாள் அந்தப் பெண். பின் ஒரு காலை எடுத்து நகங்களில் க்ரீம் தடவி சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். ஒவ்வொரு நகமாக ஆராய்ந்து அதன் அழுக்கு நீக்கி, பஞ்சு கொண்டு துடைத்தாள். அம்மா இப்படி தான், சுமதி சிறு பிள்ளையாக இருக்கையில் அவளை மடியில் படுக்க வைத்துக் கொண்டு கால் நகங்களை வெட்டி விடுவாள். இப்போது அந்த பார்லர் பெண் பாதங்களை மடியில் எடுத்து வைத்து அதன் இறந்த தோல் பகுதிகளை செதுக்க ஆரம்பித்தாள். துருவிய தேங்காய் பூ போல இறந்த தோல் செதில்கள் கொட்டத் தொடங்கின. அவள் கவனம் முழுதும் சுமதியின் கால்களில் குவிந்திருந்தது. அவளும் அந்தக் கால்களும் மட்டுமான ஒரு உலகம். தாயும் குழந்தையும் போல. அவர்களை தனியே விட்டு விட்டு சுமதி பார்த்துக் கொண்டிருந்தாள். இதை எப்படி சொல்லலாம்! ம். ஒரு மரத்துண்டை செதுக்கி சிற்பமாக்குவது போல, ஈரமான குழைந்த மண்ணை தன் விரல்களால் தடவி தடவி வடிவமாக்குவது போல அல்லது ஒரு தொல்பொருள் ஆய்வாளன் நூற்றாண்டுகளாய் மண்ணுக்குள் உறைந்து விட்ட சிற்பத்தை தன் மெல்லிய பிரஷ் கொண்டு தடவி தடவி மண் நீக்கி அதனை விடுவிப்பது போல அத்தனை ஆதூரமாய் அவள் கால்களை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தாள். க்ரீம் தடவி கால்களை முழங்காலில் இருந்து பாதம் வரை அழுத்தி நீவினாள். சுமதியின் அத்தனை வலிகளும் அந்தப் பெண்ணின் கைகளுக்கு கட்டுப்பட்டு அவள் விரல் பிடித்தே இறங்கி ஓடிப் போயின. அவள் ஒரே ஒரு முறை நிமிர்ந்து சுமதியை பார்த்து புன்னகைத்தாள். கலங்கிய கண்களுடன் சுமதி மறு புன்னகை தந்தாள். வலிக்குதா மேம்? ரொம்ப ப்ரஷ்ஷர் குடுக்குறனா? கால்களை நீவுவதை நிறுத்தி விட்டு அவள் கேட்டாள். இல்லமா.. இட்ஸ் ஃபைன். வெந்நீரில் நனைத்து பிழிந்த டவலால் கால்களை ஒத்தி எடுத்தாள். தவறி கரை ஒதுங்கி, அடுத்த அலையில் கடல் சேர்ந்து விட்ட குட்டி மீனின் ஆசுவாசத் தருணத்தை சுமதி அப்போது அடைந்தாள். நெயில் பாலிஷ் போடவா மேம்? நோ நோ.. அவர்கள் எழுந்து கொண்டார்கள். தேங்க்ஸ் மா.. அவள் புன்னகைத்தாள். கேன் ஐ ஹேவ் எ ஹக்? சுமதி கேட்டாள். அந்தப் பெண் சிறு ஆச்சரியம் காட்டி லேசாக தலை அசைத்தாள். சுமதி அந்தப் பெண்ணை மெலிதாக அணைத்துக் கொண்டாள். அரை நிமிட அணைப்பு தான். சுமதிக்கு அதுவே போதுமானதாக இருந்தது. **** -சுஜாதா செல்வராஜ்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.