SEVALKULAM SELVARASU
சிறுகதை வரிசை எண்
# 37
தூத்தல் லேசா முகத்தில பட்டு கண் முழிச்சான் மாணிக்கம். எவ்வளவு நேரம் தூங்குனோம்னு நினைச்சுக்கிட்டே தலைமாட்ல இருந்த செல்போனை எடுத்து நேரம் பாத்தான் மணி 1:30 காட்டுச்சு.
காலைலயிருந்தே மூடாக்கா இருக்கிறதால சாயங்காலம் போல நெனைக்க வச்சது பொழுது.
அனந்தம்மன் கோயில் மண்டவத்துல படுத்திருந்தான். காலைல பத்து மணிக்கு வந்து படுத்தவன், நேத்து மல்லிகா போட்ட சண்டயைப் பத்தி நெனைச்சுக்கிட்டே அசந்து போய் ஒறங்கிருக்கான்.
முழிப்பு வந்ததும் மனசு மறுபடியும் மல்லிகா போட்ட சண்டையத்தான் யோசிக்க ஆரம்பிச்சது
"இது வீடுன்னா அப்ப கறிக்கடைக்காரன் கட்டியிருக்கிறதுக்கு பேரென்ன?"
"இந்தக் கோயில் வீட்ட விட்டு என்னைக்கி வெளியேறுதமோ அன்னைக்குத்தான் முன்னேத்தத்துக்கு வருவோம்"
இப்ப கோயில் வீடுன்னா என்னன்னு உங்களுக்குச் சந்தேகம் வரணும். வந்துச்சா? அத நான் சொல்லுதேன். மாணிக்கம் இன்னும் கொஞ்ச நேரம் யோசிக்கட்டும்...
இப்ப நம்ம கதையில வர்ற கோயில் வீடு எங்க இருக்குன்னா கோவில்பட்டியில இருந்து சங்கரன்கோவில் போற வழியில 21 கிலோமீட்டர் தூரத்தில இருக்கிறதுதான் கழுகுமலை. ஆமாங்க... கழுகாசல மூர்த்தி கோயில், சமணர் படுக்கை, வெட்டுவான் கோயில் எல்லாம் இருக்குன்னு கூகுள்ல போட்டுருக்குல்ல அதே கழுகுமலைதான்.
கழுகுமலைல கோயில் வாசல் ஸ்டாப்ல வந்து இறங்குனீங்கன்னா, நீங்க இறங்குன இடத்துல இருந்து கெழக்காம போகுது பாருங்க 30 அடி அகல சிமெண்ட் ரோடு. இதான் அரண்மனைத் தெரு. வாங்க பேசிக்கிட்டே நடப்போம்... நம்ம மாணிக்கம் வீடு நடக்கிற தொலவுதான்...
விளாத்திகுளம் ரெட்டியார்க மண்டபம், ராசாக்கமார் மண்டபம், செட்டியார்க மண்டபம் தாண்டி வந்ததும் இந்தா இருக்கு பாத்தீகளா, இதுதான் தெற்கு வாசல் நம்ம இறங்கின இடத்தில முருகன் கோயில் மேற்கு வாசல் இருந்துச்சுல்ல கவனிச்சீகளா? வாங்க இன்னும் கொஞ்சம் கெழக்க போய் வடக்காம திரும்பனும். இந்த அரண்மனை எப்படி பாழடைஞ்சு போய் கிடக்கு பாருங்க. ஆள்ப்பழக்கம் இல்லன்னா எத்தாப் பெரிய அரண்மனையும் பாழடைஞ்சுதான போகும்.
இப்ப தெருமுடிகிற இடத்தில வடக்கு தெக்கா இருக்குல்ல இதான் கீழப் பஜாரு. இப்ப வடக்காம போகணும். இங்க கிட்டத்துல வந்துட்டோம்... சின்னப்ப நாடார் பாத்திரக் கடை, சுமங்கலி நகைக்கடை, தேவர் காம்ப்ளக்ஸ், அதையடுத்து தங்கயானை ஆவுசு. ஒரு காலத்துல 'ஜே ஜே' ன்னு ஓடுன ஆவுசு. கட்டைய அடுக்க அடிப்பெட்டி மேப்பெட்டி ஒட்ட, மருந்து முக்க, பெட்டி அடைக்க, குரோஸ் மடிக்க, பண்டல் போடன்னு சுத்தி இருக்கிற நாலஞ்சு தெருவுக்கும் பொழப்பு கொடுத்த ஆவுசு. இப்ப கல்யாண மண்டபமா இருக்கு. ம்ம்... அது பெரிய கதை... அத பெறகு சொல்லுதேன்.
குதிரை லயன், வட்டத் தெரு, களஞ்சியம் தெரு அதத்தாண்டிதான் இந்த மண்டபத்துக்கு எதுத்தாப்புல இருக்கிற இந்த கடவுத் தெரு. இந்தத் தெரு எப்படிப்பட்டதுன்னு பேருலயே இருக்கு பாருங்க. எந்த வாகனமும் போக முடியாத நாலடி அகலம்தான் இந்த தெரு. அதுலயும் ஓரத்துல அஞ்சு இன்ச் அகலத்துல சாக்கடை ஓடுது. ஓடுதுன்னு சொல்றதவிட நிக்கிதுன்னு சொல்லலாம். எல்லா வீட்டு அங்கனக்குழி தண்ணியும் இதுலதான் வரும். தெருவுக்குள்ள நொழைஞ்சதும் இருக்கிற இந்த 12 வீடுகள்ல ஒரு வீடுதான் நம்ம மாணிக்கம் வீடு.
முழுக்க முழுக்க வெள்ளை கல்லால கட்டப்பட்ட கல் மண்டபம். மூணு தலமுறைக்கு முன்னால வர அன்ன சத்தரமாத்தான் இருந்திருக்கு. கிழ மேலா ஏழு வரிசையும் வடக்கு தெக்கா அஞ்சு வரிசையுமா ஒரு ஆளு கட்டிப் பிடிக்க முடியாதளவு பெரிய பெரிய தூண்களும், மேல முக்கா அடி கனத்துக்கு பெரிய பெரிய பட்டியக் கல்லுமா மேக்கூரை பாவப்பட்ட மண்டபம். இந்தக் கல்லையெல்லாம் யானதான் தூக்கிருக்கணும் மனுசன் அசைக்கக்கூட முடியாது பாத்துக்கிடுங்க.
அதத்தான் முருகன் கோயில்ல எடுபுடி வேலை செஞ்சுக்கிட்டுருந்த பாவப்பட்ட மக்கள தரவாடகை மட்டும் குடுத்துட்டு தங்கிக்கிடச் சொன்னாராம் எட்டயபுரம் மகராசா. அப்பநேரத்துக்கு வருசத்துக்கு 6 ரூவா வாடகை.
அந்த மண்டவத்துல ஒரு தூண் அகலம் இரண்டு தூண் நீளத்துக்கு வடக்காம 6 ம் தெக்காம 6 மாக 12 வீடுகளா மறிச்சுக் கட்டி ஆளுக்கொன்னா இருந்துகிட்டாக. அதை வீடுன்னு சொல்றத விட குகைன்னுதான் சொல்லணும். ஒரு வீடு 4 அடி அகலம் 20 அடி நீளம். அதுக்குள்ளதான் வாசக்கதவுக்குப் பின்னால அங்கணம். அவசரத்துக்கு ஒன்னுக்கு வந்தா அந்த அங்கணத்துலதான் இருக்கணும். பெறகு சாப்ட்ட ஏனத்தையும் அதுலதான் போட்டுக் கழுவனும். அங்கணத்த ஒட்டி அடுப்புமேடை, சாமான் செட்டு போட்டது போக மிச்ச இடத்தில ஒரே ஒரு வயர் கட்டில் போடலாம். போட்டா ஒக்கார கூட இடம் இருக்காது. ஒரு பண்ட பாத்திரம் வைக்க செல்ப் கிடையாது, திண்டு கிடையாது, வெளிக்காத்து உள்ளவர ஜன்னல் கிடையாது. வாச வழியா எப்பயாது காத்து உள்ள வந்து எட்டிப் பார்த்தா, வெக்க தாங்காம வெளியேறதுக்கும் நுழைஞ்ச வழிக்குத்தான் திரும்ப வரணும். வாசப்படி கிடையாது. கதவத் தொறந்து கால கீழ எடுத்து வச்சாலே தெருதான்.
மின்சார வாரியத்தில இருந்த யாரோ ஒரு நல்ல மனுசன் புண்ணியத்துல வீட்ல லைட்டும் கவர்மெண்டு குடுத்த காத்தாடியும் ஓடுது. 2009 வர பேட்டரிக் கட்ட போட்ட ரேடியாதான். அதுக்கு அப்புறமாத்தான் கலைஞர் டிவி வந்து ஒரு மூலையப் பிடிச்சுக்கிடுச்சு.
மாணிக்கத்துக்கு கல்யாணம் ஆனதுல இருந்து அவங்க அம்மா வாத்தியார் வீட்டு மெச்சிலயும், அப்பா பிள்ளையார் கோவில்லயும்தான் ராத்தங்கல். வேற விருந்தாளு யாரு வந்தாலும் வாத்தியார் வீட்டு மெச்சிக்குத் தான் போகணும். இல்லாத வீட்டுக்கு யாரு வந்து தங்கப் போறாக. மல்லியோட அம்மாதான் வருவாக. தங்கமாட்டாக. தங்குனா மாணிக்கமும் பிள்ளையாரப்பாவ பாக்க போக வேண்டியதுதான்.
இப்பச் சொல்லுங்க மல்லி கேட்டது நாயம்தான. வேற வீட்டுக்கு மாறனும்னு அவ சண்ட போட்டதுல குத்தமென்ன இருக்கு.
அட நம்ம மாணிக்கம் இன்னும் மல்லாக்க படுத்துகிட்டு என்னதான் யோசனைல இருக்கானோ!... இப்ப என்ன லோடோட லாரியா கவுந்து போச்சு. மாணிக்கம் யோசனைக்குள்ள போய்ப் பாப்போம்.
வண்டி விட்டு இறங்கி 20 நாள் ஆச்சு. பத்து நாள் முன்னையே வண்டி மாத்த வேண்டியது. ஓனர் வண்டி மாத்த வரச் சொன்ன அன்னைக்குத்தான் அந்தோணி வாத்தியார் மருந்தக் குடிச்சுக் கிடந்தாரு. பாவம்... நல்ல மனுசன் எம்புட்டு பேருக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து கை தூக்கி விட்டவரு. அவரு பிள்ளைகல்லாம் வெளிநாடுகள்ல இருக்குதுக. பொண்டாட்டி செத்த பிறகு கஞ்சிக்கு ரொம்ப கஷ்டப்பட்டாரு. என்ன நெனைப்புல மருந்தக் குடிச்சாரோ. தெருவே கூடிருச்சு. நம்ம மாணிக்கந்தான் தனுசு அண்ணன் ஆட்டோல தூக்கிப் போட்டு கலாராணி ஆஸ்பத்திரியில கொண்டு போய்ச் சேர்த்தான். மூணு நாள் பொழுது அங்கனக்குள்ளயே கழிஞ்சு போச்சு. அவன் அப்பாக்கு சுகரு கூடிப்போயி பூக்கடைக்குப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டாரு. அந்தா இந்தான்னு தர்மாஸ்பத்திரியில மூணு நாள் போச்சு.
கையில இருந்த காசெல்லாம் கரைஞ்சு போயி மேற்கொண்டும் கைமாத்து, கடனுன்னு வாங்கியாச்சு. தெருவுக்குள்ள மூணு செய்முறையும் வந்துருச்சு. போன வாரமே சடவுதான் மல்லிக்கு. 'இப்படி வீட்ல என்ன இருக்கு என்ன இல்லைன்னு தெரியாம ஊர்ச்சோலியாவே திரியுதீகளே இப்ப சிலிண்டர் காலியாப் போச்சு. என்ன செய்ய?' ன்னா. 'நம்ம ஆண்டவர் ஆச்சிகிட்ட 2000 கைமாத்து கேளேம்'னான் மாணிக்கம். 'வாங்குன பாக்கியே குடுக்காமக் கிடக்கு. எனக்கு ரொம்ப ராஞ்சனமா இருக்கு என்னால முடியாது'ன்னுட்டா.
அன்னைக்கே வண்டிக்குப் போயிருந்தா இவ்வள மொட வந்திருக்காது. மல்லி கூட சண்டையும் வந்திருக்காது. நேத்து பழங்கோட்டைல ஒரு பால் காச்சு வீட்டுக்குப் போய்ட்டு வந்தாக. போகும்போது சந்தோசமாத்தான் போனாக. வரும்போது மூஞ்ச தொங்கப் போட்டுக்கிட்டே வந்தா மல்லி. சிரிப்பு காட்டினாலும் சிரிப்பயே காணும். சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் வராததுமா ஆரம்பிச்சா.
"அத்தான் வீடு விசாரிக்க சொன்னம்ல விசாரிச்சீகளா?"
"நீ ஏம் பிள்ள வீடு வீடுங்க. சொன்னத ஏன் புரிஞ்சுக்கிடவே மாட்டுக்க?"
"நானா நீங்களா"
"நான் வண்டிக்கு போனேம்னா 15 ,20 நாள் கழிச்சு வாரேன். நம்ம தெருவப் போல வேற தெருவுல பாதுகாப்பு இருக்குமா? பாப்பாவையும் உன்னையும் வேற எங்கயும் விட்டுட்டுப் போய் நான் நிம்மதியா வண்டி ஓட்ட முடியுமா சொல்லு"
"நான் என்ன ஊரைவிட்டா போகச் சொல்லுதேன். இல்ல புது வீடு கேக்கனா. ஒரு தெரு தள்ளித்தான மாறப்போறோம். இங்கனக்குள்ள திருமாளிகை தெருவுல கூட ஒரு வீடு இருக்குன்னான் எந்தம்பி."
"எது அந்த தங்கம் ஆவுசுக்காரங்க வீடா? அங்க வாடகை 3000 அட்வான்ஸ் 15000 ன்னு போடெழுதிப் போட்டிருக்காங்க. துட்டுக்கு எங்க போக? வெறுங்கைல முழம் போட முடியுமா?"
"துட்டுக்கு எங்க போகன்னா... யாரும் ஊருக்காருகளா குடுப்பாக? கைய ஊணித்தான் கர்ணம் பாயணும்."
"ஏம் மல்லி புரிஞ்சுக்கிடாம பேசுத. இப்ப இந்த வீட்டுக்கு மாத்தைக்கு 140ரூவா. 140 எங்க இருக்கு 3000 எங்க இருக்கு."
ஒன்னும் பேசாம மடியில் தூங்குத பாப்பாவயே பாத்துக்கிட்டிருந்தா. கண்ணுபூராம் கலங்கிநின்னது. பாக்கப் பாவமா இருந்துச்சு.
"நேத்து நடுராத்திரில தூக்கத்துல எந்துச்சு பாப்பா கேக்கா 'ஏம்மா நம்ம வீட்டுல ஜன்னலே இல்ல. ஒரே வேக்காடா இருக்கும்மா. தூங்கவே முடியலங்கா’ மல்லிக்கு சொல்லும் போதே தொண்டை அடச்சுக்கிட்டு கண்ணீர் பொலபொலன்னு கொட்டுச்சு. கண்ணீரப் பாத்ததும் இவனும் கொஞ்சம் கலங்கிட்டான். மாணிக்கம் கொஞ்சம் இறங்கி வந்தான்.
"ஒன்னு செய்வமா பிள்ள நம்ம ஊறத் தண்ணிப் பெரியம்மா புது வீடு கட்டிப் போனதுல இருந்து அவுக கோயில் வீடு சும்மாதான கிடக்கு. நான் வேணா அதையும் கேட்டு வாங்கட்டுமா? பாத்திரம் பண்டம் பாதிய அங்க ஒதுக்கிட்டு கொஞ்சம் செலாத்தா இருந்துக்கலாம்ல"
"கோயில் வீடு, கோயில் வீடு, கோயில் வீடு.... ஒரு அவசரத்துக்கு ஒன்னுக்கு போக முடியுதா?, நாலு ஆளு வந்தா உட்கார முடியுதா? கையக் கால நீட்டி நிம்மதியா படுத்து எந்திரிக்கத்தான் முடியுதா? திருச்செந்தூரு வள்ளி குகை தோத்துப் போகும். வீடாம் வீடு. இந்தக் கோயில் வீட்ட விட்டு என்னைக்கி வெளியேறுதமோ அன்னைக்குத்தான் முன்னேத்தத்துக்கு வருவோம்"
ஆங்காரமாச் சொன்னா மல்லி. கோவத்துல மனசுக்குள்ளேயே மென்னுக்கிட்டு இருந்ததயும் சேர்த்து துப்பிட்டா.
"இது வீடுன்னா அப்ப கறிக் கடைக்காரன் கட்டியிருக்கிறதுக்கு பேரென்ன?"
இதைச் சொன்னதும்தான் மாணிக்கம் கைய ஓங்கிட்டான். பெறகு மூக்கத் தாத்தாதான் வந்து சண்ட பிடிச்சு சத்தம் போட்டுட்டு போனாரு.
இப்பவர மல்லி கடைசியா சொன்னதத்தான் மனசுக்குள்ள போட்டு உழப்பிக்கிட்டே இருக்கான் மாணிக்கம்.
'உனக்காகப் பிறந்தேனே எனதழகா' செல்போன் அடிக்குது. மல்லிதான் கூப்பிடுதா. போன் எடுத்துப் பேசுனான் மாணிக்கம்.
"என்ன சொல்லு"
"எப்பா எங்க இருக்க? வீட்டுக்கு வா. அம்மா முட்டக் குழம்பு வச்சிருக்கா. சாப்பிட வாப்பா"
மல்லி சொன்னத அப்படியே ஒப்பிச்சா பாப்பா. இதான் மல்லியோட சமாதானக் கொடி. எந்திச்சு மணியப் பாத்தான் 2.30 காட்டுச்சு.
ஒரு முடிவோட வீட்டுக்கு வந்தான் மாணிக்கம்.
"என்ன அனந்தம்மா அருள் குடுத்துட்டாளா?"
மல்லி கேட்டதும் மாணிக்கம் அடக்க நினைச்சும் முடியாம சிரிப்பு லேசா உதட்டுல எட்டிப்பாத்துருச்சு.
"பாப்பா சாப்பிட்டாளா? அவள எங்க?"
"சாப்பிட்டுத்தான் ஆண்டவர் ஆச்சி வீட்டுக்கு வெளாடப் போயிருக்கா. நீங்க கைய கழுவிட்டு சாப்பிட உட்காருங்க"
ஊடல் முடிவுக்கு வந்திருச்சு. வெவரமாத்தான் பாப்பாவ வெளாட அனுப்பி இருக்கா.
பக்கத்துல உக்காந்தான். மல்லியோட கையை எடுத்து இவன் கைக்குள்ள வச்சுக்கிட்டான்.
"நீ சொன்னது போல பாப்பாவுக்காகயாவது நாம வீடு மாறனும்ல." அவனோட அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தா மல்லி.
"பொறுத்தது பொறுத்த இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கட்டீ. இந்த முறை வண்டிக்குப் போய், கூடப் பத்து நாள் சேந்தான்னைக்கு ஓடுதேன். அடுத்து இறங்கும்போது அட்வான்ஸ் வாங்கிட்டு வாறேன். பத்தும் பத்தாததுக்கு செட்டியார்கிட்ட கொஞ்சம் வாங்கிக்கிடுவோம்.
"என்னமோ திடீர்னு ஞானோதயம்"
"செல்லமா வளந்த பிள்ளய அழ வைக்கக் கூடுமா. என் ராசாத்தில்ல நீ" லேசா கன்னத்த கிள்ளுனான்.
"ரொம்பத்தான் பாசம்"
"அதாம் சரியின்னுட்டேம்ல... இன்னும் ஏன் மூஞ்சத் தூக்கி முகட்டுல வச்சிருக்க? சிரியேம்ட்டீ"
" வெவ்வவெவ்வவே... போதுமா" கொஞ்சலா வக்கணம் காட்டுனா மல்லி.
' ஹே... கோடிக்கால் பூதமடா தொழிலாளி ' நேரம் கெட்ட நேரத்துல போன் அடிச்சது.
'மைப்பாறை அண்ணாச்சிதான் போடுதாரு'ன்னு சொல்லிக்கிட்டே எடுத்து பேசுனான்.
"அலோ அண்ணாச்சி... அப்டியா... செரி அண்ணாச்சி...
செரி... செரி... நல்லதாப் போச்சு அண்ணாச்சி.
....... ............ .......
இந்தா கிளம்ப வேண்டியதான்...
ம்..... செரி.. செரி.. செரி.. அப்ப வச்சிருதேன்."
ஏக்கமும் விரக்தியுமா மல்லியப் பாத்து சொன்னான்.
"ஏட்டி மைப்பாறை அண்ணாச்சிக்குப் பதிலு வண்டி மாத்தி விடச்சொல்லுதாரு. 5 மணிக்குள்ள கோய்ல்பட்டி கொடவுனுக்குப் போகணுமாம். மணி இப்பமே 3.30 ஆச்சு. சோறு வை. சாப்பிட்டு போய்ட்டு வாரேன்."
உடனே கிளம்பனும்னு சொன்னதும் சங்கடமாத்தான் இருந்துச்சு ரெண்டு பேருக்குமே. என்ன செய்ய... பரமசிவம் குடுத்த வரம் அப்படி...
மாணிக்கம் கோவில்பட்டி புது பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி தெக்கானிக்கு வெக்கு வெக்குன்னு நடக்க ஆரம்பிச்சான். மணியப் பாத்தான் 4.50.
'ஹே... கோடிக்கால் பூதமடா தொழிலாளி' போன் அடிச்சதும் படக்குன்னு எடுத்துப் பேசுனான். ஓனர்தான் கூப்பிட்டாரு.
"இந்தா பஸ் ஸ்டாண்ட் வந்துட்டேன் மொதலாளி. அஞ்சு நிமிசத்துல போயிருவேன்."
"மாணிக்கம் அதாம்டே ஒரு சின்ன சிக்கலு... நம்ம 'தலவம்பட்டி' போன் பண்ணாரு. காளப்பாண்டிய கூடக் கூப்பிட்டுகிடுதேம்காரு. லாங்குல போறதுல்ல... அதாம் சங்கடப்படக் கூடாதுன்னு நானும் சரின்னுட்டேன். நீ ஒரு ரெண்டு நாள் பொறு. அடுத்த ட்ரிப்பில் நீயும் மைப்பாறையும் சேர்ந்தான்னைக்கு ஏறிக்கோங்கப்பா.
"அப்டியா... ச்சேரி மொதலாளி. இங்கவரை கிளம்பி வந்துட்டேன்... அதாஞ் சங்கடமா இருக்கு.... செரி அப்ப பாத்து சொல்லுங்க மொதலாளி..."
வேற இவன் என்ன சொல்ல முடியும்.
வேதனப் படக்கூட நேரம் குடுக்காம போன வச்சதும் பஸ் ஸ்டாண்ட விட்டு வெளிய வந்த எம் ஆர் கோபாலன் பஸ் ஆரன் சத்தம். கையை நீட்டினான். வண்டி லேசா வேகம் கொறச்சதும் அப்படியே ஓடிப் போய் ஏறிக்கிட்டான். பஸ்ல பின்னால இருந்த கடைசி சீட்ல உட்கார்ந்தான். வேதனையும் விரக்தியும் பொங்க அமைதியா உட்காந்திருந்தான்.
இவனும் புரியாதவன் இல்ல. 5 லாரிக்கு 9 டிரைவர், 4 கிளீனர் இருக்காங்க. எல்லாருக்கும் ஓட்டம் குடுக்கணுமில்ல... அதும் இல்லாம அவங்க ரெண்டு பேரும் தாய்பிள்ளைக. அதான் தலவம்பட்டி இவன கழத்திவிட்டாரு. சரி இதான்னு எழுதிருக்கும்போது நம்ம என்ன மாத்தவா முடியும். யோசனையில இருந்தான். மல்லிக்கு போன் போடக் கூட தோணல.
5.45 க்கு பிள்ளையார் கோயில் ஸ்டாப்ல வந்து இறங்குனான். பொழுது இருட்டிகிட்டுக்கிடக்கு. வானம் மறுபடியும் தூத்தல் போட ஆரம்பிச்சது. திருமாளிகைத் தெரு வழியா வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சான். தங்கம் ஆவுசுப் பக்கம் வந்ததும் லேசா மல்லி சொன்ன வீட்ட ஏர்த்துப் பார்த்தான். குட்டியான வண்டில இருந்து ரெண்டு பேரு பீரோவை இறக்கிக்கிட்டு இருந்தாங்க. யாரோ இந்த வீட்டுக்கு குடிவாராங்க போல... தூத்தல் ‘சட சட’ன்னு மழையா வலுக்கப் புறப்பட்டுருச்சு.
செவல்குளம் செல்வராசு
தொடர்புக்கு
sevalkulamselvarasu@gmail.com
8124671833
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்