logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

சந்துரு மாணிக்கவாசகம்

சிறுகதை வரிசை எண் # 36


குளக்கரையில் ஒரு குருவிக்காரன் ஓய்வுபெற்ற இரண்டாவது மாதமே பிரசவ வலிக்கு ஆஸ்பத்திரி தேடுவதுபோல் அவசரகதியில் இந்த வீட்டைத் தேடிக் கண்டடைந்திருந்தார் கலியபெருமாள். இங்கு குடியேறி இரண்டு வருடங்கள் முடியப் போகிறது. மூச்சுமுட்டச் செய்யும் நகரத்தை அவரது பணிக்காலத்தில் சுத்தமாக வெறுத்திருந்த கலியபெருமாள், வேறுவழியின்றி பொறுத்துக்கொண்டிருந்தார். குறுகலான சந்துகளில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் இரண்டு மூன்று இருசக்கர வாகனங்கள், சாலைக்கு வந்தால் நடைபாதை கடைகள், நாள்முழுவதும் அசராமல் கூட்டமாய் கடந்துகொண்டேயிருக்கும் மனிதர்கள்… அவரது வெறுப்புப் பட்டியல் இப்படி நீண்டுகொண்டேயிருக்கும். எங்காவது புறநகர் நோக்கி நகர்ந்துவிடலாமென மிகுந்த ஆவல்கொண்டாலும், தனது அன்றாட அலுவலக பயணத்தின் தூரத்தை நினைத்து மலைத்தபடியே எண்ணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருந்தார். பணி ஓய்வுதான் அவரது விருப்பத்தை நிறைவேற்றியது. கலியபெருமாளுடன் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே நகர எல்லைக்குள் ஏதேனும் ஒரு பகுதியில் சொந்த வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் பலருக்கும் வீட்டின் அளவு பற்றிய கவலையில்லாமல் இருந்தது. ‘சிட்டிக்குள்ள வீடு’ என்பதில்தான் பெருமை கொண்டார்கள். கலியபெருமாளுக்கு இடம் வாங்குவதிலோ வீடு கட்டுவதிலோ என்றைக்கும் நாட்டமில்லாமலிருந்தது. வாடகை வீட்டிலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். கிரஹப்பிரவேச பத்திரிகையோடு வீட்டிற்கு யார் வந்து சென்றாலும் அவரது மனைவி காந்திமதியின் முணுமுணுப்புதான் அவருக்கு பெரும் எரிச்சலைக் கொடுக்கும். “கையில காசு இல்லாதவங்ககூட பேங்க்ல கடனை உடனை வாங்கி வீட்டை கட்டிர்றாங்க. இங்க என்னடான்னா காசை பேங்க்ல போட்டு வச்சுகிட்டு, காலம்பூரா மூட்டைமுடிச்சை தூக்கிகிட்டே அலையவேண்டியதா இருக்கு. இத்தனை வருஷம் குடுத்த வாடகை காசுல எப்பேர்ப்பட்ட பங்களா கட்டியிருக்கலாம்?” “கட்டி?” “ம்…? கட்டி சாமியார் மடமாவா வுடப்போறோம்? எப்ப பாத்தாலும் வெதண்டாவாதம் பேசிகிட்டு…” “வீடு கட்டினா நிச்சயமா மடத்துக்குதான் வாடகைக்கு வுடவேண்டியிருக்கும். உன் மவனுங்க எவனுக்கும் இந்தியா பக்கமே வர்ற ஐடியா இல்ல. ஒவ்வொரு நாடா மாறிமாறி ஓடிகிட்டுருக்கானுங்க. நாம ரெண்டு பேரும் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தரு பாத்துகிட்டு உக்காந்துருக்கறதுக்கு இந்த ஒத்தை ரூமு பத்தாதா?” “அந்த ஒத்தை ரூமை சொந்தமா கட்டிகிட்டாதான் என்னன்னு கேக்கறேன்” “நீதான் வெதண்டாவாதம் பண்ணிகிட்டே இருக்க. காசுபாட்டுக்கு பேங்க்ல கெடந்துச்சுன்னா கடைசிகாலம் வரைக்கும் எவன்கிட்டேயும் கை நீட்டாம நிம்மதியா தின்னுட்டு போய் சேர்ந்துடலாம். எடத்தை வாங்கிப் போட்டு, வீட்டை கட்டிகிட்டு என்ன பண்ணுவ? சொத்தை இவன் புடுங்கிக்குவானோ அவன் புடுங்கிக்குவானோன்னு பயந்து பயந்து சாவணும் தெனமும்” “ஆமாமா... நல்லா வெட்டி ஞாயம் பேசுங்க” - கலியபெருமாளோடு மல்லுகட்ட விரும்பாமல் சலிப்பைக் காட்டிவிட்டு இடத்தைக் காலி செய்துவிடுவாள். புறநகராக இருந்தாலும் இடம்பெயர்வதில் சில விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வைத்திருந்தார் கலியபெருமாள். குடியிருப்புகள் குறைவாகவும், பசுமை மிகுந்த பகுதியாகவும் இருக்கவேண்டுமென்பது அதில் முக்கியமானதாக இருந்தது. அதற்காக ரொம்பவும் மெனக்கெட்டு, சலிக்காமல் அலைந்துதான் இந்த வீட்டைப் பிடித்திருந்தார். அவரது விருப்பப்படியே இந்த அழகிய சிறு வீடு கிடைத்திருந்தது. கூடுதலாக, வீட்டிற்கு எதிரே ஊராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்த, மரங்களால் சூழப்பட்ட அழகிய குளம் ஒன்றும் கிடைத்திருந்ததில் அதீத மகிழ்ச்சி அவருக்கு. நேரம் போவது தெரியாமல் மொட்டை மாடியில் நின்றுகொண்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டேயிருப்பார். மளிகைப் பொருட்களை காயவைக்க வரும் காந்திமதி, ‘நாள்பூரா அப்புடி என்னதான் அந்த குளத்துல வேடிக்கை பாத்துகிட்டு நிப்பீங்களோ தெரியல’ என்றவாறே பொருட்களை பரப்பி கிளறிவிட்டுச் செல்வாள். மரங்களில் விதவிதமான பறவைகளின் கூடுகள், குளக்கரையில் மீன்களுக்காக எந்நேரமும் காத்திருக்கும் கொக்குகள், சரணாலயங்களுக்குச் செல்லும் வழியில் மரத்தின் உச்சியில் இளைப்பாறிச் செல்லும் பெரிய வகை வெளிநாட்டுப் பறவைகள் என மொத்தச் சூழலும் அவரை ஆனந்தக் கூத்தாட வைத்துக்கொண்டிருந்தன. அன்றும் வழக்கம்போல் காலையில் காபி தம்ளரோடு மொட்டை மாடிக்கு வந்திருந்தார் கலியபெருமாள். குளத்தின் நடுவே சிறு குன்றுபோல் மேடாகியிருந்த பகுதியில் செடிகொடிகள் நெடிது வளர்ந்து மண்டியிருக்க, அவற்றின் மீதும், குளத்தின் மற்ற பகுதிகளிலும் நாரைகளும் கொக்குகளுமாக நிறைந்திருந்தன. ‘தினம்தினம் இந்தப் பறவைகள் மீன்களைப் பிடித்து தின்றபடியே இருக்கின்றனவே, அவ்வளவு மீன்கள் எப்படி அமுதசுரபி போல் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன…?’ என குழந்தைகள் போல் யோசித்தபடியே குளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவரை தூக்கிவாரிப்போட வைத்தது ‘படார்’ வெடிச்சத்தம். பறவைகள் அனைத்தும் பலமாகக் கதறியபடியே குளத்திலிருந்து பறக்கத் துவங்கின. எதிர்பாராத நேரத்தில் வந்த அந்தச் சத்தம் எந்த திசையிலிருந்து வந்ததென்பதை யூகிக்கமுடியவில்லை அவரால். காபி தம்ளரை அவசரமாக சுவற்றின்மீது வைத்துவிட்டு மாடியின் நான்குபுறமும் ஓடிச்சென்று பார்த்தார். எவரும் வெடி வைத்தது போல் தெரியவில்லை. குஞ்சுகளைவிட்டு அவசரமாய் பிரிந்திருந்த பறவைகள் அதே பகுதியில் செய்வதறியாது சுற்றிக்கொண்டிருந்துவிட்டு பதற்றத்துடனே மீண்டும் கூடுகளை நோக்கித் திரும்பத் தொடங்கியிருந்தன. கிட்டத்தட்ட அனைத்து பறவைகளும் வந்தமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளத் தொடங்கியிருந்த அந்தவேளை… மீண்டும் அதே வெடிச்சத்தம். மீண்டும் பறவைகளின் கதறல்… பறவைகள் மீதான தாக்குதல் ஒலியென்பது இந்தமுறை பிடிபட்டது கலியபெருமாளுக்கு. நொடியில் படிகளில் இறங்கி ஓடிவந்தவர், அறைக்குள் சென்று அவசரமாய் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு பட்டன்களை போட்டபடியே தெருவிற்கு வந்தார். அவரது ஓட்டம் காந்திமதிக்கு பதற்றத்தை உண்டாக்கியிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தபடியே ஒரு அனுமானத்தில் சாலையின் வலதுபுறமாக நடைபோட்டார். அவரது மனதில்பட்டது போலவே, சற்றுதூரத்தில் துப்பாக்கியுடன் நின்றிருந்தான் பச்சை முண்டாசு கட்டிய குருவிக்காரன் ஒருவன். முழு கோணிப்பை ஒன்றின் நீள அகலத்தை வெகுவாகக் குறைத்து தோள் பையாக தொங்கவிட்டிருந்தான். பையின் வெளிப்பக்கங்களில் ஆங்காங்கே ரத்தக்கறை. அநேகமாக உள்ளே காக்கை குருவிகள் கிடக்கலாம். அடுத்த குறிக்கான இடத்தை யோசித்தவாறே துப்பாக்கியை சாலையில் கவிழ்த்து பிடித்துக்கொண்டு குளத்தை வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தான் அவன். படுவேகமாய் அவனை நோக்கி நடைபோட்டார் மூளை சூடாகியிருந்த கலியபெருமாள். “ஏய்…” – அவனை நெருங்கும் முன்பே தூரத்திலிருந்து குரல் கொடுத்தார். குழப்பத்துடன் பார்த்தான் அவன். “நீதான் இப்ப சுட்டியா?” பலமாகக் கத்தினார். இரண்டு வீடுகளிலிருந்து நடுத்தர வயது பெண்கள் இருவர் வெளியே வந்து எட்டிப் பார்த்தார்கள். அவசர வேலைகள் எதுவுமின்றி சாவகாசமாக சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தை குறைத்தவாறே வேடிக்கைப் பார்க்கத் துவங்கினார்கள். “ஆமா சாமீ, நான்தான் சுட்டேன். ஆனா ஒண்ணும் மாட்டலியே சாமீ. எல்லாம் பறந்து போச்சு” “மொதல்ல எடத்தை காலி பண்ணு நீ” “ஏன் சாமீ?” “டேய், சொல்றேன்ல. கெளம்புடா மொதல்ல” “சாமீ, நான் காடை கௌதாரிங்களதான சாமீ சுடுறேன்? ஆடு கோழிங்களையா புடிக்கறேன்?” “மரியாதையா சொன்னா கேளு. இதுக்கு மேல இங்க நின்ன, ஃபோனை போட்டு போலீஸை வர வைப்பேன், சொல்லிட்டேன்” “என்ன சாமீ இது அநியாயமா இருக்கு. வயித்துக்காகதானே இதை பண்றேன், இப்புடி கோவுச்சுக்குறியே” “ஏன், திங்கிறதுக்கு வேற எதுவுமே கெடைக்கலையா உனக்கு? வயிறு இதைதான் கேக்குதா? சும்மா ஞாயமெல்லாம் பேசிகிட்டு நிக்காம ஒழுங்கா போயிரு” அவன் நகர்வதாயில்லை. புன்னகைத்தபடியே நின்றிருந்தான். “ஒனக்கு கொக்கு காடை எதுவும் வேணும்னாலும் தர்றேன் சாமீ” “போலீஸ் வந்தாதான் அடங்குவ போலருக்கு” என்றவாறே ஃபோனை எடுத்தார். அவரது வீடு எந்த காவல் எல்லையில் இருக்கிறதென்பதுகூட கலியபெருமாளுக்கு தெரியாமல்தானிருந்தது. ஆனாலும், அவனுக்கு பயத்தை உண்டாக்கும் எண்ணத்துடன் ஃபோனில் எண்ணைத் தேடுவது போல் நடித்துக்கொண்டேயிருந்தார். அவன் முண்டாசை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக்கொண்டான். ‘இதென்னடா எழவு காலையிலேயே ரோதனை’ என்பது போலிருந்தது அவனது முகபாவனை. வேடிக்கை பார்ப்போரின் எண்ணிக்கை சற்றே கூடியிருந்தது. சுற்றியிருப்பவர்களிடம் அவனைப் பற்றி புலம்பத் துவங்கினார். “கண்ணுல பாக்கற பறவையையெல்லாம் இவன்பாட்டுக்கு சுட்டுத் தள்றான் சார். கேட்டா, வயித்துக்கு வேணுமாம். என்ன அநியாயம் பாருங்க” விஷயத்தை அறிந்துகொண்டவர்கள் எவரும் அவனைக் கேள்வி கேட்பதாக இல்லை. ‘ப்பூ... இவ்வளவுதானா விஷயம்’ என்பதுபோல் அங்கிருந்து நகரத் துவங்கியிருந்தார்கள். போலீஸை அழைப்பதாக மிரட்டிய பின்னரும் அவன் அசையாமல் நின்றுகொண்டிருக்க, அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தபடியிருந்தார் கலியபெருமாள். ‘போலீஸ் வராவிட்டால் நிச்சயமாக நமக்கு பெரும் அவமானம் நேரும்’ என நினைத்தவர், நூறுக்கு ஃபோனை போட்டு விஷயத்தைச் சொன்னார். லைனில் வந்திருந்த கட்டுப்பாட்டு அறை பெண் காவலர், இவரது வீட்டிற்கு அருகிலிருக்கும் காவல் நிலையம் குறித்த விபரங்களைக் கேட்டார். “ரெண்டு ஸ்டேஷன் இருக்கு மேடம். இதுல எந்த ஸ்டேஷன் கண்ட்ரோல்ல இந்த ஏரியா வருதுன்னு கரெக்டா தெரியல” என்றார். கலியபெருமாளின் முழு முகவரி, தொலைபேசி எண் என அனைத்தையும் பெற்றுக்கொண்ட காவலர், அவருக்கு அழைப்பு வருமெனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துக்கொண்டார். “ஊர்ல எங்கெங்கயோ போயிட்டு வர்றேன் சாமீ, யாரும் எதுவும் சொல்றதில்ல. நீ மட்டும் இப்புடி பண்றியே. இதையெல்லாம் பெருசுபடுத்தாத சாமீ” எனக் கும்பிட்டான் அவன். “உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம், இல்ல? போலீஸை கூப்புடறேன்னு தெரிஞ்சும் பெருசுபடுத்தாதன்னுகிட்டு இங்கேயே நிக்கிற. இன்னைக்கி என்ன கதியாகப் போறன்னு மட்டும் பாரு” சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. “ஹலோ…” “நான் டீ-லெவன் ஸ்டேஷன்லேர்ந்து ஹெட் கான்ஸ்டபிள் பேசறேன் சார். கண்ட்ரோல் ரூமுக்கு ஃபோன் பண்ணியிருந்தீங்களா?” “ஆமா சார்” “என்ன பிரச்சனை அங்க?” - பிரச்சனையை சொன்னார். “இதுக்கெல்லாம் அவ்வளவு தூரம் வரணுமா சார் நான்? அக்கம்பக்க ஆளுங்களை வச்சு அவனை வெரட்டி வுடுவீங்களா, அதை விட்டுட்டு…” “இல்ல சார். எவ்வளவோ சொல்லியும் துப்பாக்கிய வச்சுகிட்டு அசையாம நின்னுகிட்டே இருக்கான். வேற வழியில்லாமதான் கம்ப்ளெய்ண்ட் பண்ணினேன். கொஞ்சம் வந்துட்டு போனீங்கன்னா நல்லாருக்கும் சார்” “என்ன சார் நீங்க…” சலித்துக்கொண்ட கான்ஸ்டபிளின் பக்கம் சற்றுநேரம் அமைதி நீடித்தது. “சரி, வர்றேன் இருங்க” – அத்தனை எளிதில் அவர் வந்து சேரப்போவதில்லை என்பதை அவாது ‘வர்றேன்’ தெளிவாகக் காட்டியது. ‘வரட்டும். எவ்ளோ நேரமானாலும் பரவால்ல. இவனை இப்புடியே வுட்டுடக்கூடாது’ என்றது அவரது மனம். அருகிலிருந்த மின்கம்பத்தில் துப்பாக்கியை சாய்த்து வைத்துவிட்டு குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தான் அவன். ‘இத்தனை வீம்பாக, நீயா நானா எனப் பார்த்துவிடலாம் என்ற ஆணவத்தோடு அமர்ந்திருக்கிறானோ?’ என ஆச்சரியமாக இருந்தது அவருக்கு. வீட்டு வாசலில் நின்றபடியே தன் கணவனை பார்த்துக்கொண்டிருந்த காந்திமதிக்கு பொறுமை போனது. மெதுவாக நடைபோட்டு அவரருகே வந்து நின்றாள். “என்னங்க பிரச்சனை? ஊரே வேடிக்கை பாக்குது?” என்றாள் குருவிக்காரனின் காதில் விழாமல். “இந்தா... இந்த பய எல்லாத்தையும் சுட்டுத் தள்ளிகிட்டுருக்கான். அதான். இன்னைக்கி உண்டு இல்லன்னு பண்ணிட்டு வரலாம்னு இருக்கேன். நீ போ” – அவளது அமைதியான கேள்விக்கு காட்டுக்கத்தலில் பதில் சொன்னார். “ஏங்க, காலம்காலமா அவன் செய்றதைதான செஞ்சுகிட்டு இருக்கான்? நீங்க ஏன் இவ்வளவு வேகப்பட்டு இல்லாத பிரச்சனையெல்லாம் பண்ணிகிட்டு நிக்கிறீங்க? வீட்டுக்கு வாங்க முதல்ல” “நீ போன்னா போ” கலியபெருமாள் கத்த, காந்திமதி வலிக்காமல் தலையிலடித்துக்கொண்டு செல்வதைப் பார்த்து குருவிக்காரன் புன்னகைத்தான். ஒருவழியாக கான்ஸ்டபிளின் பைக் வந்து சேர்ந்தது. “இவன்தானா?” என்றார் கலியபெருமாளிடம். குருவிக்காரன் குனிந்து கும்பிடு போட்டான். “ஏண்டா, ஸ்டேஷன்ல ஆள் இல்லாம அவசர கேஸுங்களைகூட பாக்கமுடியாம அல்லாடிகிட்டு கெடக்கறோம், இதுல உன் எழவு வேறயா?” வந்த வேகத்தில் காட்டமாய் கத்திய கான்ஸ்டபிளின் வார்த்தைகள் ஒரு மாதிரியாகக் குத்தியது கலியபெருமாளுக்கு. அவர் அவனைத் திட்டும் தோரணையில் தன்னை திட்டுவதாகவே உணர்ந்தார். “திமிராடா உனக்கு? போன்னு சொன்னா கேக்கமாட்டியா? ஸ்டேஷன்ல வச்சு வெளுக்கணுமா?” அமைதியாக நின்றிருந்தான் அவன். பைக்கின் ஹேண்ட்பாரில் மாட்டியிருந்த வயர்லஸ் கருவி பலத்த கரகரப்பைக் கக்குவதும் பின் அமைதியாவதுமாக இருந்தது. “துப்பாக்கிக்கி பேப்பர் வச்சுருக்கியா?” “வச்சுருக்கேன் சாமீ” “எடு” அவசரமாக அண்டர்வேர் பாக்கெட்டினுள் கையைவிட்டு சதுரமாய் மடிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர் ஒன்றை வெளியே எடுத்தவன், அதிலிருந்த ஜெராக்ஸ் பேப்பரை எடுத்து கான்ஸ்டபிளிடம் நீட்டினான். “பேரு என்னடா?” “சரத்குமாரு சாமீ” “இதுக்கெல்லாம் ஒண்ணும் கொறச்சல் இல்ல” என்றபடியே பேப்பரைப் பார்த்தார். அவன் கைகட்டி நின்றிருந்தான். பேப்பரை அவனிடமே திரும்பக் கொடுத்துவிட்டு, கலியபெருமாளை தனியே அழைத்து வந்தார். “சார், பேப்பர் எதுவும் இல்லன்னா ஸ்டேஷனுக்கு கொண்டு போயிடலாம்னு பாத்தேன். அதெல்லாம் பக்காவா வச்சுருக்கான். முன்னமாதிரி நெனைச்சவுடன இவங்க மேல கையையெல்லாம் வைக்கமுடியாது. லீகல் இஷ்யூஸ், ஹ்யூமன் ரைட்ஸ்னு கண்ட கண்ட பிரச்சனையெல்லாம் வரும். நாம ஆடு கோழிய திங்கறமாதிரிதான் அவனுங்க காக்கா குருவிங்கள திங்கிறானுங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க” “காக்கா குருவி வரைக்கும் பிரச்சனை இல்ல சார். சுட்டுட்டு போவட்டும். ஆனா இவன் கொக்குல ஆரம்பிச்சு நாடு விட்டு நாடு வந்துருக்கற பறவைங்க வரைக்கும் எல்லாத்தையும் குறி வைக்கறான் சார், அதுக்கு என்ன சொல்றீங்க?” கான்ஸ்டபிளுக்கு கோபம் கொப்பளித்தது. இவ்வளவுநேரம் பேசிக்கொண்டிருந்தது போலல்லாமல் சற்று சத்தமாகவே சொன்னார். “நான் சொல்றது புரியுதா இல்லியா உங்களுக்கு? ஆக்சுவலா இதெல்லாம் நாங்க பாக்கற டிபார்ட்மெண்ட்டே கிடையாது. ஃபாரஸ்ட் ஆஃபீஸ்லதான் நீங்க கம்ப்ளெய்ண்ட் பண்ணியிருக்கணும். கண்ட்ரோல் ரூம்லேர்ந்து கூப்ட்டு, ரோட்ல துப்பாக்கியை வச்சுகிட்டு ஏதோ பிரச்சனை பண்ணிக்கறாங்க, என்னன்னு போயி பாருன்னு சொன்னதுனாலதான் வந்தேன். இந்தப் பிரச்சனையை ஸ்டேஷனுக்கு தூக்கிகிட்டு வந்துருந்தீங்கன்னா திரும்பிக்கூட பாத்துருக்கமாட்டேன்” “அவன் எதை வேணும்னாலும் சுட்டுட்டு போகட்டும், பேசாம வேடிக்கை பாருங்கறீங்க, அப்புடிதான? ஓகே சார்” – கலியபெருமாளின் புன்னகை கலந்த ‘ஓகே’, பெருங்கோபத்தின் வெளிப்பாடு என்பதை புரிந்துகொண்டார் கான்ஸ்டபிள். கலியபெருமாளை சமாளித்து சமாதானம் செய்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து கிளம்ப முடியவில்லை அவரால். “இப்ப நான் என்ன பண்ணணும்னு எதிர்பாக்கறீங்க?” “சரி சார். கேஸுகீஸுன்னு நீங்க எதுவும் பண்ண வேணாம். அவன் இனிமே இந்த ஏரியா பக்கம் வராத அளவுக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா மிரட்டியாச்சும் அனுப்பிட்டு போங்க” இறுகிய முகத்துடன் அவனது இடம் நோக்கி நடந்தார் கான்ஸ்டபிள். கலியபெருமாளோ தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும்விதத்தில் நின்ற இடத்திலேயே இப்படியும் அப்படியுமாக நடந்துகொண்டிருந்தார். “டேய், கெளம்பு” “சாமீ…” “சொல்றது புரியுதா இல்லியா? கெளம்புடா” “சரி சாமீ” தலையை சொறிந்தபடியே தயக்கத்துடன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நடக்கத் துவங்கினான் அவன். கான்ஸ்டபிள் தனது வண்டியிலேறியமர்ந்து அவனுக்கு எதிர்திசையில் பயணிக்கத் தொடங்கினார். குருவிக்காரன் நடந்துகொண்டிருந்தான். அவனுக்கு முன்னாலிருந்த ஒரு சந்து வழியே திடீரென வெளியே வந்ததது கான்ஸ்டபிளின் வண்டி. ஓரம்கட்டிவிட்டு திரும்பிப் பார்த்தார். மடித்துக் கட்டியிருந்த கைலியை அவசரமாக அவிழ்த்துவிட்டபடியே ஓடிச்சென்று அவரருகே நின்றுகொண்டான் குருவிக்காரன். “எங்கடா ரொம்பநாளா ஸ்டேஷன் பக்கமே ஆளைக் காணோம்?” “தஞ்சாவூருக்கு பக்கத்துல புதுக்குடியில என் தங்கச்சி இருக்குது சாமீ. நாலஞ்சு மாசம் அது வூட்டு பக்கமா போயிருந்தேன் சாமீ” “சரி சரி. பையை காட்டு” அவசரமாகத் தோளிலிருந்து பையைக் கழட்டி அவரிடம் காட்டினான். உள்ளே இரண்டு காகங்களும் ஒரு அணிலும் ரத்தம் உறைந்து கிடந்தன. “என்னடா, ஒத்த நாரையைகூடக் காணோம்?” “கொளத்தங்கரையில கொக்கும் நாரையுமா குமிஞ்சுருக்கு சாமீ. எங்க சாமீ சுட வுட்டாரு அவரு? நீயும் சேர்ந்துகிட்டு என்னை தொரத்தி வுட்டுட்டியே” “அந்தாளு கொஞ்சம் வெவகாரம் புடிச்சவன்மாதிரி இருக்கான்டா. அதான் தொரத்திவுட்டேன். அப்பறமா அந்தாளு வெளியதெருவ போற நேரமா பாத்து சுட்டுக்க. நாரையோட சேர்த்து நல்லா பெருசா எதாச்சும் ரெண்டு கொண்டுட்டு வா. வெளியூர் ஐட்டமா இருந்தாலும் பரவால்ல. இன்னைக்கி நைட் டூட்டி எனக்கு. ஸ்டேஷன்லதான் இருப்பேன்” கையைக் கட்டிக்கொண்டு தலையாட்டினான் அவன். போலீஸை வைத்து குருவிக்காரனை துரத்திவிட்ட வெற்றிப்பெருக்கோடு வீட்டினுள் வந்தமர்ந்து டிவியை போட்டுக்கொண்டார், கலியபெருமாள். 

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.