ஸ்ரீவித்யா பசுபதி
சிறுகதை வரிசை எண்
# 38
இசக்கி
“ஏட்டீ இசக்கி, நான் வேலைக்குக் கெளம்புதேன். இஸ்கூலு லீவுன்னு பொழுதன்னிக்கும் வெளையாடிட்டே கெடக்காதே. கொஞ்ச நேரம் படி. ஒழுங்கா சாப்பிடு. எதுனா வேணும்னா பக்கத்து வீட்டு கோமதியக்காகிட்ட கேட்டுக்க என்னா.”
“சரி மா, ஒழுங்கா சாப்டுதேன். இங்கனக்குள்ளதான் வ்ளாடுவேன். எங்க மிஸ்தான் நான் நல்லாப் பயிற்சி எடுத்தா இன்னும் நல்லா ஓட முடியும், வெளியூர்ல போய் ஓடிப் பரிசு வாங்கலாம்னு சொல்லியிருக்காகளே. அதனால நான் நல்லா ஓடிப் பழகிகிடுதேன்.”
“சரி, பத்திரமா பாத்துக்க. நீ ஜெயிச்ச கப்பை நான் எடுத்துட்டுப் போறேன் புள்ள. நான் வேலை செய்யுத வீட்டுல காட்டினா சந்தோசப்படுவாக. எனக்கும் பெருமையா இருக்கும். அவுக வீட்டுல அவுக புள்ளைங்க இதே மாதிரி வாங்குனத கண்ணாடி அலமாரில வச்சிருக்காக. நான் பாத்திருக்கேன். எம்மவளும் வாங்கியிருக்கா பாருங்கன்னு பெருமையா சொல்வம்லா.”
அதே பூரிப்போடு தெருவில் இறங்கி நடந்தாள் பொன்னம்மா. அவள் மனம் முழுவதும் தன் மகள் இசக்கி, நேற்று ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்த நினைவுகளே நிறைந்திருந்தன. பொன்னம்மாவின் மனம் பரவசமாக இருந்ததை அவள் நடையே காட்டிக் கொடுத்தது. சோர்வில்லாமல் சற்று வேகமாகவே நடைபோட்டாள். கூடவே நேற்று மாலைமுதல் நடந்த நிகழ்வுகள் அவள் மனத்தில் ஒரு முறை வலம்வந்தன. நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்குத் திரும்பிய இசக்கி, வரும்போதே கத்திக்கொண்டே வந்தாள்.
“யம்மா, யம்மா, இங்கன பாத்தியா. என் கைல என்ன இருக்குன்னு பாரு.”
உற்சாகமாகக் கத்திக்கொண்டே வந்தாள் பத்து வயது இசக்கி.
சமையலறையில் இருந்த பொன்னம்மா, மகளின் குரல் கேட்டு புடவைத் தலைப்பில் கையைத் துடைத்தபடியே வந்தாள்.
“ஏட்டி, எதுக்கு இப்படிக் கூப்பாடு போடுதே? எம்புட்டு சொன்னாலும் வெளங்காதா? வீட்டுக்குள்ள வரும்போலயே எதுக்குக் கூப்பாடு?” என்று தன் வேலை பாதியில் நின்ற கோவத்தில் புலம்பியபடியே வந்த பொன்னம்மா, இசக்கியைப் பார்த்ததும் ஆச்சரியமானாள்.
“ஏட்டீ இசக்கீ, இது என்னாடி இது? இம்புட்டு பெருசா கப்பு யாரு குடுத்தாவ?”
“யம்மா, இன்னிக்கு எங்க பள்ளிக்கூடத்துல வெளையாட்டுப் போட்டி வச்சாக. நான் ஓட்டப் பந்தயத்துல ஓடினம்லா. நான்தான் ஜெயிச்சேன் மா. அதுக்குதான் இந்த கப்பு குடுத்தாக.”
“அடியே என் ராசாத்தீ, நீதான் ஜெயிச்சியா. என் தங்கம்,” பூரிப்போடு தன் மகளைத் தூக்கிக் கொஞ்சினாள் பொன்னம்மா.
“ஏலா நெசமாவா சொல்தே? அம்புட்டு வெரசலா ஓடினியா? எம்மவ லா, அதான் வெரசலா ஓடி ஜெயிச்சிருக்கே. ஆமா புள்ள, இது தங்கமா? இம்புட்டு பளபளன்னு இருக்கு.”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது மா. யம்மா, நான் வெளையாடப் போவணும்.”
“சரி பாப்பா, கை கால் கழுவிட்டு வா, காப்பித்தண்ணி போட்டுத் தாரேன். குடிச்சுட்டு வெளையாடப் போ.”
அவ்வளவுதான், இசக்கியின் பரவசம் அந்தக் கோப்பையை அம்மாவிடம் கொடுத்ததோடு முடிந்துவிட்டது. ஆனால் தன் மகள் பெரிய சாதனை செய்துவிட்டது போன்ற ஒரு பெருமிதம் பொன்னம்மாவைத் தொற்றிக் கொண்டது. இந்த விஷயத்தை அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் சொல்லி, பெருமைப்பட்டுக் கொள்ள அவள் மனம் பரபரத்தது. காப்பியைப் போட்டு இசக்கியிடம் கொடுத்துவிட்டு, மீதமுள்ள வேலைகளை விரைந்து முடித்தாள்.
இசக்கி காப்பியை ஒரே மடக்கில் விழுங்கிவிட்டு சிட்டாகப் பறந்தாள். வீட்டிலிருந்து வெளியே வந்தவள், நான்கு அடி ஓடுவதும், பின் மெலிதாகக் குதித்து, பின் மீண்டும் ஓட்டத்தைத் தொடர்வதும் என அந்த வயதுக்கே உரிய துள்ளலோடு அடுத்த தெருவுக்குள் நுழைந்தாள். அங்கே ஏற்கனவே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளோடு இசக்கியும் சேர்ந்து கொண்டாள். அதன்பின் அவளுக்கு அவள் ஓட்டப் பந்தயத்தில் வென்றதோ, அவளுக்குக் கிடைத்த பரிசுக் கோப்பையோ மறந்து போனது. விளையாட்டில் மூழ்கிப் போனாள் இசக்கி.
நெல்லை மாவட்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் பாவூர் என்ற ஊரில் கிளியூர் ஒரு குட்டி கிராமம். கிளியூரில் இருக்கும் ஒரு சின்ன தெருவில்தான் இப்போது இசக்கி கவலை மறந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். கிளியூரில் எல்லாமே சின்னச் சின்ன வீடுகள். குறுகலான தெருக்கள். மொத்தமாகவே நூறு வீடுகள்தான் இருக்கும். அங்கே இருக்கும் அநேகமான ஆண்கள் வேலைக்காக பாவூர் போய் வருகிறார்கள். பெண்களும் வீட்டு வேலைகளுக்கும் வயல் வேலைகளுக்கும் பாவூர் போய்விடுவார்கள்.
இசக்கியின் அப்பா கதிரேசன் பாவூரில் காய்கறிக் கடை வைத்திருக்கிறார். கதிரேசன் தினமும் காலை ஐந்து மணிக்கே கிளம்பி ஆவுடையார்புரம் போய் காய்கறிகளை வாங்கி வந்து, பாவூரில் கடை போடுவார். இரவு கடை அடைத்து வீட்டிற்குத் திரும்பி வர மணி ஒன்பதாகிவிடும். பொன்னம்மா தினமும் காலையில் வீட்டு வேலைகளை முடித்து, இசக்கியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பாவூரில் இருக்கும் நாலைந்து வீடுகளுக்கு வீட்டு வேலைக்குப் போய்விடுவார். மதியம் வேலைகளை முடித்துக் கொண்டு, தான் கையோடு கொண்டு வந்திருக்கும் மதிய உணவைத் தன் கணவருக்குக் கொடுத்து, தானும் சாப்பிட்டு மாலை நான்கு மணிக்குள் வீடு வந்து சேர்வார்.
இசக்கி விளையாடக் கிளம்பியதும், அவள் வெற்றிபெற்ற கோப்பையை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினார் பொன்னம்மா. அக்கம்பக்கம் அனைவருமே ஒரே குடும்பமாகப் பழகியவர்கள்.
“யக்கா, கோமதியக்கா, நம்ம இசக்கி புள்ள என்ன செஞ்சுட்டு வந்திருக்கு பாத்தியளா?”
பக்கத்து வீட்டின் வாசல்படியில் உட்கார்ந்து கீரையை ஆய்ந்து கொண்டிருந்த கோமதி, கண்கள் விரிய பொன்னம்மாவின் கையில் இருந்த கோப்பையை வாங்கிப் பார்த்தார். அதற்குள் பொன்னம்மா கொஞ்சம் குரலை உயர்த்தி அந்தத் தெருவில் இருக்கும் தன் தோழிகளை அழைத்தார்.
“ஏ... சின்னப் பொண்ணு, பூங்கோத, வேலம்மா, மாரி... இங்கன வந்து பாருங்கடி.”
பொன்னம்மாவின் குரல் கேட்டு ஒவ்வொருவரும் வீட்டில் செய்து கொண்டிருந்த வேலையோடு அப்படியே வந்தனர். தலையை சீவிக் கொண்டிருந்த சீப்போடும், வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த கோலப் பொடியோடும், பாதி குடித்திருந்த காப்பி டம்ப்ளரோடும் கோமதியின் வீட்டு வாசலில் குழுமினர். ஒவ்வொருவரும் கோப்பையை வாங்கி ஆர்வமோடு தொட்டுப் பார்த்தார்கள். பொன்னம்மாவின் முகத்தில் பூரிப்பு பொங்கி வழிந்தது.
“பொன்னு, தங்கக் கட்டி டி ஒம்மவ. எப்பவும் துறுதுறுன்னு ஓடிட்டே இருப்பா. இப்ப பாரு ஓட்டப் பந்தயத்துல பரிசு வாங்கியாந்திருக்கா. எங்கன புள்ளயக் காணோம்?”
“அதானே, கப்பு மட்டும் இருக்கு. அத ஜெயிச்ச இசக்கி எங்க? நாங்க புள்ளயக் கொஞ்ச வேண்டாமா பொன்னம்மா?”
“அது எங்கன இங்க இருக்கு. கப்பக் கொண்டாந்து எங்கையில குடுத்துச்சு. காப்பித் தண்ணியக் குடிச்சுட்டு வெளையாடப் போயிருச்சு. இனி பொழுது சாஞ்சுதானே வரும். இசக்கி வீட்டுக்கு வந்ததும் உங்க எல்லாரையும் வந்து பாக்கச் சொல்லுதேன்.”
“பொன்னம்மா, கதிரேசு அண்ணாச்சிக்கு இந்த விசயம் தெரிஞ்சா அண்ணாச்சி ரொம்ப சந்தோசப்படுவாக.”
“ஆமா மாரி, அவரு வீட்டுக்கு வந்த பொறவுதான் சொல்லணும். அப்பாகிட்ட நானே சொல்லுதேன் மா, நீ அவசரப்பட்டு சொல்லிராதேன்னு சொல்லிட்டுப் போச்சு இசக்கி.”
“ஆமா, அவ அவங்க அப்பாவுக்குச் செல்லமாச்சே. ஏ பொன்னு, நீ பெருசா ஆம்பளப் புள்ள வேணும்னு பொலம்பிட்டுக் கெடந்தியே. இப்பம் பாத்தியா, சிங்கக் குட்டி மாதிரி நம்ம இசக்கி சாதிச்சுட்டு வந்து நிக்கா.”
“ஆமா கோமதியக்கா, எனக்கு ஒரு நிமிசம் கண்ணு கலங்கிருச்சு. பொழுதன்னிக்கும் வெளையாட்டு வெளையாட்டுன்னு கெடக்காளேன்னு கொஞ்சம் கவலையா இருந்துச்சு. ஆனா அதுலயும் சாதிக்க முடியும்னு புரிய வச்சுருச்சு இசக்கி. ஆம்பளப் புள்ள இருந்தா இந்த மாதிரி நிறைய சாதிக்கும்னு நினைச்சேன். ஆனா எனக்கு என்னவோ ராசியில்ல. இசக்கிக்குப் பொறவு என் வயித்துல எதுவும் தங்கல.
இது பொட்டப்புள்ள, இன்னும் ஒரு வருசமோ ரெண்டு வருசமோ, சடங்காயிரும். பொறவு ஆட்டமாவது ஓட்டமாவது சொல்லு. பத்தாப்பு வரை படிக்க வச்சுட்டு கட்டிக் கொடுத்துரணும். அதான் இந்தப் பொட்டப்புள்ள நமக்கு என்ன பெரும தேடித்தரப் போவுதுன்னு நெனச்சேன். ஆனா சாதிச்சுட்டால்லா எம்மவ. இனி ஆம்பளப்புள்ள வேணும்னு சொல்ல மாட்டம்லா அக்கா.”
அந்தப் பொழுது பேச்சும் சிரிப்புமாக சந்தோஷமாக நகர்ந்தது. இரவு கதிரேசன் வீட்டிற்கு வரும்போது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. எட்டரை மணிவரை தன் அப்பாவுக்காகக் காத்திருந்த இசக்கி, சாப்பிட்ட பிறகு பரிசுக் கோப்பையைக் கையில் வைத்தபடியே சுருண்டு படுத்து அவளையும் அறியாமல் தூங்கிப் போனாள்.
கதிரேசன் வந்ததும், பொன்னம்மா இசக்கியின் கையிலிருந்த கோப்பையை மெதுவாக எடுத்து, தன் கணவனிடம் பெருமையோடு அனைத்தையும் சொன்னாள்.
“ஏலா பொன்னி, பாத்தியா லா என் செல்லத்த. எம்புட்டு பெரிய சந்தோசத்தக் குடுத்திருக்கா. எங்க அம்மா அவளுக்கு அந்த இசக்கியம்மன் பேரை வைக்கச் சொன்னப்பவே சொல்லிச்சு, எம்பேத்தி நல்லா பெரிய ஆளா வருவா. உனக்கு நல்ல பேர வாங்கித் தருவா கதிருன்னு சொல்லிச்சு.”
“ஆமாங்க, இசக்கிக்கு அவ ஆச்சியோட வாழ்த்து கூடவே இருக்கும். நம்ம புள்ள நல்லா ஓடுதாளாம். அவளுக்கு மொறையா பயிற்சி கொடுத்தா வெளியூர்ல எல்லாம் போட்டில கலந்துக்கிடலாமாம். இந்த டிவில எல்லாம் காட்டுதாக இல்லா, அந்த மாதிரி பெரிய போட்டில கலந்துகிட்டு பரிசு வாங்கலாம்னு இசக்கியோட மிஸ் சொன்னாகளாம். நம்ம புள்ள சொன்னதும் எனக்கு அப்டியே சந்தோசமாயிருச்சுங்க.”
“அதுக்கு வெளையாட்டுல ஆசையிருக்குன்னா நல்லா வெளையாடட்டும் புள்ள. அது ரொம்ப நாளா சைக்கிள் கேக்குது. ரெண்டு மூணு மாசமா கல்யாணம் திருவிழான்னு யாவாரம் நல்லாப் போச்சுல்லா. அதுல கொஞ்சம் துட்டு சேர்ந்திருக்கு. நாளைக்குக் கடையை வெரசலா அடைச்சுட்டு, அப்படியே ஒரு சின்ன சைக்கிள் வாங்கியாந்துடுதேன். புள்ளகிட்ட இப்பம் சொல்ல வேண்டாம் பொன்னி. நாளைக்கு நான் சைக்கிள் வாங்கியாந்த பொறவு இசக்கிகிட்ட சொல்லிக்கலாம்.
அவளுக்குத் திடீர்னு அந்த சந்தோசத்தைக் கொடுத்து, அதுல அவ துள்ளிக் குதிக்கறதப் பாக்கறதே நமக்குத் தனி சந்தோசம்தானே புள்ள.”
தன் கணவர் சொன்னதைக் கேட்ட பொன்னம்மாவுக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. அன்றைய இரவு அவர்களுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. இசக்கி, அவள் பள்ளியில் நடந்த ஒரு விளையாட்டுப் போட்டியில் பரிசு வாங்கி வந்ததே அவர்களைப் பொறுத்தவரை மிகப் பெரிய சாதனையாகத்தான் தோன்றியது. எப்பாடுபட்டாவது தங்கள் ஆசை மகளை நன்றாகப் படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற சராசரிக் கனவுகளோடுதான் அவர்களும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே சந்தோஷத்தோடுதான் இப்போதும் வேலைக்குக் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறாள் பொன்னம்மா. கையில் வைத்திருந்த சாப்பாட்டுக் கூடையில், தூக்கு வாளியோடு அவ்வப்போது உரசி சத்தம் எழுப்பும் பரிசுக் கோப்பை பொன்னம்மாவின் மனத்தில் இசையாய் இனித்தது. இசக்கி அடுத்தடுத்து நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு வாங்குவது போலெல்லாம் நேற்று இரவு கனவிலேயே கண்டு மகிழ்ந்த தாயுள்ளம், இன்றும் அதே பரவசத்துடன் அவள் வேலை செய்யும் வீட்டை நோக்கி வேகநடை போட்டாள்.
வீட்டில் தனியாக இருந்த இசக்கி, காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு, வீட்டுப் பாடங்களைச் செய்து முடித்தாள். வாசலுக்கு வந்து விளையாட யாராவது இருக்கிறார்களா எனத் தேடினாள். பதினோரு மணி வெயிலில் சாலை பளிச்சென்று இருந்தது. என்ன செய்வது என யோசித்த இசக்கி, உள்ளேயிருந்து ஒரு தாளையும் பென்சிலையும் ஒரு புத்தகத்தையும் எடுத்து வந்து வாசல்படியில் உட்கார்ந்தாள்.
மடியில் புத்தகத்தை வைத்து, அதன்மேல் தாளை வைத்து அதன் சுருக்கங்களை நீக்கி, படம் வரைய ஆரம்பித்தாள். இசக்கியின் கலை உலகத்தில் ஓவியங்கள் வெறும் கோடுகளாலும் வட்டங்களாலும் முழுமை பெற்றன. ஒரு குட்டிப் பெண் அவளைவிடப் பெரிய பரிசுக் கோப்பையைக் கையில் ஏந்தியபடி நிற்பதுபோல் அவள் வரைந்துமுடித்த தருணத்தில் செந்தில் அங்கே வந்தான்.
“என்னா இசக்கி, ஓட்டப் பந்தயத்துல ஓடி ஜெயிச்சியாமே. எவ்வளவு தூரம் ஓடினே?”
அந்த வழியாக சைக்கிளில் வந்த செந்தில், இசக்கியைப் பார்த்ததும் சைக்கிளை நிறுத்திக் கேட்டான். செந்தில் வேலம்மாவின் தம்பி. பத்தாம் வகுப்பு இரண்டு முறை எழுதி தேர்வு பெறாததால், படிப்பை மூட்டைகட்டி வைத்தவன், ஒழுங்காக ஒரு வேலையிலும் நிலைக்காமல் வெட்டியாகச் சுற்றிக் கொண்டிருந்தான். தன் அம்மாவின் தோழி வேலம்மா அத்தையின் தம்பி என்பதால், செந்தில் மாமா என்று இசக்கி மிகவும் அன்போடு அவனிடம் பேசுவாள்.
“ஆமா மாமா, நான்தான் ஜெயிச்சேன். கப்புகூட கொடுத்தாக. அம்மா எடுத்துட்டுப் போயிருச்சு. நாளைக்கு உங்களுக்குக் கொண்டாந்து காட்டறேன்.”
“அதிருக்கட்டும், நானும்தான் போட்டில எல்லாம் ஜெயிச்சிருக்கேன். என்கூட போட்டி போடறியா?”
“என்ன மாமா, உங்ககூட எப்படி நான் ஓட முடியும்? நீங்க பெரியவங்க, வெரசலா ஓடிருவீக. அது எப்படிப் போட்டியாவும்?”
“அதெல்லாம் ஓடலாம். நீ நல்லா ஓடிப் பழகினா வெரசலா ஓடிரலாம்.”
“ஆமா மாமா, நல்லா ஓடிப் பழகினா பெரிய பெரிய போட்டில எல்லாம் ஓடி ஜெயிக்கலாம்னு எங்க மிஸ்கூட சொன்னாக.”
“அப்டி போடு, என்கூட எல்லாம் ஓடிப் பழகினாத்தானே நீ பெரிய போட்டில ஜெயிக்க முடியும். வரியா, தோட்டத்துப் பக்கம் இருக்கற க்ரௌண்டுக்குப் போவலாம்.”
“அப்படியா மாமா, எனக்கு நீங்க சொல்லித் தரீயளா?”
“வா போவலாம். சைக்கிள்ல ஒக்காரு.”
“இரிங்க மாமா, வீட்டப் பூட்டிட்டு வாரேன்.”
“பூட்டெல்லாம் வேணாம் புள்ள, இங்கனக்குள்ள தானே போவறோம். கதவை வெறுமனே அடைச்சுட்டு வா.”
இசக்கி, தான் வரைந்து கொண்டிருந்த ஓவியத்தைப் புத்தகத்தின் அடியில் வைத்து, அது காற்றில் பறக்காமல் இருக்கும் அளவுக்குப் பத்திரப்படுத்தினாள். வீட்டுக் கதவை வெறுமனே சாத்தி தாழ்ப்பாழ் போட்டுவிட்டு, உற்சாகமாக செந்திலின் சைக்கிளில் தொற்றிக் கொண்டாள். தோட்டத்துப் பக்கம் இருக்கும் பெரிய மைதானத்தில் ஓடிப் பயிற்சி பெறப்போகும் நொடிகள் அவள் மனத்தில் சிறகடித்துப் பறந்தன.
செந்திலின் சைக்கிள் தோட்டத்து மைதானம் வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த அவன் நண்பர்கள் நான்கு பேர் அவனோடு சேர்ந்து கொண்டனர். சைக்கிளில் இருந்து இறங்கிய இசக்கி, மைதானத்தில் குதித்தபடியே ஓடினாள்.
சைக்கிளை ஓரம்கட்டி நிறுத்திய ஐந்து பேரும், அடுத்த பத்தாவது நிமிடத்தில் இசக்கியைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த தோட்டத்திற்குள் ஓடினார்கள்.
“மாமா, என்னைய விட்ருங்க. வலிக்குது மாமா. நான் வீட்டுக்குப் போறேன், என்னைய விட்ருங்க. நான் நெறைய படிக்கணும், ஓட்டப்பந்தயத்துல எல்லாம் கலந்துக்கணும், என்னைய விடுங்க. வலிக்குது மாமா....”
அதன்பின் இசக்கியின் குரல் அடங்கிப்போனது. எக்காளமிட்டுச் சிரிக்கும் அந்த ஐந்து பாதகர்களின் குரல் மட்டும் காற்றில் மிதந்து வந்தது.
மதியம் பொன்னம்மா வீட்டை எட்டிப் பார்த்த கோமதியக்கா, இசக்கியைத் தேடத் துவங்கினார். அக்கம்பக்கம் எல்லா வீடுகளிலும் அவர் தேடி முடிக்கும்போது, பொன்னம்மாவும் கதிரேசனும் சந்தோஷக் கனவுகளோடு வந்து சேர்ந்தார்கள். பொன்னம்மாவின் கையில் இசக்கி வாங்கிய பரிசுக் கோப்பையும், கதிரேசனின் கையில் அழகான சின்ன சைக்கிளும் இருந்தது.
இசக்கி வைத்துவிட்டுப் போன பாதி வரைந்த ஓவியம் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. ஆனால் கள்ளமில்லாத அந்தப் பிஞ்சின் கனவுகள் புதருக்குள் வீசப்பட்ட ஒரு சாக்குப் பைக்குள் உயிரற்றுக் கிடந்தது.
ஸ்ரீவித்யா பசுபதி
சென்னை
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்