logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

பென்ஸ் பிரான்சிஸ்

சிறுகதை வரிசை எண் # 34


வேர்கள் ************ தேங்காப்பட்டணம் கடலோர கிராமத்தின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் அந்தோணியம்மாள். மகன் துபாயில் வேலை பார்த்து குடும்பத்துடன் இருப்பதால் கடற்கரை ஓர தனி வீட்டில் அலைகளோடு பேசுவதும் ஆலயம் செல்வதும் அன்றாட வாடிக்கை. தவக் காலம் சாம்பல் புதனில் ஆரம்பமானது. ஆலயத்தில் முதன்மைக்குரு, “இந்த தவக்காலத்தில் நாம் நம்முடைய உடலையும் ஆன்மாவையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு சந்தி நாட்களில் ஒருவேளை உணவு என்ற விரதத்தையும் கடைபிடிக்க வேண்டும். நமது அயலானையும் மன்னிக்க வேண்டும்” பிரசங்கித்துக் கொண்டு கொண்டிருந்தார். அந்தோணியம்மாவும் பிரசங்கத்தை கேட்டு ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தார் ஆலய வாயிலில். ஆலயம் விட்டு வீட்டுக்கு வந்ததும், பக்கத்து வீட்டு ஆயிசாம்மா வீட்டு தென்னை ஓலை தனது காம்பவுண்டுக்கு விழுந்து கிடந்ததை பார்த்து, “ ஏ கும்பாரி உன்னோட தெங்கம் ஓலை, பாளை யெல்லாம், இங்க வந்து கிடக்குது. நான் என்ன செய்ய? எத்தனை தடவ தான் தூத்தூ வாருறது” என்றாள். ஆயிசாம்மாவோ, “ நானா போடுறேன், தானா காத்துல பறந்து வருது. வேணுமெங்கி பழைய மீன் வலய காம்பவண்ட் சுவரை மேல கெட்டி தடுத்துக்க” சிரித்தாள். அந்தோணியம்மாவுக்கு கோபம் தலைக்கேறியது.” பெண்ணே இது தவக்காலமாக்கும், இல்லெங்கி உன் வாய கிழிச்சிருப்பேன் “ “ஓ பின்னே ஏங்கை புளியங்காய் பறிக்க இல்ல போவும்” பதிலுக்கு கத்தினாள் ஆயிசாம்மா. ஆயிசாம்மா, பேரன் இர்ஃபான் அழைக்கவும் சென்று விட்டாள். இன்றைய சண்டை இத்தோடு முடிந்து. ஆயிசாம்மா வீட்டு மரங்கள் கிளைகள் யாவும் அந்தோணியம்மா வீட்டு காம்பவண்ட் சுவரை எட்டிப் பார்ப்பதும், உரசுவதுமாகத்தான் இருந்தன. மறுநாள் காலை, அந்தோணியம்மாள் தன் தன் காம்பவுண்ட் சுவரில் எட்டி பார்த்த எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஆயிசாம்மாவின் வீட்டு கொய்யா மரத்தின் இலைகளை வெட்டிக் கொண்டிருந்தாள். ஆயிஷாம்மா உடனே ஓடி வந்து, “எம்புட்டு பிஞ்சு பேரிக்காய் கிடக்குது. அத போய் வெட்டுறியே நீ விளங்குவியா” கத்தினாள். “ஓ இம்புட்டு பேரிக்காய் வித்து நீ பெரிய துபாய விலைக்கு வாங்குவ, போறியா! என் மவன் மட்டும் பேர்சியாலயிரந்து வரட்டும் ஏழடி உயர காம்பவுண்ட் கட்டி , உன் வீட்டை பார்க்காதபடி செய்யுறேன். இந்த நோம்பு காலம் முடியட்டும் என் வாயிலிருந்து நீ கேட்க போற” சண்டை நீண்டு கொண்டே இருந்தது. சில காலம் முன்பு வரை ஆயிஷாம்மா அந்தோணியம்மா குடும்பங்கள் அன்போடு இருந்ததுதான் கிறிஸ்மஸ் காலங்களில் கேக்குகளையும் மற்றும் ரமலான் மாதத்தில் பிரியாணியும் நோன்பு கஞ்சியும் பண்டமாற்றிக் கொண்டிருந்தவர்கள் தான் இரு குடும்பங்களும். உயிர்ப்பு பண்டிகையை கொண்டாட அந்தோனியம்மாவின் மகன் குடும்பம் துபாயிலிருந்து வந்திருந்தனர். அந்தோணி அம்மா மகனிடம், “ ஏம்பில டார்வின் இந்த பக்கத்து வீட்டு ஆயிஷா ரொம்ப துள்ளுறா, அவ வீட்டு மரத்துல கிளை எல்லாம் நம்ம வீட்டுல வந்து கிடக்கு, நமக்கு இந்த இடத்தில் உள்ள காம்பவுண்ட ரொம்ப கொஞ்சம் உயர்த்தி கட்டணும். அவளுக்கு முகத்திலேயே முழிக்க கூடாது” டார்வின் “ ஏம்மா உனக்கு வேற வேலையே கிடையாதா? பக்கத்துல நாங்க இல்லாதப்ப உனக்கு உதவியா இருக்கிறது அவங்க மட்டும் தான். அவங்க கூட இப்போ சண்டை போடுறீயே” “லேய் நாய்ன் சொல்லுவதை கேப்பியா? கேக்க மாட்டியா?” “ஐயோ இந்த அம்மைக்கு கூட ஒரு ஒரே செறையா இருக்கு. நீ இனி இங்க இருக்க வேண்டாம் எங்க கூட துபாய்க்கு வந்துரு” ஒரு சண்டையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் வீட்ட பாக்குறதுக்கு ஒரு ஆளை நான் போடுறேன்” “நான் இந்த இடத்தை விட்டு ஒரு இடத்துக்கும் வரமாட்டேன் நான் இஞ்ச கிடந்து தான் சாவுவேனேத் தவிர அங்க அந்த பாலைவனத்தில் வந்து சாவுக்கா” “ அம்மா கொஞ்சம் பொறுத்துக்கமா மார்த்தாண்டம் பக்கத்துல பத்து சென்ட் ஒன்னு கிடைக்குது. அதை வாங்கி போட்டு இருக்கேன். அங்கு ஒரு வீடு கட்டி உன்ன வைக்கிறேன். அங்கு ஒரு பிரச்சனையும் வராது” “நான் எனக்க மாப்பிளை வாழ்ந்த இந்த இடத்தை விட்டு நான் எங்கேயும் வர மாட்டேன்” “பின்ன என்னத்தடி நான் செய்ய” “நீ ஒண்ணுஞ் செய்ய வேண்டாம். நைட்டு ஈஸ்ட்டர் பூசை சர்ச்ல இருக்கு. அதுக்கு கும்பத்தோட ரெடியாயிட்டு வா. போ அந்தால இப்ப” இப்படியே நீண்டு கொண்டிருந்தது உரையாடல். இரவு ஈஸ்டர் பூசைக்கு, செல்வதற்கு அந்தோணியம்மாள் குடும்பம் தயாராகிக் கொண்டிருந்தது. அந்தோணியம்மாளின் பேரனும் டார்வின் மகனுமாகிய பேட்டரிக் சின்னப் பையன் காம்பவுண்ட் சுவர் ஓரம் ஒரு சிறிய வாளியில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அந்தோணியம்மாள் பேரனிடம், “ செல்லமோனே என்னல பண்ணிட்டு இருக்க? சுவற்றில் போய் தண்ணி விட்டு இருக்க? பேட்ரிக் பாட்டியிடம், “ எங்க சயின்ஸ் டீச்சர் சொன்னாங்க மரங்களுக்கு தண்ணி ரொம்ப முக்கியம். நீங்க கிளைகளை வெட்டிட்டு விட்டீங்க .ஆனா அதுக்கு தாகம் எடுக்குமே, தண்ணி தேவைப்படுமே காம்பவுண்டுக்கு அந்த பக்கம் இருந்தாலும் அந்த மரத்தோட வேரு நம்ம வீட்டுக்குள்ள தான் இருக்கும். அதனாலதான் நான் இங்க தண்ணி ஊத்துறேன். போன வாட்டி வரும்போது எத்தனை கொய்யாப்பழம் சாப்பிட்டேன் தெரியுமா? ஆயிசாப்பாட்டி கொடுத்தாங்களே! இந்த வாட்டி கொய்யாப்பழமும் இல்ல உங்க பாஷயில பேரிக்காய் பழமும் இல்லை. அதனாலதான் நான் தண்ணி ஊத்துறேன்” அந்தோணியம்மாவில் மனதில் ஏதோ குடைந்து கொண்டிருந்தது. ஈஸ்டர் பூசையில் பங்குத்தந்தை விட்டுக் கொடுத்தல் பகிர்தல் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தார். தவக்காலம் ஈஸ்டர் பண்டிகையில் நிறைவானது. மறுநாள் அந்தோணியம்மாள் தன் வீட்டில் செய்த ஈஸ்டர் பலகாரங்களை எடுத்துக் கொண்டு ஆயிஷாம்மா வீட்டுக்குள் சென்று கொண்டிருந்தாள். பென்ஸ் பிரான்சிஸ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.