தமிழன் இளையா
சிறுகதை வரிசை எண்
# 31
ஹைனூன் பீவி நினைவு
சிறுகதை போட்டி 2024
🍁
*லெக்கீன்ஸ் டாப்ஸ்*
*************************
அதிகாலை குளிர்காற்று உடலை
ஊடுருவி பொன்னம்மாவை என்னவோ
செய்கிறது .
வேக வேகமாக நடை போடுகிறாள் ...
எப்போதும் காலை 8 மணிக்கே
ஆச்சாரியார் வீட்டுக்கு சென்றடைபவள்,
இன்று 1 மணி நேரம் தாமதம்.
ஆச்சாரியார் ஒரு கண்டிசனான பேர்வழி.
கண்களில் விட்டு ஆட்டவேண்டியே தன் விரலை அமிலத்தில் தோய்த்து வைத்திருப்பவர்.
பொன்னம்மாவுக்கு ஆச்சாரியார் வீட்டில் பாத்திரம் மற்றும் துணி துவைக்கும் வேலை...
பொன்னம்மாவைப்பொருத்த மட்டில்
ஆச்சாரியாரின் மனைவி நீலவேணி அவரைப்போலல்ல...
சற்று நல்லமாதிரியாய் நடக்கக்கூடியவள்...
ஆச்சாரியார் அடிக்கடி
பொன்னம்மாவை திட்டும் போதெல்லாம் அவளுக்காய் முட்டுக் கொடுத்து பேசியே
தன் பிம்பத்தை கருணைப்படுத்தி வைத்திருப்பவள்...
பொன்னம்மாளுக்கு ஒரேயொரு மகள்.
பெயர் பத்மா, பத்தாம் வகுப்பு
படித்துக்கொண்டிருக்கிறாள்.
பொன்னம்மாவின் கணவனோ குடித்து
குடித்தே அல்பாயுஸில் போய் சேர்ந்து
விட்டான்...
ஆகவேதான் வீட்டு வாடகை,
படிப்புச் செலவு, மற்ற அனைத்தும்
பொன்னம்மா தலையில் விடிந்து
விட்டது ...
தனியார் பள்ளிக் கூடத்தில்
குப்பைக் கொட்டும் அளவுக்கு
வசதி இல்லாததால் பத்மா தொடர்ந்து அரசுப்பள்ளியில்தான் படித்துக்கொண்டிருக்கிறாள்.
வீட்டு வேலை செய்பவர்கள் என்றாலே, பாவப்பட்டவர்கள் என்று அர்த்தம்.
எவ்வளவுதான் துணிகளை நன்றாக துவைத்தாலும், கழுதைகள் போல்
வேலைகளை சுமந்தாலும், அவர்களைப் பாராட்ட மனமின்றியே காலம் தள்ளும் முதலாளிகள் வர்க்கங்கள்.
பொன்னம்மா ஓர் அன்றாடங்காய்ச்சி...
யார் என்ன வேலை சொன்னாலும், அதை
முக மலர்ச்சியோடு மனம் உவந்து
செய்துக் கொடுக்கும் தன்மை கொண்டவள்.
முடிந்தவரை தன்னிடம் ஒப்படைத்த பணியை சிறப்பாக செய்து கொடுக்கும் பழக்கம் அவளுடையதென்றாலும்...
இந்த முதலாளி வர்க்கங்கள்
கழுகுக் கண் உடையவர்களாகவும் ,
எதையும் திரித்து கூடுதல் குறை
சொல்பவர்களகவும் இருக்கிறார்கள்
என்பதே வேதனையான விசயம்தான் ....
பொன்னம்மா போன்றவர்கள்
அப்பிராணிகள். முதலாளிகள் வலிந்து
ஏசும் திட்டுக்களை தன் இதய வங்கியில் சேமித்து சேமித்தே சுயமிழந்து போனவர்கள்....
பொன்னம்மா மகளான பத்மாவிடம்
நல்ல உடுப்பு என எண்ணிப் பார்த்தால் இரண்டே இரண்டுதான் தேறும்...
மகளின் நீண்ட நாள் ஆசை,
லெக்கின்ஸ், டாப்ஸ் போட்டு
மற்ற பெண்களைப்போல் தானும் ஊரை
பகட்டாக வலம் வரவேண்டும் என்பதே...
மகளின் அந்த ஓர் ஆசைக்கு மட்டும்தான் இதுவரை தடை போட்டு வந்திருக்கிறாள். பொன்னம்மா.
லெக்கீன்ஸ் டாப்ஸ் அணிவதை
மேற்கத்திய கலாச்சாரமாய்
எண்ணக்கூடியவள் அவள்...
வீட்டு வேலை செய்பவர்கள் பெரும்பாலும்
இழி ஜென்மங்களாய்தான்
கருதப்படுகிறார்கள்...மற்ற கூலி வேலை செய்பவர்களுக்குக் கூட ஒரு பக்க இடிதான்.
ஆனால் பொன்னம்மா போலானவர்கள்
மத்தளம் போன்றவர்கள் என்பதால்,
இரண்டு பக்க இடி...
இப்போது பொன்னம்மா ஆச்சாரியார் வீட்டை அடைகிறாள் .
உள்ளே நுழைந்தவுடன் வழக்கம்போலவே ஆச்சாரியார் தன் ரப்பர் வாயை திறந்து அர்ச்சனையை தொடங்குகிறார்....
"அங்கேயே நில்லு ...என்ன
நெனச்சிருக்க உன் மனசுல?
கடந்த ஒரு மாசமா சரியான முறையில்
பணிக்கு வர்றதில்ல . அதே சமயம்
டயத்துக்கும் நீ வர்றதில்ல...
எந்த வேலையையும் சுத்தமா செய்றதில்ல...
நேத்து நீ துவைச்ச துணிகள்ல அவ்வளவு
அழுக்கு தெரியுமா?
நீ கழுவுன பாத்திரத்த நீயே போய்
தொட்டுப்பாரு எத்தனை வளவளப்பா இருக்குன்னு உனக்கே புரிய வரும் ...
எனக்கு வர்ற கோவத்துக்கு
உன்ன உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்
உன் நல்ல காலம் நான் சாமிக்கு மால
போட்டிருக்கேன்..."
பாலம் பாலமாய் ஆச்சாரியாரின் வாயிலிருந்து வார்த்தைகள்
இறங்கிக்கொண்டிருந்தன...
இதுக்கு மேலும் பேச விட்டால்
பிரச்சனை பெரிதாகிப் போகும்
என்றுணர்ந்த ஆச்சாரியாரின் மனைவி நீலவேணி , இடை மறித்து பொன்னம்மாவை மீட்டு சமையற்கட்டுக்குள் அழைத்துச் செல்கிறாள்...
"வருத்தப்படாதே பொன்னம்மா...
இது என்ன புதுசா? எப்பவும் நடக்குறது தானே?
அவர் ஒரு ஃபிரஸ்ஸர் பேசண்ட் . அவருக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்"
"ஐயய்யோ பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்கம்மா...
நீங்க எனக்கு சோறு போடுற தெய்வம்.
இதுல வருத்தப்படுறதுக்கு ஒண்ணுமில்லம்மா...
எப்போதும் அவர் எங்களோட சாதிப் பெயரை இழுத்து மிகக் கேவலமா திட்டுவார். ஆனா இன்றைக்கு அப்படியில்ல என்பதில் எனக்கு சந்தோசந்தாம்மா...
இல்லாத ஏழைங்க இந்த உலகத்தில
எதையும் சகித்துக்கொள்ள பழக்கப்பட்டவங்க... வறுமை சூழ்ந்த அவங்க வாழ்வு மிகக்
கொடுமையானது. அதை உணர்ந்துதான் எனக்கு நீங்க அணுசரணையா இருக்கீங்களே...
அது ஒன்று போதாதா?"
தன் ஆதங்கத்தை மறைத்து பேசுகிறாள் பொன்னம்மா...
" உண்மையில என்ன நீ புரிஞ்சு
வச்சிருக்கடி ... சரிடி, அந்தப் பையில
என் பொண்ணு கட்டிக் கழிச்சிப்போட்ட லெக்கீன்ஸும் , டாப்ஸும் எடுத்து வச்சிருக்கேன்... போகும்போது எடுத்துட்டுப்போயி
உன் பொண்ணு கிட்ட. கொடு சரியா?"
என நீலவேணி பேசிக்கொண்டிருக்கும்போதே
குறுக்கே புகுந்த பொன்னம்மா...
" இல்லம்மா லெக்கீன்ஸ் டாப்ஸ் விசயத்தில்
எனக்கு உடன்பாடில்ல... அத போட்டுட்டு போற
பெண்களெல்லாம் என் கண்ணுக்கு
ஆபாசமா தெரியறாங்க....
"என்னடி நீ பத்தாம் பசலியா இருக்கே...
எந்த காலத்துல எத பேசிட்டிருக்கே ?
மாடர்னா திரியற நாலு பொண்ணுங்க
மாதிரிதானே உன் பொண்ணும் இருக்க ஆசப்படுவா? பேசாம எடுத்துட்டு போவியா"
என நீலவேணி சொன்னதுதான் தாமதம்
உடனே ஆச்சாரியார் குறுக்கே பாய்ந்து....
"என்ன நீலவேணி இது புது பழக்கமா இருக்கு? அத தூக்கி குப்பையில போடு...
அதெல்லாம் நம்மள மாதிரி பெரிய அந்தஸ்த்து
கொண்டவங்க கட்டுறது. புதுசா எதையும்
பழக்கப்படுத்தாத ... அப்புறம் அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
உடனே நீலவேணி...
"ஏங்க அவங்களும் மனுசந்தாங்க , இப்படி படார், படாரென்று பேசாதீங்க...
முதல்ல நீங்க ரூமுக்குள்ள போங்க"
என்று கணவரை விரட்டியடிக்கிறாள்...
அதற்குப்பிறகு வழக்கம்
போலவே எல்லாவற்றையும் மறந்து,
வீட்டு வேலையில் மூழ்க ஆரம்பிக்கிறாள்
பொன்னம்மாள்...
முதல் வேலையாக , கிச்சனில்
சிதறிக்கிடந்த பாத்திரங்களை
ஒவ்வொன்றாக எடுத்து சீராக அடுக்கி
வாஸ் பேசனில் போட்டு தண்ணீர்
உள் வாங்கும் குழியை சிறு துணியைக்
கொண்டு அடைத்து தண்ணீரை நிரப்பி
அதற்குள் சோப்புத்தூளை கொட்டி ஊற வைக்கிறாள்...
பிறகு , வீட்டிலிருந்த ஒதுக்குப்புறமான
ரூமுக்குள் நுழைந்து அழுக்குத்துணிகளை
கட்டி வைத்திருந்த மூட்டையை பிரித்து
துணிகளை அள்ளி வந்து குளியல்
அறைக்குள் தண்ணீர் நிறைந்திருந்த
அலுமினிய அண்டாவுக்குள் போட்டு முக்கி
நனைத்த பிறகு , ஒவ்வொன்றாக எடுத்து
அங்கிருந்த கல் திண்டில் வைத்து சோப்பு
போட்டு , பிரஸ்ஸைக் கொண்டு துணிகளை
மாங்கு மாங்கென தேய்த்து கும்மி துவைக்க ஆரம்பிக்கிறாள் ...
இந்த உலகம் வலுத்தவர்களை அள்ளி
வச்சியும், இளைத்தவர்களை
கொள்ளி வச்சியும்தான் பார்க்கிறது .
பிறரை ஆளவும் ஏமாற்றவும்தான் சாதி, மத பிரிவினைகளை இந்த கர்வப் பித்து கொண்ட
ஜென்மங்கள் உண்டாக்கிற்று...
அதே சாதி,மதம் இப்போது அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களை ஆண்டு கொண்டும் ஏமாற்றிக்கொண்டும் திரிகிறது...
இதை பெரும்பாலான மனிதர்கள் உணர்வதுமில்லை , ஒத்துக்கொள்வதுமில்லை.
ஆச்சாரியாரை இப்படி பேசவைப்பது
வேறு யாருமல்ல, நீலவேணியும்
அந்த சாதியும்தான்...
'நான் தொட்டிலை ஆட்டிவிடுகிறேன்,
நீ பிள்ளையை கிள்ளிவிடு'
என்ற கதைதான். இருவருக்கும் இடையில்
ஒப்பந்தமே அதுதான்...
இப்போது , ஒட்டுமொத்த வேலையையும்
முடித்து வெளியேறிய பொன்னம்மா ,
நீலவேணி கொடுத்த லெக்கின்ஸ், டாப்ஸை எடுக்க மறந்து விட்ட காரணத்தால் மீண்டும்
முதலாளி வீட்டுக்கு திரும்பி வர நேர்கிறது ...
அப்போது ஆச்சாரியாரும், நீலவேணியும் பரஸ்பரம் பேசிக்கொண்டிருந்த விசயம்
பொன்னம்மாவின் காதில் விழுகிறது ....
"ஏங்க அந்த சாதி கெட்ட நாதாரிக்காக உங்களை எதிர்த்து பேசியது நடிப்புதான்
என்றாலும், மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சுங்க...
தொடர்ந்து நீங்க பேசறத பேசுங்க...
நான் அவளை சமாதானம் செய்யிற மாதிரி
பாவ்லா பன்றேன்... இல்லேன்னா அவளுக்கு
கொழுப்பு கூடிப்போயிரும்.
வெளியில போய் பாருங்க வீட்டு வேலைக்கு கூலியா மாதம் ஐந்தாயிரம் போய்ட்டிருக்கு...
நாம வெறும் மூவாயிரம்தான் கொடுக்கறோம். அவள் மீதான என் அக்கரை அரவணைப்பை வச்சுதான் நான் அவளை கட்டிப்போட்டு
வச்சிருக்கேன்...
நமக்காக கணவனை எப்படியெல்லாம்
எதிர்த்துப் பேசறாங்க நீலவேணியம்மான்னு
அவள் நினைக்கிற வரைக்கும்தான் நமக்கு
அவள் துரோகம் செய்ய மாட்டா...
அப்பதான் அவள அடி மாடா நம்ம வீட்டிலேயே
நாம வச்சிக்க முடியும் புரியுதா?
இதை கேட்டவுடன் பொன்னம்மாவுக்கு தலையே சுற்றி விடுகிறது ...
என்ன மனிதர்கள் இவர்கள்?
ஏழை என்றால் இவர்களுக்கு அவ்வளவு
இளப்பமா? எந்த விசயத்தையும்
லாப நோக்கோடுதான் பார்ப்பார்களா?
இறைவன் படைத்த படைப்புகளிலேயே
மிக மோசமான மற்றும் கேவலமான
படைப்பு மனிதப் படைப்புதான் என
இப்போது அவளுக்கு புரிய வருகிறது ...
வாசலில் இருந்து கணைத்துக்கொண்டே
உள்ளே நுழைகிறாள் பொன்னம்மாள்.
அந்த நிமிடம் தடுமாறிய நீல வேணி...
"எ ... என்ன பொன்னம்மா? இன்னும்
நீ போகலயா?"
" இல்லம்மா ... நீங்க கொடுத்த
லெக்கீன்ஸயும் , டாப்ஸயும் மறந்து
விட்டுட்டு போயிட்டேன்"
என்றவாறே கட்டி வைத்திருந்த அந்த
பையை எடுத்துக்கொண்டு வெளியேறி
போகிற போக்கில் எதிர் பட்ட
கூவ ஆற்றுக்குள் அதை வீசி எறிகிறாள்.
அந்நிமிடமே அருகிலிருந்த
துணிக்கடையொன்றின் உள்ளே
நுழைகிறாள் பொன்னம்மாள்....
தன் மகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் லெக்கீன்ஸ் , டாப்ஸ் வாங்குமந்த புதிதான எண்ணத்தோடு!
-- தமிழன் இளையா
திரைப்பட இயக்குனர்
38 நடுத்தெரு
முத்துப்பேட்டை
திருவாரூர் மாவட்டம்
பின்: 614704
பேச : 8883377707
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்