logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

இத்ரீஸ் யாக்கூப்

சிறுகதை வரிசை எண் # 30


சிறுகதை / பாலுவின் ட்ரவுசர் / இத்ரீஸ் யாக்கூப் லோடிலிருந்த வாழைத்தார்களையெல்லாம் மண்டியில் தள்ளிவிட்டு, குமாருடைய கடலைக்கடை பக்கம் எப்போதும் போல கடலைச்சுருளைக் கொறித்தபடி அவனோடுப் பேசிக்கிக்கொண்டிருந்தேன். ராஜேஷிடமிருந்து அழைப்பு வந்தது. "டேய், பாலு வந்திருக்கான்டா!" ஏக உற்சாகத்தோடு சொல்லவே, ஒரு நொடி எந்த பாலுவை.. என்று ஒரு கணம் யோசித்துக்கொண்டிருப்போதே விளங்கிவிட்டது! "பாம்பே பாலுவாடா?" குமாருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். வந்திருக்கானா? வந்திருக்கானா? அவனும் பின்னாலிருந்து ஆவலுடன் கேட்க ஆரம்பித்தான். "ஆமாடா! எங்க வீட்லதான் இப்ப இருக்கானாம், நான் போறேன் நீ வர்றியா?" எனக்கும் உடனே அவனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. பைக்கை நிறுத்தியதை கூட மறந்துவிட்டு, கடைத்தெருவிலிருந்து ஓட்டமும் நடையுமா ஓட ஆரம்பித்தேன். தேரடியையடுத்து தெப்பக்குளத்தை நெருங்கிய போதுதான் சட்டென சில ஞாபகங்கள் வந்து, என்னை கொஞ்சம் நிதானிக்க வைத்தன. அவைகள் காலுக்கு கட்டுபோடுவது போல் தெரிந்தாலும் , அந்த கட்டுகளை அவிழ்த்தெறிந்துவிட்டு மறுபடியும் ஓட்டமும் நடையுமாக ராஜேஷ் வீட்டுப்பக்கம் செல்ல, பாலு மீது நான் வைத்திருந்த ஏதோ ஒன்று என்னை 'போ, போய் பார்!' என்று விரட்டியது. அதை நட்பு, அதிநட்பு என்று கூட வகைப்படுத்தலாம். அதையும் மீறி பாரம்பரியம் மிக்க குடும்பத்துப் பிள்ளைகளைக் கண்டால், நம்மை அறியாமலே ஒரு பிரியமும் பாசமும் அபிமானமும் தொற்றிக் கொள்ளுமே அப்படியும் கூட வைத்துக் கொள்ளலாம். பாலு, மகாலிங்கம் அய்யா - காமாட்சி ஆச்சியோட மகள் வழி பேரன். அய்யாவோட வீடு கும்பகோணம் பக்கம் எங்க ஊரில் இருந்தாலும், பார்க்க காரைக்குடி அமைப்பில்தான் கட்டப்பட்டிருக்கும். இப்போது இப்படி வர்ணிக்கிறேன் என்றாலும் அந்த பன்னிரெண்டு வயதில் காரைக்குடியெல்லாம் எப்படி இருக்குமென்றேத் தெரியாது. ஒரு முறை ஸ்கூல் டூருக்காக தஞ்சாவூர் பெரியக்கோயில் வரை என்னை அம்மா அனுப்பி வைத்ததே அன்று பெரிய விசயம். அந்த காலக்கட்டத்தில்தான் பாலு எனக்கு பழக்கம். பெரிய வீட்டு பிள்ளையாயிற்றே அதனால் அப்படிச் சொல்லிக் கொண்டு சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அவன் மனதில் எப்படி பதிந்திருந்தேன் எனத் தெரியவில்லை. வருடங்கள் ஓடிவிட்டன, வாழ்க்கையில் எத்தனையோ பேரை சந்தித்திருப்போம், அனுபவங்களை, புரிதல்களைக் கற்றிருப்போம். அவனும் எல்லாவற்றையும் இந்நேரம் பார்த்திருப்பான். வயதுதான் இந்நேரம் முப்பதைத் தாண்டியிருக்குமே! ஆனால் நான் இப்போது பேசுபவன் போல அப்போது கிடையாது. விளையாட்டுத்தனங்கள் அதிகம். அதில் திருடும் பழக்கமும் அடங்கும். நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, பாலு ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். அதனால் அப்போது பள்ளிக் கூடத்தில் நான் செய்யும் சின்னச் சின்ன திருட்டுத்தனங்கள் அவனுக்குத் தெரியாது. ஆனால் டியூசன் ஒன்றாக படித்தோம். டியூசன் ஃபீஸ் கொடுக்க அம்மாவிடம் காசு இருக்காதுதான். அப்பாவும் விட்டுவிட்டு ஓடிப்போனதால் என்னையும் அண்ணனையும் வைத்துக் கொண்டு அவள் கஷ்டப்பட்ட போதிலும், என்னை நன்றாக படிக்க வைக்க நினைத்தாள். வயல்வெளிக்கு வேலைக்கு போய்தான் எங்களுக்கு அன்றாடம் கஞ்சி ஊற்றினாள். அண்ணனுக்கு படிப்பு வரவில்லை என்பதால், அவனே டிரைவராக போகிறேன் என்று அப்போது ஒவ்வொரு இடமாக அலைந்துக் கொண்டிருந்தான். பாலு ஐந்தாம் வகுப்பு வரை, காரைக்குடியில் படித்துவிட்டு, அப்புறம் தனது அம்மா வழி தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான். அதனால் எங்கள் மத்தியில் அவன் வருகையே மார்கழி வெயில் போல தனித்துக் காட்டியது. வந்த புதிதிலும் சரி, பிறகும் சரி பையனாக இருந்தாலும், அப்போது நிர்மா சோப் விளம்பரத்தில் வரும் அந்த சிறுமியைப் போல் அவனைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் பொங்குவது போலவேத் தோன்றும். சங்கரி அக்காவிடம் டியூசன் படித்துக் கொண்டு இருக்கும்போதுதான், ராஜேஷ் உட்பட எல்லோரும் அவனிடம் "சண்முகம் திருடுவான், பென்சில், பேனா, ரப்பரெல்லாம் பத்திரமா வைத்துக் கொள்!" என்று என்னைப் பற்றி போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். முதலில் என்னிடமும் மற்றவர்களிடம் போல பழகி வந்தவன், பிறகு சற்று விலகிப் போனதை நானும் உணர ஆரம்பித்தேன். முதலில் வேண்டுமென்றெல்லாம் திருட ஆரம்பிக்கவில்லை. அம்மாவால் நான் கேட்கும் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்க முடியாது. ஏன் சங்கரி அக்காவிற்கும் கூட பியூஷன் ஃபீஸ் அவளால் கொடுக்க முடியவில்லை, பின்னர் அக்காதான் பரவாயில்லை சண்முகம் சும்மாவே வந்து படித்துக் கொள்ளட்டும் என்று சேர்த்துக் கொண்டாள். அக்காவிற்கும் என் திருட்டுப் பழக்கம் தெரியும். ஆனால் அதைப்பற்றி என்றைக்கும் விசாரித்துக் கொண்டதில்லை. என்னால் அவளுக்கு பிரச்சனைகள் ஏதும் வராமல் போனதும் காரணமாக இருக்கலாம். தைப்பூசம் வந்துவிட்டால் எங்கள் ஊரே களைக்கட்டத் தொடங்கிவிடும். ஒரு நாள் நானும் ராஜேஷும் விளையாடுவதற்காக அவனைத் தேடி மகா லிங்கம் அய்யா வீட்டிற்குச் சென்றிருந்தோம். அப்போது எங்கிருந்தோ வந்த பார்சல் ஒன்றைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். அவனது பெற்றோர்கள் பாம்பேயிலேர்ந்து ட்ரெஸ் ஷூவெல்லாம் அனுப்பி வைத்திருந்தார்களாம். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது விளங்கிக் கொண்டேன். அதையெல்லாம் கேட்கவும் பார்க்கவும் எனக்கு ஏக்கமாக இருந்தாலும், எல்லோருக்கும் விதியென்று ஒன்று இருக்கிறதே! அவன் பெற்றோர்கள் அங்கே பேங்கில் வேலை செய்கிறார்களாம். என் நிலைமையைத்தான் முன்பே சொல்லிவிட்டேனே! "தைப்பூசத்திற்கு இந்த ட்ரெஸைதான் போடப்போறேன்" என்று ஒரு டி சட்டையையும் ட்ராயரையும் எடுத்துக் காட்டி, 'ஹை! ஹை!' என ஆட்டினான். "கொண்டு போய் உள்ளே வை பாலு..!" என்று அவனது பாட்டி அதட்டினார். மஞ்சள் நிற நிறத்தில் பொசுப்பொசுவென ஏதோ சூதலுக்கு போடும் ஸ்வெட்டர் போல அந்த சட்டைக் காணப்பட்டது. அஞ்சலி படத்தில் கூட இப்படி ஒரு சட்டையைப் பார்த்திருக்கிறேன். அப்புறம் அந்த கருப்பு டிராயரில் பிரவுன் மற்றும் சாம்பல் கலரில் ரொம்ப மெல்லிசாக செங்குத்தாக கோடுகள் போட்டிருந்தது, பார்க்க வித்தியாசமாக தெரிந்தது! ரேமெண்ட் துணி என்றுப் பேசிக் கொண்டார்கள். பக்கத்தில் வீடுகள் இருந்ததால் நான், அவன், ராஜேஷ், மதுப்பிரியா, அனிதா என்று எல்லோரும் தைப்பூசம் காலையிலேயே பெருமாள் கோயிலுக்குள் சென்று ஓடித் திரிந்துக் கொண்டிருந்தோம். எப்போதுமே அப்படி சென்று அவ்வப்போது ஒளிந்து விளையாடுவோம் என்றாலும் அன்று எல்லோருமே புது ட்ரெஸாக பொங்கல் ட்ரெஸை மறுபடியும் போட்டிருந்தார்கள், பாலுவைத் தவிர. என்னிடம் தீபாவளி ட்ரெஸ் மட்டுமே இருந்தது. அதையும் அம்மா பெட்டியிருந்து எடுத்துக் கொடுக்க மறுத்து விட்டாள். நான் சாதாரண உடையில்தான் சென்றேன். ஒருவேளை அதைத்தான் அம்மா அடுத்த தீபாவளிக்கும் போடச் சொல்வாளோ என நினைத்துக் கொண்டேன். ஆனால் பாலு சொன்னது போலவே அவனோட அப்பா அம்மா அனுப்பியிருந்த புது ட்ரெஸில் வந்திருந்தான். என்னுடைய ஆசையெல்லாம் அந்த ட்ரெஸை தொட்டாவதுப் பார்த்து விட வேண்டும் என்பதுதான். ஒளிந்து விளையாட தொடங்கினோம். அன்று கருட ஊர்வலம். கருடனை பிரகாரத்தில் வைத்து, தயார் செய்துக் கொண்டிருந்தனர். மண்டபத்தில் மற்ற வாகனங்கள் இருக்க, நானும் பாலுவும் ஆதிசேஷ விமானத்தின் பக்கம் போய் ஒளிந்து கொண்டோம். என்னை அவ்வளவாக பிடிக்காது என்றாலும், ஏதோ பாம்பு பிடிக்குள் சிக்கிக் கொண்டதை போல, ஆதிசேஷ விமானத்தைப் பார்த்து, அவன் பயந்து பயந்து என்னை, இறுகப் பற்றிக் கொண்டான். அப்போதுதான் நானும் அவன் உடைகளைத் தொட்டுப் பார்த்தேன். என்னுடையதை போல மடமடப்பாகவோ, நைந்துப் போயோ இருக்கவில்லை. அந்த சட்டை சரி, ட்ரவுசர் கூட இவ்வளவு சில்க் போல இருக்குமா என வியந்தேன். அண்ணாந்துப் பார்க்க பாம்பின் தலைகள் அனைத்தும் கொத்த வருவது போல், எனக்கும் கூட பயமாக இருந்தது. அப்புறம் இருவரும் அதிலிருந்து குதித்து வந்து, சொர்க்க வாசம் பக்கம் சென்றுவிட்டோம். எங்களுக்காகவே காத்திருந்தவள் போல மதுப்பிரியாவும் பார்த்ததும் ஓடி வந்து தொட்டுவிட்டாள். அன்று இரவு சரஸ்வதி சபதமும், மாயா பஜாரும் திரைக்கட்டிப் போட்டார்கள். அந்த வெளிச்சத்தில் அவனுடைய ட்ரெஸ் இன்னும் பிரகாசமாக எனக்கு தெரிந்தது. அன்றிரவே தெப்பமும் விட்டார்கள். குளமே தீபங்களால் மிதப்பதுப் போலிருந்தது. அதைப்பார்க்க எங்கிருந்தெல்லாமோ வந்திருந்தனர். இருந்தாலும் குலசாமிதான் பெரிசு என்று அம்மா சொன்னாள். தெப்பக்குளத்திற்கும் தேரடிக்கும் வெறும் பத்தடியே என்றாலும், தேரடிக்கும் எங்க வீட்டிற்கும் இன்னொரு பத்தடி இருக்கும். அதனால் வீட்டில் பம்பு செட்டு இருந்தாலும், திருக்குளத்தில் குளிக்கும் ஜாலி போல் வராது. ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு நீந்தும் அளவிற்கு எனக்கு அப்போதெல்லாம் தெம்பும் கூட இருந்தது. அன்றைக்கும் அப்படிதான் அங்கே குளித்துக் கொண்டிருந்தேன். அதிசயமாய் பாலுவும் அங்கே வந்திறங்கினான். குளிப்பதற்கு, அதுவும் தனியாக! ஏனென்றால் அவர்கள் வீட்டில் பம்பு செட்டு, கிணறு, மோட்டார் என்று சகல வசதியும் உண்டு. அய்யாவும் ஆச்சியும் அவனை வெளியில் விடுவதே யோசித்து யோசித்துதான் அனுப்புவார்கள். அதுவும் நான் சென்றாவெல்லாம் அனுப்ப மாட்டார்கள். ராஜேஷ் போய் கூப்பிடணும். ஏனென்றால் ராஜேஷ் வீடு அவர்களுக்கு பக்கத்து வீடு, ராஜேஷ் அப்பாவும் அப்போது எல்.ஐ.சில வேலைப் பார்த்து வந்த பாலுவோட மாமா சரவணனும் ரொம்ப நெருக்கம். குளத்துப் பக்கம் வந்த பாலுவைக் கண்டதும் நான் உற்சாகமாகி, தனியா வந்திருக்கிறாயே என்றேன். மாமா பின்னால் வருகிறார் என்றான். அவனுக்கு நீச்சல் அவ்வளவாகத் தெரியாது என்பதால் படிக்கட்டிலேயே நின்று முங்கி முங்கி எழுந்துக்கொண்டிருந்தான். குளத்தில் ஆங்காங்கே பூக்களும் மாலைக்கும் மிதந்துக் கொண்டிருந்தன. நாம் போய் எடுத்து வருவோமா என்றேன். பயமாக இருக்கிறது என்று அவன் படியை விட்டு இறங்கவேயில்லை. சரவணன் மாமா வந்ததும் அவனை ஒரு குழந்தையை குளிப்பாட்டி விடுவது போல் எல்லாம் செய்துக் கொண்டிருந்தார். அவர்தான் துணிகளையும் துவைத்ததும் கூட. "எவ்வளவு நேரம்டா ஊறிட்டு இருக்க? சீக்கிரம் கரையேறிப் போடா!" மாமா என்னை சத்தப்போட்டார். எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு ஒரு அரைமணிநேரத்தில் அவர்களும் சென்றுவிட்டார்கள். மிதந்துக் கொண்டிருந்த சாமி மாலையொன்றை எடுக்க சென்றபோதுதான் கவனித்தேன், பாலுவோட அந்த புது டிரவுசர் போல ஏதோ ஒன்று குளத்தில் மிதந்துச் சென்றுக் கொண்டிருந்தது! என்னுடைய குறிக்கோள் மாறி, அதை நோக்கி நீந்திச் சென்றேன். ஆமாம் அதுவேதான்! "இப்படி விட்டுவிட்டு போய்விட்டார்களே!" அந்த டிரவுசர் ஏற்கனவே பட்டு போல இருக்கும், தண்ணீரில் பட்டதும் மேலும் அளவு குறைந்துவிட்டது போல் பிழியும்போது உணர்ந்தேன். அவர்கள் வீட்டிற்குச் சென்று கொடுக்க நினைத்துதான் அப்படிச் செய்தேன். அப்புறம் என் மனசு மாறிவிட்டது! நாமே வைத்துக் கொண்டால் என்னவென்றுத் தோன்றியது. வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டேன். ஆனால் போடத்தான் பயமாக இருந்தது, எங்கே பிடிபட்டுவிடுவோமோ என்று. அடுத்த நாள் தனது புது ட்ரவுசர் காணாமல் போய்விட்டதை அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். திரும்பவும் வந்து தேடியிருக்கிறார்கள். அதற்குள் நான் வீட்டிற்கு வந்துவிட்டிருந்தேன் போலும். அவனுடைய பேச்சு என் மீது சந்தேகம் கொள்ளாதிருந்தது போல தோன்றியது. இருந்தாலும் எப்படி போடுவது? போட்டுக்கொண்டு வீட்டிலேயேவா இருக்க முடியும்? கைக்கு வந்தும் சந்தோசப்பட முடியாமல் ஒவ்வொரு நாளும் அதை பார்த்து பார்த்து அணிந்து கொள்ள முடியாமல் தவித்தேன். ஒரு வாரம் கழித்து, எனது ஆசை தைரியமாக மாறியது. அந்த ட்ரவுசரைப் போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். அவர்கள் தெரு பக்கம் மட்டும் போவதை தவிர்த்தேன்தான். இருந்தாலும் எப்படியோ ராஜேஷோ, முருகதாஸோ கண்டுபிடித்துவிட்டு சொல்லிவிட்டார்கள் போல. அன்றும் நான் குளித்துக் கொண்டுதான் இருந்தேன், அதுவும் அந்த ட்ரவுசரைப் போட்டுக்கொண்டு. விசயத்தை அறிந்துகொண்ட சரவணன் மாமா அங்கு வந்துவிட்டார்! அடிப்பதை போல வெளியே வா என்று சத்தம் போட்டார். நான் பயந்து நடுங்கினேன். அந்த டிரவுசரைப் பார்த்துவிட்டு "திருட்டு கம்மனாட்டி அவுருடா!" எனக்கு அழுகை வந்துவிட்டது. அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் கழட்டிக் கொடுத்தேன். திருட்டு கம்மனாட்டி, திருட்டு கம்மனாட்டி இனி வீட்டு பக்கம் வந்து விடாதே! தொலைச்சுப்புவேன்! என்று வாங்கிக்கொண்டு ஆவேசமாகச் சென்றுவிட்டார். நான் அப்படியே விக்கித்து நின்றேன். வீடு பக்கம் என்பதால் மாற்று துணி முதற்கொண்டு தலைத் துவட்டும் துண்டு கூட கொண்டுச் செல்ல மாட்டேன். அதற்காகவே சளி பிடிக்கும் என்று எப்போதும் அம்மா சத்தம் போட்டுக் கொண்டிருப்பாள். அந்த பழக்கம் அன்று எதிர்பாராத விபரீதத்திலும் முடிந்துவிட்டது. எப்படி திரும்ப கரையேறுவது எனத் தெரியவில்லை. ரொம்ப நேரமாக குளத்திலேயே ஊறிக்கொண்டு இருந்தேன். உடம்பெல்லாம் குளிர ஆரம்பித்துவிட்டது! நடுங்கத் தொடங்கினேன். அதோடு அம்மாவுக்கு தெரிந்தால் கிடைக்க போகும் அடியை நினைத்தும் கலவரப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவளைத் தவிர யார் வந்து காப்பாற்றுவார்? குளிக்கச் சென்றவனைக் காணவில்லையே என தேடிக்கொண்டு அவளே வந்துவிட்டாள். அதற்கு பிறகு நான் அந்த தெரு பக்கமே சென்றதில்லை. பாலுவும் பேச மாட்டான். அவனுடைய மாமாவைதான் எங்குப் பார்த்தாலும் பயப்படுவேன். அவரும் காணும் நேரங்களில் முறைத்துக் கொண்டுதான் செல்வார். பாலு பத்தாவதோடு பாம்பைக்குச் சென்றுவிட்டான். நடுவில் அவ்வப்போது அவனைப் பற்றிய நினைவுகள் வரும். ஏன் அப்படி செய்தோமென என் மேல் எனக்கே கோபம் வரும். இதெல்லாம் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் வரைதான். அதற்கப்புறம் படிப்படியாக அப்படி ஒரு நிகழ்வு நடந்த சுவடே தெரியாத அளவிற்கு என்னுடைய வாழ்க்கையும் மாறிப்போனது. அண்ணன் இருபது வயதிலேயே கல்யாணம் செய்துகொண்டு தனியா சென்றுவிட்டான். வெளிநாட்டில் ட்ரைவர் வேலை அவனுக்கு. அம்மா என்னோடு இருக்கிறாள், எனக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. வாழைப்பழம், வாழை இலை, வெற்றிலை, பூ என கும்பகோணத்திற்கு குடவாசலுக்கும் லோடு அடித்துக் கொண்டிருக்கிறேன். முக்கியமா அதற்கப்புறம் நான் எதையும் விளையாட்டாக கூட திருடுவது கிடையாது. ஆனாலும் இன்றும் என்னை யார் பார்த்தாலும் ஏன் திருட்டு முழி முழிக்கிற? என்றுதான் கேட்கிறார்கள். இதெல்லாம் ஞாபகத்திற்கு வந்ததிலிருந்து பாலுவை போய் பார்க்கத்தான் வேண்டுமா? என்ற தயக்கம் மேலெழுந்தது. ஆனாலும் அவனை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இப்போது தாடியும் மீசையுமாய் அலைந்துக் கொண்டிருப்பது போல் அவனும் எப்படி மாறியிருக்கிறான் என்றுப் பார்க்க ஆசைப்பட்டேன். அவனோடு மீண்டும் பழகும் வாய்ப்பை பெற வேண்டும் போலிருந்தது. நான் அங்கே நுழைந்தபோது, ராசாத்தியம்மா, அதாவது ராஜேஷோட அம்மா அவனை உபசரித்துக் கொண்டிருந்தார். பார்த்து எவ்வளவு நாளாச்சு! பார்த்து எவ்வளவு நாளாச்சு! என்று அவனைப் பார்த்து பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தார். இதை சாப்பிடு அதை சாப்பிடு என்று அவனை வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவனும் தாடியும் மீசையுடன்தான் இருந்தான். ஆனால் சினிமா ஆக்டரைப் போல மிகவும் அழகாக! அவனுடைய வசீகரமும் கூடிவிட்டிருந்தது. எப்போதும் போல ட்ரெசும் டிப் டாப்தான். "யார் வந்திருக்கிறது பார்!" என்று ராஜேஷ் என்னை அவன் முன் நிறுத்திய தருணமே, "ஹே எப்படி இருக்கே?" அவன் என் கைகளைப் பற்றிக்கொண்டு அப்படி கேட்டதே போதுமென்றிருந்தது! "நல்லாருக்கேன். நீ எப்படி இருக்க?" "நல்லாருக்கேன்.. உன்னைலாம் பார்ப்பேன் நெனச்சே பார்க்கலப்பா!" நானும் அவனை பார்த்ததில் சந்தோசம் என்றேன். "அம்மா எப்படி இருக்காங்க? உங்க வீட்டுக்கு வந்ததெல்லாம் மறக்கவே முடியாதுப்பா! அதுவும் அன்னைக்கு அவங்க வச்ச பருப்பு குழம்பு இருக்கே!" அவன் வேறு யாரோ என்று நினைத்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தது போல உணர்ந்தேன். ஏனென்றால் அவன் எங்கள் வீட்டிற்கு வந்ததே இல்லை! அவங்க வீட்டு கௌரவத்திற்கு எங்கள் வீட்டில் சாப்பிடுவதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. "நான்.. நான்.. சண்முகம்.. பாலு!" என்று தயங்கி தயங்கி சொன்னேன். அவன் எந்த சண்முகம் போல பார்த்தான். அந்த தருணத்தில் வேறு எதையாவது நான் ஞாபக மூட்டிருக்கலாம். நான் டிரவுசர் மேட்டரைச் சொன்னவுடன் சட்டென அவன் முகம் மாறியது. அதுவரை என்னோடு ஆவலோடுப் பேச்சைத் தொடர வந்தவன், கொஞ்சம் தயங்கி பின்வாங்கினான். எனக்கு ஏமாற்றமே என்றாலும், அவன் மனநிலைப் புரிந்தது. ஆனாலும் அவனும் இயல்பாக பேச கொஞ்சம் போராடிக்கொண்டிருந்தான். "ஏம்ப்பா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க?" என ராசாத்தியம்மா கேட்டது, அவனை கொஞ்சம் இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். 'ஹஹ்ஹா!' வெனச் சிரித்தான். "பண்ணனும் ராஜேஷ் அம்மா!" என்று மறுபடியும் அதே போல் சிரித்தான். "எங்களையெல்லாம் கூப்புடுவல்ல?!" "கண்டிப்பா!" "என்னை?" என்றேன். சிரித்தானேத் தவிர பதிலே வரவில்லை. சில முத்திரைகளை கடைசி வரை மாற்ற முடியாது என்பதை வாழ்வில் இன்னொரு முறை விளங்கிக்கொண்டேன். *** கதையில் வந்த சம்பவங்களும் பாத்திரங்களும் கற்பனையே என உறுதி கூறுகிறேன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.