logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

ரோஷான் ஏ.ஜிப்ரி.

சிறுகதை வரிசை எண் # 29


"கமுக்கம்". (சிறுகதை.) எழுதியவர் -இறக்காமம் ரோஷான் ஏ.ஜிப்ரி. _______________________________ நெருப்பு வெயிலில் காய்ந்த பகல் நெல்லுப்பாய்போல் முறுகிக் கிடந்தது வீதி.ஊரில் மனித நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது,காலநிலை, நாட்டு நிலவரம் என காலமும் வாட்டி எடுத்தது. சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த நிலையில் வாழ்வது என்றாகிற்று ஜீவிதம். இந்தக் கூற்றுக்கு யாரும் விதிவிலக்கல்ல ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு பிரச்சினை இல்லாமல் இல்லை. வந்திருக்கும் அழைப்பிற்கான காரணம் புரியாமல் பெரும் யோசனையில் இருந்தார் சிவராமன். மீண்டும் பேரிடி இறங்கி விடுமோ என்ற அச்சம் அவரை ஆட்கொண்டிருந்தது. அப்போதைய நிலவரம் இப்போது இல்லை.எல்லாச் செலவினங்களும் மும்மடங்காகி விட்டது இருந்தாலும் என்ன வருமோ பார்ப்போம் தனக்குள் தானே ஆறுதல் அடைந்து கொண்டார். முன்னர்போல் எதுவும் இல்லை தலைகீழாய் மாறிக்கிடக்கின்றது காலம். எவ்வளவு பேரம் பேசி வேலையை எடுத்து செய்தாலும் உதரிப்பாகம் தட்டு,முட்டு சாமான்கள் வாங்கி வாகனத்தை ஒழுங்கமைத்தபின் சிறு கூலியைத்தவிர "மெக்கனிக்" வேலையில் சிறுதொகை சம்பளத்தை தவிர பெரிதாக ஒன்றும் மிஞ்சுவதில்லை. நமக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கிறது என்பதற்காய் வாடிக்கையாளர்கள் மீது சுமையை ஏற்றிவிட ஒருபோதும் சிவராமன் விரும்புவதில்லை. அது அவரது தொழில் தர்மம். புதிதாக தொழில் தொடங்கிய பலர் மனச்சாட்சி இல்லாமல் கூலி எடுப்பதாக குறைகூறும் வாடிக்கையாளர்களுக்கு சிவராமன் போன்ற நல்ல மனிதர்கள் இருப்பது சிறு ஆறுதல். கண்மூடித்தனமாக காசு பார்க்க விரும்பாதவர் சிவராமன். தான் செய்த வேலைக்கு எவ்வளவு தேறுமோ அதை மட்டுமே வாங்கி வாழ்ந்து பழகிக்கொண்டவர் தனது அப்பாவின் மொத்தச் சாயலும் அவரிடம் இருப்பதாக பலர் பேசிக்கொள்வார்கள்.பிறருக்கு உதவுவதை பிடிவாத குணமாக கொண்டவர் சிவராமன். காலதாமதம் ஆனாலும் நம்பிக்கையான நபராக சிவராமன் வாகனங்கள் பழுது பார்ப்பதில் அந்த ஊரில் சிறந்து விழங்குகிறார் என்றால் மிகையாகாது. இன்றைய சூழ்நிலையில் வாகனம் பழுதுபார்க்கும் "கரேஜ்"நடத்தும் சிவராமன் "மெக்கானிக்" மிக நெருக்கடிக்குள் தள்ளப்படிருந்தார். கடை வாடகை மின்சாரம் ,மற்றும் தன்ணீர் கட்டணம் என எல்லாம் விஷமாக கூடிப்போய் விட்டது கூடவே பிள்ளைகளின் படிப்பு,வீட்டுச் செலவு பெருத்த சுமையாகவே இருந்தது. இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் இங்கே யாரும் சும்மா இருந்து கொண்டு சோறு தின்னவில்லைதான் இருந்தாலும் அவரவர் பிரச்சினை அவரவர்களுக்கு தனக்கு முன் பெரும் செலவுகள் இருப்பதாக அடிக்கடி நண்பர்களுடன் பேசுவார் சிவராமன். "உள்ளதும் ஒண்ட வச்சிக்கொண்டு இந்தாள் படுற பாடு அய்யய்யோ பா.. "என்று உறவினர்கள் அலுத்துக்கொள்வதும் உண்டு. கையில் வைத்திருந்த விலையுயர்ந்த " ஸ்மார்ட் போனை" கூட அண்மையில் விற்று விட்டு பணத்தை வேறொரு தேவைக்காக பயன்படுத்திவிட்டு உடுதுணி முதல் ஆடம்பரம் என தனக்கான தேவைகளை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வாழ பழகியும் கொண்டார் சிவராமன். நாளை பெற்றோரை கூட்டிவரும்படி பாடசாலையில் வகுப்பாசிரியை சொன்னது சுஜியின் மண்டையை போட்டு குடைந்து கொண்டிருந்தது அதிலும் இம்முறை அப்பாவை. இதுதான் அவளுக்கு பிரச்சினையே... "எனக்கு சுத்தமா பிடிக்கல்ல கொஞ்சமாவது நாகரீகமா உடுக்கிறதும் இல்ல எப்ப பார்த்தாலும் வேலை வேலை..." காலையிலேயே கடிந்து கொண்டவளாக தொடங்கினாள் ஆண்டு ஐந்து படிக்கும் சுஜி அம்மா இண்டக்கி "பேரன்ஸ் மீற்றிங்" க்கு நீதான் வரணும் என அடம்பிடித்தாள் சுஜி. "ஏண்டிம்மா இண்டக்கி அப்பா வருவார் நீ போ ..அப்பாவைத்தானே கூட்டிவரச்சொன்னவிய" அம்மா அப்படி சொன்னதும் "சுருக்கென பாய்ந்தாள் சுஜி இஞ்சாரு அம்மா நான் இண்டக்கி இஸ்கூல் போறல்ல...." உண்ட அழகுக்கும் அறிவிற்கும் " இந்த மனுசனனோட எப்படியம்மா வாழ்ந்த நீ .." "ஏண்டி இப்படி கேக்குற..?" அவருக்கும் தன் புள்ள படிக்கிற இஸ்கூல் போக ஆச இருக்காதா என்ற கேள்வி சுஜியின் அம்மாவின் ஒற்றை வார்த்தையிலிருந்து அறியமுடிந்தாலும் சுஜி எதையும் கண்டுகொள்ளாதவளாய் தொடர்ந்தாள் "எப்ப பார்த்தாலும் கிறீசும் ,ஒயிலும் கரேஜும் என்று கிடக்கிற இந்தாளோட வாழ்க்க முழுக்க மாரடிச்சிருக்கயே அதான் கேட்டன்." செல்லம் அதிகம் கொடுத்ததால் கொஞ்சம் வாய் கூடத்தான். உள்ளதும் ஒன்று இல்லையா ..? அதுதான். மகள் தலைக்கேறிய கோபத்தின் உச்ச தொனியில் வினவினாள். தன் கணவனை மகள் சுஜி சதா கடிந்து கொள்கிறாள் முகத்தில் அடித்தால்போல் பேசுகிறாளே என காவியாவிற்கு தோன்றினாலும் திருமணம் முடித்து பல வருடங்களின் பின் தவமாய் தவமிருந்து பெற்ற மகள் என்பதால் அடக்கிக் கொண்டாள். "என்னடி புள்ள பேசுறாய் அப்பாண்ட காதில விழப் போகுது.." "விழுந்தா விழட்டும் விடு "என முறைத்துக்கொண்டாள். இறுதியில் அவளது பிடிவாதம் வென்றுவிட்டது. அம்மாவோடே பாடசாலைக்கு போய்விட்டாள் சுஜி. அப்பாவை ஏன் கூட்டிவரல்ல என்று ரீச்சர் கேட்டால் சொல்ல ஒரு பொய்யையும் தயார் செய்திருந்தாள் சுஜி. தலைமை ஆசிரியர் உரையாற்ற தொடங்கியபோது பிள்ளைகளின் படிப்பு,பாடசாலையில் உள்ள பௌதிக வளம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு புதிய ஆசிரியர்களின் வருகை,பிள்ளைகளின் வரவில் உள்ள முன்னேற்றம் மற்றும் தேசிய மட்டத்திற்கு பாடசாலையின் பெயரை கொண்டு சென்ற மாணவர்கள் பற்றியெல்லாம் சிலாகித்து பேசிய பின் தொடர்ந்த அதிபர் பெற்றோர்கள் மாணவர்கள் முன்பாக அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கும்ஒரு முக்கியமான நபரை நாங்கள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கின்றோம் மாற்றான் தாய் மனப்பாண்மையுடன் இவ்வளவு உயரத்திற்கு இருவரை கொண்டு வந்து சேர்த்த ஒரு தனி நபரின் பெருமையே இங்கு இன்றைய பேசுபொருள். சின்ன வயதிலிருந்தே இன்றைய பிள்ளைகள் நாகரீகம் என்ற மோகத்திற்கு பழக்கப்பட்டுப் போனதால் சில நேரம் சிலர் அறியாத்தனமாய் தாம் வந்த வழியை மறந்து விடுவது அபத்தமே! நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்களை நேசிக்க வேண்டும் விளிம்புநிலை மக்களின் தேவைகள் உணர்ந்து சிறு உதவியானாலும் ஒரு சேவையாக செய்ய முன்வர வேண்டும் வெற்றி நிச்சயமாக நமக்கொரு விலாசத்தை பெற்றுத்தரும் என்ற ஒருவரின் கூற்று இன்று மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது நமக்கெல்லாம் பெருமையே. ஒருவரது அர்ப்பணிப்பும்,எளிமையும் தன்னடக்கமும் இவ்வளவு தூரம் உயர காரணமாக உள்ளதை உங்கள் முன்னால் கூறுவதற்கு காரணம் நம்மில் இவர்போல் இன்னும் பலர் இப்படியான சமுகம் சார் செயற்பாடுகளில் இறங்கி ஈடுபட அது ஏதுவாக அமையும். யாரும் அறிந்திராத ஒரு உண்மையை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நாங்கள் மிகவும் இரகசியமாக பேணி வந்தோம் ஆனால் இன்று காலமும் நன்கு கனிந்து வந்த வேளை கட்டாயம் நாங்கள் இந்த கல்விசார் சமுகம் இங்கிருக்கும் பெற்றோர்கள்,மாணவர்கள் முன்னிலையில் கட்டாயம் சொல்லியாக வேண்டும். அந்த நபர் வேறு யாருமல்ல இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் நமது பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று பெருமை சேர்த்த சுஜியின் அப்பா சிவராமன் அவர்களே அதிபர் சொல்லச் சொல்ல அவள் கண்கள் கலங்கி நிறைந்தது.அவளுக்கு கிடைத்த விருதை விட பெரும் கிரீடம் ஒன்று அப்பாவிற்கு. சுஜியின் நெஞ்சில் ஈட்டியை கொண்டு எய்த வலி அப்பாவை தான் கணித்த கணிப்பிற்கு எதிர் மறையாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் செய்யும் இந்த மகோன்னத சேவைக்கு நிகராக வேறு என்னதான் ஈடாக இருக்கிறது? " அப்பா நான் உங்களை அப்பாவாக அடைந்ததை பெருமையாக நினைக்கின்றேன் உயரிய சிந்தனையும்,சமுகப் பற்றும் மிக்கவராக உங்களைப்போன்றதோர் அப்பா கிடைக்க நான் என்ன பாக்கியம் செய்தேனோ..? இதுவரையும் அம்மாதான் உலகம் என்றிருந்தேன் ஆனால் என் கணிப்பையெல்லாம் தகர்த்தெறிந்து நீங்கள் மலைபோல் உயர்ந்து சிகரமாகி விட்டீர்கள். அப்பா எனது நடவடிக்கைகளால் அல்லது பேச்சினால் நான் ஏதாவது உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் என்னை மனதாற மன்னித்துக்கொள்ளுங்கள் அப்பா" என்பதுபோல் சுஜியின் அழுத விழிகளிலிருந்து கேள்விகள் உதிர்ந்தன. அருகே வந்து கதறிக்,கதறி அழுத சுஜியின் நிலமையை கண்ட சிவராமிற்கு சங்கடமாய் போனது. இதுவரை தனக்கு கூட தெரியாமல் இவ்வளவு பெரிய இரண்டு பெண் பிள்ளைகளுக்கு ஆரம்பக்கல்வி முதல் உயர்தரம்வரை அவர்களின் பெற்றோர்களின் விருப்பத்துடன் படிப்பிக்க மாதா,மாதம் பண உதவிசெய்து எதையும் காட்டிக்கொள்ளாமல் கமுக்கமாக இருந்த கணவனை ஆச்சரியத்தோடு பார்த்து வியந்து நின்றாள் காவியா. ஆச்சரியமும் மெய் சிலிர்ப்பும் மிகுந்த நொடிகளாய் இருந்த கணம் அது. வெளியாகிய உயர்தர பெறுபேற்றின்படி மாவட்ட மட்டத்தில் அதிவிசேட சித்திகளை பெற்ற மாணவிகளாத் திகளும் இருவரையும் அருகே அழைத்து பரிசீல்கள் வழங்கியதுடன் இம்முறை தரம் ஐந்தில் புலமைப்பரிசில் வென்ற மகளை அழைத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்ட சிவராமிற்கு உனக்கு நீ எதிர்பார்த்த நல்ல அப்பா வாய்க்காமல் போயிருக்கலாம் ஆனால் எனக்கு சாதிக்கத் துடிக்கும் மூன்று பெண் மக்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்களுக்காக வாழ்வதை நான் பெரும் பேறாக நினைக்கின்றேன். என்ற சிவராமன் அந்த கல்விசார் சமுகத்தின் முன் உயர்ந்த மனிதராய் எழுந்து நின்றார். (முற்றும்.) யாவும் கற்பனை!

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.