logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

முகில் சிவராமன்

சிறுகதை வரிசை எண் # 28


சிறுகதை : அம்புட்டுத்தான் மனிதம்.... வருண் அப்பார்ட்மெண்ட்க்கு முதன்முதலாக அப்போது தான் வருகிறான். வீடு பார்த்தது, அட்வான்ஸ் கொடுத்தது எல்லாமே வருணின் மனைவி சித்தாரா தான். அரசாங்க உயர் பதவியில் இருக்கும் வருணுக்கு அரசாங்கமே பங்களா ஒதுக்கியிருந்தது. ஆனால் அந்த பங்களாவில் இப்பொழுது மராமத்து வேலை நடப்பதால், சில மாதங்களுக்கு அபார்ட்மெண்டில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்திருக்கிறார்கள். வாசலில் இருந்த வாட்ச்மேன் வேகமாக வந்து காம்பவுண்ட் கதவை திறந்து விட்டுட்டு கடமைக்கு ஒரு சல்யூட்டை வைத்தார். அவரின் உடல்மொழியில் ஒருவித வெறுமை இருந்தது. வயதானவராக இருந்த அவரின் முகத்தின் பாதியை மாஸ்க் மறைத்திருந்தது. தலையில் போட்டிருந்த தொப்பி நெற்றிவரை மறைக்க மீதம் தெரியும் அந்தக் கண்களை மட்டும் எங்கேயோ பார்த்தது போல இருந்தது வருணுக்கு. இவரை எங்கே பார்த்திருக்க முடியும்? மனசுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் போலவும் தெரிந்தார். எப்பவுமே சில மனிதர்கள முதல் தடவைப் பார்க்கும் போதே அவர்களை எங்கேயோ பார்த்த மாதிரி தோனும்தான். காரணமே இல்லாம அவங்கள ரொம்ப பிடிச்சுக் கூட போயிடும். அப்படியான ஒருவர்தானோ என மனதுக்குள் சிந்தித்தவாறே வாட்ச்மேனின் சல்யூட்டை ஏற்கும் விதமாக தலையை ஆட்டி ஒரு புன்னகையை சிந்தினான். ஆனால் அதெல்லாம் தேவையில்லை என்பது போல் அவனை கண்டு கொள்ளாமலேயே திரும்பிவிட்டார் அந்த வாட்ச்மேன். பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் கொண்டுவந்து இறக்கிய பொருட்களையெல்லாம் சித்தாரா வேலையாட்களின் உதவியோடு அடுக்கிக் கொண்டிருந்தாள். வருண் வந்ததும் வராததுவுமாய் எப்பொழுதும் போல தன் மொபைலில் மூழ்கிப் போயிருந்தான். “ஏங்க... வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல... எப்ப பாரு மொபைலும் கையுமா...” “அம்மா... ஆபிஸ் சம்மந்தமான ஃபைலத்தாம ஃபோன்ல பாத்திட்ருக்கேன்” சொல்லும் போதே தட தடவென காலடி சத்தங்கள். சித்தாரா சத்தம் வந்த திசையில் கழுத்தை நீட்டி எட்டிப் பார்க்க, “பாரு சித்து.. உம் பிள்ளைங்க ஆதியும் அருணும்தான் ஒரு பட்டாளத்தையே கூட்டிட்டு வந்திருக்கானுங்க. இப்போ தான் வந்தோம், அதுக்குள்ள இத்தன ஃப்ரென்ட்ஸா?” கேட்டத் தொனியில் இந்தக் குழந்தைகள் மட்டும் எப்படித்தான் சினேகமாகி விடுகிறார்களோ? என்ற ஆச்சரியம் நிறைந்து இருந்தது. “ஹலோ அங்கிள் நான் அகல்யா... பக்கத்து வீடுதான். நானும் ஃபிப்த் ஸ்டாண்டர்ட் தான் படிக்கிறேன்” என அகல்யா தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டாள். “ஆமாம்பா எங்க ஸ்கூல் தானாம்..” “ஓ... அப்ப ஆதிக்கு கேர்ள் பிரெண்ட் கிடைச்சாச்சு... வெரிகுட் வெரிகுட்...” சிரித்தான் வருண் “அங்கிள்ல்ல்....” சின்னதாய் சினுங்கினாள் அகல்யா. “என்க்கும் என்குதா.. இம்.. ம்ம்... க்கேள் பெண்ட்டு, பாய் பெண்ட் அல்லாங் கெச்சுச்சு” தன் மழலை குரலில் ஒரு குட்டீஸ் பட்டாளத்தையே காட்டிச் சொன்னான் அருண். “வாவ் சூப்பர் தங்கம்...” “சரி போயிட்டு வர்றோம் ஆங்கிள்” வந்தக் கூட்டம் ஓட ஆரம்பித்தது. “போய்த்து வயோஅங்குல்” அருணும் சேர்ந்து ஓடினான்..‌ மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து அருணும் தன்னை மழலைக்குரலில் ‘அங்குல்' என அழைத்தது சிரிப்பை வரவழைத்தது. சிரித்தவாறே “பாத்து.... பாத்து...” என வருண் அருணை பார்த்து சொல்லும்போதே வாட்ச்மேன் வந்துவிட்டார். “சார் நீங்க புதுசா வந்துருக்கீங்க. உங்களுக்கு அப்பார்ட்மெண்டின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்லாம் சொல்லச் சொன்னாங்க..” “ம்ம்... உள்ளே வாங்க” “இல்ல.. இங்க இருந்தே சொல்லிர்றேன். மாதம் ஒரு நாள் அசோசியேசன் மீட்டிங் இருக்கும். முடிஞ்சளவு அட்டென்ட் பண்ணப் பாருங்க. குழந்தைகளுக்கு காரிடாரிலேயோ கார் பார்க்கிங் ஏரியாவிலேயோ பந்து விளையாட அனுமதி கிடையாது. ஸ்ட்ரிக்டா சொல்லிருங்க. மீறி விளையாண்டு ஜன்னல்கதவு, கார்கதவு ஏதாவது உடைஞ்சா சேதாரத்தை போல இரண்டு மடங்கு அபராதமா வசூலிக்கப்படும். இரவு பத்து மணிக்கு மேல அதிகமாக ஒலியெழுப்பக்கூடாது. அக்கம் பக்கத்துல குழந்தைகள் முதியோர்கள்லாம் இருப்பாங்க. வாட்ச்மேன், ஹவுஸ் கீப்பிங்க்குலாம் தனியா காசு கொடுத்துப் பழக்க கூடாது...” இத்யாதி.. இத்யாதி.. ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு எந்த உணர்ச்சியும் காட்டாமல் கறாராக முழங்கிக் கொண்டிருந்தார் வாட்ச்மேன். அவர் சொல்ல சொல்ல, இந்த கறார் குரல், எங்கேயோ கேட்ட குரல் என்றும், தனக்கு மிகவும் நெருக்கமான குரல் எனவும் வருணின் மண்டைக்குள் பம்பரம் சுத்தியது. ஆனால் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. வாசிக்கும்வரை அவர் முகத்தையே உற்றுப் பார்த்தவன், வாசித்ததற்கு எல்லாம் தலையாட்டிவிட்டு மெல்ல கேட்டான் “ஐயா நீங்க எந்த ஊரு?” “இந்த ஊர்தான்” பட்டென்று உரையாடலை துண்டித்து கிளம்பிவிட்டார் வாட்ச்மேன். தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அகல்யாவும் இன்னும் ரெண்டு சிறுவர்களும் ஓடிவந்து “அங்கிள் அங்கிள் அந்த வாட்ச்மேன் சரியான ஜெம்(gem)” என்றார்கள் “ஜெம்மா... அப்படினா...” “உங்களுக்கு தெரியாதா? ஜெம்னா ஜிஞ்சர் ஈட்டன் மங்கி...” “ம்ம்.. அதான் தமிழ்ல இஞ்சி தின்ன குரங்கு” “எங்க அம்மாவும் அவர அப்படித்தான் சொல்லுவாங்க” மாற்றி மாற்றி விளக்கினார்கள். “பெரியவங்கள அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நீங்க குட் சில்ரன் தானே....” “உங்களுக்கு ஒன்னும் தெரியாது அங்கிள். நீங்க புதுசுதானே போகப்போக நீங்களே அப்படி தான் சொல்லுவீங்க” சொல்லிவிட்டு ஓடிவிட்டார்கள். மறுநாள் பால்கனியில் நின்று கொண்டிருந்த வருணின் பார்வை வாட்ச்மேன் நிற்கும் பக்கம் திரும்பியது. அந்த வாட்ச்மேன் ஏதோ முனகி கொண்டே அப்பார்ட்மெண்ட்டுக்கு முன்னால் இருந்த பெரிய மரத்தில் உட்கார்ந்து இருந்த காக்காக்களை கல்லை விட்டு எறிந்து கொண்டிருந்தார். இன்னும் இரண்டு நாள் கழித்து ஆதி வந்து “அப்பா வாட்ச்மேன் பந்தை பிடுங்கி வச்சுக்கிட்டாரு. கொடுக்க மாட்டேங்றாரு” என அழுதான். “ஏன் நீ பார்க்கிங் ஏரியால விளையாடுனியா?” “இல்லப்பா நான் பார்க்கிங்ல விளையாடல... பார்க்ல விளையாடலாம்னு எடுத்துட்டுப் போனே... அதுக்குள்ள பறிச்சு வச்சுக்கிட்டாரு”. “ஆமாங்க இந்த வாட்ச்மேன் சரியில்லையாம் கீழ் வீட்டு கோமளா ஆண்டி சொன்னாங்க. எப்ப பார்த்தாலும் சிடுசிடுனு மூஞ்சிய வச்சிக்கிட்டு இருப்பாராம். ஒரு நாய, காக்காவக் கூட விடமாட்டாராம். கல்ல விட்டு அடிக்கிறாராம். சைக்கோ மாதிரி நடந்துக்குவாராம் அநேகமா இந்த மாசத்தோட அவர மாத்திருவாங்கலாம்” சித்தாரா சொன்னாள். வருணும் அலுவலகம் போகும் போதும், வரும்போதும் கவனித்துக்கொண்டே செல்வான். சித்தாரா, அகல்யா மற்றும் சிறுவர்கள் செல்வது போல் முகம் சிடுசிடுவென்று தான் இருக்கு. அவர் யாரிடமும் எதார்த்தமாய் பேசுவதை பார்க்கவே முடிவதில்லை. ஆனால் அவருடைய வேலையை கரெக்டாக செய்துகொண்டிருந்தார். ஒருநாள் மாலை அபார்மெண்டில் அசோசியேசன் மீட்டிங் கூடியது. ஒவ்வொரு மாதமும் குடியிருப்போர் தங்கள் நிறை குறைகளை அந்த சந்திப்பில் பகிருவர். அந்த மாதங்களில் ஏதேனும் பண்டிகை வந்தால் அதை எவ்வாறு கொண்டாடலாம் என்பதைப் பற்றியும் தீர்மானிப்பார்கள். அபார்ட்மெண்ட் மெயிண்டனன்ஸை மேம்படுத்தும் கருத்துக்கள் இருந்தாலும் விவாதிக்கப்படும். அன்று குழுமி இருந்தவர் அனைவரும் வாட்ச்மேன் பற்றியே குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். மரியாதை தருவதில்லை எப்பொழுதும் சிடுசிடுவென இருக்கிறார் குழந்தைகளை திட்டுகிறார் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களை பறித்து வைத்துக் கொள்கிறார் இப்படி ஒவ்வொன்றாக கூறிக் கொண்டே இருந்தார்கள். முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் எழுந்து “நைட்டு பதினொன்னு பன்னண்டுக்கு மணிக்கு வந்தாலே ஏன் லேட்டா வர்ற? உன் பொண்டாட்டி பாவம் தனியா தான இருக்கா? இப்படி நீ டெய்லி லேட்டா வந்தா அவளுக்கு கஷ்டமா இருக்காதாங்றார். என்னை கேட்க இவர் யாரு? வாட்ச்மேன்னா வாய மூடிட்டு கதவை திறந்தவிடனும்....... ப்ளடி நான்சென்ஸ்...” கோபம் கொப்பளிக்க கத்தினான். “இந்த வேலைக்கு அவர் புதுசு. அதனால கொஞ்சம் விவரம் தெரியாமல் இருக்கிறார். மற்றபடி அவரு ரொம்ப நல்லவரு அவர எனக்கு பர்சனலா தெரியும் அதனால தான் நானே இந்த வேலையை அவருக்கு கொடுத்தேன். ஒரு ரெண்டு மாசம் டைம் கொடுத்து பாப்போம். இல்லைனா நம்ம வேற ஆளை மாற்றி கொள்வோம்” என்றார் அறுபது வயது மதிக்கத்தக்க அசோசியேசன் மெம்பர் ஒருவர். “நீங்க கூட்டிட்டு வந்தீங்க என்றதுக்காக எல்லாத்தையும் சகிச்சுகிட்டு போகமுடியாது. என்னமோ செய்யுங்க...” என்று கோவமாக வெளியேறி விட்டான் அந்த இளைஞன். எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் வருண். கூட்டம் கலைந்தது. வருண் அந்த பெரியவரிடம், “சார் இந்த வாட்ச்மேன நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு எனக்கு ரொம்ப நெருக்கம் மாதிரி தெரியுது. பட்... யார்னு ரெகக்னேஸ் பண்ணமுடியல? அவர் யார்னு உங்களுக்கு தெரியுமா? சார்”, என்றான் வருண். “இப்பதான் ஒரு நாலஞ்சு வருஷமா எனக்கு பழக்கம் சார். முன்னாடி காரு பங்களானு இவரும் ரொம்ப வசதியா தான் இருந்திருப்பாரு போல. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆக்ஸிடெண்ட்ல அவங்க பையன் கோமா ஸ்டேஜ் போயிட்டான். அந்தப் பையனோட ட்ரீட்மெண்ட்க்காக சொத்த ஃபுல்லா வித்து வித்து செலவு பண்ணிட்டு இப்படி நடுத்தெருக்கு வந்துட்டாங்க. கடைசில மகனும் இறந்துட்டான். இவங்க மனைவி என்னோட ஆபிஸில் தான் ஹவுஸ் கீப்பிங்ல இருக்காங்க.. இவரும் இவர் மனைவியு உழைச்சு தான் தன் மருமகள் பேரன் பேத்திகளைலாம் பாத்துகிறாங்க. அப்பப்போ ஆபிஸுக்கு மனைவிய விட/கூப்ட வருவாரு... அப்படிதான் பாத்துருக்கேன்... கஷ்டப் படுறவங்களுக்கு உதவி பண்ணலாம்னு நெனச்சா நமக்குத்தான் உபத்திரவமாகி போகுது”. தான் எதிர்பார்த்து வந்த பதில் கிடைக்காததால் இன்று வாட்ச்மேனிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று முடிவோடு அந்த பெரியவரிடம் “நன்றிங்க சார்” என்று விடை பெற்றான். நேரே வாட்ச்மேனிடமே சென்றான் “ஐயா உங்க பேர தெரிஞ்சுக்கலாமா?” என்றான். “மூர்த்தி” கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு நகர்ந்ததில் மேற்கொண்டு உன்னிடம் பேச ஒன்னுமில்ல என்று சொல்வது போல் இருந்தது. ஆனாலும் வருண் விடுவதாய் இல்லை. மூர்த்தி என்ற பெயரும் இன்னும் நெருக்கத்தை உணர்த்தியது போல் இருந்தது. “உங்க வீடு எங்க இருக்கு?” பின்னாடியே போய் கேட்டான். “இங்க பக்கத்துல தான் சார் இருக்கு. இப்ப உங்களுக்கு என்ன வேணும்?” சிடுசிடுத்தான். “தப்பா நெனச்சுக்காட்டி ஒரே ஒருமுறை மாஸ்க்க கழட்டி முகத்த காட்டுறீங்களா?” நேரிடையாகவே கேட்டுவிட்டார். “உங்களோட பெரிய தொந்தரவா போச்சு சார்... ஏன் இப்படி வேல செய்யவிடாம” என்று சலித்துக் கொண்டவாறே மாஸ்கையும் தொப்பியையும் ஒருசேர கழட்டினார். சவரம் செய்யப்படாத தாடிக்குள் இருந்த அவரது முகத்தை பார்த்ததும் மனதில் ஞாபக மின்னல் வெட்டியது. “சுந்தரமூர்த்தி சார்....” தன்னை மறந்து அழைத்தான். தன் முழு பெயரோடு சார் என்று சேர்த்து அழைக்கவும் கண்களில் நீர் திரள வருணை பார்த்து “நீங்...க யார்... தம்....பி..இ?” என வார்த்தைகள் தடுமாற கேட்டார். “சார் என்ன தெரியலையா? நான் தான் வருண்குமார்” என படித்த பள்ளியின் பெயரைச் சொன்னவன் பழைய நினைவுகளில் மூழ்கினான். புகழ்பெற்ற தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணி புரிந்தவர்தான் சுந்தரமூர்த்தி வாத்தியார். அவர் வருவதற்கு முன்புவரை வருண் படித்த அந்த தனியார் மேல்நிலைப்பள்ளியில் பீ.டி. என்றாலே ஒரு ஃப்ரீ பீரியட் என்பது போல தான். பெண் பிள்ளைகள் எல்லாம் கிரவுண்ட்களில் இருக்கும் மரத்தடியில் வட்ட வட்டமாக உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஆண் பிள்ளைகள் எல்லாம் கபடி கிரிக்கெட் என தனக்கு தெரிந்த ஏதோ ஒன்றை விளையாடி பொழுதை கழிப்பர். சுந்தரமூர்த்தி சார் தேசிய அளவில் தடகளப் போட்டிகளில் பரிசு வென்றவர். அவர் வந்ததற்கு பிறகுதான் பள்ளியே முழுமையான விளையாட்டு கல்வியை கற்பிக்க ஆரம்பித்தது. சுந்தரமூர்த்தி சார் உயரமும் பருமனும் சரியான விகிதத்தில் ஆஜானுபாகுவாக தோற்றத்திலேயே கம்பீரமாக இருப்பார். அவர் குரல கேட்டாலே வளைஞ்சுக் கிடக்கற செடி கொடிகள் கூட நேரா நிமிர்ந்து நிற்கும். அவர் பள்ளிக்கூடத்துக்கு புல்லட் வண்டியில் தான் வருவார். அவர் பள்ளிக்கு வர்றதுக்கு முன்னாடியே அவரோட புல்லட் சத்தம் டுபு டுபு டுபுனு மாணவர்களுக்கு தேவகானம் மாதிரி ஒலிக்கும். அவர் எத்தனை கண்டிப்புடன் நடந்துகிட்டாலும், அடித்தாலும் ஒரு சொலவடை இருக்குமே குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டு படனும்னு அப்படிதான் ஏங்கிக் கிடப்பார்கள். படிப்பில் நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்கள் கூட அவர் பீ.டி.வாத்தியாராக வந்தபின் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த தொடங்கினார். பல மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்கி இருந்ததால் அவர்பால் பள்ளி நிர்வாகத்திற்கும் பெரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவருக்கு பெரிய தொகையை சம்பளமாக அளித்ததோடு அல்லாமல் பல சிறப்புச் சலுகைகளையும் வழங்கியது. ஒட்டுமொத்த ஸ்கூலோட ஆதர்ச நாயகனும் அவர்தான். அவரையா இப்படி பாக்குறோம்? வருணுக்கு என்னவோ மாதிரி இருந்துச்சு. அவரோட பயிற்சியால தான் வருண் ஆசிய தடகளப் போட்டி வரை கலந்துக்கிட்டு மெடல் வாங்கியிருந்தான். தமிழக அரசும் அரசுப்பணி வழங்கி கவுரப்படுத்தியது. அவரோட நிலைமையை ஏற்கனவே அந்த பெரியவர் சொல்லிவிட்டதால், அவரின் கஷ்டத்தையும், அவரின் தற்போதைய நிலையையும் யுகிக்க முடிந்ததால், அதைப் பற்றி ஒன்றும் கேட்காமல் “ஒரு உதவி செய்ய முடியுமா சார்?” என்றான் வருண். “அய்யோ தம்பி என்ன போயி சார்ருன்னு கூப்பிடுறீங்களே...” என பதட்டம் ஆகி “சரி.. என்ன வேணும் சொல்லுங்க தம்பி...” என்றார் “நீங்க எப்படி இருந்தாலும் எங்க இருந்தாலும் நீங்க தான் என் குரு... சரி... ஏன் சார் ஸ்கூல் வேலைய விட்டீங்க...?” “ஒரு ஆக்ஸிடென்ட் எங்க வாழ்க்கையவே மாத்திப்போட்ருச்சு. மகன் உயிருக்கு போராடிட்டு இருந்தான். ஆஸ்பத்திரி அவன்கூட இருக்கவேண்டி இருந்ததால ஸ்கூலுக்கு போக முடியல. முதல்ல ஸ்கூல்ல என்னைப் புரிஞ்சுக்கிட்டு சப்போர்ட் பண்ணாங்க. ஆனா மாசக் கணக்குல ஆனதால வேலைல இருந்து நீக்கிட்டாங்க. அவங்கள சொல்லியும் குத்தமில்ல,...” சிறிது அமைதிக்குப் பின் தொடர்ந்தார் “மகன் உசுரு, காசு பணம் வேலை வீடு சந்தோசம் மரியாதை அத்தனையும் போயிருச்சு.... இந்தா இங்க வந்து நிக்கிறேன். வாட்ச்மேனலாம் யாரு மதிக்கிறா...? நேத்து பிறந்த பிள்ளைங்க கூட எனக்கு படட்டப்பெயர் வைக்குதுங்க... சரி இனி அதபத்தி பேச என்ன இருக்கு?” கண் கலங்கியது. தொப்பியையும் மாஸ்கையும் மீண்டும் அணிந்துக் கொண்டார். சிங்கமாதிரி கம்பீரமான ஒரு மனிதனை தலையை கவிழ்த்திக் கொண்டு கதவு திறந்துவிடும் காவலாளி ஆக்கிய காலத்தை நொந்துக்கொண்டான். தனக்கே இத்தனை சங்கடத்தை தருகிறதே? இவருக்கு எப்படி இருந்திருக்கும்? அதன் வெளிப்பாடு தான் இந்த சிடுசிடுப்பு, இந்த விரக்தி, இந்த வெறுமை! அதனால தான் அவர் தன் அடையாளத்தை மறைத்து கொண்டே வாழ விரும்புகிறார். அதனால தான் யாரிமும் முகம் கொடுத்து பேசாமல் இருக்கிறார். தான் இங்க இருக்கப் போற சில மாதங்கள்ல தன்னால முடிஞ்ச அளவுக்கு ஏதாவது முயற்சி பண்ணி அவரோட பழைய வாழ்க்கைய மீட்டுக் கொடுக்கனும் யோசித்தவன் “சரி அதவிடுங்க சார், என் பையனுக்கு என்னை மாதிரியே அத்லட்டா வரணும்னு ரொம்ப ஆசை அதற்குதான் சரியான ஒரு கோச்சை தேடிட்டு இருந்தேன். நீங்களே கண்ல பட்டுட்டீங்க... நாளையிலிருந்து அவனுக்கு ட்ரெய்னிங் குடுங்க சார்” என்றான் அடக்கமாக. “அதெல்லாம் விட்டு ரொம்ப வருஷம் ஆச்சுபா... இப்பபோயி...” அவர் குரலும் நெகிழ்ந்திருந்தது. “அதெல்லாம் தெரியாது நீங்கதான் எடுக்குறீங்க... எப்பலாம் உங்களுக்கு நைட் சிஃப்டு வரும்?” “திங்கள், செவ்வாய் புதன் வியாழன் னு நாலு நாளு நைட் சிஃப்ட்டு தான்” “எத்தன மணிக்கு வருவீங்க?” “சாயங்காலம் ஆறுக்கு வந்துட்டு... காலம்பற ஆறுக்கு கெளம்பிடுவேன்”. “நல்லதா போச்சு... இனி ரெண்டு மணிநேரம் முன்னாடியே வந்துருங்க...” “அதுஉஉ....” “அசோசியேசன்ல நா பேசிக்குறேன்... அப்புறம் வெளில பீஸ்ஸு ரெண்டாயிரம் வாங்குறாங்க. பட் நா உங்களுக்கு ஆயிரத்தி ஐநூறு தான் தருவேன். பணத்தை குறைத்துப் பேசுவதுபோல் பாவனை செய்து நல்லதொரு பீஸ்ஸை முடிவு செய்தான். “இல்ல.....” நாளைக்கு நாலு மணிக்கு பார்ப்போம். மூர்த்தியை பேசவிடாமல் நகர்ந்தான். மறுநாள் அபியும் அகல்யாவும் ஷு சாக்ஸ், டி-சர்ட் ஷாட்ஸ்லாம் போட்டு தண்ணி பாட்டிலோட ஆஜராகி இருந்தார்கள். “டேய் அபி... உங்க அப்பா ரொம்ப மோசம்டா... உனக்கு ஆசைனா உன்ன மட்டும் சேர்த்து விட வேண்டியது தானே? எங்கப்பாட்ட பேசி என்னையும் எதுக்குடா சேர்த்துவிட வச்சாரு?’ கோபமா பேசினாள் அகல்யா. “நீ வேற.... எனக்கு மட்டும் ஆசையா என்ன? எனக்கு சாதாரண குரூப் கேம்சுனாலே அலர்ஜி... இதுல அத்லெட்டிக்ஸ் வேற” அலுத்துக் கொண்டான். இதைக் கேட்ட வருண் மெலிதாய் சிரித்துக் கொண்டான். அவன் மனதுக்குள் “ஒருத்தரு நல்லா இருப்பாங்கனா எத வேணாலும் செய்யலாம் னு பன்ச் டயலாக் ஓடுச்சு”. சிறிது நாட்களில் சுந்தரமூர்த்தியின் பயிற்சி பிடித்துப் போய் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்துவிட்டிருந்தனர். புதுசா குடிவந்தவருக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேல என ஆரம்பத்தில் சொன்னவர்கள் கூட பரவாயில்லயே... ஃபோனு டீவினு ஸ்கிரின்லயே இராக்றதுக்கு இது எவ்வளவோ தேவலை என பாராட்ட ஆரம்பித்தார்கள். இப்போது எல்லாம் குழந்தைகள் வாட்ச்மேனை மரியாதையோடு பார்க்க ஆரம்பித்து விட்டனர். பெரியவர்களும் தான். அவரும் யார்ட்டேயும் சிடுசிடுனு இருக்குறதும் இல்ல. எல்லோரிடமும் ரொம்ப அன்பாவும் மரியாதையாகவும் பேச ஆரம்பித்து விட்டார். அவரது கம்பீரமும் மீண்டும் மெல்ல எட்டிப்பார்த்தது. சிறிது மாதங்களுக்குப் பின் காபி பொடி வாங்க வந்த கோமளா ஆண்ட்டி சித்தாரா விடம் இது பற்றி கேட்டுக்கொண்டிருந்தது வருணுக்கு காதில் விழுந்தது “சிடுசிடுனு இருந்தவரு எப்படி மாறிட்டாரு இது எப்படி நடந்துச்சு?” “அதான் மனுச மனசே ஆண்ட்டி.‌‌.. நாம கொஞ்சோண்டு அன்ப விதைச்சா பலமடங்கா திருப்பி கொடுக்கும்.... வெறுப்ப வெதச்சாலும் தான்... நாம அன்பயே விதைப்போம். அம்புட்டுத்தான மனிதம்ங்றது...” திடீரென வருண் வந்து பதில் சொல்லவும் தலையாட்டி விட்டு கிளம்பினார் கோமளா ஆண்ட்டி. முற்றும். ************** இது எனது சொந்தப் படைப்பு - முகில் சிவராமன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.