Shan vijayakumar
சிறுகதை வரிசை எண்
# 27
வாசனை
பேருந்து நிலையத்தில் பஸ் வந்து நின்றதும் இறங்கினான்.. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு திரும்பினான்..நாலைந்து அடி எடுத்து வைத்ததும் டக்கென்று நின்றான்..
அவளா அது..!
கிட்டத்தட்ட இருபது வருடம் கழித்துப் பார்க்கிறான்..
யாருக்கோ காத்திருப்பாள் போல..தொட்டு விடும் தூரத்தில் தான் நிற்கிறாள் அவள்..ஆனால் அழைக்கும் மனநிலையில் இல்லை இவன்..அந்த இவன் நகுலன்.அவள் பொற்கொடி.அவளைப் பார்க்க நேரம் காலம் பாராது காத்திருந்தது,ஏன் போரிங் பைப்பின் திட்டில் அமர்ந்து அவளின் முகத்தை மட்டும் பார்த்திட மாட்டோமா என்று விளக்கணைக்கப்பட்ட அவள் வீட்டு மாடியைப் பார்த்து விடிய விடிய காத்திருந்தது எல்லாம் ஒருகாலம்.இன்று ஏனோ பார்த்தும் பேச தோணவில்லை. திடீர் கல்யாணத்திற்குப் பத்திரிகை வைத்து பேசிவிட்டு போனது, நடுவில் பேசியவை எல்லாம் நியாபகத்திற்கு வந்தது.
”எதையும் ஞாபகம் வெச்சுக்கிட்டு வராம இருந்திராத..
உன்ன முதல் வரிசையில எதிர்பார்ப்பேன்.! நீ வரணும் கருவா..!என கிளம்பும்போது தழுதழுத்து அன்பாக அழைத்ததுவும் இன்னும் காதிலே ஒலித்துக்கொண்டிருக்கிறது அவளின் குரல்..
சிறுவயதில் நகுலன் பார்க்க சுமாரிலும் சுமார்..கருப்புத்தோல் போர்த்திய எலும்புக்கூடு..கன்னம் ஒட்டிப்போய் கொஞ்சம் எத்துப்பல்லாய் முகம்.துருதுருவென்றிருப்பான்.
சேர்ந்தாற்போல ஒரு இடத்தில் பத்து நிமிடத்திற்கு மேல் இருக்கமாட்டான்..இப்போதைய டிரெண்ட் வார்த்தை உபயோகப்படி
ஹைப்பர் ஆக்டிவ்..
அதை விடுங்கள்..அழகில் பொற்கொடிக்கும் அவனுக்கும் கணக்குப்பாடமும் சிறுபிள்ளைகளும் போல ஏழாம் பொருத்தம்..பொற்கொடி நீள்வட்ட முகம், கோதுமை நிறம், செதுக்கிய மூக்கு,உருண்ட பேசும் கருங்கண்கள்,மூன்று திருநீற்றுப்பட்டை இடும் அளவுக்கான நெற்றி..சிகை விளம்பரத்தில் வருபவர்கள் போல அடர் கூந்தல்.சுளையாய் உதடுகள்.மக்காச்சோளத்தை திருப்பி வைத்து அடுக்கினாற்போல பற்கள்.மொத்தத்தில் அழகி.ஏரியாவில் திரியும் விடலைப் பசங்களுக்கு தேவதை,காதலி,கதாநாயகி,கனவுக்கன்னி..எல்லாம் அவள் தான்.அவளுடன் பழகுவதற்கு நான் நீ என்று போட்டி போட்டாலும் அவள் யாருடனும் பேசியதில்லை.அப்படிப்பட்டவள் எப்படி இந்த கருவாப்பயலுடன் பேசுகிறாள் என்று எல்லோருக்கும் பொறாமை..இவனுக்கும் அதில் அலாதி பெருமை.தான் அவலட்சணமாயிருக்கிறோமென்று அவனுக்குள்ளே இருந்த தாழ்வு மனப்பான்மை எல்லாம் பெண்கள் தன்னிடம் பேசும்போது குறைவதாய் உணர்ந்ததாலேயே பெண்களிடம் இவனாகவே பேச ஆரம்பித்தான்.
அப்படித்தான் ஒருநாள் பொற்கொடி டியூசன் போய்விட்டு இவன் வீட்டு வழியே வந்து கொண்டிருந்தாள்.வழக்கமாய் அப்படித்தான் வருவாள்.இவன் காத்திருந்து வழிமறித்து பேசிவிட்டான்.அவளின் நோட்டை வாங்கிப்பார்த்து கையெழுத்து அழகாயிருக்கு தலையெழுத்தும் நல்லா இருக்கும்..பின்னால பெரிய ஆளாக வருவ..என்று முகஸ்துதி யோடு பேச ஆரம்பித்தான்..ஏரியாவில் மற்ற பசங்களைப்போல கண்களாலேயே பறித்து தின்பது போல பார்த்து ஜாடைமாடையாய் பேசாமல் நேரிடையாய்ப் பேசியதாலேயே இவளும் அவனிடம் பழக ஆரம்பித்தாள்.அவளின் அம்மா அப்பா கடை வைத்திருக்கிறார்கள்.ஆதலால் இருவரும் கடையை பார்க்க கிளம்பி விடுவார்கள். இரண்டு தம்பிகள்.ஒருவன் இவளைவிட இரண்டு வயது சிறியவன்.அவன் வீட்டிலேயே இருக்க மாட்டான்..அடுத்தவன் ஆறு வயது இளையவன்.இருவரும் இவனின் பழக்கத்திற்கு தடை போடுவதில்லை.பெரும்பாலும் சின்னத்தம்பியுடன் தான் வீட்டில் இருப்பாள்.வழக்கமாக ஸ்கூல் விட்டு வந்து கைகால் முகம் கழுவி டீ குடித்து ரெப்ரஸ் ஆகி ஆறுமணி ஆனதும் சாமிக்கு விளக்கேற்றி வைத்து படிக்க அமரும்போது நகுலனும் தயாராகி வந்துவிடுவான்.படிப்பு ஒரு அரைமணி நேரம் போகும்.அவ்வளவுதான்.பிறகுதான் நேஷனல் டேப் ரிக்கார்டரில் பாட்டு கேட்க ஆரம்பித்தால் TDK D90,Sony HF 90 என கேசட்டுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்.
மடியில் படுத்துக் கொள்வது..தலையைக் கோதி விடுவது..உணவை சிறு கவளமாக உருட்டி ஊட்டிவிடுவது.அன்பின் மிகுதியில் காமம் தவிர அனைத்தும் நடந்துவிடும்..
விதவிதமான கலரில் சட்டையும் கவுனும் அவளின் வழக்கமான உடை.நகுலனுக்குப் பிடித்தது அவள் அணியும் பாவாடை சட்டை.ஆக 6 மணியிலிருந்து 8.30 மணிவரை தனித்திருப்பவளுக்கு இவன்தான் துணை..பேசுவார்கள் பேசுவார்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி என்னதான் பேசுவார்களென்றே தெரியாது.இவன் பள்ளி இறுதியாண்டும் அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து இருவரும் பழக்கம்.அவளுக்கு படிப்பில் பெரிய அக்கறையில்லை..
அவள் பெற்றோர் எண்பதுகளின் போர்க்காலத்தில் சிலோனிலிருந்து அகதிகளாக இந்தியா வந்தவர்கள் அவளது குடும்பம்..அவளது அம்மாவின் அப்பா மதுரை கே கே நகரில் இரும்புக்கடை வைத்து நல்ல வசதியாய்த்தான் இருக்கிறார்.. அறுபதுகளில் இங்கே வந்தவர்.. ஆறு பொண்ணு ஒரு பையன்..
மாப்பிள்ளைகளெடுத்தது எல்லாமே சிலோன் தான்..ஆனால் எல்லோரும் இந்தியாவிலிருக்கிறார்கள்.. அப்பா வகையில் அவருக்கு பூர்வீகம் ஆலங்குடி..இரண்டு தங்கைகள் மட்டுமே..அவர்கள் வாழ்க்கைப்பட்டதெல்லாம் இங்கேயே..பொற்கொடியின் அம்மா அப்பா போர் ஆரம்பிக்கும் வரை சிலோனிலேயே நகை அடமானக் கடை வைத்திருந்தவர்கள்.. சிலோனில் சண்டை ஆரம்பித்ததும் அங்கிருந்த சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு இந்தியா வந்துவிட்டனர்..
பொற்கொடியும் அவள் முதல் தம்பி பிறந்ததும் அங்கே தான்..
இந்தியா வந்ததும் ஒவ்வொரு காசாக பார்த்துப் பார்த்து செலவு பண்ணும் சூழல்.
பணம் இருப்பவர்களிடம் பழக வேண்டிய நிர்ப்பந்தம்.. அவ்வப்போது போலீஸ் என்கொயரியும் நடக்கும்.. அவள் அவ்வளவு அழகாக இருப்பார்கள்..போதாதா..!!வரும் போலீஸ் எப்படி இருப்பார்கள் என்று..நான் சொல்லியா தெரியவேண்டும்...?? ஆனால் இதெல்லாம் எதற்கென்று எதுவுமே தெரியாத பொற்கொடிக்கு நகுலனிடம் பழக ஆரம்பித்தது பிடித்திருந்தது.. மணிக்கணக்கில் பேசுவார்கள். சினிமாதான் அவர்கள் பேச்சில் அதுவும் பாடல்கள் தான் முதன்மையாக இருக்கும்..அவளுக்குப் பிடித்த பாடல்களாக இந்து மியூசிக்கல்ஸில் போய் தேர்ந்தெடுத்து கேஸட்டில் ரெகார்ட் பண்ணித் தருவான்..அவன் செலக்ட் பண்ணும் பாடல்கள் அவ்வளவும் பிடிக்கும்..அதில் பெரும்பாலும் இளையராஜா பாடல்கள்தான்.தேவா அப்போதுதான் ஆரம்பித்திருந்தார்.. “பூப்பூக்கும் மாசம் தைமாசம் “ பாடலை அவ்வளவு பிடிக்கும் பொற்கொடிக்கு..இவனுக்கோ அவள் ராதிகாவாகவும் இவன் கண்ணனுமாக நினைத்துக் கொள்வான்..
நகுலன் அவன் அப்பாவின் நாற்பதுகளில் நான்காவதாகப் பிறந்தவன்.. மூன்று அண்ணன்கள்..இடைவெளி அதிகமாதலால் நகுலனுக்கும் யாரிடமும் சரியான ஒட்டுதல் கிடையாது.அவனுக்கு பிடித்தது தனிமை,இளையராஜா,சினிமா, அதிலும் குறிப்பாக பாடல்கள் இருந்தால் போதும் சாப்பாடே தேவையில்லை..
பழகிய நான்கு வருடங்களில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இவர்கள் பேசிக்கொள்வது ஒருநாள் கூட தவறியதேயில்லை.
மழை,வெயில் புயல் ஒன்றும் பண்ணாது..ஞாயிற்றுக்கிழமை சினிமாவிற்கு அவள் அப்பா கூட்டிப்போனால் கூட அவர் கண்ணில் படாமல் இவனும் போய்விடுவான்..ரோகிணி பச்சியம்மன் தியேட்டர்களுக்கு தான் அதிகம் போவார்கள்.. அவர்களுக்கு இரண்டு சீட் பின்னால் அவள் பார்வையில் படும்படி பெரும்பாலும் சீட் பிடித்துவிடுவான்..மற்றவர்கள் பார்வையில் படாதபடி கண்களால் பேசிக்கொள்வார்கள்.
இடைவேளையில் முறுக்கு,தட்டுவடை வாங்கி அவள் ரீசஸ் போகும் பாதையில் பார்த்து கொடுத்து விடுவான்..அவளும் படம் போட்டதும் இருட்டில் யாரும் பார்க்காமல் சத்தம் வராமல் தின்றுவிடுவாள்..
பஸ் கிளம்புவதற்கு தயாரானது போல ஹார்ன் அடிக்க..
இவ்வளவு கதை பேசியாயிற்று..நினைவுக்கு வந்தான் நகுலன்.அவளைக் காணோம்.அங்குமிங்கும் பார்வையை விட அவள் இல்லை.. பஸ்ஸில் ஏறியிருப்பாளோ..பஸ்ஸினுள் கண் போக..அவள் இருந்தாற் போல் தெரியவில்லை..கிளம்பி விட்டாளோ என்று நினைத்தவாறே டூவீலர் பார்க்கிங் ஏரியாவிற்கு வந்து வண்டியை எடுத்து கிளம்பினான்..
உங்களுக்கு ஒன்று தெரியுமா..சொன்னால் நம்ப மாட்டீர்கள்..!முதலில் காதல் சொன்னது பொற்கொடிதான்..ஆமாம் இவனின் சிரிக்க சிரிக்க பேசுவதுவும் சினிமாப் பாடல்களின் தேர்வும் ரொம்ப பிடித்திருந்தது..அவள் அம்மாவே கேட்டார்.”இவ்வளவு குளோஸா பழகுறீங்களே..இது என்ன பழக்கம்..என்று கேட்க..
“நண்பர்கள்” தான் என்று நகுலனின் பட்டென்று வந்த பதிலால் அவள் அம்மா சிரித்துக்கொண்டே தலையாட்டிவிட்டு அறைக்குள் சென்று விட..திடீரென சூடாக உணர்ந்து திரும்பினால்..அனலாக இருந்தது அவளின் பார்வை..
இவன் புரியாமல் பார்க்க,
அவள் அடிக்காத குறையாய் “என்ன பையன்டா நீ.. எவ்வளவு பெரிய சான்ஸ் இது..அத கோட்டை விட்டுட்டீயே”..என்று சொல்ல..
இவன் ஒன்றும் புரியாமல் விழிக்க..
அம்மா கேட்டதும் லவ் பண்றோம்னு சொல்ல வேண்டியது தான..ஏன் பிரண்ட்ஸ் ன்னு சொன்ன..?..
என்ற கோபமாக கேட்டதும்.. இவன் மனசுக்குள் ரசித்தாலும் புரியாதவன் போல “ ஏன் கரெக்ட்டா தானே சொன்னேன்..
என்றதும் இன்னும் கோபமான அவள் “என்னது..! பிரண்ட்ஸா..!என்று அதட்டிகேட்க.., ஆமாம் என்று தோளை குலுக்க..
சட்டென்று “நீ வேணா அப்படி நெனச்சிக்கோ..நான் உன்னெ லவ் பண்றேன்!!!!..என்றதும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் மேலே தூக்கிப் பறந்தது போல் உணர்ந்தான்..அடுத்த வினாடியே கீழே விழுந்தாற்போல முன்பொருமுறை பேச்சுவாக்கில் அவள் சொல்லியிருந்தது ஞாபகம் வர..எதுவும் பேசாமல் அவளைப் பார்த்து வேல இருக்கு போய்ட்டு வர்றேன் என்று சொல்ல அவள் கூப்பிட கூப்பிட கிளம்பி விட்டான்..
இத்தனைக்கும் அவளுக்கு தாய்வழி மதுரை வளவன் மாமாவும்,தந்தைவழியில் ஏற்காட்டு ஜவஹர் மாமாவும்,இடையில் அத்தை மகன் தமிழ்குமணனும் போட்டியாக இருக்க..இவனுக்கு காதல் சொன்னது ஆச்சரியம் தான்..அவர்களுக்கோ இவனிடம் நன்றாகப் பேசினாலும் புகைச்சல் இருந்ததென்னவோ உண்மை..
அச்சம்பவத்திற்குப் பிறகு நிறைய முறை அவள் வீட்டுக்குப் போய் வந்திருந்தாலும் முன்பு போல் இவனால் சகஜமாக நடித்தாலும் அவள் இவனிடம் நல்லபடியாக பேசினாலும் அன்னியோன்யம் குறைந்திருந்தது என்னவோ உண்மை..
முன்னால் போய்க்கொண்டிருந்த வண்டி சடர்ன்பிரேக் அடிக்க அவனைவிட வேகமாக இவன் பிரேக் அடித்தான்..சிக்னல்.
எதிரில் நாலைந்து வண்டிகளுக்கு முன் ஒரு ஆக்டிவாவின் பின் அவள் அமர்ந்திருக்கிறாள்.ஓட்டுவது அவள் கணவன் சுரேஷ்.
மீண்டும் நினைவுக்குள் விழுந்தான்..லவ் பண்றேன்னு அவள் சொல்லும் போது பதில் சொல்லாமல் போனவன் மீண்டும் அவள் வீட்டுக்குப் போகும்போது அவள் சாதாரணமாக மாற ஆரம்பித்திருந்தாள்.இவன் அசாதாரணமாக மாறியிருந்தான்.
அவள் பாட்டி ஒருமுறை வீட்டிற்கு வந்திருந்தபோது “நீங்கள் என்ன ஆக்கள்” என்று நேரிடையாக கேட்க..இவனுக்கு தன் சாதி எதுவென்று தெரியாததால் ஏதோ உளறி வைக்க..பழைய மாதிரி பொற்கொடி பழகினாலும் அவள் உறவுகளிடம் வித்தியாசம் தெரிந்தது..
சிலோன் அகதிகளாக இருந்தாலும் தங்களின் வேளாளர் ஆட்களுக்குள்ளே தான் திருமணம் என்பதில் தீர்க்கமாக இருந்தார்கள்.இது எதுவும் தெரியாமல் இவன் மனதில் அவள்மேல் காதல் புற்றுநோயாய் வளர ஆரம்பித்திருக்க..அவள் மனதில் பஞ்சு மிட்டாய் காற்றில் பட்டதுபோல் காதல் குறைய ஆரம்பித்திருந்தது..
பின் ஆண்டுத்தேர்வு இருவரின் இடைவெளியை நீட்டித்திருந்தது.
பிறகு அவள் லீவிற்கு மதுரை சென்றுவிட..தேர்வு விடுமுறையில் பார்ட்டைம் வேலைக்கு சென்று விடுகிறான்..இவன் பத்தாவதிலிருந்தே இவ்வாறு விடுமுறையில் வேலைக்கு சென்று விடுவது வழக்கம்..
அவள் திரும்பி வந்ததும் ஒரு வாரம் பார்க்க முடியவில்லை. பிறகு அவள் கொடுத்த முதல் ஷாக் தான் மேலே இரண்டாம் பத்தியில் சொன்னது..
திருமணத்திற்கு இவன் போகவில்லை.நாட்கள் போனது.அவளைத் தவிர்க்க ஆரம்பித்திருந்தான்.நகுலனைப் பார்க்கவேயில்லை என்று புலம்பியதாக அவள் தம்பி சொன்னான்..பிறகு அவள் மாசமாக இருப்பதையும் சொன்னான்.பையன்தான் பிறக்கும் என்று இவன் சொல்ல சரியாக பத்தாவது மாதத்தில் பையன் பிறந்திருந்ததையும்..,பிரசவ வலியில் துடித்துக் கொண்டே ஆம்புலன்சில் போகும்போது நகுலனைப் பார்த்ததாகவும் சொல்ல..இவனுக்கு என்னவோ போலிருந்தது.அவ்வளவு வலியிலும் தன்னைத் தேடியதை நினைத்து மனதுக்குள் அழுதான்..ஆனால் நகுலன் அவள் தம்பியிடம் சொல்லிவிட்ட பெயரைத்தான் அவள் பையனுக்கு வைத்தாள்.
நினைவு கழிந்து வீட்டிற்கு வந்திருந்தான்.மனைவி வரவேற்க.பொண்ணு பேச்சுக் கொடுக்க எல்லா நினைவுகளும் காற்றில் போக..நேராக குளியலறைக்குள் நுழைந்து
குளித்து விட்டு வந்தான்..வந்ததும் புதிதாக வாங்கி வந்திருந்த பெர்ஃப்யூம் அடிக்க..
ம்ம்ம்..அப்பா..செம வாசனைப்பா..!! புதுசா என்று
மகள் கேட்க..
புதுசான்னு கேட்கிற..! எந்த ஊருக்குப் போனாலும் எது வாங்கறாரோ இல்லையோ புது பெர்ஃப்யூம் வாங்கிடுவார்னு தெரியாதா… என்று மனைவி சிரித்தாள்..
இவன் அலுவலகத்தில் இவன் வாங்கிய விருதுகள் அதிகம்..
நல்ல பெர்பார்மர்..மாதாமாதம் டார்கெட்டினை நிறைவேற்றுபவன்..
தினமும் நேரந்தவறாமல் வருவது என எல்லாவற்றிலும் விருதுகள் வாங்கிவிடுவான்.. அலுவலகத்தில் மற்ற பணியாளர்களுக்கு எரியும்.
அதுமட்டுமின்றி
நேர்த்தியான உடை அணிந்து வருவதிலும்,சுய சுத்த பராமரிப்பிலும் கூட விருதுகள் வாங்கியிருக்கிறான்..
பெர்ஃப்யூம் இல்லாமல் இருக்கமாட்டான்.எந்த ஊர் போனாலும் எதை வாங்குகிறானோ இல்லையோ பெர்ஃப்யூம் வாங்காமல் இருக்கமாட்டான்..
என்னதான் பொற்கொடி தானாய் அவள் காதலை சொல்லியிருந்தாலும்..,அவள் சொன்னதும் காதலை ஏற்காமல் கடைசிவரை காதலை சொல்லாமலே இருந்ததற்கும்.., கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து அவளைப் பார்த்தபின்னும் பேச ஆசையிருந்தும் பேசாமல் வந்ததும்..,எங்கு போனாலும் இவனின் உடையலங்காரம் சிறப்பாக இருப்பதுவும்.., இந்தப் பெர்ஃப்யூம் வாங்குவதற்கும் எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றுதான்..
கருவா..!
உன்கிட்ட ஏழைங்க மேல அடிக்கிற ஸ்மெல் அடிக்குது..!
இப்போது எவ்வளவு தான் கார் பங்களா என்று வசதி வாய்ப்புகளோடிருந்தாலும், காதலைச் சொல்வதற்கு சில வாரங்களுக்கு முன் பொற்கொடி சொன்ன வார்த்தைகளின் வாசனை கிட்டத்தட்ட 35 வருடங்கள் கடந்தும் அதன் வீச்சம் இன்று வரை வீசுகிறது..
- சண்.விஜயகுமார்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்