logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

Appusiva

சிறுகதை வரிசை எண் # 26


பிழைப்பு “நேரா போனா பஸ் ஸ்டாண்ட் போலாமா…. ? “ “நேரா போனா முட்டிக்குவீங்க… கொஞ்சம் வளைஞ்சி நெளிஞ்சி போகணும்..” என்பது ஜோக் ஆக இருக்கலாம். ஆனால் எனக்கு இதான் மெயின் ப்ராப்ளம். ஒரு பன்னிரண்டாவது படிக்கும் ஸ்கூல் பையன், சாமியாரை பார்ப்பானேன், சிக்கலில் மாட்டுவானேன். எல்லாம் கூட வந்த கபோதி சங்கரால் வந்தது. நான், நல்லா இல்லைன்னாலும் சுமாரா படிக்கும் பையன்தான். இருந்தாலும் “வாடா செந்தில், அந்த சாமியை பார்த்து ஒரு வார்த்தை கேட்டுட்டா சரியான மார்க் வாங்கலாம்“ என்ற வார்த்தைக்கு மயங்காமல் இருக்கமுடியுமா. ஊரில் பழைய கோட்டை ஒன்று உண்டு. பெயருக்குதான் கோட்டையே தவிர, மிச்சமாயிருப்பது நீண்ட மதில் சுவர்களும், ஒருசில இடிந்த கட்டிடங்களும்தான். வடக்குபக்க மதிலின் ஓரிடத்தில் மூடப்பட்ட சுரங்கப்பாதை இருந்தது. அதன் வழியாக ராஜாக்கள் பக்கத்து ஊருக்கெல்லாம் போவார்கள் என்பதை இன்னமும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அந்த மூடப்பட்ட சுரங்கத்தின் வாயிலில் சிறிய குகை போன்ற அமைப்பு உண்டு. ஒரு ஆறடிக்கு ஆறடி இருக்கும். மதிலின் கீழ்ப்புறம் ஆற்றை ஒட்டி உறவாடும் அகழி இருக்கும். காலைக்கடன்களை மறைவாய் கழிக்க ஆண்கள் ஒதுங்கும் இடமாக அந்த அகழி இருந்தது. அந்த குகையில் சில மாதம் முன் ஒரு சாமியார் வந்தமர்ந்தார். ஆரம்பத்தில் அவரை துரத்த சிலர் முனைய, ஒரு சிலரோ அவர் மாமகான் என்று பரப்பிவிட, எப்போதும்போல் பக்தியே வென்றது. அவர் சொல்வது எல்லாம் பலிக்கும் என கும்பல் கூட ஆரம்பித்தது. அங்கேதான் சங்கர் உடன் நானும் கிளம்பினேன். வீட்டில் சொன்னால் அனுமதி கிடைக்காதென சொல்லாமல்தான் கிளம்பினோம். வெள்ளிக்கிழமைகளில் அவரது வாக்கு விஷேசம் என கேள்விபட்டதால் ஒரு நடு வெள்ளிக்கிழமை நாள் குறித்தோம். பழம், வெற்றிலை ஒரு கவுளி, பாக்கு, ஒரு குவார்ட்டர் பாட்டில், ஒரு சுருட்டு பாக்கெட் என கிளம்பினோம். படையல் முடிந்து தட்சிணையை ஏர்றுக்கொண்ட சாமியார், சங்கரை பார்த்து “நீ செரியில்லயே… மனசு சுத்தம் இல்ல… மூணு வெள்ளிக்கிழமை என்னை வந்து பார் “ என்றார். அவன் முகம் செத்துவிட்டது. என்னை பார்த்த சாமி, சிறிது கண்ணை மூடி, “ எப்பவும் நேரா போ… போனவழியிலேயே திரும்பு….. சிக்கல் பண்ணிடாதே… சரியாயிடும் “ ன்னார். வந்துட்டோம். “ சாமியாடா அவன் , ஃப்ராடுப்பய… மூணுவாரம் குவார்ட்டர்க்கு அடிபோடறான்… திருட்டுப்பய..” என்று சங்கர் புலம்பிக்கொண்டே வந்தான். நான் ஏதும் பேசவில்லை. அடிப்பான் போல. அன்றிரவு ஆரம்பித்தது வினை. நன்றாக தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென முழிப்பு வந்திட்டது. நான் போனது வடக்கு ரோடு வழியாக, திரும்ப வரும்போது வந்த வழியிலேதான் வந்தோம்… ஆனா இடிக்குதே… நடுவில் சங்கர் திருட்டு தம் அடிக்க, சந்து வழியாக நுழைந்து அப்புறம் தென்புற ரோடு வழியாக வீட்டுக்கு வந்திருக்கேன். எப்படி பார்த்தாலும் ஒரு நூலில் முடிச்சு விழுவதுபோல் சிக்கல் ஒண்ணு மாட்டுது. சிக்கல் பண்ணிடாதேன்னு சாமி சொல்லிச்சே.. எழுந்தேன். மெதுவாக கதவை திறந்தேன். “ என்னடா… சத்தம்..? “ என்ற அம்மாவுக்கு, “ ஆத்துக்கு போய்ட்டு வரேம்மா “ என்றேன். ஆத்துக்கு போனால் டூ பாத். திறந்தவெளி. “ நேரம்கெட்ட நேரத்தில வருது பாரு… குச்சி எடுத்திட்டு போ..” அம்மா. நடந்து தெற்கு ரோட்டை அடைந்தேன். ஒரு சுற்று சுற்றி அந்த பெட்டிக்கடை பெஞ்சில் உட்கார்ந்தேன். திடீரென்று அந்த மனிதன் எங்கிருந்து எழுந்தானோ… “திருட்டுப்பயலே… நீதான் தெனம் கதவு சந்தில கைவிட்டு பீடி எடுக்கறயா…அடிங்…“ என்றவாறு துரத்த ஆரம்பித்தான். இருளில் நல்லவேளையாக என்னை தெரியவில்லை. இல்லாவிட்டால் காலையில் தெருவே நாறிவிடும். நான் கையில் இருந்த துண்டை தலைக்கு சுற்றிக்கொண்டு லுங்கியை தூக்கிப்பிடித்துக்கொண்டு இரண்டு நாய்களின் துரத்துதலையும் மீறி ஓட்டமான ஓட்டத்தில் வடக்கு தெரு வழியாக வீட்டுக்குள் புகுந்து மணிபார்த்தேன். இரவு ஒரு மணி. பொட்டிக்கடைக்காரன் கொஞ்சுவானா. இறுக போர்த்து படுத்துக்கொண்டேன். ஓவர் டென்ஷனையும் மீறி மனதில் இருந்த முடிச்சு விலகி வழிவிட நன்றாக தூங்கினேன். அடுத்தடுத்த நாட்களில் வந்த வழிகளிலேயே திரும்பி சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டேன். ஆனாலும், “பக்கத்தில் இருக்க கடைக்கு ஏண்டா சைக்கிள்ல மூணுதெரு சுத்திட்டு போற “ என்ற அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்வது இல்லை. பெரிய சிக்கல் ஆனது ஒருவாரத்தில் வெளியூர் சென்றபோதுதான். இரண்டு கல்யாணங்கள் ஒரே நாளில் வர, கொஞ்சம் தூரத்து சொந்தம் வீட்டுக்கு நான் மட்டும் போய் மொய் வைத்தால் போதும், என்று சொல்லிவிட்டு அம்மா, மாமா வீட்டு கல்யாணத்துக்கு போய்விட்டார்கள். அந்த ஊர் எங்கள் ஊரில் இருந்து இரண்டு மணி நேர பயணம். நல்லபடியாக போய் மரியாதை செய்துவிட்டு, அங்கேயும் போன வழிகளை ஞாபகம் வைத்து நல்லபடியாகதான் பஸ் ஏறினேன். என் நேரம், வழியில் நன்றாக தூங்கிவிட்டேன். கிட்டத்தட்ட மூண்று மணி நேரம் கழித்துதான் ஊர் வந்தேன். சும்மா வந்திருக்கலாம். “ ஏண்ணே லேட்டு ? “ என்று கண்டக்டரை கேட்கப் போக, “தெரியாதா தம்பி, வழியில ஏதோ ஜாதிக்கலவரம்னு மரம்லாம் வெட்டிப்போட்டு கலாட்டாப்பா…. “ என்றார். “ சரி… அதுக்கு? “ “ மூணு ஊரு சுத்தில்ல பஸ் வந்தது.. ” “ என்னா……. து…. மூணு ஊரா… “ சோலி முடிஞ்சுது. அதுக்கப்புறம் அது என்னென்ன ஊர், எப்படி வழி எல்லாம் அந்த கண்டக்டரிடம் கேட்டு, அவர் ஏற்கனவே இருந்த டென்ஷனில் கண்டமேனிக்கு கத்தி, ஒருவழியா சொன்னார். திரும்ப பஸ் ஏறி, வரிசைக்கிரமமாக அந்தந்த ஊர்களுக்குப்போய் , மரம் வெட்டிய ஊர் வழியா வந்து, ( அது சின்னூண்டு நொனா மரம் ) விட்டிருந்தா கிட்டத்தட்ட இடியாப்ப சிக்கல் விழுந்திருக்கும்போல. மதியம் இரண்டு மணிக்கு வீட்டுக்கு வர வேண்டிய பையன் , இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தா சும்மா இருப்பாங்களா, சரியான திட்டு. அம்மா கும்பலையே கூட்டி விட்ருக்கு. நான் கல்யாணத்துக்கு போன தூரத்து சொந்தமான சித்தப்பாவும் வீட்ல இருக்கார். “ ஏன் தம்பி , நான் உன்னை கரெக்டா பஸ் ஏத்தி விட்டேனா.. ? “ சித்தப்பா. “ ஆமாங் …… சித்தப்பா.. “ “ பஸ் ஊருக்கு வந்துச்சா… “ “ வந்துது…. “ “ எங்க போன… ? உங்க அம்மா என் வூட்டுக்கு ஃபோன் பண்ணி, கலாட்டா பண்ணி, பொண்ணு மாப்ள கூட போகாம நான் இங்க வந்து உட்கார்ந்திருக்கேன்… “ “ சொல்லேண்டா… வாயில என்ன வடையா வச்சிருக்க…” அம்மா. “ வந்து… பஸ்… வேகாம… ல்ல… வேகமா போயி… “ நல்லவேளையாக பக்கத்து வீட்டு பாட்டி உதவிக்கு வந்தார். “ சரி உடுங்கப்பா… புள்ள பஸ்ல தூங்கியிருப்பான்.. “ “ ஆமா… தூங்கிட்டேன்.. திரும்ப அந்த ஊருக்கே போய்டுச்சு… அதான்.. “ “ அப்படின்னாகூட மூணு தடவை போய்ட்டு வந்திருக்கலாமேடா… “ என்றார் சித்தப்பா .”மூணு தடவ தூங்கியிருப்பான் …. விடுங்கப்பா… புள்ள ஊடு வந்து சேர்ந்துடுச்சில்ல… “ என்று மறுபடி காப்பாற்றினார். அதன் பின் இதுபோன்ற சுத்தல்களில் மாட்டாமல் வெகு ஜாக்கிரதையாக இருந்தேன். ஊரெல்லாம் முழுதாக இடித்து தள்ளிவிட்டு, ஒரே பாலைவனம் போல இருந்தா, இந்த சந்து பொந்தெல்லாம் ரப்பர் வச்சு அழிச்சுட்டா எந்த கஷ்டமுமில்லாம சுத்தலாம்னு தோன்றியது. ஆனா அது முடியாதே. அதனால் ஒரு வரைமுறை வைத்துக்கொண்டேன். நேரே வடக்குதெரு, நேர் ரோடு , முக்கு மசூதி ஒட்டினாப்ல சின்ன முட்டுசந்து, அதுவழியா புகுந்தா ட்ராஃபிக் மாட்டாமல் மெயின் ரோடு… விடு ஜூட்… ஸ்கூல். இப்படியா ஒரு வாரம் போச்சு. இந்த சாமியார்ட்ட போதுமான்னு கேட்கலாம்னு பார்த்தா, குவார்ட்டர் ரீசேல் பண்ற தகறாரில், சிஷ்யனுங்களோட கட்டிப்புரண்டு சண்டை போட்டு, ஊரே வேடிக்கைபாத்து, வெட்கம் தாளாம ஓடிட்டாராம். சங்கர் விழுந்து விழுந்து சிரிக்கறான். ஆனா என் மனசு பைத்தியமா ஆச்சே.. என்ன பண்றது.. ஆனா , ஒரு நாள்… அதே ஒரு வெள்ளிக்கிழமை. லேட் ஆச்சுன்னு வேகவேகமா கிளம்பறேன். மசூதி கிட்ட செம கூட்டம். ராமு அண்ணன் ஒரு நாலுபேர மசூதி வாசல்ல கட்டிவச்சு செம பின்னு பின்றார். கூட சைக்கிள் கடை ‘லட்சு’ ன்ற லட்சுமணன், அடிக்கற குச்சி உடைய உடைய புதுசு எடுத்து தர்றார். இந்த டீகடை கிருஷ்ணன் கிழவன் கெட்டகேட்டுக்கு ஓடிவந்து ஓடிவந்து உதைக்கிறார். காதர் பாய், ராமு அண்ணங்கிட்ட வந்து, “ விடு ராமு, தெரியாம பண்ணிட்டாங்க, ரொம்ப அடிக்காதே… பாவமா இருக்கு “ ன்றார். ராமு ஏற்கனவே கோபக்காரர், “ இந்தா காதரு…. வேலய மட்டும் பாரு.. என்னா தைரியம் இருந்தா வெளியூர்ல இருந்து வந்து நம்ம மசூதி மேல கை வப்பானுங்க… யார் கொடுத்தா தைரியம் “ னு செம குதி குதிக்கிறார். முட்டுசந்து கடைசீல இருக்கிற குட்டிசெவத்துல உட்காந்துட்டு வாண்டுங்க கைதட்டி சிரிக்குதுங்க. அடிக்கிறத தடுக்க வந்த உசேனை அப்படியே அலாக்கா தூக்கிட்டு போய், “ மச்சான், நீ வேடிக்கை மட்டும் பார்றா.. ” ன்னு லட்சுமணன் சொல்றார். நான் லேட்டாவறத மறந்து என்னன்னு விசாரிச்சேன். இருட்டு கலையறதுக்கு முன்னால இந்த நாலு பேரும், மசூதி செவுத்தில் காவி கலர் அடிச்சு, ஏதோ எழுதியிருக்காங்க. அதோட கார்னர் பக்கமா, சுத்தி மாதிரி வச்சு லேசா இடிச்சிருக்கானுங்க. ரெண்டுமூணு செங்கல் பேர்ந்திருக்கு. சத்தம் கேட்டு ஓடிவந்த டீகடை கிருஷ்ணனை கீழ தள்ளியிருக்காங்க. அப்புறம் கேட்கணுமா. இது ஏதோ வெளியூர் மாதிரி நெனச்சிட்டாங்க போல. இங்க ஜனங்க சாமி கும்பிடற இடம் எல்லாம் ஒண்ணுதான்னு இவனுங்களுக்கு தெரியல. அதான் ராமு போட்டு பிச்சியெடுத்திட்டிருக்கார். அவர் தண்ணிகுடிக்க ஒதுங்க, கட்டிவச்சிருந்த நாலு பேரையும் நெருங்கி பார்த்தேன். “ தெரியாம பண்ணிட்டோம் பாய்… தண்ணி குடுங்க பாய்.. “ ன்னு ஒருத்தன் கதற்றான். காதர் பாய் அவனுங்களுக்கு தண்ணி குடுக்க, இந்த குரலை எங்கயோ கேட்ட ஸ்பார்க் அடிச்சது. உறுத்துப்பார்த்தேன். நெத்தியில் நாமத்தை அழிச்சிட்டு, பட்டையா திருநீறு பூசி, தாடிமீசை வச்சா… அட குகை சாமியார்.. அடப்பாவி… எதுக்காக இப்படியெல்லாம் பண்றானுங்க, பரதேசிப்பயலுக.. அவன் பக்கத்தில போனேன். “ தம்பி, பார்த்தா நல்லபிள்ளையா இருக்க.. கொஞ்சம் விட சொல்லேன் “ ன்னான். “ இது மாதிரி வளஞ்சி வளஞ்சி போகாதே… நேரா போ … சரியா போய்டும் “ ன்னேன். அவன் திருதிருன்னு முழிக்கறான். அப்புறம் லேட்டா போய், திட்டு வாங்கி, நண்பர்களை பார்த்துட்டு வீடு வர ஏழுமணியாச்சு. சாப்பிட்டு அப்பாடான்னு படுக்க போகும்போதுதான், அட… ன்னு தோணுச்சு. செம சுத்து சுத்தியிருக்கேன். இன்னிக்கு மனசில சிக்கல் விழவே இல்லை. நிம்மதியா தூங்கினேன்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.