logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

Thippurahim

சிறுகதை வரிசை எண் # 3


அரசியல் அனாதை ஊர் முழுவதும் பிரச்சார வாகனங்களின் அணிவகுப்பு இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் பிரச்சாரம் முடியப்போகிறது. கீழத்தெருவில் பேச்சியம்மாளின் வீட்டு திண்ணையில் சில பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அந்த வீட்டைக் கடந்த ஒரு மூன்று சக்கர வாகனத்தில் சொக்கலிங்கம் ஒலிவாங்கியில் தொண்டை நரம்புகள் புடைக்க "உங்கள் பொன்னான வாக்குகளை அண்ணன் மணி அவர்களுக்கு நத்தை சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்". என்று கூறிக்கொண்டு இங்கிருந்தவர்களுக்கு கையை அசைத்தவாறு கடந்து சென்றான். பேச்சியம்மாளின் மகன் சொக்கலிங்கம் வீடு தான் அது. பேச்சியம்மாள் அந்தப் பெண்களிடம் "பாத்தீங்களாடி என் புள்ளைய? எவ்வளவு அருமையா பேசுது. சின்ன புள்ளையிலிருந்தே அது நல்லா பேசும்." என்று தன் மகனைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் ஜன்னலின் உட்புறம் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தின் மனைவி மாருதிக்கு கடும் எரிச்சலாக இருந்தது. "ஆமா உருப்படாத பிள்ளையைப் பெத்து இதில் பெருமை வேற கிழவிக்கு தூ..." என்று சத்தம் இல்லாமல் சொல்லிக் கொண்டாள். சொக்கலிங்கத்தின் தந்தையும் மாருதியின் தந்தையும் நண்பர்கள் இருவரும் கடும் உழைப்பாளிகள், விவசாயிகள். அந்த பழக்கத்தில் தான் இருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். சொக்கலிங்கத்திற்கு தற்போது ஒரு ஆண் ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகள் உள்ளது. மாருதி திருமணம் முடித்து வந்ததிலிருந்து எப்படியாவது முன்னுக்கு வந்து விடுவோம்! என்று நம்பிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் அவனோ அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என்று கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறான். சொக்கலிங்கத்தின் இரண்டு குழந்தைகளும் அரசு பள்ளிக்கூடத்தில் தான் படித்துக் கொண்டிருக்கிறது. தங்கள் கட்சியை சார்ந்த தலைவர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இவன் ஒலிபெருக்கியாகவே இருக்கிறான். மனைவி பிள்ளைகளின் எந்த ஆசையையும் இவன் இதுவரை நிறைவேற்றி தரவில்லை. பெயருக்கு புருஷன் அவ்வளவு தான். மாருதி ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிறாள். எத்தனையோ தடவை அவனிடம் வேலைக்குப் போகுமாறு சண்டைப் போட்டும் அவன் மாறவில்லை. அவனுக்கோ எப்படியாவது அரசியலில் ஒரு "முக்கியமான இடத்தை பிடிக்க வேண்டும்" என்று கடந்த பதினைந்து ஆண்டுகளாக கட்சியின் எடுபிடியாக இருக்கின்றான். கட்சி அலுவலகத்திற்கு வரும் அத்தனை பேருக்கும் இவனை தெரியும். கட்சியின் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வான். அலுவலகத்தை பூட்டி வைக்கக் கூடாது என்று யாரும் இல்லாத போதும் அவன் மட்டும் போய் அமர்ந்திருப்பான். அந்த கட்சி அலுவலகத்தை அவன்தான் இதுவரை காத்து வருகிறான். இதுவரை எதிர்க்கட்சியாகவே இருந்த அவனது கட்சி இந்த தேர்தலுக்குப் பிறகு ஆளும் கட்சியாக வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக தெறிவித்திருந்தார்கள். அந்த அறிவிப்பில் அவனது கட்சியை விட இவன்தான் அதிக சந்தோஷத்துடன் உழைத்துக் கொண்டிருந்தான். அக்கட்சி ஜெயித்தால் கண்டிப்பாக தனக்கு ஒரு பொறுப்புக் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். நினைத்ததுப் போலவே தேர்தலில் அமோக வெற்றி பெற்று அவன் சார்ந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அன்று சொக்கலிங்கத்தின் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. மாநிலத் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கட்சி அலுவலகத்திற்கு வருகிறார்கள். சொக்கலிங்கத்தை கையில் பிடிக்க முடியவில்லை. அவர்களை அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் "எப்படியாவது அவர்களிடம் பேசி ஒரு பொறுப்பை வாங்கி விட வேண்டும்" என்று முடிவோடு இருந்தான். அது அத்தனை பெரிய அலுவலகம் இல்லை. மாநிலத் தலைவர்கள் அத்தனை பேரும் வந்து விட்டார்கள். ஆனால் பரிதாபம் சொக்கலிங்கம் இத்தனை நாள் கட்டிக் காத்த அந்த அலுவலகத்தின் பக்கத்தில் கூட நெருங்க முடியவில்லை. காவல்துறை கடுமையாக விரட்டியது. "சார் சார் நான் அந்த கட்சிதான் சார் நான் உள்ளே போகனும் சார் ." "கட்சில எந்த பொறுப்புல இருக்க நீ?" என்று அங்கு நின்ற ஒரு காவலர் கேட்டார். என்ன சொல்வதென்றுத் தெரியாமல் சற்று தடுமாறி "ஐயா நான் பொறுப்புல இல்ல. இந்த அலுவலகத்தை நான் தான் ஐயா பாத்துக்குறேன்" என்றான். "சரி சரி எல்லாம் போனதுக்கப்புறம் வந்து பாத்துக்க" என்று அந்த காவலர் கிண்டலாக கூறி கையில் இருந்த கம்பை ஓங்கி விரட்டினார். அத்தனை நாள் தன்னை தெரிந்தவர்கள் யாராவது கூப்பிடுவார்கள் என்று நினைத்தான். ஒருவரும் கண்டு கொள்ள வில்லை. இவனும் கைகளை தூக்கி "அண்ணன் அண்ணன்" என்று சத்தமிட்டான். ஒருவரும் இவனைப் பார்க்க வில்லை. வேறு வழி இல்லாமல் தூரத்திலிருந்தேப் பார்த்துக் கொண்டிருந்தான். தன் கட்சியின் தலைவர்களுடன் இதுவரை கட்சி அலுவலகமே வராதவர்கள், செல்வந்தர்கள், பெரும் தொழிலதிபர்கள் எல்லாம் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக தலைவர்கள் போனதும் கூட்டம் கலைந்து அலுவலகம் குப்பை கூடமாக மாறிக் கிடந்தது. இவனும் சில கட்சி பொறுப்பாளர்கள் மட்டும் அங்கே இருந்தார்கள். மிகவும் மன வருத்தத்துடன் தனது கட்சியின் அலுவலகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் உள்ளுக்குள் ஓடியது... "எத்தனை ஆண்டுகள் உழைத்தாலும் நாம் அரசியல் அனாதை தான் போல? வெறும் எடுபிடியாகவே நம்மையெல்லாம் வைத்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் முன்னேறலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நமக்கு அரசியல் புரிய வில்லை. அரசியலில் வளர்வதற்கு உழைப்பு மட்டும் பத்தாது சில வித்தைகளும் தெரியவேண்டும்" என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். அப்போது அங்கு வந்த நகர் மன்ற தலைவர் கட்சி அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் கடந்த குப்பைகளையும் நாற்காலிகள் எடுத்து வைக்காததையும் பார்த்தவுடன். அப்போதுதான் அவருக்கு சொக்கலிங்கம் ஞாபகத்துக்கு வருகிறான். "ஏப்பா எங்கப்பா சொக்கலிங்கம் கூப்பிடுங்க இதையெல்லாம் எடுத்து வைக்கச் சொல்லுங்க சுத்தம் பண்ண சொல்லுங்க?" என்று சொல்லிக்கொண்டு சொக்கலிங்கத்தை தேடினார்கள். சொக்கலிங்கம் தன் வீட்டிற்கு வந்து தன் மனைவியின் கையை பிடித்து அழுது கொண்டே "இனி நீ வேலைக்குப் போகாதே நம் குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு" என்று தன் மனைவியிடம் மன்றாடி கொண்டிருந்தான். மாருதிக்கு தன் புருஷன் மனம் திருந்தி வந்திருப்பதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. திப்பு ரஹிம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in