tho pathinathan
சிறுகதை வரிசை எண்
# 2
தேசிய கீதம்
தொ பத்தினாதன்
—--------------
ஓடு போடப்பட்ட வீட்டுக்கு பின் பக்கம் கக்கூசடியில் வைத்திருந்த வாழை மரம் வீட்டுக்கு மேலாக வளர்ந்து அதன் குலை ஓட்டுமேல ஒய்யாரமாக உக்காந்து பெருத்துக் கொண்டிருந்தது. பாத்ரூமில் குளிக்கும் நீர் அதுக்கு போதுமானதாக இருந்தது. தென்னங்கிடுகால் சுத்தி வேலி அடைக்கப்பட்ட தற்காலிக வளவுக்குள், பத்துக்கு பத்து ஒரு அறையும் அதன் முன்பாக பத்துக்கு பத்து ஒரு விறாந்தையுமிருந்தது. இது அவர்கள் வசதிக்கு அவர்களாக பத்தாண்டுகளுக்கு முன் மூன்றாவதாக கட்டிக் கொண்டது. இதற்கு முன் கட்டிய இரண்டு தடவைகளும் ஓலையால் கட்டப்பட்டது.
அறைக்குள் ஒரு மூலையில் இருந்த பீரோவுக்கு பக்கத்தில் இரும்பு கட்டில் அதன்மேல் போடப்பட்ட மெத்தையை அரசு இலவச டோக்கன் கொடுத்து கோஆப்டெக்சில் வாங்கிய போர்வை மூடியிருந்தது. முன் விறாந்தையில் பிளாஸ்ரிக் கதிரையும் நான்கும், அதன் முன் பிளாஸ்ரிக் டீப்பாயும் இருந்தது.
முன் விறாந்தை ஒட்டி வடக்குப் பக்கமாக சாய்ப்பு இறக்கப்பட்டு அதற்குள் சுவரில் சிலாப்பு வைத்து தடுக்கப்பட்ட செல்பில் புத்தகப் பைகளும் புத்தகங்களுமாக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் பக்கவாட்டில் மண் சுவரும் தலையில் கூரையும் முட்டி விடும். தட்டு முட்டு சாமான்களுடன் ஒரு தையல் மெசின் இருந்தது. அதனருகில் கொஞ்சம் தைக்கப்பட்ட துனிப்பைகளும் தைக்கப்படாத துணிகளும் தரையில் கிடந்தது.
வெள்ளிக் கிழமை காலையில் விறாந்தையின் மூலையில் முன்பு அரசு கொடுத்த தொலைக்காட்சி மாற்றப்பட்டு புதிதாக 21 இஞ்சி எல்ஜி தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
வீட்டை ஒட்டினாற்போல் தகரத்தால் அடைக்கப்பட்ட கொட்டில் குசுனிக்குள் இருந்து பள்ளிக்கூடம் போகும் மகன்களுக்காக சமைத்துக்கொண்டிருந்த ரோஸ்மேரி காதில்…
“நாளை இந்திய ஜனாதிபதி ஒருநாள் பயணமாக மதுரை வருகிறார். அவர் வருகையை ஓட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக போக்கு வரத்தில் மாறறங்கள் செய்யப்பட்டுள்ளது. காலை மதுரை மீனாச்சியம்மனை தரிசிக்க வரும் அவர் மதியமே மதுரை விமான நிலையத்திலிருந்து, தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்வார்” இப்படி செய்தி தொடர்ந்து போய்கொண்டே இருந்தது. காலை மகன்களை பள்ளிக்கூடம் அனுப்பும் பரபரப்பிலிருந்த ரோஸ்மேரியின் பரபரப்பு தொலைக்காட்சி செய்தியைகேட்டதும் சற்றுத் தணிந்தது. அவர்களின் முப்பதாண்டுகால அகதி முகாம் வாழ்க்கையில் இது பழக்கப்பட்டிருந்தது.
கக்கூசுக்குள்ளிருந்து
“அம்மா அம்மா”
என்று மகன் குயின்ரன் கத்தினான்
“ஏண்டா சனியன் பிடிப்பானே இப்படி ஊரக்கூட்டுற மாதிரி கத்துற”
“தண்ணியில்லம்மா”
“இரு வாறன்”
அடுப்பில இருந்தத இறக்கி வச்சிட்டு குசுனிக்குள்ள இருந்த ஒரு குடத்த தூக்கி இடுப்பில வைத்துக் கொண்டு கக்கூசடிக்கு போனாள். குயின்ரன் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு கக்கூஸ் கதவை திறந்தான். “தண்ணி இருக்கா இல்லையான்னு கூட பாக்காமலா உக்காந்த “
“ஸ்கூளுக்கு நேரமாச்சுமா அதான் அவசரத்துல கவனிக்கலம்மா”
இன்னைக்கு நீ பள்ளிக்கூடம் போகத்தேவல”
“அம்மா இன்னைக்கு ரிவிசன் எக்சாம் இருக்கு” என்று பரபரத்தான்
“என்ன இருந்தாலும் நீ இன்னைககு போக முடியாது” என்று உறுதியாக சொன்னாள்.
“ஏம்மா போகமுடியாது ஸ்கூளுக்கு லீவா” “பள்ளிக்கூடம் நடக்கும் நாமதான் போக முடியாது ஜனாதிபதி மதுர வர்ராராம் அதனால முகாம்ல இருந்து யாரையும் வெளிய போக விடமாட்டாங்க”.
“அப்ப அண்ணா மட்டும் எப்படி காலேஜ் போனான்”
அவன் எங்கடா காலேஜ் போனான் அவன் பந்து விளையாட போயிட்டான்”. பேசிக்கொண்டே பாத்ரூம்ல கிடந்த அழுக்கான பள்ளிக்கூட யூனிபோம் எல்லத்தையும் எடுத்து வாளிக்குள்ள போட்டு விட்டு குசுனிக்குள் வந்தாள்.
குயின்ரனுக்கு ஏற்கனவே இதுபோல் நடந்தது ஞாபகத்துக்கு வந்தது. இன்னைக்கு ஜாலி ரிவியில படம் பார்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.
திங்கட்கிழமை
காலை பரபரப்படன் எட்டு மணிக்கு வீட்டிலிருந்து குயின்ரன் ஸ்கூளுக்கு புறப்பட்டான். பத்து நிமிட நடையில் பேருந்து நிறுத்தத்தில் நின்றான். பேரூந்து நிறுத்தத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. நிரம்பி வளிந்த கூட்டத்துடன் ஒரு பேரூந்து வந்தது. அதில் அவன் ஏறவில்லை அடுத்த பேரூந்தில் போகலாம் என்று நின்று கொண்டான். அவனுடன் கூடப்படிக்கும் பக்கத்து வீட்டு கென்சாவை அவளுடைய அப்பா மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து இறக்கிவிட்டார். இவனருகில் வந்த கென்சா “கோம்வேர்க் செய்திட்டியா நான் செய்திட்டன்”. ஹோம்வர்க் செய்தமகிழ்ச்சி அவள் முகத்தில் பிரதிபலித்தது. பெருமையாக கூறினாள்.
“நீ வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடம் போனியா?”
“இல்ல”
“அப்புறம் எப்புடி நீ கோம்வேர்க் செய்த”
“நான் கவுசிங்போடு பிரியங்காகிட்ட போன்ல கேட்டேன்.”
குயின்ரனுக்கு பக் என்று அதிர்ச்சியானது.
“அப்ப எனக்கும் நீ சொல்லியிருக்கலாம்தானே”
“நீ கேட்டிருக்கலாம்தானே”.
மேற்கொண்டு பேசுவதை நிறுத்திக் கொண்டான்.
ஹோம்வேர்க் செய்யவில்லை என்ற பதற்றம் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. கென்சாவைப்போல் நீயும் ஹொம்வேர்க் செய்திருக்கலாம்தானே என்று ரீச்சர்கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற யோசனை அவனுக்கு இன்னாராமேல் என்று சொல்லமுடியாத கோவத்தையும் ஏற்படுத்தியது. இப்படியான நேரங்களில் ஊமையாகிவிடுவது அவன் இயல்புத்தன்மை.
அடுத்தடுத்து பேரூந்துகள் வரவும் கென்சியா ஓடிப்போய் பேரூநதின் முன்பகுதியில் ஏறவும் இவன் பின் பகுதியில் ஏறிக் கொண்டான்.
8.30 க்கு பள்ளிக்கூடத்தை அடைந்தான் இன்னும் வகுப்பாசிரியர் வரவில்லை. வகுப்பாசிரியர் வந்தால்தான் வகுப்பறைக்கு போக முடியும் என்ற நடைமுறை இங்கு இருப்பதால் வேப்பமரத்தடியில் நின்றான். கூட படிக்கும் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருத்தராக வர ஆரம்பித்தார்கள். பள்ளிக்கூட வேன் வந்தது. ஆசிரியர்கள் வந்தார்கள். பரபரப்பாக இருந்தது பள்ளி வளாகம். வகுப்புத்தோழன் மில்டன் இவனருகில் வந்தான். கிரிக்கட் பற்றி ஏதோ பேசினான். குயின்ரனுக்கு அவனுடன் அரட்டையடிக்கும் மனநிலை இருக்கவில்லை. வெள்ளிக் கிழமை பள்ளிக்கூடம் வராததும், அதனால் ஹோம்வேர்க் செய்யாததும் அவன் மூளைக்குள் நின்றாடியது. வகுப்பாசிரியர் வரவும் எல்லோரும் வகுப்பறைக்கு போனார்கள்.
வகுப்பறையில் அவரவர் இருக்கையில் அமர்ந்து குசுகுசு வென்று பேசிக்கொண்டிருந்தார்கள். குயின்ரன் எவருடனும் பேசாமல் அமைதியாக இருந்தான். சோசியல் சைன்ஸ் ரீச்சர்தான் இவர்களுடைய வகுப்பாசிரியர். இவர் புதிதாக மாற்றலாகி வந்தவர். பத்தாவது பப்ளிக் எக்சாம் என்பதால் கண்டிப்பான ரீச்சர்.
“குயின்ரன் ஏன் இரண்டு நாளாக பள்ளிக்கூடம் வரவில்லை” என்று வகுப்பாசிரியர் கேட்கவும் குயின்ரன் பதில் ஏதும் கூறாமல் எந்திருச்சு நின்றான். கென்சாவும் அவளாக எந்திருச்சு நின்றாள். குயினரன் எதுவும் சொல்லாமல் நின்றான. ஆசிரியரின் பார்வை கென்சியா பக்கம் திரும்பியது. “ஜனாதிபதி வந்ததால எங்கள முகாம விட்டு வெளிய போககக்கூடாது என்று அதிகாரிகள் சொல்லிட்டாங்க ரீச்சர்” என்றாள் கென்சா.
“ஜனாதிபதி வந்தால் நீங்க ஏன் பள்ளிக்கூடம் வரக்கூடாது.” என்று புருவத்தை உயர்த்தி ஆச்சர்யமாக கேட்டார்.
“எல்லாரும் முகாம்ல இருக்கிறமா என்று செக் பண்ணுவாங்க ரீச்சர்”
ஆசிரியருக்கு அதை நம்பமுடியாமல் இருந்தது. அவருக்கு இதுபோல் முன் அனுபவம் இருந்ததில்லை. ஓய்வு பெற்ற பழைய வகுப்பாசிரியருக்கு இந்த முகாம் நடை முறை ஓரளவு தெரியும். அவரும் பழக்கப்பட்டிருந்தார்.
“அதுக்கு படிக்கிற பிள்ளைகளையுமா செக் பண்ணுவாங்க”
“ஆமா ரீச்சர்”
“அப்ப முகாமில இருந்து இரண்டு நாளும் யாருமே பள்ளிக்கூடம் வரலியா”
“ஆமா ரீச்சர்”
குயின்ரன் எதுவும் பேசாமல் நின்றான். ஏனைய வகுப்பு பிள்ளைகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இந்த நடைமுற பழக்கப் பட்டிருந்தது.
8.40 க்கு பிறேயர் பெல் அடித்தது. எல்லோரும் பிறேயர் கிறவுண்டுக்கு வந்து வரிசையாக நின்றார்கள். அவரவர் வகுப்பாசிரியர்கள் தங்கள் மாணவர்கள் நிக்கும் பக்கமாக நின்று மாணவர்களை கவனித்துக் கொண்டு நின்றார்கள்.
இங்கு திங்களும் வெள்ளியும் மட்டுமே இந்த அசம்பிள் நடக்கும். பிரின்ஸ்பல் பாதர் கொடி ஏற்றினார். பைபிள் படிக்கப்பட்டது. திருக்குறல் ஆங்கிலத்திலும் தமிழிலும் படிக்கப்பட்டது. மேடையில் நின்றிருக்கும் பிரின்சிபல் பாதருக்கு பின்னாடி உள்ள பெரிய சுவரில் பழக்கப்பட்ட கொழுத்த பல்லி ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்ததை குயின்ரன் கவனித்தான். நன்நெறி போதனை சொல்லப்பட்டது. எல்லோரும் தீவிரமாக அல்லது அவ்வாறான பாவனையில் நின்று கொண்டிருக்க, அலட்சியமான மன நிலையில் வேண்டா வெறுப்பாக பல்லியையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் குயின்ரன். வளைந்து வளைந்து ஊர்ந்து வந்து கொண்டிருந்தத பல்லி வேகமாக வந்து ஒரு இடத்தில் அசையாமல் நிலை குத்தி நின்றது. அதன் வால்கூட ஆடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது இயல்பாக இருந்தவர்கள் எல்லாம் விறைப்பாக மாறினார்கள். இரண்டு கால்களும் ஒட்டினால் போல் நேராக வைத்துக் கொண்டார்கள். ஆசிரியர்கள் அவரவர் வகுப்பு பிள்ளைகளை ஒழுங்காக பாடுகிறார்களா? ஒழுங்காக நிக்கிறார்களா? என்று கவனித்த வண்ணமிருந்தார்கள்.
கடைசியாக தேசிய கீதம் பாடப்பட்டது பழக்கதோசத்தால் தமிழ்தாய் வாழ்த்துக்கு முணுமுணுத்துக் கொண்டிருந்த குயின்ரன் தேசியகீதம் பாடும்போது வாயை அசைக்காமல் இறுக்கி மூடிக் கொண்டான், விறைப்பாக இருந்த உடலை தளர்த்திக் கொண்டான். இறுக்கி பொத்தியிருந்த கையை இளக்கிக் கொண்டான்.
சுவரில் சலனமற்று இருந்த பழக்கப்பட்ட கரும் பல்லி பாய்ந்துவந்து ஒரு பூச்சியை வாயால் கவ்விக் கொண்டது. பூச்சி மெதுமெதுவாக அதன் வயிற்றுக்குள் போனதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அசம்பிளி முடிந்து வகுப்புக்கு வந்த ஆசிரியர் குயின்ரனை கூப்பிட்டு முன்னால் நிறுத்தி
“நீ ஏன் தேசிய கீதம் பாடாமல் நின்றாய்”
அவன் பதில் சொலலாமல் தலையை தொங்க போட்டுக் கொண்டு நின்றான். ஆசிரியர் மிரட்டும் விதமாக சற்று கனத்த குரலில் அழுத்தமாக
“குயின்ரன் நீ ஏன் தேசிய கீதம் பாடவில்லை, நீ வாயத்துறந்து சொல்லாவிட்டால் பிரின்ஸபல்கிட்ட அனுப்பிருவேன்”.
ஆசிரியரை நேருக்கு நேர் எதிகொள்ள முடியாமல் பார்வையை விலத்தி,
“நான் ஏன் தேசிய கீதம் பாட வேண்டும்”?
ஆசிரியரின் முதுகுப் பக்கமிருந்த கரும்பலகையில் அவன் பார்வை நிலை குத்தியிருந்தது.
@@@
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்