Anbazhagan G
சிறுகதை வரிசை எண்
# 1
பைத்தியக்காரர்கள்
- அன்பழகன்ஜி
வரவர வெளியில் செல்லும்போது பரபரப்பு இல்லாமல் கிளம்புவது அரிதாகிவிடுகிறது.
முழுவதும் என்னைச் சார்ந்த பயணங்களில் நான் இதுவரை காலதாமதமாக எந்த நிகழ்ச்சிக்கும் சென்றதே இல்லை. குறித்த இடத்திற்கு வெகுமுன்பாகவே சென்று காத்துக் கிடந்தாலும் பரவாயில்லை. ரிலாக்ஸ். ரிலாக்ஸாக, கையோடு எடுத்துச் சென்ற நல்ல புத்தத்தை வாசிக்கலாம். யூட்யூப்பில் குலாம் அலியின் கஜல் சாங்க் கேட்கலாம்.
பதட்டமின்றி கிளம்புவது மிகவும் எளிது. பயணத்திற்கான ஆயத்த நேரம் ஒரு மணி தேவைப்படும் என்றால் இரண்டு மணிக்கு முன்பே தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்து முடித்து வைத்தவிட்டு, ஒருமணி நேரம் ஓய்வெடுத்து, டிவி பார்த்து, பேப்பர் வாசித்து, இத்யாதி இத்யாதிகளை செய்துவிட்டு ஆர அமர மகிழ்வாக கிளம்பலாம்.
நேரம்தான் இருக்கிறதே என தேவையில்லாத வெட்டிப் பேச்சு, ஊர் வம்பு பேசிவிட்டு, கைபேசி மூலம் கோள் பற்ற வைத்துவிட்டு கடைசி ஒரு மணி நேரத்தில் கிளம்ப ஆயத்தமானால் பரபரப்புதான்.
ஆனால் பல நேரங்களில் என்னையும் மீறி புறக்காரணிகள் என் அமைதிக்கு ஆப்பு வைத்துவிடுகிறது.
அன்றும் அப்படித்தான் காலையில் காஃபி அருந்திக் கொண்டிருக்கும் போது அந்த சனியன் போனில் வந்தது.
"வணக்கம் சார்" என்றது.
"வணக்கம்"
"என்னோட லைசன்ஸ் ரினியூவல் பேப்பர் உங்க கிட்ட வந்து ரெண்டு நாளா கெடக்காமே"
"ஆமாம்"
"இன்னக்கி மேல அனுப்பிவிங்களா?"
"அதுல ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு சார். குடிக்க கூட தண்ணி கெடக்காம எல்லா தண்ணியையும் உங்க பேக்ட்ரி உருஞ்சி எடுத்துடுன்னு பெட்டீஷன் மேல பெட்டீஷனா வந்து கெடக்கு. ரினியூவல் பண்ணாமலே ஆறு மாதமா ரன் பண்ணிகிட்டு இருக்கிங்க".
"அதெல்லாம் சரி சார். கலைக்டர பாத்துட்டேன். மினிஸ்டர் கிட்ட பேசிட்டேன். நீங்க ரெக்கமெண்ட் பண்ணி மேல அனுப்புங்க போதும். நான் பாத்துகிடுறேன்" என்று மூர்க்க தனமான பேசியது.
"என்ன ரெக்கமண்ட பண்ண சொல்ல நீங்க யாரு சார்?"
"மினிஸ்டர் சொன்னா கேப்பிங்களா?"
"ஏன் சார் காலையிலையே டென்ஷன் ஆவுறிங்க"
"பப்ளிக் எல்லாத்துக்கும் போராட்டம் பண்ணுவான் சார். ஒரு பாக்ட்ரி தொறக்கக்கூடாது. ஒரு ரோடு போடக்கூடாது. ஆனா சொகுசா வாழணும்பான். அதெல்லாம் கேட்டுகிட்டு நீங்க செயல்படாதிங்க. முடிஞ்சா பேப்பர மேல அனுப்புங்க. இல்லாட்டியும் ரெண்டு நாளைக்கு லீவு போடுங்க. நான் இன்சார்ஜ் பீ.ஏ. வச்சி வேலைய முடிச்சிக்கிடுறேன்" என்றது.
'என்ன லீவ் போட சொல்ல இவன் யார்' என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு போனை துண்டித்தேன்.
இந்த கோபத்தை காலை உணவின் போது மனைவியிடம் காட்டினேன்.
அவள் எகிற, நான் எகிற; ஒரு தேசையும் பிடித்த கெட்டி தேங்காய் சட்னியும் மீதமிருக்க தட்டில் கையை கழுவினேன். ஸ்டாண்டில் மாட்டி வைத்திருந்த கார் சாவியை காணவில்லை. எடுத்தது யாரென கத்தினேன். பதிலும் சாவியும் கிடைக்கவில்லை.
வேறு வழியின்றி இரு சக்கர வாகன சாவியை எடுத்துக்கொண்டு, அலுவலகம் கிளம்பும்போது வேண்டுமென்றே லஞ்ச் பாக்ஸ், ஐஸ் வாட்டர் நிரப்பி வைத்த கூலிங் டவர் ஆகியவற்றை எடுக்காமல் கோபத்தில் பைக் கிக்கருக்கு கூடுதலாக ஒரு உதை கொடுத்து கிளம்பி போனேன்.
அலுவலகத்தை அடைய பதினைந்து கிலோமீட்டர் கடந்தாக வேண்டும். முதல் பத்து கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை. இரண்டு கிலோமீட்டர் இடப்புறம் கரடுமுரடான ஒரு சாலை வழியே சென்று மாநில நெடுஞ்சாலையை பிடித்தால் மூன்று கிமீயில் அலுவலகம்.
மதியம் சாப்பாடுதான் இல்லை தண்ணீராவது வாங்கிச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்து ஒரு கடையில் ஒரு லிட்டர் ஆர்.ஓ மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி பைக்கின் ஆயில் டேங்க் கவரில் செருகிக்கொண்டு பயணிக்கத் தொடங்கினேன்.
தேசிய நெடுஞ்சாலையை விட்டு பிரிந்து பாடாவதியான சாலையில் போவது சற்று சிரமமாக இருந்தது. நேற்று பெய்த மழையில் ஆங்காங்கு சகதியாக கிடந்தது சாலை. பாதி தூரம் போனபோது சாலையின் வலப்புறத்தில் குட்டைபோல தேங்கிக்கிடந்த தண்ணிரின் அருகில் கால் தண்ணீரில் படாதவாறு விளிம்பில் குந்தி அமர்ந்து கொண்டு ஒருவர் இரு கைகளால் தண்ணீரை அள்ளி பருகி தனது தாகத்தை தனித்துக் கொண்டிருந்தார்.
தையல் கடையில் வெட்டி எறிந்த சிறுசிறு துணிகளை பொறுக்கி வந்து அதை சிறு துண்டுபோல செய்து தலையில் பரிவட்டம் கட்டி இருந்தார். பக்கத்தில் மூன்றடி நீள ஒரு கம்பு கிடந்தது. நீர் பருக இடையூறாக இல்லாமல் கீழே வைத்துள்ளார் என புரிந்து கொண்டேன். சிறிதே அழுக்கு படிந்த வேஷ்டி. நீலமும் மஞ்சளும் கலந்த கட்டம் போட்ட சுத்தமான சட்டை அணிந்திருந்தார். மனநலம் குன்றியவர் என யூகித்துக் கொண்டேன்.
நான் வண்டியை நிறுத்தி கவரில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வலப்புறமாக அவரை நோக்கி செல்வதை பார்த்துவிட்டார். நீர் பருகுவதை நிறுத்திவிட்டு கம்பை வலக்கையால் எடுத்துக்கொண்டு எழுந்தார்.
"ஏன் அழுக்கு தண்ணிய குடிக்கிறிங்க. இந்தாங்க" என தண்ணீர் பாட்டிலை நீட்டியதுதான் தாமதம், பறிப்பதுபோல அதை இடக்கையால் பிடுங்கி சாலையில் வீசினார். அது உடையாமல் உருண்டோடப் பார்த்தது. தப்பிக்க விடாது ஒரே எட்டில் அதனை தனது வலது காலால் மிதித்து உடைக்க நீர் சாலையில் ஓடியது. திரும்பியவர் நாக்கைத் துருத்தியவாறு இடது கையால் என் கன்னத்தில் பளாரென்று ஒரு அறைவிட்டார்.
நிலை தடுமாறி போன நான் மேலும் அடிவாங்கி விடாதவாறு தப்பிக்க வண்டியை நேக்கி தத்துக்கிளி போல தாவி ஓடினேன். கையில் வேறு கம்பு வைத்திருந்தார்.
ஆனால் அவர் மேற்கொண்டு என் மீது படையெடுக்க விரும்பாதராக எதிர் திசைநோக்கி ஒன்றும் நடக்காதது போல தன் பயணத்தை தொடர்ந்தார்.
கன்னம் விற்றென்றது. சுற்று முற்றும் பார்த்தேன். யாரும் இல்லை. தூரத்தில் எதிர் திசையில் பெரியவர் ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் கவனிக்க வாய்ப்பில்லை.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி எனக்கு ஏற்கனவே சில அனுபவங்கள் உண்டு.
அரசு குடியிருப்பில் வசித்து வந்தபோது சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க மனநலம் குற்றிய ஒரு பெண்மணி அங்குமிங்கும் அலைந்தபடி இருப்பார். தானாகவே யாரையாவது திட்டிக் கொண்டே நடப்பார். ஒர் இடத்தில் நிற்க மாட்டார். ஆனால் நேர்த்தியாக ஆடை அணிந்திருப்பார். காலனியில் உள்ளவர்கள் பலர் அவருக்கு அடிக்கடி உடைகள் அளிப்பதாக அறிந்தேன்.
ஒருநாள் அலுவலகம் செல்ல மாடியிலிருந்து இறங்கி சாலைக்கு வந்தபோது "எம்.ஜி.ஆர். ஒழிக. கருணாநிதி ஒழிக. அவங்கல்லாம் சாவ" என திட்டிக் கொண்டு போனார். எம்.ஜி.ஆர். அப்போது ஏற்கனவே காலமாகிவிட்டது அவருக்கு தெரியாதோ . . . புரியாதோ. . !
"ஏம்மா அவங்கள எல்லாம் சாவச் சொல்லுறா?" என்றேன் நான்.
"உனக்கென்னடா அதுல. நீயும் சாவணும்டா" என எதிர்த்து நின்று ஆவேசமாக முகத்தை வைத்துக் கொண்டு அறைவதுபோல வலக்கையை ஓங்கி காட்டிவிட்டு, த்தூ... என என்னை பார்த்து துப்பிப் போனார்.
என் மேல்தான் தப்பு. வேலியில் போகும் ஓணானை பிடித்து வேட்டியில் ஏன் விட வேண்டும். வலி வம்பு.
பிறிதொரு நாள் பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று திரும்பும்போது வழியில் வந்த அந்த மூதாட்டி "வயத்த பசிக்குது. பணம் குடு" என்றார்.
சட்டைப் பையில் இருந்த இருபது ரூபாயை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்டவர். "இப்புடி யாராவது கொடுத்தா நான் ஏன் திட்டப்போறேன்" என்று சொல்லிக் கொண்டு டீக்கடையே நோக்கிப் போனர்.
அவர்களுக்கு தேவை இருக்கிறது. அவர்களுக்கென்று மனமும் இருக்கிறது.
என்னை விட; ஒரு சாதாரண மனிதனைவிட அந்த பெண்மணிக்கு மனம் பிறழ்வு சற்று கூடுதலாக உள்ளது. அவ்வளவுதான்.
குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுக்க முயன்ற என்னை கன்னத்தில் அறைந்த அந்த மன நலம் பாதிக்கப்பட்டவரை கிட்டத்தட்ட மறந்துவிட்டேன். எப்போதேனும் சுளீர், பளீர் என்ற அறை அதிக வலியின்றி நினைவுக்கு வந்து போகும்.
சுமார் ஒரு மாதம் கடந்திருக்கும். அதே சாலையில் நான் பணிக்கும் போது அவர் நூறு மீட்டர் தூரத்தில் சாலையில் குனித்து தண்ணீர் பாட்டில்களை பொறுக்கிக் கொண்டிருந்ததை கவனித்து விட்டேன். வண்டியின் வேகத்தை குறைத்தேன். யாரே நீரை அருந்தி விட்டு காலியான பாட்டில்களை அலட்சியமாக சாலையில் விட்டெறிந்துவிட்டு போயுள்ளனர். நான்கைந்து இருக்கும். அவற்றை எடுத்து இரண்டு கைகளாலும் மார்போடு அணைத்துக் கொண்டு சாலையின் எதிர்புறம் இருந்த குப்பைத் தொட்டி பக்கம் போனார். அதில் ஒன்று தப்பித்து கீழே விழ, கோபத்தில் இடது காலால் ஆக்ரோஷமாக திரைப்பட கதாநாயகன் ஸ்டைலில் உதைத்ததில் அது ஸ்விங் என பறந்து சரியாக குப்பைத் தொட்டியில் மோதி கீழே விழுந்தது. கைகளில் இருந்தவற்றை தொட்டியில் போட்டுவிட்டு கீழே கிடந்ததையும் இடக்கையால் எடுத்து போட்டார். என் வண்டி அவர் நின்ற இடத்தை நெருங்கிவிட்டது. பயத்தில் சாலையின் வலப்புறமாக. வண்டியை வளைத்து இயக்கினேன். அவர் கையில் இன்று கம்பு இல்லை. பரிவட்டம் மட்டும் தலையை அலங்கரித்தது.
"பூமி தண்ணிய ஒட்ட உருஞ்சிடுறானுவ. அத பாட்டில்ல அடச்சி விக்கிறானுக. பாலும் தண்ணியும் ஒறே வெல விக்குது. எர்த் பொல்யூஷன். ஏர் பொல்யூஷன். பைத்தியக்கார பயலுங்க" என திட்டிக் கொண்டு எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தார்.
இன்று அவரது இலக்கு என்னுடையது இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.
அலுவலகம் நோக்கி என் வண்டி பறந்தது.
><
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்