வித்யா குருராஜன்
சிறுகதை வரிசை எண்
# 24
தாய்மையின் பிரும்மாண்டம்
“என்னங்க… என்னங்க..” என்ற மனைவியின் குரல் எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல் கேட்டது சேகர் காதுகளுக்கு. கனத்துக் கிடந்த இமைகளை மெதுவாய்த் திறந்து உறக்கத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டான். அதிகாலை நான்கு மணியைக் காட்டிக்கொண்டிருந்தது கடிகாரம். அந்த மருத்துவமனையின் அனைத்து அரவங்களும் சேகருக்குக் கேட்கத் துவங்கின.
நான்கு மணிக்கெல்லாம் நாளினை ஆரம்பித்துவிடும் அந்த அரசு மருத்துவமனை. காலை ஏழு மணிக்கு தலைமை செவிலியர்கள், பல்வேறு துறைகளின் தலைமை மருத்துவர்கள் சுற்றுக்கு வருவதற்குள் இப்படித்தான் ஆரவாரமாகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் அந்த மருத்துவமனை.
“வெந்நீர் தயாரா இருக்கு. போய் எல்லா வேலையையும் முடிச்சு குளிச்சிட்டு வந்துடுங்க” என்று மனைவி வசந்தா சொல்ல அலுத்துக்கொண்டு எழுந்து அமர்ந்தான் சேகர். 56வயது. மாநிறம். நடுத்தர உயரம். ஒல்லியின தேகம். சிறுநீர் வடிய இணைக்கப்பட்டிருக்கும் பையின் டியூபையும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்திலிருந்து உள்புற இரத்தக்கசிவும் இதர திரவங்களும் வடிவதற்காக இணைக்கப்பட்டிருக்கும் சிறு வெள்ளை டப்பாவின் டியூபையும் சேர்த்துத்தூக்கி சேகரின் கைக்குள் கொடுத்தாள் வசந்தா. இரண்டையும் ஒரே கையில் வாங்கிக்கொண்டு அடிவயிற்றைத் தாங்கியபடி மெல்ல எழுந்து கழிப்பிடம் சென்றான். அரை மணியில் ஆயாசமாய்த் திரும்பிவந்தான்.
“ஆமா.. கிட்னி மாத்தி இன்னைக்கி அஞ்சாவது நாள் தானே.. கஷ்டமாத்தான் இருக்கும். இன்னைக்கி இந்த ரெண்டு டியூபையும் எடுத்திடுவாங்கல்ல.. அப்பறம் கொஞ்சம் சிரமம் இருக்காது” என்று வசந்தா ஆறுதலாய்ச் சொல்ல, 3 ஆண்டுகளாய் ஒரு நாள் விட்டு ஒருநாள் டயாலிஸிஸ் செய்து வந்த நிலையில் இருந்து விடுதலை கிடைத்துவிட்ட நிம்மதிக்கு முன்னால் இந்த அசௌகரியங்களைப் பெரிதாக நினைக்கவே இல்லையே என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான்.
சேகர், விதவையான வசந்தாவை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டவன். வாழ்வளித்திருக்கிறோம் என்ற பெருமையெல்லாம் அவனுக்கு இல்லை. தன் வாழ்வில் செய்த ஒரே உருப்படியான காரியமாகத்தான் இதை அவன் பார்க்கிறான். சேகர் - வசந்தா தம்பதியருக்குப் பிள்ளைகள் இல்லை. ஒருவருக்கொருவர் துணையாய் இருந்துவருகிறார்கள் அவ்வளவுதான். சுமாராகக் போய்க்கொண்டிருந்த வாழ்வில் பிரச்சினையை இழுத்துவிட்டது சேகரின் கிட்னி. 5 ஆண்டுகளுக்கு முன்னர் அது தன்னைத்தானே சுருக்கிக்கொண்டுவிட்டது. அடுத்த இரண்டே ஆண்டுகளில் உடல் நச்சுப்பொருட்களை ஓஹோவென சேர்த்துவிட ஒருநாள்விட்டொருநாள் டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலைக்கு வந்து சேர்ந்தான். மாற்றுக் கிட்னி வேண்டி விண்ணப்பித்துக் காத்திருந்தவனுக்கு ஒருவழியாய் கிடைத்துவிட, முகம் தெரியாத யாரோ ஒருவர் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கிட்னி இப்போது அவனுக்குள்ளே..
7 மணிக்கு வழக்கம்போல் செவிலியர்களும் மருத்துவர்களும் வந்து பார்வையிட்டுச் செல்ல, சேகர் எதிர்பார்த்ததென்னவோ மோனிகாவைத் தான். அந்த மருத்துவமனையின் உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர் அவள்.
சேகரின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் விதமாய் மோனிகா வர, வழக்கமான வேலைகளை அவள் முடிக்கும் வரை காத்திருந்தான் சேகர். அவள் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்ட பிறகு “மோனி மா.. நான் கேட்ட விஷயம்…” என்று இழுத்தான். “ரூல் படி உங்களுக்கு யார் கிட்னியைப் பொருத்தியிருக்கோமின்னு நான் சொல்லக் கூடாது. இருந்தாலும் நீங்க ரொம்ப கேக்குறதுனால இதைச் செய்யறேன்” என்று சேகரின் கைகளில் மூன்று நாட்கள் முந்தைய நாளேட்டின் பக்கம் ஒன்றைனைத் திணித்துவிட்டு “இவங்க தான்” ஒன்று சொல்லிவிட்டு வெளியேறினாள் மோனிகா.
தனக்குச் சிறுநீரகம் அளித்து 5ஆண்டுகால துன்பங்களில் இருந்து விடுதலை அளித்த தெய்வம் யாரென்று பார்க்க பெருத்த ஆர்வத்தோடு அந்த செய்தித்தாளைத் திறந்தான் சேகர். உடன் வசந்தாவும் இணைந்து கொண்டாள்.
“மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம்” என்று கொட்டை எழுத்துக்களில் இருந்தன. பக்கத்தில் அந்தப் பெண்மணியின் வண்ணப்படமும் இருந்தது.
செய்திக்குள் போகும் முன்னர் அந்த தேவதையின் முகத்தை நன்றாகப் பார்ப்பதற்காய் மனைவியிடம் மூக்குக்கண்ணாடி கேட்டான் சேகர். வசந்தா தன் முந்தானையால் கண்ணாடியைத் துடைத்து நீட்ட, அதை வாங்கி அணிந்துகொண்டு முகத்தைக் கொஞ்சம் அன்னார்ந்தபடி அந்த கண்ணாடியின் அரைவட்ட வடிவ லென்ஸ் வழியாய் மீண்டும் அந்தப் பெண்மணியின் படத்தினை உற்று நோக்கினான். முகம் அதிர்ச்சியில் வெளிறியது.
அந்தப் பெண்மணியின் வண்ணப்படத்துக்குக் கீழே கோதைநாயகி (64) என்று அச்சாகியிருந்தது. யார் பெயரை வாழ்வனைத்திலும் அவன் மறக்கவில்லையோ, யார் முகத்தை அவன் வாழ்வனைத்திலும் நினைத்துக்கொண்டிருந்தானோ, அதே கோதைநாயகிதான் என்று புரிந்ததும் எரிமலை வெடிப்பே நிகழ்வது போல் இருந்தது அவனுக்கு. “இவங்க தானா..”என்ற வசந்தாவின் குரல் அவன் காதில் விழவில்லை. அவனிடமிருந்து அந்த செய்தித்தாளினை வாங்கிப் படிக்க ஆரம்பித்தாள் வசந்தா.
“இதே ஊரைச் சேர்ந்தவர் கோதைநாயகி. வயது 64. இவர் உயர் இரத்த அழுத்தத்துக்காகச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திடீரென வீட்டில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனே குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துவந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டது பரிசோதனையில் தெரிய வந்தது. குடும்பத்தினர் முடிவுப்படி அவரின் இரண்டு கண்கள், இரண்டு சிறுநீரகங்கள், இரட்டை நுரையீரல்கள், கல்லீரல் ஆகிய உள்ளுறுப்புகள் சேகரிக்கப்பட்டு 8 பேர்களுக்குப் பொருத்தப்பட்டிருக்கின்றன. இறந்தும் எட்டு பேர்களுக்கு வாழ்வளித்து விடைபெற்ற தேவதைக்கு மொத்த மருத்துவமனையும் தலை வணங்கி வழியனுப்பிவைத்த காட்சி நெகிழ்வானதாக இருந்தது. பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர் என்பதும் நான்காவது மகள் அதே மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது” என்று அந்தச் செய்தியினை வாசித்து முடித்தாள் வசந்தா.
அசைவற்று அதைக் கேட்டுக்கொண்டிருந்த சேகர் “நாலு பொண்ணுங்களா?..” என்று தனக்குள்ளே முனுமுனுத்தான். யோசித்தான். பின் கதறி அழ ஆரம்பித்தான். அவன் அழுவதை அதிர்ச்சியாய்ப் பார்த்த வசந்தா அவனைத் தேற்ற முயற்சித்தாள். “ஏங்க.. ஏன் இப்படி அழுவறீங்க.. என்ன ஆச்சு. அய்யோ பெரிய சர்ஜரி பண்ணியிருக்குதுங்க. இப்படி நீங்க அழக்கூடாது” என்ற வசந்தாவின் கேள்விகளும் எச்சரிக்கைகளும் சேகரின் அழுகையை நிறுத்திடவில்லை..
இந்த அழுகைக்கு மூன்று தினங்கள் முன்னால்..
வராண்டாவில் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்தபடி இடிந்து போய் நின்றிருந்தாள் பூர்ணா.. கண்கள் கண்ணீரைத் திரட்டியிருந்தன. எதிர்ப்புற நாற்காலி ஒன்றில் அவளை விடவும் மோசமான நிலையில் அமர்ந்திருந்தார் கனகலிங்கம்.
“டாக்டர் ஜி.. பேப்பர்ஸ் ரெடி.. நீங்க ஓரு முறை பார்த்துட்டு அப்பா கிட்ட கையெழுத்து வாங்கி கொடுத்துட்டீங்கன்னா தியேட்டருக்கு தூக்கிடுவோம்” என்று மோனிகா மெல்லிய குரலில் பூர்ணாவின் காதைக் கடித்தாள்.
சுயநிலைக்குத் தன்னைத்தானே மீட்டுக்கொண்டு அந்த கோப்பினை மோனிகாவிடமிருந்து வாங்கிக்கொண்டு மெல்ல அப்பாவிடம் வந்தமர்ந்த பூர்ணா அவரின் தோளில் கைவைத்தாள். சுவற்றில் சாய்ந்தபடி விட்டத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த கனகலிங்கம் பூர்ணா பக்கம் திரும்ப “ஆர்கன் டொனேஷன் கன்ஸென்ட் பா.. கையெழுத்து போடுங்க” என்று மூக்குறிஞ்சியபடியே பூர்ணா சொல்ல இயந்திரத்தனமாய் அதை வாங்கி குறியிட்ட இடங்களிலெல்லாம் கையொப்பமிட்டு நீட்டினார் கனகலிங்கம். அழுதுகொண்டே அந்த கோப்பினை மோனிகாவிடம் கொடுக்க, படபடவென அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பித்தனர்.
கனகலிங்கத்தின் மனைவி கோதைநாயகியின் மூளைச்சாவு அடைந்துவிட்ட, கெடாவர் என்று மருத்துவ மொழியில் அழைக்கப்படும் உடலானது அறுவை சிகிச்சை அரங்கிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவர் உடலில் இருந்து உள்ளுறுப்புக்களை பிரத்தியேக அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு வெற்றிகரமாகச் சேகரித்தது.
கண்கள் இரண்டையும் அதே ஊரில் வேறு ஒரு பெரிய மருத்துவமனையில் இருந்து வந்து வாங்கிக்கொண்டார்கள். இரட்டை நுரையீரல்களையும் கல்லீரலையும் சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனை முந்திக்கொண்டு வந்து வாங்கிச்சென்றுவிட, இரண்டு சிறுநீரகங்களை மட்டும் அதே மருத்துவமனை பயன்படுத்திக்கொண்டது.
சிறுநீரகங்களுக்காகப் பதிவு செய்து காத்திருப்போரின் மிக நீண்ட பட்டியல் உண்டு அந்த மருத்துவமனையில். கெடாவரின் வயது, இரத்தவகை, சிறுநீரகங்களின் செயல்திறன் அளவு என்று சில பல குறியீடுகளை ஆராய்ந்து, காத்திருப்போர் பட்டியலில் தகுதியான நால்வரைத் தேர்ந்தெடுத்து அழைத்தனர். அதில் இன்னும் வடிகட்டித் தகுதியான இருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட, கோதைநாயகி உடலிலிருந்து சேகரிக்கப்பட்ட இரு சிறுநீரகங்களும் இரண்டு பேர்களுக்குப் பொருத்தப்பட்டன. அதைச் செய்தவள் பூர்ணாவே தான். அவள் தான் அங்கே சிறுநீரகங்களை மாற்றும் அறுவை சிகிச்சை செய்பவள். தன் கைகளாலேயே தன் தாயின் சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்திவிட்டு மருத்துவமனையில் தனக்கான அறையில் காத்திருந்த அப்பாவைப் பார்க்க வந்தவள், தன்னையும் மீறி அவரைக் கட்டியணைத்துக் கதறி அழுதாள். அழுது ஓய்ந்து களைப்பில் அவர் மடியிலேயே படுத்து உறங்கியும் போனாள்.
அவள் தலையைக் கோதியபடி இருந்த கனகலிங்கத்தின் நினைவுகள் பின்னோக்கி ஓட்டமெடுத்தன.
இதே பூர்ணாவை கனத்த இதயத்தோடு ஓரு பௌர்ணமி இரவில் கைகளில் வாங்கிய கோதைநாயகி அவரின் ஆழ்மனதுக்குள் தென்பட்டாள்.
“இந்தக் குழந்தையை என்னம்மா பண்ணப்போறோம்?” என்று பிரசவ அறை வாயிலில் பரிதவித்துக் கேட்ட கனகலிங்கத்திடம் “இனி இது நம்ம பொண்ணு.. நம்ம நாலாவது பொண்ணு. நிறைஞ்ச பௌர்ணமியில பிறந்திருக்கு.. பூர்ணான்னு பேர் வைக்கலாமா..” என்று கேட்ட கோதையை வியந்து பார்த்தது பசுமையாய் நினைவிலிருந்தது அவருக்கு.
“என்னம்மா சொல்லிக்கிட்டிருக்க? இது நம்ம மூத்த மகளோட பொண்ணு. பேத்தியை எப்படி பொண்ணா ஏத்துக்க முடியும்?”
“ஏத்துக்கிட்டு தான் ஆகனும். நம்ம மூத்த பெண்ணுக்கு இப்ப என்ன வயசு? வெறும் 16.. கல்யாணம் ஆகல்லை. இந்த நிலையில அவளைக் குழந்தையும் கையுமா விட முடியுமா? அவ வாழ்க்கையும் போய் இந்த பச்சமண்ணு வாழ்க்கையும் போயிடாதா?”
“இப்ப என்ன செய்யுறது கோதை.. படுபாவி.. இப்படி நம்ம வாழ்க்கையில விளையாடிட்டானே.. அவன் நல்லா இருப்பானா?”
“சும்மா அழுது புலம்பாதிங்க. இனி ஆகறதைப் பாப்போம்”
“அழுது புலம்பாம ஈஸியா கடந்து போகற சம்பவமா இது?”
“இல்லை தான். ஆறு மாசமா தீட்டு வரல்லையேன்னு டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போக, பொண்ணு கர்ப்பமா இருக்கான்னு தெரிஞ்சதைக் கடந்து போயிட முடியுமா? அவ வாத்தியார்தான் இதுக்கு காரணமின்னு தெரிஞ்சுக்கிட்டதைக் கடந்து போயிட முடியுமா? உலகத்தைப் பத்தித் துளியும் சொல்லிக்கொடுக்காம மகளை வாயில்லா பூச்சியா நாம வளத்துட்டோமின்னு புரிஞ்சிக்கிட்டதைக் கடந்து போயிட முடியுமா? எதையும் ஈஸியா கடந்து போயிட முடியாது தான். ஆனாலும் வாழ்க்கையைத் தொடர்ந்து தானே ஆகனும்?!”
“எனக்கு ஒன்னுமே தோணல்ல கோதை.. அவமானத்தில செத்துப் போயிடனும் போல இருக்கு”
“என்ன உளறிக்கிட்டு இருக்கிங்க? நம்ம மகளைக் கெடுத்தவனைச் சட்டத்தின் முன்ன நிறுத்தி நிரூபிச்சு தண்டனை வாங்கி கொடுக்கனும், மகளுக்கு இமோஷனல் சப்போர்ட் பண்ணி படிப்பைத் தொடர வச்சு நல்ல நிலைமைக்கு அவளைக் கொண்டு வரனும், மத்த ரெண்டு பொண்ணுங்களை இந்த சம்பவம் பாதிக்காதபடி சமாளிச்சு வளர்க்கனும், ஊர் வாயை எதிர்கொள்ளனும், எல்லாத்தையும் தாண்டி இந்த குட்டிப் பொண்ணை அப்பா அம்மாவா இருந்து நல்ல தைரியமானவளா வளத்து டாக்டர் ஆக்கனும்.. இத்தனை வேலை கிடக்கு.. செத்துப் போவாராமில்ல.. ஏன் டி பூர்ணா.. பாத்தியாடி உங்க அப்பா பேசுறதை? ம்…. என் லட்டுக்குட்டி.. தங்க கட்டி…” என்று பூர்ணாவை கொஞ்சிக்கொண்டே நடத்து சென்ற கோதையை வியந்து பார்த்தது நேற்று போல் இருந்தது அவருக்கு.
அன்று கனகலிங்கமும் கோதைநாயகியும் நின்ற வாழ்க்கைக்கட்டம் சாதாரணமான எவரையும் ஒடித்துப் போட்டுவிடக்கூடியது தான் அல்லவா. பத்தாவது படித்துக்கொண்டிருந்த மகளை ஆசிரியன் என்ற போர்வைக்குள்ளிருந்து அவளின் அப்பாவித்தனத்தை உபயோகித்து, கலவிக்கு உட்படுத்தி, வெளியில் சொல்லக்கூடாதென மிரட்டி வைத்திருக்கிறான் என்று எந்த பெற்றோரால் ஊகிக்க முடியும்? நல்லதை மட்டுமே பார்த்து வளர்ந்த குழந்தைக்குத் திமிங்கலங்களை எப்படி கண்டுபிடிக்கத் தெரியும்?
கர்ப்பவதி ஆகிவிட்டாள் மகள் என்ற பேரிடி தலையில் விழுந்ததும் எரியும் பசுமரமாகிவிட்டது அந்த அழகான குடும்பம். இத்தகைய இக்கட்டைச் சமாளிக்க எத்தனை குடும்பங்களுக்குத் தெரிந்திருக்கிறது.? எவனோ ஒருவன் தன் நெறி பிறழ்ந்தமைக்கு குடும்பமாக தற்கொலை செய்துகொண்டு அத்தகைய அயோக்கியர்களுக்கு வெற்றிப்பா தானே இயற்றுகிறார்கள் பெரும்பான்மையானோர்?! . ஒரு அப்பாவிப் பெண்ணைத் தனக்கு இரையாக்கிக்கொள்ளும் இத்தகைய பிறவிகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டத்தான் இங்கே ஆட்கள் இல்லையே.. பெண்ணை மிரட்டிப் பொத்தி வைத்தாலும் செய்த அதர்மம் விஸ்வரூபம் எடுத்து வெளிவந்து நீதி கேட்குமென்று தெரியாத இத்தகைய ஈனப் பிறவிகளை ஒரு குடும்பத்தின் அழிவு திருத்திவிடப் போகிறதா?
சராசரி அப்பாவாக ஒடிந்து நொந்த கனகலிங்கத்தை உலுக்கத்தான் செய்தது கோதையின் வார்த்தைகள். அவை வெறும் வார்த்தைகள் அன்று . அதுவே கோதைநாயகியின் சொச்சகால வாழ்க்கையாகிப் போனது.
அன்று பூர்ணாவைக் கைகளில் வைத்துக்கொண்டு சொன்ன அத்தனையையும் அப்படியே நிகழ்த்திக் காட்டினாள் கோதை. மகளின் படிப்பு தொடர்ந்தது. மற்ற இரு பெண்களின் படிப்பும் தொடர்ந்தது. பூர்ணாவை அம்மாவாக இருந்து வளர்த்தெடுத்தாள். அந்த ஆசிரியனுக்கு 7 ஆண்டுகால தண்டனை பெற்றுத்தந்தாள். ஊர் வாய்க்கு பயந்து ஓடவில்லை. “என் மகள் பாதிக்கப்பட்டவள் தானே அன்றி நடத்தைகெட்டவள் அல்ல” என்ற தெளிவு ஈன்றவளாகிய அவளுக்கு இருந்தபடியால் யாராலும் கோதையைக் குழப்ப முடியவில்லை. சுடுசொல் வீசி வீழ்த்திவிட முடியவில்லை. ஆணி வேர் ஊன்றிவிட்ட பிறகு எந்த சூறாவளியால் மரத்தைப் பிடுங்கி வீசிவிட முடியும்.? மகளுக்கும் குற்ற உணர்வு வந்துவிடாமல் மற்ற பெண்களையும் அவளை வித்தியாசமாய்ப் பார்க்க விட்டுவிடாமல் குட்டிப்பெண்ணை எந்த விதத்திலும் குறைவாய் யாரும் நினைத்துவிடாமல் அனைத்தையும் கட்டி அணைத்துக் கொண்டுபோன கோதைக்கு யாரை ஒப்புமை காட்டுவது.? அடை மழையின் போது தன் அத்தனைக் குஞ்சுகளையும் இறக்கைகளால் அணைத்துக்கொண்டபடி அழைத்துச் சென்று பத்திரமாய்ப் பட்டியில் சேர்க்கும் தாய்க்கோழி போல் கடந்த 29ஆண்டுகளாய் வாழ்ந்த கோதை, பிரும்மாண்டமானவள் இல்லையா!?
மூத்தவளை ஆசிரியராக்கினாள். உண்மையைச் சொல்லி ஒரு உண்மையான ஆண்மகனின் கையில் பிடித்துக்கொடுத்தாள். பொறியாளராகிய இரண்டாமவள் காதலிப்பதாய் வந்து நிற்க அவளையும் விரும்பியவனுக்கே மணமுடித்துக் கொடுத்தாள். ஆடிட்டிங் படித்துக்கொண்டிருந்த மூன்றாமவளை மூத்த மருமகனின் தம்பிக்கே கேட்டு வந்ததும் அவளையும் மூத்தவள் வாழும் வீட்டுக்கே மணமுடித்து அனுப்பி வைத்தாள்.
பூர்ணா….
கோதையின் உயிராகிப் போனவள். அவளின் தவ வாழ்வைத் துவக்கி வைத்தவள். இடிந்து நொருங்கிக் கிடந்தபோது ஒட்டிப் பூசிக்கொள்ளக் கற்றுத்தந்தவள். விட்டுவிட நினைத்த போதெல்லாம் தொடரத்தான் வேண்டுமென்று நினைவூட்டியவள். அம்மா அம்மா என்று சுற்றிச்சுற்றி வந்தவளை ஆசைப்பட்டபடியே தைரியமானவளாய் உலகம் தெரிந்தவளாய் சிந்திக்கப் பழக்கி வளர்த்தெடுத்தாள். வயதும் பக்குவமும் வந்ததும் நடந்தவைகளை அவளிடம் போட்டுடைத்து “நான் அம்மா இல்லை பாட்டி தான்” என்று வெளிப்படுத்தியும் விட்டாள்.
பூர்ணா அறிவைப் பயன்படுத்தும் பழக்கமுள்ளவள் ஆகையால் கோதையை அவளாலும் பிரும்மாண்டமானவளாக மட்டுமே பார்க்க முடிந்தது. இடியாப்ப சிக்கலான இச்சூழ்நிலையைக் கோதை கையாண்டிருக்கும் விதத்தின் வெற்றிகள் தான் கண்முன் கிடக்கின்றனவே. இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கான பக்குவம் கோதை வளர்த்த பூர்ணாவுக்கு இருக்காதா என்ன..
பூர்ணாவைக் கையில் வாங்கிய அன்று சொன்னதைப் போலவே அவளை சிறுநீரகவியலில் மேற்படிப்பு படிக்க வைத்து இன்று அந்த மருத்துவமனையின் முக்கியமான அறுவை சிகிச்சை நிபுணராக்கி உயரத்தில் நிற்க வைத்தும் விட்டாள். அவளை விரும்பி வந்து பெண்கேட்ட சக மருத்துவனுக்கே அவளைக் கட்டிக்கொடுத்தும் விட்டாள். இவற்றையெல்லாம் ஓட்டிக்காட்டியது கனகலிங்கத்தின் மனது.
இவற்றையெல்லாம் சிந்தித்து நிகழ்த்திக்காட்டிய அந்தத் தாயின் மூளை இறந்துவிட்டதா என்று நினைத்ததும் கண்கள் கட்டிவைத்திருந்த அணைக்கட்டு உடைந்தது. கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்தது.
அவர்கள் இருந்த அறைக்கதவு தட்டப்பட்டது.
“எல்லா ஃபார்மாலிட்டீஸும் முடிஞ்சிது டாக்டர் ஜி. அம்மாவை வாங்கிக்க வர்றீங்களா?” என்று மோனிகா கேட்டாள். டன் கணக்கில் கனமேறிவிட்ட இதயத்தைத் தூக்கிச் சுமந்துகொண்டு இருவரும் வெளியே செல்ல கோதையின் உடல் வந்த வழி நெடுகிலும் அனைவரும் தலை குணிந்து மரியாதை செலுத்தினர். வீடு வந்ததும் இதைக் கேள்விப்பட்ட பலரும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுப் போயினர். மொத்த குடும்பமும் பிரியாவிடை கொடுக்க, இன்னும் 8 பேருக்கு வாழ்வளித்துவிட்டு விடைபெற்றாள் அந்த தேவதை. மீளாத் துயர்தான் ஆனாலும் வாழ்வு தொடரத்தான் வேண்டுமென்ற கோதையின் பாடத்தைப் பயிற்சி செய்யத் துவங்கினர் அனைவரும்.
நல்லதை மட்டுமே அனைவருக்கும் செய்த கோதை தண்டித்தது அந்த ஆசிரியனைத் தான். தன் மகளை வன்புணர்வு செய்தவனுக்கு ஏழாண்டு சிறைத் தண்டனை வாங்கித்தான் கொடுத்தாள். அதிலும் அவள் திருப்தி அடைந்தாளில்லையோ என்னவோ.. தன் சிசுவை நோகடித்தவனை மன்னிக்க எந்த தாயுள்ளத்தால் முடியும்?. இறந்தும் கூட அவனை தண்டித்துவிட்டே சென்றிருக்கிறாள். அவளின் ஒரு சிறுநீரகத்தைத் தனக்குள் பொருத்திக் கொண்டிருக்கும் சேகர் தான் அவள் மகளைச் சிதைத்தவன்; அவளால் சிறை சென்று வந்தவன். கோதையின் சிறுநீரகம் தான் தன்னுள் வேலை செய்கிறது , தனக்குள் தான் அது இருக்கிறது என்று அறிந்ததும் மறுகனமே அது முள்ளாய் மாறிப்போனது. சிறை வாசத்தை விடவும் கொடூர தண்டனையை அவனுக்கு அளித்துவிட்டாள் அந்தத் தாய். டயாலிஸிஸ் நரகத்திலிருந்து விடுதலை கிட்டிவிட்டதாய் நிம்மதி அடைந்தவன் மற்றொரு கொடிய நரகத்துள் சிக்கிக்கொண்டபடியால் கதறி அழுதான். இன்னா செய்தவனை நன்னயம் செய்து ஒறுத்துவிட்டாள் கெடாவர் கோதைநாயகி. இனி சிறுநீர் கழிக்கும் போது கூட அவனால் நிம்மதியாய் இருக்க முடியாது. “ஏங்க இப்படி அழறீங்க? இவங்களை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்ட மனைவிக்குப் பதில் சொல்ல நா எழாமல் தவித்தான் சேகர்.
ஏற்கனவே கோதையால் வேலை இழந்து மரியாதை இழந்து வாழ்ந்து வருபவன் இப்போது நிம்மதியும் இழந்துவிட்டான். அல்ல அல்ல.. கோதையால் அல்ல.. ஊழ் வினை உருத்து வந்து ஊட்டிவிடுகிறது அவனுக்கு..
பூர்ணாவைச் சில முறைகள் பார்த்திருக்கிறான். அவள் தான் அறுவை சிகிச்சை செய்தவள் என்பதும் அவனுக்குத் தெரியும். கோதைக்கு இல்லாத இந்த நான்காவது மகள் யாரென்பதை ஊகிக்கக் கடினமாய் இல்லை அவனுக்கு.. அடிபட்ட இடத்திலேயே மீண்டும் பலமாய் அடிவாங்கியது போல் இருந்தது. கோதையும் தெரிந்து கிட்னி கொடுக்கவில்லை தான்; பூர்ணாவும் தெரிந்து அவனுக்குள் அதைப் பொருத்தவில்லை தான். ஆனால் கிட்னி கொடுத்தவள் யார், அதைப் பொருத்தியவள் யார் என்பது அவனுக்குத் தெரிந்துவிட்டதே.. சுடும் இந்த நினைப்பைச் சுமந்துகொண்டு தானே இனி அவன் வாழ்ந்தாக வேண்டும்?! கோதையின் ஆன்மா அளித்த தண்டனை தான் இதுவென்று நம்பினான் சேகர்.
ஒரு தாயின் பிரும்மாண்டம் அவள் குழந்தையைச் சீண்டும் போது மட்டுமே வெளிப்படும். கோதை போன்ற அம்மாக்கள் நிறைய உள்ளனர். அவர்களின் விஸ்வரூபம் அண்டத்தை விடவும் பெரியது. தாய்மைக்குள்ளிருக்கும் பிரும்மாண்டத்தை உணராத தாய்மார்களும் ஏராளம் தான் இங்கே. உணர்ந்துகொண்டால் நல்லதொரு சமூக மாற்றத்தினைக் காணலாம்.
-வித்யா குருராஜன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்