logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

தங்க.ஜெயபால் ஜோதி

சிறுகதை வரிசை எண் # 22


பெருந்தொற்றின் கருணை வரவேற்பில் இவரை ஆய்வு செய்த முகமூடி மருத்துவர் ஆணா பெண்ணா என்று அறிய முடியவில்லை!மருத்துவர் இவருடைய விவரங்களைக் குறித்துக் கொள்கிறாரா அல்லது சித்திர குப்தனைப் போல இவருடைய பாவ புண்ணியங்களைச் சரிபார்க்கிறாரா என்றும் தெரியவில்லை!அவர் வந்து சேர்ந்திருக்கிற இடம் அப்படி! அவர் ஆங்கிலத் திரைப் படங்களில் பிணவறைகளைப் பார்த்திருக்கிறார்.அந்த அறைகள் பிஜியன் லாக்கர்களின் அமைப்பில் உருவாக்கப்பட்டிருகும் பிண கப்போர்ட்கள்! பதினைந்துக்குப் பதினைந்து இருக்கலாம். அதில் மூன்று படுக்கைகள். அவரையும் அந்த அறைக்குள் செலுத்தியிருந்தார்கள்.விண்வெளி வீரர்கள் போலக் கவசங்கள் அணிந்து அனைவரும் படுக்கையில் கிடந்தனர். அறையெங்கும் பயம் அவர்களுடன் பரவிக் கிடந்தது! பிள்ளைகள் பெறுவதில் விட்ட கோஷம்,இன்று கொரானாவில் உபயோகம் ஆனது.இந்த நிலையிலும் அவருக்குச் சிரிப்பு வந்தது. படுக்கைகள் இடைவெளிவிட்டுப் போடப்பட்டிருந்தன.அறைத் தோழர்கள் இருவரையும் பார்த்தார்.முகம் தெரியவில்லை.அவர்கள் முகமூடிகளாய் மூச்சுக்கு ஆக்ஸிஜனுடன் போராடிக் கொண்டிருந்தார்கள்.அவரும் சற்று நேரத்தில் அதுமாதிரியான கோலம் தானே காணப் போகிறார்! அவர் அரசாங்க மருத்துவமனைகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் அந்தப் பெருந்தொற்று மருத்துவமனை உலகத் தரம் கொண்டதாகத் தெரிந்தது. மிகவும் தூய்மை படுத்தப்பட்டிருந்தது. அடுத்த நாள் காலையில் சிற்றுண்டி வந்தது.அவருக்கு வீட்டில் தினமும் நடக்கும் உணவு நேர காட்சிகள் வந்து போனது. சிற்றுண்டிக் கொண்டு வந்தவர் படுக்கை ஓரத்தில் அந்தப் பிளாஸ்டிக் பெட்டியினை வைத்துவிட்டுப் போனார்.அங்கே கொடுக்கப்பட்ட உணவைப் பற்றிய அபிப்ராயங்கள் இருப்பினும் என்னென்ன கொடுத்தார்கள் என்கிற பட்டியலை மனதில் குறித்துக் கொண்டார்.ஞாயிறு கிழமையானால் வீட்டில் ஆடு,கோழி என்று ஏதேதோ மசாலா வாசனையில் வீடே கொதிக்கும்!இட்லி தோசை தாண்டி மருத்துவமனையில் சில புதிய உணவுகள் உண்ணக் கிடைத்தன. லெமன்-இஞ்சி கஷாயம்,கபசுரக் குடிநீர்,அதிமதுரக் கஷாயம், பயிறு வகைகள்,கொலஸ்டிரால் வந்திடும், வேணுமானா வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுங்க என்று வீட்டில் விலக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு முட்டைகள் ஒரு கிளாஸ் பால் கொடுத்தார்கள்!செவ்வாய் வெள்ளி கணக்கில்லை. முட்டை சைவம்தானே! வெளியிலிருந்தும் உணவுகளை அனுமதித்திருந்தார்கள்.இருக்கிற பயத்தில் வீட்டிலிருந்து யார் சாப்பாட்டைக் கொண்டு வருவது?மின்சாரத் தகன அடுப்பின் உள்ளே உடல் சென்றதும் கடைசியில் கிடைக்கிற சாம்பலுக்கு வரும் உறவுகளைப் போல மருத்துவமனையின் வாசல் கதவுடன் முடிந்து விடுகிறது கொரானா கால உறவுகள்.பார்க்கலாம் பிழைத்து வெளியேறினால்கூட அழைத்துப் போக ஆள் வருமா என்கிற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது.சாப்பாடு என்று எதையோ கொடுத்தார்கள். சிறைக்குள் கைதிகள் வரிசையில் நின்று சோறு வாங்குவார்கள். இங்கே அப்படி இல்லை. உணவைச் சக்கர வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வருகிறார்கள்.வண்டியின் சக்கரங்களின் ஓசையே உணவின் வருகையை அறிவிப்புச் செய்கிறது. சாப்பாடு மூன்று வேளையும் தவறவில்லை! ஆனால் இரண்டே நாட்களில் கபசுரக் குடிநீர், இஞ்சி எலுமிச்சை கஷாயம் மாலையில் சுண்டல் பால் என்று சாப்பாட்டின் மீதே அலுப்பை உண்டாக்கியது அந்த ஆஸ்பத்திரியின் உபசரிப்பு!. இந்தக் கொரானா மருத்துவமனையில் சேர்ந்த நிமிடத்திலிருந்து அவருடைய நண்பர் ஒருவரின் நினைவு சுவாசமாய் மனதில் இழையோடிக் கொண்டிருந்தது!நண்பர் முதல் அலையிலேயே அடித்துச் செல்லப்பட்டார்.அவரை முதலியார் முதலியார் என்றுதான் தெருவில் உள்ளவர்கள் கூப்பிடுவார்கள். ஆனால் இந்தப் பெருந்தொற்றிற்குச் சாதி மதம் என்கிற கரிசனம் உண்டா? மாட்டிக் கொண்டவர்களை அப்படியே சுருட்டிக் கொண்டு போனது. முதலியாரும் அப்படித்தான் போனார். எண்பது வயது.இணை நோய்கள் எதுவும் இல்லாதவர்! திடகாத்திரமான ஆரோக்கியமான உடம்புக்காரர். எந்த வேலைக்கும் பிறர் உதவிகளை அவர் பெற்றதில்லை என்றும் சொல்வார்கள். அவரால் இவருக்குப் பல நேரங்களில் இவருடைய மனைவியிடமிருந்து அதிக வசவுகள் கிடைக்கும்!‘எப்படித்தான் இப்படித் தேமேன்னு உங்களுக்கு உட்கார்ந்திருக்க முடிகிறதோ? பக்கத்து வீட்டுத் தாத்தாவ பாருங்க.. இந்த வயசில எப்படி வேலைச் செய்கிறார். அந்த அம்மாவ பாருங்க எலிசபெத் மகாராணியாட்டம் கால்மீது கால்போட்டு தினத்தந்தியை நாள்முழுக்க எழுத்துக் கூட்டிப் படிச்சி,கொலை கொள்ளை கற்பழிப்பு என்று பொழுதைக் கழிக்கிறார்’ என்பார்.மேதகு எலிசபெத் மகாராணி தினந்தந்தி பேப்பரைக் கால்மீது கால் போட்டுக் கொண்டு படித்தால் எப்படி இருக்கும் என்று அப்போதெல்லாம் கற்பனை செய்து கொள்வார். மனைவிக்குத் தெரியாமல் சிரித்துக் கொள்வார்! கிழவன் தொல்லை தாங்க முடியவில்லை என்று திட்டியதும் உண்டு. பாவம், முதலியார் இதுவரைக்கும் ஒருமுறைகூட மருத்துவமனைப் பக்கம் சென்றது இல்லையாம்.அவருடைய மனைவிகளின் பிரசவத்திற்குச் சென்ற பழக்கம்தானாம்.முதலியாருக்குக் கோவிட் என்று முடிவு செய்து மருத்துவமனையில் படுக்க வைத்த அடுத்த வினாடியே முதலியார் அந்த மருத்துவமனையையே ரெண்டு பண்ணிவிட்டார் என்று பிறகு சொன்னார்கள்.பெருந்தொற்றிற்கு மருத்துவமனையில் சேர்ந்தவர், மருத்துவமனையின் சன்னல் வழியே சாலையில் விழுந்து தற்கொலைச் செய்து கொண்டார் என்றார்கள்.எப்படியோ அவருக்கு விடுதலைக் கிடைத்து விட்டது.மரணம் எப்படி நேர்ந்தாலும் அந்தக் காலத்திய மரணங்கள், கொரானா சாவு என்று தன்னுடைய எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்திக் கொண்டது. அறையில் படுத்திருக்கும் மற்ற நோயர்களைப் பார்க்கிறபோது அவருடைய மனதில் பயம் வந்தது.அவர்களுடைய முகத்தின் சோகம்,அவர்கள் அணிந்திருந்த கவசங்களையும் மாஸ்க்குகளை மீறியும் பயத்தை உண்டாக்கியது. அறைக்குள் அனுமதிக்கும் முன்பாகவே இரத்தச் சோதனை, மார்பக ஸ்கேன் ஆகியவற்றை முடித்து விட்டார்கள்.எம் ஆர் ஐ ஸ்கேன் நுரையீரலில் இன்னும் தொற்று உண்டாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. அப்போது வார்டில் இருந்த மருத்துவர் அதனைக் குறிப்பிட்டு அவருக்கு ஆறுதல் கூறினார். ‘நல்லவேளை தொற்றின் தொடக்கம்தான். வந்துவிட்டீர்கள்’ என்று பெருமூச்சு விட்டார். வார்டின் கவசமணிந்த அந்த டாக்டர் கர்ணன், அசித்ரோமைசின் மாத்திரைகள் மற்றும் சிங்க் சல்பேட் விட்டமின் மாத்திரைப் பட்டைகள் ஆகியவற்றை ஐந்து நாட்களுக்குக் கொடுக்கும்படி செவிலியிடம் சொன்னார்.அந்த இளம்வயது செவிலி கனிவோடு இவரிடம் பேசினார்.இவருக்கு அவரைப் பார்த்ததும் தன்னுடைய மகளின் நினைவு வந்தது.செவிலிக்கும் அவருடைய அப்பா நினைப்பு வந்திருக்கலாம்.பணியில் இருந்த செவிலியர்கள் ஒப்பந்த ஊதிய ஊழியர்கள் என்றார்கள்.அதனைக் கேட்டபோது அவருக்குக் கவலை உண்டானது.அவருடைய பெருந்தொற்று கொஞ்சம் பின்னுக்குப் போனது. நர்சிங் டிப்ளோமா, பி எஸ் சி நர்சிங் என்று படித்திருந்த அந்த இளம் செவிலியர்கள் உலகமே பெருந்தொற்றில் பயந்து நடுங்கி முடங்கிக் கிடந்த போது வயிற்றுப் பிழைப்புக்காகவும் வேலை நிரந்தரமாகும் என்கிற கனவிலும் உயிரையே பணயம் வைத்து இந்த வேலைக்கு வந்திருந்தார்கள்.அவர்களுக்குள் ஒடுங்கியிருந்த வயிறும் பெருகியிருந்த குடும்பமும் ஊதியங்களைப் பற்றி யோசிக்க விடவில்லை.இறக்கையைப் பிபிஇ முகமூடிக்குள் அடக்கியவர்களாய் அவர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். பகல் பன்னிரண்டு மணி இருக்கும்.‘இரண்டாவது மாடியில் யோகா சொல்லிக் கொடுக்கிறோம் வாங்க’என்று சொல்லியபடி நெடிதுயர்ந்த மருத்துவர் ஒருவர் அறைக்கு அறை நின்று சொல்லிக் கொண்டு போனார்.ஆனால் அவருக்குப் பின்னால் வந்த ஒரு பெண் மருத்துவர் ‘யோகா கீகான்’ னு எவரும் எங்கேயும் போகக் கூடாது. மருந்து மாத்திரையைச் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க'என்று முன்னால் போனவரை எச்சரிக்கிற மாதிரி சொல்லிக் கொண்டு போனார். அப்போது தான் அவருக்குப் புரிந்தது சித்த வைத்தியத்திற்கும் அலோபதிக்கும் இருக்கும் தீராத ஒவ்வாமை. இந்தப் பெருந்தொற்றிற்குக் கபசுரக் குடிநீர்,நிலவேம்பு என்று கஷாயமாய்ச் சித்த வைத்தியம் சிபாரிசு செய்தது.ஆர்சனிக்கத்தை சிபாரிசு செய்தது ஹோமியோபதி.பாவம் நோயாளிகள்!இந்தக் கெட்ட காலத்தை முன்வைத்து அரசியல் கட்சிகள் போல நான் நீ என்று ஒவ்வொரு மருத்துவமும் தன்னை நிலைநாட்டிக் கொள்ள முண்டியடித்துக் கொண்டிருந்தது!. நண்பகல் சாப்பாட்டிற்கு முன்வந்த மருத்துவர் இவரிடம் வந்து அன்பாய்ப் பேசினார். "எதுவா இருந்தாலும் சொல்ல கூச்சப்படாதீங்க.அப்பதான் வைத்தியம் செய்ய ஈஸியா இருக்கும்.எல்லாத்தையும் சரிபண்ணிவிடலாம்.கோவிட் நம்ம ஊர்ல இப்ப பெரிய விஷயமே இல்லே”. மருத்துவர் கர்ணன்,இவருடைய மனதில் உண்டாகியிருக்கும் பயத்தைப் போக்குகிற மாதிரி பேசிக் கொண்டிருந்தார்! மருத்துவர் அறையிலிருந்து புறப்படும் முன்பு“ஏன் இப்படி டல்லா இருக்கீங்க.உங்களுக்குப் பிரஷர், சுகர் போன்ற வேற இணை நோய்கள் எதுவும் இல்லை.ஒரே வாரம் எல்லாமும் சரியாகி விடும். வீட்டுக்குப் போய்விடலாம்.மனசில் கவலையை ஏத்திக்காதீங்க.இதப் பாருங்க,நம்ப ஆஸ்பத்திரியில ஐநூறு பெட் இருக்கு.அதன்படி தினமும் ஐந்நூறு பேர் வராங்க.ஐந்நூறு பேர் குணமாகி வெளியே போறாங்க..பயத்தை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் மனசில ஏத்திக்கக் கூடாது,தைரியமா இருங்க..” டாக்டர் மிகவும் அன்பு கொண்டவராய்ப் பேசியதால் இவரும் மருத்துவரிடம் எதையோ சொல்ல விரும்பினார். "சார் கொஞ்சம் டயர்டா இருக்கு.முதுகில வலி அதிகமா இருக்கு" “எவ்வளவு முக்கியமான விஷயம். இதைப்போய் இவ்வளவு அசால்டா சொல்றீங்க”என்றபடி அருகில் இருந்த செவிலியரை அழைத்து “சாருக்கு அஞ்சு நாளைக்கு என் எஸ் போடுங்க”என்றார். “டிரிப்ஸ் போட சொல்லியிருக்கேன்.உடம்பு வலிக்கு அதுல மருந்து சேர்த்துப் போடுவாங்க.உடம்புவலி,டயர்ட்னெஸ் எல்லாமும் சரியாய் விடும்.கவலைப்படாதீங்க” அறையிலிருந்து வெளியேறிய செவிலி,வேறு ஒருவருடன் டிராலியில் மருந்துகள்,குழாய்கள் என்று கொண்டு வந்தார். எல்லாமும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து கொண்டிருந்தது. செவிலியர் இருவரில் ஒருவர் அவருடைய நடுங்கும் கைகளைப் பிடித்துக் கொண்டார். கையில் வென்-பிளேம் செருகப்பட்டது.ஒரு டிரிப்ஸ் கம்பம் அவருக்கு அருகில் நடப்பட்டது.நல்லா இருந்த மனுஷனின் மனதில் வம்புமாதிரி வந்து சேர்ந்தது கையில் இந்த வென்-பிளேம் செருகிய வலி. அவருக்கு அசதியாக இருந்தது.வயிற்றில் பசி புரட்டி எடுத்தது. எப்படிச் சாப்பிடுவது? மதியமா மாலையா?அரை மயக்கத்தில் இருந்தவருக்கு மணி மூன்று ஆனது தெரியவில்லை.. “சார் வாறார்..சார் வற்ரார்..”யாரோ அறை வாசலுக்குள் வந்து சொல்லிக் கொண்டே போனார்கள். இங்கே எவரையும் பிரித்தறிதல் சிரமம். காரணம் அவர்கள் மாட்டிக் கொண்டிருந்த பி பி இ கொரானா உடை.இங்கே அது பொதுவான சீருடை ஆகியிருந்தது!. தலைமை மருத்துவரின் வருகையைத்தான் அவர்கள் அப்படிப் பரபரப்பாக சார் வர்றார்,, சார் வர்றார் என்று சொல்லிச் சென்றார்கள்! தலைமை மருத்துவர் இப்போது இவருடைய படுக்கையின் அருகில் அவர் வந்து நின்றார். தலைமை மருத்துவர் என்றால் என்ன? அவரும் பி பி இ கவசத்தால் உயிரைப் போர்த்திக் கொண்டு வந்து நின்றார்.அவர், கவச உறையின் வழியே இவரை அன்புடன் பார்த்தார்.அவருடைய கனிவே இவருக்குக் கொஞ்சம் அச்சத்தை அதிகமாக்கியது! அனைவரும் அஞ்சி நடுங்கும் பெருந்தொற்று. வயதும் எழுபது ஆகிவிட்டது.மருத்துவமனை இவரை எப்படித் திருப்பி வெளித்தள்ளுமோ என்கிற நினைப்பில் இருக்கும் அவருக்கு இந்த மருத்துவர்களின் கனிவு அவரை மேலும் துக்கத்தில் ஆழ்த்தியது. “நன்றாக இருக்கிறீர்களா?பிரச்சினை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.அப்போதுதான் உடனடியாக மருத்துவம் செய்ய வசதியாக இருக்கும்.” மருத்துவர்கள் அனைவரும் அந்த ஒரே வசனத்தையே அங்கே பேசினார்கள்.பெரிய டாக்டரும் அப்படியே பேசினார்.! அறையிலிருந்து வெளியே செல்ல நினைத்த அந்த மருத்துவர் மறுபடியும் இவருடைய படுக்கையின் அருகில் வந்து நின்றார். இவருடைய வயிறு மூடப்பட்டிருந்தாலும் கண்கள் திறந்துதானே இருக்கிறது?“ஆமாம் லஞ்ச் சாப்பிட்டீர்களா? என்ன சாப்பிட்டீர்கள்?” என்று கேட்டார்..வந்தது வினை! இவர் பதில் சொல்ல வில்லை.ஆனால் சூழ்நிலை அறிந்த பெரிய மருத்துவர் அருகில் இருந்த செவிலி,மருத்துவர்களை அழைத்துக் கடிந்து கொண்டார். “வயசானவரை இப்படித்தான் பார்த்துப்பிங்களா?மைன்ட அப்ளை பண்ணவே மாட்டீங்களா? முதல்ல இந்த சலைன நிப்பாட்டிட்டு அவரைச் சாப்பிடச் சொல்லுங்க”என்று கடுமையாக உத்தரவிட்டார். அடுத்த நிமிடம் அங்கே நடந்த விஷயம்தான் கொடூரம்.அந்த அறையே ரணகளம் ஆனது!.பெரிய சார் கொஞ்சம் கடுமையாகச் சொன்னதும் பயத்தில் அருகிருந்த செவிலி அவசரத்தில் வென்ட் பிளேமில் செருகியிருந்த ரப்பர்க் குழாயை வெடுக்கென்று பிடுங்கி விட்டார்.என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்.ரத்தம் பீச்சிட்டு அவருடைய படுக்கை முழுவதையும் நனைத்து மொசைக் தரையில் ஓடிக் கொண்டிருந்தது!இவ்வளவு ரத்தத்தை அவர் இதுவரைக்கும் பார்த்தவரில்லை.அருகில் இருந்த அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர்…இவருக்கு மயக்கம் வந்தது.அப்போது அங்கே பணியில் இருந்த மருத்துவரில் ஒருவர் சமயோசிதமாக டியூபின் லாக்கை மூட ரத்தம் வெளியேறுவது நிறுத்தப்பட்டது.‘எந்த ட்ரெய்னிங்கும இல்லாம இவங்களை இப்படி வேலைப்பார்க்கச் சொன்னா இப்படியெல்லாம்தான் நடக்கும்..தலையெழுத்து…’சார் என்ன சொல்லப் போகிறாரோ என்கிற உதைப்பில் உறைந்து நின்ற மருத்துவரிடம்,“இதெல்லாம் துடைச்சு இவருக்குப் பெட்டை மாற்றுங்கள்” என்று உத்தரவிட்டபடி எதுவுமே நடக்காத பாணியில் பெரிய சார் அடுத்த அறையின் கதவைத் தட்டினார்!.. இவருடைய அறையில் இருந்த மற்ற இரண்டு தொற்றாளர்களும் இவரைப் பரிதாபமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அந்த ரத்தக் கறை படிந்த பாலித்தீன் படுக்கை கடைசிவரை மாற்றவே இல்லை.‘ஆர்டர் கொடுத்திருக்கு’ என்றார்கள்.அந்த ரத்தக் கறையைப் பார்க்கிற போதெல்லாம் பயமும் கவிச்சியால் வாந்தியும் என்கிற புதிய மனோநிலையில் அவர் அந்தப் படுக்கையில் கிடந்து உழன்றார். ராத்திரி பதினொரு மணி ஆனது.உறக்கம் வரவில்லை. அறையில் இருந்த மற்ற இருவரும் உயிருடன் இருக்கிறார்களா? உறக்கத்தில் இருக்கிறார்களா?தெரியவில்லை.ஆக்ஜிசன் முகமூடி அணிந்தவர்களின் மானிட்டரைப் பார்த்து அவர் அவர்களுடைய மூச்சை உறுதிப் படுத்திக் கொண்டார்.சரி மாட்டியது மாட்டியதுதான். ஆகவேண்டிய வேலைகளைப் பார்ப்போம் என்று அவர் தன்னை மரணத்திற்குப் பின்பான வேலைகளில் கவனம் செலுத்த நினைத்தார்! அவருடைய ரெட்மீ நோட் மொபைலை ஆன் செய்தார். இதெல்லாம் எதற்கு என்று வீட்டு ஆட்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி பதினேழாயிரம் கொடுத்து முன்கூட்டிய விற்பனையில் வாங்கிய போன். அவர் போன் வாங்குவதை எதிர்த்த அவர்களுக்கு அந்த மொபைல்தான் பல சிக்கல்களைச் சுமூகமாக முடித்து வைக்கப் போகிறது.. முதலில் பென்ஷன் அக்கவுண்டில் எவ்வளவு ரூபாய் மிச்சம் என்று பார்த்தார்.லாட்டரியில் குடும்பத்தாருக்கு லட்சம் அடிக்கப் போகிறது என்று மனதில் கருவி கொண்டார்.அப்புறம் கையில் உள்ள பணம்.சென்னையிலும் கிராமத்திலும் உள்ள வீட்டு மனைகள்,நிலபுலன்கள் என்று எல்லாவற்றையும் மொபைல் நோட்டில் குறித்துக் கொண்டார்.அவருக்கு என்ன செய்வது எப்படிச் செட்டில் செய்வது என்று குழப்பம் அதிகம் ஆனது.சரிபாதியாகப் பிரித்துக் கொடுத்துவிட்டால் மனத்தாங்கல் யாருக்கும் வராது. ஆனால் அவருக்கு வேறு ஒரு திட்டம் இருந்தது!பிள்ளைகள் எண்ணத்தில் சமாதானம் இருந்தாலும் அவருடைய மனைவிக்கு அதில் மனத்தாங்கல் வரும் என்பது அவருக்குத் தெரியும். தகப்பன்கள் எல்லோரைப் போலவும் பெண்பிள்ளைமீது பாசம் அதிகம் என்றாலும் மகன்மீது பாசம் அதிகம் இருப்பதை இப்போது அவர் முதன்முதலாக உணர்ந்தார். மகள் நல்ல இடத்தில் செட்டில் ஆகிவிட்டார்.சம்பளம்கூட லகரத்தில் அவர்களுக்கு வருகிறது. கல்யாணச் செலவுக்குக் கூட மகள் சம்பாத்தியத்தில் ஒரு பைசா எடுக்கவில்லை.நிறையப் பேங்க் பேலன்ஸோடுதான் மகளைப் புகுந்த வீடு அனுப்பி வைத்தார். மகன்தான் பாவம் என்கிற முடிவுக்கு அவர் வந்தார்.ஓரளவுக்கு நல்ல வேலையில் இருந்தாலும் சகோதரிக்கு நிறையச் செலவு செய்ததோடு அப்பா அம்மாவையும் மகன்தான் பார்த்துக் கொள்கிறான்.தராசு மகன் பக்கம் இறங்கியது.அவர் சுயநினைவுடன் எழுதுவதாகத் தொடங்கி அவருடைய உயிலை மொபைலில் நோட் பேடில் எழுதி முடித்தார். அதன்பிறகு அவருக்கு நல்ல உறக்கம் வந்தது. இப்படி இன்னும் எத்தனை விஷயங்கள் இருக்கிறது இறக்கி வைக்க? சரி பார்க்கலாம் என்கிறபோது உறக்கம் வந்துவிட்டது. ஆனால் அப்படி வந்த உறக்கமும்கூட அற்ப ஆயுளில் முடிந்து விட்டது. சரியாக இரண்டு மணி.பக்கத்துப் படுக்கையில் இருந்தவர், யாரோ ஒரு பெண் பெயரிட்டுத் தூக்கத்தில் அழைத்துக் கொண்டிருந்தார்.மனைவியா மகளா தெரியவில்லை.இவருக்குத் தூக்கம் போனது..ஆனால் அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் அவரை நடுநடுங்கச் செய்தது.ஏற்கனவே பகல் இரவு என்று பாராமல் பக்கத்து அறையில் தங்கியிருந்த குடும்பத்தில் பாவம் சிறு பெண்குழந்தைகள். அழுதபடியே இருந்தனர்.அந்த அறையிலிருந்துதான் அலறல் சத்தம் கேட்டது.ஆனால் அடுத்த நொடியில் நிசப்தம்.மருத்துவ மனையில் நாய்களுக்கு என்ன வேலை?நாய்களின் ஊளையிடுகிற கேவல் அவருடைய மனதைக் கலவரப்படுத்தியது.என்ன கொடுமையிது? அவருக்கு வேர்க்கத் தொடங்கியது.என்ன நடந்தது என்று தெரியவில்லை. எப்படித் தூங்கினார் என்பதும் புரியவில்லை. வேர்வைக் களைப்பில் அவர் தூங்கிவிட்டார். மறுபடியும் நாயின் ஊளைகள்.யார் யாரோ வராந்தையில் தடதட வென்று ஓடுகிற சப்தம்.நான் வரமாட்டேன்.என்னைவிடு. என்னை விட்டுவிடு என்று அடித் தொண்டையிலிருந்து அலறுகிற ஒரு வயதான மனிதரின் குரல்.அவருக்கு இப்போது நன்றாகவே தெரிந்தது.அது அவருடைய அலறல்தான்.அவருடைய இரண்டு கால்களையும் முகம் இல்லாத யாரோ இருவர் அழுத்திப் பிடித்துக் கொள்ள மேலும் இருவர் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்கள்.எனக்கு ரொம்ப பசி..எனக்குப் பசிக்குது..நீ ஏ நெகட்டீவ்தானே,எனக்கும் அதுதான்.அந்த இரத்தம்தான் வேண்டும்..இரத்தம் வேண்டும் என்று மனதில் கூச்சலிட்டன குரல்கள்.அந்தக் களேபரத்திலும் மதியம் வென்ட்பிளேமை திறந்தபோது அறைமுழுவதும் வீசி அடித்த ரத்தமும்,அவருடைய படுக்கையை நனைத்த ரத்தமும் அவருக்குப் பளிச்சென்று மனகண்ணில் தெரிந்தது..என்ன அநியாயம்? அவருக்கு ஏ நெகட்டீவ் என்கிற விஷயம் அவர்களுக்கு எப்படித் தெரிந்தது? அவர் அலறி அடித்துக் கொண்டு கைகால்களை உதைத்துக் கொண்டு கத்தினார்.முகத்தில் ஆக்ஜிசனுடன் கையில் சலைன்பாட்டில் ஓடிக் கொண்டிருந்த சக அறை நோயாளிகள் என்ன செய்வதென்று தெரியாமல் இவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இவருடைய அலறல் கேட்டு டியூட்டியில் இருந்த செவிலி ஓடோடி வந்தார். ‘என்னுடைய ரத்தத்தைக் கேட்கிறாங்க..என் இரத்தத்தை இவங்க குடிக்கிறாங்க..இவங்க என்னோட ரத்தத்தைக் குடிக்கிறாங்க.. எனக்குப் பயமா இருக்கு‘அடித் தொண்டையிலிருந்து வருகிற மெல்லிய குரலில் முனகியபடியே அவர் தூங்கிக் கொண்டிருந்தார். ‘பாவம் பெரியவர் ஏதோ கனவு கண்டிருக்கிறார்’ என்று சொல்லியபடி செவிலியர்கள் அறையிலிருந்து வெளியேறினர். அந்த அமைதியான பெருந்தொற்றின் ராத்திரியில் வேறொரு அறைக்குள் இருந்து செவிலியை யாரோ உதவிக்கு அழைத்தார்கள். உண்மையில் அவ்விஷயம் அந்த இளம் செவிலியர்களைக் கலவரப்படுத்தியது. பயமுறுத்தியது… 0 மாலை மெல்ல நகர்ந்து இரவுக்கு வழிவிட்டிருந்தது! திடீரென்று அவரைத்தேடி ஒரு செவிலி வந்தார்! ‘டாக்டர் உங்களை டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லி விட்டார்’ என்று கூறியபடி கொண்டு வந்திருந்த மருந்துச் சீட்டைக் கையில் கொடுத்தார். என்ன அநியாயம்? இப்படி இந்த நேரத்தில் வீட்டுக்குப் போ என்கிறார்கள்? எப்போது இந்த இடத்திலிருந்து விடைபெறுவோம் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்த அவருக்கு இப்படித் திடீரென்று மூட்டையைக் கட்டு என்று சொன்னதன் காரணம் விளங்கவில்லை. எந்தவித அறிவிப்பும் இன்றி ஒரு கவச உடை அணிந்த மருத்துவச்சி வந்தார்.அப்படித்தான் அங்கிருந்தவரை அவர்களைப் புரிந்து கொண்டார்.காரணம் அவர்களின் பி பி இ கவச உடை.இனம் பிரித்து அறிய முடியாத தொற்றும் மருத்துவமும்..சரியாக ஐந்தே நாட்கள். அவருடைய கையில் குத்திச் சொருகியிருந்த வென்-பிளேமைக் கழற்றினார்கள்.இந்த முறை அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.இரத்தமின்றி நன்றாகவே முடிந்தது வேலை.அவரை அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினார்கள். அடுத்த நிமிடங்களில் அவர் அந்த மருத்துவ மனையிலிருந்து வெளியேற ஆயத்தம் ஆனார்.அதே நேரம் பணியில் இருந்த மருத்துவரும் அவ்விடம் வந்து சேர்ந்தார்! "பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் வந்துவிட்டது. நீங்க நார்மலா ஆயிட்டீங்க. இனிமே எதைப் பற்றியும் கவலைப் படாதீங்க. நீங்கள் வீட்டிற்குப் போகலாம்.வீட்டில் பத்து நாட்களுக்கு உங்களைத் தனிமை படுத்திக் கொள்ளுங்க..தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள்." என்கிற அறிவுரையுடன் மருத்துவர் அவரை அனுப்பி வைத்தார். அறையைக் காலி செய்கிறபோது வந்த செவிலியும் துப்புரவுப் பணியாளரும்,"சார் இந்தப் பொருளுங்க எதையும் வீட்டிற்கு எடுத்துப் போகாதீங்க சார்..நீங்க விட்டுட்டுப் போற பொருளுங்கள நாங்களும் எடுத்திட்டுப் போறதில்லை.குப்பையில்தான் போடுவோம்" என்றார்கள். ‘அதுதான் சரி.இந்த எச்சங்கள் இப்படியே போகட்டும்’என்று முடிவு செய்தார்.மறக்காமல் செல்போனையும் பர்ஸையும் சத்து மாத்திரைப் பட்டைகளையும் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.உடல் எடைப் பாதியாய் குறைந்திருந்தது.உள்ளே போகும்போது எழுபது கிலோ எடைக் காட்டிய இயந்திரம். இப்போது அறுபது காட்டலாம்.. அவருக்குத் திடீரென்று மனதில் உற்சாகம் பிறந்தது. வராந்தாவில் கைவீசி நடக்கத் தோன்றியது.நூற்றுக்கு இருபது என்கிற அளவில் நீண்டு கிடந்த அந்த மருத்துவமனையின் வீதியில் எவரும் தென்படவில்லை.லிப்ட் வரைக்கும் வந்த அவரை திடீரென்று யாரோ கூப்பிடுவது போலவும் பலர் மொத்தமாகக் கூடி அழுவதைப் போலவும் அழுகுரல்கள் அவருடைய தலைக்குள் புகுந்து அவரைத் துரத்தியது.. அந்த இடத்தைப் பார்ப்பதற்கே மனதில் பயம் கட்டிப்பிடித்தது. . ‘நாங்க எம்மாம்பேரு..இங்கேதான் வந்தோம்..நிறையப் பேர் போயிட்டோம்..ஏன் இப்படி..ஏன் இப்படி’என்று அவர்கள் அவரைப் பார்த்துக் கேட்டார்கள். அவருடைய தலைக்குள் எதுவோ இறங்கி நெரித்தது...பயத்தில் அவருக்குக் கைகால் உதறியது. லிப்ட் கீழிறிந்து மேலே வந்து சேர்வதற்குள் எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்று மனதைத் திடப் படுத்திச் சுவாசத்தை நிறுத்தி நின்றார். நல்ல வேளை எதுவும் நடக்கவில்லை... மருத்துவமனையின் வெளிவாசலை அடைந்தபோதுதான் இவரை அவ்வளவு அவசரமாக அகால வேளையில் அங்கிருந்து விடுதலைச் செய்ததின் காரணம் புரிந்தது.பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரத்தில் சென்னை நகரம் பீதியில் மூழ்கிவிட்டிருந்தது.நூற்றுஎட்டு அவசர ஊர்தியும் தொற்றாளர்களும் வாசலில் வரிசைக் கட்டி நிற்பதை அவர் பார்த்தார். 0 கார் வந்திருந்தது.டிரைவர், பாரதியின் எங்கிருந்தோ வந்தான் போல வந்தவன்.அவர் செய்த சிறு உதவிக்காக மாடாய் உழைக்கிறவன்...வீட்டிலிருந்து எவரும் வரவில்லை.அவருடைய வரவை அவர்கள் எதிர்பார்க்க வில்லையோ என்னவோ... "பெரியப்பா எப்படி இருக்கீங்க?"கேட்கிற போதே அவனுடைய குரல் கம்மியது... "அறிவு கெட்டவனே..என்கிட்ட பேசாதே..ரோட்டை பார்த்து காரை ஓட்டு"என்றார் அவர்.. பெரியப்பாவிடம் இப்படித் திட்டு வாங்கி ஐந்து நாள் ஆகிவிட்ட அவனுக்கு,கிண்டி கொரானா அரசு மருத்துவமனையின் பெரிய வாசற்கதவு திறந்து வழிவிட்டது.....

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.