Madhumitha
சிறுகதை வரிசை எண்
# 20
*விதியின் விளையாட்டு – மதுமிதா*
பொழுது விடிவதை அன்றுதான் ஆறஅமரப் பார்த்தான் ஆதவன். சில்லென்று காற்று வீச உடல் குளிர்ந்தது. மெல்லிய குரல் எழுப்பியபடி பெயர் தெரியாத பறவைக்கூட்டங்கள் மேலே, ஆங்கில 'வி’ வடிவில் பறந்து செல்லும் அழகில் லயித்தான்.
கண்களை மூடி மெல்ல மூச்சினை உள் வாங்கி, மூச்சை உள் நிறுத்தி, மீண்டும் மூச்சினை வெளியில்விட்டான். தியானநிலைக்குப் போவது போலத் தோன்றியது. எந்தக் கவலையையும் மறந்து விடலாம் என்று தோன்றியது. மனிதர்கள் எவருமே இல்லாமல், மனிதக் குரலே கேட்காமல் இருப்பது எவ்வளவு அமைதியைத் தருகிறது.
”நாம ரெண்டு பேரு மட்டும் போதுங்க. இருக்குறதை வெச்சு சந்தோஷமா இருப்போம்.” கமலாவின் குரல் அருகில் கேட்பதுபோல இருந்தது. தனக்காகவே வாழ வந்தவள்.
தினமும் இப்படி இயற்கையை ரசிக்கச் சொல்லும் கமலா இப்போதெல்லாம் இயந்திரமாகவே மாறி விட்டாள். அவளுடைய முகத்தில் எப்போதும் மலரும் சிரிப்புகூட தன்னைப் பார்த்ததும் இறுக்கமாக மாறுவதை எப்படி சரி செய்வது என்றும் தெரியவில்லை.
எல்லாம் நம் கோபத்தால்தான் என்று உணர்ந்தாலும், ஆதவனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு வேளை பங்குச் சந்தையில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இவ்வளவு கோபம் வராமல் இருந்திருக்குமா? இந்த தேசிய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்ததில் இருந்தே இப்படி ஆகிவிட்டதை உணர்ந்தே இருந்தான். குடும்பத் தொழிலான பாரம்பரிய நகைக்கடை நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது. ஏன் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்க இறங்கினோம். முதலில் ஆயிரங்களில் பார்த்த லாபம், லட்சங்களில் கோட்டை விடும் அளவில் வளர்ந்துவிட்டது.
இந்த பத்து வருடங்களில் கமலாவிடம் எப்போது அனுசரணையாகப் பேசினோம் என்று நினைவில் இல்லை. அவள்தான் கோபத்தைப் பொறுத்துக்கொண்டு தன்னையும் அமைதிப்படுத்துகிறாள்.
நம் நிம்மதியை நாமே தான் கெடுத்துக்கொள்கிறோம் என்பது போல, இந்தப் பங்குச்சந்தை என் மனதையும் வாழ்வையும் மாற்றிவிட்டது. கமலாவின் அப்பா அன்றைக்கு சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும். ”அவசரம் வேண்டாம். பதட்டப்படாதே. சூதாட்டம் போல பங்குச் சந்தையில் விளையாடாதே” என்று சொன்னார். தன் பணத்தை மட்டுமல்ல, தன் தங்கை கணவன் அனுப்பிய பணத்தையும் பங்குச் சந்தையில் பங்குகளாக வாங்கி வைத்திருந்தான். அதற்கு பதிலாக நகைகளிலேயே முதலீடு செய்திருக்கலாம். பங்குச் சந்தையோ முழுமையான வீழ்ச்சியில் இருந்தது. எப்படி விடுபடலாம் என்னும் மூச்சுத் திணறல் தினமும். கமலாவுக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது என்றாலும், பணத்தை அவனுக்காக எங்கிருந்தாவது எப்படியாவது ஏற்பாடு செய்து கொண்டுவந்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.
முழுமையாக இதிலிருந்து வெளி வந்துவிடுவோமா, மூழ்கி விடுவோமா என்னும் சிந்தனையில் ஆழ்ந்தான்.
தேசிய பங்குச் சந்தை டெர்மினலை அந்த ஊரில், ஜியோஜித் கம்பெனிக்கு பிராஞ்சைஸ் ஆக எடுத்து நடத்தும், அசோக்கும், “அண்ணா நிறுத்துங்க. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. பத்து நாள் இங்கே வராதீங்க. இல்லைன்னா அண்ணிக்கு போன் செஞ்சு சொல்லிடுவேன்” என்று எச்சரித்திருந்தான். ஷேர் மார்க்கெட்டில் யாரும் இப்படி எடுத்துச் சொல்ல மாட்டார்கள். பங்கு வாங்க விற்க வருபவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, வியாபாரம் நடந்தால் போதும் என்று இருப்பார்கள். ஆனால் இந்த ஊரில் இப்படி ஒரு பிரகஸ்பதி இருப்பது உலக ஆச்சர்யம். ஆனால் யார் சொல்வதை யார் கேட்கும் மன நிலையில் இருக்கிறார்கள். விதியின் விளையாட்டுதானே வெல்லும்.
*
கமலா வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் வந்தாள்.
அடுத்த தெருவில் இருக்கும் தோழி ராதாவின் வீட்டுக்குப்போக இன்று ஏன் இத்தனை தயக்கம். வீட்டின் படியில் இறங்கி வலது பக்கம் திரும்பி, தெருவின் கடைசியில் இணையும் நேர் சாலையில், இடது புறம் திரும்பி இருபது அடி நடந்து கடந்து, வலது புறம் நேராக எதிர் தெருவுக்குள் சென்றால் ஆறாவது வீடு ராதாவின் வீடு. அற்புதமாகக் கோலம், ரங்கோலி போடும் ராதா எம்ப்ராய்டரி, சேலைக்கு பால்ஸ் தைப்பது என்னும் கைவேலையில் சிறந்தவள் மட்டுமில்லை; சின்ன வயதிலேயே ஆன்மிக புத்தகங்கள் படித்து சாத்வீகமாக வாழ்பவள். தெருவில் இருக்கும் சிலருடன் சேர்ந்து பகவத்கீதை வாசிப்பது, பஜன் பாடல் பாடுவது என்று குழுவாக கோவில் பணிகள் செய்வது வரையிலும் எந்த வேலையிலும் ஒரு கச்சிதம் சுத்தம் இருக்கும்.
எப்படி அவளிடம் போய் அவசரம் என்று பணம் கேட்பது. கேட்கலாமா? வேண்டாமா? அவள் வீட்டில் இப்போது இருபதாயிரம் ரூபாய் வைத்திருப்பாளா என்ன?
இத்தனை கஷ்டத்திலும் அவள் நம்மிடம் எப்போதும் கடன் என்று கேட்டதே இல்லை. நாம் இப்போது கேட்டால் சரியாக வருமா? என்ன நினைப்பாள்? அப்படி என்ன கஷ்டம்? நம்ம கிட்ட வந்து கேட்கிறாளே என்று நினைத்து விட மாட்டாளா?
கணவன் இரண்டு நாட்களுக்குள் எண்பதாயிரம் வேண்டும் என்று கடுமையாகச் சொன்னது நினைவுக்கு வந்தது.
கடன் அன்பை முறிக்கும்னு சொல்வாங்களே. இத்தனை வருட நட்பை இழக்க வேண்டியதாகி விடுமா?
இல்லை அவளிடம் இன்றைக்கு கேட்டே ஆகணும். ஆனால் அவளிடம் பணம் இருக்குமா? வேறு வழியில்லை. அவளிடம் இருந்தால் கேட்டால் கண்டிப்பாகத் தருவாள்தான்.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மிகவும் மகிழ்ச்சியாக, “புதுசா சீட்டு பிடிக்கிறேன் கமலா. நீயும் சேரேன்” என்று கேட்டிருந்தாள். “மாதா மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டு” என்று கேட்டதும், சட்டென்று வேண்டாம் என்று சொல்லி இருந்தாள்.
சரி என்று சொல்லி கணவனுக்குத் தெரிந்தால், அதற்கு வேறு திட்டு வாங்க வேண்டும். அதற்கு சும்மா இருந்துவிடலாம் என்றுதான் வேண்டாம் என்றாள்.
“இல்லை ராதா வேண்டாம். ராமலட்சுமியிடம் சீட்டு போடறது முடியப் போகுது. முடிஞ்ச உடனே உன்னிடம் சீட்டு போடறேன்” என்று சொல்லி சமாளித்து விட்டாள்.
ராதா வீட்டுக்குப் போகாமல் நேராக கூட்டுறவு வங்கிக்குப் போனாள் கமலா. கூட்டம் இல்லை. நல்லவேளையாக ஆசாரியும் இருந்தார். கையில் எடுத்து வந்திருந்த இரண்டு பட்டை வளையல்கள், இரண்டு ஒற்றை வட சங்கிலிகளை எடுத்துக் கொடுத்தாள். எடை போட்டுப் பார்த்து விட்டு பணம் நாற்பதாயிரம் என்றதும் அப்பாடா என்றிருந்தது. வாங்கிக் கொண்டாள்.
மீதி பணத்துக்கு என்ன ஏற்பாடு செய்வது? எப்படி சரி செய்வது என்ற யோசனையுடன் நடந்தாள்.
போன் அடித்தது. ராமலட்சுமிதான் பேசினாள். “அக்கா கூப்பிட்டீங்களா? வெளியே போயிருந்தேன். இப்பதான் மிஸ்ட் கால் பார்த்தேன்” என்றாள். “ராமலட்சுமி இந்த மாசம் ஒரு இருபதாயிரம் தர முடியுமா?” என்று கேட்டாள்.
“என்னக்கா மூணு மாசத்துக்குப் பிறகுதானே சீட்டு எடுப்பேன்னு சொன்னீங்க. அவசரமா? சரி சரி. ரேணுகாட்ட மூணு மாசத்துக்குப் பெறகு வாங்கிக்கோன்னு சொல்லிட்டு, இந்த மாசம் அந்தப் பணத்தைத் தரேன்க்கா. சாயந்தரம் வீட்டுக்கு நானே கொண்டு வந்து தரேன்” என்று போனை வைத்ததும் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.
நகைகள் நாற்பதாயிரம் ஆச்சு, இப்போ இது இருபதாயிரம். இன்னும் இருபதாயிரம் வேணுமே என்று யோசனையுடன், மொபைலை கைப்பையில் பணத்துடன் சேர்த்து வைத்து விட்டு நடந்தாள்.
பங்குச் சந்தையில் எருதும், கரடியும் விளையாடும் விளையாட்டு தன் வாழ்க்கையில் விளையாடுகிறது. பங்குச் சந்தையின் உயர்வும், தாழ்வும் ஷேரில் பணம் முதலீடு செய்யும் ஆதவனின் உணர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதையொட்டி மகிழ்வதும் கோபப்படுவதும் அவனுக்கு இயல்பாக ஆகி விட இவளுக்கு வாழ்க்கை ரணமாகியது. இப்போது இவளை பணத்துக்காக அலைய வைத்தும்விட்டது.
வங்கியில் இருந்து ஒரே நேர் சாலையில் நடந்து வந்தவள் சரியாக ராதாவின் வீட்டுக்கு செல்லும் தெருவில் நேராகத் திரும்பினாள்.
ராதா வாசலில் இருந்த திண்ணையில் அமர்ந்திருந்தாள். அருகில் இருந்த தொட்டியில் இருந்து அந்த சிவப்பு ரோஜாப்பூக்கள் அவளைப் பார்த்து, ‘வா… வா…’ என்று சிரித்தன. அணில் ஒன்று வால் தரையில் படாமல் சற்றே உயர்த்தியபடி வேகமாக ஓடியது.
“வா வா கமலா. உனக்கு நூறு ஆயுசு. இப்பதான் நினைச்சேன். வந்துட்டே” என்றாள்.
“சொல்லு ராதா. என்ன விஷயம்?”
“இப்பதான் சீதா பாட்டி அவங்க வீட்டுக்குப் போறாங்க. உன்னைப் பார்க்கணும்னு தேடினாங்க. நீ கதை சொன்னால் அவங்களுக்கு ரொம்ப பிடிக்குது. உனக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன்” என்றாள்.
“ராதா இந்த வாரம் கண்டிப்பா அவங்களைப் பார்க்க வருவேன்னு சொல்லு. இப்ப ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”
“சொல்லு கமலா”
“இல்ல சீட்டுப்பணம் பத்தி சொல்லி இருந்தியே. நானும் பிறகு கட்டறேன்னு சொல்லி இருந்தேனே.” மெல்ல தயங்கித் தயங்கி பேசுவதைக் கேட்கும்போதே அவளுடைய முகத்தில் மாற்றம் தெரிந்தது.
ராதாவுக்கு மிகவும் சூட்சுமமான மனம்.
“என்ன கமலா. எதுனா அவசரமா. கொஞ்சம் முன்னாடி சொல்லக்கூடாது. இப்பதான் திலகம் வாங்கிட்டுப்போறா” என்றாள்.
உடனே, “நாளைக்கு தந்தா பரவால்லியா?” என்றும் கேட்டாள்.
தலையை மட்டும் ஆட்டினாள் கமலா. வேறு எதுவும் பேசவில்லை. விடைபெற்றுக்கொண்டு நிதானமாக வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள்.
தெருவில் நுழைந்தபோது நிம்மதியாக இருப்பதற்கு பதிலாக தலைவலி அதிகமாக இருந்தது.
நாளை மீதி இருபதாயிரம் பணம் கிடைக்குமா? கணவன் ஆதவனிடம் மொத்த பணமும் கொடுத்து விட்டால் பிரச்சினை இல்லாமல் கொஞ்சம் நிம்மதியாக இருக்குமே. கோபத்திலிருந்து விடுபடலாம். இல்லையென்றால் ஆபீசில் இந்தப் பணத்தைக் கேட்க வருபவருக்குக் கொடுக்க முடியாத கோபம் வீட்டில் நம்மேல்தானே விடியும். குழந்தைகளிடம் கோபப்பட்டு விடக்கூடாது.
அடக்கடவுளே…! இந்தப் பணம் படுத்தும் பாடுதான் என்ன? இந்தப் பிரச்சினை இல்லாமல் இருக்க முடியாதா? அதெப்படி பிரச்சினை இல்லாமல் இருக்க முடியும்?
வயிறு இருக்கும்வரை பிரச்சினை இருக்கும்தானே?
இல்லை… இல்லை… எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கும்.
கைப்பையை வைத்துவிட்டு கை கால் அலம்பிவிட்டுத் தண்ணீர் எடுத்துக் குடித்தாள்.
ஆமாம்… ராதா எப்படி நாளைக்கு நமக்குப் பணம் தருவாள் என்று யோசனை ஓடிக்கொண்டிருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. அப்படியே படுத்து விட்டாள்.
ஒரு முக்கியமான விஷயம் அவளுக்குத் தெரியவில்லை. அன்றைக்கு மாலையில் நடக்க இருப்பதும், இரவில் அவள் நிம்மதியாக உறங்கப் போக இருப்பதையும் அவள் அறியவில்லை.
கமலா வெளியே வந்ததும், ராதா தன் நகையை எடுத்துக்கொண்டு வங்கிக்குப்போய் பணம் எடுத்துவந்து விட்டாள். மாலையில் ராமலட்சுமி, ராதா இருவருமே அவளுக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க வீட்டுக்கே வந்து கொடுத்து விட்டுப் போனார்கள். இப்படியான நட்புகள் அபூர்வம்; வரம். நமக்கு அந்த கொடுப்பினை இருக்கிறது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். விதியின் விளையாட்டு அற்புதமானதுதான். வாழ்க்கையில் குப்பறடிக்க அடித்து வீசுவதும் விதிதான். எழுப்பி வானில் பறக்க விடுவதும் விதிதான்.
ஒரு கதவு மூடினால் ஒரு கதவு திறக்கும் என்பது போல தோழிகள் உதவி செய்தனர். திறக்கும் கதவு மறுபடியும் மூடும் என்பதும் விதியின் விளையாட்டுதான் அல்லவா…
*
இன்றைக்கு வேலையில் இருந்து வரும்போதே களைப்பாக இருந்தது கமலாவுக்கு. சாப்பிடாமலே படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள், அவன் சாப்பிட வேண்டுமே என்று சமையல் அறையில் வேலையாக இருந்தாள்.
வீட்டுக்கு உள்ளே வரும்போதே, 'சீக்கிரம் கிளம்பு கமலா. வெளியே போகலாம்’ என்றவனை நிதானமாகப் பார்த்தாள்… உள்ளே போய் முகம் கை கால் கழுவி வரப்போனான் ஆதவன்.
மணி ஏழரை. பசி தாங்க மாட்டான். வெளியே போய்விட்டு திரும்புவதற்குள் பசி எடுத்தால், வெளியே போன சந்தோஷத்தை மறக்கடிப்பது போல், இல்லையென்றால், இனிமேல் அவனோடு சேர்ந்து வெளியே எங்கேயும் போகவே வேண்டாம் என்று வெறுத்துவிடும் அளவுக்கு கோபம் வரும். அவனுடைய கோபத்துக்கு, வீடு, பொது இடம் என்று எந்த வித்தியாசமும் தெரியாது.
ஒருமுறை இப்படிதான் ஊரில் இருக்கும்போது ஒரு நாள், மதுரைக்குப் போகணும் என்றவுடன் ஆசையாக அவனுடன் கிளம்பினாள். பஸ்சில் ஏறிய உடனேயே என்ன காரணத்துக்காக அவனுக்கு கோபம் என்று அவளுக்குத் தெரியவே இல்லை. அவனுடைய இறுகிய முகமும் கோபமும் அவளுக்கு சோர்வை அளித்தது. வீட்டில் மாமா, அத்தை, குழந்தைகளுக்கு இரவு உணவு வரைக்கும் சமைத்து வைத்துவிட்டு, குழந்தைகளுக்கு மதிய உணவு கட்டி வைத்துவிட்டு வந்திருந்தாள். கோபமாக முறைத்துப் பேசியதும் பதைபதைப்பு அதிகமாகி, இந்தப் பக்கம் திரும்பாமல் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். மதுரைக்குப் போகும்போது, இருவர் அமரும் இருக்கையில் அவனுடன் சேர்ந்து உட்கார விரும்பினாள். அவன் ஏனோ வேண்டாம் என்றதும், மூன்று இருக்கைகள் இருக்கும் இந்தப் பக்கமாக அமர்ந்தால், காலை வெயில் மேலே படும்; அதனால் இரண்டு இருக்கைகள் இருக்கும் அந்தப் பக்கம் உட்காரலாம் என்று சொன்ன போதே கோபப்பட்டான். டிக்கட் எடுத்த பிறகும் கோபம் தணியாமல் இருக்கும் அவனருகில் இருக்கும்போது இனந்தெரியாத பயம் எழுந்தது. முகத்தை இன்னும் இறுக்கமாக வைத்துக்கொண்டு அடிக்குரலில் கோபமாக பேசியதும், மெல்ல எழுந்து ஓடும் பஸ்சிலிருந்து ஜன்னல் வழியாக வெளியே குதித்து விடலாமா என்று தோன்றியது. அமைதியாக இருந்தாள். ஒவ்வொரு முறை வெளியே போகும்போதும் இதுபோல ஏதோ ஒன்று நடக்கும். அதை அப்படியே மறந்துவிட போராடுவாள்.
சென்னைக்கு வந்த பிறகாவது, அவன் திருந்தினால் சரிதான் என்று அவன் சொல்வதற்கெல்லாம் சரி சொல்லியிருந்தாள். பகலில் அருகில் இருப்பவர்களுக்கு சட்டைத் துணிகள் தைத்துக்கொடுத்தாள். மாலையில் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்தாள். இப்போது பள்ளிக்கூடத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாள்.
இன்று என்ன விஷயமாக எங்கே அழைக்கிறான் என்று தெரியவில்லை.
அறையிலிருந்து வெளியில் வந்தவன், “இன்னும் கிளம்பலையா?” என்றான்.
“நீங்க சாப்பிடலியா. இப்போ சாப்பிட வேணாமா?”
“சமைச்சிட்டியா என்ன? இன்னிக்கு வெளியே போய் சாப்பிடலாம்னு நினைச்சேன்”
“சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு வெச்சிருக்கிறேன். உருளைக்கிழங்கு குருமா செஞ்சிருக்கிறேன். ”
“சரி அப்போ சப்பாத்தி செஞ்சு பார்சலா இல்லைன்னா டிபன்பாக்ஸில் எடுத்துக்கோ அங்கே போய் சாப்பிட்டுக்கலாம்”
எங்கே போகிறோம் என்று கேட்க முடியவில்லை.
அவன் முகத்தையே பார்த்தாள்.
என்ன நினைத்தானோ,“வேண்டாம். இப்ப எல்லாத்தையும் பிரிட்ஜில் வெச்சுடு. நாம வெளியில் சாப்பிட்டுக்கலாம்” என்றான்.
இன்னும் பயமானது அவளுக்கு. நாளைக்கு, ‘ப்ரெஷ்ஷா சமைக்கல. பிரிட்ஜிலிருந்து எடுத்து சாப்பிட குடுத்தா’ன்னு சொல்லிடுவாரே… இப்போ என்ன செய்வது? என்ற தவிப்பு அவளுடைய முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
”நாம காலையில் அதை சாப்பிட்டுக்கலாம். இப்போ நீ கிளம்பு” என்றான்.
அவள் குருமாவையும், பிசைந்த சப்பாத்தி மாவையும் பிரிட்ஜில் வைத்துவிட்டு வந்தாள்.
இருவரும் கீழே வந்தனர். பேசாமல் அவனுடைய வண்டியில் ஏறிக்கொண்டாள்.
பீச்சுக்கு அழைத்து வந்தான். அந்தக் காற்று அவளை ஆசுவாசப் படுத்தியது. அவனுடன் இணைந்து நடப்பதென்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். மணலில் கால்கள் புதையப் புதைய நடந்துபோய் அலைகளுக்கு அருகில் சென்றனர். ”நீ போய் தண்ணில கால் வைக்கணும்னா வெச்சுட்டு வா. இங்கே செருப்பை போட்டுட்டுப் போ. நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேன்” என்றான்.
அவள் செருப்பை அங்கே கழற்றி வைத்துவிட்டு மகிழ்வுடன் அலைகளுடன் ஒட்டி உறவாடினாள்.
திருமணமான புதிதில் சென்னை மெரினாவுக்கு, தோழி விஜியை அழைத்து வந்த நினைவு வந்தது. அப்போது அவள் மெட்ராஸ் மெடிகல் காலேஜில் டாக்டருக்குப் படித்துக்கொண்டிருந்தாள். அவளை அழைத்துக்கொண்டு ஜாஸ் படம் பார்த்துவிட்டு இங்கே வரும்போது எட்டு மணியாகி விட்டது. இருளில் அலையில் கால் வைத்துவிட்டு, உடனே, ‘ஜாஸ் வருது’ என்று ஓடி வெளியே வந்தார்கள். இப்படியே ஒரு கால் மணி நேரம் கடந்த பிறகு வீட்டுக்கு வந்தார்கள். அந்தக் காலமும் அந்த மகிழ்ச்சியும் இனி வரவே வராதா…
மெல்ல கால்களை நனைத்து கொஞ்சம் ஓய்ந்ததும், அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.
”மத்தவங்க பேச்சை கேட்டு இப்பிடி நடந்துகிட்டேன். அம்மா சொல்லும்போது இப்படி ஆகிடறேன். அவ தான் அப்படி பேசறான்னு தெரியுது. தங்கச்சியும் ஒத்து ஊதுன ஒடனே எனக்கு கோபம் அதிகமாகுது. அவங்க பேச்சைக் கேட்டு நான் எதுவும் சொல்லாம இருந்திருக்கணும். சரி நீ எப்பவும் சரியாதான் இருக்கிறே. எனக்கு கோபம் வந்தா கண்ட்ரோல் செய்ய முடியல. அதான் இங்கே வந்தா உனக்குப் பிடிக்குமே. கொஞ்ச நேரம் பேசிட்டுப் போலாம்னு கூட்டிட்டு வந்தேன்”
“சரிங்க நான் எதுவும் நினைக்கல. வந்த இடத்துல சந்தோஷமா இருக்கலாம். ஏன் பிரச்சினைகளைப் பத்தி யோசிச்சுக்கிட்டு பேசிக்கிட்டு… அது என்னைக்கோ நடந்தது. அதை விடுங்க…”
“இல்ல நான் கொஞ்சம் யோசிச்சிருக்கணும்.”
“பரவால்ல விடுங்க…”
பணத்தை சேகரித்து வை. உன் பெண்டாட்டி பணத்தை அனாவசியமா செலவு செய்யாம பார்த்துக்கோ என்று, மாமியார் சொன்னால் இவருக்கு புத்தி எங்கே போச்சுது. இவருக்காக இவருடைய வியாபாரத்துக்காக தானே, வெளியில் தோழிகளிடம் பணம் கடனாக வாங்கித் தருகிறாள். தான் வேலை செய்து வரும் பணத்தையும் அவனிடம் தான் தருகிறாள். இதைக்கூட கணவனால் புரிந்துகொள்ள முடியாதா என்னும் ஆதங்கம் மொத்தமாக இப்போது போய்விட்டது. கடனிலிருந்தும் தப்பித்து விட்டோம். நல்லவேளை ஊரில் இல்லாமல் சென்னைக்கு வந்துவிட்டோம் என்று மகிழ்வாகவும் இருந்தது. குழந்தைகளுக்கும் இப்போது நிம்மதி.
அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்ததும், குழந்தைகளுடன் விளையாடுவதிலும், பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் எல்லாவற்றையும் மறந்து விடுவாள். கமலா டீச்சர் தான் பிடிக்கும் என்று குழந்தைகள் சொல்லும்போது எல்லாவற்றையும் மறந்து விடுவாள். இப்போது வேலைக்குப் போய் தன் காலில் சுயமாக நின்று உழைப்பது திருப்தியை அளித்தது. இப்போதோ ஆதவன் இன்னும் தன்னைச் சரியாகப் புரிந்துகொண்டான். இனி எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்னும் மன அமைதியில் லயித்திருந்தாள்.
“கமலா” என்று ஆதவன் அழைத்ததும், மகிழ்வுடன் அவனைப் பார்த்து சிரித்தாள். அவளுடைய கைகளை அவன் இறுகப் பிடித்தான். இருவரும் அமைதியாக இருந்தனர்.
பிறகு, “இந்த ருசியாக சமைக்கும் கைக்கு வளையல் செய்யணும்ன்னு சொன்னேன். நம்ம கடை இருந்திருந்தால் இப்போ…” என்ற ஆதவனின் வாயை, கைகளை விடுவித்துக்கொண்டு மெல்ல பொத்தினாள்.
“இதெல்லாம் முடிஞ்சகதை இனி நம்ம குழந்தைகளுக்காக எல்லாம் புதுசா ஆரம்பிக்கலாம்” என்றவளின் அந்தக் கைகளில் முத்தமிட்டான்.
இனிமையாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்கள். கடற்கரையில் இருவரும் கைகோர்த்துக்கொண்டு நடந்ததில் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
இப்படிதான் ஊரில் இருக்கும்போது ஒரு நாள் திடீரென்று சாந்தி தியேட்டருக்கு அழைத்துப்போனார். கிளம்பு என்றதும் எதுவும் பேசாமல் கிளம்பினாள். பல வருடங்களாக இருவரும் சினிமாவுக்குப் போனதே இல்லை. அதனால் அவன் அன்றைக்கு சினிமாவுக்குப் போகலாம் என்று அழைத்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இடைவேளையில் மெதுவாக, “அப்பா சரியாதான் சொன்னார். நான் தான் மறந்து அன்னிக்கு கோபமாகப் பேசிட்டேன்” என்றான். அன்றைக்கு அப்பா, “கொஞ்சம் பொறுமையா இரு ஆதவ். சூதாட்டம் போல பங்குச் சந்தையில் விளையாடாதே. குடும்பம் முக்கியம்” என்று சமாதானம் பேச எடுத்துச் சொன்னாலும், அடங்காத கோப மனசுக்குள் இருக்கும் குணவான் இன்று விழித்துக்கொண்டார் போலும் என்று அமைதியாக இருந்துவிட்டாள்.
ஆக, திருமணமாகி இந்த இருமுறைதான் தான் கோபப்பட்டதற்காக, ‘சாரி’ என்று சொல்லாவிட்டாலும், வருத்தத்தை, வெளியே அழைத்துப்போய் ஏதோ ஒரு வகையில் அவளுடன் பகிர்ந்து அவளுக்கு புரியச் செய்ததில் மகிழ்ந்து போயிருந்தாள். இனி எந்தக் கவலையும் இல்லை. மனதுக்குள், “இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே” என்று உற்சாகக்குரல் ஒலித்தது.
திரும்பும்போது வெளியில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தனர். இரவும் இனிதானது. அவ்வளவு திருப்தியான கூடலாக அமைந்தது. அவனை விட்டுப்பிரியாமல் அப்படியே கட்டிக்கொண்டு உறங்கி விட்டாள்.
இவ்வளவு திருப்தியான இல்லற வாழ்வில் இந்த சுணக்கங்கள் வருவதற்கான காரணங்களை அவளால் அறிந்துகொள்ளவே முடியவில்லை.
தன் வாழ்வில் இப்படி நிகழ்வதற்கு காரணம் தான் தானா, எல்லோர் வாழ்க்கையிலும் இப்படிதான் இருக்குமா, இல்லை தனக்கு அவனை சரியாகக் கையாளத் தெரியவில்லையா என்று அடிக்கடி ஒரு கேள்வி அவளுக்குள் எழுந்துகொண்டே இருக்கும்.
சரி இந்த மகிழ்ச்சி நீடித்தால் போதும், பிரச்சினைகளை விட்டுவிடலாம் என்று இயங்கிக்கொண்டிருந்தாள்.
அவன் மனதில் இருவரும் மகிழ்வாக இருக்க வேண்டும் என்று நினைத்ததால்தானே அவளை வெளியில் அழைத்துப்போனான். அதனால் அவனும் இதை விரும்புகிறான் என்கையில் நாம் எதற்கும் அனாவசியமாகக் கவலைப்பட வேண்டாம் என்னும் முடிவுக்கு வந்திருந்தாள்.
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதனால் தான் அந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவனுக்கு கோபம் வருகிறது என்று சமாதானம் சொல்லிக்கொண்டாள்.
இனி பங்குச் சந்தையில் யோசித்து முதலீடு செய்யுங்கள் என்று சொல்லலாமா வேண்டாமா என்று மீண்டும் யோசித்து, இன்றைக்கு எதுவும் பேச வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தாள்.
அவளுடைய அன்புக்கும் அனுசரணைக்கும் புரிதலுணர்வுக்கும் விட்டுக் கொடுக்கும் பண்புக்கும் ஏதேனும் பலன் இருந்ததா? விதியின் விளையாட்டில் நேற்றும் இன்றும் நாளையும் அவள் யார்?
காலையில் கமலா எழுந்து பார்க்கும் போது, அருகில் படுத்திருந்த ஆதவனைக் காணவில்லை.
தங்கையின் கணவனுக்குத் தர வேண்டிய பணத்துக்காக, எப்படியாவது பணத்தை நேர் செய்ய, ஒரு வலையிலிருந்து தப்பித்தவன், ஆன்லைனில் ஆடிய ரம்மி சூதாட்ட வலையில் சிக்கி, இழந்த பல லட்சங்களைக் கட்டும் வழி தெரியாமல், அன்றைய இரவில், குற்ற உணர்வின் அழுத்தம் தாங்க முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளானவன் உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான்.
அன்புடன்
மதுமிதா
31.03.2024
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்