logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

Priyamithra

சிறுகதை வரிசை எண் # 18


மாயச் சுழலிலே… – ப்ரியமித்ரா இன்று பிரபல கல்வி நிறுவனத்தின் பள்ளி கல்லூரி விழா; பாலர் பள்ளி முதல், ஆரம்ப, உயர், மேல்நிலைப் பள்ளிகள், அறிவியல் கலைக்கல்லூரி வரை அனைத்தும் ஒரே மிகப்பெரிய வளாகத்தினுள் அமைந்திருந்தன. கடந்த ஒரு மாதமாக அனைத்துக் கலைப் போட்டிகள் நடைபெற்றன. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்; பள்ளி, கல்லூரி வளாகத்தில் ரங்கோலிகள் போட்டு, வண்ண வண்ண ரிப்பன், பலூன்களால் மைதானத்தை சிரத்தையுடன் அலங்கரித்தனர். அலங்கரிக்கப்பட்ட மேடை அமைந்த, பெரிய மைதானத்தைச் சுற்றிலும் மாணவ மாணவிகள் பேசிச் சிரித்தபடி, இங்குமங்கும் வண்ணத்துப் பூச்சிகள்போல் பறந்துகொண்டிருந்தனர். பெற்றோர்கள் மேடையின் முன் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து, தங்கள் குழந்தைகளின் திறமைகள் குறித்து பெருமையாகப் பேசிக்கொண்டு இருந்தனர். கல்வி நிறுவனத்தாரும் ஆசிரியப் பெருமக்களும் வருகைதரும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்கவும், தரப்போகும் பரிசுப்பொருட்கள், பரிசு பெறும் மாணவர் பட்டியலைச் சரிபார்த்துக்கொண்டும் பரபரப்பாக இருந்தனர். காலை 9.45 மணிக்கு சிறப்பு விருந்தினர்கள் வந்துவிட்டனர். ஒருவர், அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான காவல்துறை உயரதிகாரி ஸ்ரீதர். மற்றவர், பிரபல தொழிலதிபரான வினிதா. மாலையில் நடக்கவிருக்கும் மாணாக்கர்களின் கலைநிகழ்ச்சிக்கு பிரபல முன்னணி திரைப்பட நடிகரை அழைத்திருந்தனர். 10 மணிக்கு விழா தொடங்கியது. இறைவணக்கத்துக்குப் பின், சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசும், பொன்னாடையும் அளித்தனர். பள்ளி கல்லூரியின் மேன்மை, சாதனைகளை விளக்கியபின், போட்டிகளில் வென்ற, பாடங்களில் நன்மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களின் பெயரை ஆசிரியர் அறிவிக்க, மகிழ்ச்சியுடன் வரிசையாக வந்தர்களுக்குக் கை குலுக்கி, பரிசுகளை வழங்கினர் ஸ்ரீதரும் வினிதாவும். பின் மாணாக்கர்களுக்கு படிப்பின் அவசியம், ஊக்கத்துடன் உடற்பயிற்சி செய்வது, நேர மேலாண்மை, சாலைவிதிகள் கடைப்பிடிப்பது, ஒழுக்கத்துடன் நடந்துகொள்வது பற்றியெல்லாம் பொறுமையுடனும் நகைச்சுவையுடனும் விளக்கி உரையாற்றினார் ஸ்ரீதர். பலத்த கைத்தட்டல், ஆரவார ஒலிகளின் மூலம் அனைவருக்கும் அவரின் பேச்சு மிகவும் பிடித்துப்போனது என்பதை அனைவரும் உணர்ந்தனர். அடுத்து வினிதாவை உரையாற்ற அழைத்தார் ஒரு பேராசிரியை. எளிமையான காட்டன் புடவையில், 45 வயதுக்கு மேல் ஆனாலும் 25 வயதுப் பெண்போல் விறுவிறுவென மைக் முன் வந்தவர், புன்னகையுடன் அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்தார். கனிவான பார்வையுடன் தன் உரையை ஆரம்பித்தார் வினிதா. “ஸ்ரீதர் அவர்கள், உங்களுக்கு தேவையான அத்தனை விஷயங்கள் பத்தி அழகா சொல்லிட்டார். ஸோ, நான் ஒரேயொரு விஷயத்தைப்பத்தி சொல்லணும்னு நெனைக்கறேன். எல்லாருக்கும் பகவத்கீதை பத்தி தெரியுமா? வீட்ல அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி யாராவது சொல்லியிருப்பாங்களே…” எனக் கேட்க, “ஆமா ஆமா…” என்று ஒன்றிரண்டு குரல் வந்தது. “வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துகளைக்கொண்ட குரான், பைபிள், கீதை போன்ற புனிதநூல்களை பலபேர் படிக்கறாங்க. ஆனா ‘அதெல்லாம் பெரியவங்க சமாசாரம்’ன்னு நாம கண்டுக்கறதில்ல… இல்லயா? மகாபாரதம்ங்கற இதிகாசத்துல, குருக்ஷேத்ரத்துல பஞ்சபாண்டவர்க்கும் கௌரவர்களுக்கும் இடையே போர் ஆரம்பிக்குது. அப்போ அர்ஜுனன் சாரதியான பகவான் கிருஷ்ணர்கிட்ட ‘என்னால குருமார், உறவினர்களை எதிர்த்து போர் செய்ய முடியாது’ன்னு சொன்னப்ப, பகவான் இந்த பகவத்கீதையை அர்ஜுனனுக்கு சொன்னார். ‘மனம் எப்படி பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கிறது’ங்கறதை ஸாங்கிய யோகம்ங்கற ரெண்டாம் அத்யாயத்துல சொல்றார்; ‘கேடு அனைத்துக்கும் முதற்காரணம் எது’ என ஆரம்பித்து, அதன் தொடர்ச்சியாய் விளையும் தீமைகளை, 62, 63ஆம் ஸ்லோகங்கள்ல விளக்குகிறார் கிருஷ்ணர். ‘த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோSபிஜாயதே’ ‘க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம: ஸ்ம்ருதிப்ரம்ஸாத்புத்திநாஸ: புத்திநாஸாத்ப்ரணஸ்யதி’ இதன் அர்த்தம், ‘மனிதன் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப எண்ணும்போது, அதில் பற்றுதல் உண்டாகிறது; அதனால் ஆசை உண்டாகிறது; ஆசையால் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம், மயக்கத்தால் நினைவு தவறுதல், நினைவு தவறுதலால் புத்தி நாசம், புத்தி நாசத்தால் அழிகிறான்.’” வினிதா பேச ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே மாணாக்கர்கள் ‘ஹைய்யோ… அறுக்க ஆரம்பிச்சிட்டாங்களே…’ என்று அவர்களுக்குள் பேச ஆரம்பித்தனர். பெற்றோர்களும் ‘சின்னக் கொழந்தைங்களுக்கு இது எப்டி புரியும்?’ என முணுமுணுக்க, ஆங்காங்கே சலசலப்புச் சத்தம் கேட்டதும், ஆசிரியர்கள், ‘உஷ்’ ‘உஷ்’ என்று அடக்கினர். வினிதா, “ஸ்கூல், காலேஜ்ல பகவத்கீதை க்ளாஸ் எதாவது நடக்குதா?” என்று கேட்டார். உடனே தலைமை ஆசிரியர், “ஸ்கூல் குழந்தைங்க பகவத்கீதை ஸ்லோகங்கள மனப்பாடமா சொல்லி போட்டிகள்ல பரிசெல்லாம் வாங்குவாங்க” என்றார் பெருமையாக. “வெரிகுட்” என்று பாராட்டிய வினிதா, “மத்தவங்க கீதை படிக்க தேவையில்லயா?” என்று கூடியிருந்தவர்களைப் பார்த்து சிரித்தபடி கேட்டார். “காலேஜ் படிக்கறவங்களுக்கும் கீதை க்ளாஸ் வைக்கலாம்னு நெனைக்கறவங்க, கைய தூக்குங்க” என்றதும், ஐந்தாறு பெற்றோர் மட்டும் கை தூக்கினர். கல்லூரி மாணவ மாணவியர் பக்கமிருந்து, “ஓ… ந்நோ…” என்று கோரஸாகக் கூக்குரல் எழுந்தது. “புரியுது… இருக்கற பாடங்கள படிக்கவே நேரமில்ல, இதுல இது வேறயான்னு கேக்கறீங்க, ரைட்டா?” என்றார் கூக்குரல் வந்த திசை நோக்கி. “ஆனா, இந்த பகவத்கீதையை ஸ்கூல்லருந்தே படிச்சீங்கன்னா, மனம் ஒருமுகப்படறதால படிப்புல நல்ல முன்னேற்றத்தை பார்க்கலாம், லைஃப்ல என்ன பிரச்சனை வந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணமுடியும். பொதுமறை நூலான திருக்குறளை பள்ளிப்பாடத்துல சேர்த்துருக்கற மாதிரி, பகவத்கீதையையும் பாடத்திட்டத்துல சேர்க்கணும். இதுவும் பொது நூல்தான்; மதச்சாயமெல்லாம் பூசக்கூடாது. நம்ம அப்துல்கலாம் ஐயா இஸ்லாமியராக இருந்தாலும், தேவைப்படும் சமயத்தில் தாம் கற்ற பகவத் கீதையிலிருந்து கருத்துகளை எடுத்துச்சொல்ல தவறியதில்லை! பல ஞானிகள், சுவாமிகள் வெளிநாடுகள்ல கீதையை பரப்பி இருக்காங்க; இதை ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர், கிறிஸ்தவர் விருப்பத்துடன் கத்துக்கறாங்க…” அப்துல்கலாம் அவர்களைப்பற்றி சொன்னதும் மாணவர்கள் கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்தனர். “நம் கல்வித்திட்டத்துல, ஆரம்பநிலைக் கல்விவரை கீதை ஸ்லோகங்கள் மனப்பாடம் செய்யலாம்; உயர், மேல்நிலைக் கல்வியில் முக்கிய ஸ்லோகங்களின் அர்த்தத்தையும் சேர்த்து படிக்கலாம்; கல்லூரியிலும் இன்டெர்னல் மார்க்ஸ் கொடுக்கற அளவில், ‘கீதையின் முக்கிய கருத்துகளை நம் வாழ்வில் எப்படி பின்பற்றி நடப்பது’ என ஒரு மாரல் சப்ஜெக்ட்டாகக் கொண்டுவந்தால், ஸ்டூடண்ட்ஸ் லைஃப் இன்னும் நல்லா இருக்கும்னு நான் நம்பறேன். ஏன்னா, இப்போ இது ரொம்ப அவசியமா இருக்கு. பெற்றோர்களும் ஆசிரியர்களும் யோசிச்சு பாருங்க… பள்ளிக்கொழந்தைங்க மனம் சிதறிப் போறதுக்கு ஏகப்பட்ட வெளிவிஷயங்கள் அதிகமாயிட்டே இருக்கு. மனதைரியம் இல்லாதவங்க பரிட்சைல, காதல்ல தோல்வின்னா விபரீதமான முடிவுகள எடுக்கறாங்க; தற்கொலை செஞ்சுக்கறாங்க. சின்ன வயசுலயே அவங்க எண்ணங்களை தர்மவழில சேனலைஸ் பண்ணிட்டோம்னா, மனப்பக்குவம் அடையறதால அவங்களோட பிரச்சனைக்கு அவங்களே தைரியமா நல்ல தீர்வை எடுப்பாங்க. கீதை படிப்பதன்மூலம் வரும் நல்லொழுக்கத்தால் தவறுகள், குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கு” என்று தன் கருத்தைத் தெரிவித்தார். இதற்குள் சில மாணவர்கள், “டேய் வாங்கடா, போரடிக்குது… கேன்டீன்ல எதாவது சாப்ட்டு வரலாம்” என மெதுவாகக் கலைய ஆரம்பித்தனர். அதை கவனித்த வினிதா, “ஸாரி ஸ்டூடண்ட்ஸ்… ரொம்ப போரடிக்கறேனா? முக்கியமான விஷயம்… கேட்டுட்டு எல்லாருமே சேர்ந்து கெளம்பிடலாம், சரியா?” என்று கேட்டுக்கொண்டதும், கலைந்தவர்கள் தயங்கி நின்றனர். “நம்மிடம் இருக்கும் அறியாமைங்கற நோய்க்கான மருந்து பகவத்கீதைதான்; மருந்து கசப்பாதான் இருக்கும். ஆனா, சரியான முறைல புரிஞ்சு படிச்சு, வாழ்க்கைல பின்பற்றினால், ஞானம்ங்கற நல்ல பலன் கிடைக்கும். ஓக்கே, மொதல்ல நான் சொன்ன ஸ்லோகம், அர்த்தம் உங்களுக்கு புரிஞ்சுதா?” என்று வினிதா கேட்க, “இல்ல…” என்று பதில்கள் வந்தன. “சரி, இப்ப குட்டீஸ்ங்களுக்கு புரியறமாதிரி சொல்றேன்” என்று சொல்லி, நான்கு மாணவ மாணவிகளை மேடைக்கு அழைத்தார். 1ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம், “ரொம்பநாளா ஒனக்கு என்ன வேணும்ன்னு நெனச்சிட்டே இருக்கே செல்லம்?” என்று கேட்டார் வினிதா. “எனக்கு… என் ஃப்ரெண்ட் அபி வெச்சிருக்கற பென்சில் பாக்ஸ் மாதிரி வேணும்” என்றதும், எல்லாரும் சிரித்தனர். “இதான் பற்றுங்கறது.” 5ஆம் வகுப்பு மாணவியிடம், “கண்டிப்பா ‘இத செஞ்சே ஆகணும்’னு நீ என்ன நெனைக்கறேம்மா?” என்று கேட்க, “வீடியோகேம் வெளயாடணும்னு ரொம்ப நாளா ஆசை” என்றாள். “இது ஆசை.” “சரி, உங்கப்பா நீ ஆசைப்பட்டதை வாங்கிக் குடுத்துட்டாங்க. ஆனா அண்ணன் அதை பிடுங்கிட்டான்னா ஒனக்கு எப்டி இருக்கும்?” எனக் கேட்டதும், “கோவமா வரும்” என்று சொன்னாள். “எஸ், ஆசைப்பட்டது கெடைக்கலன்னா கோபம் வரும்.” பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தனர். 9ஆம் வகுப்பு மாணவனிடம், “உனக்கு பிடிச்ச செல்ஃபோனை உன் தம்பி ஒடச்சிட்டான்னா என்ன செய்வே?” “கோவத்துல அடிச்சிருவேன்.” “இது தற்காலிக அறிவு மயக்கம்.” “அப்டி ரொம்ப கோவத்துல இருக்கறப்ப, புத்தியில எதாவது யோசனை ஓடுமா?” என்று கேட்டார் வினிதா. “புத்தியில ஒரு நெனைப்பும் இருக்காது… அடிக்கறதுலயேதான் குறியா இருப்போம்” என்றான் 12ஆம் வகுப்பு மாணவன். “இதான் நினைவு தவறுதல். நினைவு தவறிட்டா, எது நல்லது, கெட்டதுன்னு பிரிச்சுப் பாக்கத் தெரியாம புத்தி வேல செய்யாது, புத்தி நாசம் ஆகும். அதனால வாழ்க்கையின் லட்சியம் என்னன்னுகூட தெரியாம மனிதனாக வாழ்ற தகுதியைக்கூட இழக்கிறான். இதான் அழிவு. இந்த அழிவுக்கு முதல் முக்கிய காரணம் ஆசைதான? இதத்தான் சொல்றார் பகவான். இப்ப புரியுதா?” என்று வினிதா கேட்டதும், குழந்தைகள் வேகமாக புரியுதுன்னு தலையசைத்தனர். “இப்டி நம்ம வாழ்க்கையோடு சேர்த்துப் பார்த்து படிச்சா ஈஸியா புரியும். ‘புலன்களையும் மனதையும் அடக்கி, மனத் தெளிவு பெற்று சாந்தி நிலையில் இருப்பவனுக்கு துன்பங்கள் அழிகின்றன’ என்றும், ‘மனதை இறைவனிடத்தில் நிலைநிறுத்தினால் நன்மை உண்டாகும்’ என்பதையும் அடுத்தடுத்த ஸ்லோகங்கள்ல சொல்றார் பகவான்.” “சரி, நீங்கல்லாம் உங்க எடத்துக்கு போங்க” என்று அக்குழந்தைகளை அனுப்பிய வினிதா, அடுத்து ஒரு கல்லூரி மாணவனையும், மாணவியையும் மேடைக்கு அழைத்தார். “கீதையில், கர்ம யோகம்ங்கற மூணாம் அத்யாயத்துல, 36ஆவது ஸ்லோகம்: அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரிடம் கேட்கிறார், ‘அத கேந ப்ரயுக்தோSயம் பாபம் சரதி பூருஷ: அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:’ ‘விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதன் இஷ்டப்படாவிட்டாலும் அவனை வலுக்கட்டாயமாக பாவங்களை செய்யத் தூண்டுவது எது?’ இதற்கு 37ஆம் ஸ்லோகத்தில், பகவான் பதில் அளிக்கிறார். ‘காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ: மஹாஸநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்’ ‘இந்த விருப்பமும் சினமும் ரஜோகுணத்திற் பிறப்பது; பேரழிவு செய்வது; பெரும் பாவம். இதனை இங்கு சத்ருவாகத் தெரிந்துகொள்’ என்கிறார்.” “என்ன சொல்றார் பகவான்?” என வினிதா கல்லூரி மாணவி நித்யாவிடம் கேட்க, “ஆசை, கோபம் கொள்வது அழிவை உண்டாக்கும், பாவம்னு சொல்றார்” என்று தயங்கியபடி சொன்னாள். “கரெக்ட், இப்ப இதை உங்களுக்கு புரியற மாதிரி சொல்றேன்” என்று கல்லூரி மாணாக்கர்கள் இருக்கும் திசையைப் பார்த்துச் சொன்னார். பின், மேடையிலிருந்த மாணவன் குமாரிடம், “நீங்க ஒரு பொண்ணை லவ் பண்றீங்க… ஆமாவா இல்லயா?” என்று வினிதா திடுதிப்பென்று கேட்டதும், குமார் என்ன சொல்வதென்று தெரியாமல் பேராசிரியரைப் பார்த்து பேந்தப் பேந்த முழித்தான். அவனின் சக நண்பர்கள் பக்கமிருந்து, “ஹோ…” என்ற கூச்சலும் விசில் சத்தமும் கேட்டன. வினிதா, “பயப்படாதீங்க, இது சும்மா கற்பனைக்குதான். உங்க மூலமா ஒரு கதைய சொல்லப்போறேன், அவ்ளோதான்” என்றதும், சிறிது தெளிந்தான். “இப்ப சொல்லுங்க, நீங்க ஒரு பொண்ண ரொம்ப நாளா நேசிக்கறீங்க, என்ன செய்வீங்க?” கேட்டாள். குமார், “லவ் பண்ற விஷயத்தை அவகிட்ட சொல்வேன்” என்றதும் விசில் சத்தம் காதைப் பிளந்தது. “எப்டி சொல்வீங்க? என்ன மாதிரி…” என்று கேட்கும்போதே, “பின்னாலேயே வெரட்டிக்கிட்டே போவான்” என்று யாரோ உரக்க பதில் சொன்னதும், குரல் வந்த திசை நோக்கி குமார் சன்னமாக ‘டேய்…’ என்று முறைத்துவிட்டு, வெட்கப்பட்டு நெளிந்தான். இப்போது நித்யாவை நோக்கி, “நித்யா, உங்கள ஒருத்தர் விடாம தொரத்தி தொரத்தி லவ் பண்றார். ஆனா, உங்களுக்கு விருப்பம் இல்ல. பட், அவரோட நட்பு பிடிச்சிருக்கு. என்ன செய்வீங்க?” என்று கேட்டார். நித்யா கொஞ்சம் யோசித்துவிட்டு, “ஃப்ரெண்ட்ஸா இருப்போம், லவ்வெல்லாம் வேணாம்ன்னு சொல்லிருவேன்.” “கல்லூரி முதல்வர் அவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மன்னிக்கணும்... இது… இந்த ஸ்லோகத்தை விளக்கறதுக்காக, இவங்ககிட்ட இப்டி சும்மா கேட்கறேன். ஸாரி… ரொம்ப நேரம் எடுக்கறேனா? மதிய நேரம், எல்லாருக்கும் பசிக்க ஆரம்பிச்சிருக்கும். ஒரு 10-15 நிமிஷத்துல முடிச்சிடறேன்” என்று கேட்டதும், அனைவருமே ஆர்வத்துடன், தொடரும்படி தலையசைத்தனர். கல்லூரி மாணாக்கர்களும் அவர்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட் வந்துவிட்டபடியால் சுவாரஸ்யத்துடன் கேட்க ஆரம்பித்தனர். குமாரிடம், “நீங்க தீவிரமா லவ் பண்ற பொண்ணு வேற யார்கூடயாவது சிரிச்சுப் பேசினா, உங்களுக்கு எப்டி இருக்கும்?” என்று வினிதா கேட்டவுடன், “பொஸஸிவ்னஸ் வந்துரும்… அதனால கோவம் வரும். எனக்கு அனுபவம் இல்லங்க மேம். ஃப்ரெண்ட்ஸ் சொல்லி கேட்ருக்கேன்” என்றான். “ரொம்ம்ப நல்லவன்டா…” என்றொரு குரல் எங்கிருந்தோ வந்தது. அடுத்து நித்யாவிடம், “உங்க லவ்வர் ரொம்ப நல்லவர்; உருகி உருகி லவ் பண்றதப் பாத்து, உங்களுக்கும் லவ் வந்துருச்சின்னு வெச்சிக்குவோம். எத அடிப்படையா வெச்சு லவ் வரும்? அவன்கூட வெளியே போவீங்களா?” “நம்பிக்கை” என்றாள் நித்யா சட்டென்று. “என்மேல அவன் வெச்சிருக்கும் உண்மையான அன்பின்மேல் நம்பிக்கை வந்துட்டா… அவன் ரொம்ப நல்லவன்னு வேற சொன்னீங்க… அதனால அவன் கூப்ட்டா ஆசையா போய்டுவேன்” என்றாள் சிரித்துக்கொண்டே. இப்போது “ஹேய்… நித்யா… நீ செத்தியா…”ன்னு பெருங்கூச்சல் எழுந்து அடங்கியது. “குமார், ரொம்ம்ப நல்ல பையனா இருக்கீங்க. நீங்க போகலாம். நல்ல பொண்ணு கிடைக்க ஆல் த பெஸ்ட்” என்று சிரித்தார் வினிதா. “தேங்க் யூ மேம்” சொல்லி, தப்பிச்சோம் பிழைச்சோம்னு மேடையிலிருந்து இறங்கி ஓட, அவனின் நண்பர்கள் கிண்டலடித்து வரவேற்றனர். வினிதா நித்யாவிடம், “ஒரு டைம்ல உங்க லவ்வர் நடவடிக்கையில சந்தேகம் வருது. உங்ககிட்ட ரொம்ப நாளா சரியா பேசல. கேக்கறீங்க, சரியான பதில் வரல. என்ன செய்வீங்க?” “அவன் சொல்லலன்னா… நானா என்ன விஷயம்ன்னு கண்டுபிடிக்க பார்ப்பேன்.” “எப்டி?” “அவனோட மொபைல், இல்லன்னா எஃப்பி நோண்டி பாத்துரவேண்டியதுதான்.” “சரி, அவனுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆய்ருச்சுங்கறது உங்களுக்கு லேட்டா தெரியுது. அதே சமயம் அவன் இன்னொரு பொண்ணுகூட தப்பா பேசியிருக்கான்னு கண்டுபிடிச்சுட்டீங்க. இப்போ உங்க ரியாக்‌ஷன்?” “ஆத்திரமா வரும்... பெரிய நம்பிக்கை துரோகம் மேம். சண்டபோட்டு, ‘போடாங்… நீயும் உன் லவ்வும்’னுட்டு போய்ட்டே இருப்பேன்” என்றாள் நித்யா. பலத்த கைத்தட்டல் ஒலி எழுந்தது. “சூப்பர்மா… இந்தக்கால பொண்ணு, தைரியமா சொல்லிட்டீங்க. சரி, அந்த சூழல்ல இருந்து ஈஸியா வெளியே வந்துருவீங்களா?” “நோ மேம், அவ்ளோ ஈஸியா வெளிய வந்துர முடியாது. லவ் மேம்… அந்த வலி இருக்கும்ல...” என்றாள், எதோ நிஜமாகவே எல்லாம் தனக்கு நடந்த மாதிரியான ஃபீலிங்கில். “லவ்வே வேணாம்னு இருந்த உங்கள, இப்டிப்பட்ட வலியில் தள்ளிவிடறது எது? இந்த கதைல நடந்த எல்லா விஷயங்களுக்கும் அடிப்படை காரணம் என்ன? ஆசையும் கோபமும்தான… ஓக்கே, எல்லா கேள்விக்கும் நல்லா பதில் சொன்னீங்கம்மா. நீங்க போகலாம்” என்று நித்யாவுக்குக் கைகுலுக்கி அனுப்பினார் வினிதா. “காதல்ல விழுந்த சிலருக்கு, குமாரும் நித்யாவும் சொன்னத கேக்கறப்போ, ‘நம்ம கதைமாதிரி இருக்கே’ன்னுகூட தோணும்…” என்று புன்னகைத்தபடி நிறுத்தினார் வினிதா. அடுத்து என்ன சொல்லப்போறாங்கன்னு அனைவரும் எதிர்பார்ப்போடு இருந்தனர். “பகவத்கீதையை அர்த்தத்தோடு படிக்கணும்னு இங்க நான் சொல்றது, நாட் ஒன்லி ஃபார் ஸ்டூடண்ட்ஸ், பெரியவங்க எல்லாருக்குமேகூட பலன் தரும். ஏன்னா, லைஃப்ல எப்ப, எந்த மாதிரியான பிரச்சன சுனாமிபோல பொங்கிட்டு வரும்னு யாராலயும் கணிக்க முடியாது. காதல் அல்லது திருமண வாழ்வில் தோல்வி அடைஞ்சவங்க, அல்லது பாதிக்கப்பட்டவங்க, பெரும்பாலும் உண்மையான காரணத்தை வெளியில் சொல்றதில்ல; தெரிஞ்சாதானே அதே சூழ்நிலையை எதிர்கொள்பவர், இன்னும் கூடுதல் விழிப்புணர்வுடன் நடந்துக்கமுடியும்… ஏன் ஸ்கூல் லைஃப்லருந்தே கீதையை அர்த்தத்தோடு படிக்கணும்னு சொல்றேன்? பகவத்கீதையின் ஏழாம் அத்யாயத்துல 13ஆம் ஸ்லோகத்துல, முக்குணமயமான மாயையைப் பத்தி பகவான் சொல்றார். உதாரணத்துக்கு என் அனுபவத்தையே சொல்றேன்… எஸ்… 20 வருஷங்களுக்கு முன்னால், நண்பனின் காதலை பலமுறை மறுத்தும், வலுக்கட்டாயமா தன்போக்கில் இழுத்துட்டுப்போகும் மாயையின் வலையில், எந்த நொடியில் சிக்கினேன்னு எனக்கே தெரியல. என் பிறந்தநாளுக்கு ரொம்ப அன்பா கேக், கிஃப்ட் எல்லாம் கொடுத்து வாழ்த்திட்டுப் போனவன், மறுநாளே வேறொரு பொண்ணுடன் எஃப்பியில் தப்பா பேசியிருக்கான்னு ரொம்பநாள் கழிச்சுதான் தெரிஞ்சது; ஷாக் ஆனேன். பட், நித்யா சொன்னமாதிரி செக் பண்ணல… ‘நம்மால அவனுக்கு எதும் பிரச்சன வந்துரக்கூடாது, அவனோட மேரேஜுக்குள்ள நாம அனுப்பிய மெயில்ஸ், மெசேஜஸ் டெலிட் பண்ணிடலாம்’னு அவன்கிட்ட பாஸ்வேர்ட் வாங்கி செர்ச் பண்ணப்போ, கண்ணுல பட்டுச்சு; அதெல்லாம் வயசுக்கோளாறுல சில பசங்க செய்றதுதான். பட், கேட்டப்போ ‘அதனால என்ன, ‘அவளுக்கு’ மெயில் அனுப்பறது, எஃப்பிலாம் தெரியாது’ன்னு அலட்சியமா பதில் வந்தது. மனைவின்னா அவ்ளோ எளக்காரமான்னு அதிர்ந்தேன். அவனுக்கு நல்லது செய்றேன்னு நெனச்சு, அறியாமையால் தவறுகள் செஞ்சேன். மூணு விஷயம் நடக்கணும்னு நெனச்சேன்; 1. மனைவிங்கற ஸ்தானத்துக்கு எப்பேர்ப்பட்ட மதிப்பு இருக்குங்கறத அவனுக்கு புரிய வைக்கணும். 2. கல்யாணத்துக்குப் பிறகு, அவன் மீண்டும் ஒரு தப்பான நட்புறவுல இருந்து, நல்ல பெண்ணான அந்த மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சுரக் கூடாது; அவளை எப்டியாவது எச்சரிக்கணும். 3. அவன் திருந்தி தன் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமா வாழணும். இது மட்டுமே என் எண்ணமாக இருந்தது. அவனுக்கு கல்யாணம்னு தெரிஞ்சதுமே விலகிட முடிவெடுத்து, ‘கல்யாணத்துக்கப்றம் மெசேஜ் எதுவும் அனுப்பாதே’ன்னு தீர்மானமா சொன்ன நானே, ரெண்டு மாசம் கழிச்சு அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன்; பொதுவா நட்பின் அடையாளமாக அனுப்பியது, அந்த சிச்சுவேஷனில் அது தவறாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஏன் மெசேஜ் அனுப்பினேன்னு அப்போ எனக்கு புரியல; பின்னாளில் கீதையை படிச்சப்பதான் புரிஞ்சது, எல்லாமே அந்த மாயையின் லீலைன்னு. என் மெசேஜைப் பார்த்துவிட்ட அவன் மனைவி, என்னை மொபைல்ல கூப்ட்டு சத்தம்போட்டு மிரட்டினாள். அவளுக்கு சந்தேகம் வந்துவிட்டது. நான் எதாவது சொல்ல, அவன் மாட்டிக்குவானோன்னு பலமுறை யோசிச்சேன். அவளின் சந்தேகத்தால் அவனின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாதுங்கற ஒரே காரணத்தால், ‘எல்லா தப்புக்கும் நான்தான் காரணம், அவன்மேல் எந்தத் தப்பும் இல்ல’ன்னு ஒத்துக்கிட்டேன். ‘ஆம்பளங்க அப்டிதான் இருப்பாங்க, ஒனக்கு எங்கே போச்சு புத்தி’ன்னு கேட்டபோதும், சுடுசொற்களால் அவமானப்படுத்தியபோதும் வேதனைப்பட்டேன். இயற்கை நியதிக்கு, ஸ்வபாவத்துக்கு மாறாக சில விஷயங்கள் நம்மை மீறி நடக்கறப்ப, இப்படிப்பட்ட அவமானங்களை, மன வலிகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்; இதிலிருந்து மீண்டு வர பல வருஷங்கள் ஆச்சு. என்னால் அவங்க வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்… புதுசா கல்யாணமான ரெண்டுபேரோட மனசு என்ன பாடுபட்டிருக்கும்ங்கறதை நெனச்சு வருந்தி, இறைவனிடமும் அவங்க ரெண்டுபேர்கிட்டயும் மனமார மன்னிப்பு கேட்டுக்கிட்டே இருக்கேன். தப்பு செஞ்சவனை, பெருந்தன்மையா மன்னிச்சு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவள், நிச்சயம் பகவத்கீதையை படிச்சவளாக இருக்கணும். வேறொருத்தியாக இருந்தால், கண்டிப்பாக விவாகரத்து வாங்கி பிரிஞ்சு போயிருப்பாள். ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ங்கறது ரொம்ப உண்மை. தன் கணவனை விட்டுக்கொடுக்காமல், ‘அவர் எந்தத் தப்பும் செஞ்சிருக்கமாட்டார், தங்கமானவர்…’ன்னு அவள் அழுதுகொண்டே சொன்னபோது, என் இதயம் அழுதது. இனி அவனை அவள் நன்றாக பார்த்துக்கொள்வாள்ன்னு நிம்மதியடைந்தேன்; சந்தோஷமா இருப்பாங்கன்னு நம்பறேன்…” குரல் சற்று உடைந்து வினிதா இரும, ஒரு ஆசிரியை வேகமாக தண்ணீர் பாட்டில் கொண்டுவந்து கொடுத்தார். பசியைக்கூட மறந்து அமர்ந்திருந்தவர்கள் மத்தியில் கனத்த அமைதி நிலவியது. “அவள் அவனை ஏத்துக்கிட்ட மாதிரி, என்னைக்காவது அவங்க ரெண்டுபேரும் என்னை புரிஞ்சுகிட்டு மன்னிப்பாங்கன்னு நம்பறேன்; அதுக்கு அடையாளமா, அவங்க கொழந்தையோட கல்யாணப்பத்திரிகைய அனுப்புனா நல்லாருக்கும்ல; போகப்போறதில்ல. இந்த பிறவியிலயே எல்லாத்துக்கும் ஃபுல்ஸ்டாப் வெச்சுக்கலாம்ல; கோபம், பழிவாங்கறதுன்னு மறுபிறவில தொடரவேண்டாம்ல… நப்பாசைதான்…” - கனத்த அமைதியை, சிரித்து ‘கூல்’ ஆக்கினார் வினிதா. தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்தார், “மொதல்லயே பகவத்கீதையை தெளிவா நான் படிச்சிருந்தேன்னா, சுழற்றி அடிக்கும் இந்த மாயச் சுழலிலே சிக்காமல் தப்பிச்சிருப்பேன். அறியாமையால் செய்ற தவறால், எத்தன பேருக்கு எப்டீல்லாம் பாதிப்பு… ஆசையை எப்படி வெல்லலாம், மாயையை எப்படி கடக்கலாம்; மனம், புலன்களை எப்படி கட்டுப்படுத்தலாம்; தியானம், யோகம்…ன்னு பகவத்கீதைல நெறைய்ய்ய விஷயங்கள் இருக்கு; முக்கியமான ஸ்லோகங்களை கண்டிப்பா கத்துக்கணும்; ஒருதடவை படிச்சுட்டு விட்ரக்கூடாது. மனிதமனம் ஒரு குரங்குன்னு தெரியும்ல, சைக்கிள்கேப்ல வெளிவிஷயங்களுக்கு தாவிடும்; படிச்சது மறந்துரும். அதனால திரும்பத் திரும்ப படிக்கணும். ‘பகவத்கீதை, ஆயிரம் தாய்களுக்கு சமம்’னு சொல்வாங்க! தர்மவழியை கற்றுக்கொடுக்கும் இந்தத் தாயை பின்பற்றினால், நம்மை ஒருபோதும் கைவிடமாட்டாள். காலேஜ்லைஃப்புக்குப் பிறகு, வேலை, குடும்பம்னு அடுத்தடுத்த விஷயங்கள்ல கவனம் போறப்ப, கீதையைப் படிக்க உங்களுக்கு நேரமும் பொறுமையும் இருக்காது. அதனாலதான் இந்த வளாகத்துக்குள்ள இருக்கறப்பவே ஒரு பாடமா படிச்சுட்டு, வெளிய போகணும்ன்னு சொல்றேன். இப்போ, பாடத்திட்டத்துல பகவத்கீதையை சேர்க்கலாம்னு நெனைக்கறவங்க, கைய தூக்குங்க பார்க்கலாம்…” என்றதும், அங்கிருந்தவர்கள் அனைவரும் கையை உயர்த்தினர்!

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.