ANANTHA KUMAR
சிறுகதை வரிசை எண்
# 17
சுருதி பேதம்
------------------------
அந்த பிரமாண்ட ரிஷப்னுக்குள் நுழைத்தேன். மணமகன் கோலத்தில் அந்த ப்ளேசர் உனக்கு பொருத்தமாக இருந்தது. அப்போது நீ என் முகத்தை பார்த்திருந்தால் பெரியதாய் அதில் எந்த உணர்வும் பிரதிபலித்திருக்காது.
உனக்கும் எனக்குமான சுருதி பேதம் அநேகமாக கல்யாணமான இரண்டாம் நாளே தொடங்கி விட்டது. தாலிக்கயிற்றின் மஞ்சள் கூட சரியாக காயவில்லை. மேகங்களுக்குள் ஒளிந்திருக்கிற மழையின் முதல் தூறல் மண்ணுக்கு எவ்வளவு பரிச்சயமோ அவ்வளவு நெருக்கம்தான் அப்போது நம் இருவருக்கும்…
பழகுதல் தொடங்கவேயில்லை. வார்த்தைகளை கூட அளந்துதான் பேசி இருப்போம். உன் முகத்தைக்கூட கொஞ்சம் யோசித்தால்தான் நினைவிற்கு கொண்டு வர முடியும்.
மேற்கத்திய இசையை உயர் டெசிமலில் அலற விட்டு இசை மழையில் நான் நனைய எத்தனித்த நொடி சட்டென அனுமதி கேட்காமல் அணைத்து விட்டு அறையை விட்டு நீ நகர்ந்தது என் அகராதியில் அநாகரிகமானது. ஆனால் அதை பற்றிய புரிதலின்றி எந்த சலனமுமற்று கடந்த அந்த நிமிடம்தான் ஒருவேளை நம் உறவுப் பிறழ்தலின் தொடக்கபுள்ளியாக இருந்திருக்க கூடும்.
உன் அப்பாவுக்கு உடல்நிலை சரி இல்லாமல் பக்கத்து அறையில் படுத்திருப்பார்.. அவருக்கு அது தொந்தரவாக இருக்கும் என்கிற உன் தரப்பை என்னிடம் தனியாகவே கூறி இருக்கலாம். குடும்பமே ஒன்றாய் சேர்த்து சாப்பிடுகிற டைனிங்கில் அனைவருக்கும் முன்பு அறிவுரை சொல்கிற தொனியில் துவங்கியது, இருவருக்குமான உணர்வுகளின் எல்லை கோடுகள் வெவேறு என்று உறுதிபடுத்தியது.
இரண்டு வருடங்கள் தாக்கு பிடித்ததே இந்த உறவின் மேல் வீட்டில் இருக்கும் பெரியவர்களின் அதீத நம்பிக்கையினால்தான் இருக்க வேண்டும். பெரும்பாலும் எல்லா விஷயங்களையும் பேசித்தீர்த்து கொள்ள வேண்டும் என்பது என் எளிமையான எதிர்பார்ப்பு.
இப்படித்தான் ஒரு முறை நானும் என் ஹாஸ்டல் அறைத்தோழி நிர்மலாவும் ஒரு சின்ன விஷயத்தின் அணுகுமுறையில் வெவ்வேறு பக்கம் நின்றிருந்தோம்.
இன்னும் நினைவு இருக்கிறது. நேராகவே அந்த கூட்டத்திடம் சென்றேன். முன்னே நெஞ்சை நிமிர்த்தி நின்று கொண்டிருந்தவனிடம்
“இன்னொரு தடவ உன்ன இந்த காலேஜ்ல ரோஸ்லின்காக நிக்கறத பார்த்தேன்..அப்புறம் வேற மாதிரி ஆகிடும் பார்த்துக்கோ” என்றேன் நிதானமாக..
“ப்பார்ரா… பெரிய காலேஜ் லீடர் பேச வந்துட்டாங்க.. நாங்க ரொம்ப பயந்துட்டோம்” என்று இரண்டடி பின்னால் நகர்தது போல் நடித்தவன்
“என்னடி பண்ணுவ நீ பண்றத பொறுமையா பண்ணிக்கோ. மொதல்ல அந்த பத்தினி தெய்வத்தை கூப்பிடு.. இன்னிக்கு அவ எங்களோட வந்தாகணும்” என்று நின்றிருந்த என்னை சுற்றிக்கொண்டு நடனம் ஆடினார்கள்”
எனக்கு நடனம் பிடிக்கும் என்றாலும் அந்த சூழல் ரசிக்கும்படியாக இல்லை
தெனாவெட்டாக சிரித்து கொண்டே ஒருவன் செல்போனை வெளியில் எடுத்து பெரிதாக சிரித்தான்.
“இதுல இருக்கிற ஒரே ஒரு போட்டோ போதும் ரோஸ்லின காலி பண்ண.. இல்ல நீ எங்க கூட வரதுன்னா ஓகே.. நாங்க அவள விட்டற்றோம் என்றான் அசிங்கமாக சிரித்துகொண்டே”
அவன் எதிர்பார்த்த மாதிரி எனக்கு கோபமெல்லாம் வரவில்லை. எனை பொறுத்தவரை நன்றாக யோசிக்கிறவர்கள் தோற்று விடுவோம் என்கிற பயம் இல்லாதவர்கள் கோபத்தை கூடவே வைத்து கொள்வதில்லை.
திரும்பி மாடியை பார்த்தேன். நின்றிருந்த தோழிகள் இருவரும் கட்டைவிரலை உயர்த்தி காட்டினார்கள். முகநூலில் நேரடி ஒளிபரப்பு போய் கொண்டிருந்தது. அநேகமாய் மகளிர் போலீஸ் வந்து கொண்டு இருக்க கூடும். எதற்கும் இருக்கட்டும் என்று கமிஷ்னர் அங்கிளுக்கும் அனுப்பி வைத்தேன்.
மீடியாக்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது. நிலைமையின் தீவிரம் உறைத்ததும் நாங்கள் உடனே சிஸ்டராக மாறியது அதிசயம். அதற்கு பிறகு அவர்களை நான் பார்க்கவில்லை.
ரோஸ்லின் நன்றியுடன் அருகில் வந்து என்னை அப்படியே கட்டி கொண்டாள். எல்லோரும் ஹோவென கத்திக்கொண்டே என்னை அப்படியே தூக்கி கொண்டார்கள். ஒரே நாளில் கல்லூரியில் கதாநாயகி ஆகியிருந்தேன். அது என் ரும் மேட் நிர்மலாவுக்கு பிடிக்கவில்லை. எங்கள் காலேஜ் ப்ரெசிடென்ட்டான அவளிடம் அந்த பிரச்சனை போகவில்லையென்று கோபம்.
என்னை எல்லோரும் தூக்கி வைத்ததை அவள் ரசிக்கவில்லை. ஆனாலும் பொறுமையாய் அவளிடம் இரண்டு மூன்று முறை பேசமுயற்சி செய்தேன்.
இப்போது டைனிங்கில் நீ செய்த மாதிரியே வேண்டும் என்றே எல்லோர் முன்பும் சத்தமாக நான் தவறு செய்து விட்டாதாக அறிவுரை கூறி கூட்டத்தில் எனை அவமானப்படுத்தினாள். ப்ரோட்டோகால் பற்றி பாடம் எடுத்தாள். அடுத்த எலெக்ஷனில் நான் நின்று அவள் தோற்றுப்போனாள்.
எனக்கு புரிகிறது. அதுவும் இதுவும் ஒன்றல்ல என்றாலும் தாலி கட்டி விட்டாய் என்பதற்காக வேற்று மனிதியாக கூடு பாய்ந்தாக வேண்டும் என்ற நியதிக்கு முன்னால் எத்தனை நாளுக்கு சண்டையிட்டு கொண்டே இருக்க முடியும் என்றும் தெரியவில்லை. நிறைய நேரங்களில் சிரிப்பை போர்வையாக்கி மௌனம் அணிந்து கொண்டேன்
என் வசதிக்காக நான் வீட்டிற்குள் கால்சட்டையும் வெளியே செல்கையில் ஜீன்ஸ் அணிகையிலும் அப்படித்தான்.வீட்டில் இருந்த எல்லோரும் கூட்டமாகவும் தனித்தனியாகவும் வந்து எனக்கு உடைகள் பற்றி சொல்லி கொடுத்தார்கள். எதிர்த்து பேசி சண்டை எல்லாம் போடவில்லை. எப்போதும் போல் புன்சிரிப்புடன் தலை ஆட்டி கேட்டு கொண்டேன்.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் உடையில் எந்த மாற்றமும் இல்லை. அது வசதிக்காக அணிவது என்பதுதான் என் தியரி. எப்போதும் வீட்டில் வேட்டியுடன் திரியும் உன்னை என்றுமே முட்டி தெரிய பெர்முடா அணிய வேண்டும் என்று கட்டயப்படுத்தியது இல்லை. இன்னும் சொல்லப்போனால் என் அப்பா வீட்டில் வேலையாட்கள்தான் வேட்டி கட்டி நான் பார்த்திருக்கிறேன்.
இந்த சின்ன விஷயத்திற்காக என்னை உன் வீட்டில் எல்லோரும் எதிரி மாதிரி பாவித்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நீ எதோ மேனேஜ்மென்டில் பெரிய படிப்பு படித்திருக்கிறாய் என்றுதான் அப்பா உனக்கு என்னை தரவே சம்மதித்தார். அது மட்டுமல்ல பக்கத்து ரூமில் படுத்திருக்கிற அங்கிளும் என் அப்பாவும் பால்ய நண்பர்கள் என்பதும் ஒரு காரணம்.
இன்று வரை ஒருமுறை கூட நீ என்னிடம் சிரித்து பேசியது இல்லை எனபது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அதற்காக நான் பெரியதாக வருத்தப்பட்டதும் இல்லை என்பதும். ஒரு வேளை உன் அம்மா சின்ன வயதிலேயே உன்னை விட்டு பிரியாமல் இருந்திருந்தால் உன்னை இன்னும் நன்றாக வளர்த்திருக்கலாம்.
உன் அக்காவின் அதிக நேரங்கள் பூஜையறையில்தான் கழிகிறது. என்னை பார்த்தவுடன் கவனமாக முகம் திருப்பி கொள்கிறார்கள். என்ன பிரச்சனை என அறிந்து கொண்டால் நட்பாய் இருக்க கூடும் என்று சில முறை பேச முயற்சி செய்தேன். தவித்து விட்டார்கள். ஒரு வேளை உடை விஷயத்தில் அறிவுரை கேட்கவில்லை என்ற கோபமாய் இருக்கலாம்.
உன் தங்கை எல்லா நேரங்களிலும் போனில்தான் இருக்கிறாள். உன்னையும் மாமாவையும் நேரில் பார்க்கையில் மட்டும் பவ்யம் அணிந்திருகிறாள். உடல் மொழியும் மாறி விடுகிறது. எனகென்னமோ அவள் காதலில் விழுந்திருப்பாள் என்று தோன்றுகிறது.
நான் மாமாவோடு இயல்பாக பழகுவதும் சத்தமாக சிரித்து பேசுவதும் உங்கள் யாருக்கும் பிடிக்கவில்லை என்பதும் எனக்கு தெரிந்துதான் இருந்தது. உன் அக்கா “பெண் என்றாள் அதிர்ந்து பேசவே கூடாது. மாமனார் முன் உட்காரவே கூடாது” என்கிறார்கள்
எப்போதும் போலவே மாற்றி கொள்ளவில்லை. நான் வேறு யாருடன்தான் இந்த வீட்டில் பேசுவது. நீயோ கேட்ட கேள்விகளுக்கு மட்டும் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்கிறாய்.இந்த வீட்டில் வேலை செய்பவர்கள் கூட என்னிடம் பேச தயங்குகிறார்கள்..
எதேச்சையாகத்தான் ஒரு நாள் அந்த புகைப்படம் உன் பர்சில் இருந்து விழுந்ததை நான் பார்த்தேன். யார் என்று தெரியவில்லை. பார்க்க அழகாக இருந்தாள். அவசர அவசரமாக எடுத்து மறைத்து கொண்டாய்.
‘யார்’ என இயல்பாக நான் கேட்டதற்கு ஆத்திரம் காட்டினாய். அடிக்கடி மாமா
“அவன் உன்னை நல்லா பாத்துக்கரணாம்மா..முன்ன மாதிரி என்னால எல்லாத்தயும் கவனிக்க முடியல.. ரெண்டு ஹார்ட் அட்டாக் வந்ததுக்கு அப்புறம் இப்படி இந்த ரூமுக்குள்ளயே அடைஞ்சு கெடக்கறேன்” என்று கேட்ட போதெல்லாம்
“சந்தோசமாத்தான் இருக்கோம் மாமா” என்று பொய்யாய் புன்னகைத்திருக்கிறேன். உன் அப்பாவின் உடல்நிலை கருதி நடித்திருக்கிறேன்
இப்போது என்னால் அந்த புகைப்படத்தை ஓரளவு அந்த கேள்வியுடன் தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது. என்னை நேருக்கு நேர் எதிர் கொள்ள பயந்து தலை குனித்து கொண்டாய். இன்று வரை எனை மனைவியாக அணுகாமல் இருந்ததற்கும் காரணம் ஓரளவிற்கு புரிகிறது.
“அண்ணி.. அண்ணி.. அப்பாவிற்கு மூச்சு வாங்குது.. அண்ணா போன் எடுக்கல பயமா இருக்கு.. ப்ளீஸ் கொஞ்சம் வாங்க” என்று உன் தங்கை எனை அழைத்தாள். இரண்டு வருடங்களில் முதன் முதலாக அண்ணி என்கிறாள்.
மாமாவுக்கு மூச்சு இழுத்து கொண்டிருந்தது. முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் அழைத்து பயப்பட வேண்டாம் என அவளுக்கு அறுதல் கூறி செயல்பட்ட வேகத்தில் மாமாவுக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. “ஓ” நெகடிவ் ரத்தம் வேறு கொடுத்திருந்தேன். மாமா அபாய கட்டத்தை தாண்டி விட்டாதாக டாக்டர் கூறியதும் நன்றியோடு வந்து என்னை கட்டி கொண்டாள் உன் தங்கை.
முதன் முதலாக வாயைத்திறந்தாள். உன் தெய்வீக காதலுக்கு ஜாதியையும் அந்தஸ்தையும் காரணம் காட்டி உன் அப்பா எனக்கு திருமணம் செய்து வைத்தார் என்றும் சில வருடங்களுக்கு பிறகு குழந்தை இல்லை என்று என்னை விவாகரத்து செய்து உன் காதலியை கைபிடிப்பது உன் திட்டம் என்றும் சொன்னாள்.
கல்யணம் ஆன புதிதில் உடை விஷயத்தாலும் சந்தமாய் பேசியதாலும் நான் திமிர்பிடித்தவள் என்று நினைத்து கொண்டாளாம். நீ வேறு என்னை பற்றி வாய்க்கு வந்த பொய்யை எல்லாம் சொல்லி அதை கொஞ்சம் அதிகமாக்கி இருக்கிறாய்.
உனக்கு என்னை மலடி ஆக்கும் சிரமம் எல்லாம் நான் வைக்கவில்லை. மனம் ஒட்டாமல் வாழ்வது கடினம் என உன் அப்பாவிடம் பேசி புரிய வைத்தேன். அவர் என் வாழ்கையை அழித்து விட்டாதாக மிகவும் வருத்தப்பட்டார். எப்போதும் போல் என் அம்மாவிற்கு எதவும் புரியவில்லை. என்னை சபித்தாள். மாப்பிள்ளை மாதிரி நல்ல மனிதர் கிடைப்பது கஷ்டம் என்றாள். அப்பாவிற்கு பிசினஸ். எதையும் கவனிக்க நேரமில்லை. எல்லாம் என் விருப்பம் என்றார்.
இப்போது விவாகரத்து கிடைத்து உன் திருமணமும் நடக்கிறது. அந்த பிரமாண்ட ரிஷப்னுக்குள் நுழைத்தேன். மணமகன் கோலத்தில் அந்த ப்ளேசர் உனக்கு பொருத்தமாக இருந்தது.
உனக்கும் கூட கொஞ்சம் குற்ற உணர்வு இருக்கிறது போல.. எனை பார்ப்பதை கவனமாய் தவிர்த்தாய்.
கூட்டத்தில் எல்லோரும் எனை கை காட்டி
“இந்த திமிர் பிடிச்சவ எதுக்கு இங்க வந்தா.. கல்யாணம் பண்ணி மது வாழ்கையை அழிச்சது பத்தாதா” என்று என் காதுபடவே பேசினார்கள்.
சுதந்திர தேவி சிலையை பரிசாக கொடுக்கையில் மணமகள் கண்ணில் இருந்து விழுந்த கண்ணீர் துளி நன்றியறிவித்தது.
ச.ஆனந்தகுமார்
************************************
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்