G.Shyamala Gopu
சிறுகதை வரிசை எண்
# 16
புருஷா மிருகம்
"பாலா" என்று குரல் கொடுத்தவாறே ஒருக்களித்திருந்த அந்த குடிசை கதவை திறக்க, “ம்ம்ம்” என்று ஈனஸ்வரத்தில் பதில் வந்தது.
"நீதானே போன் பண்ணினே?"என்று கேட்ட நான், சமூக நலத்துறையின் குழந்தை மீட்பு குழுவின் களப்பணியாளர்.
தரைக்கு தங்கச்சியாக, தரையோடு தரையாகப் படுத்து கிடந்தவள், எழுந்து நிற்க முயன்று தள்ளாட, சட்டென்று அவளைப் பிடித்து “நல்ல சொரமடிக்குது” என்றேன். அவளோடு ஒண்டிக் கிடந்த குழந்தையும் அழுது கொண்டே எழுந்து நிற்க இயலாமல் தள்ளாடியது. குழந்தைக்கும் நல்ல காய்ச்சல். கிள்ளியெடுக்க கொஞ்சமும் சதையில்லாமல் மெலிந்திருந்தார்கள் இருவரும். மாறுகண் போல் தெரிந்த கண்கள் இரண்டும் மூக்குடன் ஒட்டிக் கொண்டிருந்தது இருவருக்குமே. ஐந்து வயது பெண் குழந்தைக்கும் தாய்க்கும் ஊட்டச்சத்து குறைபாடு.
“இவ்வளவு முடியாம கெடக்கீங்களே, ஆம்புலன்சுக்கு போன் பண்ணிருக்கலாமில்ல” என்றேன் நான்.
“ஆஸ்பத்திரிக்கு இட்டுகினு போயி நாலஞ்சு நாள் வச்சிருந்துட்டு திரும்ப இங்கன தானே கொண்டாந்து வுடுவாங்க” என்றாள் பாலா சலிப்புடன். “எங்கள கொன்னு கொலை எடுக்கறான்னு தான் உங்களுக்கு போன் பண்ணினேன். எப்படியாவது எங்கள காப்பத்துங்கம்மா” என்று பேசிக் கொண்டிருந்தவள் சட்டென்று என் காலில் விழுந்தாள்.
பதறி நகர்ந்து அவளைத் தூக்கி நிறுத்தியவள் கேட்டேன். “எங்கே உன் புருஷன்?”
“அந்த படுபாவி எங்கே குடிக்கப் போயிருக்கானோ! யம்மா, வாங்கம்மா, அவன் வர்றதுக்குள்ளே இங்கருந்து போய்டலாம்” என்று பரபரத்தாள்.
இவ்வளவு நேரமும் உடம்புல உசுரு இருக்கா இல்லையான்னு தெரியாத சவமாக கிடந்தவளுக்கு, நான் வந்ததனால தெம்பு வரவே, பாய்ந்து குழந்தையைத் தூக்கி இடுப்பில் செருகியவாறு சுவற்றில் மாட்டியிருந்த மருந்து சீட்டுப் பையை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தாள். கிட்டத்தட்ட என்னையும் நெட்டித் தள்ளிக் கொண்டு போகாத குறை தான்.
“கட்டின புருஷனுக்கு எதுக்கு இவ்வளவு பயப்படறே?”
“கட்டின புருஷனாம்? தூ..மனுஷனா அவன்” என்று சொல்லிக் கொண்டே நான் வந்த வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
புகாரின் அடிப்படையில் பிரச்சினையை தெரிந்து கொள்ள வந்த என் வண்டியில் ஓடி சென்று ஏறி உட்கார்ந்தவளைப் பார்த்தேன். இருபத்திரண்டு வயசிருக்கும். அதற்குள் ரொம்ப வருஷம் வாழ்ந்ததைப் போன்ற களைப்பு. கண்களில் பயமும் சலிப்பும். வியாதியினால் மனசு அலுத்திருக்கும். புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த பயம் எதுக்கு? அதுவும் கட்டிய
கணவனிடம்?.
வண்டி அந்த சந்தைத் தாண்டி இருக்காது. வயதான பெண்மணி ஓடி வந்து வழி மறித்தாள். “ஐய்யய்யோ, உன் புருஷன் வந்து கேட்டா நா என்னன்னு சொல்லுவேன்?. நீ வீட்ல இல்லாட்டி என்னைய வெட்டியே கொன்னுடுவானே” என்று மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள்.
“யெம்மா, இது என் மாமியா மா. அந்த ஆளு வந்தானா இத்தையும் அடிச்சே கொன்னுடுவான். நம்மளோட இட்டுன்னு போயிடலாம்மா” என்று கெஞ்சினாள் பாலா.
வண்டியை நிறுத்தி அவளையும் ஏற்றிக் கொண்ட பின் “ரெண்டு பேரும் இப்படி பயப்படறீங்களே. அவ்வளவு பெரிய வஸ்தாதா அவரு?” என்று வியந்தேன்.
“வெத்தாளா வந்தாவே அவனை சமாளிக்க முடியாது. இன்னைக்கு வேலைக்கு போயிருக்கான். கூலி வாங்கி மொத்தத்தையும் குடிச்சிட்டு ஒத்தாளு நாலாளா திரும்பி வருவானே” என்றாள் மாமியாகாரி.
“சம்பாரிக்கிறத மொத்தமும் குடிச்சிட்டா நீங்க சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க? நீ வேலைக்கு போறியா என்ன?” என்று பாலாவைக் கேட்டேன்.
“டீச்சரம்மா வூட்ல வேலைக்கு போய்ட்டுருந்தேன். அவுங்க குடுக்குற காசையும் சோத்தையும் கூட புடிங்கி தின்னுடும் இந்த பன்னாடை. எங்கே வேலைக்கு போனாலும் அங்க வந்து வம்பு வலிக்கும். இப்போ வேலைக்கு போறதில்ல”
“வேலைக்கு போகாட்டி? சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க?”
“ரேசன்ல அரிசி பருப்பு கெடச்சிடுது. கைச்செலவுக்கு இவன் வாயைப் பாத்துட்டு நிக்கணும். கவுர்மென்ட் ஆயிரம் ரூபாயும் தரவே இப்போத் தான் மூச்சு விட முடியுது. பாடையில போறவன் சமயத்துல அதையும் அடிச்சி பிடிங்கினு போய்டுவான்”
“எனக்கு முதியோர் பணம் வருதும்மா. ஆஸ்பத்திரிக்கு இனாமா செவப்பு கலர் பஸ்ல போய் வந்துருவோம்.. கை செலவுக்கு பூ கட்டி வித்துகினு ஏதோ எங்க பொழப்பு ஓடுது” என்றாள் மாமியார்காரி.
இலவசங்களால் நாடே கெட்டு விட்டது என்ற கூப்பாடு ஒருபுறமிருந்தாலும் அரசின் இந்த இலவச சலுகையினால் பயன் பெறும் விளிம்புநிலை மக்களுடன் பழகுவதால் இவர்களுடைய சூழலை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
“இந்த கொழந்தைக்கு ஒடம்புல சத்தேயில்ல” என்றேன் நான்.
“இதோட அக்கா மாதிரி சாகாம ஏதோ இந்த மட்டும் உசுரோட இருக்கே. அதுவே பெரிசு” என்றாள் பாலா.
சொல்லாதே என்று மாமியார்காரி சைகை செய்ததை கவனித்தும் சன்னத்தம் வந்தவளைப் போல உடல் நடுங்க அமர்ந்திருந்தவளைக் கண்டு “ஏன்? என்னாச்சு?” என்று கேட்டேன்.
“எம்புருஷன் தான் தரையில அடிச்சிக் கொன்னுட்டான்” என்றாள் வெறித்த பார்வையுடன் உணர்ச்சி துடைத்தக் குரலில்.
ஏதோ நோய் வந்து செத்துப் போயிருக்கும் என்று நினைத்தவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ”எது? உம்புருஷன் அடிச்சிக் கொன்னுட்டானா? இந்தா ஏதாவது சொல்லாதே” என்று நடுங்கும் குரலில் சொன்னேன். டிரைவரும் திகைத்தப் பார்வையுடன் பின்னால் திரும்பி அவளைப் பார்த்தார்.
ரொம்ப நாள் பழுத்து வீங்கியிருந்த கட்டியை ஊசியால் குத்தியதும் சீழ் பிதுக்கிக் கொண்டு வெளியேறுவதைப் போல ரொம்ப வருஷமா மனதை அழுத்திக் கொண்டிருந்த சோகத்தை கொட்டித் தீர்த்து விடும் தீர்மானத்துடன் பாலா பேச ஆரம்பித்தாள்.
“வயசுக்கு வந்த கொஞ்ச நாளையிலே இவனுக்கு கட்டிகினு வந்தாங்க. மொடாக்குடியன். தெனம் பெண்டாட்டி வேணும். சோத்துக்கு செத்துனுருக்கிற என்னாலே முடியலை. ஆனாலும் அழிச்சாட்டியம் பிடிச்ச கொரங்கு நெனச்சதை முடிக்காம விடாது. அன்னைக்கு ராத்திரி ஆளைக் காணோம். வெளியே நல்ல மழை பெஞ்சிட்டுருந்தது. சரி தொலையறான்னு கதவை மூடிகினு படுத்தேன். ரெண்டு பக்கமும் பிள்ளைங்க படுத்துக் கிடந்ததுங்க. மூணு பேத்துக்கும் நல்ல காய்ச்சல். நடு ராத்திரி பெரிய புள்ள முனகர சத்தம் கேட்டு திரும்பிப் படுத்தேன். இந்த கட்டையில போறவன் பிள்ள மேல படுத்திருக்கான். பதறி எழுந்து பிள்ளையை அவங்கிட்டருந்து பிடுங்கினேன். என் கையிலருந்து புள்ளயை அவன் பிடுங்க, அவங்கிட்டருந்து புள்ளைய எப்படியாவது காப்பத்திறனும்னு மல்லு கட்டினேன். ஊஹூம்” என்று கதறி அழுதாள். அவளை சமாதானப்படுத்தவும் தோணாமல் உக்காந்திருந்தேன் நான்.
ஒருவாறு சமாளித்துக் கொண்டு “எங்கிட்டருந்து புள்ளைய புடிங்கி ஆத்திரத்திமா சுவத்தில தூக்கி நச்சுன்னு அடிச்சிட்டான். பேச்சு மூச்சில்லாம கெடந்தது. வெளியே மழை. ராத்திரி நேரம். எங்கன்னு தூக்கிட்டு ஓடுவேன். சின்ன புள்ளையும் பொட்டைப்புள்ளையாச்சே. இவனை நம்பி விட்டுட்டு போக முடியுமா? ராவு முச்சூடும் கையிலேயே வெச்சிட்டு உக்காந்துட்டிருந்தேன். வெடியகாலையில அம்மான்னு கூப்டுட்டு இதோ இந்த கையில உசுரை விட்டது” என்று தன்னோட கைகளை வண்டியின் பக்கவாட்டில் அடித்துக் கொண்டு அழுதாள் பாலா.
“போலீஸ்ல புடிச்சிக் குடுத்தியா?” என்று டிரைவர் கேட்டார்.
“எங்கே?” என்று மாமியாரைப் பார்த்துக் கொண்டு உதடு பிதுக்கினாள்.
“அவனை ஜெயில போட்டுட்டு என்னம்மா செய்றது?” என்று கேட்டாள் மாமியார்.
பெத்தப் பாசம் இப்படியா ஒருத்திக்கு கண்ணை மறைக்கும்? ஒரு கிராதகனை பெத்துட்டோமேன்னு கொஞ்சமேனும் குற்றவுணர்ச்சியில்லாம இருக்காளேன்னு மனசுல எரிச்சல் மூண்டது. “இப்ப மட்டும் என்ன செய்றியாம்? அவன் சம்பாரிச்சிப் போட்டா திங்கறே?” என்றேன் மரியாதையை காற்றில் விட்டவளாக. இவளை கொன்னுடுவான்னு பாலா பயந்தாளே. இப்படிப்பட்ட மவனைப் பெத்ததுக்கு சாவலாம் என்ற என் தீர்ப்பு மனப்பான்மையை தப்பு என்றது என் மனசாட்சி. இவளோடு என்ன பேச்சு? முகத்தைத் திருப்பிக் கொண்டேன். வண்டியே அமைதியாகயிருந்தது.
“திங்கறதா முக்கியம்?” என்று மெல்ல கேட்டாள் மாமியார்காரி. அவளை ஏறிட்டுப் பார்த்தேன்.
எங்கோ தலைக்காவேரியில சின்னதா ஒரு ஊத்துல உற்பத்தியாகும் காவேரியாறு விரிந்தோடி கடலில் கலப்பதைப் போல கண்களில் சின்னதாக உருளும் கண்ணீர் துளி அப்படியே பெருகி அவள் புடவையை நனைத்திருந்தது.
“இவனை போலீஸ்ல புடுச்சிக் குடுத்துட்டு இவ எங்க போவா? இவள பெத்தவங்க கண்ணு தெரியாதவங்க. பிளாட்பாரத்துல ஒண்டிகினு பிச்சையெடுத்து காலம் களிச்சினு கெடக்காங்க. இவ வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே ஒரு தறுதலை கையைப் பிடிச்சி இழுத்து அசிங்கமாயிருச்சு. அதனாலத் தான் சின்ன வயசுலய கண்ணாலம் கட்டி இட்டுகினு வந்தேன். வீடுன்னு ஒன்னு இருக்க சொல்லோ, பெத்த அப்பனே பிள்ளைய நாசம் பண்ண பாக்கறான். கம்பத்தைக் கண்டா காலைத் தூக்கற நாயி ஜெம்மங்க மத்தியில இதுங்க ரெண்டு பேத்தையும் எப்படிம்மா அனுப்பறது?” என்று கேட்டாள்.
கொலைகாரனுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்ற தர்ம நியாயம் அவளுக்கு தெரியாமல் அல்லது முடியாமல் இருக்கலாம். ஆனால் அவள் சொன்னதைப் போலத் தானே விளிம்புநிலை பெண்களின் பாதுகாப்பு கேட்பாறற்று கெடக்கு. வாழ்க்கைப் பாடமும் நடைமுறையும் தெரிந்தவள் சரியாகத் தான் முடிவெடுத்திருக்கிறாள்.
கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தவள் “நாசமா போறவன். அன்னைக்கே புடிச்சிக் குடுத்துருக்கணும்” என்று கையை நெட்டி முறித்து சாபமிட்டாள்.
என்ன புதுசா என்பதைப் போல பாலாவை பார்த்தேன்.
“நேத்து நடுராத்திரி அந்த நாயி இந்த பச்சைப்புள்ள மாரு மேல உக்காந்திருக்கான்” என்றவளை இடைமறித்து “எது?” என்று நான் திகைக்க, டிரைவர் கிறீச்சென்று சடன் பிரேக்கடித்து வண்டியை நிறுத்தி பின்னால் திரும்பிப் பார்த்தார். ”அந்த நாயை கொல்லாம விட்டியே” என்று கறுவினார்.
“பிள்ளையை தூக்கிட்டு டீச்சரம்மா வூட்டுக்கு ஓடிட்டேன். இனி இவனை விட்டு வெச்சா ஆபத்துன்னு அவுங்க தான் உங்களுக்கு போன் பண்ணினாங்க” என்றாள் பாலா.
இருவரையும் நேரே மருத்துவமனையில் அட்மிட் பண்ணினேன். குழந்தையை அவசர பிரிவிற்கு அனுப்பி விட்டு, வாசலில் மாமியார்காரி அழுவதற்கு கூட தெம்பில்லாமல் தொய்ந்து உட்கார்ந்திருந்தாள். மருத்துவமனை நடைமுறைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பலாம் என்று பாலாவைப் பார்க்கப் போனேன்.
வானத்துல எத்தனை உயரத்துல பறந்தாலும் பூமியில தன்னுடைய இரையை குறி பார்த்து அடித்து தூக்கி செல்லும் பருந்தைப் போல வந்து நின்றான் பாலாவின் கணவன். அவன் பின்னால் வந்து கொண்டிருந்த என்னைக் கவனிக்காமல் “நாயே, இங்க வந்து படுத்துகினே” என்று உறுமினான்.
“முடியாம கெடக்கறவ வேற எங்க போவாளாம்?” என்றேன் குரலில் நிதானமும் பார்வையில் சீற்றமுமாக.
திரும்பி என்னைப் பார்த்தவன் “ஆங்..அதுக்கு வேற வேல என்ன? வருஷம் முச்சூடும் முடியலன்னு
படம் காட்டும்” என்று முணுமுணுத்தான்.
“படம் காட்டுதா?” என்று கண்களில் இகழ்ச்சியுடன் “உன் கொழந்தை உசுருக்கு போராடிக்கிட்டு கிடக்கே. தெரியுமா?” என்றேன்.
“இவ புள்ளைய பாத்துக்கற லட்சணம் அப்படி”
“அவள சொல்றியே நீ பாத்துக்கிட்டியா?”
“நான் பாத்துக்காம பக்கத்து வூட்டுக்காரனா பாத்துக்கறான்?” என்று எகிறியவன் ஆண்டாண்டு காலமா பொம்பளைய தலையில தட்டி உக்கார வைக்கிற கேள்வியை பாலாவிடம் கேட்டான். “ஏண்டி நீ புள்ளைய அவனுக்குத் தான் பெத்தியா?”
சாக்கடைன்னு தெரிஞ்சும் ஏண்டா கல்லெடுத்து அடிச்சோம்னு அறுவெருப்பாயிருந்தது எனக்கு. என்னை வெற்றிக் கொண்ட பெருமிதத்துடன் பாலாவிடம் திரும்பி “பொறம்போக்கு, எழுந்து வூட்டுக்கு வா” என்று மிரட்டினான்.
அவனைப் பற்றி சொன்ன போது ச்சீ இப்படியும் கூட ஒரு மனுஷன் இருப்பானாவென எனக்குள் உண்டான திகில், அவன் அழைத்ததும் எங்கே இவள் கிளம்பி போய் விடுவாளோ என்ற பயமாக மாறியிருந்தது. இதற்கு ஒரு முடிவு தெரியாமல் வீட்டுக்கு போவதில்லை என்ற தீர்மானத்துடன் அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
“இனிமே நாங்க வூட்டுக்கே வர மாட்டோம்” என்றாள் பாலா.
“வராம? எவன இஸ்துகினு போப் போறே?”
“உங்கூட மல்லுக்கட்ட ஆகலையாம். இதுல இன்னொன்னு கேக்குதா?”
“அப்புறம் பொண்டாட்டின்னு என்னத்துக்கு இருக்கியாம்?”
“இனிமே உனக்கு நான் பொண்டாட்டியா இருக்கப் போறதில்ல”
“ஓஹோ அவ்வளவு தூரம் ஆகிப் போச்சா?நான் கட்டின தாலி கழுத்துல கெடக்கும் போதே இத்தனை பேச்சு பேசறியா?”
“யமன் நம்ம கழுத்துல வீசற பாசக்கயிரைப் போல கழுத்துல இந்த கயிறைக் கட்டிட்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடற. இந்தா நீ கட்டின தாலியை வாங்கிக்க” என்று தாலியில் கையை வைக்கவும் அவளைத் திகைத்துப் பார்த்தான்.
கல்லெடுத்து நாம விரட்டிக்கிட்டு ஓடற நாய் ஒரு கட்டத்தில நின்னு திரும்பி நம்மளை நோக்கி வந்துச்சுன்னா நாம எடுக்கனும் ஓட்டம். இல்லாட்டி கடிச்சி கொதறிடும். இது தானே இயற்கை நியதி.
பாலாவின் குரலில் இருந்த திடமும் தீர்மானமும் முதன்முறையாக அவன் மனதில் கிலியை உண்டாக்கியது. கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதுமான இயல்பில் “இப்போ என்ன நடந்து போச்சுன்னு இம்மாம் பெரிய வார்த்தை பேசுவே பாலா. உனக்கு உடம்புக்கு முடியல. இங்கருந்து நல்லபடியா பாத்துக்கிட்டு வா. எப்போ வரேன்னு சொல்லு. நான் வந்து இட்டுகினு போறேன்” என்றான்.
“இல்ல. நான் வரல” என்றாள் தீர்மானமாக.
“கஸ்மாலம் என்ன ரொம்ப பண்ற? நீ கண்டி வரல, ரெண்டு குருட்டு பிச்சைக்காரவங்களையும் துணியை உருவிட்டு ஓட விட்டுருவேன்”
“எங்கே அவுங்க மேல கைய வெய்யி” என்றாள் பாலா அடிப்பட்ட புலியின் ஆக்ரோஷத்துடன்.
“இன்னாயம்மா பாத்துகினுருக்கே. அதுக்கு சொல்லி புரிய வையிம்மா” என்றான் என்னிடம்.
“அம்மாட்ட அல்லாத்தையும் சொல்லிட்டேன்” என்றாள் பாலா.
“சொல்ட்டியா. இந்தம்மா இருக்கிற தைர்யத்துல ஆடாதே. வீட்டாண்ட தான் வரணும்” என்றான் ஆங்காரமாக.
“எதுக்கு நான் வீட்டாண்ட வரேன். இந்தம்மா எங்களை ஹோம்ல விட்டு புள்ளைய இஸ்கூல சேக்கறேன்னு சொல்லிருக்காங்க”
“குடும்பத்தைக் கலைக்கிறதே உனக்கு பொழப்பா?”என்று என்னிடம் சீறினான். முறைத்த பார்வையுடன் ஆங்காரமாக மேற்கொண்டு பேச வந்தவனை பெரிய டாக்டர் ரவுண்ட்ஸ் வரார் எல்லாரும் வெளியே போங்க என்ற குரல் அடக்கவே, பாலாவிடம் “இதோ பாரு. மரியாதையா வூடு வந்து சேரு. அவ்வளவு தான் உனக்கு” என்றான் குரல் அடக்கி.
“இவுங்க மூணு பேரும் கவர்மென்ட் பொறுப்புல இருக்காங்க. இவுங்களுக்கு எதுனா ஆச்சுன்னா நீ தான் களி திங்கணும்” என்றேன் நான். இன்னும் இவர்களுக்கு நான் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஆனாலும் அதை பார்த்துக் கொள்ளலாம் என்றது என் அனுபவ அறிவு.
“ஆம்பளைன்னா அப்படியிப்படின்னு தான் இருப்பான்”
“யப்பா, எங்களை வுட்டுடு. நாங்க எங்கன்னா பொழச்சிகிறோம்” என்று கையெடுத்து கும்பிட்டாள் பாலா. “இந்தா நீ கட்டின தாலி” என்று கழுத்தில் வெளுத்தப் போயிருந்த மஞ்சக்கயித்தைக் கழட்டி அவனிடம் நீட்டினாள்.
அவளுக்கிருக்கும் பின்புல சப்போர்ட்டையும் தன்னுடைய நிலையையும் அறிந்தவன் அவள் நீட்டிய தாலியை வாங்கிக் கொண்டு வெளியே போனான்.
பின்னால் நானும் போனேன். மரத்தடியில் மாமியார்காரி உட்கார்ந்திருந்தாள். அவளைக் கண்டதும் பொண்டாட்டியிடம் தோற்ற ஆங்காரத்தில் “பொறம்போக்கு, வீட்டுக்கு வா” என்றான் ஆத்திரமாக.
“புள்ளைய வுட்டுட்டு எப்படி வர்றது? நீ வூட்டுக்குப் போ” என்றாள் அவள்.
“இப்போ வரலைன்னா ஒன்னை கொன்னுடுவேன்”
“அதை செய். நானே ரொம்ப வருஷமா அந்த யமன்றவனைத் தேடிகினு இருக்கேன்”
“ஆளாளுக்கு இப்டி பேசினா? என்னிலமையை யோசிச்சிப் பாத்தீங்களா?”
“குடிச்சிட்டு அக்கப்போரு பண்ணும் போதெல்லாம் பெத்த புள்ளன்னு பாக்காம கல்லெடுத்து மண்டையில போட்டு சாவடிக்கனும்னு யோசிச்சிருக்கேன்” என்றவள், அவனுடைய முன்னுச்சி முடியைப் பிடித்திழுத்து, அடியடியென அடித்து “நீ செஞ்ச தப்புக்கு ஒன்ன கொன்னுட்டு நான் ஜெயிலுக்குப் போயிட்டா இதுகளை யாரு காபந்து பண்றதுன்னு நெனச்சி உன்ன உசுரோட விட்டேன்” என்றாள்.
நினைவு தெரிந்த நாளிலிருந்து தன்னிடம் அடியும் உதையும் வாங்கிக் கொண்டிருந்தவள் இன்று மகாகாளியாக விஸ்வரூபமெடுத்து நிற்பதைக் கண்டு திகைத்த அவனுடைய தோற்றத்தைப் பார்த்து வயிறெரிந்து “பெத்த புள்ளைங்கள எவனாவது நாசனம் பண்ண நெனப்பானா? நீயெல்லாம் ஒரு அப்பனா? அந்த சிசு உசுருக்கு போராடினி கெடக்கு. இப்பமாச்சும் உன் மனசுல லவசேசம் பாசமிருக்கா?” என்று அழுதாள்.
“அந்த பெரிய பொண்ணை தூக்கி செவத்துல அடிச்சியாமே. அவ்வளவு குடிவெறி. நீ புள்ளைய தூக்கும் போது அது அப்பான்னு அழுதிருக்குமே. அதுங் கொரல் உனக்கு கேக்கலையா? அப்போக் கூட அதை விட்டுடனும்னு தோணலையா உனக்கு?” என்று கேட்டேன்.
அவன் தலையைக் குனிந்து கொண்டு அமைதியாகயிருந்தான்.
“அதை கொன்னுட்டோமேன்னு கொஞ்சம் கூட குத்தவுணர்வு இல்லையா? ராத்திரி படுத்தா நிம்மதியா தூக்கம் வருதா? தூக்கத்துல கனவு வருமா? கனவுல அந்த கொளந்தை வருமா? வந்து அப்பான்னு கூப்பிடுமா? இந்த பச்சைப்புள்ள மார் மேல ஏறி உக்காந்திருந்தியாமே. கையைப் பிடிச்சிக் கடிச்சியாமே. நீ செய்யறதெல்லாமே தப்புன்னு உனக்கு புரியுதா? புரிஞ்சிக்க முடியாதபடி உன்னை அந்த பாழாப் போன குடிவெறி ஆட்டி வைக்கிதுல்ல” என்று எனக்குள் பொங்கிய உணர்வுகளை மறைக்க முடியாமல் வெம்பினேன்.
அவன் அதற்கும் அமைதியாகயிருந்தான். பதில் சொல்ல முடியாத இடத்தில் அமைதியாகயிருப்பது தப்பிக்கும் வித்தை.
“பதில் சொல்லு” என்றேன் நான்.
“அந்த நாசமா போறவன் என்னன்னு பதில் சொல்லுவான்” என்றாள் அவன் தாய்.
“வூட்ல என்னாலே தனியா இருக்க முடியாது. வூட்டுக்கு வாம்மா” என்று கெஞ்சினான் அவன்.
முதன்முதலாக தன்னை அம்மா என்றழைக்கும் அவனைப் பார்த்து பரிதாபட்டாலும் அவசரப்பிரிவில் கண் மூடிக் கிடக்கும் பேத்தியும் மருமகளும் கண் முன் வரவே அழுகையைத் துடைத்துக் கொண்டு “ஒன்னலல்லாம் ஜெயில்ல போடக்கூடாது. அங்கேயாவது பேச்சுத் துணைக்கு பத்துப் பேரு இருப்பாங்க. தனியா இருக்க விடனும். வூடு வாசல் பெண்டாட்டி புள்ளன்னு எதுவுமே இல்லாம அனாதையா ஏன்னு கேக்க நாதியத்துக் கிடந்தா தான் ஒணரு வரும்” என்றாள் தீர்மானமாக.
புடவை முந்தானையை ஒரு உதறு உதறிவிட்டு “இனி எங்கள தேடிகினு வராதே. உன் வழியைப் பாத்துக்கோ. குடிச்சிட்டு எங்கனா சாக்கடையில கெடந்து உருளு” என்று மருத்துவமனை கட்டிடத்தை நோக்கி நடந்தாள்.
கட்டியவள், தான் கட்டிய கயிற்றை அவிழ்த்து தந்துவிட்டாள். தொப்புள் கொடியை அறுத்து தன்னைப் பெற்றவள் இன்று பந்தபாசங்களை அறுத்துக் கொண்டு போய் விட்டாள்.
சோர்ந்து நின்றவனைப் பார்த்தேன். மனதின் ஏதோ ஒரு மூலையில் இரக்கம் பிறக்கவே “இந்த பாரு, குடிய விட்டுட்டு ஒழுங்கா பொளைக்கப் பாரு. உங்கிட்டருந்து உன் மனுஷாள பிரிக்கிறது எங்க நோக்கமில்ல. நீ நல்லாயிட்டா உன் குடும்பம் உங்கிட்ட வந்துடும். குடி மையத்துல சேரணும்னா சொல்லு. சேத்து விடறேன்” என்றேன் நான்.
என்னை ஏறிட்டு நோக்கியவன் பதிலேதும் சொல்லாமல் வாயிலை நோக்கி நடந்தான். இவன் புருஷனா மிருகமா என்பதல்ல கேள்வி. இவனை அண்டிப் பிழைத்தப் பெண்கள் தெளிந்து விட்டார்கள் என்பது தான் உண்மை.
புருஷாமிருகம் என்று இலக்கியங்களில் படித்தது நினைவில் வந்தது எனக்கு. புருஷாமிருகம் என்பது மனிதமுகமும் சிங்கவுடலும் கொண்ட ஒரு மிருகம். இம் மிருகம் குபேர வானத்தைப் பாதுகாப்பதாக புராணக் கதைகள் கூறுகின்றன. திருவாதவூர் ஏரிக்கரையில் ஒரு கம்பத்தின் மேல், புருஷாமிருக சிலை உள்ளது. இதனை ஏரிக்காவல் தெய்வம் என்கின்றனர். இப்படி ஊரை பாதுகாக்கும் மிருகங்களைக் கூட நல்ல ஆண் அதாவது ஆல்பா ஆண் என்று அடையாளப்படுத்தினர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ தன்னுடைய சொந்த குடும்பத்தைக் கூட காக்காத புருஷனை என்னவென்று சொல்வது?
சமீபத்தில் ஆல்பா ஆண்களைப் பற்றி ஒரு திரைப்படம் பார்த்தேன். தன்னை எதிர்த்தவர்களிடம் அதீத வன்முறையும், தன்னை நம்பியிருக்கும் பெண்களிடம் அதீத வன்புணர்வும் தான் ஆல்பா ஆண் என்று அவனை மகிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒன்று இப்படிப்பட்ட ஆல்பா ஆண்களாக அல்லது வானத்தில் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டு கவிதை படிக்கும் மென்மையானவர்களாக ஒன்றுக்கும் உதவாதவர்களாகத் தான் ஆண்கள் இருப்பார்கள் என்று உபரியாக உபதேசம் வேறு.
பாலாவைப் போன்றும் அவள் பச்சிளம் பெண் குழந்தை மற்றும் மாமியாரைப் போன்றுமிருக்கும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பை இந்த சமூகம் தந்திருக்கிறது?
அவர்களை காத்துக் கொள்ள வேண்டியவனே அவர்களுக்கு எமனாகிப் போன கொடுமையை என்னவென்பது? மேற்கொண்டு அவர்களை அடக்கி ஆண்டு கொண்டிருந்த பாலாவின் கணவனை எந்த கணக்கில் சேர்த்துக் கொள்வது?
புருஷாமிருகம் ஆணாக இருந்தால் அராஜகம் செய்வதும், அதுவே பெண்ணாக இருந்தால் தன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக் கொள்ள தியாகம் செய்வதுமாக மிருகங்களில் கூட பெண்களுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை என்று உண்மையில் எனக்குப் புரியவில்லை. மேற்கொண்டு யோசிக்க அவகாசமில்லாதபடி எனக்கு அடுத்த அழைப்பு வந்தது. இனி புது பஞ்சாயத்து. அது என்னன்ன விபரீதங்களை வைத்துக் கொண்டிருக்கிறதோ!
நன்றி.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்