logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

ஏ. ஆர். முருகன் மயிலம்பாடி

சிறுகதை வரிசை எண் # 15


சல்யூட், ஆர்டர் !(சிறுகதை) ----------------------- ஏ. ஆர். முருகன் மயிலம்பாடி . ----------------------- #* சூரிய வெப்பம் மைதானத்தை நனைத்து நெற்றிப் பொட்டில் சூட்டைக் கிளப்பியது. கபிலேசின் உள் மகிழ்ச்சி அவனுக்குள் குளிரைப் பாய்ச்சியது. கனவு நனவாகி விட்டது!! எட்டாண்டுகளுக்கு முன்பு ஊர் காவல் படையில் மதிப்பூதியத்தில் பணிக்குச் சேர்ந்தான். அதைப் பகுதி நேரமாய் பார்த்துக் கொண்டே அதீத உழைப்பைச் சில காலம் செலுத்தினான். அதன் பலனால் ஐ. பி. எஸ். அந்தஸ்தோடு உயர்ந்து நிற்கிறான்!! வெள்ளையன், குள்ளையன் என்று பெயர் சூட்டப்பட்டுக் கொண்டிருந்த பரம்பரையில் சமூக நீதி நுழைந்து கொண்டிருந்த காலக் கட்டத்தில் பிறந்தவன். கொதிக்கும் நீராவிக் கலனாய் கிடந்த அடிமட்ட வாழ்க்கையில், அடிபட்டு மேலெழுந்து வந்தவனுக்குக் கதிரவனின் இளங்காலை வெப்பம் இதமாகவே இருந்தது! "ஓ. கே. ஆபீசர்ஸ், பரோடு இதோடு முடிச்சுக்கலாம், டீ டைமுக்குப் பின்னால் அலுவலகத்துக்குள் உங்களுக்கான மீட்டிங்கில் மரியாதைக்குரிய டி. ஐ. ஜி. பங்கேற்பார் " அதிகாரி சொல்ல, எதிரில் நின்ற , தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப் பட்டிருந்த பயிற்சி முடித்தவர்கள் சல்யூட் வைத்துக் கலைந்து சென்றனர். கேண்டீனில் அசதியோடு உட்கார்ந்தான். தேனீரும், பிஸ்கெட்டும் தொண்டைக்குச் சுகம் தந்தன. "எங்கே நமக்குப் போஸ்டிங் போட்டிருக்காங்கனு மீட்டிங்கில் தெருஞ்சுடும். நாளைக்கே அங்கங்கே போக வேண்டியிருக்கும் . அப்புறம் நாம் அடிக்கடி சந்திச்சுக்க முடியாதுனு நினைக்கிறேன் " முன் நாற்காலியில் இருந்த வளவன் கவலையோடு சொன்னான். "எனக்கும் வருத்தமா இருக்கு, டிரெய்னிங் பீரியட் முழுக்க உன் நட்பு எனக்குப் பெரிய பலமா இருந்துச்சு, எப்பொவும் ஒன்னாவே இருந்தோம். ப்ச்சூ.. என்ன செய்ய? .." உதட்டைப் பிதுக்கினான். "அனேகமா எனக்கு மதுரை டிவிசன்ல கிடைக்கும்னு நினைக்கிறேன். டி. ஐ. ஜி. அவுங்கவுங்க சொந்த மாவட்டத்துக்குப் பக்கத்துல போடலாம்னு யூகிச்சிருக்கிறதாப் பேசிக்கிறாங்க. ஆரம்பகாலப் பணிச்சுமை. விடுப்பு அதிகம் கிடைக்காது" "என்னைப் பொறுத்தவரை சொந்த மாவட்டத்துக்குப் பக்கத்துல எங்கே கிடைச்சாலும் சரி" விளையாட்டு "இப்பொ நமக்கு அனுபவமே முக்கியம், அதனால் எந்தப் பணி கொடுத்தாலும் சந்தோசமாய் ஏத்துக்கிட்டு சிறப்பாப் பணி செய்யனும் " "யெஸ், அதுவே நல்லது, இனி நாம் எப்பொவாவது மட்டுமே பாத்துக்க முடியும்னு நினைக்கிறேன்" அங்கு, எல்லோருமே தத்தமது சகாக்களிடம் பிரியாவிடை பெரும் சங்கடச் சத்தங்களே ஓங்கி ஒலித்தது. தங்கும் அறைக்குச் சென்று யூனிபார்ம் மாற்றிக் கொண்டான். டேபிளில் இருந்த போனை எடுத்துப் பார்த்தான். மனைவி பரமேஸ்வரி என்கிற பரமு மூன்று முறை மிஸ்டுகால் கொடுத்திருந்தாள். எடுத்து நெம்பரைத் தடவினான். "கிரவுண்டில் இருப்பேன்னு தெரியாதா?, வந்ததும் நானே கூப்பிடுறேனு காலையில் தானே சொன்னேன் " "இவ்வளவு நேரமாகும்னு தெரியலே, பூஸ்யன் வேறு டாட், டாட் னு அனத்தீட்டே கிடக்கான் " சிணுங்கலாய் சொன்னாள். "ஆர்டர் வாங்கினதும் உடனே அங்கே போய் ஜாயின்ட் பண்ணிட்டு மறுநாளே ஊருக்கு வர்றேன். உன்னையும் குழந்தையையும் அழச்சுட்டு வந்துடுறேன்" "உங்க கிட்டெப் பேசுறானாம், போனைப் புடுங்குறான்" வீடியோவில் பூஸ்யன் சீவிச் சிங்காரித்துத் தெரிந்தான். சுட்டிக்குடுமி போட்டிருந்தான். கன்னத்தில் கருப்புப் பொட்டு. தாவாக்குட்டையில் கண்ணேறு மைக் கீறல், லேசாகத் துருத்திய நாக்கில் சள்ளு வழிந்தது. "இஹ்.. இஹ்... ப்பா... ப்பா... " "ஏன்டா தங்கம், அம்மா கூட அமைதியா விளையாடு, சீக்கிரம் டாடி வந்துடுவேன். அப்புறம் இங்கே வந்துடலாம் " பரமு இடைமறித்தாள். "பெரிய மனுசனோடு பேசுறாப்ல பேசுனா அவனுக்கு என்ன தெரியும்?, குறும்பு தாங்க முடீல " "பையன் வேணும்னு நீ தான் பக்கியாப் பறந்தே, நான் வேலையெல்லாம் கெடச்சு செட்டிலாகிற வரைக்கும் தள்ளிப் போடலாம்னு சொன்னேன். கேட்கலை " "இப்பொவே கல்யாணமாகி அஞ்சாறு வருசமாச்சு, பூச்சி புழுவக் காணோம்னு உங்கப்பம்மா கோயிலுக்குப் போய் வேண்டுதல் வெக்க ஆரம்புச்சுட்டாங்க, இன்னும் லேட்டானா அவ்ளோ தான்! " "அவுங்களப் பாத்துக்கச் சொல்லு," "அன்னிக்கு உங்க பட்டமளிப்பு விழாவுக்கு ஒருநாள் போய்ட்டு வந்துடுறேன்னு சொன்னதுக்கே முடியாதுன்னாட்டாங்க. பொழுது விடுஞ்சாக் காடு களனீன்னு ஓடீடுதுக, பையன் பெரிய ஆபீசர் ஆயிட்டாரு வீட்ல கிடங்கனு சொல்லிப் பாத்தேன். பேரனுக்குப் பெரிய ஸ்கூல்ல படிக்க வைக்கிற காசச் சிறுவாடாச் சேத்தாம ஓயாதுகளாம், சண்டைக்கு வருதுக, பாவம் நாம வெளியூர்ல செட்டில் ஆகப் போறதை நினைச்சுக் கவலைல கிடக்கிறாங்க, எனக்கும் அதுகளப் பிரிய வருத்தமா இருக்கு" "அதுகளுக்கேத்த மருமக, இங்கே கூட்டீட்டு வந்துடலாம்னாலும் ஊரத் தாண்ட ஒத்துக்க மாட்டாங்க. எப்படியோ, இந்தளவுக்கு நான் படிச்சு வர நீங்க கொடுத்த ஒத்துழைப்பு ரொம்பப் பெருசு" "எதுக்கு இவ்வளவு ஒஸ்திப் பேச்சு? " "உண்மையச் சொன்னேன். ஹோம் கார்டுல வாரத்தில ரெண்டு மூணு டூட்டி பாத்துட்டுக் கஸ்டத்துல தவிச்சேன் . டிகிரி முடிச்சாலும் மத்த வேலை கிடைக்கல. அப்பொ மகராசி மாதிரி நீ குறுக்க வந்தே, நான் புது மனுசனா அவதாரம் எடுத்துட்டேன். மேல படிக்கச் சொன்னே, காட்டு வேலைக்குக் கூடப் போயி புக்ஸ் வாங்கிக் கொடுத்தே, ரெண்டு தடவை யூ. பி. எஸ். ஸி. ல தவறீட்டேன். ஊக்கப்படுத்தி இன்னொரு முறை எழுத வச்சே. இன்ஸ்டிடியூட்ல சேர உதவுனே! " "உங்களோட ரொம்ப ரொம்ப உசந்த மனசுக்கு முன்னால நான் ஒரு தூசி, திறமையால ஜெயிச்சாலும் அடக்கமாப் பேசுற பெருந்தன்மை உங்களைத் தவிர யார்க்கும் வாய்க்காது" "சரி.. சரி.. நேரமாகுது.. எல்லோரும் ஆஜர் ஆய்டுவாங்க.. ஈவ்னிங் பேசுறேன், செல்லப்பையனும் நீயும் கன்னங்களைக் காட்டுங்க கிஸ் வச்சுக்கிறேன் " "ம்.. ம்.. " துருத்திக் காட்டிய செவ்வரளிகளிகளில் உம்மா பதித்தான். டிஸ்பிளேவில் சிந்திய உமிழ்நீரைத் துடைத்து அணைத்து விட்டு வெளியில் வந்தான். டி. ஜ. ஜி. பணி சம்பந்தப்பட்ட டிப்ஸ்களை உரைத்தார். முடிவில் எல்லோருக்கும் பணி ஆணைகளை வழங்கினார். #* கரூர் மாவட்டப் போலீஸ் தலைமை அலுவலகத்தில் எஸ். ஐ. கோசல்ராமன் களேபரமாய் விசாரித்தார். சட்டம் ஒழுங்கு எஸ். ஐ. திவாகரன் ஆமோதிப்பாய் தலையாட்டினார். "ஆமாம், உங்க ஆயுதப்படை பிரிவுக்கு டி. எஸ். பி. யா கபிலேஷ் வந்திருக்காரு , டிரெய்னிங்ல இருந்து நேரா அப்பாயின்ட் ஆகுறவரு " "எந்த ஊர்காரர்? " "ஈரோடு பக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். புதுசா வர்றவங்க கிட்டெ நம்ம மாதிரி பழைய ஆளுங்க நாசூக்கா நடந்துக்கனும். ஆடாதொடை இலை சாப்புட்ட குரல்ல பேசத் தெருஞ்சுக்கனும். அங்கெ இங்கெ வழக்கமாக் கை நீட்டுறதை மடக்கிக்கனும். அனுபவப்படுற வரைக்கும் புத்தகத்தில் படிச்சிட்டு வந்த புத்திமதியையே கறாராக் கடைபிடிப்பாங்க. " "இந்த நீட்டுறது, மடக்குறது எல்லாம் லா அண்ட் ஆர்டர், மதுவிலக்கு மட்டத்துல நடக்கிறது. ஆயுதப்படை காபந்தாக் காத்துக் கிடக்கிற வேலை. ஏற்கனவே சஸ்பெண்ட், கேசுன்னு அலஞ்சு திருஞ்சு சம்பளத்தையாவது ஒழுங்கா வாங்கலாம்னு இங்கெ கெடக்கேன்". "நம்ம வண்டவாளந்தா ரிக்கார்டுங்கிற பேர்ல தண்டவாளத்துல தொங்குதே.. நீங்களும் ஈரோட்டுக்காரர் வேறு! " "அதான் எனக்கும் வவுத்துல அவுஞ்சு போன மிச்சர் இறங்குனாப்ல கொமட்டுது .. வர்றவரைப் பத்தி விலாவாரியா விசாரிச்சுத் தெருஞ்சுக்கிற வரைக்கும் நிம்மதியில்லே. டி. எஸ். பி. யின் தனி இன்சார்ஜ் நாந்தான்ங்கிறதால கூடவே குப்பை கொட்டனும்" "எத்துனையோ பேரைச் சமாளிச்சாச்சு. இவரையும் அனுசரிச்சுப் போயிட வேண்டியது தான்" அங்கே இங்கே பிடித்து ஒருவழியாக சந்தேகத்திடமில்லாமல் புது ஆபீசரின் ஜாதகத்தை அலசி விட்டார் கோசல்ராமன். போதைக்காரன் பக்கத்தில் வர முடியாத அளவுக்குத் தள்ளாட்டம் போட்டது அவரின் நினைவுகள்... ஈரோடு மாவட்டம் பவானி ஸ்டேஷன். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏட்டாகப் பணியாற்றிய போது துருதுருப்பாய் ஒரு பையன் ஊர்காவலில் வேலை செய்தது மங்கலாய் மூளைக்குள் எட்டிப் பார்த்தது. கொஞ்சங் கொஞ்சமாய் அவனோடு தனக்கிருந்த தொடர்புகள் மின்னலடித்தன. அப்படியொன்றும் என்னேரமும் அவரோடு ஒட்டிக் கொண்டிருந்தவனல்ல, இன்னொரு ஏட்டு உமாசங்கர் பொறுப்பில் ஹோம் கார்டு செயல்பட்டதால் அதிகத் தொடர்பில்லை. காலம் பூராவும் உழைச்சும் இன்னும் சட்டம் ஒழுங்கு எஸ். ஐ. யாக் கூட ஆக முடியலை. நடுவில சில காலம் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்பட்டு பட்ட பாடு கொஞ்சமில்ல. ஆனா, கண்ணுக்கு முன்னால சொன்ன வேலை கேட்டுட்டுத் திருஞ்ச பையன் பல படிகள் முன்னேறி உத்தரவு போடப்போற இடத்துக்கு வந்திருக்கிறது, காலத்தின் கோலமில்லாம வேறென்ன?, எல்லாம் படிப்போட மகிமை! எது எப்படியோ?, நேரில் பாத்ததும் முழுசாச் சரணடைஞ்சு காக்கா புடிச்சுக்கனும்... "எஸ். ஐ. சார், இன்ஸ்பெக்டர் உங்களைக் கூட்டீட்டு வரச் சொன்னார். புது டி. எஸ். பி. காலையிலேயே டிரைனில் வந்து சேந்துட்டார். கோட்ரஸ் ரெடியாகததால பிரைவேட் லாட்ஜ் ரூம்ல தங்கியிருக்கார். அவரைப் போய் அழைச்சுட்டு வரனும்னார்." "அப்படியா ?, போகலாம் மாரசாமி" கான்ஸ்டபிளோடு எழுந்து நடந்தார். பக்கத்துக் கட்டிடத்தில் இன்ஸ்பெக்டர் இருந்தார். சொல்லிக் கொண்டு ஜீப்பில் கிளம்பினர். பஜாரில் நிறுத்தச் சொல்லிப் பூக்கூடை வாங்கிக் கொண்டார். பேரம் பேசாமல் பணத்தை நீட்டினார். தங்கும் விடுதியில் விசாரித்து கபிலேசின் ரூமை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினார். உள்ளே சென்று அட்டென்சனில் கைமுனையைப் பவ்யமாய் உயர்த்தினார். மாரசாமியும், டிரைவரும் அவ்வாறே செய்தனர். மறு வணக்கம் செய்தவன், ஆச்சரியமும் கலவரமும் படர விழிகளை உயர்த்தினான். "நீங்.... க... " "கோசல்ராமன், பவானியில் ஏட்டாக இருந்தவன், இப்போது இங்கே ஆயுதப்படைப் பிரிவில் சப் இன்ஸ்பெக்டர்" "ஓ... நான் எதிர்பார்க்கல" "நம்ம கையில் என்ன இருக்கு? எல்லாம் பகவான் செயல்! " குசல விசாரிப்புக்குப் பின்பு காபிக்கு ஆர்டர் செய்தான். "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, இதோ நான் ரெடியாயிடுறேன்" கான்ஸ்டபிளையும், டிரைவரையும் தொடர்ந்து வெளியேற முனைந்த கோசல்ராமனை மட்டும் திரும்பக் கூப்பிட்டான். கதவுக்கு ஓரத்தில் பணிவாக நின்றார். "கதவை லாக் பண்ணீட்டு இப்படி வந்து உட்காருங்க" தயங்கிக் கொண்டே ஸ்டூலின் நுனியில் ஒட்டிக் கொண்டார். தன் செல்போனைத் திறந்து ஒரு போட்டோவைக் காட்டினான்.. "தெரியுதா? " "இது... " "நானே சொல்றேன். நல்லா ஞாபகப்படுத்திப் பாருங்க.. பவானி ஸ்டேஷனில் ஒருநாள், நீங்களும், உமாசங்கர் ஏட்டையாவும் கிசுகிசுன்னு லாக்கப்ல இருந்த ஒருத்தரைக் காட்டிப் பேசிட்டிருந்தீங்க. அது திருவிழாக் காலம், இரவு ரோந்தில் உதவுவதற்காக நானும் அங்கு இருந்தேன். சற்று நேரத்தில் பைக்கில் வெளியே கிளம்பினோம். ஆறேழு கிலோமீட்டரிலிருந்த கட்டையன்பட்டிக்கு வந்தோம். அந்த அகால நேரத்துல தனியான ஒரு கள்ளிக்கோட்டை ஓடு வேய்ந்த வீட்டுக்கு முன்னால நின்னோம்! " டேபிளில் இருந்த தண்ணீர் ஜாடியை எடுத்து டம்ளரில் ஊற்றிக் குடித்தான். "அது.. சாராயம் வித்ததாக் கைது செய்யப்பட்டிருந்த ஒலக்கையன் வீடு.. அந்த சம்பவத்தைத் தானே சொல்றீங்க?" வியர்த்தவாறே வெடவெடத்தார்.. "அது போல நிறைய அனுபவங்கள் உங்களுக்குண்டே??.. ஆனா எனக்கு" கோபமாய் தொடர்ந்தான், "அதே தான்!!, அந்த வீட்டுக்காரம்மா கதறக் கதற நீங்களும், உமாசங்கரும் நாசம் பன்னுனீங்க! .. சரியா? " "ஆமா... ஆனா... நீங்களும்?? " படபடப்பாய் எழுந்து நின்று கொண்டான். "இன்னொரு அறையில் கோழிக்குஞ்சாக் கிடந்தவளின் கதறலைக் கேட்டு என்னை உள்ளே போகச் சொல்லி வெளியில் தாழ்பாள் போட்டுட்டீங்க, பருவம் வந்து ரெண்டு மூனு மாச அவகாசத்துக்குள் இப்படி ஒரு பருந்து உள்ளே புகுந்துடும்னு அந்த அபலை நினைச்சிருக்கமாட்டா!, எனக்கும் அது முதல் அனுபவம்.. முத்தம்மட்டும் கொடுத்துட்டு அவளின் கெஞ்சலில் நொறுங்கிப் பக்கத்துலையே உட்கார்ந்துட்டேன்... இன்னிக்கு வரைக்கும்!! இவதான் அவ!, என் காதல் மனைவி பரமேஸ்வரி,, இப்பொச் சொல்லுங்க, ஒரு வகையில் எனக்கு நீங்க மாமா முறை,, ஓ. கே! ".. ஓங்கிச் சப்தமிட்டவாறு ஆக்ரோசமாய் சிரித்தான். கோசல்ராமனால் சிரிக்க முடியவில்லை.. _________________________________________

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.