logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

து.விஜயகுமார்

சிறுகதை வரிசை எண் # 99


கழுமரம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கிக் கொண்டிருந்தான் அவன். கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அவனுடைய பிருஷ்டத்தை வரவேற்க கூரிய முனையால் அமைந்த கழுமரம் காத்துக் கொண்டிருந்தது. ஊர்த் தலைவரால் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கழு மரத்தில் ஏற்றப்பட்டவன். மேற்கே கதிரவன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தான்.தன் மரணத்திற்கு யாருமே சாட்சி கிடையாது. காலையில் கதிரவன் மீண்டும் வரும்போது தன்னில் எது மிஞ்சி இருக்குமோ? எனத் தெரியாது. இனி ஒன்றும் செய்ய இயலாது, மரணத்தை அனுபவிப்பது தவிர, வேறு என்ன செய்ய முடியும்? என எண்ணிக் கொண்டான். சற்றே கொஞ்சம் தொலைவில் ஒரு ஒளி தன்னை நோக்கி வருவது தெரிந்தது. தன்னை கழுமரத்தில் ஏற்றிவிட்டு ஊரார் அனைவரும் சென்று விட்டனர். இப்போது வருவது யாரோ? அந்த ஒளி அருகில் வர வர யாரெனப் புலப்பட்டது.அவன் அருகே வர வேண்டாம் எனக் கூச்சலிட்டான். அவனின் கூச்சலை சட்டை செய்யாமல் கழுமரத்தின் அருகே வந்து நின்றது அவ்வுருவம். அவனை நிமிர்ந்து பார்த்தது விழியில் வழியும் கண்ணீரோடு. இங்கிருந்து போய் விடு என அவன் தன் வேதனையை மீறி கூறிக்கொண்டே இருந்தான். ஆனால் தன் கையோடு கொண்டு வந்த சங்கிலியால் தன்னையும் சேர்த்து கழுமரத்தில் சுற்றி கொண்டது அவ்வுருவம். அவன் வேண்டாம், வேண்டாம் என எவ்வளவோ கதறினான் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் மீது முழுவதுமாய் எண்ணெய் பூசிக்கொண்டு வந்திருந்த அவ்வுருவம் அவன் மீதும் கொஞ்சம் எண்ணெயைத் தெளித்தது. பின்னர் அவனைப் பார்த்து சிரித்தபடியே, மரணம் நம்மை சேர்த்து வைக்கட்டும் எனக் கூறியபடியே காலின் கீழ் வைத்திருந்த விளக்கு திரியை உதைத்தது. மளமளவென பரவிய நெருப்பு கழுமரத்தோடு சேர்த்து. இருவரையும் விழுங்கியது. குலச்சிறையார் தன் மாளிகையின் முன் பதற்றத்தோடு இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார். ஏதோ ஒரு விஷயத்தை எதிர்பார்த்தபடி வீட்டின் உள்ளே பார்ப்பதும் திரும்புவதுமாக தவித்துக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியாக வெளியே வந்த மருத்துவச்சி விஷயத்தை சொல்லும் முன்னே மழலையின் அழுகுரல் விஷயத்தை விளங்க வைத்துவிட்டது. மகள் பிறந்துள்ளாள், தாயும் சேயும் நலம் என மருத்துவச்சி கூறியதும் பெருமகிழ்வுக்கு ஆளானார் குலச்சிறையார். தன்னுடைய வாழ்வை செழிப்பாக்க வந்துவிட்டாள் மகள் என கொண்டாடித் தீர்த்து விட்டார். குலச்சிறையார் மருவூரின் ஊர்த் தலைவர். சோழ மன்னனுக்கு வரிவசூலித்துத் தரும் பொறுப்பாளர். ஊர் மக்களிடம் நன்மதிப்பும், மன்னனிடம் நற்பெயரும் பெற்றுக்கொண்டவர். அப்படிப்பட்ட அவருக்கு பிறந்த மகளை ஊரே கொண்டாடியது. தன் மகளுக்கு சிவகாமி என நாமம் சூட்டினார். சிவகாமியும் அவரின் பெருமைக்கேற்ப வளர்ந்து வந்தாள். ஒரு முறை மன்னர் வடநாடு செல்லும் போது மருவூரில் தங்க நேரிட்டது.அது கோடை காலம் என்பதால் கடுமையான பஞ்சம் அவ்வூரில் நிலவியது. குலச்சிறையார் பஞ்சகாலத்தை எண்ணி தன்னுடைய தானியகிடங்கில் சேமித்து வைத்த தானியங்களினால் ஊராரின் பசியைக் கொஞ்சம் கொஞ்சமாக போக்கி வந்தார்.ஆனால் திடீரென மன்னரின் வரவு அவருக்கு வேதனையைத் தந்தது.தன்னுடைய பதியிடம், செம்பி, நாமோ மிகவும் பஞ்சத்தில் உள்ளோம். நம் கிடங்கில் உள்ள தானியங்கள் நம் ஊராருக்கு தினம் இருவேளை உணவு எனக் கணக்கிட்டால் மூன்று மாதம் வரை சமாளிக்கலாம். அதன் பிறகு மழைக்காலம் தொடங்கி விடும், சமாளித்து விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது மன்னர் தன் பரிவாரங்களுடன் திடீரென வருவதால் தானியகிடங்கு காலியாகி விடுமோ? எனக் கவலையாக இருக்கிறது. மன்னரை வரவேற்பது நம் கடமை அதில் எனக்கு வருத்தம் இல்லை. ஊராரும் மன்னர் வருவது குறித்து மகிழ்ந்தே உள்ளனர். ஆனால் நம் நிலைமையோ மோசமாக உள்ளது என்ன செய்வது ? இருதலைக் கொள்ளியாய் என் நிலை உள்ளதே? எனப் புலம்பித் தீர்த்தார். கவலைப்படாதீர்கள், நாம் வணங்கும் தென்னம்பலத்தான் நம்மை கைவிட மாட்டார் என ஆறுதல் கூறினாள் செம்பி. மன்னரின் வருகையால் கோலாகலமாக இருந்தது மருவூர். தங்களின் பஞ்ச நிலையை கூட மறந்து, மறைத்து மன்னரையும் அவருடைய படைப் பரிவாரங்களையும் உற்சாகமாக வரவேற்றனர் மருவூர் மக்கள். அவர்களின் உபசரிப்பினால் மகிழ்ந்து போனார் மன்னர். குலச்சிறையாரே, ஊர்மக்களே உங்கள் உபசரிப்பு தமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏதேனும் குறை இருந்தால் நிவர்த்தி செய்து தருகிறேன் கூறுங்கள் என்றார் மன்னர். குலச்சிறையாரும் தங்களுடைய பஞ்ச நிலையை எடுத்துக் கூறி மன்னரை கவலைக்குள்ளாக்க வேண்டாம் என நினைத்து தங்களுடைய ஆட்சியில் எங்களுக்கு யாதொரு குறையும் இல்லை மன்னார்மன்னா எனக் கூறினார். இதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் வேறு விஷயங்கள் குறித்து ஊராரோடு மகிழ்ச்சியாக உரையாட ஆரம்பித்தார்.இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சிவகாமி தைரியமாக மன்னரின் முன்சென்று, மன்னா, தங்கள் முன்னொரு சிறு விண்ணப்பம் எனக் கேட்டாள். ஆச்சரியப்பட்ட மன்னர், அட நீ குலச்சிறையாரின் மகள் தானே, சௌக்கியமா? குழந்தை என்ன மாதிரி பேசுகிறாள்.சொல் உனக்கு என்ன குறை எனக் கேட்டார். சிவகாமியோ, மன்னா தாங்கள் எங்கள் ஊருக்கு வந்தது மகிழ்ச்சி. ஆனால் தாங்கள் வந்த இந்த நேரம் கோடை காலம் என்பதால் எங்கள் ஊரே பஞ்சத்தில் உள்ளது. எங்கள் தானிய இருப்பு கொஞ்சம். அதுவும் உங்கள் பரிவாரங்களுக்கே சரியாய் போய்விட்டது. தங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்க வேண்டாம் என ஊராரும், என் தந்தையும் தங்கள் வறுமையை மறைத்து விட்டனர் என உண்மையைப் போட்டு உடைத்து விட்டாள். அதிசயமாக பார்த்த மன்னர் குலச்சிறையாரிடம் விசாரித்து உண்மையை அறிந்து கொண்டார். குலச்சிறையாரே, ஊர்மக்களே, மன்னனுக்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே மன்னன் நீங்கள் ஏன் உங்கள் உரிமையை மறுத்தீர்கள்? நான் என்ன அவ்வளவு பொல்லாதவனா? உங்கள் ஊரில் பஞ்சம் என்றால் வேறொரு ஊரில் செழிப்பு இருக்கும் தானே அதனை சரி கட்டுவது தானே மன்னரின் வேலை. இனிவரும் காலங்களில் உங்களின் பஞ்சத்தை போக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க என் மந்திரிமார்களுக்கு கட்டளையிடுகிறேன். என் மேல் உள்ள அன்பினால் உங்கள் பஞ்சத்தை மறைக்க பார்க்கிறீர்களே? உங்களை என்னவென்று சொல்வது. தைரியமாக விஷயத்தைச் சொன்ன குழந்தை சிவகாமிக்கு என் முத்துமாலையை பரிசளிக்கிறேன் என்றார் மன்னர். அதுமுதல் ஊராரின்செல்லப் பிள்ளையானால் சிவகாமி. குலச்சிறையாரும் தன் குலப்பெருமையை காக்க வந்த தெய்வமே சிவகாமி எனக் கொண்டாடினார். சிவகாமி இப்போது பதின் பருவ மங்கை தன் குழந்தைத்தனம் எல்லாம் தொலைந்து போய் அறிவுச் செல்வியாக மாறிவிட்டாள்.எப்போதும் போல் மலர் பறிக்க மலர்வனம் ஏகினாள். தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! என அவளது உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.அப்போது ஏதோ பெரிய சத்தம் கேட்கவே, திரும்பியவள்தட்டுத் தடுமாறி கீழே விழப்போனாள்.அப்போது அவளை ஒரு வன்கரம் மென்மையாக கீழே விழாமல் பற்றிக் கொண்டது. தன்னிலை மறந்தவள், சட்டென நிமிர்ந்து தன்னை பிடித்துக் கொண்டவன் அந்நியன் என அறிந்ததும் விலகினாள். அவளுடைய பார்வையே அவனை யாரெனக் கேட்டது. அம்மணி, கோபம் கொள்ளாதீர்கள். மலர்பறிக்கும் முன் நம் மலர் போன்ற பாதங்களை பதம் பார்க்க சர்ப்பம் ஏதாவது கீழே ஊறுகிறதா? எனப் பார்க்கும் பழக்கம் பெண்மணிகளுக்கு இல்லை எனக் கூறினான். சர்ப்பமா? எங்கே எனக்கேட்டாள் சிவசாமி. பயம் வேண்டாம்.அதனைத் துரத்தி விட்டேன் என்றான் அவ்விளைஞன். மிக்க நன்றி எனக் கூறியபடியே, அவனைப் பார்த்தவள் ,தாங்கள் யார்? எனக் கேட்டாள். அம்மணி என் பெயர் வீரமணி. நான்... என ஏதோ கூற வந்தவனை தந்தையின் ஆட்கள் வந்து பலவந்தமாக பிடித்து இழுத்துச் சென்றனர். இதைப் பார்த்து அதிர்ந்து போன சிவகாமி தந்தையிடம் அதைப் பற்றி விசாரித்தாள். அது ஒன்றும் இல்லை சிறிய விசாரணைக்கு பின் அவன் ஊருக்கு அனுப்பப்பட்டு விட்டான் எனக் கூறினார் குலச்சிறையார். காரணம் என்ன அப்பா? என சிவகாமி வினவினாள். பக்கத்து ஊரில் பெரிய செல்வந்தரின் வீட்டில் திருடிக் கொண்டு ஓடி வந்தவனாம் என விசாரணயில் உறுதியானதால் அவன் தப்பித்து இங்கு ஓடி வந்து விட்டதாக அவனுடைய ஊர் தலைவரின் காவலாளர்கள் பிடித்துக் கொண்டு சென்று விட்டனர் எனக் கூறினார் குலச்சிறையார். திருடனா ? அவரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே? அப்பா திருடிக் கொண்டு ஓடி வருபவருக்கு எப்படி ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் பொறுமை வரும் ?என சிவகாமி வினவினாள். சிவகாமி நீ சொல்வதும் சரிதான். ஆனால் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை காரியம் மிஞ்சி விட்டது. அவனை விசாரிப்பதற்கு அவன் ஊரார் வந்து அழைத்துச் சென்று விட்டனர். தண்டனையும் வழங்கப்பட்டு விட்டதாகத் தகவல் எனக்கூறினர் என்றார். அப்பா, இதில் ஏதோ சந்தேகம் உள்ளது ! நாம் ஏன் அவருடைய ஊருக்கே சென்று பார்க்கக் கூடாது ?ஒரு நிரபராதியை தண்டனையிலிருந்து காப்பாற்றலாமே? சிவகாமியின் யோசனை சரியெனெப்பட்டது குலச்சிறையாருக்கு.சரி நாளைக் காலையே கிளம்புவோம் என்றார். அதிகாலையே குலச்சிறையார் தன் ஆட்களோடு வீரமணியின் ஊரை நோக்கி சிவகாமியையும் உடன் அழைத்துக் கொண்டு கிளம்பினார். விதி என்பார்களே அது அங்குதான் வேலை செய்தது. அவர்கள் அவனுடைய ஊருக்கு போகும் வழியில் கழுமரத்தோடு எரிந்து போன இரு பிணங்களைப் பார்த்து அதிர்ந்து போயினர். சிவகாமி, அப்பா என்ன இது ?தண்டனை நிறைவேற்றப்பட்டதா? அதுவும் ஒருவருக்குத்தானே? இருவர் ஏன்? அதுவும் எரிந்த நிலையில்? என வினவிக் கொண்டிருக்கும்போதே, வீரமணியின் ஊராரும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். இது என்ன குலச்சிறையாரே? தங்கள் மகளைக் கொலை செய்து விட்டு வந்து விட்டான் என்று தானே வீரமணியை கழுவேற்றினோம். உங்கள் மகள் உயிரோடு எப்படி? என வினவினார் வீரமணியின் ஊர்த் தலைவர். என் மகளையா? கொலையா? வீரமணியா? அவன் அவளை மரணத்தில் இருந்து காப்பாற்றியவன் என்று தானே, உங்கள் ஆட்களிடம் சொல்லி அனுப்பி வைத்தோம் என்றார் குலச்சிறையார். எங்கோ தவறு நடந்துள்ளது? இது என்ன இரண்டு பிணம் ? கழுமரம் எப்படி எரிந்தது? என வினவினார் வீரமணியின் ஊர்த்தலைவர். எங்கள் ஊரில் இருந்து வீரமணியை அழைத்து வந்த உங்கள் காவலாளி எங்கே? என கேட்டார் குலச்சிறையார். ஆம், ஆம், அவனிடமிருந்தே விசாரணையை ஆரம்பிக்கலாம். ஏன் வீரமணி உங்கள் மகளை கொலை செய்து விட்டான் எனப் பொய் கூறினான் என விசாரிக்க வேண்டும் எனக் கூறியபடியே யார் அங்கே? உடனே சாரங்கனை அழைத்து வாருங்கள் எனக் கட்டளையிட்டார்.வீரமணியின் ஊர்த்தலைவர். சாரங்கா, ஏன் இவ்வளவு பொய்? வீரமணி கோயில் நகைகளை திருடி விட்டான் என முதலில் சொன்னாய், பின்னர் தப்பித்து ஓடியதாகக் குற்றம் சாட்டினாய்? மருவூர்த் தலைவனின் மகளிடம் அகப்பட்டுக் கொண்டதால் அவளையும் கொலை செய்து விட்டதாகச் சொன்னாய் ? என்ன இதெல்லாம் என அதட்டினார். பிரபு, என்னை மன்னித்து விடுங்கள் ! வீரமணியோடு எரிந்து கிடக்கிறதே ஒரு பிணம் அது வேறு யாருமில்லை என் மகள் துளசி தான். துளசியும் வீரமணியும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள்.எனக்கு அது ஒப்பவில்லை. என் மகளை வேறு குலத்தவன், காதலிப்பதா? மணந்து கொள்வதா? எனக் கோபம் கொண்டேன். நானே கோவில் நகைகளைத் திருடி விட்டு வீரமணியின் மீது பழி போட்டேன். அவன் மருவூர் சென்ற போது அவனை குலச்சிறையாரின் ஆட்கள் யார் என விசாரித்துக் கொண்டிருந்தனர். நானே அங்கு சென்று அவனை கள்ளன் எனக் கூட்டி வந்து தங்களிடம் சிவகாமியையும் கொலை செய்துவிட்டான் எனப் பொய் சொன்னேன். தாங்களும் அதனை நம்பி அவனுக்குத் தண்டனை தந்தீர்கள்.ஒழிந்தான் வீரமணி என எண்ணினேன். ஆனால் விதி வேறு விதமாக சதி செய்து விட்டது. என் மகள் துளசியும் அவனோடு சேர்ந்து தன்னையே மாய்த்துக் கொண்டாள்.அன்பு வென்றுவிட்டது. வீண் குலப்பெருமை பேசிய என் கர்வம் ஒழிந்து. என் செல்ல மகளைை நானே கொலை செய்துவிட்டேன்.எனக்கு மன்னிப்பே கிடையாது. என்னையும் கழுவில் ஏற்றுங்கள் எனக் கதறியபடியே விழுந்து வணங்கினான் சாரங்கன். அதிர்ந்து போயினர் அனைவரும். சிவகாமி தன் ஆட்கள் மூலம் மன்னருக்குத் தெரியப்படுத்தினாள்.மன்னரும் சாரங்கனுக்கு தக்க தண்டனை வழங்கியதோடு, அணையா விளக்கினை ஏற்றி அக்காதலர்களுக்கு நடுகல் நட ஆணையிட்டார். காதலர்களைப் பிரிக்கும் இந்த பொல்லா குலப்பெருமையை எண்ணி கண்ணீர் சிந்துவதைத் தவிர என்ன செய்ய முடியும் என பெருமூச்சு விட்டாள் சிவகாமி. யுகம்யுகமாய் காதலர்களைப் பிரிக்கும் குலப்பெருமை இன்னும் தன்னை மாய்த்துக் கொள்ளாமல் வேறுவேறு பெயர்களில் காதலர்களையே காவு வாங்கிக் கொண்டுள்ளதே என ஆதங்கப்பட்டாள் சிவகாமி .

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.