logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Dharshini V

சிறுகதை வரிசை எண் # 97


பொய்த்த உண்மைகள் "கவிதா..! எழுந்திரு பள்ளி செல்ல வேண்டாமா?" என்றாள் அவள் தாய். பட்டென்று கண் விழித்து, சட்டென்றுச் சிட்டாக புறப்பட்டாள் கவிதா. "என் பேத்தி படு சுட்டி, படிப்பிலும் கெட்டி. அவளை விஞ்ச அந்த சரஸ்வதியே வந்தாலும் இயலாது" என்று அண்டை வீட்டாரிடம் பெருமை பேசிக்கொண்டிருந்த பாட்டியைக் கட்டித் தழுவி " நீங்கள் கூறிய சரஸ்வதி நான் புதிதாய் சேர்ந்திருக்கும் பள்ளியில் தான் படிக்கிறாராம், நான் சென்று பார்த்து வருகிறேன், நீங்கள் சென்று பூங்கா எங்கே உள்ளதென பார்த்து வாருங்கள். இருவரும் செல்லலாம்" என்று அவளின் இயல்பான துள்ளல் மொழியுடன், மான் போன்று துள்ளிக் குதித்துத் தந்தையின் வண்டியில் ஏறினாள். "பள்ளிப் பேருந்து அந்த பனை மரத்தடியில் நிற்குமாம் கவிதா, நீ அங்கு சென்று நின்று கொள்" என்றார் தந்தை. பனை மரத்தடியில் நின்று தந்தையைப் பார்த்தாள், தந்தையின் உருவம் சிறுகச் சிறுக அவரின் எதிர் திசையில் ஒரு மஞ்சள் வண்டி கொஞ்சம் கொஞ்சமாக அருகே வந்தது. அவள் நிற்கும் இடத்தை விட்டுச் சற்று முன்னே நின்றது. "சீக்கிரம் ஏறுமா" என்று ஓட்டுனர் கூற, பின்னே உள்ள படியில் ஏறினாள் கவிதா. பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவர்கள் அவளை ஏதோ அவள் செய்யக்கூடாத தவறைச் செய்தது போல் வெறுப்புடன் பார்த்தனர். அங்கு இருந்த மாணவன் ஒருவன் "இது பாய்ஸ் சைடு, நீ முன்னே போய் உட்காரு" என்று கூறிவிட்டுப் பாலின சமத்துவத்தைப் பற்றிப் படிக்கத் தொடங்கினான். ஓட்டுனரின் பின் இருக்கும் இருக்கை காலியாக இருப்பதைக் கண்டாள். "நான் இங்கு அமரட்டுமா?" என்று கேட்க அவளோ" நாளை என் தோழி வருவா, அவ இன்னைக்கு ஆப்சன்ட் என்று கூறிக்கொண்டு கவிதாவை அமரும்படி கை சைகை செய்தாள். "யார் என்று தெரியாதவரைக் கூட இன் முகத்துடன் வரவேற்பது தானே தமிழர் மரபு" என்று யோசித்துக் கொண்டே அமர்ந்தாள். பள்ளிக்கு நேரம் ஆனதைக் கண்ட ஓட்டுநர் சற்றே கிளட்சை அழுத்த, பின் இருந்த மாணவர்கள் "அண்ணா...! இன்னும் கொஞ்சம் வேகமாக" என்று கூற வளைவில் மற்றொரு வண்டியை முந்தினார். கவிதா பயந்துப் போக "அண்ணா வளைவில் முந்தக்கூடாது அல்லவா?" என்று கேட்க, அவரோ "யார் பாப்பா நீ? ஸ்கூலுக்கு ஃபஸ்ட் பீரியட் முடிஞ்சதும் போனா போதுமா? நேரத்துக்குப் போகலனா எங்க வீட்டுல ஒரு வேளை அடுப்பு எரியாது. சம்பளத்தைப் பிடிச்சிறுவாங்க" என்று கூறிக் கொண்டே ஒரு சடன் பிரேக் போட்டு," இறங்கு ஸ்கூல் வந்துவிட்டது, அன்னியன் பட அம்பியைப் போல் பேசாதே" என்றார். "என்ன இவர்.. சாலை விதிகளைப் பின்பற்றாமல்..!" என்று முனகிக் கொண்டே வகுப்பிற்குள் சென்றாள். நாட்கள் செல்லச் செல்ல பென்சில் கடன் கொடுக்காத ஃபஸ்ட் பெஞ்ச் பையன் பிரபுவையும், சற்றும் பொறுமை இல்லாது அடிக்கடி சினங்கொண்டு முகத்தைக் காட்டும் பிரேமாவையும் கண்டு, "இவர்களுக்கு ஏழாம் வகுப்பில் நட்பு, பொறையுடைமை போன்ற அதிகாரங்கள் வரவில்லையா?" என்று சிந்தித்தாள். அனைத்தும் கடந்து போக, ஒரு வேலையாக எட்டாம் வகுப்பின் இறுதி பருவத்தின் இறுதியில் இருந்தாள் கவிதா. ஒரு நாள் தன் வகுப்பினரின் குரூப் போட்டோவை ஆவலுடன் எடுத்துச் சென்று தன் பாட்டியிடம் நீட்டினாள். " இதோ இவள் தான் என் தோழி" என்றவுடன் முகம் பார்த்துப் பாலினத்தைக் கூறலாம், ஆனால் அவள் பாட்டியோ ஜோதிடர் கூட கணிக்க இயலாத அவள் தோழியின் சாதியைக் கணித்தார். இரண்டு அடி பின்னே சென்று கவிதா திண்ணையின் மேல் அமர்ந்தாள். கால் கடுக்க ஓடி வந்ததால் அல்ல. 'படித்த புத்தகங்கள் யாவும் பொய்த்ததால்.'

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.