Amina mohammed
சிறுகதை வரிசை எண்
# 93
தலைப்பு : கணக்கு
ஃபஜர் நேரம், தன்னைத் தவிர்த்து யாரும் எழுந்திருக்காதது பாத்துக்கனிக்கு வசதியாகிவிட்டது. அறைக்கதவை யார் காதுக்கும் சப்தம் செல்லாமல் மெதுவாய் அடைப்பாள்; தலைநிற்காத பிள்ளையை கைமாற்றுவதுபோல பீரோ கைப்பிடியை கவனமாய் நகர்த்துவாள்; பீரோவில் ரகசிய இடமான, அவளுக்கு மட்டுமே தெரிந்த அடையாளமிட்ட சேலையின் இரண்டாம் மடிப்பிலிருந்து பேப்பர் சுருளொன்றை எடுப்பாள்; தன் ப்ளாஸ்டிக் வயர் கட்டிலில் மெல்லமாய் அமர்ந்து ரப்பரால் சுற்றப்பட்ட பேப்பர் சுருளைப் பிரிப்பாள்.
இம்முறை தன்னுடைய மருந்து டப்பாவினுள் அடிப்புறத்தில் வைத்திருந்ததையும் பிரித்த பொட்டலத்துடன் சேர்த்துவைத்து எண்ணத் தொடங்கினாள். "பெரிய ரெண்டுல நாலு… அஞ்சுல ரெண்டு.. சின்ன ரெண்டுல நாலு…. அடச்சே! இன்னும் எரநூருவ்வா இருந்திருந்தா ரவுண்டாயிருக்கும்”
இந்த காட்சிகளையெல்லாம் வீட்டு வேலைக்காரி ஏற்ற இறக்கங்களுடன் பாத்துக்கனியின் கடைசி மருமகளிடம் விவரித்து, சிரித்துக்கொண்டிருந்தாள். எப்போதும் திறந்திருக்கும் அறை, ஃபஜர் நேரத்தில் சில நிமிடங்களுக்கு மட்டும் தாழ்ப்பாளிடப்படுவதும், எலி உருட்டுவதுபோல் சில சப்தங்கள் ஹால்வரை வந்தடைவதையும் கவனித்தவள், மருமகளின் துப்புத் துலக்கும் ஆலோசனையின் பேரில் கதவின் துளை வழியாக பார்த்துவிட்டுதான் இக்கதைகளை அளந்துகொண்டிருந்தாள். “எஞ் சந்தேகம்லாம் தெனமும் எப்படியாச்சும் நன்னிக்கு பணம் கெடச்சுடுது! ஆனா அந்த பொட்டலம் பத்தாயிரத்த தாண்ட மாட்டுது!”. அவளுக்கு சந்தேகமெல்லாம் ஏதுமில்லை, கேட்டுக்கொண்டிருந்த மருமகளுக்கும் ஒவ்வொரு பத்தாயிரம் பொட்டலமும் சேரும் இடம்குறித்து தெரியாமல் இல்லை. குறைபிள்ளையாய் பணம் இருந்த கவலையோடு போன் எடுத்தாள் பாத்துக்கனி. மனைவியை விடுமுறைவரை அம்மாவிடம் விட்டுச் சென்ற அதே கடைசி மகனுக்குத்தான் போன் அழைப்பு சென்றது. மறுமுனை என்னன்ன பேசியதென தெரியவில்லை. பாத்துக்கனி பேசியதை மட்டும் கூடுதல்குறைவின்றி மருமகளிடம் ஒப்பித்தாள்,
“ஏந்த்தா…தொழுவ ஏந்துச்சீயான்னு கேக்கதான் கூப்டேன்… அத்தாக்கு கைக்கு எண்ணெ போட்டு நீவ ஆள் வருவாங்க இன்னைக்கு. அது செஞ்சாதான் ஓரளவுக்கு வலியில்லாம தூங்குறார் மனுஷன். மருமக, பேரபுள்ளைக வந்ததுல காச, காசா பாக்காம செலவுபண்ணிட்டேன். இப்ப பாக்குறேன், வைத்தியத்துக்குப் போதாமப் போச்சு. காசு அனுப்பிவைக்கிறீயா'த்தா ராசா?”
வேலைக்காரி தான் பார்த்த காட்சியில் எதையும் விடுபடவிடுவதாய் இல்லை…
கையும் களவுமாக மாட்டியவளை ஆதாரத்தோடு கண்டுபிடித்த கடைசி மருமகளால் மட்டுமில்லை, பாத்துக்கனியின் ஐந்து ஆண் மக்களாலும்கூட அவளிடம் கேள்வியெழுப்ப முடியாது. வறுமையின் கொடி ஒவ்வொருவரையும் எவ்வாறு கழுத்து நெறித்துக்கொண்டிருந்ததென்பதையும் பாத்துக்கனி ஒவ்வொருவரையும் எப்படி அதிலிருந்து விடுவித்துக் கொண்டுவந்தாள் என்பதையும் கண்கூடாகப் பார்த்து வளர்ந்தவர்களின் நன்றிக் கடன் தாயிடம் கேள்விக் கணக்கு கேட்பதைத் தடுத்திருந்தது.
பாத்துக்கனி எல்லாவற்றிலும் வித்தியாசமானவள். வறுமைக் காலங்களிலெல்லாம் குடும்பத்தை சிதறாமல் பார்த்துக்கொண்டவள், இப்போது ஓரளவு முன்னேறிய நிலையில் சொந்த ஊரில் கணவன் சீனி மும்மதுடன் தனியாக வசிக்கிறாள். சொந்த ஊரிலேயே மகளைக் கட்டிக்கொடுத்ததால் பத்தாயிரம் ரூபாய் பொட்டலங்களை சேமித்து வைக்கும் நம்பகமான பேங்க் லாக்கராக அவளே செயல்படுகிறாள்.
மகன்களெல்லாம் வியாபார நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருக்க, அந்தந்த ஊரிலேயே வீடுபார்த்து பால்காய்ச்சி மருமகள்களை அமரவைத்துவிட்டு வந்துவிட்டாள்.
“முட்டாச்சிறுக்கி! சம்பாரிச்சுக் கொடுக்குற மக்கள கைக்குள்ள வச்சுக்கத் தெரியாம இப்படி தனியா விட்டுட்டு கெடக்காளே”- ஊர் சனம்!
“இப்ப புருசனோட வாழாம கெழடுகெட்டையா போன பின்னாடியா வாழுவாளுக… நா பட்ட கஷ்ட்டம் என் மருமகப் புள்ளைக பட வேண்டாம்”- கருணைத்தாய் வடிவ பாத்துக்கனி!
பாத்துக்கனி விஷயத்தில் மருமகள்களின் கோரிக்கைகளும் விசித்திரமானது… “உங்க பேரப்புள்ளைகளப் பாத்துக்கிட்டு எங்க கூடவே இருங்க மாமி! ஏன் தனியா கெடக்கீக” – ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வரும்போதும் கெஞ்சாத குறையாக அழைத்துப் பார்த்துவிட்டார்கள். பாத்துக்கனி ஊரோடு இருப்பதால் ஏற்படும் செலவினங்களுக்காக மகன்கள் ஒவ்வொருவரும் அனுப்பும் மாதாந்திர தொகையானது நகர்வாழ்வுச் செலவினங்களில் மிகச் சரியாக சரிபாதி! தம்மோடு வைத்திருந்தால்கூட இந்நேரம் வருடத்திற்கு ரெண்டு பவுன் நகை சேமித்திருக்கலாம் என்ற விரக்தி கிட்டத்தட்ட அனைவருக்குமே இருந்தது.
மகன்கள் எவ்வளவோ கூப்பிட்டும் பாத்துக்கனி கேட்பதாயில்லை.
“அஞ்சு மவனுக இருக்கீக! வயசான காலத்துல ஏம்பா பெத்தவங்கள கைவிட்டுட்டீங்கன்னு கேக்காத சனம் இல்லமா.. நிம்மதியா லீவ்வ ஊர்ல கழிக்கலாம்னு வந்தா கேள்வி கேட்டே மண்டையக் கொடையுறாய்ங்க” - மகன்களில் ஒருவர் அங்கலாய்த்தார்.
“ஊர் பேசும், சாதிசனம் பேசும்னே பயந்து வாழ வேண்டிய காலத்துலலாம் நா வாழவே இல்லப்பா... அப்போதைக்குச் சூழலுக்கு உங்களையெல்லாம் கூட்டிட்டு உங்க'த்தா தேடி அவர் பின்னாடியே ஊர் ஊராதான் ஓடினேன். கடைசி காலத்துலையாவது உங்கத்தாவோட ஒரே இடத்துல இருந்துக்குறேன்”
குரலில் உதிர்க்கும் கருணையான ஒலியலை யாவரின் வாயையும் அடைத்துவிடும். இத்தனைக்கும் சீனிமம்மது அப்படியொன்றும் நல்ல கணவனாய் தன் கடமையை செய்தவனில்லை. ஊர் ஊராய் பாத்துக்கனி அலைந்ததும் வறுமையின் காரணமும் சீனிமம்மதுதான். ஓரிடத்தில் வேலை செய்து குடும்பத்தை வழிநடத்தத் தவறியவரின் கடமைகளையெல்லாம் தலையில் போட்டு அள்ளிப் பார்த்தது பாத்துக்கனி மட்டுமே. இப்போது சீனியையும் அவள்தான் தலையில் அள்ளி சுமக்கிறாள். இளமையிலேயே பொருளாதாரம் தேட அழுதவருக்கு, மகன்கள் தலையெடுத்த பின்னே ஒருபக்கம் கையில் அடித்த வாதம் சீனியைப் பொறுத்தமட்டில் அதிர்ஷ்ட நோய்!
சினிமாக்களின் ஆகமவிதி நமக்கு பரிட்சயம்… சிகரெட் பிடித்து, தண்ணியடித்து, ரவுடியிசத்தில் ஊறித்திளைத்தவன் ஹீரோயின் கண்ணில் நல்லவனாகத் தெரிவான்! போலவே, பத்து பைசாவிற்கு கையாளாகாதவனாகினும் புருஷன் பட்டம் சுமந்துவிட்ட சீனிமம்மதோ பாத்துக்கனியின் பார்வையில் அல்லாஹ்விற்கு அடுத்த இடத்தில் வைக்கப்பட்டார். சீனிமம்மதின் பேச்சை மீறி பாத்துக்கனி சுயமாய் எடுத்த முடிவு இதுவரை ஏதுமில்லை. பொறுப்பில்லா கணவனுக்கு அப்படி கீழ்பட்டாள்.
நிபந்தனையின்றி கீழ்படியும் எந்த பெண்ணும் தன்னை சித்திரவதைக்குள்ளாக்கும் உரிமையையும் தந்துவிடுகிறாள். இக்கூடுதல் வசதியை சீனிமம்மது பாராபட்சமின்றி பயன்படுத்தி மனைவியை அடிக்கவும் மிதிக்கவும் செய்தார். சோற்றில் முடியிருந்தாலும் அடி, குழம்பில் உப்பில்லை என்றாலும் அடி.
கொடுமைக்கார மாமியாரின் உசுப்பேற்றல் பாத்துக்கனிக்கு விழும் அடியில் கூடுதல் வேகத்தைத் தரச் செய்திருந்தது! எட்டாண்டுகளில் அடிகளும், வலிகளும் பரிட்சயமாகிவிட்டதால் ‘எவ்ளோன்னாலும் அடி, எனக்கு வலிக்காது’ என்பதாய் உடல் சொல்பேச்சு கேட்டுக்கொண்டது. விரக்தி என்பது உடலை மறத்துப்போகச் செய்துவிடும் விஷத்தன்மை பொருந்திய உணர்வு. படிப்படியாய் மனதையும்… !
கூட்டுக் குடும்பத்திற்கென்று அடிப்படை அரசியல் உண்டு. குறைவான வருமானம் தரக்கூடியவர்களுக்கு தராதரத்தின் வரிசையில் இறுதியிடம்! 6 பிள்ளைகளுடன் கூட்டுக் குடும்பத்தில் இருந்த பாத்துக்கனி ஒவ்வொருமுறை பருகும் ஒவ்வொரு கவளத்திற்கும் ஏச்சுப்பேச்சுக்களை சகிக்க வேண்டியதாகியிருந்தது. ஆறுமாதத்திற்கொருமுறை வந்துசெல்லும் சீனிமம்மது கண்ணில் இந்த காட்சிகளெல்லாம் தென்பட வாய்ப்பில்லை. தென்பட்டாலுமே ரோசம் வராதென்பது எட்டாண்டு வாழ்க்கையில் பாத்துக்கனிக்கு பாலப்படம்! தன்மானத்தில் நேர்ந்த இழுக்கு தன் குழந்தைகளுக்கும் நேரும்போதுதான் ஒருநாள் பொறுக்க முடியாமல் கூட்டுக்குடும்ப வீட்டைவிட்டு புறப்பட்டுச் சென்றாள். அவள் காலத்தில் தனிக்குடித்தனமெல்லாம் பெரிய புரட்சி..
உறவினர்கள், கூட்டாளிகள், உடன் பணி செய்தவர்களென ஒவ்வொருவராய் கேட்டுக்கேட்டு சீனிமம்மது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரிடம் சேர்ந்தாள். திடீர்ன்னு 6 பேருக்கு சாப்பாடு போடும் மிகப்பெரும் பொறுப்பு.. அதைவிடவும் தன் சுதந்திரத்தின் மீதான பேரிழப்பு சீனிமம்மது குடும்பத்தை அப்படியே போட்டுவிட்டு தப்பித்துவிடுவார். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ திரும்பி வருவார், இல்லையேல் மீண்டும் உறவினர்கள், உடன் பணி செய்தவர்களை விசாரித்து விசாரித்து இடத்தைக் கண்டுபிடித்து அங்கே குடித்தனம் போவாள் இவள்.
இனி குடும்பப் பொறுப்பிலிருந்து தப்பிக்க சீனிமம்மதுக்கு போக்கிடமில்லை எனும் நிலையில் பாத்துக்கனியிடம் சரணடைந்துவிட்டார். அந்த காலயிடைவெளிக்குள் பாத்துக்கனிக்கு தொழுவத்தில் பால் கறப்பதுமுதல் அக்கம்பக்கங்களில் வீட்டுவேலை செய்வதுவரை வருமானம் வரவழைக்கும் வழி தெரிந்துவிட்டது. பள்ளிக்கு பைக்கூடை சுமந்து போன மகன்களையெல்லாம் ஒவ்வொருவராய் பிடித்து ஒவ்வொரு கடைகளில் கூலி வேலைக்குச் சேர்த்து, கூலிகளை சேகரிப்பதையே பெரிய வேலையாய் செய்துகொண்டிருந்தார் மனுஷன்!
மகன்கள் முறையிட்டார்கள். “அத்தா இல்லைன்னா நமக்கு மானம் மரியாத இல்ல! அல்லாஹ்க்காகப் பொறுத்துக்கோங்க மக்கா!” – பாத்துக்கனிக்கு முறையிடல்களை நீர்க்கச் செய்யத் தெரிந்திருந்தது. என்ன ஆனாலும் பரவாயில்லை! கைகழுவிய சொந்தபந்தங்கள் முன்னிலையில் அதே புருசனுடன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் எல்லாவற்றையும் சகிக்கச் செய்திருந்தது.
ஒருவேளை, வரிசையாய் நிறைய பிள்ளைகளைப் பெற்றெடுக்க வைத்ததிலும் ஏதேனும் அக்காலத்திய வெட்டி ஆண்களிடம் அரசியல் இருக்கலாம் போலும்!… பிள்ளைக் கூட்டத்துடன் விவாகரத்தானவளை ஏற்க எந்த ஆண் வருவான்? அல்லது பிறந்த வீட்டினரே அத்தனைபேருடன் தன் மகளைத் திரும்பப் பொறுப்பேற்றுக்கொள்ள முன்வருவார்களா?!
சீனிமம்மதுவின் பொறுப்பற்றதனங்கள் வகுக்கும் தாக்கங்களில் இருந்து விரைவில் விடுபட்டது மகள் மட்டுமே. பாத்துக்கனி தன் அண்ணன், மச்சி காலில் விழுந்து அவளை அவ்வீட்டின் மருமகள் ஆக்கினாள். அண்ணனின் மனைவி நிகழ்த்தப்போகும் மாமியார் அவதாரத்தில் மகள் பிழியப்படாமல் இருக்க அன்று தொடங்கி இதோ இன்றுவரையிலும் பத்தாயிரம் ரூபா பொட்டலங்கள் மகள் வீட்டுக்கு கைமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
அம்மா வீட்டிலிருந்து சீர், பணம், பொருள், பண்டம் கிடைத்துக்கொண்டேயிருக்கும் காலெமல்லாம் மகள்கள் கொள்ளும் பெருமிதத்திற்கு ஈடு இணை என எதையும் நீங்கள் வைக்க முடியாது. தன் கணவன் பார்க்க, தன் மாமியார், மாமனார் பார்க்க, தம் பிள்ளைகள் பார்க்க, தன் நாத்தனார்கள் பார்க்க அம்மா வீட்டுச் சீரை பயன்படுத்தும்போதெல்லாம் மகள்களின் உடல்மொழியில் வெளிப்படும் மிடுக்கும் கர்வமும் இருக்கே…
பாத்துக்கனி தான் கண்டிராத பேரின்பத்தை தன் மகளை அனுபவிக்கச் செய்துகொண்டிருக்கிறாள்.
சொந்த ஊரிலேயே இருக்க வேண்டுமென்ற ஆசைகூட ஒருவகை சூழ்ச்சிதான்! எந்த சொந்தபந்தம் மதிக்காது கேவலப்படுத்தினார்களோ அவர்கள் பார்க்க ஜம்பமாய் வாழ்வது வேறுவகை உச்சபட்ச போதை!
ஐயோ! சொல்லத் தவறிவிட்டேன். நீங்கள் 40 ஆண்டுகால கதையை வாசித்துக்கொண்டிருந்த நேரத்தில் சீனிமம்மது தவறிவிட்டார்.
பந்தலென்ன… சொந்தபந்தம் வருவோர்க்கெல்லாம் டீ, காப்பியென்ன… மூன்றாம் நாள், ஏழாம் நாள், 15ஆவது நாள், 40ஆவது நாட்களில் கறிசாப்பாடு போட்டதென்ன… எல்லாமும் பாத்துக்கனி திட்டமிட்டபடியே நடந்தது! தன் வாழ்நாளில் ஒருமுறைகூட குடும்பத்திற்காக ஒரு துரும்பைக்கூட நகர்த்திடாத மனிதனின் இறுதி வழியனுப்புதலில் எதற்கு இத்தனை செலவீனங்கள் என எந்த மகன்களும் முகம் சுளித்திடவில்லை என்பதுதான் பெரும்வியப்பு! ஒரு பெண்ணால் ஒன்றுமற்ற வெட்டி ஆசாமியைக்கூட மதிக்கும்படிச் செய்ய முடிகிறது. சீனிமம்மதுக்கு கிடைக்கும் மரியாதையெல்லாம் சீனிமம்மதுக்கானதே அல்ல. பாத்துக்கனி உருவாக்கியவை!
4 மாதம் ஆகிவிட்டது. இன்னும் 10 நாள் கழிந்தால் 'இத்தா' காலம் முடிந்துவிடும்.
பாத்துக்கனி செல்போன் எடுத்தாள்.
“பெரியவனே! காலெல்லாம் ஒலச்சலா இருக்கு... இத்தா முடிஞ்சதும் வலிக்காண்டி செக்கப் போவணும்'த்தா. உங்கக்காவ கூட்டிட்டு போலாம்னாலும் காசில்ல.. அவ தரேங்குறா… கொண்டாங்கொடுத்த வீட்ல காசு வாங்குறது எப்டிபா சரியா வரும்? ஏதாவது பாத்து போட்டுவிடுமா ராசா”
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்