க.சக்திவேல்
சிறுகதை வரிசை எண்
# 94
இது கல்லூரி காலம்
விடிந்தது,கைபேசி மணி ஒலிக்க கண்விழித்துப் பார்த்தேன் அதிகாலை ஐந்து மணி.அம்மாவின் அழைப்பு அது, எடுத்து ‘அம்மா,என்னம்மா? இவ்வளவு வெள்ளனமா அடிச்சிருக்க என்ன செய்தி? நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்டேன். ‘நான் நல்லா இருக்கேன் டா, நீ எப்படி இருக்க? இன்னிக்கு கடைசி பரீட்சை முடிஞ்சிடும் இல்ல அதான் எப்ப ஊருக்கு வர?எந்த வண்டியை பிடிக்க போறேன்னு கேட்கலாம்னு அடிச்சேன்.நல்லா படிச்சு இருக்கியா,எழுந்துட்டியா இல்ல இன்னும் தூங்குறியா?’ என்று கேட்க,அரக்க பறக்க எழுந்து உட்கார்ந்து, ‘ம்ம் எழுந்திருச்சிட்டேன் அம்மா இன்னைக்கு நம்ம ஊருக்கு இருக்க கடைசி வண்டிய தான் பிடிக்க போறேன் அப்போ நாளைக்கு மதியம் தான் வீட்டுக்கு வருவேன்’ என்றேன். ‘சரிடா நல்லா படி,பரீட்சையை எழுதிட்டு வண்டியில ஏறுன உடனே எனக்கு அடிச்சு தகவல் சொல்லிரு சரியா? என்று கேட்டவுடன் அந்த பக்கத்தில் இருந்து என் தங்கை “பிறந்தநாள் வாழ்த்துக்கள்” அண்ணே! என்று கத்தினாள்.‘ஓ! இன்னைக்கு உன் பிறந்தநாள் இல்ல, நான் மறந்துட்டேன் டா புதுத்தணி இருந்தா எடுத்து போட்டுக்கிட்டு,காலையில கோவிலுக்கு போயிட்டு அப்பறம் பரீட்சை எழுத போ சரியா?வச்சிர்றேன் என்ற அழைப்பு துண்டிக்கப்பட்டது.
எங்கோ ஒரு மூலையில் மறைந்திருக்கும் மலை கிராமத்திலிருந்து பட்டணத்திற்கு படிக்க வந்தவன் அல்லவா?எனவே தினமும் நலம் விசாரிக்க அழைப்பு வந்துவிடும்.நேற்று இரவு தான் நாங்கள் விடுதியில் தங்கப் போகும் இறுதி நாள் என்பதால்,நேற்று இரவு முழுக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருந்த தோழர்கள் இன்று காலை எழுவோமா? வேண்டாமா? என்று எண்ணி படுத்திருந்தனர்.நான் எழுந்து முகத்தை கழுவி விட்டு புத்தகத்தின் பக்கங்களை சிறிது நேரம் புரட்டி விட்டு நண்பர்கள் மூவரையும் ஒவ்வொரு ஆளாக எழுப்பினேன். பின் ஒவ்வொருவரும் எழுந்து கல்லூரிக்கு தயாரானோம்.ஆயிரம் தான் நேற்று கூத்தும் கும்மாளமுமாக இருந்தாலும் இன்று என் பிறந்தநாள் என்பதை யாரும் மறக்கவில்லை, வாழ்த்துக்களுடன் பார்த்தாலே வெறிக்கும் அளவிற்கு சிவப்பு நிறத்தில் ஒரு சட்டையும் தோழர்களின் பரிசாக கிடைத்தது.அனைவரும் கிளம்பி கீழே வரவும் விடுதியில் காலை உணவும் தயாராக இருந்தது. எப்போதும் காலை உணவை உண்பதற்கு நேரம் இருக்காது ஏனெனில் அந்த நேரத்திற்கு இருக்கும் பேருந்தை விட்டு விட்டால் கல்லூரிக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் தொங்கிக் கொண்டே தான் செல்ல வேண்டும் ஆனால் இன்று தேர்வு நாள் என்பதால் சற்று தாமதமாக போகலாம் என்று உணவருந்த அமர்ந்தோம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அதே சமையல் காரர் தான் அதே உணவு தான் அதே தரம் தான் ஆனால் இன்று மட்டும் ஏனோ உணவு இவ்வளவு சுவையாக உள்ளது.இரவு முழுவதும் கேலியும் கூத்துமாய் விடுதியில் சுற்றித் திரிந்த தோழர்கள் அனைவரின் முகத்திலும் எதோ ஒரு வெறுமை தெரிய துவங்கியது என்னையும் சேர்த்துதான்.சிற்றுண்டியை முடித்துவிட்டு பேருந்துக்காக காத்திருந்தோம். நிரம்பி வழிந்தபடி அங்கிருந்து வந்து கொண்டிருந்தது ஒரு பேருந்து அருகில் இருந்த ஒரு அம்மா ‘எதுக்கு இப்படி தொங்கிக்கிட்டு போகணும்? எல்லாம் சேட்டை பிடிச்சதுகளா இருக்கு இந்த பஸ்ஸ விட்டா வேற பஸ்சா இல்ல? எல்லாம் இவங்க அப்பனாத்தால சொல்லணும் இந்த பயலுக தான் இந்த சேட்டை எல்லாம் பண்ணுவாங்க’ என்று சொல்லிக் கொண்டிருக்க நான், ‘எங்களுக்கு ரொம்ப ஆசை தான் அக்கா கைகடுக்க இங்கிருந்து தொங்கிக்கிட்டு போகணும்னு,இந்த பஸ்ல விட்டா இன்னும் நாலு பஸ் இருக்கு ஆனா எந்த பஸ்ல உட்கார எவ்வளவு இடம் இருக்குன்னு சொன்னீங்கன்னா நாங்களும் உட்கார்ந்து பொறுமையா போவோம். ஆனா என்ன? நேரத்துக்கு போக முடியாது அங்க ஒரு அம்மா உங்கள மாதிரியே எங்கள திட்டுறதுக்கு காத்துகிட்டு இருப்பாங்க என்று சொல்லிக்கொண்டே என் தோழர்களுடன் சேர்ந்து நானும் ஒரு கம்பியை பிடித்துக் கொள்ள பேருந்தை நோக்கி ஓடினேன் டேய் ஏறுடா!ஏறு சீக்கிரம் ஏறுடா போலாம் ரைட் என்று அவசர அவசரமாக ஏறிச் சென்றோம். ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏறவும் இறங்கவும் ஆக ஒரு வழியாக கல்லூரிக்கு வந்து சேர்ந்தோம்.
கல்லூரிக்கு சென்றால், வாழ்க்கையை நினைத்து வானத்தை நோக்கி ஒருவன், பரிட்சையை நினைத்து புத்தகத்தை நோக்கி ஒருவன், இன்று மாலை நாங்கள் பூங்காவில் ஏற்பாடு செய்திருக்கும் பிரிவு விழாவை பற்றி தெரிந்துகொள்ள எங்களின் வாயை பார்த்தபடியும் ஒருவன்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் அமர்ந்திருந்தனர் நானும் அவர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் புத்தகத்தை புரட்டி விட்டு தேர்வரைக்குள் நுழைந்தேன். வினாத்தாளில் இருந்த வினாக்களை விட என் மனதில் இருந்த வினாக்கள் அதிகம்.நம்ம வாழ்க்க எத நோக்கி பயணமாகி போயிட்டு இருக்கு? இந்த படிப்ப முடிச்சிட்டா அப்பறம்?.....
ஒரு சமயம் தேர்வை எழுத,திடீரென்று எதையோ யோசிக்க,என்று எப்படியோ ஒருவழியாக அனைத்து வினாக்களுக்கும் விடையை எழுதிவிட்டு வெளியே வந்தால், தோழர்கள் அனைவரும் கூட்டமாக நின்று எதையோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.சரி வினாவிற்கு தான் விடையை தேடுகிறார்கள் என்று நானும் உள்ளே நுழைந்தேன்.ஒருவன் ‘என்னடா உனக்கு இன்னைக்கு பிறந்தநாளாம் ஒரு ரூபாய்க்கு மிட்டாய் கூடவா வாங்கிட்டு வரல’,என்று கேட்டான். ‘சாயிங்காலம் பூங்காவுக்கு போறோம்ல அங்க பாத்துக்குவோம் வா’ என்றேன்.ஒருவன் ‘சரி அப்போ எல்லாரும் கிளம்புறோம் பூங்கா திறந்த உடனே உள்ள போறோம் பூங்காவ பூட்டும் போது தான் வெளிய வாரோம் இன்னைக்கு செலவு நம்ம மச்சானோடது’என்றான் . இன்னொருவன் ‘ரெண்டு கிலோ கேக் வாங்குறோம் கேட்கிற எல்லாருக்கும் தட்டுல வச்சு கொடுக்குறோம்’.மற்றொருவன் ‘நாலு கேமரா எடுத்துட்டு வாரோம் நடக்கிற எல்லாத்தையும் போட்டோ எடுக்குறோம்’,என்று நடக்காத விடயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருந்தனர்.நான் ‘ஏன்டா இப்படி நடக்காத விஷயத்தை பேசிகிட்டு இருக்கீங்க? நீங்க கேக் வெட்டி திங்க போறீங்க? யாரும் திங்க போறது கிடையாது, அதனால நீங்க சொல்லும்போது இப்படி சொல்லுங்க, “கேட்க வெட்டுறோம் கேட்கிறவன் மூஞ்சில அடிக்கிறோம்”என்று பூங்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
எப்போதும் போல் ஒரே நேரத்தில் 3000 பேர் கல்லூரியை விட்டு வெளியேறியிருந்தால் பூங்கா பூட்டப்படும் நேரத்திற்கு தான் போயிருக்க முடியும். நல்ல வேலையாக இன்று தேர்வு நாள் என்பதால் அவ்வளவாக கூட்டம் இல்லை. நினைத்த நேரத்திற்குப் பூங்காவிற்கு எல்லோரும் வந்துவிட்டனர்.
அங்கு அனைவரும் வந்து சேர்ந்ததே ஆச்சிரியம் அதைவிட ஆச்சிரியம் அங்கு வாங்கி வரப்பட்டிருந்த கேக்கில் எனது பெயர் இருந்தது.அனைவரும் சேர்ந்து வெட்டினோம் ஆனால் நினைத்ததை போல் அதனை யாரும் சாப்பிடவில்லை பாதியை என் மீதே பூசிவிட்டார்கள்.சிவப்பு சட்டை வெள்ளை சட்டையாய் மாறிவிட்டது.பத்து ரூபாய் கட்டி உள்ளே சென்று விட்டு பத்து மணி வரை ஆட்டம் போட்டோம் நேரம் போனதே தெரியவில்லை.தனித்தனியாக 1000 புகைப்படம் எடுத்தாலும், ஒரே ஒரு குழு படம் எடுப்பதற்கு நாங்கள் பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும்.
ஒருவழியாக கேக்குகள் அப்பப்பட்ட முகத்துடன்,அகத்திலும் முகத்திலும் மகிழ்வோடு அந்த மாலை பொழுதில் எடுக்கப்பட்ட அந்த ஒரு புகைப்படம், மூன்று வருட கல்லூரி காலத்தின் நினைவுகளை எல்லாம் ஒன்றாய் சேர்த்த அந்த ஒரு புகைப்படம், பிறந்தநாள் பையன் என்பதாலோ வாங்கியதில் பாதி கேக் எனது முகத்தில் மட்டுமே முத்தமிட்டு கொண்டிருந்த அந்த ஒரு புகைப்படம் எங்கள் புலனக் குழுவின் புகைப்படமாக வைக்கப்பட்டது. விடுபட்ட நபர்களின் எண்களை குழுவில் இணைத்தபடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பிரிந்து சென்று கொண்டிருந்தனர்.சில நிமிடங்களுக்கு முன்பு சிரிப்பலைகளை சிந்திய கண்கள் எல்லாம் இப்போது கண்ணீர் துளிகளை சிந்திக் கொண்டிருந்தன.
ஒருவரை ஒருவர் ஆறத்தழுவி முத்தமிட்டபடி அந்த இடத்திலிருந்து நகரத் தொடங்கினர். எல்லோரும் சென்ற பிறகு விடுதி மாணவர்கள் நாங்கள் நால்வரும் மட்டும் எங்கள் பொருட்களை எடுத்து வர விடுதிக்குச் சென்றோம் நாங்கள்தான் கடைசி, மூன்று வருடங்களாக எங்களை பார்த்துக் கொண்டிருந்தாலும் விடுதி காப்பாளருக்கே எங்களை அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் முழுக்க கேக்குகள் பூசப்பட்டு அவர் முன் சென்று நின்றோம். எப்போதும் ஏதாவது திட்டிக்கொண்டே இருப்பார்,ஆனால், இன்று எதுவும் பேசவில்லை நால்வரும் சென்று குளித்துவிட்டு,உடைகளை மாற்றிக் கொண்டு,உடைமைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தோம் எங்களையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் விடுதிக்காப்பாளர். ‘என்ன அண்ணே,இன்னும் தூங்கலையா?’ என்று கேட்டேன். ‘நான் உங்கள மாதிரி எத்தனையோ செட்டுப் பசங்கள இந்த இடத்துல இருந்து வழி அனுப்பி வச்சிருக்கேன் ஆனா இன்னமும் இந்த கடைசி நாள் மட்டும் மனசுக்கு எதோ ஒரு மாறித்தான் இருக்கு. எங்க போனாலும் ஒருத்தர ஒருத்தர் அடிக்கடி பார்த்து பேசிக்கோங்க என் நம்பர் இருக்குல்ல அப்பப்ப கூப்பிடுங்க. சரி ரொம்ப லேட் ஆயிடுச்சு பாத்து பத்திரமா போயிட்டு வாங்கடா’ என்று கண்களில் கண்ணீர் மல்க எங்களை வழி அனுப்பி வைத்தார். நால்வரும் ஒன்றாக பேருந்து நிலையத்திற்கு வந்தாலும் வெவ்வேறு திசைகளில் செல்லும் பேருந்துகளில் ஏறி அமர்ந்தோம் எங்கள் கண்ணீரைத் துடைத்தபடி பயணம் தொடர்ந்தது,மூன்று வருடக் கல்லூரி பயணம் இந்த பேருந்து பயணத்தில் இன்றோடு முடிந்தது.
தொடர்பு கொள்ள முடியாத
தொலைவில் இருந்தாலும்,
தொடரும் என் கல்லூரி நினைவுகள்.
அதனால் இன்றும் பல தூக்கமற்ற இரவுகள்.....
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்