Kalaiselvi
சிறுகதை வரிசை எண்
# 91
அடையாளம்
.*************-
"டேய் கதிர் "
"டேய் கதிர்"
அம்மா வாசலில் இருந்தபடியே குரல் கொடுத்தாள் .. அம்மாவிற்கு குரல் கொஞ்சம் கனதியாக இருப்பதால் அது வீடு முழுவதும் எதிரொலிக்கும்.. அதுவும் அப்பாவோடு ஏதாவது வாக்குவாதம் என்றால் அப்பாவின் குரல் பூனைக்குட்டியைப்போலவும் அம்மாவின் குரல் புலியைப் போலவும் இருக்கும்...
பாட்டி இருந்தவரைக்கும் அம்மாவை ஒருவார்த்தை எதிர்த்துசொல்லமுடியாமல் போனதுக்கு இந்த அதிக சத்தமான குரல் கூட காரணமாக இருந்திருக்கலாம்..
அப்பா தான்"' மெதுவா பேசு கனகம் நாங்க. எல்லாம் மனுசங்க தானே ". எ"துக்கு இத்தனை சத்தம்."என்பார் இந்தமாதிரி சமயங்களில்..தொட்டதுக்கும் கத்திகிட்டே இருந்தா நம்ம மேல ஒரு வெறுப்பு வந்திடும்மா என்று நிதானமாக பதின் பருவ மகளுக்கு சொல்வது மாதிரி சொல்வார். அந்த சமயங்களில் அம்மாவின் குரல் இளகி அழகிய சங்கீதமாக இருக்கும். நானும் அக்காவும் அப்பாவையும் அம்மாவையும் அந்த சமயத்தில் திருட்டுத் தனமாய் ரசிப்போம்..
சின்னவயதில் அம்மா பாடிய யமுனைஆற்றிலே பாட்டை கேட்டு அப்பா உருகுவாராம்அப்பா இப்போதும்
அதை எப்போதாவது பாடச் சொல்லிக் கேட்பார். முன்பெல்லாம் பாடிய அம்மா இப்போது முணுமுணுப்பது கூடஇல்லை.. அந்த அளவுக்கு குரல் அழுத்தமாக கட்டையாக மாறிவிட்டது
சொந்த பந்தம் பழகினவர்கள் தெரிந்தவர்கள் என்று அத்தனை பேரும் சொல்லியாயிற்று மாற்றம் ஒன்றும் இல்லை அம்மாவிற்கு இப்போது எது பற்றிய கவலையும் இல்லை எதையும் சத்தமாகவே சொல்வாள் ஆனால் முன்னாடி இருந்ததிற்கு இப்போது பரவாயில்லை பழக்கத்தையும் வழக்கத்தையும் சிலரால் மாற்றிக் கொள்ள முடியாது தான் அப்பா இருக்கிற அடையாளமே தெரியாமல்
இருப்பார் ஆனால் அம்மாவோஇருக்கிற அடையாளத்திற்காகவே இந்த சத்தத்தை வைத்திருக்கிறாள்..
இருக்கட்டுமேஅம்மா அதில் சந்தோசமாக இருக்கிறாள் அதுபோதும் எங்களுக்கு
கதிருக்கு புரியாதது ஒன்றே ஒன்று தான் அடையாளம் என்பது என்ன.? அதை அடைவது எப்படி.? நிலை நிறுத்திக் கொள்வது எப்படி??என்பது தான்.
அடையாளம் மட்டுமே வாழ்வாகுமா அதில் மகிழ்ச்சி இருக்குமா அடையாளத்தில் உண்மையானது எது போலியானது எது.?? இத்தனை கேள்விகள் கதிருக்கு உள்ளே அவ்வப்போது ஓடும்....
பெரிய வீட்டு கல்யாணத்துக்கு ஆரமும் கல் நெக்லசையும் பேங்கிலிருந்து எடுத்துட்டு வாங்க என்பாள்.. அதூமுடியாது கனகம் என்றாள் அது பெரிய இடம்ங்க அதுக்கு தகுந்த. மாதிரி போகணுங்க நம்மளும் அவங்களமாதிரி காட்டணும்ங்க என்பாள்
அதே அம்மா தான்
மாரிமுத்து மாமா பெண் கல்யாணத்துக்கு போகும்போது ஒரே ஒரு இரட்டைவடம் செயினே போதுமென்றாள் அப்பா போடச்சொல்லி சொன்னதிற்கு வேண்டாம்ங்க அவங்க மனசு கஷ்டப்படும்என்று நிச்சலனமாய் மறுத்துவிட்டாள்..
அப்பா எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரி தான் அதே கதர் சட்டை கரை வைத்த இரட்டை வேட்டி அவ்வளவுதான் நிதானமான பேச்சு அளவான மகிழ்ச்சி இருக்கட்டும் அம்மா அப்படி என்றால் அப்பா இப்படி இருந்தால் தவறில்லை தான்
இப்படி யோசித்தபடியஎழுந்து லுங்கியைச் சரிசெய்தவன் இரும்மா வர்ரேன் என்று சொல்லிக் கொண்டேவாசலை நோக்கி நடந்தான். போகும் போதுதான் தெரிந்தது அம்மாவைத் தவிர. இன்னும் இரண்டுபேர் அம்மாவோடு நின்றிருப்பது ..ஒரு அறுபது வயதிருக்கும் ஆணும் அதற்கும்கொஞ்சம் குறைவான வயதில் ஒரு பெண்ணும் நின்றிருந்தார்கள். இருவரும் சர்வ நிச்சயமாய் ஊருக்குப் புதியவர்களாகத்தான் இருக்கவேண்டும்
இவன் போய் நின்றதும்
""கதிர் பக்கத்துவீட்டு சாவி கண்ணாடி பக்கத்தில் இருக்கிற ஆணியில் மாட்டியிருக்கும் கொஞ்சம் எடுத்துட்டு வாடா""இவங்க வீடு பார்க்கணுமாம் என்றாள்....
இவங்க. பெரிய சிட்டில இருந்தவங்களாம் நம்ம பக்கத்து வீட்டுக்காரர்க்கு தெரிஞ்சவருக்கு தெரிஞ்சவராம் .. இவங்க ரெண்டு பேர்தானாம்.. நேத்தே நம்ம. பக்கத்து வீட்டுக்காரர் போன் பண்ணி சொன்னார்டா..
கதிர் திரும்பி நடக்க இவன் என்
பையன் கதிர் பேங்க்ல வேலை செய்ரான் பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சிட்டோம் அவர் வயலுக்கு உரம் கொண்டுபோயிருக்கார் இது எங்க சொந்தவீடுதான் மாமியார் மாமனாரெல்லாம் இறந்துவிட்டார்கள்
..அம்மா பேசிக்கொண்டே போனது முதுகுக்கு பின்னாடி கணீரென்று கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்தது
கதிர் அவர்கள் இருவரையும் பார்த்த. போது பணக்காரத்தனம் அப்பட்டமாகத் தெரிந்தது நகரத்தில் வாழ்ந்தவர்களாம் இந்த குக்கிராமத்தில் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க போகிறார்களோ.? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையோ
ஆறேழு வருடமாக பூட்டிக் கிடக்கும் வீட்டிற்கு ஆட்கள் வரப்போகிறார்களா? ? இந்த வீட்டில் இருந்தவர்களுக்கு இந்த வீடு பெரிதாய் ராசியில்லை ஒன்று கடனில் போயிருந்தார்கள் இல்லை கடனுக்காக ஊரைவிட்டு போயிருந்தார்கள். ராசியில்லாத வீடு என்று ஊரில் எல்லோரும் அடையாளம் சொன்னது இந்தவீட்டைத் தான்..இந்தக்கதை தெரியுமோ தெரியாதோ.. பாவம் இவர்கள்
நமக்கென்ன வந்தது.. என்று நினைத்துக் கொண்டான்..
திரும்பி நடக்கும்போது கதிருக்குள் பொறி தட்டியது இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று.. ஆனால் எங்கே யாரென்று தான் சட்டென்று நியாபகத்தில் வரவில்லை .. இங்கு தானே இருக்கப் போகிறார் தெரிந்து கொண்டால் போச்சு என்று சமாதானமும் செய்து கொண்டான்
சாவியைக் கொண்டுவந்து அம்மா கையில் கொடுத்தான்
"கதிரு நீ போய்ப் குளி அதுக்குள்ள அம்மா இவங்களுக்கு வீட்டை காட்டி விட்டு வந்து விடுகிறேன் என்றபடி அவர்களோடேயே போனாள்..
அடுத்த ஒருமணிநேரத்தில் திரும்பி வந்தார்கள் இப்போது இருவர் முகங்களிலும் சின்னதாய் ஒரு சந்தோசம் தெரிந்தது. அம்மா முகத்திலும் தான் வீடு பிடித்துவிட்டது போல..அடுத்து அம்மா ஆரம்பித்து விட்டாள் விசாரணையை..
முதலில் அவர்களை உள்ளே வரச் சொல்லிகாபி போட்டுக்கொடுத்து உட்காரவைத்தாள்
இருங்க பையனுக்கு ஆபிசுக்கு நேரமாச்சு அனுப்பி வச்சிட்டு வந்திடரேன் என்று சொல்லி விட்டு கதிருக்கு காலைச் சாப்பாடுமதியச் சாப்பாடு தண்ணீர் பாட்டில்என்று ஒன்று விடாமல்எடுத்து வைத்துவிட்டு அவர்களோடு பேச்சைத் தொடர்ந்தாள்
முன்னபின்ன தெரியாதவங்க யாருக்கும் வீடு கொடுக்காதீங்கன்னு நான்தான் சொல்லி வச்சேன் .. இந்த காலத்துல. யாரை நம்பமுடிகிறதுங்க சார்.. என்றாள் .. தன் சாமர்த்தியத்தை மெச்சியபடி
அவர் சிரித்துக் கொண்டார் அந்த அம்மாள்ஒன்றும் பேசாமல் இருந்தார்..
இந்த ஊர்லையே கனகம்னு என் பேரைக்கேட்டால் எல்லாரும் அடையாளம் சொல்லிடுவாங்க என்னை என்றாள் . அம்மா முகத்தில் இப்போது ஒரு சிரிப்பு உதிர்ந்தது அது அவளின் அடையாளமாய் ஒளிர்ந்ததுஅவர்இப்போது அமைதியாகி விட்டார் அந்தம்மாவும் அமைதியாகிவிட்டது..
வீடு பிடிச்சிருக்கா
உங்களுக்கு??எப்போ பால் காய்ச்சப் போறீங்க?அப்பவே ஜாமான் கொண்டு வந்திடுவீங்களா? உறுதியா நீங்க மட்டும்தானே இருப்பீங்க இல்லை கூட யாராவது இருப்பாங்களாஅம்மாவின் கேள்வி நீண்டுகொண்டே போனது எல்லாவற்றுக்கும் அவர்தான் பதில் சொன்னார் அந்தம்மா வாயைத் திறக்கவில்லை . அவள் கொஞ்சம் இயல்பாக இல்லை என்பது கதிருக்குள் தோன்றியது
கதிரும் கிளம்பும் வரையிலும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் அப்பெண்மணி அடிக்கடிஏதோ கேட்பதும் அதற்குஅவர் அவளை கையைப் பிடித்து சமாதானப் படுத்துவதையும் .மறுபடியும் நியாபகம் வந்தது இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று. பார்ப்போம் இங்குதானே இருக்கப் போகிறார்கள். என்று பேங்கிற்கு கிளம்பினான்
ஒருவாரத்தில் குடி வந்துவிட்டார்கள் .மிகப் பெரிய வீட்டில் புழங்கியிருப்பார்கள் போல இந்த சின்ன. வீடு கொஞ்சம் அவர்களுக்கு சின்னதாக இருந்திருக்க வேண்டும் ஆரம்பத்தில் நிறையவே கொஞ்சம் தடுமாறினார்கள்.. நாலு அறைகள் இருந்தாலும் இவர்களுக்கு போதவில்லை என்று அம்மா சொன்னாள்
அம்மாவிற்கு மிகப் பெரிய சந்தோசம் வளுக்கு பேச்சுத் துணைக்கு ஆள் வந்துவிட்டதால் . ஊரில் நிறையப் பேர் அம்மாவிடம் பேச கொஞ்சம் கூச்சப்படுவார்கள் காரணம் அம்மாவின்சத்தம் தான் வீட்டு சாமான்களை ஒழுங்குபடுத்துவதில்இருந்து எல்லா விசயத்திலும் அவர்களுக்கு ஒத்தாசையாக இருந்தாள்..
அவர்தான் பாவம் இரண்டு பெண்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு அதுவும் வெண்கலமணிபோல் சதா ஒலித்துக்கொண்டே இருந்த அம்மாவின் சத்தத்தில்
விழிபிதுங்கினார்..
எல்லாவற்றுக்கும் ஆள்வைத்து வாழ்ந்திருப்பார்கள் போல.
இப்போது அவர்களே எல்லாம் செய்ய. கொஞ்சம் சிரமப்பட்டார்கள் .அதுவும் அந்த அம்மா நிறையவே தடுமாறினாள் அந்த மனிதர் மனைவியை அத்தனை அழகாகத் தாங்கினார்
காலையில் பால் வாங்க சொசைட்டி போக கதிர்ஒருநாள் கூட்டிக் கொண்டுபோனான் மறுநாளில் இருந்து அவரே போய்விட்டார்.. அந்தம்மா கடைக்கு போக அம்மா இரண்டு நாள் உதவினாள் .பிறகு இருவரும் சேர்ந்தே போகப் பழகிக் கொண்டார்கள்
மற்றபடிக்கு சின்ன சின்ன வேலையைக் கூட அவர்களே சந்தோசமாக செய்தார்கள்.. எல்லோருடனும் அன்பாக பேசினார்கள் கூடிய சீக்கிரமாகவே அசல் கிராமத்து மனிதர்களோடு மனிதர்களாக ஆகிப் போனார்கள்
எல்லாம் ஒரு மாதத்தில் நடந்துவிட்டது இயல்பாகிவிட்டார்கள் அவர்கள் இருவரும் வந்தபோது அந்தம்மாவின் முகத்திலிருந்த கவலை பயம் எல்லாம்இப்போது மாறிவிட்டிருந்தது. காலையில் இருவரும் கிராமம் முழுக்க ஒரு சின்ன நடை நடந்துவிட்டு வருகிறார்கள் ..வெள்ளி செவ்வாய் கோயிலுக்கு ஒன்றாக போகிறார்கள் .. மிகத் தேவையானதை மட்டும் வாங்குகிறார்கள் முக்கியமாக டவுனுக்கு மறந்தும் போக நினைத்ததில்லை.. அதிகபட்சமாக கதிரிடம் எதையாவது சொல்லி விடுவார்கள்... வாங்கிப் போனால் உடனடியாக பணம் கொடுத்து விடுவார்கள்
நிம்மதியாக வாழ்ந்தார்கள்..
மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறைதான் பஸ்வரும் இந்த ஊருக்கு . சொல்லி வைத்தது போன்று நாலு மளிகை கடைதான் உண்டு. இரண்டு கோவில்கள் சுற்றிலும் வயல்கள் காடு தோட்டம் வாய்க்கால் என்று இன்னமும் நாகரீகத்தின் அலும்புகள் எட்டிப்பார்க்காத ஊர் இந்த கிராமத்திலேயே இவர்கள் இப்படி சந்தோசமாக வாழ்கிறார்களே என்று கதிருக்கு ஆச்சர்யமாக இருந்தது.. ஆனால் கதிருக்கு மட்டும் அவர் முகம் சட்டென்று நியாபகத்தில் வரவில்லை
கதிர்அலுவலகம் போய்விட்டு வரும்போது அவர் ஈஸி சேரில் அமர்ந்து கொண்டு கிராமத்து மனிதர்கள் யாருடனாவது பேசிக்கொண்டு இருப்பார் அவர் மனைவி அவர் பக்த்திலேயே உட்கார்ந்துஅவர்கள் பேசுவதைக் கேட்டுக கொண்டிருப்பார்.. இல்லையென்றால் அவர் பூச் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருப்பார்
அந்தம்மா காலையில் பறவைகளுக்கு வைத்து சிதறிக் கிடக்கிற தானியத்தை கூட்டிக் கொண்டிருப்பாள்..
அவ்வளவு தான் கதிர் பார்த்த வகையில் அவர்கள் வாழ்க்கை
""டேய் கதிரு அவங்க பெரிய இடம் போலடா அந்தம்மா வைரத்துல தோடெல்லாம் வச்சிருக்குடா என்றாள் ஒரு நாள்அம்மா.அத்தனை அதிசயம் வைரம் என்பது அம்மாவுக்கு
.""இருக்கட்டுமேம்மா நமக்கென்ன மா ""உனக்குத்தான் நாலு தங்கத் தோடு இருக்கேம்மா வேணும்னா சொல்லும்மா இருபதாயிரம் தான் வரும் வாங்கிடலாம் என்றான்
மற்றொரு நாள் ""டேய் கதிரு அவரு பெரிய வேலையெல்லாம் பார்த்திருக்காரு போலடா.. நிறைய. தெரிஞ்சு வச்சிருக்கார்டா என்றாள்
அப்படியாம்மா? இப்ப என்ன செய்யலாம்அதுக்கு? நானுந்தான் டவுன்ல பெரிய வேலைதான் பார்க்கரேன் அப்பாவும் நல்ல வேலைல இருந்தவர்தானேம்மா? என்றான் ..
அந்தம்மா இங்கிலீசு எல்லாம்
சரளமா பேசுதுடா ...அவருகூட.என்று வாய் பிளந்தாள் மற்றொரு நாள்
""நீயும் கத்துக்கிறயாம்மா நான் சொல்லித் தரட்டா?.." இங்கிலீசு அப்படி ஒண்ணும் கஷ்டமே இல்லைமா" என்றான்
அம்மாவின் உலகம் அவ்வளவுதான் .பெரியதாய் இருக்கிறதை சிறியதாக்கிவிடுவாள். .சின்னதாக இருப்பதை மலை அளவுக்கு உயர்த்தி
விடுவாள்.. அவள் அப்படித்தான் இருக்கட்டுமே அவள் வரையில் அதிசயங்கள் அதிசயங்களாகவும் ஆச்சர்யங்கள் ஆச்சர்யங்களாகவும் நான் ஏன் குறை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்
அதன் பிறகு அவர்கள் பேச்சையே விட்டுவிட்டாள் அம்மா. ஆனால் அந்தம்மாவும் அம்மாவும் பேசாத நாளில்லை பார்க்காத நேரமில்லை..
ஆனால் கதிருக்குள்தான் எதுவோ உறுத்திக் கொண்டே இருந்தது..
ஒரு நாள் ஞாயிறு காலை ஒரு பத்துமணி இருக்கும்அம்மாவும் அந்தம்மாவும் வெளியே போய்விட அப்பாவும் அக்கா ஊருக்கு போய்விட கதிருக்கு போரடித்தது
பக்கத்து வீட்டைப் பார்த்து விட்டு வரலாமே என்ற எண்ணம் தோன்றியது.. அவனுக்கும் ஆபீஸ் லீவுதான்..
அவர்கள் வீட்டிற்குபோக நினைத்து அங்கே போய் வெளி கேட்டைத் திறந்து உள்ளே ஒரு கால் வைத்தபடி
சார் சார் என்றான் .. கதவு திறந்து தான் இருந்தது. சற்றே எட்டிப் பார்த்தான்
அவர் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்திருப்பார் போல. வெளியே வந்து
கதிரைப்பார்த்துஉள்ளே வரச் சொல்லி சைகை காட்டினார்.. உள்ளே போனான் பத்தி வாசனை ஆளைத் தூக்கியது.
கதிருக்கு ஆச்சர்யமாக இருந்தது
எத்தனை ஒழுங்கு எத்தனை நேர்த்தி . எத்தனை அமைதி ராசியில்லாத வீடு களையில்லாத வீடு அமைதியில்லாத வீடு என்றெல்லாம் சொல்லப்பட்ட வீடா இது இத்தனை அழகாக இருக்கிறது என்றுஉட்கார்ந்தபடியே வீடு முழுக்க பார்வையை சுழற்றினான்..
ஆறு வருடங்களாக தான் பார்த்த அந்த வீடா இது இத்தனை நேர்த்தியாக மாறிவிட்டது. பேய் பிடிச்ச வீடு என்று அடையாளப் படுத்தப்பட்ட வீடு இப்போது தெய்வீக மனம்
கமழ அழகாக பளிச்சென்று தெரிகிறது
முக்கியமாக டிவி இல்லை அதற்கு பதிலாக சின்னதாக. ஒரு பழைய கிராமபோன் இருந்தது மிக மெலிதான இசையும் அதில் ஓடிக் கொண்டிருந்தது. எல்லா சுவர்களும் அத்தனை அழகாக பளிச்சென்று இருந்தது ஒரே ஒரு புகைப்படம் மட்டும் பெரிதாக மாட்டப்பட்டு இருந்தது அது இவர்களின் திருமணப் புகைப்படம்.. அத்தனை அழகாக இருந்தார்கள் இருவரும் அதில்
பெயருக்கு இரண்டு மூன்று சாமி படங்கள் அவ்வளவுதான் ஒரு குழந்தைபடமோ வேறு ஏதாவது படமோ கண்ணில் படவேயில்லை..
எல்லா பொருட்களிலும் அம்மா சொன்ன மாதிரி பெரிய இடம் என்பது தெரிந்தது.. அந்தம்மா கல்யாண படத்தில் ஏராளமாக நகை போட்டிருந்தார் அவர் பார்க்க ஒரு தெலுங்கு நடிகரை நியாபகப் படுத்தினார்
வாங்க தம்மி நல்லா இருக்கீங்களா.?? குரல் கலைத்துப் போட நிஜத்திற்கு வந்தான். இவரைப் பார்த்ததும் அவசரமாக எழுந்தான் கையமர்த்தினார்
சாமி கும்பிட்டு கொண்டு வந்த திருநீற்றை கதிர் நெற்றியில் வாஞ்சையோடு வைத்துவிட்டார் கதிருக்கு இந்த தன்மை பிடித்திருந்து அவன் அப்பாவும் அப்படித்தான்.. அழகாக வைத்து விட்டு பின் கைகள் குவித்து ஊதிவிடுவார்.
பரஸ்பரம் பேச்சு போனது
கதிர்தான் கேட்டான் பேச்சோடு பேச்சாக போரடிக்காதா சார் உங்களுக்கு??
""
ஏன் தம்பி இப்படி கேட்கரீங்க?
"ஒரு டிவி கூட இல்லை. எப்படி பொழுது போகுது? உங்க ரெண்டு பேருக்கும்??
வேணும்னா சொல்லுங்க சார்"" டவுனில் என் பேங்கிற்கு நேரெதிரில் தான் வீட்டு உபயோகப் பொருள் கடை இருக்கிறது வாங்கிவிடலாம் என்றான். அதுவும் எனக்கு என்றால்விலையும் குறைவாகக் கிடைக்கும் என்றான்
வேண்டாம் தம்பி .. இப்போதைக்கு டி.வி எல்லா அவசியமில்லை என்றார்..
""ஏன் சார் போன் கூட பட்டன் போன் தான் வச்சிருக்கீங்களாம் அம்மா சொன்னாங்க .அதுவும் இங்க வந்துதான் வாங்கினீங்கலாம் .. ஆண்ட்ராய்டு போன் ஒன்னு வாங்கிடலாம்
தானே சார் டி.வியில் போடரது எல்லாம் இப்ப போன்லையே வருதுசார் ஒரு ஆறாயிரம் போட்டாலே நல்ல கம்பென் போன் கிடைக்கும் சார்என்றான்
வேண்டாம் தம்பி அதுக்கு போயி காச செலவழிச்சிட்டு.. இதுவே போதும் தம்பி இதென்ன பேசினா கேட்காமயா போயிடப்போறது.... . அத வாங்கிட்டு அத பத்திரப்படுத்தவே நேரம் சரியா இருக்கும் அதெல்லாம் வேணாம் தம்பி என்றார்..
நியூஸ்ப் பேப்பர் கூட வாங்கரது இல்லைன்னு அம்மா சொல்லிச்சு சார்..ஏன் சார் என்றான். அமைதியாகச்சிரித்தார்
அம்மா சொன்னாங்க நீங்க பெரிய சிட்டில இருந்தீங்கன்னு எப்படி சார் இதெல்லாம் இல்லாம இருக்க முடிகிறது என்றான்..
போதும் தம்பி இதுவே.. இதுலையே திருப்தியாத்தான் இருக்கோம் என்றார் நிதானமாக
பின் மெதுவாக பசங்க எல்லாம் எங்கிருக்காங்க?? சார் என்றான்..
சந்தோசமாகபேசிக் கொண்டிருந்தவரின் முகம் சற்றே ஒளி மங்கியது
கேட்டிருக்கக் கூடாதோ..
இல்ல சார் நான் சும்மாதான் கேட்டேன் .. மென்று விழுங்கினான் கதிர்..
""அதனாலென்ன தம்பி
என்ன சாப்பிடரீங்க?? என்று இயல்பாய் அவர் பேச்சை மாற்றிக் கேட்டார். கதிர் புரிந்து கொண்டான் அவர்அந்தக் கேள்வியை விரும்பவில்லை என்று
அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார் இப்போதான் சாப்பிட்டேன் வேண்டாம் சார்என்றான் கதிர்.
அதற்குள் அவர் எழுந்து போய் காபிபோட்டு கொண்டுவந்தார்..
அத்தனை சூடாகவும் சுவையாகவும் இருந்தது... சரியான முறையில் அளவாய் டிகாசன் இறங்கி இனிப்பும் அளவாய் இருந்தது..
நீங்க சமைப்பீங்களா சார்.?? காபி அருமையா இருக்கு சார் என்றான் சிரித்துக் கொண்டார் அளவாய்..
உங்களை பார்த்த முதல் நாளே கேட்கத் தோன்றியது சார்.. இழுத்தான்..
""எங்கையோ பார்த்தமாதிரி இருக்குன்னா தம்பி" என்று அவரே கேட்கவும் அமைதியானான் கதிர்..
பேசாமல் காபியை குடித்தனர் இருவரும்
காலி கப்புகளை எடுத்துக் கொண்டு உள்ளே போனவர் வரும்போது நாலைந்து புகைப்படங்களும் ஒரு கத்தை நியூஸ் பேப்பரும்
ஆப்பிள் போன் நான்கும் கொண்டுவந்தார்..
கதிர் ஒருநிமிடம் ஆடிப்போய்விட்டான்..
அம்மா சொன்னது சரிதான்.. பெரிய குடும்பம் பெரிய வேலை பெரிய இடம்..
மெதுவாக அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சன்னமான குரலில் சொன்னார்.எல்லாம் அளவுக்கு அதிகமாவே இருந்துச்சு தம்பி ஆனால் எல்லாமே ஒருகட்டத்துல போயிடுச்சு தம்பி இப்போது அந்தக் குரலில் இயலாமையும் வருத்தமும் இழையோடி இருந்தது .
மகள் வேற்று சாதியில் காதலித்தவனை கூட்டிக் கொண்டு போய்விட்டாள்
மகனோ . போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டான்.. சொல்லும் போது கண்களில் நீர் திரண்டது
நானும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டேன்.. குடி கூத்தி சீட்டு என்று
இதோ இந்த மகராசி அத்தனையும் தாங்கிகிட்டு என்னைய மீட்டெடுத்து இன்னும் கைவிடாம இருக்கா தம்பி.. அவளுக்காகத்தான் இப்போ வாழரேன் தம்பி
கல்யாணம் ஆன நாள்முதல் என்னைய அடையாளப்படுத்திக்கிறதிலையே இருந்துட்டேன்
இரண்டு தேசிய விருது நான்கு மாநில விருது எல்லாம் என் தொழிலுக்காக வாங்கினேன் ஆனால் குடும்பம் இப்ப இருக்கிற அடையாளமே தெரியாம போயிடுச்சு தம்பி..
பசங்களை வளர்த்தேன் தான்
ஆனா முறையா எதுவும் சொல்லிக் கொடுக்கலை. எதையும் புரிய வைக்கலை.. எல்லாம் பணம் பண்ணின வேலை புகழ் கொடுத்த போதை தம்பி இப்போதுஇரண்டு சொட்டு கண்ணீர் தெரித்து விழுந்தது..
வாழ்றதிலையே கொடுமை என்ன தெரியுமா தம்பி அடையாளம் அழிஞ்சு போறதும் அடையாளமே இல்லாம வாழ்ரதும் தான் தம்பி என்றவர் கதிரின் கைபிடித்து அழத் தொடங்கினார்
பிரபல தொழிலதிபர்க்கு நாட்டின் உயரிய விருது..
பல நிறுவனங்களின் முதலாளி திரு இராமமூர்த்தி மகன் போதைக்கு அடிமை
மகள் ஓடிப்போய் திருமணம்.. ஏகப்பட்ட கடன் தவறான தொடர்பு வீடு ஜப்தி தொழில் முடக்கம்..மனைவிக்கு மனநோய்...
எல்லா செய்தித் தாள்களும் இறைந்து கிடந்தன.. எல்லாம் இவர்களை அடையாளம் காட்டிச் சிரித்தது.
இப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழத் தெரியாமத்தான் இத்தனை நாளும் அடையாளம் அடையாளம்னு ஒரு போலி வாழ்க்கைய வாழ்ந்துட்டேன் ப்பா ....
இப்போ இந்த வாழ்க்கை எனக்கும் என் மனைவிக்கும் கடவுள் காட்டிய. சொர்க்கம் என்றார்..
இது போதும்பா எங்களுக்கு வாழ்நாள் முழுசுக்கும். வேற எதுவும் வேணாம் தம்பி... எனக்கு அடையாளமே வேண்டாம் தம்பி நிம்மதி போதும் தம்பிஅவர் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்தது
கதிருக்கு பாவமாய் இருந்தது இப்போது அவர் அருகில் நெருங்கி அமர்ந்து அவரைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.. அவர்.வாய்
மட்டும் எதையோ தொடர்ந்துமுணுமுணுத்துக்கொண்டே இருந்தது. கதிருக்கு அவன் அப்பாவை அணைப்பது போல் இருந்தது . முதுகை ஆதூரமாக வருடினான். கண்ணீரைத் துடைத்துவிட்டான் நிதானமாக அவர் விசும்பல் மெதுவாக அடங்கத் தொடங்கியது.. அந்த வீடு இப்போது இன்னும் அமைதியாக தெரிந்தது..
பத்து நாள் போயிருக்கும்
"டேய் கதிரு அவங்க
வீட்ல.எத்தனை பாரின் பொருளெல்லாம் இருக்கு தெரியுமா. வெளி நாடெல்லாம் போயிருக்காங்கலாம்டா ...நாமளும் போலாம்டா??
என்று சொல்லிக் கொண்டே போனாள்..
கதிருக்கு சிரிப்பு வந்தது ..அம்மா ஒரு அப்பாவி என்று இப்போது தான் தெரிகிறது... அதே போல அடையாளம் என்ற வார்த்தை பொடிப் பொடியாக உதிரத் தொடங்கியது..
பாவம்மா அவங்க பரம ஏழைங்கம்மா என்றான்
கதிர்..அம்மா புரியாமல் பார்த்தாள்.. புரியவே வேண்டாம் அம்மாவுக்கு.. அவள் அடையாளம் அது தானே....
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்